என் மலர்tooltip icon

    கோயம்புத்தூர்

    • பல்வேறு தவணைகளாக அந்த வங்கி கணக்கிற்கு ரூ.8 லட்சத்து 87 ஆயிரம் அனுப்பினார்.
    • செலுத்திய தொகைக்கான லாபத்தொகையோ அல்லது செலுத்திய பணத்தையோ திருப்பி கொடுக்கவில்லை.

    கோவை:

    கோவை கள்ளிமடையை சேர்ந்தவர் பிரியங்கா (வயது 30). இவருடைய செல்போனுக்கு டெலிகிராமில் இருந்து ஒரு குறுஞ்செய்தி ஒன்று வந்தது. அதில் ஆன்லைனில் பகுதி நேர வேலை செய்தால் நல்ல ஊதியம் கிடைக்கும் எனவும், அதில் உள்ள லிங்கை அழுத்தவும் என்று கூறப்பட்டு இருந்தது.

    உடனே அவர் அந்த லிங்கை அழுத்தி உள்ளே சென்றார். பின்னர் சிறிது நேரத்தில் அவரது செல்போனுக்கு ஒருவர் தொடர்பு கொண்டு பேசியதுடன், டெலிகிராமில் குரூப் தொடங்கப்பட்டு உள்ளது, அதில் உங்கள் எண்ணையும் இணைத்து உள்ளோம். உங்களுக்கு ஆன்லைனில் நல்ல வேலை இருக்கிறது. உங்களுக்கு கொடுக்கப்படும் வேலை தொடர்பாக அந்த குரூப்பிலேயே தகவல் அனுப்பி வைக்கப்படும் என்றனர்.

    மேலும் அதை வைத்து நீங்கள் வேலை செய்தால் அதிகளவில் பணம் சம்பாதிக்கலாம் என்றும், அதற்காக நீங்கள் அவ்வப்போது பணமும் செலுத்த வேண்டும் என்றும் கூறி இருந்தது. இதனை நம்பிய அவர் பல்வேறு தவணைகளாக அந்த வங்கி கணக்கிற்கு ரூ.8 லட்சத்து 87 ஆயிரம் அனுப்பினார். ஆனால் அவர்கள் கூறியபடி அவருக்கு செலுத்திய தொகைக்கான லாபத்தொகையோ அல்லது செலுத்திய பணத்தையோ திருப்பி கொடுக்கவில்லை.

    இதுகுறித்து அந்த குழுவில் அவர் கேட்டபோது, மேலும் அதிக பணம் அனுப்புமாறு கூறியுள்ளது. அப்போதுதான் அவருக்கு அந்த நிறுவனம் போலி என்பதும், தனக்கு ஆன்லைனில் தகுந்த வேலை கொடுப்பதாக கூறி நூதன முறையில் பணம் பெற்று ஏமாற்றியதும் தெரியவந்தது. இது தொடர்பாக பிரியங்கா, கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் பாரதீய ஜனதாவுக்கு ஆதரவாக களப்பணியாற்றுவோம்,
    • அரசு ஊழியருக்கான பழைய பென்சன் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.

    கோவை,

    இந்து மக்கள் கட்சி (தமிழகம்) நிறுவன தலைவர் அர்ஜூன்ச ம்பத்தின் 58-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் கோவை சித்தாபுதூர் வி.கே.கே.மேனன் ரோட்டில் நடந்தது. கட்சி நிர்வாகிகள் குருமூர்த்தி, திருமுருகன் மற்றும் மலுமிச்சம் பட்டி பாபுஜி சுவாமிகள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் அர்ஜூன் சம்பத் பேசியதாவது:-

    கோவையில் அ.தி.மு.க. கொண்ட வந்த திட்டங்கள் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. சொத்து வரியை உயர்த்த மாட்டோம் என்று கூறிய தி.மு.க.வினர் ஆட்சிக்கு வந்ததும் அதை உயர்த்தி உள்ளனர். நீட் தேர்வை தி.மு.க.வால் ரத்து செய்ய முடியாது. ஆனால் அதுதொடர்பாக பொய்யான பிரசாரம் செய்து வருகிறார்கள். தமிழகத்தில் இந்துக்களுக்கு எதிரான எதிர்ப்பு அரசியல் செய்கிறார்கள். தி.மு.க. குடும்ப அரசியல் செய்து வருகிறது. மோடி சமூகத்தை அவதூறாக பேசியதால் ராகுல்காந்தியின் பதவி பறிபோனது. பொய்யான வரலாறுகளை கூறுபவர்கள் தி.மு.க.வினர்.

    கோவை மாவட்டத்தில் பா.ஜ.க. வளர்ந்து வருகிறது. அதேபோல் இந்து அமைப்புகளும் வளர்ந்து வருகிறது. தமிழகத்தை 3 மாநிலமாக பிரிக்க வேண்டும். அதில் கொங்கு மண்டலத்தை தனி மாநிலமாக வருவாக்க வேண்டும். வருகிற பாராளுமன்ற தேர்தலில் 3-வது முறையாக மோடி ஆட்சியை பிடிப்பார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக நல்லாம்பாளையத்தில் இந்து மக்கள் கட்சியின் செயற்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

    பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பு இந்து மக்கள் கட்சியில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை முகாம் மாவட்டம் தோறும் நடத்த வேண்டும்.

    பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் பாரதீய ஜனதாவுக்கு ஆதரவாக களப்பணியாற்றுவோம், மோடியை மீண்டும் பிரதமர் ஆக்குவோம். பாரதீய ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை ஜூன் மாதம் மேற்கொள்ள உள்ள நடைபயணத்துக்கு இந்து மக்கள் கட்சி முழு ஆதரவு அளித்து கலந்து கொள்ளும்.

    மதம் மாறியவர்களுக்கு அரசு சாதி சான்றிதழ் வழங்குவதை தடை செய்ய வேண்டும். இல்லையெனில் போராட்டம் நடத்தப்படும். அரசு ஊழியருக்கான பழைய பென்சன் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். அரசு டாக்டர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்.

    மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    • தள்ளுவண்டிகள் மற்றும் பிளாஸ்டிக் குப்பை தொட்டிகள் ரூ.10 லட்சத்தில் வாங்கப்பட்டது.
    • மாநகராட்சி கமிஷனர் பிரதாப் முன்னிலை வகித்தார்.

    கோவை,

    கோவை மத்திய மண்டலத்துக்குட்பட்ட பகுதியில் 20 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளில் உள்ள வீடுகளில் இருந்து குப்பைகளை எடுத்து செல்ல தள்ளுவண்டிகள் மற்றும் பிளாஸ்டிக் குப்பை தொட்டிகள் ரூ.10 லட்சத்தில் வாங்கப்பட்டது.

    புதிதாக வாங்கப்பட்ட 45 தள்ளுவண்டிகள் மற்றும் 180 பிளாஸ்டிக் குப்பை தொட்டிகள் தூய்மை பணியாளர்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி இன்று நடந்தது.

    மாநகராட்சி கமிஷனர் பிரதாப் முன்னிலை வகித்தார். இதில் மேயர் கல்பனா கலந்துகொண்டு தூய்மை பணியாளர்களுக்கு தள்ளுவண்டிகள் மற்றும் பிளாஸ்டிக் குப்பை தொட்டிகளை வழங்கினார். இதில் மத்திய மண்டல தலைவர் மீனா லோகு, சுகாதாரக் குழு தலைவர் மாரிச்செல்வம் மற்றும் கவுன்சிலர்கள், மாநகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    • போலீஸ்காரர் சிறுவனுக்கு உணவு வாங்கிக் கொடுத்து, ஒவ்வொரு வார்டாக அழைத்துச் சென்றார்.
    • போலீஸ்காரரின் இந்த செயல் ஆஸ்பத்திரியில் இருந்த பொதுமக்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

    கோவை,

    கோவை அரசு மருத்துவமனைக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான உள் மற்றும் வெளி நோயாளிகள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். மேலும், பிரசவத்திற்காக பெண்களும், குழந்தைகள் சிறப்பு பிரிவில் சிகிச்சை பெற ஏராளமான குழந்தைகளும் வந்து செல்கின்றனர்.

    கோவை சங்கனூரை சேர்ந்த ருக்மணி என்ற பெண் தனது 2-வது பிரசவத்திற்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். ருக்மணியுடன் அவரது மகன் 4 வயது சிறுவனும் வந்திருந்தான்.

    நேற்று மாலை அந்த சிறுவன் திடீரென மாயமானன். சிறுவனை அவரது தந்தை மணிகண்டன் மற்றும் உறவினர்கள் மருத்துவமனை வளாகம் முழுவதும் தேடி அலைந்தனர்.அப்போது மருத்துவமனையில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ்காரர் ஸ்ரீதர், மருத்துவமனையின் வெளிப்பகுதியில் திருச்சி சாலையில் ஒரு குழந்தை நிற்பதை பார்த்து அந்த குழந்தையிடம் பேசினார். 4 வயதே ஆன அந்த சிறுவனால் தன்னை முறையாக அடையாளப்படுத்திக் கொள்ள முடியவில்லை.

    இதனைத் தொடர்ந்து சிறுவனுக்கு உணவு வாங்கிக் கொடுத்து, ஒவ்வொரு வார்டாக அழைத்துச் சென்றார். அப்போது அந்த சிறுவன் தனது தாய் இருக்கும் வார்டை அடையாளம் காட்டினான். தொடர்ந்து விசாரித்ததில் சிறுவன் ருக்மணி மற்றும் மணிகண்டன் ஆகியோரது மகன் என்பது தெரியவந்தது.

    பின்னர் போலீஸ்காரர் ஸ்ரீதர் அந்த சிறுவனை பெற்றோரிடம் பத்திரமாக ஒப்படைத்துச் சென்றார். போலீஸ்காரரின் இந்த செயல் ஆஸ்பத்திரியில் இருந்த பொதுமக்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

    • இளம்பெண்ணை பின் தொடர்ந்து சென்ற சரவணகுமார் தன்னை மீண்டும் காதலிக்குமாறு கூறினார்.
    • பெரிய கடை வீதி போலீசார் ஆட்டோ டிரைவர் சரவணகுமாரை கைது செய்தனர்.

    கோவை,

    கோவை ராமநாதபுரம் ஒலம்பஸ் அருகே உள்ள ராமசாமி நகரை சேர்ந்த 20 வயது இளம்பெண். இவர் அந்த பகுதியில் உள்ள கவரிங் கடையில் விற்பனையாளராக வேலை பார்த்து வருகிறார்.

    கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு இளம்பெண்ணுக்கு உக்கடத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவர் சரவணகுமார் (27) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி நேரில் சந்தித்தும், செல்போனில் பேசியும் தங்களது காதலை வளர்த்து வந்தனர்.

    இந்தநிலையில் 2 பேருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனையடுத்து இளம்பெண் சரவணகுமாரிடம் பேசுவதையும், பழகுவதையும் தவிர்த்தார். பின்னர் வேறு ஒரு வாலிபருடன் இளம்பெண்ணுக்கு திருமணம் நடந்தது. சில ஆண்டுகளில் அவர்களுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர். இதனால் இளம்பெண் தனியாக வசித்து வந்தார்.

    சம்பவத்தன்று அவர் பெரியகடை வீதி வழியாக நடந்து சென்றார். அப்போது இளம்பெண்ணை பின் தொடர்ந்து சென்ற சரவணகுமார் தன்னை மீண்டும் காதலிக்குமாறு கூறினார்.

    அதற்கு இளம்பெண் மறுத்து விட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த அவர் இளம்பெண்ணை மிரட்டி விட்டு அங்கு இருந்து தப்பிச் சென்றார்.

    இது குறித்து பெரிய கடை வீதி போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து இளம்பெண்ணை பின் தொடர்ந்து சென்று காதலிக்குமாறு கூறிய ஆட்டோ டிரைவர் சரவணகுமாரை கைது செய்தனர்.

    பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    • யானைகள் அடிக்கடி உணவு மற்றும் தண்ணீர் தேடி வனத்தையொட்டிய கிராமங்களுக்கு புகுந்து விடுகிறது.
    • கிராமத்தில் சுற்றிய காட்டு யானைகளை மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்டி அடித்தனர்.

    கவுண்டம்பாளையம்,

    கோவை மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய வனப்பகுதிகளில் அதிகளவில் காட்டு யானைகள் வாழ்ந்து வருகின்றன.

    இந்த யானைகள் அடிக்கடி உணவு மற்றும் தண்ணீர் தேடி வனத்தையொட்டிய கிராமங்களுக்கு புகுந்து விடுகிறது. அவ்வாறு வரும் யானைகள், விளைநிலங்களை சேதப்படுத்துவதுடன், வீட்டில் உள்ள பொருட்களையும் சேதப்படுத்தி வருகிறது. யானைகள் ஊருக்குள் வருவதை தடுக்க வனத்துறையினரும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.இருந்த போதிலும் யானைகள் ஊருக்குள் வந்த வண்ணம் தான் உள்ளன.

    இந்த நிலையில் மேற்கு தொடர்ச்சி மலையடி வாரத்தில் நஞ்சுண்டாபுரம் கிராமம் உள்ளது. நேற்று நள்ளிரவு இந்த கிரா மத்திற்குள் குட்டிகளுடன் 6-க்கும் மேற்பட்ட யானைகள் புகுந்தன.இந்த யானைகள், கிராமத்தில் உள்ள சாலைகளில் ெவகுநேரமாக சுற்றி திரிந்தன. இதற்கிடையே ஊருக்குள் யானைகள் புகுந்து விட்டதை அறிந்த பொது மக்கள் அச்சம் அடைந்தனர்.

    இதுகுறித்து உடனடியாக வனத்துறையினருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது.

    தகவல் அறிந்த வனத்துறையினர் விரைந்து வந்து, கிராமத்தில் சுற்றிய காட்டு யானைகளை மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்டி அடித்தனர். இதே போல அதிகாலை நேரத்தில் பாப்பநாயக்கன்பாளையத்தில் உள்ள அரங்கசாமி என்பவரின் தோட்டத்திற்குள் ஒற்றை யானை புகுந்துள்ளது.

    வெயில் காரணமாக வனப்பகுதிக்குள் வறட்சி நிலவுவதன் காரணமாக, தண்ணீர் மற்றும் உணவு தேடி காட்டு யானைகள் வனப்பகுதியை ஒட்டிய கிராமங்களுக்குள் நுழைவது அதிகரித்து வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

    • வனத்துறையினர் பாம்புபிடி வீரர் காஜாமைதீனுடன் சம்பவ இடத்திற்கு சென்றனர்.
    • மலைப்பாம்பு வனத்துறையினரின் அறிவுறுத்தலின் பேரில் காப்புக்காடு பகுதியில் விடப்பட்டது.

    மேட்டுப்பாளையம்,

    மேட்டுப்பாளையம் அருகே உள்ள திம்மராயம்பாளையம் சுதா நகரில் ஊருக்குள் மலைப்பாம்பு புகுந்ததாக சிறுமுகை வனத்துறையினருக்கு தகவல் வந்தது.

    அதன் பேரில் வனத்துறையினர் பாம்புபிடி வீரர் காஜாமைதீனுடன் சம்பவ இடத்திற்கு சென்றனர்.

    பின்னர் ஊருக்குள் புகுந்த மலைப்பாம்பினை நீண்ட நேரம் போராடி லாவகமாக பிடித்தனர். தொடர்ந்து சிறுமுகை வனத்துறையினர் அறிவுறுத்தலின் பேரில் சிறுமுகையை ஒட்டியுள்ள அடர் வனப்பகுதியில் மலைப்பாம்பு விடப்பட்டது.

    இதுகுறித்து பாம்பு பிடி வீரர் காஜாமைதீன் கூறுகையில் திம்மராயம்பாளையம் பகுதி வனப்பகுதியையொட்டி அமைந்திருப்பதால் அடிக்கடி மான், பாம்பு உள்ளிட்ட வனவிலங்குகள் ஊருக்குள் புகுந்து விடுகின்றன. தற்போது கோடைக்காலம் என்பதால் வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவி வருகிறது.

    இதன் காரணமாகவே வன விலங்குகள் ஊருக்குள் படையெடுக்க தொடங்கி உள்ளன.

    தற்போது பிடிப்பட்டுள்ள மலைப்பாம்பு 8 அடி நீளம் கொண்டது.சுமார் 10 கிலோ எடையுள்ள மலைப்பாம்பு சிறுமுகை வனத்துறையினரின் அறிவுறுத்தலின் பேரில் காப்புக்காடு பகுதியில் விடப்பட்டது.

    • இறந்த முபினின் உறவினரான அசாரூதீனின் வீட்டில் இருந்து ஒரு பென் டிரைவ் கைப்பற்றப்பட்டுள்ளது.
    • ஜமேஷா முபினுக்கு அவனது கூட்டாளிகள் உதவியுள்ளனர்.

    கோவை:

    கோவை கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 23-ந் தேதி அதிகாலை கார் குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. இதில் காரில் இருந்த உக்கடத்தை சேர்ந்த ஜமேஷா முபின் உயிரிழந்தான். இந்த குண்டு வெடிப்பு சம்பவம் நாடு முழுவதும் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது.

    இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி முபினுடன் தொடர்பில் இருந்து முகமது அசாருதீன், அப்சர்கான், முகமது தல்கா, முகமது ரியாஸ், பெரோஸ் இஸ்மாயில், முகமது நவாஸ் இஸ்மாயில் ஆகிய 6 பேரை கைது செய்தனர்.

    இதற்கிடையே இந்த வழக்கு என்.ஐ.ஏ.வுக்கு மாற்றப்பட்டது. என்.ஐ.ஏ. அதிகாரிகள் தனியாக வழக்குப்பதிவு செய்து, கைதான 6 பேரிடமும் விசாரணை நடத்தினர். தொடர்ந்து ஜமேஷா முபினுடன் நெருங்கிய தொடர்பில் இருந்ததாக முகமது ஷேக் பரீக், உமர் பாரூக், சீனிவாசன், பெரோஸ்கான் என மேலும் 5 பேரையும் இந்த வழக்கு சம்பந்தமாக கைது செய்தனர். மொத்தம் இந்த வழக்கில் 11 பேர் கைது செய்யப்பட்டனர்.

    கைதான 11 பேரையும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் தனித்தனியாக காவலில் எடுத்து, கோவை, சத்தியமங்கலம், குன்னூர் உள்ளிட்ட பகுதிகளுக்கும் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும் இறந்த முபினின் வீட்டிலும் சோதனை மேற்கொண்டனர்.

    தனித்தனியாக நடத்தப்பட்ட விசாரணையில், இறந்த முபினுக்கு தீவிரவாதிகளுடன் தொடர்பு இருந்ததும், கோவை உள்பட தமிழகம் முழுவதும் பயங்கர நாசவேலைக்கு திட்டமிட்டதும் தெரியவந்தது.

    மேலும் இவர்கள் தமிழகத்தில் உள்ள கோவில்கள் மீது தற்கொலைபடை தாக்குதல் நடத்த சதிதிட்டம் தீட்டியதும், அதற்காக பயங்கர வெடிபொருட்களை சேகரித்து முபினின் வீட்டில் வைத்திருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. திட்டத்தை அரங்கேற்றுவது தொடர்பாக முபின் தலைமையில் குன்னூரில் உள்ள உமர் பாரூக்கின் வீடு, சத்தியமங்கலம் காடுகளில் கூடி, கூட்டம் நடத்தியதும் தெரியவந்தது.

    இதையடுத்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் இந்த வழக்கில் தங்களுக்கு கிடைத்த ஆதாரங்களை எல்லாம் ஆவணங்களாக திரட்டி குற்றப்பத்திரிகை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.

    இந்த நிலையில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் முதலில் கைது செய்யப்பட்ட 6 பேருக்கு எதிராக தயாரிக்கப்பட்ட குற்றப்பத்திரிகையை நேற்று சென்னை பூந்தமல்லியில் உள்ள என்.ஐ.ஏ. சிறப்பு கோர்ட்டில் தாக்கல் செய்தனர்.

    அந்த குற்றப்பத்திரிகையில் கோவையில் நடந்த வெடிகுண்டு தாக்குதல் குறித்தும், இறந்த ஜமேஷா முபின் குறித்து பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் இடம் பெற்றுள்ளன.

    கோவையில் நடந்த கார் குண்டு வெடிப்பு கியாஸ் சிலிண்டர் வெடிப்பு என கூறப்பட்டு வந்தது. ஆனால் கோவையில் கோவில் முன்பு நடத்தப்பட்ட தாக்குதல் கியாஸ் சிலிண்டர் வெடிப்பு தாக்குதல் இல்லை என்றும் ஐ.இ.டி எனப்படும் அதி சக்தி வாய்ந்த வெடிகுண்டை கொண்டு நடத்தப்பட்ட தாக்குதல் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த தாக்குதலில் ஈடுபட்ட முபின், திட்டமிட்டே இந்த தாக்குதலை கோவையில் அரங்கேற்றியுள்ளார். தாக்குதல் நடத்துவதற்கு முன்பாக உறுதி பிரமாணமும் எடுத்துள்ளார்.

    கோவை மட்டுமின்றி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள கோவில்கள், அரசு கட்டிடங்கள், பூங்காக்கள், ரெயில் நிலையங்கள் உள்பட மக்கள் கூடும் இடங்களை குறி வைத்து தாக்குதல் நடத்தவும் திட்டமிட்டுள்ளனர். இது தொடர்பாக எழுதி வைக்கப்பட்டிருந்த குறிப்பு ஒன்றையும் முபின் வீட்டில் இருந்து கைப்பற்றியதாகவும், அதில் இந்த தகவல்கள் இடம் பெற்றிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் இறந்த முபினின் உறவினரான அசாரூதீனின் வீட்டில் இருந்து ஒரு பென் டிரைவ் கைப்பற்றப்பட்டுள்ளது. அதில் முபின் பேச்சுகள் தொடர்பான வீடியோக்களும் இருந்தன. அந்த வீடியோவில், முபின் இந்தியாவில் தடை செய்யப்பட்ட ஐஎஸ் அமைப்புகளின் நிர்வாகிகளின் பேச்சை விரும்பி கேட்டதும், அதில் தன்னை இணைத்து கொண்டதும், அந்த ஈர்ப்பில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்த திட்டமிட்ட தகவலும் இடம் பெற்றிருந்தது.

    மேலும் இறந்த முபின் கடந்த 2019-ம் ஆண்டு இலங்கையில் ஈஸ்டர் பண்டிகையையொட்டி நடந்த தாக்குதலில் தொடர்புடைய மதகுருவின் வீடியோக்களையும், அவரது பேச்சுகளையும் அடிக்கடி கேட்டு வந்ததும் தெரியவந்தது.

    கோவையில் நடந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். அமைப்பு பொறுப்பேற்றதாக அந்த அமைப்புக்கு சொந்தமான இணைய இதழான ஐ.எஸ்.கே.பி உறுதி செய்துள்ளது. இதனையும் குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் ஜமேஷா முபினுக்கு அவனது கூட்டாளிகள் உதவியுள்ளனர். முகமது தல்கா காரை பெற்று கொடுத்துள்ளார். பெரோஸ், ரியாஸ், நவாஸ் ஆகியோர் காரில் வெடிபொருட்கள் மற்றும் எரிவாயு சிலிண்டர்கள் நிரப்ப உதவியுள்ளனர். முபினின் உறவினர்களான அசாரூதீன், அப்சர்கான் ஆகியோர் தாக்குதலுக்கு தேவையான ரசாயன மூலக்கூறுகளை வாங்கி கொடுத்ததாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.

    இவர்கள் 6 பேர் மீது உபா சட்டம் மற்றும் வெடிபொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது.

    இந்த தகவல்கள் அனைத்தும் என்.ஐ.ஏ. கோர்ட்டில் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் இடம் பெற்றுள்ளது.

    கோவையில் நடத்தப்பட்ட தாக்குதல் அதி சக்திவாய்ந்த வெடிகுண்டு தாக்குதல் என கூறப்பட்டுள்ளது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    தொடர்ந்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் மற்ற 5 பேரையும் மீண்டும் காவலில் எடுத்து விசாரிப்பதற்காக சென்னை பூந்தமல்லியில் உள்ள என்.ஐ.ஏ. கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த மனு மீதான விசாரணை இன்று வருகிறது. அதில் அவர்களுக்கு மீண்டும் காவல் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    அப்படி வழங்கும்பட்சத்தில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் அவர்கள் 5 பேரையும் தனித்தனியாக விசாரிக்கவும் திட்டமிட்டுள்ளனர். அவர்களிடம் இந்த வழக்கில் வேறு யாருக்காவது தொடர்பு இருக்கிறதா என்பது குறித்து விசாரிக்க உள்ளனர்.

    • தேயிலை செடியினுள் மறைந்து இருந்த சிறுத்தை சீத்தா முனிகுமாரியை தாக்கியது.
    • உடனடி நிவாரண நிதியாக ரூ.2 ஆயிரம் வழங்கினர்.

    வால்பாறை,

    ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் மதன் ஆரான். இவரது மனைவி சீத்தா முனிகுமாரி(23). இவர்கள் கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள சிறுகுன்றா எஸ்டேட்டில் தங்கி தேயிலை தோட்டத்தில் பணியாற்றி வருகின்றர்.

    நேற்று சீத்தா முனிகுமாரி தேயிலை தோட்டத்தில் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது தேயிலை செடியினுள் மறைந்து இருந்த சிறுத்தை சீத்தா முனிகுமாரியை தாக்கியது.

    இதில் அவர் காயம் அடைந்தார். இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் சத்தம் போடவே சிறுத்தை சிறிது நேரத்தில் அங்கிருந்து சென்று விட்டது. இதையடுத்து அவர்கள் காயம் அடைந்த பெண்ணை வால்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

    இதற்கிடையே ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் பெண்ணை வனத்துறையினர் சந்தித்து, உடனடி நிவாரண நிதியாக ரூ.2 ஆயிரம் வழங்கினர். மேலும் நகர்மன்ற தலைவர் அழகு சுந்தர வள்ளி, தி.மு.க. நகர செயலாளர் சுதாகர் ஆகியோரும் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

    • 2021-2022 ஆம் நிதியாண்டை விட இந்த ஆண்டு 28.02 சதவீதம் அபராம் அதிகமாக வசூலாகியுள்ளது.
    • ெரயிலில் பதிவு செய்யாமல் சரக்குகளை கொண்டு சென்றதாக ரூ.3 லட்சத்து 55 ஆயிரத்து 677 வசூலிக்கப்பட்டுள்ளது.

    கோவை,

    சேலம் ெரயில்வே கோட்டத்துக்கு உட்பட்ட ெரயில் நிலையங்களில் கடந்த 2022 ஏப்ரல் முதல் 2023 மார்ச் மாதம் வரை பயணச்சீட்டு இல்லாமல் பயணித்தவர்களிடம் இருந்து ரூ.14.10 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக, சேலம் ெரயில்வே கோட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சேலம் ெரயில்வே கோட்டத்துக்கு உட்பட்ட சேலம், ஈரோடு, கோவை உள்ளிட்ட நிலையங்களில் பயணச்சீட்டு இல்லாமல் ெரயிலில் பயணிப்பவர்கள், முறையற்ற வகையில் பயணிப்பவர்கள், பதிவு செய்யாமல் சரக்குகளை ெரயிலில் கொண்டு செல்பவர்களைக் கண்டறிந்து ெரயில்வே பரிசோதனை அதிகாரிகளால் அவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

    அதன்படி, 2022 ஏப்ரல் முதல் 2023 மார்ச் மாதம் வரை சேலம் கோட்டத்துக்கு உட்பட்ட ெரயில் நிலையங்களில், பயணச்சீட்டு இல்லாமல் பயணித்த 2 லட்சத்து 821 பேரிடம் இருந்து ரூ.14 கோடியே 10 லட்சத்து 7 ஆயிரத்து 28 அபராதம் வசூலிக்கப்பட்டது. 2021 ஏப்ரல் முதல் 2022 மார்ச் மாதம் வரை 1 லட்சத்து 93 ஆயி ரத்து 949 பேரிடமிருந்து ரூ.11 கோடியே 1 லட்சத்து 45 ஆயிரத்து 949 அபராதம் வசூலிக்கப்பட்டது.

    2021-2022 ஆம் நிதியாண்டை விட இந்த ஆண்டு 28.02 சதவீதம் அபராம் அதிகமாக வசூலாகியுள்ளது.

    2022 ஏப்ரல் முதல் 2023 மார்ச் மாதம் வரை ெரயில்களில் முறையற்ற பயணம் மேற்ெகாண்டதாக 28 ஆயிரத்து 998 பேரிடமிருந்து ரூ.1 கோடியே 43 லட்சத்து 51 ஆயிரத்து 980 வசூலிக்கப்பட்டுள்ளது.

    ெரயிலில் பதிவு செய்யாமல் சரக்குகளை கொண்டு சென்றதாக 558 பேரிடமிருந்து ரூ.3 லட்சத்து 55 ஆயிரத்து 677 வசூலிக்கப்பட்டுள்ளது.

    மொத்தமாக சேலம் கோட்டத்தில் 2022-2023 ஆண்டில் ரூ.15 கோடியே 57 லட்சத்து 14 ஆயிரத்து 685 அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறப்பட்டு உள்ளது.

    • மக்கள் தொடர்பு முகாமுக்கு மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி தலைமை வகித்தார்.
    • 80 நபர்களுக்கு 24 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது.

    வால்பாறை,

    வால்பாறை நகராட்சி சமுதாய கூடத்தில் தமிழக அரசின் மக்கள் தொடர்பு முகாம் நடந்தது. விழாவுக்கு மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி தலைமை வகித்தார்.

    சப்-கலெக்டர் பிரியங்கா நகராட்சி தலைவி அழகு சுந்தரவள்ளி, துணைத்தலைவர் செந்தில்குமார் வார்டு கவுன்சிலர்கள் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    133 மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. விபத்து நிவாரண நிதி, தனிநபர் கடன், தையல் எந்திரம், முதியோர் ஓய்வூதியம் மற்றும் ஊனமுற்றோர் நல நிதி என பல்வேறு பிரிவுகளின் கீழ் 80 நபர்களுக்கு 24 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது. தெருவோர வியாபாரிகளுக்கான அடையாள அட்டைகள், குடும்ப அட்டைகளும் வழங்கப்பட்டன.

    • வாழ்க்கையில் விரக்தி அடைந்த மதிவாணன் விஷம் குடித்து மயங்கி விழுந்தார்.
    • மேட்டுப்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோவை,

    கோவை மேட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் மதிவாணன் (வயது 37). இவர் டிரைவராக வேலை செய்து வந்தார். இவருக்கு குடிப்பழக்கம் உள்ளது. இந்நிலையில் இவர் உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் கடன் வாங்கி இருந்தார். பின்னர் வாங்கிய கடன் தொகையை திருப்பிச் செலுத்த முடியாமல் வந்தார்.

    மேலும் வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு வைத்திருந்ததால் கணவன்-மனைவி இடையே இது தொடர்பாக அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டது. இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்து விஷம் குடித்து மயங்கி விழுந்தார். இதனை பார்த்த அவரது குடும்பத்தினர் அவரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர்.

    ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். இதுகுறித்து மேட்டுப்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இதேபோல் கோவை மாதம்பட்டி அடுத்த புதூரை சேர்ந்தவர் கோபால் (80). இவருக்கு குடிப்பழக்கம் உள்ளது. சம்பவத்தன்று இவர் குடிபோதையில் வந்து அவரது மனைவியிடம் மது குடிப்பதற்க்கு பணம் கேட்டுள்ளார், ஆனால் அவரது மனைவி பணம் இல்லை என கூறி மறுத்துவிட்டார். இதனால் வாழ்க்கையில் விரக்தியடைந்த அவர், சானிபவுடரை குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

    கோவை விளாங்குறிச்சியை சேர்ந்தவர் சுரேஷ் (36). கூலி தொழிலாளி. இந்நிலையில் கணவன்-மனைவி இடையே, அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்தது. இதையடுத்து அவர்களது உறவினர்கள் இருவரையும் சமரசம் செய்தனர். சம்பவத்தன்று சுரேஷ் வழக்கம்போல் வேலைக்குச சென்றார். இந்தநிலையில் வாழ்க்கையில் விரக்தியடைந்த அவர் விஷம் குடித்து மயங்கி விழுந்தார்.

    இதனை பார்த்த அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து சூலூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து சென்று அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×