என் மலர்
கோயம்புத்தூர்
- முகாம்கள் வருகிற 24-ந் தேதி காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை நடக்கிறது.
- முழு ரத்த பரிசோதனையும் இலவசமாக மேற்கொள்ளப்பட உள்ளது.
கோவை,
கோவை மாவட்டத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவினை சிறப்பிக்கும் வகையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை சார்பில் பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம்கள் வருகிற 24-ந் தேதி காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை நடக்கிறது.
இந்த முகாமில், ரத்த அழுத்த பரிசோதனை, சிறுநீர் பரிசோதனை, எக்கோ மற்றும் இசிஜி, பெண்களுக்கான மார்பக புற்றுநோய் பரிசோதனை, கர்ப்பபை வாய் புற்றுநோய் கண்டறியும் பரிசோதனை உள்ளிட்ட பரிசோதனைகளுடன் முழு ரத்த பரிசோதனையும் இலவசமாக மேற்கொள்ளப்பட உள்ளது.
பொது மருத்துவம், குழந்தைகள் மருத்துவம், பொது அறுவை சிகிச்சை மருத்துவம், மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவம், கண், காது, மூக்கு, தொண்டை மற்றும் பல் மருத்துவம், எலும்பியல் மருத்துவம் மற்றும் மனநலம் மருத்துவம் உள்ளிட்ட பன்னோக்கு மருத்துவ ஆலோசனைகள் சிறப்பு மருத்துவர்கள் மூலம் வழங்கப்படவுள்ளது.
சித்த மற்றும் ஆயுர்வேத சிகிச்சைக்கான ஆலோசனைகளும் வழங்கப்படுகிறது. இந்த சிறப்பு மருத்துவ முகாம் கோவை குனியமுத்தூர் அரசு மேல் நிலைப் பள்ளி, வடவள்ளி மருதமலை சுப்பிரமணிய சுவாமி தேவஸ்தானம் அரசு மேல்நிலைப்பள்ளி, சூலூர் கண்ணம்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி, கணுவாய் அரசு நடுநிலைப்பள்ளி, காரமடை தோலாம்பாளைம் அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் பொள்ளாச்சி சமத்தூர் ராம அய்யங்கார் அரசு மேல்நிலைப்பள்ளி என 6 இடங்களில் நடக்கிறது. இந்த மருத்துவ முகாமில் பொதுமக்கள் பங்கேற்று பயனடைய வேண்டும் என மாவட்ட கலெக்டர் அறிவு றுத்தியுள்ளார்.
- பாரதிபுரத்தில் வசிக்கும் கூலித்தொழிலாளி விவேகானந்தர் என்பவர் உண்டியலுடன் சென்றது தெரியவந்தது.
- இதுகுறித்து சூலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விவேகானந்தனை தேடி வருகிறார்கள்.
சூலூர்,
சூலூர் அருகே உள்ள பாரதிபுரம் பகுதியில் அய்யப்பன் கோவில் உள்ளது. இங்கு சம்பவத்தன்று இரவு பூஜை முடிந்ததும் பூசாரி சபாபதி கோவில் கதவுகளை பூட்டிவிட்டு சென்றார். அதன்பிறகு மறுநாள் காலை வந்து பார்த்தார். அப்போது கோவில் கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த சபாபதி, பதறியடித்துகொண்டு கோவிலுக்குள் சென்று பார்த்தார். அப்போது அங்கு இருந்த உண்டியல் மட்டும் திருட்டு போனது தெரியவந்தது. எனவே ஊர்மக்கள் ஒருசிலரிடம் விசாரித்தனர்.
இதில் பாரதிபுரத்தில் வசிக்கும் கூலித்தொழிலாளி விவேகானந்தர் என்பவர் உண்டியலுடன் சென்றது தெரியவந்தது. எனவே கோவில் கமிட்டியினர் அந்த நபரிடம் விசாரித்தனர். அப்போது அவர் தகாத வார்த்தைகளால் திட்டியதாக தெரிகிறது.
இதுகுறித்து சூலூர் போலீசில் புகார் தரப்பட்டது. புகாரின்பேரில் போலீசார் விசாரித்தபோது, விவேகானந்தர் வீட்டின் அருகே ரோட்டோரம் திருட்டு போன உண்டியல் மீட்கப்பட்டது. இதுகுறித்து சூலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விவேகானந்தனை தேடி வருகிறார்கள்.
- அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர்.
- சாலையோரம் குவிந்து கிடக்கும் குப்பைகளை சுத்தம் செய்ய வேண்டும் என சமூகஆர்வலர்கள் கோரிக்கை
கருமத்தம்பட்டி,
கருமத்தம்பட்டி நகராட்சியில் 20 வார்டுகள் உள்ளன. அங்கு உள்ள ஒரு சில வார்டுகளில் சரிவர குப்பைகள் அகற்றப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் 17-வது வார்டு பகுதியில் உள்ள கருமத்தம்பட்டி-புதூர் ரோட்டில் சாலையோரம் குப்பைகள் மலை போல குவிந்து கிடக்கின்றன. இதில் இருந்து ஒருவித துர்நாற்றம் வீசுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர்.
மேலும் இந்த பகுதியில் உள்ள தெரு நாய்கள் குப்பைகளை கிளறி சாலையில் வீசுவதால், பிளாஸ்டிக் கவர்கள் காற்றில் பறந்து வாகன ஓட்டிகள் மீது விழுகிறது. கருமத்தம்பட்டி-புதூர் ரோட்டில் பள்ளி உள்ளது. குப்பைகளில் துர்நாற்றம் வீசுவதால் மாணவ-மாணவிகளுக்கு தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளது.
எனவே கருமத்தம்பட்டி நகராட்சி நிர்வாகம் இந்த விஷயத்தில் உடனடியாக தலையிட்டு, சாலையோரம் குவிந்து கிடக்கும் குப்பைகளை சுத்தம் செய்ய வேண்டும் என சமூகஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
- துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர்.
- இது தொடர்பாக பொதுமக்கள் பலமுறை புகார் அளித்து உள்ளனர்.
சூலூர்
கோவை மாவட்டத்தின் முக்கிய நதிகளில் நொய்யல் ஆறு குறிப்பிடத்தக்கது. இது கோவையில் இருந்து திருப்பூர் மாவட்டம் வழியாக செல்கிறது. அதற்கு கோவையில் உள்ள சூலூர் பட்டணம், ராவத்தூர் ஆகிய பகுதிகளில் 2 தடுப்பணைகள் உள்ளன. நொய்யல் ஆற்றில் கழிவு நீர் அதிகம் கலக்கிறது. ஆகாயத்தாமரைகளும் நிறைந்து உள்ளது. எனவே நொய்யல் ஆற்றின் மேற்கண்ட 2 தடுப்பணைகளில் இருந்தும் வெளியேறும் ஆற்று தண்ணீரில் நுரை பொங்கி பெருகி பறந்து வருகிறது. இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. எனவே அந்த பகுதியில் செல்லும் பொதுமக்கள், மூக்கை பிடித்து கொண்டு செல்ல வேண்டிய அவலநிலை ஏற்பட்டு உள்ளது. இது தொடர்பாக பொதுமக்கள் பலமுறை புகார் அளித்து உள்ளனர். ஆனாலும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று தெரிகிறது.
இந்த நிலையில் கோவையில் உள்ள சூலூர், ராவத்தூர் தடுப்பணைகளில் இருந்து கடந்த 2 நாட்களாக நுரை அதிகமாக செல்கிறது. இதனால் ஆற்றில் உள்ள மீன்கள் செத்து மிதப்பதாகவும், நுரை கலந்த நீர் உடம்பில் பட்டால், அலர்ஜி- அரிப்பு உள்ளிட்ட பிரச்சினைகள் ஏற்படுவதாக அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
- வீட்டின் கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 4 பவுன் நகை மற்றும் காமிராவை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றிருப்பது தெரியவந்தது.
- புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோவை,
கோவை சின்னவேடம்பட்டியை சேர்ந்தவர் வடிவேலு (வயது 46). இவர் தனியார் கார்ப்பரேட் வங்கியில் மானேஜராக உள்ளார். இவரது மனைவி தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார்.
சம்பவத்தன்று காலையில் வடிவேலு மற்றும் அவரது மனைவி 2 பேரும் வழக்கம்போல வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு சென்றனர். மாலை அவரது மனைவி பள்ளி முடிந்ததும் வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டின் கதவு உடைக்க ப்பட்டிப்பதை கண்டு அவர் அதிர்ச்சியடை ந்தார். அவர் உள்ளே சென்று பார்த்த போது பீரோவை உடைத்து அதில் இருந்த 4 பவுன் நகை மற்றும் காமிராவை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றிருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து வடிவேலு சரவணம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பட்டப் பகலில் வீட்டின் கதவை உடைத்து நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- திருப்பூரை சேர்ந்த தனியார் நிறுவனம் ஒப்பந்த ஊழியர்களை பணியமர்த்தி வருகிறது.
- அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் ஒப்பந்த தூய்மைப்ப ணியாளர்கள் 2-வது நாளாக இன்றும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.
மேட்டுப்பாளையம்,
மேட்டுப்பாளையம் நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன. இங்கு தினசரி சேகரமாகும் குப்பைகள், தூய்மைப்பணியாளர்கள் மூலம் சேகரிக்கப்பட்டு, சிறுமுகை சாலையில் உள்ள நகராட்சி குப்பைக்கிடங்கில் கொட்டப்பட்டு வருகிறது. இதற்கான பணிகளில் 70 நிரந்தர பணியாளர்களும், 131 ஒப்பந்த பணியாளர்களும் ஈடுபட்டு வருகின்றனர்.
திருப்பூரை சேர்ந்த தனியார் நிறுவனம் ஒப்பந்த ஊழியர்களை பணியமர்த்தி வருகிறது.
இந்த நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துப்புரவுத்தொழிலாளர் மேம்பாட்டு தொழிற்சங்கம் சார்பில் மேட்டுப்பாளையம் சட்டசபை தொகுதி செயலா ளர் தொல்குடி.மைந்தன் தலைமையில் தூய்மைப்ப ணியாளரை ஆட்குறைப்பு செய்யக்கூடாது, உரிய ஊதியம் வழங்க வேண்டும், ஒப்பந்த நகல் வழங்க வேண்டும், தூய்மைப்பணி க்கான கையுறை, மண்வெ ட்டி, கடப்பாரை, முகக்கவ சம் உள்ளிட்ட உபகரண ங்களை வழங்க வேண்டும் என்பவை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த சில நாட்களுக்கு முன்பு காத்திருப்பு போராட்டம் நடத்தினார்கள்.
அப்போது மேட்டுப்பாளையம் நகராட்சி பொறியாளர் சோம சுந்தரம், மேட்டுப்பா ளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் நவநீதகிரு ஷ்ணன் மற்றும் சுகாதார அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மைப்பணி யாளர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர்.
அப்போது உரிய ஊதியம் வழங்கப்படும், ஆட்குறைப்பு செய்யப்படாது, தொழிலாளர்களுக்கு தேவையான உபகரணங்கள் வழங்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டது. எனவே தொழிலாளர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
இந்த நிலையில் ஒப்பந்த தூய்மைப்பணியாளர்களில் 4 பேரை தனியார் நிறுவனம் பணிநீக்கம் செய்து உள்ளது. எனவே மேட்டுப்பாளையம் நகராட்சியில் பணிநீக்கம் செய்யப்பட்ட தொழிலா ளர்களை மீண்டும் பணிய மர்த்த வேண்டும்,
தொழி லாள ர்களுக்கு தேவையான உபகரணங்களை உடனடி யாக வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, 114 ஒப்பந்த தூய்மைப்பணி யாளர்கள் நேற்று காலை முதல் கருப்பு பேட்ஜ் அணிந்து பணியில் ஈடுபட்டனர். ஆனாலும் ஒப்பந்ததாரர் தரப்பில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
எனவே மேட்டுப்பாளை யத்தில் ஒப்பந்த தூய்மைப்ப ணியாளர்கள் 2-வது நாளாக இன்றும் கருப்பு பேட்ஜ் அணிந்து பணியில் ஈடுபட்டு, தங்களின் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.
- வாழ்க்கையில் விரக்தி அடைந்து வீட்டில் மேல்மாடியில் உள்ள தண்ணீர் தொட்டியில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
- கிணத்துக்கடவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோவை,
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள சொலவம்பாளையத்தை சேர்ந்தவர் தயாளன் (வயது 88). கடந்த சில நாட்களாக இவர் மிகுந்த மனவேதனை அடைந்து காணப்பட்டார்.
சம்பவத்தன்று வீட்டில் படுத்து இருந்த தயாளன் வாழ்க்கையில் விரக்தி அடைந்து வீட்டில் மேல்மாடியில் உள்ள தண்ணீர் தொட்டியில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்து அவரது குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் இது குறித்து கிணத்துக்கடவு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் போலீசார் தற்கொலை செய்து கொண்ட முதியவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து கிணத்துக்கடவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- விடுமுறைக்கு பின் இரண்டாம் ஆண்டு மற்றும் இறுதியாண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் நேற்று தொடங்கியது.
- மாணவர்கள் ராகிங் செய்வதை தடுக்கும் வகையில் ராகிங் தடுப்பு கமிட்டி அமைக்கப்பட்டு ள்ளது.
கோவை,
கோவை அரசு கலைக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் வருகிற 22-ந் தேதி தொடங்குகிறது.
கோவை அரசு கலைக்க ல்லூரியில் இளங்கலை படிப்பில் பி.ஏ.தமிழ், ஆங்கிலம், வரலாறு, பி.காம், பி.எஸ்.சி. இயற்பியல், வேதியியல், கணிதம் உள்பட மொத்தம் 23 துறைகள் உள்ளன. தவிர, முதுகலை படிப்புகளும் வழங்கப்படு கிறது.
இந்நிலையில், பருவ த்தேர்வு விடுமுறைக்கு பின் இரண்டாம் ஆண்டு மற்றும் இறுதியாண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் நேற்று தொடங்கியது.
முதல்நாள் என்பதால் மிகவும் குறைவான அளவில் மாணவர்கள் வந்தனர். நடப்பாண்டில் இளங்கலை யில் உள்ள 23 பட்ட படிப்பில் மொத்தம் 1433 இடங்கள் கலந்தாய்வு மூலம் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி இரண்டு கட்ட கலந்தாய்வு நடத்தப்பட்டு மாணவர் சேர்க்கை நடந்துள்ளது.
இதில் மொத்தம் உள்ள 1433 இடங்களில் 1362 பேர் சேர்ந்துள்ளனர். மீதமுள்ள 71 இடங்களை தரவரிசை பட்டியலில் முன்னிலையில் உள்ள மாணவர்களுக்கு ஒதுக்கீடு செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து வருகிற 22-ந் தேதி முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் தொடங்குகிறது. மாணவர்களை வரவேற்க கல்லூரி நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு உடை கட்டுப்பாடு உள்ளிட்ட சில கட்டுப்பாடுகள் விதிக்கப்ப ட்டுள்ளன. கல்லூரிக்கு வரும் மாணவர்கள் நாகரிகமான உடையை அணிந்து வரவேண்டும் என கல்லூரி நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், முதலாம் ஆண்டு மாணவர்களை, சீனியர் மாணவர்கள் ராகிங் செய்வதை தடுக்கும் வகையில் ராகிங் தடுப்பு கமிட்டி அமைக்கப்பட்டு ள்ளது.
சீனியர்கள் யாராவது ராகிங் செயலில் ஈடுபட்டால், மாணவர்கள் புகார் அளிக்க புகார் பெட்டிகளும் கல்லூரி வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளன. சீனியர் மாணவர்களுக்கும், ஜூனியர் மாணவர்களை ராகிங் செய்யக்கூடாது என அறிவுறுத்தியுள்ளனர். கல்லூரி வளாகத்தில் அடையாள அட்டை அணியாத மாணவர்கள் கல்லூரிக்குள் நுழைய அனுமதியில்லை எனவும், இது தொடர்பாக கண்காணிக்க சிறப்பு குழு ஏற்படு த்தப்பட்டு உள்ளதாக வும் கல்லூரி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- இணைய தளம் மூலமாக ஓட்டல்களுக்கு மதிப்பாய்வு செய்தால் கமிஷன் தருவதாக கூறினார்.
- இதுகுறித்த புகாரின் பேரில் கோவை சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோவை,
கோவை நல்லம்பாளையத்தை சேர்ந்தவர் சுவாதி (வயது 26). இவர் கோவை சைபர் கிரைம் போலீசில் புகார் ஒன்றினை அளித்தார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது;-
அண்மையில் எனக்கு பகுதி நேர வேலை தருவதாக கூறி ராதிகா என்ற பெயரில் வாட்ஸ் ஆப்பில் மெசேஜ் வந்தது. அந்த நபர், தான் ஒரு ஆட்சேர்ப்பு கம்பெனியில் வேலை செய்வதாக கூறினார். அதில் அவர் இணைய தளம் மூலமாக ஓட்டல்களுக்கு மதிப்பாய்வு செய்தால் கமிஷன் தருவதாக கூறினார். பின்னர் அவரது வாட்ஸ் ஆப் குழுவில் என்னை இணைத்தார்.
குழுவில் சேர்த்த பிறகு பிரபலமான ஓட்டல்களுக்கு மதிப்பீடு செய்து பணம் சம்பாதிப்பது எப்படி என்று டெமோ காட்டினார். இதற்கு, முன் பணத்தையும் கட்ட சொன்னார். இதை உண்மை என நம்பி நானும் பணத்தை முதலீடு செய்தேன். எனக்கு கமிஷன் என அவ்வப்போது பணம் அனுப்பினார். நான் பல கட்டங்களாக இது வரை ரூ.6.97 லட்சம் பணம் அனுப்பினேன். இந்நிலையில் நான் என் தனிப்பட்ட காரணங்களுக்காக பணத்தை வாங்குவதற்காக அந்த இணையதளத்தில் முயற்சி செய்தேன் . ஆனால் பணத்தை என்னால் எடுக்க முடியவில்லை. பின்னர் நான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்த புகாரின் பேரில் கோவை சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- புகாரின் பேரில் போலீசார் சிறுமியை தேடி வந்தனர்.
- வாலிபர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோவை,
கோவை மாவட்டம் ஆனைமலை அருகே உள்ள காளியாபுரத்தை சேர்ந்தவர் 16 வயது சிறுமி. இவர் 9-ம் வகுப்பு வரை படித்து முடித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார்.
கடந்த 6 மாதங்களுக்கு முன்பு சிறுமிக்கு வெப்பரை பகுதியை சேர்ந்த 21 வயது வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி செல்போனில் பேசியும், நேரில் சந்தித்தும் தங்களது காதலை வளர்த்து வந்தனர்.
இந்த காதல் விவகாரம் சிறுமியின் வீட்டிற்கு தெரிய வரவே அவர்கள் தங்களது மகளை கண்டித்தனர். இது குறித்து சிறுமி தனது காதலனிடம் தெரிவித்தார்.
கடந்த ஏப்ரல் மாதம் சிறுமி தனது பெற்றோரிடம் வெளியே செல்வதாக கூறி விட்டு சென்றார். ஆனால் நீண்ட நேரம் ஆகியும் அவர் திரும்பி வரவில்லை. அக்கம் பக்கத்தில் தேடியும் அவர் கிடைக்க வில்லை. சிறுமியை அவரது காதலன் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்றது தெரிய வந்தது. இது குறித்து சிறுமியின் பெற்றோர் ஆனைமலை போலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமியை தேடி வந்தனர்.
சிறுமியை கடத்தி சென்ற வாலிபர் அவரை கோட்டூர் திருவள்ளுவர் காலனியில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கினார். அங்கு சிறுமியை வாலிபர் அடைத்து வைத்து கடந்த 2 மாதங்களாக பாலியல் பலாத்காரம் செய்தார். போலீசார் விசா ரணை நடத்தி வாலிபருடன் சிறுமி இருக்கும் இடத்தை கண்டுபிடித்தனர். பின்னர் வாலிபரிடம் இருந்து சிறுமி யை மீட்டனர். அவரிடம் நடத்திய விசாரணையில் சிறுமியை வாலிபர் ஆசை வார்த்தை கூறி கடந்த 2 மாதங்களாக பாலியல் பலாத்காரம் செய்தது தெரிய வந்தது.
இதனையடுத்து ஆனை மலை போலீசார் இந்த வழக்கை வால்பாறை அனைத்து மகளிர் போலீ சாரிடம் ஒப்படைத்தனர். வால்பாறை அனைத்து மகளிர் போலீசார் சிறுமியை கடத்தி சென்று பாலியல் பலாதகாரம் செய்த வாலிபர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பற்றி உமா கார்கி தொடர்ந்து அவதூறு கருத்துக்களை பரப்பி வருவதாக கோவை சைபர் கிரைம் போலீசில் புகார் கூறப்பட்டது.
- கோவை வடக்கு மாவட்ட தி.மு.க. தகவல் தொழில்நுட்ப பிரிவு அமைப்பாளர் ஹரீஷ் என்பவர் அந்த புகாரை அளித்துள்ளார்.
கோவை:
கோவை சிங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் உமா கார்கி (வயது 56).
இவர் பாரதிய ஜனதா கட்சியின் தீவிர ஆதரவாளர். சமூக வலைதளங்களில் பாரதிய ஜனதா மற்றும் பிரதமர் மோடி தொடர்பான ஆதரவு கருத்துக்களை தொடர்ந்து வெளியிட்டு வந்தார். அதேசமயம் தி.மு.க. மற்றும் எதிர்க்கட்சியினர் பற்றியும் கருத்துக்களை பதிவிட்டார்.
இந்தநிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பற்றி உமா கார்கி தொடர்ந்து அவதூறு கருத்துக்களை பரப்பி வருவதாக கோவை சைபர் கிரைம் போலீசில் புகார் கூறப்பட்டது. கோவை வடக்கு மாவட்ட தி.மு.க. தகவல் தொழில்நுட்ப பிரிவு அமைப்பாளர் ஹரீஷ் என்பவர் அந்த புகாரை அளித்துள்ளார்.
சிங்காநல்லூரைச் சேர்ந்த உமாகார்கி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பற்றி பேஸ்புக் மற்றும் டுவிட்டரில் தொடர்ந்து அவதூறு கருத்துக்களை பரப்பி வருகிறார். மேலும் பெரியார், மணியம்மை குறித்தும் அவதூறு தகவல்களை வெளியிட்டு வருகிறார். அவதூறு மீம்ஸ்களையும் வெளியிடுகிறார். இரு மதத்தினரிடையே மோதலை ஏற்படுத்தும் வகையிலும் கருத்துக்களை பரப்பி வருகிறார். எனவே உமா கார்கி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறி இருந்தார்.
அதன்பேரில் போலீசார் தகவல் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல், இரு மதத்தினரிடையே மோதல் ஏற்படுத்த முயற்சி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து உமா கார்கியை கைது செய்தனர்.
இதுபற்றி தகவல் அறிந்த கோவை மாநகர் மாவட்ட பாரதிய ஜனதா தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி மற்றும் பா.ஜ.க.வினர் கோவை கமிஷனர் அலுவலகத்தில் செயல்படும் சைபர்கிரைம் போலீஸ் நிலையத்தில் குவிந்தனர். அவர்கள் உமா கார்கி கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதுபற்றி மாவட்ட தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி கூறியதாவது:-
சைபர் கிரைம் போலீசார் ஒரு பெண் என்றும் பார்க்காமல் மன உளைச்சலை ஏற்படுத்தி உமா கார்கியை கைது செய்துள்ளனர். அவதூறு கருத்துக்களை பரப்பியதாக அவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். இந்த வழக்கை நாங்கள் சட்டப்படி சந்திப்போம்.
இங்கு நடப்பதையெல்லாம் மத்திய அரசும், நீதிமன்றமும் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறது. ஒவ்வொரு வினைக்கும், எதிர்வினை உண்டு. தமிழக அரசு கைது நடவடிக்கையில் தீவிரம் காட்டாமல் மக்களுக்கு பயனுள்ள திட்டங்களை நிறைவேற்றுவதில் அக்கறை காட்ட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
நேற்று கோவை காளப்பட்டியில் பா.ஜ.க. சமூக வலைதள செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் சிறந்த சமூக வலைதள செயல்பட்டாளருக்கு விருது உமா கார்கிக்கு வழங்கப்பட்டது. இந்த விருதை பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை வழங்கி உமா கார்கியை கவுரவித்தார். விருது பெற்ற மறுநாளிலேயே உமா கார்கி, கைது செய்யப்பட்டு உள்ளது பா.ஜ.க.வினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
- கோபத்தின் உச்சிக்கு சென்ற பெண், அந்த நபருக்கு எச்சரிக்கை விடுத்தார்.
- போலீசார் மேட்டுப்பாளையம் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று தீவிர விசாரணை நடத்தினர்.
மேட்டுப்பாளையம்:
கோவையை சேர்ந்த இளம்பெண் மேட்டுப்பாளையத்தில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் அவர் நேற்று அலுவலகம் சென்றார். அதன்பிறகு மேட்டுப்பாளையத்தில் இருந்து பஸ்சில் கோவைக்கு புறப்பட்டார்.
இளம்பெண் இருக்கைக்கு அருகே உள்ள இருக்கையில் 50 வயது மதிக்கத்தக்க ஒருவர் அமர்ந்திருந்தார். அவர் இளம்பெண்ணிடம் ஆபாச சைகை காட்டினார். இது அந்த பெண்ணுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. கோபத்தை அடக்கிக் கொண்டு முகத்தை வேறு பக்கம் திருப்பிக்கொண்டார். இது அந்த நபருக்கு வசதியாக அமைந்துவிட்டது. எனவே அவர் துணிச்சலாக மீண்டும், மீண்டும் அந்த பெண்ணுக்கு ஆபாச செய்கை காட்டினார்.
இதனால் கோபத்தின் உச்சிக்கு சென்ற பெண், அந்த நபருக்கு எச்சரிக்கை விடுத்தார். அப்போது பெண்ணுக்கு பஸ்சில் இருந்த மற்ற பயணிகளும் ஆதரவுக்குரல் எழுப்பினர். உடனே அந்த நபர் பஸ்சில் இருந்து நைசாக இறங்கி தப்ப முயன்றார். ஆனால் அந்த பெண் விடவில்லை. பஸ்சில் இருந்து குதித்த அவரை சுற்றி வளைத்து பிடித்து தடுத்து நிறுத்தினார்.
எனக்கு உன் பேத்தி வயதுதான் இருக்கும். என்னிடம் இப்படி ஆபாசமாக நடந்து கொள்கிறாயே, உனக்கு மனசாட்சி உள்ளதா. உன் மனைவி, பிள்ளைகளின் நம்பரை கொடு, நான் அவர்களிடம் நியாயம் கேட்கிறேன் என்று கேட்டு உள்ளார். ஆனால் போன் நம்பரை கொடுக்க அவர் மறுத்தார்.
இதனால் இளம்பெண் ஆத்திரம் அடைந்து செருப்பை கழற்றி அந்த நபரை சரமாரியாக அடித்தார். அப்போது சுற்றி நின்ற பொதுமக்களும் தர்மஅடி கொடுத்தனர்.
தகவலறிந்த மேட்டுப்பாளையம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அந்த முதியவரை மீட்டனர். அவருக்கு பொதுமக்கள் தாக்கியதில் சிறிய காயம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அவரை போலீசார் மேட்டுப்பாளையம் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன்பிறகு அந்த நபரை போலீசார் மேட்டுப்பாளையம் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று தீவிர விசாரணை நடத்தினர். இளம்பெண் புகார் அளிக்க மறுத்ததால் அந்த நபரை போலீசார் எச்சரித்து அனுப்பினர்.
இதற்கிடையே ஓடும் பஸ்சில் பாலியல் தொல்லை கொடுத்த நபரை இளம்பெண் செருப்பால் அடித்த நிகழ்வை, யாரோ சிலர் வீடியோ எடுத்து இணையத்தில் பதிவு செய்து உள்ளனர். இது சமூக வலைதளத்தில் தற்போது வைரலாக பரவி வருகிறது.






