என் மலர்
கோயம்புத்தூர்
- தி.மு.க.வை சேர்ந்த கனிமொழி எம்.பி., ஷர்மிளா இயக்கிய பஸ்சில் பயணம் மேற்கொண்டார்.
- பெண்களால் எல்லாவற்றையும் செய்ய முடியும். அந்த கூற்றுக்கு ஏற்ப இவர் பஸ்சை இயக்கி வருகிறார்.
கோவை:
கோவையைச் சேர்ந்தவர் ஷர்மிளா. இவர் வடவள்ளியில் இருந்து ஒண்டிப்புதூர் வழித்தடத்தில் இயக்கப்படும் தனியார் பஸ்சில் டிரைவராக பணியாற்றி வருகிறார்.
கோவையின் முதல் பெண் டிரைவரான ஷர்மிளாவுக்கு பெண்கள் மத்தியிலும், பொதுமக்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.
இந்த நிலையில் தி.மு.க.வை சேர்ந்த கனிமொழி எம்.பி., ஷர்மிளா இயக்கிய பஸ்சில் பயணம் மேற்கொண்டார். அவர் காந்திபுரத்தில் இருந்து பீளமேடு வரை பஸ்சில் பயணம் செய்தார்.
பயணத்தின்போது ஷர்மிளாவுக்கு கனிமொழி எம்.பி. தனது வாழ்த்துக்களை தெரிவித்தார். அவருடன் சிறிது நேரம் பஸ்சில் பயணித்தபடியே பேசி சென்றார்.
பின்னர் கனிமொழி எம்.பி., பீளமேட்டில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ஆண்களும் பெண்களும் சமம் தான். பெண்கள் லாரி, பஸ் ஓட்டுவார்களா என்று கேட்பார்கள். தற்போது அதனை இந்த பெண் செய்து காட்டியுள்ளார். ஷர்மிளா பஸ்சை இயக்குவது மிகவும் பாராட்டுக்குரியது. இது மகிழ்ச்சியாகவும் உள்ளது.
மேலும் பெண்களால் எல்லாவற்றையும் செய்ய முடியும். அந்த கூற்றுக்கு ஏற்ப இவர் பஸ்சை இயக்கி வருகிறார். இது பெருமைக்குரிய விஷயமாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது, கனிமொழி எம்.பி.யிடம் பீகாரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மம்தா பானர்ஜி, நிதிஷ்குமார் பங்கேற்கும் எதிர்கட்சிகளின் கூட்டம் குறித்து கேள்வி எழுப்பினர்.
அதற்கு அவர், இன்றைய தினத்தில் எதிர்க்கட்சிகள் எல்லாம் ஒரே தளத்தில் ஒன்றிணைவது என்பது இந்தியாவில் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வரும். இது வெற்றி பெறுவதற்கான நம்பிக்கை என்றார்.
- மருதமலை சாலையில் உள்ள ஐ.ஓ.பி காலனி பகுதியில் உள்ள சாலையோரம் குட்டிகளுடன் யானைகள் கூட்டமாக நின்றிருந்தது.
- குட்டி யானைகள் சாலையின் நடுவே நின்று ஒன்றுக்கொன்று துதிக்கையால் தழுவி விளையாடி கொண்டிருந்தன.
வடவள்ளி:
கோவை மாவட்டம் ஆனைகட்டி, தடாகம், மாங்கரை, பெரியநாயக்கன் பாளையம், மருதமலை ஆகிய பகுதிகளில் கடந்த சில நாட்களாக யானைகள் கூட்டம் கூட்டமாக நடமாடி வருகிறது.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஐஓபி காலனியை சேர்ந்த குமார் என்பவர் யானை தாக்கி பலியானார்.
யானைகள் நடமாட்டம் அதிகரித்ததால், பக்தர்கள் மருதமலைக்கு செல்லும் மலைப் பாதையில் நடந்து செல்ல மாலை 5 மணிக்கு மேல் அனுமதி இல்லை.
மேலும் இருசக்கர வாகனங்களில் செல்லும் நபர்களுக்கு காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டும் தான் அனுமதி அளிக்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.
வனத்துறையினர் ஒலிபெருக்கி மூலம் யானை நடமாடும் பகுதிகளுக்கு சென்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று, கோவை மருதமலை சாலையில் உள்ள ஐ.ஓ.பி காலனி பகுதியில் உள்ள சாலையோரம் குட்டிகளுடன் யானைகள் கூட்டமாக நின்றிருந்தது.
அப்போது குட்டி யானைகள் சாலையின் நடுவே நின்று ஒன்றுக்கொன்று துதிக்கையால் தழுவி விளையாடி கொண்டிருந்தன. இதனை அந்த பகுதிகளில் உள்ளவர்கள் வீட்டில் இருந்தபடி செல்போனில் வீடியோ எடுத்தனர்.
தற்போது இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
- உஸ்மான், அவரது நண்பர்கள் பி.டி.ரமேஷ், சபரிகிரிவாசன், அயோத்தி ரவி ஆகியோரை கைது செய்தனர்.
- கைதான 4 பேரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைப்பதற்கான நடவடிக்கைகளை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை:
கோவை ராமநாதபுரம் சண்முகா நகரை சேர்ந்தவர் அனிஹரோன் (வயது 65).
இவர் அந்த பகுதியில் உள்ள தனக்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பின் 4-வது தளத்தில் வசித்து வருகிறார்.
கீழ் தளத்தை உக்கடத்தை சேர்ந்த சிக்கந்தர் என்பவருக்கு வாடகைக்கு விட்டுள்ளார். இதில் சிக்கந்தர் ரியல் எஸ்டேட் நிறுவனம் தொடங்கி நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் கடந்த 17-ந் தேதி மாலை, சிக்கந்தர் நடத்தி வரும் ரியல் எஸ்டேட் நிறுவனம் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது.
இதனை பார்த்த கட்டிடத்தின் உரிமையாளர் அனிஹரோன் ஓடி வந்து தீயை அணைக்க முயன்றார். மேலும் தீயணைப்பு துறையினருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.
இது தொடர்பாக கட்டிட உரிமையாளர் அனிஹரோன் ராமநாதபுரம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், ரியல் எஸ்டேட் அலுவலகத்துக்கு தீ வைத்தது உக்கடத்தை சேர்ந்த உஸ்மான் மற்றும் அவரது நண்பர்கள் என்பது தெரியவந்தது.
தொடர்ந்து மேற்கொண்ட விசாரணையில், சிக்கந்தர் வேலை விஷயமாக உஸ்மானிடம் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது.
இந்த கடனை உஸ்மான் திருப்பி கேட்டபோது, சிக்கந்தர் தனது நண்பர்களுடன் சேர்ந்து தாக்கியுள்ளார். இதனால் அவரை பழிவாங்க உஸ்மான் நினைத்துள்ளார்.
இதுகுறித்து தனது நண்பர்களான மணியக்காரம் பாளையத்தை சேர்ந்த ரமேஷ் என்ற பி.டி.ரமேஷ், வீரகேளத்தை சேர்ந்த சபரிகிரிவாசன்(35), ராமநாதபுரத்தை சேர்ந்த அயோத்தி ரவி ஆகியோரிடம் தெரிவித்தார்.
பின்னர் 4 பேரும், சுங்கம் பகுதியில் சிக்கந்தர் நடத்தி வரும் ரியல் எஸ்டேட் அலுவலகத்துக்கு சென்றனர். அப்போது அங்கு நிறுவனம் பூட்டப்பட்டிருந்தது.
சிக்கந்தர் இல்லாததால் ஆத்திரம் அடைந்த அவர்கள், ரியல் எஸ்டேட் நிறுவனத்திற்கு தீ வைத்து விட்டு தப்பியோடியது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்களை தேடி வந்தனர்.
இந்த நிலையில் கோவையில் பதுங்கி இருந்த உஸ்மான், அவரது நண்பர்கள் பி.டி.ரமேஷ், சபரிகிரிவாசன், அயோத்தி ரவி ஆகியோரை கைது செய்தனர்.
கைதானவர்களில் சபரிகிரிவாசன், அயோத்தி ரவி ஆகியோர் இந்து முன்னணியில் உறுப்பினராக இருப்பதும், பி.டி.ரமேஷ் பா.ஜ.க.வில் உறுப்பினராக இருப்பதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
கைதான 4 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைப்பதற்கான நடவடிக்கைகளை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.
- ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ., கடந்த சில நாட்களுக்கு முன்பு சீர்காழியில் நடந்த திருமண நிகழ்ச்சிக்கு சென்றார்.
- போலீசார் அவதூறு பரப்பும் வகையில் புகைப்படத்தை பதிவிட்ட திப்பு நகரை சேர்ந்த முகமது ஹாரீஸ் என்பவரை கைது செய்தனர்.
குனியமுத்தூர்:
கோவை கரும்புக்கடை அருகே உள்ள அன்பு நகரை சேர்ந்தவர் ஜூபேர் அகமது (வயது 24). இவர் கரும்புக்கடை போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது:-
நான் தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகத்தில் தொழில்நுட்ப பிரிவு கோவை மாவட்ட செயலாளராக உள்ளேன். எங்களது தலைவர் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ., கடந்த சில நாட்களுக்கு முன்பு சீர்காழியில் நடந்த திருமண நிகழ்ச்சிக்கு சென்றார். அப்போது அவர் புகைப்படம் எடுத்து உள்ளார்.
அந்த புகைப்படத்தை கரும்புக்கடை திப்பு நகரை சேர்ந்த முகமது ஹாரீஸ் என்பவர் தவறாக சித்தரித்து பேஸ்புக்கில் அவதூறு பரப்பும் வகையில் பதிவிட்டு உள்ளார். எனவே அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் அளித்த புகாரில் கூறியிருந்தார்.
புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணைக்கு பிறகு போலீசார் அவதூறு பரப்பும் வகையில் புகைப்படத்தை பதிவிட்ட திப்பு நகரை சேர்ந்த முகமது ஹாரீஸ் என்பவரை கைது செய்தனர். பின்னர் அவரை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.
- தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமான ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருந்தது.
- பக்ரீத் பண்டிகை வருவதால் ஆடுகளுக்கு கிராக்கி ஏற்பட்டு விலை அதிகரித்துள்ளது.
பொள்ளாச்சி:
தமிழகத்திலேயே மிகப்பெரிய கால்நடை சந்தையாக பொள்ளாச்சி மாட்டுச்சந்தை உள்ளது.
இந்த சந்தை வாரந்தோறும் வியாழக்கிழமை நடைபெறுவது வழக்கம். இங்கு பொள்ளாச்சி மட்டுமின்றி சுற்றுவட்டார பகுதிகளில் இருந்தும் ஏராளமானோர் வந்து ஆடு மற்றும் மாடுகளை வாங்கி செல்வார்கள்.
நேற்றும் வழக்கம் போல சந்தை கூடியது. வருகிற 29-ந் தேதி பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமான ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருந்தது.
திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து வெள்ளாடு, செம்மறி ஆடு என 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனைக்கு வந்தன.
ஆடுகளை வாங்குவதற்கும் வியாபாரிகள், பொதுமக்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வந்திருந்தனர். பக்ரீத் பண்டிகை வருவதால் ஆடுகளின் விலையும் உயர்ந்து காணப்பட்டது.
எடைக்கு ஏற்ப ஆடுகள் விற்பனையானது. ஒரு ஆடு ரூ.6 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை விலை போனது.
இதுகுறித்து ஆட்டு வியாபாரிகள் கூறுகையில், பக்ரீத் பண்டிகை வருவதால் ஆடுகளுக்கு கிராக்கி ஏற்பட்டு விலை அதிகரித்துள்ளது.
ஆடுகளும் அதிகளவில் விற்பனைக்கு வந்ததால் வர்த்தகம் ரூ.1 கோடியை தாண்டியது என்றார்.
- மனுவை விசாரித்த நீதிபதி, கைதான உமா கார்கியை ஒரு நாள் மட்டும் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி வழங்கினார்.
- போலீசார் உமாகார்கியை இன்று ஒரு நாள் மட்டும் காவலில் வைத்து விசாரித்து வருகிறார்கள்.
கோவை:
கோவை சிங்காநல்லூரைச் சேர்ந்தவர் உமா கார்கி (வயது 56). பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்தவர்.
இவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் கருணாநிதி, பெரியார் உள்ளிட்ட தலைவர்கள் பற்றி அவதூறு தகவல்களை பரப்பியதாக கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் தி.மு.க. பிரமுகர் ஹரீஷ் என்பவர் புகார் கொடுத்தார்.
அதன்பேரில் அவதூறு பரப்புதல், தகவல் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து உமா கார்கியை கைது செய்தனர். பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு அவர் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.
இந்தநிலையில் உமா கார்கியிடம் சில தகவல்களை பெற வேண்டி இருந்ததால் அவரை 2 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சைபர் கிரைம் போலீசார் கோவை 4-வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நேற்று மனுத்தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, கைதான உமா கார்கியை ஒரு நாள் மட்டும் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி வழங்கினார். அதன்படி போலீசார் உமாகார்கியை இன்று ஒரு நாள் மட்டும் காவலில் வைத்து விசாரித்து வருகிறார்கள்.
- சரவணகுமார் மதுபோதையில் ெரயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்றார்.
- கோவை நோக்கி வந்த பயணிகள் ரெயிலில் அடிபட்டு சரவணகுமார் உயிரிழந்தார்.
மேட்டுப்பாளையம்,
காரமடையை அடுத்த மங்களக்கரைப்புதூரை சேர்ந்தவர் சரவணகுமார்(43).இவருக்கு பூர்ணிமா(35) என்ற மனைவியும், ஒரு மகன், மகள் உள்ளனர்.
சம்பவத்தன்று சரவணகுமார் மதுபோதையில், காரமடை சத்யா நகர் அருகே ெரயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவை நோக்கி வந்த பயணிகள் ரெயிலில் அடிபட்டு சரவணகுமார் உயிரிழந்தார்.
இதுகுறித்து அறிந்த மேட்டுப்பாளையம் ெரயில்வே சப்-இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையிலான போலீசார் விரைந்து வந்து இறந்தவர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பெருமாள் கோவில் அருகே சென்ற யானை, கோவில் மண்டபத்தில் முன்பக்க கதவை உடைத்து கோவிலுக்குள் சென்றது.
- பாகுபலி யானையை அடர் வனப்பகுதிக்குள் விரட்ட மக்கள் பலமுறை கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேட்டுப்பாளையம்:
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வனசரகத்திற்குட்பட்ட பகுதிகளில் ஏராளமான காட்டு யானைகள், காட்டெருமை, மான் உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன.
இவை அவ்வப்போது, இரை, தண்ணீர் தேடி வனத்தை விட்டு வெளியேறி வனப்பகுதியையொட்டிய ஊருக்குள் புகுந்து விளைநிலங்களை சேதம் செய்வதோடு, மனிதர்களையும் அச்சுறுத்தி வருகிறது.
கடந்த 3 ஆண்டுகளாக மேட்டுப்பாளையம், ஓடந்துறை, தாசம்பாளையம், சமயபுரம் பகுதிகளில் மக்களால் பாகுபலி என செல்லமாக அழைக்கப்படும் ஒற்றை காட்டு யானை சுற்றி வருகிறது.
இந்த யானை அடிக்கடி வனத்தை விட்டு வெளியேறி ஊருக்குள்ளேயே சுற்றி திரிந்து வருகிறது. இந்த யானையானது வனத்தை விட்டு வெளியேறி சமயபுரம் பகுதியில் சாலையை கடந்து அருகே உள்ள தாசம்பாளையம், கிட்டாம்பாளையம், குரும்பனூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நுழைந்து வருகிறது.
அவ்வாறு நுழையும் காட்டு யானை பகல் முழுவதும் அந்த பகுதிகளில் உள்ள விளைநிலங்களில் சுற்றி திரிந்து தனது பசியினை தீர்த்துக் கொள்கிறது.
பின்னர் மாலையில் வழக்கம்போல மீண்டும் சமயபுரம் வழியாக சாலையை கடந்து வனத்திற்குள் சென்று விடுகிறது.
நீண்ட தந்தங்களுடனும், பிரம்மிப்பூட்டும் அதன் பிரமாண்ட உருவமும் கொண்ட பாகுபலி யானையைக் கண்டு சமயபுரம், தாசம்பாளையம், கிட்டாம்பாளையம், குரும்பனூர் பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
இருப்பினும் பாகுபலி யானை இதுவரை யாருக்கு எந்தவித தொந்தரவு கொடுத்ததும் இல்லை. யாரையும் தாக்கியதும் இல்லை. தற்போது யானையானது மூர்க்கத்தனத்துடன் சுற்றி வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று அதிகாலை நேரத்தில் தாசம்பாளையம் பகுதியில் பாகுபலி யானை சுற்றி திரிந்தது.
அப்போது அங்குள்ள பெருமாள் கோவில் அருகே சென்ற யானை, கோவில் மண்டபத்தில் முன்பக்க கதவை உடைத்து கோவிலுக்குள் சென்றது.
பின்னர் அங்கு சிறிது நேரம் சுற்றி விட்டு, மீண்டும் வெளியில் வந்த யானை அங்கிருந்து வனத்தை நோக்கி சென்றது.
இந்த காட்சிகள் கோவிலில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. இதனை கோவில் நிர்வாகத்தினரும், பக்தர்களும் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
தற்போது கோவில் கேட்டை உடைத்து பாகுபலி யானை கோவிலுக்குள் நுழையும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த பாகுபலி யானையை அடர் வனப்பகுதிக்குள் விரட்ட மக்கள் பலமுறை கோரிக்கை விடுத்துள்ளனர்.
தற்போதும் இதே கோரிக்கையை மக்கள் வனத்துறையினருக்கு வைத்துள்ளனர். இதுவரை கண்டுகொள்ளாத வனத்துறையினர் இனிமேலாவது நடவடிக்கை எடுப்பார்கள் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
- அரசு பள்ளிகளுக்கு 9 லட்சம் மீட்டர் சீருடை உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றது.
- காட்டன் கார்ப்பரேசன் இந்தியா மாதிரி காட்டன் கார்ப்பரேசன் தமிழ்நாடு ஆரம்பிக்கும் திட்டம் உள்ளது.
கோவை,
கோவை குறிச்சியில் உள்ள சிட்கோவில், தமிழ்நாடு பஞ்சாலைக்கழக தறி கூடத்தை கைத்தறித்துறை அமைச்சர் காந்தி இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
அரசு பள்ளிகளுக்கு 9 லட்சம் மீட்டர் சீருடை உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றது. 2 வருடங்களாக இந்த துறைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கபட்டு வருகிறது.
தற்போது பழைய விசைத்தறி எந்திரங்களை எடுத்து விட்டு ஏர்ஜெட் எந்திரம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ஏர்ஜெட் எந்திரத்தில் என்னென்ன தேவை இருக்கிறது என ஆய்வு செய்துள்ளோம்.
இப்போது 12 ஏர்ஜெட் எந்திரங்கள் இருக்கிறது. 12 ஏர்ஜெட் எந்திரங்கள் கூடுதலாக அமைக்கப்பட இருக்கிறது.
ஏர்ஜெட் எந்திரம் அமைத்து அதனுடன் சோலார் அமைக்கப்பட உள்ளது. இதன் மூலம் வருங்காலத்தில் இந்த துறை மிகவும் லாபம் இருக்கும் துறையாக மாறும்.
நம்மிடம் இயங்காமல் இருக்கும் 12 மில்லிற்கு மட்டும் 486 ஏக்கர் நிலம் இருக்கிறது. மணல்மேட்டில் உள்ள மில் 20 வருடமாக மூடி இருக்கிறது. 34 ஏக்கர் நிலம் அதற்கு இருக்கின்றது.
5 தேசிய பஞ்சாலை கழக ஆலைகள் மூடி இருக்கிறது. அதை நாம் எடுக்க முடியாது. மொத்தமாக 125 லட்சம் பேல் பஞ்சு தமிழகத்திற்கு தேவை. ஆனால் 15 லட்சம் பேல்கள் மட்டுமே இங்கு உற்பத்தியாகின்றது.
காட்டன் கார்ப்பரேசன் பஞ்சு எல்லாம் வடமாநிலங்களில் உள்ள குடோனில் இருந்து வருகின்றது. மேலும் காட்டன் விலையை நாம் நிர்ணயம் செய்ய முடியாது.
காட்டன் கார்ப்பரேசன் இந்தியா மாதிரி காட்டன் கார்ப்பரேசன் தமிழ்நாடு என ஆரம்பிக்கும் திட்டம் இருக்கிறது. போதிய நிதி இல்லாததால் தொடங்கு வதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. அது அமைந்து விட்டால் பருத்தியை நாம் வாங்கி இருப்பு வைத்து பருத்தி விலையை நம் கட்டுப்பாட்டில் வைக்க முடியும்.
இவ்வாறு அவர் கூறி னார்.ஆய்வின்போது கைத்தறிதுறை அரசு முதன்மை செயலர் தர்மேந்திர பிரதாப் யாதவ், துணி நூல் துறை கமிஷனர் வள்ளலார், கைத்தறி துறை கமிஷனர் விவேகானந்தன், துணை மேயர் வெற்றிச்செல்வன் தி.மு.க மாவட்ட செயலாளர்கள் கார்த்திக், தொண்டாமுத்தூர் ரவி உள்பட பலர் இருந்தனர்.
- வீட்டு உபயோக பொருட்கள் வாங்க மறுத்ததால் தாக்கினார்.
- போலீசார் ெபண்ணை தாக்கியதாக ராமதாசை கைது செய்தனர்.
கோவை,
கோவை பேரூர் அருகே உள்ள காளம்பாளையம் கந்தவேல் நகரை சேர்ந்தவர் சந்திரசேகர். இவரது மனைவி ஜெயந்தி (வயது 48). மில் தொழிலாளி. சம்பவத்தன்று இவர் வீட்டில் தனியாக இருந்தார்.
அப்போது வாலிபர் ஒருவர் வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை செய்வதற்காக வந்தார். அவர் ஜெயந்தியிடம் வந்து வீட்டு உபயோக பொருட்களை வாங்குமாறு வற்புறுத்தினார்.
ஆனால் அவர் வாங்க மறுத்து வாலிபரை வெளியே செல்லுமாறு கூறினார். இதில் ஆத்திரம் அடைந்த அந்த வாலிபர் ஜெயந்தியை தகாத வார்த்தைகளால் பேசி தாக்கி கொலை மிரட்டல் விடுத்து அங்கு இருந்து தப்பிச் சென்றார்.
இது குறித்து அவர் பேரூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பொருட்கள் வாங்க மறுத்த பெண்ணை தாக்கிய கோவைப்புதூர் அருகே உள்ள இடையர்பாளையத்தை சேர்ந்த ராமதாஸ் (20) என்பவரை கைது செய்தனர். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வாலிபர் குடிபோதையில் இளம்பெண்ணின் பெற்றோரிடம் அவரை திருமணம் செய்து வைக்கும்படி கேட்டார்.
- பெற்ேறார் மாயமான தங்களது மகளை கண்டுபிடித்து தரும்படி பெரியகடை வீதி போலீசில் புகார் செய்தனர்
கோவை,
கோவை கெம்பட்டி காலனி அருகே உள்ள மணல்மேட்டை சேர்ந்தவர் 24 வயது இளம்பெண். இவர் பிளஸ்-2 படிக்கும் போது வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இந்த காதல் விவகாரம் இளம் பெண்ணின் வீட்டிற்கு தெரிய வரவே அவர்கள் தங்களது மகளை கண்டித்தனர். அதன் பின்னர் இளம்பெண் வாலிபருடன் பேசுவதையும், பழகுவதையும் தவிர்த்தார்.
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வாலிபருக்கு வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.தனது காதலனுக்கு திருமணம் ஆன பின்னரும் இளம்பெண் அவரது பெற்றோருக்கு தெரியாமல் வாலிபருடன் பேசி வந்தார்.
கடந்த 20 நாட்களுக்கு முன்பு வாலிபர் குடிபோதையில் இளம்பெண்ணின் வீட்டிற்கு வந்தார். அவர் இளம்பெண்ணின் பெற்றோரிடம் அவரை திருமணம் செய்து வைக்கும்படி கேட்டார். ஆனால் அவர்கள் ஏற்கனவே திருமணம் ஆகி குழந்தைகள் உள்ளதால் பெண் கொடுக்க மறுத்து விட்டனர்.
இதன்காரணமாக இளம்பெண் கடந்த சில நாட்களாக மிகுந்த மனவேதனை அடைந்து காணப்பட்டார். சம்பவத்தன்று வீட்டில் இருந்த இளம்பெண் தனது காதலனுடன் ஓட்டம் பிடிததார். அவரை அவரது பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடினர். ஆனால் இளம் பெண்ணை கண்டுபிடிக்க முடியவில்லை.
பின்னர் அவர்கள் இது குறித்து மாயமான தங்களது மகளை கண்டுபிடித்து தரும்படி பெரியகடை வீதி போலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில் திருமணமான காதலனுடன் ஓட்டம் பிடித்த இளம்பெண்ணை தேடி வருகிறார்கள்.
- தமிழகத்தில் உள்ள 5,329 மதுக்கடைகளில் 500 மதுக்கடைகளை மூடுவதற்கு அரசாணை வெளியிடப்பட்டது.
- கோர்ட்டு வழக்கு, உரிமையாளர்கள் எதிர்ப்புக்குள்ள கடைகளை மூடுமாறு அரசாணையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
கோவை,
தமிழகத்தில் உள்ள 5,329 மதுக்கடைகளில் 500 மதுக்கடைகளை மூடுவதற்கு மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை சார்பில் சில தினங்களுக்கு முன்பு அரசாணை வெளியிடப்பட்டது.
மத வழிபாட்டு தலங்களுக்கு அருகே உள்ளவை, மக்கள் எதிர்ப்புக்குள்ளானவை, கோர்ட்டு வழக்கு, உரிமையாளர்கள் எதிர்ப்புக்குள்ள கடைகளை மூடுமாறு அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
அதன்படி தமிழகத்தில் இன்று முதல் 500 மதுக்கடைகள் மூடப்பட்டன. இந்த பட்டியலில், கோவை மாவட்டத்தில் உள்ள தெற்கு மற்றும் வடக்கு ஆகிய 2 டாஸ்மாக் மாவட்டங்களில் தலா 10 கடைகள் வீதம் 20 மதுக்கடைகள் இன்று முதல் மூடப்பட்டது.
அதன்படி கோவை வடக்கு டாஸ்மாக் மாவட்டத்தில் காந்திபுரம் கணபதி கிராமம் 5-வது வீதி(கடை எண்:1528), 2-வது வீதி (எண்:1538), விளாங்குறிச்சி (எண்:1544 மற்றும் 1585), ராம்நகர் சாஸ்திரி ரோடு (எண்:1551), டாடாபாத் 11-வது வீதி (எண்:1570), விஸ்வநாதபுரம் ருக்கம்மாள் காலனி (எண்:1687), துடியலூர், இடிகரைரோடு (எண்:1627), தடாகம் (எண்:2214), காந்திபுரம் பஸ் நிலையம் அருகே உள்ள மதுக்கடை (எண்:1720) உள்ளிட்ட 10 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டது.
கோவை தெற்கு மாவட்டத்தில் சிங்காநல்லூர் கமலா மில் குட்டை ரோட் டில் என்.ஜி.ஆர் வீதியில் உள்ள டாஸ்மாக் கடை (எண்:1655), ஒண்டிப்புதூர் பட்டண்ணன் இட்டேரி தோட்டம் (எண்:1654), சிங்காநல்லூர் இருகூர் ரோடு (எண்:1658) கடையும் மூடப்பட்டது. இதேபோல் புலியகுளம் (எண்:1702), மதுக்கரை ரோடு (எண்:1760), பாலத்துறை (எண்:2234), சோமனூர் செம்மாண்டம்பாளையம் ரோடு குமரன் நகர் (எண்:1975), பொள்ளாச்சி, ஆனைமலை தொரையூர் (எண்:2286), ஜெகநாதா நகர் (எண்:1664), தெலுங்கு பாளையம் (எண்:1680) உள்ளிட்ட டாஸ்மாக் கடைகள் என மாவட்டத்தில் 20 கடைகள் மூடப்பட்டது.
கோவை மாவட்டத்தில் இன்னும் பல பகுதிகளில் மக்களின் எதிர்ப்புக்குள்ளான கடைகள் பல உள்ளன. அவற்றையும் மூட வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கையாக உள்ளது. நீலகிரி மாவட்டத்தில் 3 மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளன.
அதன்படி கூடலூர் அத்திப்பள்ளி, காளம்புழா (எண்:8224), லிங்கிபெள்ளி எட்டின்ஸ் சாலை (எண்:8266), ஊட்டி லோயர் பஜார் (எண்:8268) மதுக்கடைகளும் மூடப்பட்டது.கோவை, நீலகிரியில் மட்டும் மொத்தம் 23 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.






