என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மருதமலை அருகே வாலிபரை மிதித்து கொன்ற யானைக்கு மதம் பிடித்துள்ளதா?
    X

    மருதமலை அருகே வாலிபரை மிதித்து கொன்ற யானைக்கு மதம் பிடித்துள்ளதா?

    • ஆக்ரோஷம் அடங்காத யானை சரமாரியாக மிதித்ததில் குமார் உடல்நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார்.
    • யானைக்கு மதம் பிடித்து இருந்தால், அதற்கு உடனடியாக சிகிச்சை அளிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.

    வடவள்ளி,

    கோவை மருதமலை ஐ.ஓ.பி காலனி திடீர் குப்பத்தை சேர்ந்த குமார் (வயது 30) என்பவரை காட்டு யானை மிதித்து கொன்ற சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது. இவருக்கு மனைவி கல்பனா (30), சபரீஷ் (12), தர்னீஷ் (4), அனீஷ்குமார் (3) ஆகிய 3 குழந்தைகள் உள்ளனர்.

    குமார் சம்பவத்தன்று மாலை குடும்பத்துடன் அருகே உள்ள காப்புக் காட்டுக்குள் விறகு சேகரிக்க சென்று உள்ளார். அதன்பிறகு அவர்கள் விறகு கட்டுகளுடன் வீட்டுக்கு புறப்பட்டனர். குமாரின் 2 மகன்கள் ஏற்கெனவே பாதியில் புறப்பட்டு விட்டனர் .

    எனவே குமார் மனைவி கல்பனா மற்றும் குழந்தை அனீஷ்குமாருடன் வீட்டுக்கு நடந்து வந்தார். அப்போது ஒரு காட்டு யானை நடுவழியில் திடீரென பிளிறியபடி வந்தது. எனவே கல்பனா அலறியடித்து ஓட்டம் பிடித்தார்.

    குமாரும் மகன் அனீஷ் குமாரை தூக்கிக்கொண்டு ஓடினார். ஆனாலும் யானை சுற்றி வளைத்து விட்டது. எனவே செய்வது அறியாமல் திகைத்து நின்ற குமார், பாதுகாப்பான இடத்தில் மகனை தூக்கி வீசினார். அதன்பிறகு அவர் தலைதெறிக்க தப்பி ஓடினார்.

    இருந்தபோதிலும் அந்த யானை குமாரை தூக்கி வீசியது. இதில் அவரது இடது கால் பிய்ந்து ரத்தம் கொட்டியது. இருந்தபோதிலும் ஆக்ரோஷம் அடங்காத யானை சரமாரியாக மிதித்தது. இதில் குமார் உடல்நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார்.

    வடவள்ளி காட்டுப்பகுதியில் காட்டு யானை மோதி கூலித்தொழிலாளி குமார் பலியான சம்பவம், அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.இதற்கிடையே சம்பவத்தை நேரில் பார்த்த கிராமவாசிகள் கூறுகையில், குமாரை மிதித்து கொன்ற காட்டு யானை 11 மீட்டர் உயரத்தில், நீண்ட தந்தங்களுடன் காணப்பட்டது. அதற்கு காதில் இருந்து நிணநீர் வழிந்து கொண்டு இருப்பதை பார்த்தோம். எனவே அந்த யானைக்கு மதம் பிடித்து இருக்க வேண்டும்.

    அதுவும்தவிர தொண்டாமுத்தூர், தேவராயபுரம், கணுவாய், அட்டுக்கல், யானைமடுவு ஆகிய பகுதிகளில் சுமார் 20-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் கடந்த ஒரு வாரமாக முகாமிட்டு உள்ளன. அவற்றில் ஒரு யானை தான் மேற்கண்ட சம்பவத்தில் ஈடுபட்டு இருக்க வேண்டும்.

    எனவே வனத்துறை இந்த விஷயத்தில் உடனடியாக தலையிட்டு, காட்டு யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்கு விரட்டி அடிக்க வேண்டும். அதற்கு முன்பாக குமாரை மிதித்து கொன்ற யானைக்கு மதம் பிடித்து இருந்தால், அதற்கு உடனடியாக சிகிச்சை அளிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.

    Next Story
    ×