என் மலர்tooltip icon

    கோயம்புத்தூர்

    • ஈஷா யோகா மையத்தில் உள்ள தியானலிங்கத்தின் 24-வது ஆண்டு பிரதிஷ்டை தினம் அனுசரிக்கப்பட்டது.
    • இதில் பல்வேறு மத மந்திரங்கள், பாடல்கள் இசை வடிவில் அர்ப்பணிக்கப்பட்டன.

    கோவை:

    கோவை ஈஷா யோகா மையத்தில் உள்ள தியானலிங்கத்தில் 24-வது ஆண்டு பிரதிஷ்டை தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. இதில் இந்து, பௌத்த மதங்களின் மந்திர உச்சாடனங்கள் மற்றும் கிறிஸ்தவ, இஸ்லாமிய சூஃபி பாடல்கள் இசை வடிவில் அர்ப்பணிக்கப்பட்டன.

    தியானலிங்க கருவறையில் காலை 6 மணியளவில் ஈஷா பிரம்மச்சாரிகளின் 'அம் நமசிவாய' மந்திர உச்சாடனையுடன் பிரதிஷ்டை தின நிகழ்வு தொடங்கியது.

    இதைத் தொடர்ந்து காலை 8.20 மணி முதல் ஈஷா ஆசிரமவாசிகள் சூஃபி பாடல்களை பாடி அர்ப்பணித்தனர். அதற்கடுத்து, வந்திருந்த சிறப்பு விருந்தினர்கள் தேவாரம் பாடினர். பெளத்த மதங்களின் மந்திர உச்சாடனங்கள் நடைபெற்றன. அதை தொடர்ந்து காலை 10.30 மணியளவில் சிதம்பரம் கோவில் தீக்ஷிதர்கள் ருத்ரம் சமகம் அர்ப்பணித்தனர்.

    இதேபோல வெறும் இசைக்கருவிகளை கொண்டு நடத்தப்படும் நாத ஆராதனா நிகழ்வும், அதனை தொடர்ந்து குருபானி, வச்சனா, கிறிஸ்தவ பாடல்கள், இஸ்லாமிய பாடல்கள், சமஸ்கிருத உச்சாடனங்கள் போன்றவை இசை அர்ப்பணிப்புகளாக செய்யப்பட்டன.

    இவற்றுடன் ஆதிசங்கரர் இயற்றிய 'நிர்வாண ஷடாகம்'எனும் சக்திவாய்ந்த மந்திரங்களின் உச்சாடனம் நடைபெற்றது. மாலை 5.30 மணியளவில் ஈஷாவில் உள்ள பிரம்மசாரிகள் குருபூஜை செய்து வழிபட்டனர்.

    ஒவ்வொரு வருடமும் தியானலிங்க பிரதிஷ்டை தினத்தன்று பல்வேறு மதங்களைச் சேர்ந்த மக்கள் ஈஷாவுக்கு வந்து இந்நிகழ்வுகளில் ஆர்வத்துடன் பங்கேற்றதை போலவே, இந்த வருடமும் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டனர்.

    ஈஷாவில் உள்ள தியானலிங்கமானது சுமார் 3 ஆண்டுகள் தீவிர ஆத்ம சாதனைகளுக்கு பிறகு சத்குரு அவர்களால் 1999-ம் ஆண்டு ஜூன் 24-ம் தேதி பிராண பிரதிஷ்டை செய்யப்பட்டது. 7 சக்கரங்களும் உச்ச நிலையில் சக்தியூட்டப்பட்டுள்ள இந்த லிங்கம் எந்த ஒரு மதத்தையும் சாராமல், ஒரு மனிதர் தனது உயிர்த் தன்மையை உணர்வதற்காக உருவாக்கப்பட்டுள்ளது. பாதரசத்தைக் கொண்டு ரச வைத்திய முறையில் உருவாக்கப்பட்டுள்ள லிங்கங்களில் இதுதான் உலகிலேயே மிகப்பெரிய லிங்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

    • சிவபிரகாஷ் வீட்டுக்குள் அத்து மீறி நுழைந்த பிரகாஷ் அவரிடம் தகராறு செய்தார்.
    • சிவபிரகாஷ் குனியமுத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    கோவை,

    கோவை குனியமுத்தூர் மணிகண்டன் நகரை சேர்ந்தவர் சிவபிரகாஷ் (வயது 48). இவர் பொள்ளாச்சி கூட்டுறவு சங்கத்தில் சார்பதிவாளராக உள்ளார்.

    இவரது பக்கத்து வீட்டை சேர்ந்த எல்.ஐ.சி. ஊழியர் பிரகாஷ் (39) என்பவர், சிவபிரகாசின் தண்ணீர் மோட்டாரை அவருக்கு தெரியாமல் பயன்படுத்தி உள்ளார்.

    இதனையறிந்த சிவபிரகாஷ், பிரகாசை கண்டித்தார். இது தொடர்பாக அவர்களுக்கிடையே மோதல் இருந்து வந்தது. இந்தநிலையில், நேற்று சிவபிரகாஷ் வீட்டுக்குள் அத்து மீறி நுழைந்த பிரகாஷ் அவரிடம் மீண்டும் தகராறு செய்தார்.

    இதில் அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டதில் ஆத்திரமடைந்த பிரகாஷ் தகாத வார்த்தைகளால் பேசி சிவபிரகாஷ் மற்றும் அவரது மகளை தாக்கி கொலைமிரட்டல் விடுத்தார்.

    இது குறித்து சிவபிரகாஷ் குனியமுத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில், போலீசார் மிரட்டல், பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து பிரகாசை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • எலக்ட்ரிக்கல் கடைக்கு வந்த முதியவர் ஒருவர் ரூ.1,01,196க்கு எலக்ட்ரிக்கல் பொருட்கள் வாங்கினார்.
    • நிகில் ஜெயன் காட்டூர் போலீசில் புகார் அளித்தார்.

    கோவை,

    கோவை ராம்நகர் பிள்ளையார் கோவில் வீதியை சேர்ந்தவர் நிகில் ஜெயன்(வயது29). இவர் அதே பகுதியில் எலக்ட்ரிக்கல் கடை வைத்து நடத்தி வருகிறார். சம்பவத்தன்று, நிகில் ஜெயன் கடையில் இருந்தார். அப்போது அங்கு வந்த முதியவர் ஒருவர் ரூ.1,01,196க்கு எலக்ட்ரிக்கல் பொருட்கள் வாங்கினார்.

    பின்னர் கூகுள் பே மூலம் பணம் அனுப்பியதாக மெசேஜை காட்டி விட்டு சென்றார். தொடர்ந்து அதேநபர் மறுநாள் பொருட்கள் வாங்க கடைக்கு வந்தார்.

    அவரிடம் நிகில் ஜெயன் நீங்கள் அனுப்பிய தொகை எனது வங்கி கணக்கில் வரவில்லை என தெரிவித்தார். அதற்கு அவர் சர்வர் பிரச்சினையாக இருக்கும் என்று கூறி மீண்டும் ரூ.20 ஆயிரம் அனுப்பி விட்டு அவரது செல்போன் நம்பரை கொடுத்துவிட்டு சென்றார். ஆனால் அவர் முதலில் அனுப்பிய தொகை சில நாட்கள் ஆகியும் அவரது வங்கி கணக்கிற்கு வரவில்லை.

    இதனையடுத்து நிகில் ஜெயன் அந்த நபரை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு பேசினார். அதன் பின்னர் வாலிபர் ரூ.5 ஆயிரம் மட்டுமே அனுப்பினார். ரூ.1,01,196க்கு பொருட்கள் வாங்கிவிட்டு அவர் ரூ.25 ஆயிரம் மட்டுமே கொடுத்துள்ளார். மீதமுள்ள 76,196 ரூபாயை கொடுக்காமல் மோசடி செய்துவிட்டார்.

    இதனால் அதிர்ச்சியடைந்த நிகில்ஜெயன் அந்த நபரை செல்போனில் தொடர்புகொள்ள முயன்றார். ஆனால் போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இதுகுறித்து நிகில் ஜெயன் காட்டூர் போலீசில் புகார் அளித்தார்.

    புகாரின்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில், கூகுள் பே- மூலம் பணம் அனுப்பியதாக கூறி மோசடியில் ஈடுபட்டவர் காய்கறி கடை உரிமையாளர் உக்கடத்தை சேர்ந்த ஷேக்அப்துல் காதர்(50) என்பது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    • தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் கடந்த சில நாட்களாக ஆரோக்கிய தாஸ் மனவேதனை அடைந்து காணப்பட்டார்.
    • கருமத்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோவை,

    கோவை கருமத்தம்பட்டி அருகே உள்ள சோமனூரை சேர்ந்தவர் ஆரோக்கிய தாஸ்(வயது31).

    இவர் அந்த பகுதியில் எலக்ட்ரிக்கல் கடை வைத்து நடத்தி வந்தார். திருமணமாகவில்லை.

    ஆரோக்கிய தாசுக்கு அவரது தொழிலில் நஷ்டம் ஏற்பட்டது. இதனால் கடந்த சில நாட்களாக அவர் மிகுந்த மனவேதனை அடைந்து காணப்பட்டார்.

    சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்த ஆரோக்கியதாஸ் வாழ்க்கையில் விரக்தி அடைந்து தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்து அவரது குடும்பத்தினர் அதிர்ச்சியைடந்தனர். பின்னர் அவர்கள் இது குறித்து கருமத்தம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    பின்னர் போலீசார் தற்கொலை செய்து கொண்ட ஆரோக்கியதாசின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து கருமத்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • லாரியில் கழிவுகளை கொட்ட வந்தவர் நாமக்கல் மாவட்டம் ரெட்டிபட்டியை சேர்ந்த பாலகிருஷ்ணன் என தெரியவந்தது.
    • லாரியை பறிமுதல் செய்த போலீசார் டிரைவர் உள்பட 5 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை,

    கோவை மதுக்கரை அருகே கருஞ்சானி கவுண்டன்பாளையம் உள்ளது. இங்குள்ள காலி இடத்தில் கேரள மாநிலத்தில் இருந்து லாரியில் பிளாஸ்டிக் கண்ணாடி கழிவுகளை சிலர் கொட்ட முயன்றனர். இதனை பார்த்த அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் லாரியை சிறை பிடித்தனர்.

    பின்னர் லாரியில் கழிவுகளை கொட்ட வந்தவர்களை மடக்கி பிடித்து விசாரித்தனர். அப்போது அவர் டிரைவர் நாமக்கல் மாவட்டம் ரெட்டிபட்டியை சேர்ந்த பாலகிருஷ்ணன் (வயது55).

    லோடுமேன்கள் உக்கடத்தை சேர்ந்த ஹக்கீம் (33), கபீர் (49), உபைது (39) சுந்தராபுரத்தை சேர்ந்த இஸ்மாயில் (34) என்பது தெரியவந்தது.

    இது குறித்து பொதுமக்கள் மதுக்கரை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக சப்-இன்ஸ்பெக்டர் சுந்தர்ராஜன் தலைமையிலான போலீசார் தகவல் வந்த இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    பின்னர் லாரியை பறிமுதல் செய்த போலீசார் டிரைவர் உள்பட 5 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வாலிபருடனான காதலை கைவிடுமாறு மாணவிக்கு பெற்றோர் அறிவுரை கூறினர்.
    • பெற்றோர் மகளை கண்டுபிடித்து தரும்படி முடீஸ் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

    கோவை,

    கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள முடீசை சேர்ந்த 26 வயது வாலிபர்.

    இவருக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு கல்லார் எஸ்டேட்டை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் இது காதலாக மாறியது. 2 பேரும் ஒருவரை ஒருவர் தீவிரமாக காதலித்து வந்தனர்.

    இந்த காதல் விவகாரம் பெண்ணின் வீட்டிற்கு தெரிய வரவே அவர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

    மேலும் வாலிபருடனான காதலை கைவிடுமாறு மாணவிக்கு அறிவுரை கூறினர். இதுகுறித்து அவர் தனது காதலனிடம் தெரி வித்தார். உடனடியாக வாலிபரின் தந்தை மாணவியின் வீட்டிற்கு சென்று தங்களது மகனுக்கு பெண் கொடுக்குமாறு கேட்டனர்.

    ஆனால் அவர்கள் பெண் கொடுக்க மறுத்து விட்டனர். இதனால் தங்களை பெற்றோர் பிரித்து விடுவார்கள் என்ற பயத்தில் இருந்த மாணவி தனது காதலனுடன் ஓட்டம் பிடித்தார்.

    தங்களது மகள் மாயமானதால் அதிர்ச்சியடைந்த மாணவியின் பெற்றோர் அவரை கண்டுபிடித்து தரும்படி முடீஸ் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

    புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து காதலனுடன் ஓட்டம் பிடித்த கல்லூரி மாணவியை தேடி வருகி றார்கள்.

    • கோழிகள் மற்றும் செல்லப் பிராணிகளுக்கு தடுப்பூசி போடுதல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
    • இச்சிறப்பு முகாமானது வருகிற 27-ந் தேதி நடக்கிறது

    கோவை,

    கோவை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கோவை மாவட்டத்தில் 4 சிறப்பு கால்நடை மருத்துவம் மற்றும் விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட உள்ளது.

    அதன்படி கோவை மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத்துறை மற்றும் ஆவின் இச்சிறப்பு முகாமானது வருகிற 27-ந் தேதி அன்று காரமடை ஊராட்சி ஒன்றியம் சின்னகுமாரபாளையம் கிராமத்தில் நடைபெற உள்ளது.

    இந்த முகாமில் கால்நடைகளுக்கு தேவையான சிகிச்சை, தடுப்பூசிகள். குடற்புழு நீக்க மருந்துகள், செயற்கை முறை கருவூட்டல், சினை பரிசோதனை, மலடு நீக்க சிகிச்சை, ஆண்மை நீக்கம், சுண்டு வாத அறுவை சிகிச்சைகள், புற ஒட்டுண்ணிகள் நீக்கம், கோழிகள் மற்றும் செல்லப் பிராணிகளுக்கு தடுப்பூசி போடுதல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

    கால்நடை நோய் புலனாய்வு பிரிவின் மூலம் கால்நடைகளின் சாணம், ரத்தம், சளி, பால் மற்றும் சிறுநீர் ஆகியவை ஆய்வு செய்யப்பட்டு நோய் தாக்குதல் மற்றும் தடுப்பு முறைகள் குறித்து கால்நடை வளர்ப்போருக்கு விளக்கப்பட உள்ளது.

    மேலும், இந்த முகாமில் கண்காட்சி அரங்கு மற்றும் விவசாயிகள் கருத்தரங்கு அமைக்கப்பட உள்ளது. சிறந்த கலப்பின கிடேரி கன்றுகளுக்கும், முன்னோடி கால்நடை வளர்ப்பு விவசாயிகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட உள்ளன.

    தீவன பயிர்கள் வளர்ப்பு, கால்நடைகளில் நோய் தடுப்பு முறைகள், தொழில் நுட்பம் சார்ந்த கால்நடை வளர்ப்பு முறைகள், பாலின பிரிப்பு முறையில் கருவூட்டல், தூய்மையான பால் உற்பத்தி, அரசால் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு போன்ற தகவல்கள் அளிக்கப்படும்.

    எனவே, சின்னகுமாரபாளையம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமத்தில் வசிக்கும் கால்நடை வளர்ப்போர் மற்றும் வேளாண் பெருங்குடி மக்கள் இந்த அரிய சேவையை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

    • கிச்சைக்காக சேர்க்கப்பட்ட 15 மாணவர்களில் 12 பேர் சிகிச்சை முடிந்து வீடுகளுக்கு திரும்பினர்.
    • அரசு பள்ளியில் தாசில்தார், மாவட்ட கல்வி அலுவலர் விசாரணை

    கோவை,

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள கோட்டூரில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.

    6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள இந்த பள்ளியில் 460 மாணவர்கள் படித்து வருகின்றனர்.

    நேற்று பள்ளியில் பணியில் இருந்த சத்துணவு அமைப்பாளர் கோசலை மற்றும் உதவியாளர்கள் அருக்காணி, கிருஷ்ண வேணி ஆகியோர் மதிய உணவாக சாதம், சாம்பார், முட்டை ஆகியவை தயார் செய்தனர். பின்னர் அவர்கள் பள்ளிக்கு வருகை தந்த 260 மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கினர்.

    மதியம் 1.30 மணிக்கு மதிய உணவு சாப்பிட்ட 8-ம் வகுப்பு படிக்கும் சஞ்சய் (வயது13), அபிநவ் (13), 7-ம் வகுப்பு படிக்கும் சபீர் அகமது (12), கவின் பிரசாத் (12), ஜீவா(12), மாடசாமி (12), லோகேஷ் (12), கிஷோர் (12), சுந்தரேசன் (12), முகமது சமீர் (12), ஈஸ்வரன் (12), 6-ம் வகுப்பு படிக்கும் தினேஷ் (12), அஸ்வின் (11),செய்யது அகமது (11), ரித்தீஷ் (11) ஆகிய 15 மாணவர்களுக்கு வயிற்று போக்குடன் வாந்தி ஏற்பட்டது.

    வாந்தி எடுத்தவர்களை பள்ளியின் தலைமை ஆசிரியர் (பொறுப்பு) தர்மராஜ் ஆசிரியர்கள் உதவியுடன் மீட்டு ஆட்ேடாவில் கோட்டூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார்.

    அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். வாந்தி எடுத்த மாணவர்களின் லோகேஷ், சபீர் அகமது, முகமது சபீர் ஆகியோர் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்த சம்பவம் கிடைத்ததும் வால்பாறை டி.எஸ்.பி. கீர்த்திவாசன், ஆனைமலை தாசில்தார் ரேணுகாதேவி, மாவட்ட கல்வி அலுவலர் முருகேஷ் ஆகியோர் பள்ளிக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    பின்னர் மாணவர்களை சந்தித்து உடல் நலன் குறித்து விசாரித்தனர். சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட 15 மாணவர்களில் 12 பேர் சிகிச்சை முடிந்து வீடுகளுக்கு திரும்பினர். 3 மாணவர்கள் மட்டும் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த சம்பவம் தொடர்பாக ஆனைமலை தாசில்தார் ரேணுகாதேவி, மாவட்ட கல்வி அலுவலர் முருகேஷ் ஆகியோர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • மாநில அளவில் அமைக்கப்பட்டுள்ள வல்லுநர் குழு அரசு பள்ளி நூலகங்களுக்கு தேவையான புத்தகங்களை வழங்குகிறது.
    • மாணவர்களின் வாசிப்பு பழக்கத்தை மேம்படுத்த 86 வகையான புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளன.

    கோவை,

    அரசு பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை படிக்கும் ஒவ்வொரு மாணவர்களிடமும் வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்த நூலக இயக்கம் செயல்பட்டு வருகிறது.

    இதன் மூலமாக வகுப்புக்கு ஏற்ப பொருத்தமான புத்தகங்களை சுழற்சி முறையில் வாரந்தோறும் மாணவர்களுக்கு வழங்கப்படுவதை உறுதி செய்யப்படுகிறது.

    கட்டுரை மற்றும் பேச்சுப்போட்டிகள் மூலம் மாணவர்களின் வாசிப்பு திறனை பகிர்ந்து கொள்கின்றனர். மேலும், மாநில அளவில் அமைக்கப்பட்டுள்ள வல்லுநர் குழு அரசு பள்ளி நூலகங்களுக்கு தேவையான புத்தகங்களை வழங்குகிறது.

    மேலும், அரசு ெதாடக்கப் பள்ளி, நடுநிலைப்பள்ளி, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் செயல்படும் நூலகங்களுக்கு புத்தகங்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன.

    இந்நிலையில், தற்போது பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் தொடக்கப்பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் வாசிப்பு பழக்கத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    அதன்படி, பள்ளி வகுப்புகளில் மாணவர்களுக்கு பாடங்கள் வழங்கப்பட்டு அவர்களை ஆசிரியர்கள் வாசிக்க வைத்து வருகின்றனர். தமிழ் மட்டுமின்றி ஆங்கில வாசிப்பு திறனை அதிகரிக்கும் வகையில், ஆங்கில பாடங்கள் மற்றும் கதைகள் மாணவர்களுக்கு அளிக்கப்பட்டு வகுப்பறைகளில் வாசிக்க வைக்கின்றனர்.

    சத்தம் போட்டு மாணவர்கள் பாடங்களை வாசிப்பதால், அவர்களின் உச்சரிப்பு திறன் மட்டுமின்றி வாசிப்பு பழக்கமும் மேம்படுவதாக ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.

    இது குறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுமதி கூறுகையில், குழந்தைகள் சத்தமின்றி படிக்கும் போது அவர்கள் செய்யும் தவறுகள் தெரிவது இல்லை.

    வகுப்பறைகளில் சத்தம் போட்டு படிக்கும்போது வார்த்தை உச்சரிப்பு, எழுத் துப்பிழைகள் போன்றவை கண்டறிய முடிகிறது. அந்த தவறை மாணவர்களிடம் சுட்டிகாட்ட முடிகிறது.

    இதனால், அவர்களின் வாசிப்பு பழக்கமும் மேம்படுகிறது. தவிர, மாணவர்களின் வாசிப்பு பழக்கத்தை மேம்படுத்த 86 வகையான புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளன. நூலக பிரிவு நேரங்களில் இந்த புத்தகங்களை வாசிக்கின்றனர். இது தொடர்பாக ஆசிரியர்களுக்கும் பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன என்றார்.

    • வரத்து அதிகமாக இருந்ததால், வியாபாரிகள் அதனை ரூ.35 முதல் ரூ.40 வரை என குறைந்த விலைக்கு விற்பனை செய்தனர்.
    • கடந்த சில வாரமாக பொள்ளாச்சி மார்க்கெட்டுக்கு பச்சை மிளகாய் வரத்து மிகவும் குறைந்துள்ளது.

    பொள்ளாச்சி:

    பொள்ளாச்சி மார்க்கெட்டுக்கு பச்சை மிளகாய் வரத்து குறைந்துள்ளதால், அதன் விலை அதிகரித்துள்ளது. தற்போது ஒரு கிலோ ரூ.100க்கு விற்பனை செய்யப்படுவதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    பொள்ளாச்சி மார்க்கெட்டுக்கு உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து காய்கறிகள் கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. தக்காளி, கத்தரி, வெண்டை, பூசணி, பச்சை மிளகாய் உள்ளிட்ட காய்கறிகள் சுற்று வட்டார கிராமங்களில் இருந்தே அதிகளவில் வருகிறது.

    இதில் பச்சைமிளகாய், சுற்றுவட்டார பகுதி மட்டுமின்றி திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், பழனி, உடுமலை பகுதிகளில் இருந்தும் விற்பனைக்காக அதிகளவு கொண்டு வரப்படுகின்றன.

    இந்த ஆண்டு துவக்கத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தாலும், பல கிராமங்களில் பச்சை மிளகாய் சாகுபடி ஓரளவு இருந்தது. இதனால் கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் என சில மாதமாக அறுவடை செய்யப்பட்ட பச்சை மிளகாய் வரத்து மார்க்கெட்டுக்கு அதிகமாக கொண்டு வரப்பட்டது.

    வரத்து அதிகமாக இருந்ததால், வியாபாரிகள் அதனை ரூ.35 முதல் ரூ.40 வரை என குறைந்த விலைக்கு விற்பனை செய்தனர்.

    இந்நிலையில் சுற்று வட்டார கிராமங்களில் புதிதாக சாகுபடியால் வெளியிடங்களிலும் பச்சை மிளகாய் சாகுபடி சற்று குறைந்ததாக கூறப்படுகிறது. இதனால், கடந்த சில வாரமாக பொள்ளாச்சி மார்க்கெட்டுக்கு பச்சை மிளகாய் வரத்து மிகவும் குறைந்துள்ளது.

    பச்சை மிளகாய் வரத்து குறைந்ததால் அதன் விலையும் உயர்ந்துள்ளது. நேற்று ஒரு கிலோ பச்சை மிளகாய் ரூ.100 முதல் ரூ.110 வரை என கூடுதல் விலைக்கு போனது. வரும் நாட்களில் பச்சை மிளகாய் வரத்து இன்னும் குறைந்தால், அதன் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.

    • ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுபவர்களும், பின்னால் அமர்ந்து செல்லும் நபர்களும் உயிரிழக்கும் சதவீதம் அதிகமாக உள்ளது.
    • போக்குவரத்து பூங்காவில் ஹெல்மெட் அணிவதன் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    கோவை:

    கோவை மாநகரில் இருசக்கர வாகனங்களில் பின்னால் அமர்ந்து செல்பவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் எனவும், வருகிற 26-ந் தேதி முதல் வாகன தணிக்கை மேற் கொள்ளப்பட்டு விதிமீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகர காவல்துறை தெரிவித்துள்ளது.

    இது தொடர்பாக கோவை மாநகர காவல் துறை வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கோவை மாநகரில் வாகனங்களில் அதிக ஒலி எழுப்பும் காற்று ஒலிப்பான்களை பயன்படுத்தும் வாகனங்கள் மீது மோட்டார் வாகன சட்ட விதிகளின்படி கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.வருகிற 26-ந் தேதி முதல் காவல்துறை, போக்குவரத்து துறை மற்றும் மாசுகட்டுப்பாட்டுத் துறை ஆகிய துறைகளின் அலுவலர்களை ஒருங்கிணைத்து பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு கோவை மாநகரில் பல்வேறு பகுதிகளில் அதிகப்படியாக ஒலி எழுப்பக்கூடிய ஏர்ஹாரன்கள் வாகனங்களில் பயன்படுத்தப்படுகிறதா? என்பது குறித்து சோதனை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

    இருசக்கர வாகன விபத்துக்களில் உயிரிழப்பவர்கள் குறித்து விரிவாக ஆராய்ந்ததில் ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுபவர்களும், பின்னால் அமர்ந்து செல்லும் நபர்களும் உயிரிழக்கும் சதவீதம் அதிகமாக உள்ளது.

    எனவே 100 சதவீதம் விபத்துக்களை தடுக்கும் வகையில், இருசக்கர வாகனங்களில் பின்னால் அமர்ந்து செல்பவர்களும் ஹெல்மெட் கட்டாயம் அணிய வேண்டும் என்ற நடைமுறையை 100 சதவீதம் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

    வருகிற 26-ந் தேதி முதல் நகரில் பல்வேறு இடங்களில் வாகன தணிக்கை மேற்கொள்ளப்பட்டு ஹெல்மெட் அணியாமல் வாகனத்தில் பின்னால் அமர்ந்து வரும் நபர்கள் மீது மோட்டார் வாகன சட்ட விதிகளின் படி கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

    அவர்களுக்கு ஒருவார காலததுக்கு போக்குவரத்து பூங்காவில் ஹெல்மெட் அணிவதன் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • யானை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு வேகமாக நகர்ந்து கொண்டே இருக்கிறது.
    • சரியான இடத்திற்கு யானை வரும்போது யானை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்படும்.

    மேட்டுப்பாளையம்:

    கோவை மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக பாகுபலி என்று அழைக்கப்படும் பெரிய உருவத்துடன் கூடிய ஒற்றை ஆண் யானை நடமாட்டம் அதிகமாக உள்ளது.

    இந்த யானை அவ்வப்போது வனத்தை விட்டு வெளியேறி, ஊருக்குள் நுழைவதும், அங்குள்ள விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்துவதையும் வாடிக்கையாக இருந்து வருகிறது.

    இந்த நிலையில் சமயபுரம் அடுத்துள்ள வனப்பகுதியில் பாகுபலி யானை வாயில் காயத்துடன் சுற்றுவதை வனப்பணியாளர்கள் பார்த்தனர்.

    இதுகுறித்து உடனடியாக வனத்துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. பின்னர் யானைக்கு காயம் இருந்தால், அதனை பிடித்து சிகிச்சை அளிக்க முடிவு செய்யப்பட்டது.

    யானையை கண்காணிப்பதற்காக வனத்துறை சார்பில் 2 குழுக்களும் அமைக்கப்பட்டது. இதுதவிர சாடிவயலில் இருந்து பைரவா, வளவன் என்ற 2 மோப்பநாய்களும் வரவழைக்கப்பட்டன.

    வனத்துறையினர் கடந்த 2 நாட்களாக மோப்பநாய் உதவியுடன், பாகுபலி யானையை கண்காணித்து வருகின்றனர். ஆனால் யானை வனத்துறையினரின் கண்ணில் சிக்காமல் சென்று கொண்டிருக்கிறது.

    இந்த நிலையில் பாகுபலி யானையின் வாயில் உள்ள காயத்தின் தன்மை அறிவதற்காவும், அதற்கு உரிய சிகிச்சை அளிப்பதற்காகவும் அதனை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க வனத்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.

    மேலும் யானையை பிடிப்பதற்கு உதவியாக முதுமலை தெப்பக்காடு முகாமில் இருந்து வசீம், விஜய் ஆகிய 2 கும்கி யானைகள் வரழைக்கப்பட்டன.

    அந்த யானைகள் உதவியுடன் பாகுபலி யானையை தேடும் பணியை வனத்துறையினர் மேற்கொண்டு வருகிறார்கள்.

    யானை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு வேகமாக நகர்ந்து கொண்டே இருக்கிறது. இதனால் யானை வரும் இடங்கள், அது வழக்கமாக செல்லும் இடங்களில் கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளனர்.

    பாகுபலி யானை தற்போது வேகமாக நகர்கிறது. எனவே எந்தெந்த இடங்களுக்கு எல்லாம் அந்த யானை வர வாய்ப்புள்ளதோ அந்த இடங்களில் மயக்க ஊசி செலுத்த ஏற்ற இடத்தை ஆய்வு செய்து வருகிறோம்.

    சரியான இடத்திற்கு யானை வரும்போது யானை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்படும். இதற்காக மருத்துவக்குழுவினரும் தயார் நிலையில் உள்ளனர்.

    இந்த பணிக்கு உதவுவதற்காக 2 கும்கி யானைகளும் வரவழைக்கப்பட்டுள்ளன. அதன் மூலம் யானையை கண்காணித்து வருகிறோம்.

    யானை சரியாக உணவு உட்கொள்கிறதா? தண்ணீர் அருந்துகிறதா? என்பதையும் வீடியோ பதிவு மூலம் உறுதி செய்ய வேண்டியுள்ளது. அப்படி இருந்தால் உடனே சிகிச்சை அளிக்க வேண்டிய தேவை இருக்காது. அது இல்லாதபட்சத்தில் உடனடி சிகிச்சை தேவைப்படும்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    ×