search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவில் முன்பு வெடித்தது அதி சக்தி வாய்ந்த வெடிகுண்டு- பலியான முபின் பற்றி குற்றப்பத்திரிகையில் பரபரப்பு தகவல்
    X

    கோவில் முன்பு வெடித்தது அதி சக்தி வாய்ந்த வெடிகுண்டு- பலியான முபின் பற்றி குற்றப்பத்திரிகையில் பரபரப்பு தகவல்

    • இறந்த முபினின் உறவினரான அசாரூதீனின் வீட்டில் இருந்து ஒரு பென் டிரைவ் கைப்பற்றப்பட்டுள்ளது.
    • ஜமேஷா முபினுக்கு அவனது கூட்டாளிகள் உதவியுள்ளனர்.

    கோவை:

    கோவை கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 23-ந் தேதி அதிகாலை கார் குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. இதில் காரில் இருந்த உக்கடத்தை சேர்ந்த ஜமேஷா முபின் உயிரிழந்தான். இந்த குண்டு வெடிப்பு சம்பவம் நாடு முழுவதும் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது.

    இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி முபினுடன் தொடர்பில் இருந்து முகமது அசாருதீன், அப்சர்கான், முகமது தல்கா, முகமது ரியாஸ், பெரோஸ் இஸ்மாயில், முகமது நவாஸ் இஸ்மாயில் ஆகிய 6 பேரை கைது செய்தனர்.

    இதற்கிடையே இந்த வழக்கு என்.ஐ.ஏ.வுக்கு மாற்றப்பட்டது. என்.ஐ.ஏ. அதிகாரிகள் தனியாக வழக்குப்பதிவு செய்து, கைதான 6 பேரிடமும் விசாரணை நடத்தினர். தொடர்ந்து ஜமேஷா முபினுடன் நெருங்கிய தொடர்பில் இருந்ததாக முகமது ஷேக் பரீக், உமர் பாரூக், சீனிவாசன், பெரோஸ்கான் என மேலும் 5 பேரையும் இந்த வழக்கு சம்பந்தமாக கைது செய்தனர். மொத்தம் இந்த வழக்கில் 11 பேர் கைது செய்யப்பட்டனர்.

    கைதான 11 பேரையும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் தனித்தனியாக காவலில் எடுத்து, கோவை, சத்தியமங்கலம், குன்னூர் உள்ளிட்ட பகுதிகளுக்கும் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும் இறந்த முபினின் வீட்டிலும் சோதனை மேற்கொண்டனர்.

    தனித்தனியாக நடத்தப்பட்ட விசாரணையில், இறந்த முபினுக்கு தீவிரவாதிகளுடன் தொடர்பு இருந்ததும், கோவை உள்பட தமிழகம் முழுவதும் பயங்கர நாசவேலைக்கு திட்டமிட்டதும் தெரியவந்தது.

    மேலும் இவர்கள் தமிழகத்தில் உள்ள கோவில்கள் மீது தற்கொலைபடை தாக்குதல் நடத்த சதிதிட்டம் தீட்டியதும், அதற்காக பயங்கர வெடிபொருட்களை சேகரித்து முபினின் வீட்டில் வைத்திருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. திட்டத்தை அரங்கேற்றுவது தொடர்பாக முபின் தலைமையில் குன்னூரில் உள்ள உமர் பாரூக்கின் வீடு, சத்தியமங்கலம் காடுகளில் கூடி, கூட்டம் நடத்தியதும் தெரியவந்தது.

    இதையடுத்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் இந்த வழக்கில் தங்களுக்கு கிடைத்த ஆதாரங்களை எல்லாம் ஆவணங்களாக திரட்டி குற்றப்பத்திரிகை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.

    இந்த நிலையில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் முதலில் கைது செய்யப்பட்ட 6 பேருக்கு எதிராக தயாரிக்கப்பட்ட குற்றப்பத்திரிகையை நேற்று சென்னை பூந்தமல்லியில் உள்ள என்.ஐ.ஏ. சிறப்பு கோர்ட்டில் தாக்கல் செய்தனர்.

    அந்த குற்றப்பத்திரிகையில் கோவையில் நடந்த வெடிகுண்டு தாக்குதல் குறித்தும், இறந்த ஜமேஷா முபின் குறித்து பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் இடம் பெற்றுள்ளன.

    கோவையில் நடந்த கார் குண்டு வெடிப்பு கியாஸ் சிலிண்டர் வெடிப்பு என கூறப்பட்டு வந்தது. ஆனால் கோவையில் கோவில் முன்பு நடத்தப்பட்ட தாக்குதல் கியாஸ் சிலிண்டர் வெடிப்பு தாக்குதல் இல்லை என்றும் ஐ.இ.டி எனப்படும் அதி சக்தி வாய்ந்த வெடிகுண்டை கொண்டு நடத்தப்பட்ட தாக்குதல் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த தாக்குதலில் ஈடுபட்ட முபின், திட்டமிட்டே இந்த தாக்குதலை கோவையில் அரங்கேற்றியுள்ளார். தாக்குதல் நடத்துவதற்கு முன்பாக உறுதி பிரமாணமும் எடுத்துள்ளார்.

    கோவை மட்டுமின்றி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள கோவில்கள், அரசு கட்டிடங்கள், பூங்காக்கள், ரெயில் நிலையங்கள் உள்பட மக்கள் கூடும் இடங்களை குறி வைத்து தாக்குதல் நடத்தவும் திட்டமிட்டுள்ளனர். இது தொடர்பாக எழுதி வைக்கப்பட்டிருந்த குறிப்பு ஒன்றையும் முபின் வீட்டில் இருந்து கைப்பற்றியதாகவும், அதில் இந்த தகவல்கள் இடம் பெற்றிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் இறந்த முபினின் உறவினரான அசாரூதீனின் வீட்டில் இருந்து ஒரு பென் டிரைவ் கைப்பற்றப்பட்டுள்ளது. அதில் முபின் பேச்சுகள் தொடர்பான வீடியோக்களும் இருந்தன. அந்த வீடியோவில், முபின் இந்தியாவில் தடை செய்யப்பட்ட ஐஎஸ் அமைப்புகளின் நிர்வாகிகளின் பேச்சை விரும்பி கேட்டதும், அதில் தன்னை இணைத்து கொண்டதும், அந்த ஈர்ப்பில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்த திட்டமிட்ட தகவலும் இடம் பெற்றிருந்தது.

    மேலும் இறந்த முபின் கடந்த 2019-ம் ஆண்டு இலங்கையில் ஈஸ்டர் பண்டிகையையொட்டி நடந்த தாக்குதலில் தொடர்புடைய மதகுருவின் வீடியோக்களையும், அவரது பேச்சுகளையும் அடிக்கடி கேட்டு வந்ததும் தெரியவந்தது.

    கோவையில் நடந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். அமைப்பு பொறுப்பேற்றதாக அந்த அமைப்புக்கு சொந்தமான இணைய இதழான ஐ.எஸ்.கே.பி உறுதி செய்துள்ளது. இதனையும் குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் ஜமேஷா முபினுக்கு அவனது கூட்டாளிகள் உதவியுள்ளனர். முகமது தல்கா காரை பெற்று கொடுத்துள்ளார். பெரோஸ், ரியாஸ், நவாஸ் ஆகியோர் காரில் வெடிபொருட்கள் மற்றும் எரிவாயு சிலிண்டர்கள் நிரப்ப உதவியுள்ளனர். முபினின் உறவினர்களான அசாரூதீன், அப்சர்கான் ஆகியோர் தாக்குதலுக்கு தேவையான ரசாயன மூலக்கூறுகளை வாங்கி கொடுத்ததாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.

    இவர்கள் 6 பேர் மீது உபா சட்டம் மற்றும் வெடிபொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது.

    இந்த தகவல்கள் அனைத்தும் என்.ஐ.ஏ. கோர்ட்டில் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் இடம் பெற்றுள்ளது.

    கோவையில் நடத்தப்பட்ட தாக்குதல் அதி சக்திவாய்ந்த வெடிகுண்டு தாக்குதல் என கூறப்பட்டுள்ளது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    தொடர்ந்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் மற்ற 5 பேரையும் மீண்டும் காவலில் எடுத்து விசாரிப்பதற்காக சென்னை பூந்தமல்லியில் உள்ள என்.ஐ.ஏ. கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த மனு மீதான விசாரணை இன்று வருகிறது. அதில் அவர்களுக்கு மீண்டும் காவல் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    அப்படி வழங்கும்பட்சத்தில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் அவர்கள் 5 பேரையும் தனித்தனியாக விசாரிக்கவும் திட்டமிட்டுள்ளனர். அவர்களிடம் இந்த வழக்கில் வேறு யாருக்காவது தொடர்பு இருக்கிறதா என்பது குறித்து விசாரிக்க உள்ளனர்.

    Next Story
    ×