என் மலர்tooltip icon

    கோயம்புத்தூர்

    • அகில பாரதீய சந்நியாசிகள் சங்கம் ‘நொய்யல் பெருவிழா’ என்ற ஒரு விழாவை ஆகஸ்ட் 25-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை பேரூரில் நடத்த உள்ளது.
    • நொய்யல் நதியின் நீராதாரத்தை அதிகரிக்க விவசாயிகள் மரம் சார்ந்த விவசாய முறைக்கு மாறுவது மிகவும் அவசியம்.

    கொங்கு மண்டலத்தின் முக்கிய நீராதாரமாக விளங்கும் நொய்யல் நதியை பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வு ரத யாத்திரையை ஈஷாவில் உள்ள ஆதியோகியில் இருந்து தவத்திரு பேரூர் ஆதீனம் சாந்திலிங்க மருதாசல அடிகளார் அவர்கள் நேற்று (ஜூன் 23) தொடங்கி வைத்தார்.

    அகில பாரதிய சந்நியாசிகள் சங்கம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட இவ்விழாவில் மதுரை ஆதீனம், துழாவூர் ஆதீனம், பாதரகுடி ஆதீனம், திருப்பாதரிப்புலியூர் ஆதீனம், கொங்கு மண்டல ஜீயர் உட்பட ஏராளமான ஆன்மீக தலைவர்கள் மற்றும் சந்நியாசிகள் கலந்து கொண்டனர்.

    இவ்விழாவில் பேரூர் ஆதீனம் அவர்கள் பேசுகையில், "காவிரி ஆற்றின் கிளை நதியான நொய்யல் நதி தென் கயிலாயம் என அழைக்கப்படும் வெள்ளியங்கிரி மலையின் அடிவாரத்தில் உற்பத்தி ஆகி கரூர் மாவட்டத்தில் காவிரியுடன் கலக்கிறது. 4 மாவட்டங்களுக்கு வளம் சேர்க்கும் நதியாக நொய்யல் திகழ்கின்றது. பல நூறு ஆண்டுகளுக்கு முன்பாகவே இந்த நதியின் குறுக்கே 38 அணைகள் கட்டப்பட்டு, ஏராளமான குளங்களுடன் இந்தப் பகுதியை வளப்படுத்தி வந்தது. ஆனால், தற்போது நொய்யல் ஆற்றின் நிலை மிகவும் மோசமாக உள்ளது. நதி பெரும் மாசடைந்துள்ளது.

    அதை மீட்டெடுக்கும் வகையில், அகில பாரதீய சந்நியாசிகள் சங்கம் 'நொய்யல் பெருவிழா' என்ற ஒரு விழாவை ஆகஸ்ட் 25-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை பேரூரில் நடத்த உள்ளது. அதற்கு முன்னதாக, இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கான ரத யாத்திரை ஈஷாவில் உள்ள ஆதியோகியில் இருந்து துவக்கப்பட்டுள்ளது" என்றார்.

    மதுரை ஆதீனம் அவர்கள் பேசுகையில், "மக்களிடம் தூய்மை குறித்து விழிப்புணர்வு போதிய அளவு இல்லாமல் உள்ளது. அந்த விழிப்புணர்வை அதிகரிக்கவும், நதிகளை புனிதமாக பார்க்கும் கலாச்சாரத்தை மேம்படுத்தவும் இந்த நொய்யல் ரத யாத்திரை உதவும்" என கூறினார்.

    ஈஷாவின் மண் காப்போம் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சுவாமி ஸ்ரீமுகா அவர்கள் பேசுகையில், "நொய்யல் நதியின் நீராதாரத்தை அதிகரிக்க விவசாயிகள் மரம் சார்ந்த விவசாய முறைக்கு மாறுவது மிகவும் அவசியம். நொய்யல் வடிநிலப் பகுதியில் சுமார் 12 லட்சம் விவசாய நிலங்கள் உள்ளன. ஒரு ஏக்கரில் 100 மரங்கள் நட்டாலே 12 கோடி மரங்களை நட்டு விட முடியும். அந்த வகையில், காவேரி கூக்குரல் இயக்கத்தின் மூலம் நொய்யல் வடிநிலப் பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் இந்தாண்டு 12 லட்சம் மரக்கன்றுகளையும் அடுத்த 5 ஆண்டுகளில் 2 கோடி மரக்கன்றுகளை நட திட்டமிட்டுள்ளோம்" என்றார்.

    மேலும், "பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திரு. சண்முக சுந்தரம் அவர்களின் தலைமையில் நொய்யல் நதிக்கு புத்துயிரூட்டும் ஒரு திட்டம் சமீபத்தில் தொடங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் ஈஷாவின் காவேரி கூக்குரல் இயக்கம், வெள்ளியங்கிரி உழவன் உற்பத்தியாளர் சங்கம், சிறுதுளி, கோவை குளங்கள் பாதுகாப்பு இயக்கம் உள்ளிட்ட பல்வேறு தன்னார்வ தொண்டு அமைப்புகள் தமிழக அரசுடன் இணைந்து செயலாற்ற உள்ளன.

    குறிப்பாக, நொய்யல் நதியில் நிரந்தர நீர் ஆதாரத்தை உறுதிப்படுத்துவது, நதியில் கழிவுநீர் கலக்காமல் தூய்மையாக பராமரிப்பது, பிளாஸ்டிக் கழிவுகள் சேராமல் தடுப்பது ஆகியவை இத்திட்டத்தின் பிரதான நோக்கங்கள் ஆகும்.

    மக்களின் பங்களிப்புடன் செயல்படுத்தப்படும் இத்திட்டத்தில் சுமார் 180 கி.மீ தூரம் பயணிக்கும் நொய்யல் நதியில் ஒவ்வொரு குறிப்பிட்ட கி.மீ தூரப் பகுதிகள் வெவ்வேறு தன்னார்வ தொண்டு அமைப்புகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் முதல் 4 கி.மீ ஈஷாவிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது இத்திட்டம் தொடங்குவதற்கு முன்பே காவேரி கூக்குரல் இயக்கம் தொண்டாமுத்தூர் பகுதியில் சுமார் 2 லட்சம் மரக்கன்றுகளை விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கி அவர்களின் தோட்டங்களில் நட வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது" என்றார்.

    இவ்விழாவின் தொடக்கத்தில் நூற்றுக்கணக்கான கிராம மக்களின் வள்ளி கும்மி நிகழ்ச்சியில், ஈஷா சம்ஸ்கிரிதி மாணவர்களின் கோலாட்ட நிகழ்ச்சியும் நடைபெற்றது.

    • பெண் நடத்துநர் ஒருவர், கனிமொழி உள்பட அவருடன் வந்தவர்களிடம் கடுமையாக நடந்து கொண்டார்.
    • காந்திபுரத்திற்கு பஸ்சை இயக்கி வந்த நான் இது தொடர்பாக உரிமையாளரிடம் புகார் அளிக்க சென்றேன்.

    கோவை,

    கோவை வடவள்ளியை சேர்ந்தவர் ஷர்மிளா. இவர் கோவை காந்திபுரத்தில் இருந்து சோமனூர் நோக்கி செல்லும் தனியார் பஸ்சில் டிரைவராக வேலை பார்த்து வந்தார்.

    இவர் தான் முதன் முதல் பெண் பஸ் டிரைவர். இதனால் இவருக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு பா.ஜ.க.வை சேர்ந்த வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

    இன்று காலை தி.மு.க. எம்.பி. கனிமொழி, ஷர்மிளாவை சந்திப்பதற்காக அவர் இயக்கும் பஸ்சில் ஏறினார். பின்னர் அவரை நேரில் சந்தித்து அவருக்கு கைகுலுக்கி வாழ்த்துக்களை தெரிவித்தார்.

    இந்த நிலையில் இன்று பிற்பகலில், தனியார் பஸ் டிரைவரான ஷர்மிளாவை அந்த நிறுவனம் பணி நீக்கம் செய்துள்ளது. கனிமொழி எம்.பி. பஸ்சில் பயணித்த போது, டிக்கெட் எடுப்பதில் ஏற்பட்ட தகராறில் இவர் பணி நீக்கம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இருப்பினும் அவர் பணி நீக்கம் செய்யப்பட்டதற்கான முறையான காரணம் தெரியவில்லை.

    இதுகுறித்து பஸ் டிரைவர் ஷர்மிளா கூறியதாவது:-

    காலையில் கனிமொழி எம்.பி. பஸ்சில் வந்திருந்தார். அப்போது பஸ்சில் பணியாற்றிய பெண் நடத்துநர் ஒருவர், கனிமொழி உள்பட அவருடன் வந்தவர்களிடம் கடுமையாக நடந்து கொண்டார்.

    நீங்கள் யாராக இருந்தாலும் டிக்கெட் எடுங்கள் என கூறியுள்ளார். அவர்களும் டிக்கெட் எடுத்து விட்டனர். இதனை பார்த்த நான் அவர் ஒரு எம்.பி. நீங்கள் மரியாதையாக பேச வேண்டும் என கூறினேன். இதனால் வாக்கு வாதம் ஏற்பட்டது.

    இதையடுத்து காந்திபுரத்திற்கு பஸ்சை இயக்கி வந்த நான் இது தொடர்பாக உரிமையாளரிடம் புகார் அளிக்க சென்றேன்.அப்போது அவரிடம் இது தொடர்பாக தெரிவித்து கொண்டிருந்த போது, உரிமையாளர் நீ உன் விளம்பரத்திற்காக ஆட்களை கூட்டி வருவதாக தெரிவித்தார்.இது தொடர்பாக நான் ஏற்கனவே மேலாளரிடம் கனிமொழி எம்.பி வருவதை தெரிவித்து இருந்தேன். ஆனால் அவர் உரிமையாளரிடம் நான் சொல்லவே இல்லை என கூறி தகராறு செய்தார்.

    இதையடுத்து உரிமையாளர் எனது தந்தையிடம் உனது மகளை அழைத்து செல் என்றார். இதனால் நான் பஸ்சை விட்டு இறங்கி கொள்கிறேன் என தெரிவித்து விட்டு வந்து விட்டேன்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • தேர்தலை முன்னிட்டு மாவட்ட கலெக்டர் பழைய கட்டிட அலுவலகத்தில் வாக்குச்சாவடி அமைக்கப்பட்டு இருந்தது.
    • 28-ந் தேதி புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்ட திட்டக்குழு உறுப்பினர்களின் முதல் கூட்டம் நடைபெறும்

    கோவை,

    கோவை மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் தேர்தல் இன்று கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. இதில் கவுன்சிலர்கள், நகராட்சி, பேரூராட்சி தலைவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு வாக்களித்தனர்.

    இதில் கோவை மாவட்டத்திற்கு ஊராட்சியில் இருந்து 5 உறுப்பினர்கள், பேரூராட்சி நகராட்சி மற்றும் மாநகராட்சியில் இருந்து 13 உறுப்பினர்கள் என மொத்தம் 18 உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். பின்னர் இந்த 18 பேரும் வாக்களித்து ஒருவரை தேர்ந்தெடுப்பர்.

    இன்று நடந்த தேர்தலில் மாவட்ட ஊராட்சி கவுன்சிலர்கள்-17 மாநகராட்சி கவுன்சிலர்கள்-100 மற்றும் 7 நகராட்சிகளில் உள்ள 198 கவுன்சிலர்கள், 33 பேரூராட்சிகளில் உள்ள 513 கவுன்சிலர்கள் என மொத்தம் 825 உறுப்பினர்கள் வாக்களிக்க தகுதியானவர்கள். இவர்களில் மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி நகராட்சியில் தலா ஒன்று, காளியூர் பேரூராட்சியில் ஒன்று என மொத்தம் 3 காலியிடங்கள் உள்ளன. எனவே 822 கவுன்சிலர்கள் ஓட்டு போட போட்ட உள்ளனர்.

    தேர்தலை முன்னிட்டு மாவட்ட கலெக்டர் பழைய கட்டிட அலுவலகத்தில் வாக்குச்சாவடி அமைக்கப்பட்டு இருந்தது.

    தேர்தல் முடிக்கப்பட்டு இன்று மாலை பதிவான வாக்குகள் எண்ணப்படும். 28-ந் தேதி புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்ட திட்டக்குழு உறுப்பினர்களின் முதல் கூட்டம் நடைபெறும் என மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • ஓட்டுநர் ஷர்மிளாவை பணிக்கு வர வேண்டாம் என நான் கூறவில்லை.
    • கனிமொழி பேருந்தில் வந்தபோது எனது கடமையை நான் செய்தேன்.

    கோவை:

    கோவையைச் சேர்ந்தவர் ஷர்மிளா. இவர் வடவள்ளியில் இருந்து ஒண்டிப்புதூர் வழித்தடத்தில் இயக்கப்படும் தனியார் பஸ்சில் டிரைவராக பணியாற்றி வருகிறார். கோவையின் முதல் பெண் டிரைவரான ஷர்மிளாவுக்கு பெண்கள் மத்தியிலும், பொதுமக்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

    இந்த நிலையில் தி.மு.க.வை சேர்ந்த கனிமொழி எம்.பி., ஷர்மிளா இயக்கிய பஸ்சில் பயணம் மேற்கொண்டார். அவர் காந்திபுரத்தில் இருந்து பீளமேடு வரை பஸ்சில் பயணம் செய்தார்.

    பயணத்தின்போது ஷர்மிளாவுக்கு கனிமொழி எம்.பி. தனது வாழ்த்துக்களை தெரிவித்தார். அவருடன் சிறிது நேரம் பஸ்சில் பயணித்தபடியே பேசி சென்றார்.

    இந்நிலையில் பேருந்து ஓட்டுநராக பணியாற்றிய ஷர்மிளாவை பேருந்தின் உரிமையாளர் பணி நீக்கம் செய்துள்ளதாக தகவல் வெளியாகி பரபரப்பு ஏற்பட்டது.

    இதையடுத்து ஓட்டுநர் ஷர்மிளா பணி நீக்கம் தொடர்பாக தனியார் பேருந்து உரிமையாளர் விளக்கம் அளித்துள்ளார். அப்போது அவர் கூறியதாவது:

    ஓட்டுநர் ஷர்மிளாவை பணிக்கு வர வேண்டாம் என நான் கூறவில்லை. ஓட்டுநர் ஷர்மிளாவுக்கு பெண் நடத்துனருடன் தான் பிரச்சினை என்று கூறினார்.

    இதன்பின்னர் விளக்கம் அளித்த பேருந்து நடத்துனர், கனிமொழி பேருந்தில் வந்தபோது எனது கடமையை நான் செய்தேன்.

    இருந்தாலும் ஓட்டுநர் ஷர்மிளாவிடம் பலமுறை மன்னிப்பு கேட்டும் அவர் வீண்பிடிவாதம் செய்கிறார். வேலை செய்ய பிடிக்கவில்லை என பலமுறை கூறினார். எங்களுக்குள் வேறு எந்த பிரச்சனையும் இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சூர்யா கடனை திருப்பி செலுத்த முடியாத விரக்தியில் தூக்கில் தொங்கினார்.
    • பெரியநாயக்கன்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோவை,

    கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள பகத்சிங் நகரை சேர்ந்தவர் சூர்யா (வயது 19). கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவர் கடனுக்கு மோட்டார் சைக்கிள் வாங்கினார். ஆனால் கடனை திருப்பி செலுத்த முடியாமல் மிகவும் சிரமப்பட்டு வந்தார்.

    எனவே சூர்யா தனது தாயிடம் கடன் கட்டுவதற்கு பணம் வேண்டும் என கேட்டார். ஆனால் அவர் பணம் கொடுக்க மறுத்து விட்டார்.இதன் காரணமாக சூர்யா கடந்த சில நாட்களாக மிகுந்த மனவேதனை அடைந்து காணப்பட்டார்.

    சம்பவத்தன்று வீட்டில் இருந்த சூர்யா கடனை திருப்பி செலுத்த முடியாத விரக்தியில் வீட்டில் உள்ள அறையில் தூக்குப்போட்டு தொங்கினார். இதனை பார்த்து வீட்டில் இருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

    உடனடியாக சூர்யாவை தூக்கு கயிற்றில் இருந்து இறக்கி அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் வரும் வழியிலேயே சூர்யா இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து பெரியநாயக்கன்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • மோட்டார் சைக்கிளில் சென்ற நாச்சிமுத்து உள்பட 3 பேரும் படுகாயம் அடைந்தனர்.
    • ஆனைமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    ஆனைமலை,

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள சேத்துமடையை சேர்ந்தவர் நாச்சிமுத்து (வயது 37). சம்பவத்தன்று இவர் தனது மோட்டார் சைக்கிளில் ஆனைமலை- சேத்துமடை ரோட்டில் சென்று கொண்டு இருந்தார்.

    அப்போது வேட்டைக்காரன்புதூரை சேர்ந்த காளியம்மாள் (50), வீரம்மாள் (77) ஆகியோர் ரோட்டை கடக்க முயன்றார். அப்போது அவர்கள் மீது மோட்டார் சைக்கிள் மோதியது.

    இதில் மோட்டார் சைக்கிளில் சென்ற நாச்சிமுத்து உள்பட 3 பேரும் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினர். இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் 3 பேரையும் மீட்டு அம்பராம்பாளையத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு நாச்சிமுத்துவை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். காளியம்மாள், வீரம்மாள் ஆகியோர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இது குறித்து ஆனைமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • சூலூர் பேரூராட்சி நிர்வாகம் மற்றும் பலர் இணைந்து பணிகளை மேற்கொண்டனர்.
    • சென்னையைச் சேர்ந்த அபெக்ஸ் மருந்து நிறுவனம் பணிகளை மேற்கொண்டு உள்ளது.

    சூலூர்,

    சூலூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள நீர்நிலைகளுக்கு நீர்வரும் பாதைகள் புதர் மண்டி கிடந்தது.

    இதனால் மழை காலங்களில் சூலூர் சிறிய மற்றும் பெரிய குளங்களில் இருந்து வெளியேறும் தண்ணீர் செல்லும் பாதைகள் அடைபட்டு இருந்தது.

    இதனையடுத்து சூலூர் பேரூராட்சி மூலம் பொதுப்பணித்துறையினருக்கு புதர் மண்டி கிடக்கும் நீர்வழிப் பாதையை சீர் செய்ய கோரிக்கை வைக்கப்பட்டது.பொதுப்பணித்துறை அனுமதி அளித்தவுடன் சூலூர் பேரூராட்சி நிர்வாகம் சூலூர் பேரூராட்சித் தலை வர் தேவி மன்னவன் தலைமையிலும் நீர்நிலை பாதுகாப்பு அறக்கட்டளை ஆகியோர் இணைந்து திட்ட செயலாக்க பணிகளை மேற்கொண்டனர்.

    இப்பணிகளில் சூலூர் சிறிய குளத்தில் இருந்து செங்கத்துறை வரை செல்லும் நீர் வழி பாதை, ராவத்தூரில் இருந்து பெரிய குளம் வரை வரும் ராஜா வாய்க்கால் பாதை உள்ளிட்டவை சீர்படுத்தும் பணிகள் தொடங்கப்பட்டது. சென்னையைச் சேர்ந்த அபெக்ஸ் மருந்து நிறுவனம் இதற்கான பணிகளை மேற்கொண்டு உள்ளது.

    இப்பணியில் நீர்நிலை பாதுகாப்பு அறக்கட்டளை தலைவர் மற்றும் சூலூர் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் மன்னவன், பேரூராட்சி செயல் அலுவலர் சதீஷ்குமார், கோவிந்தராஜன், பேரூராட்சி துணை தலைவர் சோலை கணேஷ், பேரூராட்சி உறுப்பினர்கள் கருணாநிதி, விஜயகுமார், மற்றும் உறுப்பினர்கள், ஆசிரியர் சுந்தரராஜன், உள்ளிட்டோர் ஈடுபட்டனர்.

    • யானையை கண்காணிக்க பைரவா, வளவன் என்ற 2 மோப்பநாயக்கள் வரவழைக்கப்பட்டன.
    • யானை தொடர்ந்து இடம்பெயர்ந்து கொண்டே இருக்கிறது.

    மேட்டுப்பாளையம்,

    மேட்டுப்பாளையம், ஓடந்துறை, தாசம்பாளையம், சமயபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த 3 ஆண்டுகளாக பாகுபலி என மக்களால் செல்லமாக அழைக்கப்படும் ஒற்றைக் காட்டு யானை சுற்றி திரிகிறது.

    இந்த யானை அதிகாலையில் வனத்தை விட்டு வெளியேறி சமயபுரத்தில் சாலையை கடந்து அருகே உள்ள தாசம்பாளையம், கிட்டாம்பாளையம், குரும்பனூர் பகுதிகளில் நுழைந்து பயிர்களை சேதம் செய்கிறது. பின்னர் மாலையில் மீண்டும் வனத்திற்கு சென்று விடுகிறது.

    இந்த நிலையில் பாகுபலி யானை அவுட்டுக்காயினை கடித்து வாயில் காயத்துடன் சுற்றி திரிவதாக வன ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

    இச்சம்பவம் குறித்து அறிந்த மேட்டுப்பாளையம் வனத்துறையினர் நேற்று காலை முதல் மாலை வரை ஒரு குழுவிற்கு 6 பேர் வீதம் 2 குழுக்களை அமைத்த பாகுபலி யானையை தீவிரமாக கண்காணித்தனர்.

    ஆனால் யானை வனத்துறையினரின் கண்களில் சிக்காமல் தொடர்ந்து போக்கு காட்டி வருகிறது.இதனையடுத்து வனத்துறையினர் தொடர்ந்து அதனை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

    மேலும் வனப்பகுதியை ஒட்டிய பகுதிகளில் சட்டவிரோதகுற்ற செயல்கள் ஏதும் நடைபெறுகிறதா என்பதை கண்காணிக்க கோவை சாடிவயலில் இருந்து பைரவா, வளவன் என்ற 2 மோப்பநாயக்கள் வரவழைக்கப்பட்டன.

    இன்று 2-வது நாளாக வனத்துறையினர் மோப்ப நாய் உதவியுடன் பாகுபலி யானையை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    இதுகுறித்து மேட்டுப்பாளையம் வனத்துறையினர் கூறும்போது,

    வன ஆர்வலர்கள் கூறு வது போல் பாகுபலி யானை அவுட்டு காயினை கடித்திருந்தால் தசைப்பகுதி கிழிந்திருக்கும். அதன் நடமாட்டம் குறைந்திருக்கும். ஆனால் தற்போது யானை சுறுசுறுப்பாக இயங்கி வருகிறது.

    இந்த காயம் இரு யானைகளுக்கு இடையேயான மோதலில் ஏற்பட்ட காயம். யானை தொடர்ந்து இடம்பெயர்ந்து கொண்டே இருப்பதால் அதற்குரிய சிகிச்சை அளிக்க முடியாத நிலை உள்ளது. எனினும் யானையினை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • குளங்களின் கரைப்பகுதியில் மண் அரிப்பை தடுக்கும் வகையில் பனை மரக்கன்றுகள் நடவு செய்யப்பட உள்ளது.
    • தூத்துக்குடியில் இருந்து 400 பனை மரக்கன்றுகள் வாங்கப்பட்டுள்ளன.

    கோவை,

    கோவை மாநகரில் உக்கடம் பெரியகுளம், சிங்காநல்லூர் குளம், செல்வசிந்தாமணி குளம், குறிச்சி குளம், வாலாங்குளம், முத்தண்ணன் குளம் உள்பட 9 குளங்கள் உள்ளன.

    இந்த குளங்கள் அனைத்தும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சீர்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக குளங்களின் கரைப்பகுதியை பலப்படுத்தப்பட்டுள்ளன.

    இதுதவிர அந்த குளங்களின் மக்கள் பொழுது போக்குவதற்காக பொழுது போக்கு கட்டமைப்புகளும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. உக்கடம் வாலாங்குளம், பெரியகுளம் உள்ளிட்டவற்றில் மக்கள் பொழுது போக்கும் வகையில் பல அம்சங்கள் உள்ளன.

    மக்கள் விடுமுறை மற்றும் வார விடுமுறை நாட்களில் அங்கு சென்று பொழுதை கழித்து வருகின்றனர்.

    இதற்கிடையே குளங்களின் கரைப்பகுதியில் மண் அரிப்பை தடுக்கும் வகையில் பனை மரக்கன்றுகள் நடவு செய்ய மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

    இதுதொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:-

    பனை மரங்களின் வேர்கள் மண் அரிப்பை தடுக்கும் தன்மை கொண்டதாகும். இதையடுத்து தூத்துக்குட்டியில் இருந்து 400 பனை மரக்கன்றுகள் வாங்கப்பட்டுள்ளன.

    தற்போது இந்த மரக்கன்றுகளை எந்தெந்த குளங்களின் கரைப்பகுதிகளில் நடவு செய்வது என ஆய்வு செய்கிறோம். பருவ மழை காலம் தொடங்கும் முன்னர் நடவு செய்யப்படும்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • கிராமத்தில் மாதந்தோறும் மக்கள் தொடர்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
    • அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் 2000 இடங்கள் காலியாக உள்ளன.

    மேட்டுப்பாளையம்,

    கோவை மாவட்டம் காரமடை அருகே உள்ள தோலம்பாளையத்தில் மக்கள் தொடர்பு முகாம் நடந்தது. முகாமுக்கு, கலெக்டர் கிராந்தி குமார் பாடி தலைமை தாங்கினார்.

    முகாமில் 309 பேருக்கு பழங்குடியின உரிமை சான்று, 51 பேருக்கு விலையில்லா வீட்டு மனைப்பட்டா, 5 பேருக்கு முதல்-அமைச்சரின் சாலை விபத்து நிவாரண நிதி வழங்கப்பட்டது.

    மேலும் 151 பேருக்கு முதியோர் மற்றும் இதர உதவித்தொகை, 52 பேருக்கு ரேஷன் அட்டை, 50 பேருக்கு பழங்குடி சாதி சான்றிதழ் உள்பட மொத்தம் 673 பயனாளிகளுக்கு ரூ.1.83 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் கிராந்திகுமார் வழங்கினார்.

    விழாவில் கலெக்டர் கிராந்திகுமார் பாடி பேசியதாவது:-

    மாவட்டத்தில் ஏதாவது ஒரு கிராமத்தில் மாதந்தோறும் மக்கள் தொடர்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இதில் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு கோரிக்கை மனுக்களை அளிக்கலாம்.

    பெண்கள் மகளிர் சுய உதவி குழுக்களில் சேர வேண்டும். அதன் மூலம் கடனுதவி பெற்று ஏதாவது ஒரு தொழிலை செய்து, அந்த பொருட்களை விற்பனை செய்வதன் மூலம் வருமானம் ஈட்டலாம்.

    பள்ளி செல்லாத குழந்தைகளை கணக்கெடுத்து அவர்களை மீண்டும் பள்ளியில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பள்ளிப்படிப்பை முடித்து கல்லூரியில் சேராமல் உள்ள மாணவர்கள் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர்ந்து ஏதாவது ஒரு தொழிலை கற்றுக்கொள்ளலாம்.

    கோவை தொழில்நகரம் என்பதால் இங்கு பல்வேறு தொழில்துறைகளில் வேலைவாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன.

    அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் மட்டும் 2000 இடங்கள் காலியாக உள்ளன. அதனை மாணவர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

    தமிழக அரசு நரிக்குறவ இன மக்களை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் வகுப்பில் இருந்து பழங்குடியினர் பட்டியலுக்கு மாற்றி உள்ளது.

    எனவே அவர்களில் 50 பேருக்கு தற்போது ஜாதிச்சான்றிதழ் வழங்கப்பட்டு உள்ளது. அடுத்தபடியாக விரைவில் சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

    இதனை தொடர்ந்து பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. இதில் கோவை தனித்துணை கலெக்டர்(சமூக பாதுகாப்புத் திட்டம்) சுரேஷ்குமார், வேளாண்மை இணை இயக்குனர் முத்துலட்சுமி, மேட்டுப்பாளையம் தாசில்தார் சந்திரன், ஊராட்சி மன்றத்தலைவர்கள் ஜெயா செந்தில் (தோலம்பாளையம்), பொன்னுச்சாமி (காளம்பாளையம்), ஞானசேகரன் (சிக்காரம்பாளையம்), வடக்கு மாவட்ட திமுக துணைச் செயலாளர் எம்.என்.கே.செந்தில், காரமடை தி.மு.க மேற்கு ஒன்றிய செயலாளர், மாவட்ட பிரதிநிதி மேடூர் கணேசன் உள்பட பலர் கலந்து ெகாண்டனர்.

    • மதுபோதையில் இருந்த ரத்தினசாமி 2 பேரையும் தகாத வார்த்தைகளால் பேசினார்.
    • கொலை மிரட்டல் விடுத்த ரத்தினசாமியை கைது செய்து விசாரிக்கின்றனர்.

    கோவை,

    கோவை மாவட்டம் ஆனைமலை அருகே உள்ள ஆத்து பொள்ளாச்சியை சேர்ந்தவர் விக்னேஷ். இவரது மனைவி மவுசிகா (வயது 26). இவரது தாய் சகுந்தலா அ.தி.மு.க. ஊராட்சி மன்ற தலைவராக உள்ளார்.

    மவுசிகா வீட்டின் அருகே பெரியப்பா ரத்தினசாமி (63) என்பவர் வசித்து வருகிறார். அவர் அடிக்கடி மது போதையில் அந்த பகுதியை சேர்ந்த பொது மக்களை தகாத வார்த்தைகளால் பேசி தொல்லை கொடுத்து வந்தார். இது குறித்து அந்த பகுதியை சேர்ந்தவர் மவுசிகாவிடம் புகார் கூறினார்.

    சம்பவத்தன்று மவுசிகா மற்றும் அவரது தாய் சகுந்தலா ஆகியோர் இது குறித்து கேட்பதற்காக சென்றனர். அப்போதும் மதுபோதையில் இருந்த ரத்தினசாமி 2 பேரையும் தகாத வார்த்தைகளால் பேசி தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார்.

    இது குறித்து மவுசிகா ஆனைமலை போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் அவரது மகளை தகாத வார்த்தைகளால் பேசி கொலை மிரட்டல் விடுத்த ரத்தினசாமியை கைது செய்தனர். தொடர்ந்து போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • கடந்த மூன்று மாதங்களாக பேருந்து ஓட்டுநராக பணியாற்றி வந்த ஷர்மிளாவை பேருந்தின் உரிமையாளர் பணி நீக்கம் செய்துள்ளார்.
    • விளம்பரத்திற்காக பயணிகளை ஏற்றுவதாக ஓட்டுநர் ஷர்மிளாவுடன் பேருந்து உரிமையாளர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

    கோவை:

    கோவையைச் சேர்ந்தவர் ஷர்மிளா. இவர் வடவள்ளியில் இருந்து ஒண்டிப்புதூர் வழித்தடத்தில் இயக்கப்படும் தனியார் பேருந்தில் டிரைவராக பணியாற்றி வருகிறார்.

    கோவையின் முதல் பெண் டிரைவரான ஷர்மிளாவுக்கு பெண்கள் மத்தியிலும், பொதுமக்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

    தி.மு.க.வை சேர்ந்த கனிமொழி எம்.பி., ஷர்மிளா இயக்கிய பேருந்தில் பயணம் மேற்கொண்டார். அவர் காந்திபுரத்தில் இருந்து பீளமேடு வரை பேருந்தில் பயணம் செய்தார். பயணத்தின்போது ஷர்மிளாவுக்கு கனிமொழி எம்.பி. தனது வாழ்த்துக்களை தெரிவித்தார். அவருடன் சிறிது நேரம் பேருந்தில் பயணித்தபடியே பேசி சென்றார்.

    இந்நிலையில், கடந்த மூன்று மாதங்களாக பேருந்து ஓட்டுநராக பணியாற்றி வந்த ஷர்மிளாவை பேருந்தின் உரிமையாளர் பணி நீக்கம் செய்துள்ளார்.

    விளம்பரத்திற்காக பயணிகளை ஏற்றுவதாக ஓட்டுநர் ஷர்மிளாவுடன் பேருந்து உரிமையாளர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

    இன்று தி.மு.க. எம்.பி. கனிமொழி பேருந்தில் பயணம் செய்த நிலையில், திடீரென ஷர்மிளாவை பேருந்தின் உரிமையாளர் பணி நீக்கம் செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    மேலும், கடந்த சில நாட்களுக்கு முன்பாக ஷர்மிளா இயக்கிய பேருந்தில் பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் பயணித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×