என் மலர்
கோயம்புத்தூர்
- ஒரு கட்டத்தில் இளம்பெண் பாண்டி முருகனுடனான கள்ளக்காதலை கைவிட்டு அவருடன் தனிமையில் இருப்பதையும் தவிர்த்தார்.
- மிகுந்த மனவேதனை அடைந்த அந்த பெண் வாழ்க்கையில் விரக்தி அடைந்து தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மேட்டுப்பாளையம்:
பீகார் மாநிலத்தை சேர்ந்த 22 வயது பெண்ணும், அவரது கணவரும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். அவர்கள் கடந்த 2021-ம் ஆண்டு கோவைக்கு வந்தனர்.
பின்னர் அன்னூர் அருகே உள்ள கெம்பநாயக்கன் பாளையத்தில் வாடகை வீட்டில் தங்கி இருந்து கூலி வேலைக்கு சென்று வந்தனர்.
இந்தநிலையில் அந்த பெண்ணுக்கு தேனி மாவட்டத்தை சேர்ந்த பாண்டி முருகன் (28) என்ற வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இந்த பழக்கம் கள்ளக்காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து ஜாலியாக இருந்து வந்தனர்.
அப்போது பாண்டி முருகன் தனது செல்போனில் இளம்பெண்ணுடன் ஜாலியாக இருக்கும் ஆபாச வீடியோக்களை அவருக்கு தெரியாமல் எடுத்து வைத்து இருந்தார். பின்னர் இந்த வீடியோவை இளம்பெண்ணுக்கு அனுப்பி அவரை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்து வந்தார். மேலும் தனிமையில் இருக்கும் வீடியோக்களை அவரது கணவருக்கு அனுப்பி விடுவதாக கூறி இளம்பெண்ணை மிரட்டி நகை மற்றும் பணத்தை பறித்து சென்றார்.
ஒரு கட்டத்தில் இளம்பெண் பாண்டி முருகனுடனான கள்ளக்காதலை கைவிட்டு அவருடன் தனிமையில் இருப்பதையும் தவிர்த்தார். இது அவருக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இதனையடுத்து பாண்டி முருகன் ஆபாச வீடியோவை பெண்ணின் கணவருக்கு அனுப்பினார். இதனை பார்த்து அவர் அதிர்ச்சியடைந்தார்.
பின்னர் இது குறித்து தம்பதி கடந்த 17-ந் தேதி கோவை மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்தநிலையில் பாண்டி முருகனின் தொந்தரவு அதிகரிக்கவே தம்பதி அவருக்கு பயந்து கணேசபுரம் பகுதியில் வசித்து வந்தனர். சம்பவத்தன்று அதிகாலை மீண்டும் அவர் இளம்பெண்ணின் கணவருக்கு அவரது மனைவியின் ஆபாச வீடியோக்களை அனுப்பினார். இதனை பார்த்து அந்த பெண் அதிர்ச்சியடைந்தார்.
இதன் காரணமாக மிகுந்த மனவேதனை அடைந்த அந்த பெண் வாழ்க்கையில் விரக்தி அடைந்து தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். பின்னர் இது குறித்து அன்னூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் தற்கொலை செய்து கொண்ட இளம்பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து அன்னூர் போலீசார் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்து, அவரது தற்கொலைக்கு காரணமாக இருந்த பாண்டி முருகன் மீது வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வந்தனர்.
கொச்சியில் பதுங்கி இருந்த அவரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.
- 25-ந்தேதி திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது.
- 30-ந்தேதி வசந்த உற்சவத்துடன் திருவிழா நிறைவு பெறுகிறது.
கோவை-அவினாசி ரோடு உப்பிலிபாளையத்தில் பிரசித்தி பெற்ற தண்டுமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் சித்திரை திருவிழா விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான சித்திரை திருவிழா கடந்த 18-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தொடர்ந்து நேற்று 6.30 மணியளவில் அக்னிச்சாட்டு நிகழ்ச்சி நடந்தது. அப்போது பூக்கம்பம் கொண்டு வந்து அதில் அக்னி சட்டி வைக்கப்பட்டது. இதில் தண்டுமாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில், பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 6.30 மணியளவில் திருவிளக்கு வழிபாடு, இரவு 8 மணிக்கு வெள்ளி சிம்ம வாகனத்தில் அம்மன் திருவீதி உலா நடைபெறுகிறது. நாளை (சனிக்கிழமை) இரவு 8 மணிக்கு குதிரை வாகனத்தில் அம்மன் திருவீதி உலா நடைபெறுகிறது. 23-ந் தேதி சிம்ம வாகனத்திலும், 24-ந் தேதி அன்ன வாகனத்தில் அம்மன் திருவீதி உலா வருகிறார்.
25-ந் தேதி மாலை 6.30 மணியளவில் திருக்கல்யாண உற்சவம், இரவு 8 மணிக்கு மலர் பல்லாக்கில் அம்மன் திருவீதி உலா, 26-ந் தேதி காலை 7 மணியளவில் சக்தி கரகம், அக்னி சாட்டு புறப்பாடு நிகழ்ச்சி, 27-ந் தேதி காலை 9 மணிக்கு அம்மனுக்கு மகா அபிஷேகம், காலை 11 மணிக்கு மஞ்சள் நீர், இரவு 7 மணிக்கு கொடி இறக்குதல், இரவு 8 மணிக்கு கம்பம் கலைத்தல், 28-ந் தேதி காலை 6 மணிக்கு தமிழ் முறை லட்சார்ச்சனை நிகழ்ச்சி நடைபெறும். 30-ந் தேதி காலை 7 மணிக்கு சங்காபிஷேகம், இரவு 7 மணிக்கு வசந்த உற்சவத்துடன் சித்திரை திருவிழா நிறைவு பெறுகிறது.
- 3 ஆண்டுகளாக முடக்கப்பட்டுள்ள பஞ்சாலைகளை இயக்க வேண்டும்.
- மத்திய அமைச்சர்கள் கோவைக்கு வந்தால் கருப்புக்கொடி காட்டுவோம்.
கோவை,
தமிழகத்தில் உள்ள 7 பஞ்சாலைகளின் ஆலை வாயில் முன்பு என்.டி.சி பஞ்சாலைத்தொழிலாளர்கள் இன்று பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கஞ்சி காய்ச்சும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதன் ஒரு பகுதியாக கோவை புலியகுளம் பங்கஜா மில் ரோட்டில் என்.டி.சி பஞ்சாலை தொழிலாளர்கள் கஞ்சி காய்ச்சும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட வர்கள் 3 ஆண்டுகளாக சட்ட விரோதமாக முடக்கப்பட்டுள்ள பஞ்சாலைகளை இயக்க வேண்டும். பரிதவிக்கும் தொழிலாளர்களுக்கு கொடுக்கப்பட வேண்டிய சம்பளம் வழங்கவேண்டும். பணி ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு பணிக்கொடை வழங்க வேண்டும்.
சம்பளம் கொடுத்து பென்ஷன் குறைபாட்டை சரி செய்ய வேண்டும். 3 ஆண்டு போனஸ், இதர பயன்களை வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கஞ்சி காய்ச்சும் போராட்டத்தை நடத்தினர்.
இதேபோல் கோவை சாய்பாபா காலனி அருகே உள்ள முருகன் மில்ஸ் வாயில் முன்பாக பஞ்சாலை தொழிலாளர்கள் கஞ்சி காய்ச்சும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அவர்கள் கூறியதாவது:-
தமிழகம் முழுவதும் 1800 நிரந்தர மற்றும் 1200 ஒப்பந்த தொழிலாளர்கள் என 3,000 தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
தமிழகத்தில் கொரோனா கால கட்டத்திற்கு பிறகு ஆலைகள் திறக்கப்படாமல் உள்ளது. இதனால் மில்லில் வேலை செய்யும் குடும்பத்தினர்கள் தங்களுடைய வருவாய் இழந்து கஷ்டமான சூழலில் உள்ளனர்.
மத்திய அரசைக் கண்டித்து, தொழிலாளர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மத்திய அமைச்சர்கள் கோவைக்கு வந்தால் கருப்புக்கொடி காட்டுவோம். இவ்வாறு அவர்கள் கூறினார்.
இந்த போராட்டத்தில் ஹெச்.எம்.எஸ், ஏ.டி.பி, சி.ஐ.டி.யு.ஐ, என்.டி.யு.சி, ஏ.ஐ.டி.யு, சி.எம்.எல். எஃப், டாக்டர் அம்பேத்கர் என்.டி.எல்.எப் உள்ளிட்ட தொழிற்சங்கத்தினர் பங்கேற்றனர்.
- கடந்த 16-ந் தேதி இரவு மோட்டார் சைக்கிளை குடியிருப்பின் முன்பு நிறுத்தி இருந்தார்.
- ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
கோவை,
கோவை போலீஸ் பயிற்சி பள்ளி வளாகத்தில் போலீசாருக்கான குடியிருப்பு உள்ளது.
இங்கு ஆயுதப்படை போலீசார் மற்றும் கோவை மாநகரம், மற்றும் புறநகர் மாவட்டத்தில் பணிபுரியும் போலீசார் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர்.
செல்வபுரம் போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்- இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் செல்வக்குமார். இவர் தனது குடும்பத்துடன் போலீஸ் பயிற்சி பள்ளி வளாகத்தில் உள்ள குடியிருப்பில் வசித்து வருகிறார்.
இவர் கடந்த 16-ந் தேதி இரவு தனது மோட்டார் சைக்கிளை போலீஸ் பயிற்சி பள்ளி வளாகத்தில் உள்ள குடியிருப்பின் முன்பு நிறுத்தி இருந்தார்.
அந்த மோட்டார் சைக்கிளை மர்ம நபர் ஒருவர் திருடி சென்றார். செல்வகுமார் பல இடங்களில் தேடியும் மோட்டார் சைக்கிள் கிடைக்காததால் ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையத்தில் அவர் புகார் அளித்தார்.
ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். பின்னர் போலீஸ் பயிற்சி பள்ளி வளாகத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு காமிராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது, மோட்டார் சைக்கிளை மர்மநபர் திருடி செல்வது பதிவாகி இருந்தது. இதனை வைத்து அந்த நபர் யார் என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். பாதுகாப்பு அதிகம் இருக்கும் போலீஸ் பயிற்சி வளாகத்திற்குள் நுழைந்து, சிறப்பு சப் இன்ஸ்பெக்டரின் மோட்டார் சைக்கிளை மர்ம நபர் திருடி சென்ற சம்பவம் கோவை போலீசார் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
- இந்த கோவிலின் அருகில் உள்ள சோமையம்பாளையம் கிராமத்தில் ஏராளமான புறம்போக்கு நிலங்கள் உள்ளன.
- சட்டக்கல்லூரி, பாரதியார் பல்கலைக்கழகம் உள்ளிட்டவையும் அமைந்துள்ளதால் மாணவர்களும் பயன் அடைவர்.
கோவை,
கோவை வடக்கு தொகுதி எம்.எல்.ஏ. அம்மன் அர்ச்சுணன் சட்டசபையில் பேசியதாவது:-
கோவை வடக்கு தொகுதிக்குட்பட்ட மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் மருதமலை முருகன் கோவில் உள்ளது. மருதமலை முருகன் கோவில் ஏழாவது படைவீடு என அழைக்கப்படுவதால், தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வருகிறார்கள்.எனவே பக்தர்களின் நலன் கருதி இந்த கோவிலை சுற்றியுள்ள பகுதிகளை ஆன்மிக சுற்றுலா தலமாக மேம்படுத்த அரசு முன்வர வேண்டும்.
இந்த கோவிலின் அருகில் உள்ள சோமையம்பாளையம் கிராமத்தில் ஏராளமான புறம்போக்கு நிலங்கள் உள்ளன.
அந்த இடத்தில் சுற்றுலா தலம் அமைத்தால் பக்தர்கள் மற்றும் மக்ககள் பயன் அடைவார்கள்.
இதுதவிர சட்டக்கல்லூரி, பாரதியார் பல்கலைக்கழகம் உள்ளிட்டவையும் அமைந்துள்ளதால் மாணவர்களும் பயன் அடைவர்.
எனவே சுற்றுலாத்துறை அமைச்சர் இந்து சமயம் மற்றும் வனத்துறை ஆகியவற்றின் கருத்துக்களை பெற்று மருதமலையை சுற்றியுள்ள பகுதிகளை ஆன்மிக சுற்றுலா தலமாக மாற்ற நடவடிக்கை எடுப்பார்களா என்பதை அறிய விரும்புகிறேன்.இவ்வாறு அவர் பேசினார்.
அவருக்கு பதில் அளித்து சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் பேசியதாவது:-
மருதமலை முருகன் கோவில் இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலும், மருதமலை வனப்பகுதி வனத்துறை கட்டுப்பாட்டிலும் உள்ளது. இந்த கோவிலை சுற்றியுள்ள பகுதிகளை ஆன்மிக சுற்றுலா தலமாக மேம்படுத்த தமிழ்நாடு சுற்றுலா தலங்கள் மேம்பாட்டு திட்டத்தின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி வனத்துறை, இந்து சமயம் மற்றும் அறநிலைய துறையின் தடையின்மை சான்று மற்றும் கோவை கலெக்டரின் பரிந்துரையின் அடிப்படையில் திட்ட மதிப்பீடு மற்றும் கருத்துரு பெறப்படுமாயின், சுற்றுலா துறை நிதிநிலைமைக்கு ஏற்ப பரீசலிக்கப்படும்.
மேலும் சுற்றுலாத்துறை எந்த ஓர் இடத்தையும் சுற்றுலா தலமாக அறிவிப்பதில்லை.
அந்த இடத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை மற்றும் தேவைகள் அடிப்படையிலேயே பல்வேறு வசதிகள் ஏற்படுத்தி தருகின்றது. தமிழ்நாடு சுற்றுலா இடங்களை மேம்படுத்த தமிழ்நாடு முதல்-அமைச்சரின் வழிகாட்டுதலின் படி 2021-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட தமிழ்நாடு சுற்றுலா தலங்கள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் வழிகாட்டு நெறிமுறைகள்படி தொடர்பு டையத்துறை வாயிலாக அந்த இடம் யாரின் கட்டுப்பாட்டில் இருக்கிறதோ அந்த துறையின் மூலமாக தயார் செய்யப்பட்டு, மாவட்ட கலெக்டர் பரிந்துரையுடன் எங்கள் துறைக்கு அனுப்பட்டால், அதனை முதல்-அமைச்சர் கவனத்திற்கு எடுத்து சென்று சுற்றுலா துறை நிதி நிலைமைக்கு ஏற்ப பரிசீலிக்கப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- லாரி டிரைவர் மற்றும் வாலிபர்களுக்கிடையே வாய் தகராறு ஏற்பட்டது.
- லாரி டிரைவரை மீட்டு பொள்ளாச்சி கண் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
கோவை,
கோவை பொள்ளாச்சி அருகே ரங்கசமுத்திரத்தை சேர்ந்தவர் திருஞானசண்முகம் (வயது48). இவர் சொந்தமாக லாரி வைத்து ஓட்டி வருகிறார்.
சம்பவத்தன்று அவர் லாரியை கேரளாவுக்கு ஓட்டிச் சென்றார். அப்போது திவான்சாபுதூர்அம்மன் கோவில் அருகே சென்ற போது, சாமி கும்பிடுவதற்காக லாரியை ரோட்டில் இடது பக்கத்தில் நிறுத்தினார். அப்போது லாரியின் பின்னால் 4 வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் குடிபோதையில் வந்தனர். இதையடுத்து அவர்கள் திருஞானசண்முகத்திடம் ஏன் லாரியை இங்கு நிறுத்தி இருக்கிறாய் என கேட்டு தகராறில் ஈடுபட்டனர்.
இதுதொடர்பாக லாரி டிரைவர் மற்றும் வாலிபர்களுக்கிடையே வாய் தகராறு ஏற்பட்டது. இதில் கோபமடைந்த வாலிபர்கள் திருஞானசண்முகத்தை தகாத வார்த்தைகளால் திட்டி, அவரை தாக்கினர். மேலும் கொலை மிரட்டல் விடுத்து அங்கிருந்து தப்பிச் சென்றனர். இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் லாரி டிரைவரை மீட்டு பொள்ளாச்சி கண் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
இதுகுறித்து அவர் ஆனைமலை போலீசில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் கேரளாவை சேர்ந்த பிராஜிஸ் (21), சிஜி (25), ராஜேஷ் (30), திணேஷ் (25) ஆகியோர் என தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் 4 பேரையும் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
- பல்வேறு பிரச்சினைகளால் குறுந்தொழில் கூடங்கள் பல மூடப்பட்டு வருகிறது.
- ெசயல்படாத தொழிற்கூடங்களுக்கும் பீக் அவர்ஸ் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
கோவை,
தமிழகம் முழுவதும் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட சிறு, குறுந்தொழில் கூடங்கள் உள்ளன. இங்கு 112 கிலோ வாட் மின்சாரத்தை பயன்படுத்துபவர்களுக்கு நிலைக்கட்டணமாக ரூ.35 வசூலிக்கப்பட்டு வந்தது. தற்போது 50 கிலோ வாட் வரை ரூ.75 ஆகவும், அதற்கு மேல் ரூ.150 ஆகவும் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 10-ந் தேதியில் இருந்து வசூலிக்கப்பட்டு வருகிறது.
இது தவிர பீக் அவர்ஸ் என்ற பெயரில் காலை 6 மணி முதல் 10 மணி, மாலை 6 மணி முதல் இரவு 10 மணி என்று கணக்கிட்டு, மின்கட்டணம் செலுத்தும் தொகையில் இருந்து 15 சதவீதம் பீக் அவர்ஸ் கட்டணத்தை வசூலித்து வருகிறார்கள். இதில் சில தொழிற்கூடங்கள் செயல்படாமல் இருந்தாலும் அவர்களுக்கும் பீக் அவர்ஸ் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே பல்வேறு பிரச்சினைகளால் குறுந்தொழில் கூடங்கள் பல மூடப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் மின்சார கட்டணம் வசூலிப்பதில் இது போன்ற பிரச்சினை இருப்பதால் பல தொழில் முனைவோர்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.அது போன்று சிட்கோ நிறுவனத்தின் சார்பில் நகர்ப்புறங்களில் செயல்பட்டு வரும் 24 தொழில் பேட்டையில் உள்ள தொழிற்கூடங்களை 99 வருடத்துக்கு குத்தகை அடிப்படையில் வழங்கலாம் என்று சிட்ேகா அறிவித்து உள்ளது. இதனால் தொழில் முனைவோர்களுக்கு பாதிப்பு ஏற்படும்.
எனவே மின் கட்டணத்தில் பழைய நிலையை அமல்படுத்தக்கோரியும், சிட்கோவில் உள்ள தொழிற் கூடங்களுக்கு குத்தகை அடிப்படையில் வழங்குவதை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இன்று தமிழகம் முழுவதும் உள்ள சிறு, குறுந்தொழில் கூடங்கள் கதவடைப்பு போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்து இருந்தனர்.
இந்த நிலையில் போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது.
இது குறித்து போராட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ஜேம்ஸ், சுருளிவேல், சிவசண்முககுமார் ஆகியோர் கூறியதாவது:-
தமிழ்நாடு முழுவதும் உள்ள தொழில்துறையினர் மின் கட்டணத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சினையை தீர்க்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து இன்று தொழில் கூடங்களை அடைத்து ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று முடிவு செய்து இருந்தோம். நேற்று குறு, சிறு நடுத்தர தொழில் துறை அமைச்சர் அன்பரசு, மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ஆகியோர் டான்சியாவின் மாநில நிர்வாகிகளை அழைத்து கோரிக்கைகள் சம்பந்தமாக பேசினர். கோரிக்கைகளுக்கு ஒவ்வொன்றாக தீர்வு காண்பதாக அமைச்சர்கள் உறுதி அளித்துள்ளனர்.
எனவே போராட்டத்தை தமிழகம் முழுவதும் ஒத்திவைப்பது என்று டான்சியா எடுத்த முடிவை கோவையில் இருக்கிற 22 தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பான போசியாவும் ஏற்று இந்த போராட் டத்தை ஒத்தி வைப்பது என்று தீர்மானித்து உள்ளது. எனவே இன்று நடக்கவிருந்த தொழில் கூடங்களை அடைக்கும் போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டம் ஒத்திவைக்கப்பட்டு உள்ளது என்றனர்.
- ஆஸ்திரேலியாவில் இன்று முழு சூரிய கிரகணம் காணப்பட்டது.
- கிரகணம் முடிந்தபின் உலக்கை தானாக கீழே விழுந்து விடும்.
மேட்டுப்பாளையம்,
ஆஸ்திரேலியாவில் இன்று முழு சூரிய கிரகணம் காலை 7.20 மணி முதல் மதியம் 12.20 மணி வரை காணப்பட்டது. இந்த சூரிய கிரகணம் இன்று 3 நிலைகளில் தெரியும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவில் சூரிய கிரகணத்தின் தாக்கம் உள்ளதா? என பலர் ஆர்வத்துடன் பார்த்து கொண்டிருந்தனர். இதற்கிடையே மேட்டுப்பாளையம் அருகே ஆலாங்கொம்பு வீராசாமி நகரை சேர்ந்த விஜய்ஆனந்த் குடும்பத்தினர் வெண்கலத் தட்டில் தண்ணீர் ஊற்றி உலக்கையை நிற்க பார்த்து பார்த்தனர். அப்போது தட்டில் வெண்கல தட்டு செங்குத்தாக நின்றது.
சூரிய கிரகணத்தின் தாக்கம் இந்தியாவில் உள்ளதால் தண்ணீர் ஊற்றி வெண்கல தட்டில் ஒலக்கை நிற்பதாக கூறினர். இப்படி உலக்கை வாசல் முன்பு நிற்பதை அந்த பகுதி மக்கள் அறிந்தனர். அவர்கள் ஆர்வத்துடன் அங்கு பார்த்தனர். மேலும் அதனை புகைப்படமும் எடுத்தனர். கிரகணம் முடிந்தபின் ஒலக்கை தானாக கீழே விழுந்து விடும் என பெரியோர்கள் கூறினா்.
- சிவகுமார் வச்சினம்பாளையத்தில் இருந்து மேட்டுப்பாளையத்திற்கு செல்லும் பஸ்சில் சென்றார்.
- பஸ் டிரைவரை தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
மேட்டுப்பாளையம்,
மேட்டுப்பாளையம் அருகே சிறுமுகை வெள்ளிக்குப்பம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவரது மகன் சிவகுமார் (42). இவர் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகத்தின் மேட்டுப்பாளையம் கிளையில் டிரைவராக பணியாற்றி வருகிறார்.
நேற்று வச்சினம்பாளையத்தில் இருந்து மேட்டுப்பாளையத்திற்கு செல்லும் பஸ்சில் பணியாற்றினார். சிறுமுகை சாலை பிரிவு பகுதியில் உள்ள உருளைக்கிழங்கு மண்டி அருகே வந்த போது சாலையின் நடுவே ஒருவர் சென்று கொண்டிருந்தார்.டிரைவர் சிவகுமார் ஹாரன் அடித்தும் ஒதுங்காமல் சென்றதாக கூறப்படுகிறது.
இதனால் பஸ்சை நிறுத்தி விட்டு கீழே இறங்கிச்சென்ற சிவகுமார் அவரிடம் இது குறித்து கேட்டார். அதற்கு அந்த நபர் சிவகுமாரை தகாத வார்த்தைகளால் பேசி கைகளால் பலமாக தாக்கினார். இதில் டிரைவர் சிவகுமாருக்கு இடது கண்ணின் அருகே காயம் ஏற்பட்டது.
இதனையடுத்து டிரைவர் சிவக்குமார் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் புறநோயாளியாக சிகிச்சை பெற்ற பின்னர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த இன்ஸ்பெக்டர் நவநீதகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பஸ் டிரைவரை தாக்கியது மேட்டுப்பாளையம் எம்.எஸ்.ஆர். புரம், அண்ணாஜி ராவ் ரோடு பகுதியைச் சேர்ந்த சரவணகுமார் (34) என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.
- விபத்தை தடுக்கும் நோக்கில், வேகத்தடைகள் அமைக்கப்பட்டுள்ளன.
- வேகத்தடைகளுக்கு பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
கோவை,
கோவை மாநகரில் ரேஸ்கோர்ஸ் முக்கிய பகுதியாகும். இங்கு நடைபயிற்சி மற்றும் ஓட்டப் பயிற்சி, சைக்கிளிங் என உடற்பயிற்சிக்காக தினமும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கிறார்கள். இதன்காரணமாக ரேஸ்கோர்ஸ் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் மேம்படுத்தப்பட்டு புதுப்பொலிவு பெற்று திகழ்கிறது.
இங்கு இளைஞர்களுக்கு ஜிம், குழந்தைகளுக்கு விளையாட்டு பூங்கா மற்றும் கண்கவர் மின் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் ரேஸ்கோர்ஸ் எப்பொழுதும் பரபரப்பாகவே காணப்படுகிறது.
ரேஸ்கோர்ஸ் சாலையும் புதுப்பிக்கப்பட்டு வாகனங்கள் தங்கு தடையின்றி செல்ல வழி வகை செய்யப்பட்டுள்ளது. இதனால் இருசக்கர மற்றும் 4 சக்கர வாகனங்கள் சீறிப்பாய்ந்து செல்கின்றன. இவ்வாறு வாகனங்கள் வேகமாக செல்வதால் விபத்துகளும் அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. சில இடங்களில் பாதசாரிகள் ரோட்டை கடக்க முடியாமல் அவதிக்கு ஆளாகி வருகிறார்கள்.
ேவகமாக செல்லும் வாகனங்களுக்கு கடிவாளம் போடும் வகையிலும், விபத்துகளை தடுக்கும் வகையிலும் முக்கிய இடங்களில் வேகத்தடை அமைக்க வேண்டும் என போலீசாருக்கு பொது மக்கள் கோரிக்கை விடுத்த னர். இதையடுத்து போலீசார் வேகத்தடை அமைப்பதற்கான இடத்தை தேர்வு செய்தனர். அதன்படி ரேஸ்கோர்சை சுற்றியுள்ள சாலையில் 5 இடங்களில் நேற்று நெடுஞ்சாலை துறையினர் வேகத்தடை அமைத்தனர்.வேகத்தடைகளுக்கு பொதுமக்களும், நடை பயிற்சி மேற்கொள்பவர்களும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். அவர்கள் கூறியதாவது:-
இந்த சாலையில் காலை முதல் இரவு வரை அதிகமான வாகனங்கள் செல்கின்றன. மேலும் வாகனங்கள் அனைத்தும் அதிவேகமாக செல்வதால் தினமும் விபத்துகள் நடைபெற்று வந்தது.
வேகத்தடை அமைக்கப்பட்டதால் இந்த சாலையில் செல்லும் வாகனங்கள் வேகத்தை குறைத்து செல்கின்றன. மேலும் எண்ணற்ற விபத்துக்கள் தவிர்க்கப்படுகிறது. இவ்வாறு அவர்கள் கூறினார்.
- போலீசார் கண்காணிப்பு காமிராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர்.
- துடியலூர் போலீசார் தலைமறைவாக இருந்த ஆல்பர்டை கைது செய்தனர்.
கவுண்டம்பாளையம்,
கோவை துடியலூர் அருகே உள்ள நல்லாம்பாளையத்தை சேர்ந்தவர் ராஜசிம்மா (வயது 46). இவர் அந்த பகுதியில் பாத்திர கம்பெனி வைத்து நடத்தி வருகிறார்.
சம்பவத்தன்று இரவு இவர் தனது கம்பெனியை மூடும் போது ஊழியர்களுக்கு கொடுப்பதற்காக ரூ.6 லட்சத்து 50 ஆயிரம் பணத்தை கல்லா பெட்டியில் வைத்து விட்டு சென்றார். மறுநாள் கம்பெனிக்கு சென்றார். அப்போது கல்லா பெட்டி உடைக்கப்பட்டு அதில் இருந்த ரூ.6 லட்சத்து 50 ஆயிரம் பணம் கொள்ளை போயிருப்பது தெரிய வந்தது.
இது குறித்து ராஜசிம்மா துடியலூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
பின்னர் அங்கு பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு காமிராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது அதே கம்பெனியில் கடந்த 4 ஆண்டுகளாக எலக்ட்ரிசீயனாக வேலை பார்த்து வந்த கணபதியை சேர்ந்த ஆல்பர்ட் (29) என்பவர் திருடிச் சென்றது தெரிய வந்தது. அவர் கம்பெனியை மூடும் போது உள்ளே யாருக்கும் தெரியாமல் மறைந்து கொண்டார். பின்னர் கல்லா பெட்டியை உடைத்து பணத்தை கொள்ளையடித்து பைப் வழியாக தப்பிச் சென்றது தெரியவந்தது.
இதனையடுத்து துடியலூர் போலீசார் தலைமறைவாக இருந்த ஆல்பர்டை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.
- தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 70-க்கு மேல் பதிவாகியுள்ளது.
- கடந்த வாரத்தில் ஒரு தொழிற்சாலையில் புதிய கொரோனா தொகுப்பு கண்டறியப்பட்டது
கோவை,
கோவையில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதையடுத்து தொழிற்சாலைகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருவதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கோவை மாவட்டத்தில் கடந்த ஒரு மாத காலமாக தொடர்ந்து கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. குறிப்பாக மாநகராட்சிப் பகுதிகளில் நோய்த் தொற்று பாதிப்பு அதிக அளவில் காணப்படுகிறது. மாவட்டத்தில் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 70-க்கு மேல் அதிகரித்துள்ளதாக சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர். இதில், மாநகராட்சியில் மட்டும் 50-க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அண்மையில் தனியார் தொழிற்சாலையில் கொரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில் தொழிற்சாலைகளில் கண்காணிப்பு சுகாதாரத்துறையினர் தீவிரப்படுத்தியுள்ளனர்.
இது தொடர்பாக சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:- கோவையில் கடந்த வாரத்தில் ஒரு தொழிற்சாலையில் புதிய கொரோனா தொகுப்பு கண்டறியப்பட்டது. இதனையடுத்து, அனைத்து தொழிற்சாலைகளும் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சுகாதார ஆய்வாளர்கள் மூலம் தொடர்ந்து தொழிற்சாலைகளில் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. அதன்பின் வேறு எந்த கொரோனா தொகுப்பும் ஏற்படவில்லை. மாவட்டம் முழுவதும் பரவலாக தொற்று பாதிப்பு காணப்படுகிறது. குறிப்பாக மாநகராட்சியில் அதிக அளவில் காணப்படுகிறது. நோய்த் தொற்று பாதிப்பை தவிர்க்க பொதுமக்கள் அனைவரும் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.






