என் மலர்tooltip icon

    கோயம்புத்தூர்

    • கொங்கு நாடுமக்கள் தேசிய கட்சியும் தேர்தலுக்கு தயாராகி வருகிறது.
    • தி.மு.க. கூட்டணியில் தான் தொடர்கிறோம். தொடர்வோம்.

    கோவை:

    தமிழகத்தில் இன்னும் ஒரு வருடத்தில் சட்டமன்ற தேர்தல் நடக்க உள்ளது. தேர்தலுக்கு ஒரு வருடம் இருந்தாலும், தற்போதே தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கி விட்டது.

    ஆளும் தி.மு.க. மற்றும் எதிர்கட்சியான அ.தி.மு.க., பா.ஜ.க, நடிகர் விஜயின் தமிழக வெற்றிக்கழகம் உள்ளிட்ட கட்சிகள் தற்போதே தேர்தல் பணிகளை தொடங்கிவிட்டன.

    கூட்டணி அமைப்பது, எவ்வளவு தொகுதிகளில் போட்டியிடுவது, கட்சிக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எது என்பதை கண்டறிவது, என பல்வேறு பணிகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

    அந்த வகையில் கொங்கு நாடுமக்கள் தேசிய கட்சியும் தேர்தலுக்கு தயாராகி வருகிறது. கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளராக ஈ.ஆர்.ஈஸ்வரன் உள்ளார்.

    கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி கடந்த 2021-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் இடம் பிடித்து போட்டியிட்டது. அந்த கட்சியின் பொதுச்செயலாளரான ஈ.ஆர்.ஈஸ்வரன், நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.எல்.ஏ.வாக இருக்கிறார்.

    தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஈ.ஆர்.ஈஸ்வரன் அண்மையில் அவர் அளித்த பேட்டி ஒன்றில், அ.தி.மு.க பொதுச்செயலாளரும், எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமியை பாராட்டி பேசினார். இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் தி.மு.க. கூட்டணிக்குள்ளும் சலசலப்பை ஏற்படுத்தியது.

    இதனால் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி வருகிற 2026-ம் ஆண்டு தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் தொடருமா? அல்லது கூட்டணி மாறுமா? என்ற சந்தேகம் எழுந்தது.

    இந்த நிலையில் இந்த பிரச்சனைகளுக்கு கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் விளக்கம் அளித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் மாலைமலர் நிருபருக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    2026-ம் ஆண்டு நடக்க உள்ள சட்டமன்ற தேர்தலில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தி.மு.க கூட்டணியில் தான் தொடரும். இதில் எந்த சந்தேகமும் இல்லை. தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தீவிரமாக களப்பணி ஆற்றி வருகிறது.அனைத்து மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக தீவிரமாக பணியாற்றி வருகின்றனர்.

    சமீபத்தில் அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை நான் பாராட்டி பேசியதை வைத்து, கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி அ.தி.மு.க. கூட்டணியில் இணைகிறதா? என்று கேட்பது தவறு. நாங்கள் நிச்சயமாக தி.மு.க. கூட்டணியில் தான் தொடர்கிறோம். தொடர்வோம்.

    அண்மைக்காலமாக அ.தி.மு.க.வில் நடந்து வரும் பிரச்சனை குறித்து என்னிடம் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கருத்து கேட்கப்பட்டது. அதற்கு நான், அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, இப்போது உள்ள சூழ்நிலையில் அ.தி.மு.க.வை சிறப்பாக வழி நடத்தி வருகிறார்.

    இந்தச் சூழ்நிலையில் புதியதாக அ.தி.மு.க.விற்கு வேறு யாரையாவது நியமிப்பது நன்றாக இருக்காது என்ற ஒரு பொதுவான கருத்தை தான் நான் தெரிவித்தேன். அவ்வளவு தான். அதில் வேறு ஒன்றுமில்லை. அந்த கருத்தை வைத்து, அ.தி.மு.க.வுடன் கூட்டணி என்று பேசுவது சரியல்ல.

    எங்களைப் பொறுத்தவரை நாங்கள் கட்சி வளர்ச்சி பணிகள், மக்கள் பணிகளில் தீவிரமாக பணியாற்றி வருகிறோம். இன்று நடைபெறும் தொகுதி மறுசீரமைப்பு பிரச்சனை தொடர்பான அனைத்து கட்சி கூட்டத்தில் நான் பங்கேற்கிறேன்.

    அத்திக்கடவு-அவிநாசி திட்ட பணிகளை முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைத்தார். அதை தி.மு.க. தலைவரும் முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் நிறைவேற்றினார். இதற்காக ஏற்கனவே நன்றி தெரிவித்து இருக்கிறோம்.

    அத்திக்கடவு-அவிநாசி கூட்டுக்குடிநீர் திட்டத்திற்கான நீர் காளிங்கராயன் மலையிலிருந்து தான் வருகிறது. எனவே இந்த திட்டத்திற்கு காலிங்கராயன்-அத்திக்கடவு அவிநாசி திட்டம் என பெயர் சூட்ட வேண்டும் என கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் கோரிக்கை வைத்துள்ளோம்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • செல்போன் வெளிச்சத்தில் கூட்டத்தை நடத்தினர்.
    • கவுன்சிலர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    மேட்டுப்பாளையம்:

    மேட்டுப்பாளையம் அருகே காரமடை நகராட்சியில் மாதாந்திர கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு தலைவர் உஷா வெங்கடேஷ் தலைமை தாங்கினார். ஆணையாளர் மதுமதி முன்னிலை வகித்தார்.

    கூட்டத்தில் நகராட்சி கவுன்சிலர்கள் அனைவரும் பங்கேற்றனர். கவுன்சிலர்கள், மாதந்தோறும் கூட்டம் நடத்தப்படுவதில்லை. 3 மாதங்களுக்கு ஒரு முறை நடத்தினால் எப்படி மக்கள் பிரச்சனையை பேசுவது. எங்களது வார்டுகளுக்கு தேவையான திட்டங்களை கேட்டும் இதுவரை நிறைவேற்றி தரவில்லை என பேசினர்.

    கூட்டத்தில், கவுன்சிலர்கள் சாந்தி, மலர்க்கொடி, வனிதா சஞ்சீவ் காந்தி, காந்தி ஆகியோர் தங்களது வார்டுகளுக்கு அடிப்படை வசதிகள் கேட்டு உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது நகராட்சி அலுவலகத்தில் மின் நிறுத்தம் ஏற்பட்டதால் கூட்ட அரங்கு இருட்டாக காணப்பட்டது. அப்போது வார்டு உறுப்பினர்கள் தங்களது செல்போன் வெளிச்சத்தில் கூட்டத்தை நடத்தினர். இதனால் கவுன்சிலர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    • கும்கி யானைகள் ஆனைமலை புலிகள் காப்பகத்தில் உள்ள கோழிகமுத்தி யானைகள் முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டன.
    • வனத்துறை மலையேற்றம் திட்டத்தில் பணியாற்றும் ஊழியர்களை சந்தித்து, இத்திட்டத்தில் உள்ள நிறை, குறைகள் குறித்து கேட்டறிந்தார்.

    வடவள்ளி:

    கோவை வனக்கோட்டம் போளுவாம்பட்டி வனசரகத்துக்கு உட்பட்ட சாடிவயலில் கடந்த 2012-ம் ஆண்டு தற்காலிக யானைகள் முகாம் தொடங்கப்பட்டது.

    இந்த முகாமில் பராமரிக்கப்பட்டு வந்த கும்கி யானைகள் மாவட்டத்தில் விளைநிலங்கள் மற்றும் குடியிருப்புகளுக்குள் புகும் காட்டு யானைகளை விரட்ட பயன்படுத்தப்பட்டு வந்தன.

    கடந்த 2020-ம் ஆண்டு கும்கி யானைகள் ஆனைமலை புலிகள் காப்பகத்தில் உள்ள கோழிகமுத்தி யானைகள் முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டன.

    அதன்பின்னர் மீண்டும் கும்கி யானைகள் கொண்டு வரப்படவில்லை. இதனிடையே மனித-விலங்கு முரண்பாடுகளை தடுக்கும் வகையில் 2023-ம் ஆண்டு சாடிவயலில் ரூ.8 கோடியில் பல்வேறு வசதிகளுடன் கூடிய புதிய யானைகள் முகாம் அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்து.

    இதனை தொடர்ந்து 50 ஏக்கர் பரப்பளவில் புதிய யானைகள் முகாம் அமைக்கும் பணி தொடங்கப்பட்டது.

    18 புதிய யானைகள் பராமரிப்பு கூடம், 2 கரோல், 2 கி.மீ தொலைவுக்கு சோலார் மின்வேலி, 40 சோலார் விளக்குகள், யானைகள் குளிக்க தண்ணீர் தொட்டி, சிறிய மண் குட்டைகள், யானைகள் குளிப்பதற்கான ஷவர்கள், பாகன்கள், காவடிகள் தங்குவதற்கு 8 தங்கும் அறைகள், சி.சி.டி.வி. கேமரா, யானைகள் முகாமை சுற்றி அகழி ஆகிய பணிகள் நடந்து வருகிறது.

    இந்த பணிகள் அனைத்தும் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

    இந்த நிலையில் சாடிவயலில் நடந்து வரும் பணிகளை வனத்துறை கூடுதல் தலைமை செயலாளர் சுப்ரியா சாகு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    பின்னர் அவர் கூறும்போது, புதிய யானைகள் முகாம் விரைவில் திறக்கப்படும். கோவை மற்றும் போளுவாம்பட்டி வனச்சரகங்களுக்குட்பட்ட பகுதியில், காட்டு யானைகள் ஊருக்குள் புகுவதை தடுக்க, ரூ.7 கோடி மதிப்பில் பாதுகாப்பு வேலி அமைக்கும் திட்டத்தின் தற்போதைய நிலை அறிந்து, அதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    முன்னதாக, வனத்துறை மலையேற்றம் திட்டத்தில் பணியாற்றும் ஊழியர்களை சந்தித்து, இத்திட்டத்தில் உள்ள நிறை, குறைகள் குறித்து கேட்டறிந்தார்.

    ஆய்வின்போது, முதன்மை தலைமை வன பாதுகாவலர்கள் ராகேஷ் குமார், சீனிவாச ரெட்டி கோவை மண்டல வன பாதுகாவலர் வெங்கடேஷ், மாவட்ட வன அலுவலர் ஜெயராஜ் உள்ளிட்ட அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.

    • திருவிழாவில் 150-க்கும் மேற்பட்ட கைவினை, கைத்தறி, உணவு, விவசாய மற்றும் விளையாட்டு பொருட்களின் அரங்குகள் இடம் பெற்றுள்ளன.
    • வெற்றி பெறும் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட உள்ளன.

    கோவை ஈஷா யோக மையத்தில் தமிழ் பண்பாட்டை கொண்டாடும் வகையில் பிப். 27 முதல் மார்ச் 9 வரை நடைபெறும் "தமிழ்த் தெம்பு - தமிழ் மண் திருவிழா" எனும் பிரம்மாண்ட விழா நடைபெற்று வருகிறது.

    இது தொடர்பான பத்திரிக்கையாளர் சந்திப்பு கோவை பிரஸ் கிளப்பில் இன்று நடைபெற்றது. இதில் முன்னோடி இயற்கை விவசாயியும் தமிழ்த் தெம்பு விழா குழுவின் தன்னார்வலருமான வள்ளுவன் பங்கேற்று பேசினார்.

    பத்திரிக்கையாளர் சந்திப்பில் வள்ளுவன் பேசுகையில், "சத்குருவின் வழிகாட்டுதலின் படி தமிழ் மொழியின் செழுமையையும், தமிழ் மண்ணின் கலாச்சாரம், வீரம், கலைகள், வரலாறு, உணவு முறைகள், வாழ்வியல் உள்ளிட்ட தமிழர் பண்பாட்டின் தொன்மையையும் கொண்டாடும் விதமாக 'தமிழ்த் தெம்பு - தமிழ் மண் திருவிழா' கடந்த 2023-ஆம் ஆண்டு முதல் கோவை ஈஷா யோக மையத்தில் நடைபெற்று வருகிறது.

    அந்த வகையில் இந்தாண்டு 'தமிழ்த் தெம்பு திருவிழா' மிகவும் பிரம்மாண்டமான முறையில் கடந்த பிப்ரவரி 27-ஆம் தேதி துவங்கி நடைபெற்று வருகிறது. இத்திருவிழா வரும் மார்ச் 9-ஆம் தேதி வரை 11 நாட்கள் ஆதியோகி முன்பு நடைபெறுகிறது.

    இத்திருவிழாவில் 150-க்கும் மேற்பட்ட கைவினை, கைத்தறி, உணவு, விவசாய மற்றும் விளையாட்டு பொருட்களின் அரங்குகள் இடம் பெற்றுள்ளன.



    நாட்டின மாடுகள், குதிரைகள் மற்றும் பிற கால்நடைகளின் கண்காட்சியும் இத்திருவிழாவில் நடைபெற்று வருகிறது. இதனுடன் மிகவும் பிரம்மாண்டமான முறையில் ஆதியோகி முன்பு மார்ச் 7 முதல் 9 ஆம் தேதி வரை 'நாட்டு மாடுகள் மற்றும் குதிரைகளின் சந்தையும்' நடைபெற உள்ளது.

    நம் தமிழ் பண்பாட்டில் நிகழ்த்து கலைகள் என்பன எளிய மக்களுடைய உணர்ச்சிகளின் வடிகாலாக, வாழ்வியல் வரலாற்று பதிவுகளாக, உடல் மன ஒத்திசைவின் உச்சமாக வளர்ந்து வந்துள்ளன. இன்றைய காலத்தில் இந்த கலைகள் அனைத்தும் அழியும் அபாயத்தில் உள்ளது, ஆகையால் இந்த கலைகளையும், கலைஞர்களையும் வளர்த்து ஊக்குவிக்கும் விதமாக 11 நாட்களும் மாலை நேரங்களில் தமிழ் பண்பாட்டு கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

    குறிப்பாக இதில் பறையாட்டம், ஒயிலாட்டம், பொய்கால் குதிரையாட்டம், வள்ளி கும்மி உட்பட பல நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. இதனுடன் ஈஷா சமஸ்கிருதி மாணவர்கள் வழங்கும் 'நாயன்மார்கள் கதையாடல்' மற்றும் கலை நிகழ்ச்சிகளும் நடைபெறுகிறது.

    நம் தமிழ்நாட்டில் விளையும் பொருட்கள் முதல் தயாரிக்கப்படும் பொருட்கள் வரை பலவும் இந்த மண்ணுக்கே உரிய தனித்தன்மை கொண்டவைகளாகும். அந்த வகையில் தஞ்சாவூர் ஓவியம், வில்லியனூர் டெரகோட்டா, தோடா எம்பிராய்டரி, கள்ளக்குறிச்சி மரச்சிற்பம், மகாபலிபுரம் கற்சிலை, சுவாமிமலை ஐம்பொன் சிற்பங்கள் உள்ளிட்ட 20 புவிசார் குறியீடு பெற்ற பொருட்களின் கண்காட்சி மற்றும் விற்பனையும் இத்திருவிழாவில் இடம்பெறுகின்றன.

    இந்த கண்காட்சியுடன் கூடுதலாக பார்வையாளர்களுக்கு இந்த கலைகளின் எளிமையான செய்முறை பயிற்சி வகுப்புகளும் நடத்தப்பட உள்ளது. இந்த பயிற்சி வகுப்புகள் மார்ச் 1-ஆம் தேதி முதல் 9-ஆம் தேதி வரை நடைபெற்று வருகின்றன.

    தமிழர் பண்பாடு குறித்து பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சிலம்பப் போட்டி, கட்டுரைப் போட்டி, கவிதைப் போட்டி, ஓவியப் போட்டி, கோலப்போட்டி, பறையிசைப் போட்டி போன்ற போட்டிகள் நடத்தப்பட உள்ளன. இப்போட்டிகள் 16 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் 16 வயதுக்கு உட்பட்டவர்கள் என இரண்டு பிரிவுகளாக நடைபெற உள்ளன. இதில் பங்கேற்று வெற்றி பெறும் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு பரிசுகள் வழங்கபட உள்ளன.

    தமிழர்கள் போர்க்களங்களில் பயன்படுத்தும் உத்திகள் மட்டுமல்ல ஆடுகளத்தில் ஆடும் விளையாட்டுகளும் வீரம் செறிந்தவை, அந்த வகையில் கொங்குநாட்டு வீர விளையாட்டான 'ரேக்ளா பந்தயம்' மார்ச் 9-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனுடன் பொது மக்களும், குழந்தைகளும் பங்கேற்று விளையாடி மகிழும் வகையில் கேளிக்கை விளையாட்டுகளும், மெகா இராட்டினங்களும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது" என அவர் கூறினார்.

    https://isha.sadhguru.org/mahashivratri/ta/tamil-thembu/

    • கணேசன் அடிதடி வழக்கில் கைதாகி கடந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் கோவை மத்திய ஜெயிலில் அடைக்கபட்டு இருந்தார்.
    • கணேசனை பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

    கோவை:

    திண்டுக்கல் மாவட்டம் தசரா பட்டியை சேர்ந்த கணேசன் (46) என்பவர் உடுமலையில் நடந்த அடிதடி வழக்கில் கைதாகி கடந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் கோவை மத்திய ஜெயிலில் அடைக்கபட்டு இருந்தார்.

    இன்று காலை அவர் அடைக்கப்பட்டு இருந்த ஜெயில் அறையில் அவர் மயங்கி கிடந்தார். சிறைகாவலர்கள் இதுகுறித்து கோவை மத்திய சிறை ஆஸ்பத்திரி டாக்டர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.

    அவர்கள் உடனடியாக வந்து அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர். தொடர்ந்து அவரை கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பினர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தண்டவாளத்தை ஒட்டிய பகுதிகளில் 24 மணி நேரமும் நிகழ்நேரத்தில் யானைகளை துல்லியமாக படம் பிடிக்கும் தெர்மல் இமேஜ் கேமரா பொருத்தப்பட்டது.
    • கடந்த ஓராண்டில் ஏ.ஐ. அமைப்பு 5011 முறை எச்சரிக்கை செய்துள்ளது.

    கோவை:

    நாட்டிலேயே முதன்முறையாக கடந்த 2024 பிப்ரவரி மாதம் கோவை மாவட்ட வனக்கோட்டம் மதுக்கரை வனச்சரகத்தில் சுமார் ரூ.7.24 கோடி மதிப்பில் ரெயில் தண்டவாளத்தை ஒட்டிய பகுதிகளில் செயற்கை நுண்ணறிவு அமைப்பு நிறுவப்பட்டது.

    கோவை-பாலக்காடு இடையிலான ரெயில் வழித்தடத்தில் மதுக்கரை வனச்சரகத்தில் மதுக்கரை வனச்சரகத்தில் சுமார் 7 கிலோ மீட்டர் தொலைவில் ஏ மற்றும் பி என இரண்டு லைன்களில் 12 கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டன.

    தண்டவாளத்தை ஒட்டிய பகுதிகளில் 24 மணி நேரமும் நிகழ்நேரத்தில் யானைகளை துல்லியமாக படம் பிடிக்கும் தெர்மல் இமேஜ் கேமரா பொருத்தப்பட்டது. இதன்மூலம் யானைகள் நடமாட்டத்தை கண்டறிந்து எச்சரிக்கை தகவல்கள் வனத்துறை மற்றும் ரெயில்வே அதிகாரிகளுக்கு பகிரப்பட்டு யானைகள் மீது மோதாமல் தடுக்க ஏ.ஐ. தொழில்நுட்பம் உதவி வருகிறது.

    இந்தநிலையில் மதுக்கரை அருகே நிறுவப்பட்டுள்ள ஏ.ஐ. கட்டுப்பாட்டு அறையை வனத்துறை கூடுதல் தலைமை செயலாளர் சுப்ரியா சாகு பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின்போது முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் சீனிவாச ரெட்டி, தலைமை வன உயிரின காப்பாளர் ராகேஷ்குமார் டோக்ரா, கோவை மண்டல வனப்பாதுகாவலர் வெங்கடேஷ், வன அலுவலர் ஜெயராஜ், வனச்சரகர் அருண் மற்றும் ஏ.ஐ. கட்டுப்பாட்டு அறை ஆபரேட்டர்களான பழங்குடியின பணியாளர்கள் உடனிருந்தனர்.

    தொடர்ந்து வனத்துறை அதிகாரிகள் கூறும்போது இந்த அமைப்பு நிறுவியது முதல் இதுவரை எந்த அசம்பாவித சம்பவமும் நடைபெறவில்லை. கடந்த ஓராண்டில் ஏ.ஐ. அமைப்பு 5011 முறை எச்சரிக்கை செய்துள்ளது. இதன் மூலம் சுமார் 2,500 யானைகள் பாதுகாப்பாக தண்டவாளத்தை கடந்து சென்றுள்ளன. இதுதவிர ரெயில்வே தண்டவாள பாதையில் இரண்டு தரைப்பாலங்கள் அமைக்கப்பட்டு யானைகள் கடந்து சென்று வருகின்றன. வனவிலங்குகள் பாதுகாப்பில் வனத்துறை மற்றும் ரெயில்வே துறை இணைந்து நாட்டிலேயே முன்மாதிரி தொழில்நுட்பத்தை பயன்ப டுத்தி வருகிறது என்றார். 

    • கிருஷ்ணகுமார் யாரிடமும் சொல்லாமல் இங்கிருந்து கேரளாவுக்கு தப்பிச் சென்றார்.
    • கிருஷ்ணகுமாரிடம் துப்பாக்கி எப்படி வந்தது என்பது பற்றி போலீசார் விசாரித்தனர்.

    சூலூர்:

    கோவை அருகே உள்ள சூலூர் பட்டணம் புதூர் என்ற இடத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணகுமார் (வயது 45). இவரது மனைவி சங்கீதா (40). இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

    சில ஆண்டுகளுக்கு முன்பு கிருஷ்ணகுமார் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தார். அதன்பிறகு அந்த பணியை விட்டு சொந்த ஊரில் வந்து குடியேறினார். இங்கு அவருக்கு சொந்தமாக விவசாய நிலங்கள் உள்ளன. இதில் விவசாயத்தொழிலில் ஈடுபட்டு இருந்தார்.

    சமீபகாலமாக கிருஷ்ணகுமாருக்கும், சங்கீதாவுக்கும் இடையே குடும்ப தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இன்று காலை அவர்களது குழந்தைகள் பள்ளிக்கு புறப்பட்டுச் சென்றுள்ளனர். அதன்பிறகு கணவன்-மனைவி இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. ஆத்திரம் அடைந்த கிருஷ்ணகுமார், வீட்டில் இருந்த துப்பாக்கியை எடுத்து சங்கீதாவை சுட்டுள்ளார். இதில் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்து சங்கீதா சம்பவ இடத்திலேயே பலியானார்.

    அதன்பிறகு கிருஷ்ணகுமார் யாரிடமும் சொல்லாமல் இங்கிருந்து கேரளாவுக்கு தப்பிச் சென்றார். பாலக்காடு அருகே உள்ள வடக்கஞ்சேரியில் கிருஷ்ணகுமாருக்கு சொந்தமான ஒரு வீடு உள்ளது. அங்கு அவர் தானும் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

    இன்று காலை கிருஷ்ணகுமார் வீட்டில் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் போய் பார்த்துள்ளனர். அங்கு சங்கீதா துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டு இறந்து கிடப்பதை கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி அவர்கள் சூலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    அதன்பேரில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரித்தனர். அப்போது மனைவியை சுட்டுக் கொன்ற கிருஷ்ணகுமார் கேரளாவில் தற்கொலை செய்து கொண்ட விவரமும் தெரியவந்தது.

    இதையடுத்து சங்கீதாவின் உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். கிருஷ்ணகுமாரிடம் துப்பாக்கி எப்படி வந்தது என்பது பற்றி போலீசார் விசாரித்தனர். அவர் தோட்ட பணிகளுக்கு பயன்படுத்துவதற்காக உரிமம் பெற்று துப்பாக்கி வாங்கி வைத்து இருந்தது தெரியவந்தது. ஆத்திரத்தில் அந்த துப்பாக்கியை எடுத்து மனைவியை சுட்டுக் கொன்றது விசாரணையில் தெரியவந்தது.

    சுட்டுக் கொல்லும் அளவுக்கு கணவன்-மனைவி இடையே என்ன பிரச்சனை இருந்தது என்பது பற்றி போலீசார் விசாரித்து வருகிறார்கள். இதற்கிடையே பள்ளிக்கு சென்ற 2 குழந்தைகளும் வீடு திரும்பியதும் பெற்றோரை எங்கே என்று கேட்டால் என்ன சொல்வது என்று தெரியாமல் உறவினர்கள் கண்ணீர் வடித்தபடி கலங்கி நின்றனர்.

    இந்த சம்பவம் சூலூர் பட்டணம் பகுதியில் இன்று பெரும்பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

    • ஈஷா மையத்துக்கு சென்ற அவரை சத்குரு ஜக்கிவாசுதேவ் உற்சாகமாக வரவேற்றார்.
    • தியான லிங்கத்தில் ஜக்கிவாசுதேவ் தலைமையில் நடந்த பஞ்சபூத வழிபாட்டில் பங்கேற்றார்.

    மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா 3 நாள் பயணமாக நேற்றுமுன்தினம் இரவு கோவை வந்தார்.

    நேற்று காலை பீளமேடு பகுதியில் புதிதாக கட்டப்பட்ட கோவை மாநகர், மாவட்ட பா.ஜ.க. அலுவலகத்தை திறந்துவைத்தார். பின்னர் மாலையில் கோவை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் ஈஷா மையத்துக்கு சென்றார். அங்கு நடந்த மகாசிவராத்திரி விழாவில் அவர் கலந்து கொண்டார்.

    ஈஷா மையத்துக்கு சென்ற அவரை சத்குரு ஜக்கிவாசுதேவ் உற்சாகமாக வரவேற்றார். தொடர்ந்து அங்குள்ள சூர்யகுண்டம், நாகசன்னதி, லிங்கபைரவி கோவிலுக்கு சென்று வணங்கினார். தியான லிங்கத்தில் ஜக்கிவாசுதேவ் தலைமையில் நடந்த பஞ்சபூத வழிபாட்டில் பங்கேற்றார்.

     

    பின்னர் ஆதியோகி சிலை முன்பு யாகவேள்வியை நெருப்பு மூட்டி மகாசிவராத்திரி விழாவை தொடங்கிவைத்தார். சில மணி நேரம் அங்கிருந்த அமித்ஷா, இரவில் ஈஷா யோகா மையத்தில் உள்ள தங்கும் விடுதியில் ஓய்வெடுத்தார்.

    இன்று காலை அவர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் கோவை விமான நிலையம் வந்தார். பின்னர் தனி விமானத்தில் டெல்லி புறப்பட்டுச் சென்றார்.

    தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை மற்றும் நிர்வாகிகள் அவரை வழியனுப்பி வைத்தனர்.

    • அறையில் சந்தேகத்திற்கிடமாக இருந்த பொருட்களை பறிமுதலும் செய்தனர்.
    • அதிகாலை நேரத்தில் நடந்த இந்த சோதனையால் அந்த பகுதியே பரபரப்பாக காணப்பட்டது.

    கோவை:

    கோவை மாவட்டத்தில் எண்ணற்ற கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.

    இந்த கல்வி நிறுவனங்கள் கோவை மட்டுமின்றி, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மாணவர்கள் படித்து வருகின்றனர்.

    இதில் சில மாணவர்கள் கல்லூரியில் உள்ள தங்கும் விடுதியிலும், இன்னும் சிலர் வெளியில் அறை எடுத்து தங்கியும் படித்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் கோவையில் படித்து வரும் கல்லூரி மாணவர்கள் மத்தியில் போதைப்பொருட்கள் பயன்பாடு அதிகரித்துள்ளது.

    இதனை தடுக்க, மாணவர்கள் மத்தியில் போதை பொருட்கள் புழங்குவதை தடுக்கவும், கல்லூரி மாணவர்கள் குற்ற சம்பவங்களில் ஈடுபடாமல் தடுக்கும் விதமாக, கோவை மாநகர் மற்றும் புறநகர் போலீசார் அவ்வப்போது, மாணவர்கள் தங்கியுள்ள அறைகளில் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் இன்று அதிகாலை கோவை சரவணம்பட்டி போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட சின்ன வேடம்பட்டி, சின்ன மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் கல்லூரி மாணவர்கள் அறை எடுத்து தங்கி இருக்கும் விடுதிகள், வீடுகள் உள்ளிட்ட பகுதிகளில் உதவி போலீஸ் கமிஷனர் வேல்முருகன் தலைமையில் 3 இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் 70-க்கும் மேற்பட்ட போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

    அதிகாலை 6 மணிக்கு கல்லூரி மாணவர்கள் தங்கியிருந்த அறைக்கு வந்த போலீசார் கதவை தட்டினர்.

    அவர்கள் கதவை திறந்ததும், உள்ளே சென்று அதிரடி சோதனை மேற்கொண்டனர். மாணவர்கள் வைத்திருந்த பேக்குகள், சூட்கேஸ்கள், அலமாரிகள், கட்டில்கள், குப்பைத்தொட்டிகள், என அனைத்திலும் சோதனை நடத்தினர்.

    அறையில் ஏதாவது தடை செய்யப்பட்ட போதை பொருள் மற்றும் கஞ்சா ஏதாவது மறைத்து வைத்துள்ளனரா? எனவும் தீவிர சோதனை மேற்கொண்டனர்.

    மேலும் அறையில் சந்தேகத்திற்கிடமாக இருந்த பொருட்களை பறிமுதலும் செய்தனர்.

    தொடர்ந்து மாணவர்களிடம், அவர்களின் பெயர், சொந்த ஊர், அவர்கள் படிக்கும் கல்லூரியின் பெயர், பாடப்பிரிவு மற்றும் மோட்டார் சைக்கிள்கள் முறையாக பதிவு செய்யப்பட்டுள்ளதா? என்றும் விசாரித்தனர்.

    அதிகாலை நேரத்தில் நடந்த இந்த சோதனையால் அந்த பகுதியே பரபரப்பாக காணப்பட்டது.

    • இந்தியை ஏற்க மாட்டோம், இந்தி ஒழிக, கெட்-அவுட் அமித்ஷா, தமிழ்வாழ்க என அவர்கள் கோஷம் எழுப்பினர்.
    • தி.மு.க.வினரின் இந்த நூதன போராட்டம் பொள்ளாச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    பொள்ளாச்சி:

    தமிழகத்தில் இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினர் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் ரெயில்நிலைய பெயர் பலகையில் இருந்த இந்தி எழுத்துக்களை கருப்பு மை கொண்டு அழித்து தி.மு.க.வினர் போராட்டம் நடத்தினர்.

    இந்தநிலையில் இந்தியை எதிர்த்தும், பா.ஜ.க. தலைவர் அண்ணாமலைக்கு கண்டனம் தெரிவித்தும் பொள்ளாச்சியில் ஆட்டுக்குட்டியை ஊர்வலமாக அழைத்து வந்து தி.மு.க.வினர் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்தியை ஏற்க மாட்டோம், இந்தி ஒழிக, கெட்-அவுட் அமித்ஷா, தமிழ்வாழ்க என அவர்கள் கோஷம் எழுப்பினர். பின்னர் ஆட்டுக்குட்டிக்கு வாழைப்பழம் வழங்கி போராட்டம் நடத்தினர்.

    தி.மு.க.வினரின் இந்த நூதன போராட்டம் பொள்ளாச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியது. போராட்டத்துக்கு தி.மு.க. சட்ட திட்ட திருத்தக்குழு உறுப்பினர் தென்றல்செல்வராஜ் தலைமை தாங்கினார். நகரசபை துணை தலைவர் கவுதமன், கவுன்சிலர் செந்தில்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ஈஷாவில் மகா சிவராத்திரி விழா பக்தியின் கும்பமேளாவாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
    • இளைஞர்களையும் ஆன்மீகத்தையும் இணைப்பதில் சத்குரு அவர்கள் மகத்தான பங்கை ஆற்றி இருக்கிறார்கள்.

    கோவை ஈஷா யோக மையத்தில் மகா சிவராத்திரி விழா இன்று மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா,"ஈஷா மகா சிவராத்திரி விழா பக்தியின் மகா கும்பமேளா" போன்று நடைபெறுகிறது எனப் புகழாரம் சூட்டினார். 

    இவ்விழாவில் உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியதாவது:-

    சத்குருவின் அழைப்பை ஏற்று ஆதியோகி தரிசனம் பெறுவதிலும், மகாதேவரின் மகத்துவத்தை வெளிப்படுத்தும் பிரம்மாண்ட மஹாசிவராத்திரி விழாவில் பங்கேற்பதை பெரும் பேறாக கருதுகிறேன்.

    இன்று ஆன்மீகத்தில் சோமநாத்திலிருந்து கேதார்நாத் வரை, பசுபதிநாத்திலிருந்து ராமேஸ்வரம் வரை, காசியிலிருந்து கோவை வரை முழு பாரதமும் சிவபெருமானின் திருவருளில் திளைத்துக் கொண்டிருக்கிறது.

    பிராயாக்ராஜ்ஜில் மகா கும்பமேளா நிறைவு பெறுவதை சுட்டும் வகையில் ஈஷாவில் மகா சிவராத்திரி விழா பக்தியின் கும்பமேளாவாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

    சத்குரு உருவாக்கியிருக்கும் இந்த இடம் பக்திக்கான இடமாக மட்டுமல்லாமல் யோகம், ஆத்ம சாதனை, பக்தி, தன்னை உணர்தல் ஆகியவற்றிற்கான இடமாக இருக்கிறது.

    ஈஷா பல லட்சம் உயிர்களை யோகா மற்றும் தியானத்தின் மூலமாக நெறிப்படுத்தி, சரியான சிந்தனையை விதைத்து சரியான பாதையில் செல்ல உலகெங்கும் வழிகாட்டி கொண்டிருக்கிறது.

    இளைஞர்களையும் ஆன்மீகத்தையும் இணைப்பதில் சத்குரு அவர்கள் மகத்தான பங்கை ஆற்றி இருக்கிறார்கள். மிகுந்த ஞானம் கொண்டதும், அதே நேரத்தில் தர்க பூர்வமானதுமான முறையில் கருத்துகளை இளைஞர்களிடம் கொண்டு சேர்த்திருக்கிறார்கள்.

    நம்முடைய சத்குருவை நான் வர்ணிக்க வேண்டுமென்றால் "ஒரு லட்சியத்தோடு இயங்கிக்கொண்டிருக்கிற ஞானி" என வர்ணிக்க வேண்டும். உலகத்தை மாற்ற வேண்டும் என்றால் முதலில் உங்களை மாற்ற வேண்டும் என்பதை சத்குரு உணர்த்தி வருகிறார்கள். 

    சத்குரு மேற்கொண்ட மண் காப்போம் இயக்கத்தின்போது அவரோடு நானிருந்தேன். சத்குரு உங்களை பற்றி நான் பணிவோடு சொல்லி கொள்கிறேன். நீங்கள் இந்த பாரத தேசத்திற்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம்.

    மகரிஷி திருமூலர் ஞானிகளின் அடையாளமாக, தீவிரமான தவத்தின் மூலம் சைவ மரபில் திருமந்திரம் எனும் 3000 அற்புத பாடல்களை அருளியிருக்கிறார்.

    அந்த வரிசையில் மகத்துவமான மற்றொரு உதாரணம் மகரிஷி அகத்தியர், அவர் சனாதனத்தின் பல்வேறு பரிமாணங்களை வெளிப்படுத்திய ஞானி.

    தமிழ் பண்பாட்டில் சிவ வழிபாட்டிற்கு சிறப்பான இடம் உண்டு. சத்குருவின் மகா சிவராத்திரியை பற்றி கேள்வி பட்டிருக்கிறேன். இன்று நேரில் கலந்து கொண்ட பிறகு உலகித்திற்கே நான் சொல்ல விரும்புவது இது மிகவும் மகத்தான ஆச்சரியமான நிகழ்வு.

    சத்குரு இந்த மகா சிவராத்திரியை ஆன்மீக விஞ்ஞானத்தின் அடிப்படையாக கொண்டு ஞானத்தையும், அறிவியலையும் இணைக்கின்ற அற்புதத்தை செய்திருக்கிறார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக ஈஷா மகா சிவராத்திரி விழாவிற்கு அனைவரையும் வரவேற்று சத்குரு பேசினார். இதில் அவர்," நம்முடைய உள்துறை அமைச்சர் ஒரு விதத்தில், சர்தார் வல்லபாய் பட்டேல் செய்ததை போல நாட்டை ஒன்றாக கொண்டு வந்திருக்கார்.

    காஷ்மீரை நம் இந்தியாவின் பாகமாக கொண்டு வந்து இருக்கிறார். ஆர்டிக்கிள் 370 நீக்கம் மூலம் அந்த பகுதி இயல்பு நிலைக்கு திரும்பி இருக்கிறது. தற்போது லட்சக்கணக்கான மக்கள் காஷ்மீருக்கு சுற்றுலா செல்கிறார்கள்.

    நாட்டின் இறையாண்மை மற்றும் சட்டம் ஒழுங்கை சரியாக கவனிக்கவில்லை என்றால், கல்வி, தொழிநுட்பம், ஆன்மீகம், பொருளாதாரம் உள்ளிட்டவைகள் வீணாகிப் போகும். நம் மாண்புமிகு மத்திய அமைச்சருக்கு நன்றி.

    இன்று மகா சிவராத்திரி எந்த ஜாதி, மதம், பாலினத்தவராக இருந்தாலும் உயிர் சக்தி மேல் எழுவதற்கான நாள். ஒரு புகழ்பெற்ற ஊடகவியலாளர் என்னிடம் முஸ்லீம், கிறிஸ்துவர்கள் மஹாசிவராத்திரிக்கு வரலாமா எனக் கேட்டார், அதற்கு நான் கூறியது முஸ்லீம், கிறிஸ்துவர்கள் குறிப்பாக இந்துக்கள் யாரும் வர முடியாது.

    மனிதர்கள் மட்டுமே மஹாசிவராத்திரிக்கு வர முடியும் என பதிலளித்தேன். இது மனித குலத்திற்கான கொண்டாட்டம். நீங்கள் மனிதராக இருந்து உங்கள் முதுகெலும்பு நிமிர்ந்து இருந்தால் ஆதியோகி உங்களுக்கானவர். ஆதியோகி வருங்காலத்திற்கான நம்பிக்கையை வழங்குகிறார். ஆதியோகி நாட்டின் பல்வேறு இடங்களில் வர உள்ளார்" என்றார்.

    மேலும், ஆதியோகி முன்பு தத்ரூபமாக உருவாக்கப்பட்டு இருந்த கயிலாய மலை போன்ற அரங்கமைப்பு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இதனைத் தொடர்ந்து மிராக்கிள் ஆப் தி மைண்ட் செயலியை சத்குரு வெளியிட்டார்.

    அடுத்த இரண்டு ஆண்டுகளில் உலகில் 300 கோடி மக்களை தியானத்தில் ஈடுபடுத்தினால் உலகளவில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை நம்மால் உருவாக்க முடியும்.

    ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த நள்ளிரவு சந்தியா கால நேரத்தில் சத்குரு திருவைந்தெழுத்து மஹா மந்திர தீட்சையினை வழங்கி சக்திமிக்க தியானங்களை வழி நடத்தினார். 

    ஈஷா யோக மையத்திற்கு மாலை வந்தடைந்த அமித் ஷா அவர்களை சத்குரு சூர்ய குண்ட மண்டபம், நாகா சன்னதி, லிங்க பைரவி சன்னதி மற்றும் தியானலிங்கம் உள்ளிட்ட இடங்களில் தரிசனம் செய்ய அழைத்து சென்றார். தியானலிங்கத்தில் நடைபெற்ற பஞ்ச பூத கிரியாவிலும் அமித் ஷா அவர்கள் கலந்து கொண்டார்.

    ஈஷா புராஜக்ட் சமஸ்கிருதி குழுவினரின் நடன நிகழ்ச்சி பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தியது. ஈஷா சமஸ்கிருதி மாணவர்களின் தேவார பண்ணிசை நிகழ்ச்சி மக்களை பக்தி பரவசத்தில் ஆழ்த்தியது.

    மேலும் தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரபல பாடகர் சத்ய பிரகாஷ், கர்நாடகாவை சேர்ந்த பாடகி சுபா ராகவேந்திரா, 'பாரடாக்ஸ்' என அழைக்கப்படும் தனிஷ் சிங், மராத்தி இசை சகோதரர்கள் அஜய் - அதுல், குஜராத் நாட்டுப்புற கலைஞர் முக்திதான் காத்வி மற்றும் ஜெர்மன் பாடகி கசான்ட்ரா மே ஆகியோரின் இசை நிகழ்ச்சிகள் மக்களை இரவு முழுவதும் விழிப்புடன் வைத்திருந்தது.

    விழாவில் சிறப்பு விருந்தினர்களாக ஒடிசா மாநில ஆளுநர் ஹரிபாபு கம்பஹம்பதி, பஞ்சாப் மாநில ஆளுநர் குலாப் சந்த் கட்டாரியா, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, கர்நாடக மாநில துணை முதல்வர் டி.கே. சிவகுமார், மத்திய சட்ட மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால், மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை இணை அமைச்சர் எல். முருகன், மகாராஷ்டிரா மண் மற்றும் நீர்ப்பாசனத் துறை அமைச்சர் சஞ்சய் ரதோட் ஆகியோர் பங்கேற்றனர்.

    • ஈஷா யோகா மையத்தில் உள்ள பிரமாண்ட நாகர் சிலைக்கு கற்பூர தீபாராதனை காட்டி அமித்ஷா வழிபட்டார்.
    • ஈஷா யோகா மையத்தில் உள்ள பிரமாண்ட நாகர் சிலைக்கு கற்பூர தீபாராதனை காட்டி அமித்ஷா வழிபட்டார். மொத்தம் 7,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    கோவை ஈஷா யோகா மையத்தில் மகாசிவராத்திரி விழா கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் பங்கேற்பதற்காக நாடு முழுவதிலிருந்தும் ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்து வருகின்றனர்.

    வெளிநாடுகளில் இருந்தும், திரைத்துறை உள்பட அனைத்து துறைகளில் இருந்தும் நட்சத்திரங்கள் பங்கேற்றுள்ளனர்.

    மேலும், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா விழாவில் பங்கேற்றுள்ளார். இதற்காக அவர் நேற்று இரவு 8.30 மணி அளவில் டெல்லியில் இருந்து தனி விமானத்தில் கோவை வந்தார். அவருக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.

    இதனைத்தொடர்ந்து கோவை பீளமேட்டில் இன்று காலை புதிதாக கட்டப்பட்டுள்ள பாஜக அலுவலகத்தை திறந்து வைத்தார். மதியம், பா.ஜ.க. நிர்வாகிகளுடன் கலந்துரையாடினார்.

    இந்நிலையில் இன்று மாலை சாலை மார்க்கமாக ஈஷா யோகா மையத்தை சென்றடைந்த மத்திய அமைச்சர் அமித்ஷா, அங்கு துவங்கிய மகா சிவராத்திரி விழாவில் பங்கேற்றார்.

    பின்னர் ஈஷா யோகா மையத்தில் உள்ள பிரமாண்ட நாகர் சிலைக்கு கற்பூர தீபாராதனை காட்டி அவர் வழிபட்டார்.

    இதனைத்தொடர்ந்து இன்று இரவு ஈஷா மையத்தில் உள்ள விருந்தினர் மாளிகையில் அவர் ஓய்வு எடுக்கிறார். நாளை காலை, ஈஷாவில் இருந்து விமானப்படை ஹெலிகாப்டரில் புறப்பட்டு, கோவை விமான நிலையம் சென்று, அங்கிருந்து தனி விமானத்தில் உத்தரபிரதேசம் செல்கிறார்.

    அமித்ஷா வருகையையொட்டி, கோவையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மாநகரில் 3,000 போலீசார், மாவட்ட பகுதியில், 4,000 போலீசார் என மொத்தம் 7,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    ×