என் மலர்
கோயம்புத்தூர்
- லாரி மோதியதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த அருண்குமார் உயிரிழந்தார்.
- கோவில்பாளையம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
கோவை,
விழுப்புரத்தை சேர்ந்தவர் பூவராகவன். இவரது மகன் அருண்குமார் (வயது 21). இவர் கோவையில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார்.
சம்பவத்தன்று கல்லூரியில் படிக்கும் 12 மாணவர்கள் நேர்முக தேர்வுக்காக 6 மோட்டார் சைக்கிள்களில் அன்னூர் கணேசபுரத்தில் உள்ள தனியார் நிறுவனத்துக்கு சென்றனர். பின்னர் தேர்வு முடிந்ததும் மாணவர்கள் மோட்டார் சைக்கிளில் திரும்பி வந்து கொண்டு இருந்தனர். அருண்குமார் மாணவர் ஒருவரின் மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்து வந்தார்.
மோட்டார் சைக்கிள் குரும்பபாளையம் -காளப்பட்டி ேராட்டில் வந்து கொண்டு இருந்த போது எதிரே வந்த லாரி, மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த அருண்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த தகவல் கிடைத்ததும் கோவில்பாளையம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் போலீசார் விபத்தில் இறந்த அருண்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு இ.எஸ்.ஐ. அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்தநிலையில் விபத்து நடந்த தகவல் கிடைத்ததும் அருண்குமாரின் தாய் மற்றும் உறவினர்கள் இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் திரண்டனர். அவர்கள் மாணவர் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் மற்றும் கல்லூரி நிர்வாகத்தினர் மற்றும் மாணவரின் தாயாரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.
- கடந்த ஆண்டில் ப்ராஜெக்ட் பள்ளிக்கூடம் திட்டத்தின் விழிப்புணர்வு மூலமாக 130 குற்றங்கள் தடுக்கப்பட்டது.
- நடப்பாண்டில் இதுவரை 88 போக்சோ வழக்குகள் பதிவாகி இருக்கிறது.
கோவை,
கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
கோவை மாவட்டத்தில் 1,318 பள்ளிகளில் சுமார் 2 லட்சம் மாணவ-மாணவிகளுக்கு ப்ராஜெக்ட் பள்ளிக்கூடம் திட்டத்தின் மூலமாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
கடந்த ஆண்டில் இந்த விழிப்புணர்வு மூலமாக 130 குற்றங்கள் தடுக்கப்பட்டது. நடப்பாண்டிலும் ப்ராஜெக்ட் பள்ளிக்கூடம் திட்டத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணி நடக்கிறது.
40 அரசு பள்ளிகளில் மாணவிகளுக்கு தற்காப்பு கலை கற்று தர ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. ப்ரொஜெக்டர் திட்டம் மூலம் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில் மிஷன் ப்ராஜெக்ட் பிரீ திட்டத்தின் மூலமாக மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு பாதுகாப்பு விழிப்புணர்வு தகவல் தெரிவிக்கப்பட்டு வருகிறது.
பள்ளி, கல்லூரி மாணவர்களை போதை பழக்கத்தில் இருந்து தடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.
மாவட்ட அளவில் 126 கல்லூரிகள் செயல்படுகிறது. இதில் 13 இடங்களில் போதை பொருள் நடமாட்டம் விற்பனை இருப்பதாக தெரிகிறது. இதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
கடந்த ஆண்டு மாவட்ட அளவில் 226 சிறார் பாலியல் பலாத்கார துன்புறுத்தல் தொடர்பாக போக்சோ வழக்குகள் பதிவானது. நடப்பாண்டில் இதுவரை 88 போக்சோ வழக்குகள் பதிவாகி இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்
- ஆதிரா நான் கொடுத்த ரூ.56 லட்சம் பணத்தையும் மீட்டு தர வேண்டும்.
- போலீசார் அர்ஜூன் அய்யப்பன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
குனியமுத்தூர்,
கோவை போத்தனூர் அருகே உள்ள நஞ்சுண்டாபுரத்தை சேர்ந்தவர் ஆதிரா (வயது 28). இவர் போத்தனூர் அனைத்து மகளிர் போலீசில் ஒரு புகார் அளித்தார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது:-
நான் எனது தந்தையுடன் சேர்ந்து தொழில் நிறுவனம் வைத்து நடத்தி வருகிறேன். எனக்கும் கேரள மாநிலம் பாலக்காட்டை சேர்ந்த டிராவல்ஸ் நிறுவனம் வைத்து நடத்தி வரும் அர்ஜூன் அய்யப்பன் (30) என்பவருக்கும் கடந்த 2021-ம் ஆண்டு திருமணம் நடந்தது.
எனது கணவர் மற்றும் அவரது தந்தை அய்யப்பன் ஆகியோர் ெதாழில் தேவைக்காக பணம் வேண்டும் என என்னிடம் கேட்டனர். இதனையடுத்து நான் எனது தந்தையிடம் இருந்து ரூ.56 லட்சம் பணம் வாங்கி அவர்களிடம் கொடுத்தேன். அதன் பின்னர் சொகுசு கார் வேண்டும் என்றனர். அதையும் நான் எனது தந்தையிடம் இருந்து வாங்கி கொடுத்தேன்.
நான் எனது தந்தையுடன் சேர்ந்து தொழிலை கவனித்து வந்த நிலையில் எனது கணவர் அவருக்கு திருமணம் ஆகவில்லை எனவும் திருமணத்துக்கு பெண் வேண்டும் என ஆன்லைன் திருமண தகவல் மையத்தில் பதிவிட்டு பெண் தேடி வந்தார்.
இந்த தகவல் எனக்கு தெரிய வந்ததும் எனது கணவர் மீது ஆத்திரம் ஏற்பட்டது. உடனடியாக நான் பாலக்காட்டுக்கு சென்று எனது கணவரிடம் இது குறித்து கேட்டேன். அப்போது எங்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனையடுத்து நான் எனது தந்தை வாங்கி கொடுத்த சொகுசு காரை எடுத்துக்கொண்டு கோவைக்கு வந்து விட்டேன்.
எனவே என்னை திருமணம் செய்து ஏமாற்றி விட்டு வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்வதற்காக ஆன்லைன் திருமண தகவல் மையத்தில் பதிவிட்டு பெண் தேடி வந்த எனது கணவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு அவரது தந்தை அய்யப்பன், தாய் விஜயா ஆகியோர் உடந்தையாக இருந்தனர்.
அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் எனது தந்தையிடம் இருந்து நான் வாங்கி கொடுத்த ரூ.56 லட்சம் பணத்தையும் மீட்டு தர வேண்டும். இவ்வாறு அந்த புகாரில் கூறியிருந்தார்.
புகாரின் பேரில் போலீசார் அர்ஜூன் அய்யப்பன், அவரது தந்தை அய்யப்பன், தாய் விஜயா ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- மாலை 5 மணிக்கு மேல் இருசக்கர வாகனத்தில் கோவிலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.
- பக்தர்கள் தெரிந்து கொள்வதற்காக ஆங்காங்கே அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.
கோவை அருகே மருதமலையில் சுப்பிரமணியசுவாமி கோவில் உள்ளது. முருகப்பெருமானின் 7-வது படை வீடாக போற்றப்படும் இந்த கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து விட்டு திரும்புகிறார்கள். இந்த கோவிலுக்கு அடிவாரத்தில் இருந்து படிக்கட்டு வழியாகவும், சாலை வழியாகவும் செல்லலாம். ஆனால் செல்லும் வழியில் வனவிலங்குகள் நடமாட்டம் உண்டு. இந்த நிலையில் மருதமலையில் தற்போது 7-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் முகாமிட்டு உள்ளன.
இதற்கிடையே மருதமலை அருகே வனப்பகுதிக்குள் சென்ற ஐ.ஓ.பி. காலனியை சேர்ந்த குமார் என்பவரை காட்டு யானை தாக்கி கொன்றது. இதையடுத்து காட்டு யானைகளின் நடமாட்டத்தை வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள்.
அத்துடன் மருதமலை கோவிலுக்கு செல்லும் வழியிலும் காட்டு யானைகளின் நடமாட்டம் இருப்பதால் பக்தர்களின் நலன் கருதி சில கட்டுப்பாடுகளை வனத்துறையினர் விதித்து உள்ளனர். இது குறித்து வனத்துறை உயர் அதிகாரிகள் கூறியதாவது:-
மருதமலை வனப்பகுதியில் காட்டு யானைகள் முகாமிட்டு உள்ளன. அத்துடன் ஒற்றை யானையும் சுற்றி வருகிறது. யானைகள் நடமாட்டம் குறித்து தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறோம். மேலும் இங்கு முகாமிட்டு உள்ள காட்டு யானைகள் மருதமலை கோவிலுக்கு செல்லும் வழியாகதான் இடம்பெயர்ந்து செல்கிறது.
எனவே கோவிலுக்கு செல்லும் பக்தர்களுக்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. அதன்படி மாலை 5 மணிக்கு மேல் அடிவாரத்தில் இருந்து இருசக்கர வாகனத்தில் கோவிலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. கார்களில் சென்றாலும் மிகவும் கவனத்துடன் செல்ல வேண்டும்.
அதுபோன்று படிக்கட்டு பகுதியிலும் காட்டு யானைகள் நடமாடி வருவதால், மாலை 5 மணிக்கு மேல் பக்தர்கள் படிக்கட்டு வழியாக செல்லக்கூடாது. இது தொடர்பாக கோவில் நிர்வாகத்துக்கு நோட்டீஸ் வழங்கி இருக்கிறோம். அத்துடன் பக்தர்கள் தெரிந்து கொள்வதற்காக ஆங்காங்கே அறிவிப்பு பலகையும் வைக்க உள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
- சம்பவத்தன்று மாணவி வழக்கம் போல கல்லூரி முடிந்ததும் விடுதிக்கு நடந்து சென்று கொண்டு இருந்தார்.
- மாணவர் தாக்கியதில் மாணவியின் பின் தலையில் காயம் ஏற்பட்டு ரத்தம் வந்தது.
கோவை:
ஈரோடு மாவட்டம் சென்னிமலையை சேர்ந்தவர் 21 வயது மாணவி. இவர் கோவை கிணத்துக்கடவு அருகே உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 5-ம் ஆண்டு படித்து வருகிறார்.
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மாணவிக்கு அதே கல்லூரியில் படிக்கும் மாணவர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி நேரில் சந்தித்தும் பல்வேறு இடங்களுக்கு சென்றும் தங்களது காதலை வளர்த்து வந்தனர்.
இந்தநிலையில் மாணவரின் நடவடிக்கைகள் மாணவிக்கு பிடிக்காமல் போனது. இதனையடுத்து அவர் கருத்து வேறுபாடு ஏற்பட்டு மாணவருடன் பேசுவதையும், பழகுவதையும் தவிர்த்தார்.
இதன் காரணாக ஆத்திரம் அடைந்த மாணவர், கல்லூரி வளாகத்தில் வைத்து மாணவியிடம் அடிக்கடி தகராறு செய்து வந்தார்.
சம்பவத்தன்று மாணவி வழக்கம் போல கல்லூரி முடிந்ததும் விடுதிக்கு நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த மாணவர் மாணவியிடம் ஏன் என்னுடன் பேச மறுக்கிறாய். நீதான் என்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த மாணவர், மாணவியின் தலைமுடியை பிடித்து இழுத்து தலையை தரையில் தாக்கினார்.
இதனை பார்த்த அந்த வழியாக சென்ற மாணவர்கள் அவரை தடுத்து மாணவியை மீட்டனர். மாணவர் தாக்கியதில் மாணவியின் பின் தலையில் காயம் ஏற்பட்டு ரத்தம் வந்தது. இதனையடுத்து மாணவியை சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மாணவிக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
இதுகுறித்து கிணத்துக்கடவு போலீசார், மாணவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- பிரதமர் மோடியின் 9 ஆண்டுகால ஆட்சியில் யோகா பயிற்சி உலக அளவில் முக்கியத்துவம் பெற்று உள்ளது.
- தினமும் 30 நிமிடம் யோகா செய்வதை கட்டாயமாக்க பட வேண்டும்.
கோவை,
உலக யோகா தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது.
இதன் ஒரு பகுதியாக உக்கடம் பெரியகுளம் அருகே, பா.ஜ.க சார்பில் யோகா நிகழ்ச்சி நடந்தது. இதில் பா.ஜனதா தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ, சுதாகர்ரெட்டி, மாவட்ட தலைவர் பாலாஜி உத்தமராமசாமி உள்பட நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு யோகா பயிற்சி பெற்றனர். அப்போது வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ, நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறிய தாவது:-
பிரதமர் மோடியின் 9 ஆண்டுகால ஆட்சியில் யோகா பயிற்சி உலக அளவில் முக்கியத்துவம் பெற்று உள்ளது. சர்வதேச நாடுகளும் யோகாவிற்கு முக்கியத்துவம் அளித்து வருகின்றன.
இதன் மூலம் லட்சக்கணக்கான யோகா ஆசிரியர்களின் வாழ்க்கை தரம் உயர்ந்து வருகிறது. யோகா கலையின் மூலம் இந்தியா உலகத்திற்கே ஆரோக்கியத்திற்கான கொடையை வழங்கி உள்ளது
.
கோவை மாநகராட்சி நிர்வாகம் பூங்காக்களில் யோகா செய்ய தனி இடம் ஒதுக்கித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் தமிழக அரசு பள்ளிகளில் யோகா பயிற்சியை கட்டாயமாக்க வேண்டும். இது மதம் சம்பந்தப்பட்ட விஷயம் அல்ல. ஆரோக்கியம் தொடர்பானது.
யோகா செய்வதால் மாணவர்களின் மன அழுத்தம் குறைந்து, வழி தவறி செல்வது போன்ற அம்சங்களில் இருந்து விடுபட முடியும். தினமும் 30 நிமிடம் யோகா செய்வதை கட்டாயமாக்க பட வேண்டும். அமைச்சர் செந்தில் பாலாஜி ஆபரேஷன் முடிந்து பூரண குணமாக வேண்டும். அதற்காக என் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
- இளம்பெண்ணுக்கு அதே ஓட்டலில் வேலை பார்த்து வந்த வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது.
- இளம்பெண்ணின் கணவர் மாயமான தனது மனைவியை கண்டுபிடித்து தரும்படி கோமங்கலம் போலீசில் புகார் செய்தார்.
கோவை,
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள கோமங்கலம்புதூரை சேர்ந்தவர் 25 வயது இளம்பெண். இவருக்கு திருமணமாகி 7 வயதில் ஒரு மகன் உள்ளார்.
கடந்த ஒரு மாதங்களுக்கு முன்பு இளம்பெண் ஊஞ்சவேலம்பட்டியில் உள்ள ஒரு ஓட்டலுக்கு வேலைக்கு சென்றார். அப்போது இளம்பெண்ணுக்கு அதே ஓட்டலில் வேலை பார்த்து வந்த வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து ஜாலியாக இருந்து வந்தனர்.
இந்த கள்ளக்காதல் விவகாரம் இளம்பெண்ணின் கணவருக்கு தெரிய வரவே அவர் தனது மனைவியை கண்டித்தார். இதன் கார ணமாக கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
மேலும் இளம்பெண்ணை அவரது கணவர் வேலையை விட்டும் நிறுத்தினார். சம்பவத்தன்று இளம்பெண்ணின் கணவர் வேலை சம்பந்தமாக வெளியூருக்கு சென்று இருந்தார்.
அப்போது வீட்டில் தனியாக இருந்த இளம்பெண் தனது கள்ளக்காதலனுடன் ஓட்டம் பிடித்தார். வெளியே சென்று விட்டு வீட்டிற்கு திரும்பிய இளம்பெண்ணின் கணவர் தனது மனைவி வீட்டில் இல்லாதது கண்டு அதிர்ச்சியடைந்தார். அவரை அக்கம் பக்கத்தில் தேடினார். ஆனால் எந்த பலனும் இல்லை.
இது குறித்து இளம்பெண்ணின் கணவர் மாயமான தனது மனைவியை கண்டுபிடித்து தரும்படி கோமங்கலம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கள்ளக்காதலனுடன் ஓட்டம் பிடித்த இளம்பெண்ணை தேடி வருகிறார்கள்.
- ஆங்கிலேயர்களால் கடந்த 1925 -ம் ஆண்டு தூண்களே இல்லாமல் தூரிப்பாலம் சாலை வசதிக்காக கட்டப்பட்டது.
- சுற்றுலாப் பயணிகளின் பயன்பாட்டிற்காக கோவை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார்பாடி இன்று தொடங்கி வைத்தார்.
மேட்டுப்பாளையம்,
மேட்டுப்பாளையத்தில் இருந்து நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் வனப்பகுதி வழியாக சாலை வசதி ஏற்படுத்தப்பட்டது.
இந்நிலையில் மேட்டுப்பாளையம் - குன்னூர் மலைப்பாதையில் கல்லாறு பகுதியில் ஆறு சென்றது. இதனையடுத்து ஆங்கிலேயர்களால் கடந்த 1925 -ம் ஆண்டு தூண்களே இல்லாமல் தூரிப்பாலம் சாலை வசதிக்காக கட்டப்பட்டது.
கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் மேட்டுப்பாளையம் கல்லாறு முதல் நீலகிரி மாவட்டம் கூடலூர் வரை தேசிய நெடுஞ்சாலையின் கட்டுப்பாட்டில் வந்தது. இதனையடுத்து கல்லாறு பகுதியில் தூரிப்பாலம் பகுதியில் கனரக வாகனங்கள் சென்று வரும் வகையில் கூடுதலாக ஒரு பாலம் கட்டப்பட்டது.
அதன்பின் அப்பகுதியில் இருந்த தொங்கு பாலமான தூரிப்பாலம் பயன்பாடில்லாமல் இருந்தது.
100 ஆண்டுகளை நெருங்கும் நிலையில் உள்ள இப்பாலம் தற்போதும் உறுதி தன்மையுடன் உள்ளது. மேலும் இச்சாலையின் வழியாக வரும் சுற்றுலா பயணிகள் இப்பாலம் முன்பு நின்று புகைப்படம் எடுத்து செல்வது வழக்கமாக உள்ளது. இதனையடுத்து ஓடந்துறை ஊராட்சி மன்றத்தலைவர் தங்கவேலு தூரிப்பாலத்தை தனியார் நிறுவன பங்களிப்புடன் புனரமைத்து இதனை நினைவு சின்னமாக மாற்றும் பணியில் ஈடுபட்டார்.
இந்நிலையில் பணிகள் முழுமையாக முடிக்கப்பட்டு நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த கல்லாறு தூரிப்பாலம் நினைவுச்சின்னமாக மாற்றப்பட்டு அதனை சுற்றுலாப் பயணிகளின் பயன்பாட்டிற்காக கோவை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார்பாடி இன்று தொடங்கி வைத்தார். நிகழ்ச்சிக்கு ஓடந்துறை ஊராட்சி தலைவர் தங்கவேல் தலைமை தாங்கினார்.
நிகழ்ச்சியில் மேட்டுப்பாளையம் தாசில்தார் சந்திரன், வட்டார வளர்ச்சி அலுவலர் ராமமூர்த்தி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் உட்பட பலர் திரளாக கலந்து கொண்டனர். நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த கல்லாறு தூரிப்பாலம் நினைவுச்சின்னமாக மாற்றப்பட்டு சுற்றுலா பயணிகளின் பயன்பாட்டிற்காக தொடங்கி வைக்கப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
- ஆக்ரோஷம் அடங்காத யானை சரமாரியாக மிதித்ததில் குமார் உடல்நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார்.
- யானைக்கு மதம் பிடித்து இருந்தால், அதற்கு உடனடியாக சிகிச்சை அளிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.
வடவள்ளி,
கோவை மருதமலை ஐ.ஓ.பி காலனி திடீர் குப்பத்தை சேர்ந்த குமார் (வயது 30) என்பவரை காட்டு யானை மிதித்து கொன்ற சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது. இவருக்கு மனைவி கல்பனா (30), சபரீஷ் (12), தர்னீஷ் (4), அனீஷ்குமார் (3) ஆகிய 3 குழந்தைகள் உள்ளனர்.
குமார் சம்பவத்தன்று மாலை குடும்பத்துடன் அருகே உள்ள காப்புக் காட்டுக்குள் விறகு சேகரிக்க சென்று உள்ளார். அதன்பிறகு அவர்கள் விறகு கட்டுகளுடன் வீட்டுக்கு புறப்பட்டனர். குமாரின் 2 மகன்கள் ஏற்கெனவே பாதியில் புறப்பட்டு விட்டனர் .
எனவே குமார் மனைவி கல்பனா மற்றும் குழந்தை அனீஷ்குமாருடன் வீட்டுக்கு நடந்து வந்தார். அப்போது ஒரு காட்டு யானை நடுவழியில் திடீரென பிளிறியபடி வந்தது. எனவே கல்பனா அலறியடித்து ஓட்டம் பிடித்தார்.
குமாரும் மகன் அனீஷ் குமாரை தூக்கிக்கொண்டு ஓடினார். ஆனாலும் யானை சுற்றி வளைத்து விட்டது. எனவே செய்வது அறியாமல் திகைத்து நின்ற குமார், பாதுகாப்பான இடத்தில் மகனை தூக்கி வீசினார். அதன்பிறகு அவர் தலைதெறிக்க தப்பி ஓடினார்.
இருந்தபோதிலும் அந்த யானை குமாரை தூக்கி வீசியது. இதில் அவரது இடது கால் பிய்ந்து ரத்தம் கொட்டியது. இருந்தபோதிலும் ஆக்ரோஷம் அடங்காத யானை சரமாரியாக மிதித்தது. இதில் குமார் உடல்நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார்.
வடவள்ளி காட்டுப்பகுதியில் காட்டு யானை மோதி கூலித்தொழிலாளி குமார் பலியான சம்பவம், அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.இதற்கிடையே சம்பவத்தை நேரில் பார்த்த கிராமவாசிகள் கூறுகையில், குமாரை மிதித்து கொன்ற காட்டு யானை 11 மீட்டர் உயரத்தில், நீண்ட தந்தங்களுடன் காணப்பட்டது. அதற்கு காதில் இருந்து நிணநீர் வழிந்து கொண்டு இருப்பதை பார்த்தோம். எனவே அந்த யானைக்கு மதம் பிடித்து இருக்க வேண்டும்.
அதுவும்தவிர தொண்டாமுத்தூர், தேவராயபுரம், கணுவாய், அட்டுக்கல், யானைமடுவு ஆகிய பகுதிகளில் சுமார் 20-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் கடந்த ஒரு வாரமாக முகாமிட்டு உள்ளன. அவற்றில் ஒரு யானை தான் மேற்கண்ட சம்பவத்தில் ஈடுபட்டு இருக்க வேண்டும்.
எனவே வனத்துறை இந்த விஷயத்தில் உடனடியாக தலையிட்டு, காட்டு யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்கு விரட்டி அடிக்க வேண்டும். அதற்கு முன்பாக குமாரை மிதித்து கொன்ற யானைக்கு மதம் பிடித்து இருந்தால், அதற்கு உடனடியாக சிகிச்சை அளிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.
- கோவை மாநகர போலீசாருக்கு போலீஸ் பயிற்சி பள்ளி மைதானத்தில் யோகா பயிற்சி அளிக்கப்பட்டது.
- ஈஷா யோகா மையத்தில் 100-க்கும் மேற்பட்ட சி.ஆர்.பி.எப். வீரர்களுக்கு யோகா பயிற்சி அளிக்கப்பட்டது.
கோவை,
உலக யோகா தினம் இன்று கடைபிடிக்கப்பட்டது. இதனையொட்டி கோவையில் பல்வேறு அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகளில் யோகா பயிற்சிகள் அளிக்கப்பட்டது.
கோவை மாநகர போலீசாருக்கு போலீஸ் பயிற்சி பள்ளி மைதானத்தில் யோகா பயிற்சி அளிக்கப்பட்டது. மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் தலைமையில், நடந்த இந்த யோகா பயிற்சியில் போலீஸ் அதிகாரிகள், போலீசார் மற்றும் முன்னாள் போலீஸ் அதிகாரிகள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
பின்னர் மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
உலக யோகா தினத்தை முன்னிட்டு உலக சேவா மையம் மற்றும் முன்னாள் போலீஸ் அதிகாரிகள் இணைந்து போலீசாருக்கான சிறப்பு யோகா பயிற்சி இன்று அளிக்கப்பட்டது.
இதில் 600-க்கும் மேற்பட்ட போலீஸ் அதிகாரிகள், முன்னாள் அதிகாரிகள், போலீசார் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர்.
இந்த யோகா தினத்தில் எல்லோரும் சேர்ந்து யோகா செய்தது மட்டும் அல்லாமல் யோகா பயிற்சிகள் மூலம் ஏற்படும் நன்மைகள் குறித்து விரிவாக விளக்கப்பட்டது.
முக்கியமாக மூச்சுப்பயிற்சி, தியான பயிற்சி செய்வதன் மூலம் போலீஸ் துறையில் பணியின் போது ஏற்படும் மன அழுத்தங்களை, உணர்வுகளை சீர்படுத்துவதற்கும் முக்கியமாக நமது மூச்சை சீர்படுத்துவதன் மூலம் எப்படி பயன்பெற முடியும் என்பதும் எடுத்து சொல்லப்பட்டது. போலீசாருக்கு பணியின் போது ஏற்பட்டும் மன அழுத்தங்களை மூச்சுப்பயிற்சி மூலம் எப்படி சரி செய்து என்பது குறித்து விளக்கம் அளிக்கப் பட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.
அரசு கலைக்கல்லூரி மாணவர்களுக்கு யோகா தினத்தை முன்னிட்டு யோகா பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் ஏராளமான மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்.
கோவை அரசு ஆஸ்பத்திரியில் டீன் நிர்மலா தலைமையில் டாக்டர்கள், செவிலியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு யோகா பயிற்சி வழங்கப்பட்டது. இதேபோல கோவையில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் மாணவ-மாணவிகளுக்கு யோகா பயிற்சி அளிக்கப்பட்டது.
ஈஷா யோகா மையத்தில் உலக யோகா தினத்தை முன்னிட்டு ஆதியோகி சிலை முன்பு 100-க்கும் மேற்பட்ட சி.ஆர்.பி.எப். வீரர்களுக்கு யோகா பயிற்சி அளிக்கப்பட்டது.
- மோகன்குமாரின் வீட்டின் ஜன்னல் வழியாக மர்மநபர்கள் உள்ளே நுழைந்தனர்.
- இதுகுறித்து அன்னூர் போலீசாருக்கு மோகன்குமார் தகவல் தெரிவித்தார்.
கோவை,
கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள அச்சம்பாளையத்தை சேர்ந்தவர் மோகன்குமார் (வயது 38). தனியார் நிறுவன ஊழியர். சம்பவத்தன்று மதியம் இவர் தனது வீட்டை பூட்டி விட்டு மனைவியுடன் வேலைக்கு சென்றார்.
அப்போது மோகன்குமாரின் வீட்டின் ஜன்னல் வழியாக மர்மநபர்கள் உள்ளே நுழைந்தனர். அவர்கள் அறையில் இருந்த பீரோவை திறந்து அதில் இருந்த செயின், மோதிரம், வளையல், கம்மல் உள்பட 13 பவுன் தங்க நகைகள், 2 வெள்ளி குத்துவிளக்கு, ரூ. 2 ஆயிரம் ரொக்க பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து தப்பிச் சென்றார்.
மாலையில் வேலை முடிந்த தும் வீட்டிற்கு திரும்பிய மோகன்குமார் வீட்டின் பீரோவில் இருந்த நகை மற்றும் பணம் கொள்ளை போயிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் இதுகுறித்து அன்னூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் சம்பவ இடத்துக்கு கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப் பட்டனர். அவர்கள் வீட்டில் பதிவாகி இருந்த கொள்ளையர்களின் கைரேகைகளை பதிவு செய்தனர்.
இதனை வைத்து அன்னூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் பட்டப்பகலில் 13 பவுன் தங்க நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை தேடி வருகிறார்கள்.
- ஆத்திரம் அடைந்த சதீஷ்குமார் தனது அண்ணன் ஆனந்தகுமாரின் தலையில் கல்லால் தாக்கினார்.
- இது குறித்து டாக்டர்கள் கோமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
கோவை,
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள எஸ்.மலையாண்டி பட்டிணத்தை சேர்ந்தவர் ஆனந்தகுமார் (வயது 31). கூலித்தொழிலாளி. இவரது சகோதரர் சதீஷ்குமார் (29). சம்பவத்தன்று இவர்கள் 2 பேரும் கூலி வேலைக்கு சென்றனர். பின்னர் வேலை முடிந்ததும் அந்த பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்று மது குடித்தனர்.
போதை தலைக்கேறிய நிலையில் 2 பேரும் கெடிமேடு நால்ரோடு அருகே நடந்து சென்றனர். அப்போது அவர்களுக்கு இடையே குடிபோதையில் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த சதீஷ்குமார் தனது அண்ணன் ஆனந்தகுமாரின் தலையில் கல்லால் தாக்கினார். இதில் படுகாயம் அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் மயங்கினார். இதனை பார்த்து அதிர்ச்சி யடைந்த சதீஷ்குமார் தனது அண்ணனை மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார்.
அங்கு அவர் டாக்டர்களிடம் தனது அண்ணன் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டதாக கூறி நாடகமாடினார். இது குறித்து டாக்டர்கள் கோமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் விபத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
மேலும் சம்பவம் நடந்த பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு காமி ராவில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது அதில் தனது அண்ணனை சதீஷ்குமார் தாக்கும் காட்சிகள் பதிவாக இருந்தது.
இதனையடுத்து போலீசார் அண்ணனை தாக்கி விட்டு விபத்து நடந்ததாக நாடகமாடிய சதீஷ்குமாரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.






