என் மலர்tooltip icon

    கோயம்புத்தூர்

    • ஆவின் பெட்டியின் கதவுகள் கீழே விழும் அளவுக்கு தொங்கிக் கொண்டிருந்தது.
    • பழுது இல்லாத 2 புதிய பெட்டிகள் மட்டும் அங்கு உள்ளது.

    குனியமுத்தூர்,

    கோவை சுந்தராபுரம் மதுக்கரை ரோடு அருகே அஷ்ட லட்சுமி நகரில் தனியார் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளி குழந்தைகள் கல்வி பயின்று வருகின்றனர்.

    இந்நிலையில் கடந்த 4 வருடங்களுக்கு மேலாக இப்பள்ளியின் எதிரே உள்ள காலி இடத்தில் பழைய ஆவின் பெட்டிகள் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தது.

    அவை அனைத்தும் மழையிலும், வெயிலிலும் காய்ந்து மிகவும் துருப்பிடித்த நிலையில் காணப்பட்டது. ஆவின் பெட்டியின் கதவுகள் கீழே விழும் அளவுக்கு தொங்கிக் கொண்டிருந்தது.

    குழந்தைகள் விளையாட்டாக அந்த கதவை இழுத்தால் கூட அவை அனைத்தும் சரிந்து விழும் நிலை இருந்து வந்தது. இதனால் பள்ளி குழந்தைகளுக்கு ஏதும் ஆபத்து ஏற்படுமோ என்று பெற்றோர்கள் அச்சமடைந்த நிலையில் இருந்து வந்தனர்.

    இதுதொடர்பாக மாலைமலர் நாளிதழில் தனியார் பள்ளி முன்பாக வைக்கப்பட்டிருக்கும் ஆவின் பெட்டிகள் அகற்றப்படுமா? என்று செய்தி வெளியிடப்பட்டது.

    அதன் பின்னர் தற்போது அங்கிருந்த பழைய ஆவின் பெட்டிகள் அகற்றப்பட்டுள்ளது. பழுது இல்லாத இரண்டு புதிய பெட்டிகள் மட்டும் அங்கு உள்ளது. இதனால் பள்ளி குழந்தைகளுக்கு எந்த வித பயமும் இல்லாத நிலை தற்போது நிலவி வருகிறது.

    இதன் காரணமாக அந்த பகுதி மக்களும், பெற்றோர்களும் மாலை மலர் நாளிதழுக்கு பாராட்டு தெரிவித்தனர். 

    • பாதிக்கப்பட்ட இளம்பெண் போலீசில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை
    • 50-க்கும் மேற்பட்டோர் பணம் வாங்கி ஏமாற்றிய பெண்கள் வீடு முன்பு திரண்டனர்.

    வடவள்ளி,

    கோவை சிறுவாணி சாலை ஆலாந்துறையில் இளம்பெண் ஒருவர் கண்கண்ணாடி கடை நடத்தி வருகிறார். இவரது கணவர் ஐ.டி. நிறுவனத்தில் வேலை தேடி வந்தார்.

    அந்த சமயம் மத்தவ ராயபுரத்தைச் சேர்ந்த தாய் மற்றும் அவரது 2 மகள்கள் இளம்பெண்ணுக்கு அறிமுகம் ஆனார்கள். 2 மகள்களில் ஒருவர் தான் ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றுவதாகவும், உங்கள் கணவருக்கு வேலை வாங்கி தருகிறேன், அதற்கு பணம் செலவாகும் என கூறி இருக்கிறார்.

    அதை உண்மை என நம்பிய இளம்பெண் 3 தவணையாக ரூ.3 லட்சம் கொடுத்துள்ளார். ஆனால் அவர்கள் சொன்னபடி இளம்பெண்ணின் கணவருக்கு வேலை வாங்கி கொடுக்கவில்லை. பணத்தை திருப்பி கேட்ட போதும் திருப்பிக் கொடுக்க வில்லை.

    இதனால் பாதிக்கப்பட்ட இளம்பெண் ஆலாந்துறை போலீசில் புகார் செய்தார். போலீசார் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் அந்த பெண், தனது உறவினர்களிடமும், அக்கம்பக்கத்தினரிடமும் தான் ஏமாற்றப்பட்ட விவரத்தை தெரிவித்தார்.

    இந்தநிலையில் இன்று இளம்பெண்ணின் தரப்பைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் பணம் வாங்கி ஏமாற்றிய பெண்கள் வீடு முன்பு திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

    தகவல் அறிந்த ஆலாந்துறை போலீசார் இருதரப்பினரையும் போலீஸ் நிலையத்துக்கு வருமாறு அழைத்தனர். அங்கு 2 தரப்பினரிடமும் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார்கள். பணம் வாங்கிய தாய்- 2 மகள்கள் பணத்தை திருப்பிக் கொடுக்காத பட்சத்தில் இளம்பெண் அளித்த புகாரின் பேரில் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.  

    • மாநகராட்சி கமிஷனரான பிரதாப் மேம்பால தூண்களில் சுவரொட்டிகள் ஒட்டக்கூடாது என உத்தரவிட்டார்.
    • கோவை காந்திபுரம் பஸ் நிலையம் அருகே சுவரொவியங்கள் வரைய தொடங்கினர்.

    கோவை,

    தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என அழைக்கப்படும் கோவை மாநகரில் உள்ள மேம்பாலங்களில் கடந்த சில ஆண்டுகளாக அரசியல் கட்சியினர், அமைப்பினர் உள்பட பலரும் சுவரொட்டிகளை ஒட்டினர்.

    இதனால் அழகான அந்த சுவர்களின் முகமே முற்றிலும் மாறி போய் காணப்பட்டது. சில பாலங்களில் மக்கள் முகம் சுளிக்கும் வகையிலும் சுவரொட்டிகள் இடம் பெற்று இருந்தன.

    சுவரொட்டிகளை தாங்கும் நமக்கெல்லாம் எப்போது தான் விடிவு காலம் வருமோ என மேம்பாலங்களே கண்ணீர் விடுவதுபோல் அந்த தூண்களின் நிலைமை இருந்தது.

    அந்தளவுக்கு கோவையில் உள்ள காந்திபுரம் மேம்பாலம், திருச்சி மேம்பாலம், அவினாசி ரோடு, பொள்ளாச்சி ரோடு, ஜி.பி.சிக்னல், 100 அடி ரோடு உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் உள்ள மேம்பால தூண்களில் சுவரொட்டிகளாகவே காணப்பட்டது.

    இந்த நிலையில் கோவை மாநகராட்சி கமிஷனராக பிரதாப் பொறுப்பேற்றார். அவர் பொறுப்பேற்றதும் மாநகரில் உள்ள மேம்பால தூண்களில் சுவரொட்டிகள் ஒட்டக்கூடாது என உத்தரவிட்டார். அதனை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்தார்.

    சுவரொட்டிகளுக்கு பதிலாக மக்களுக்கு பிடித்தமான அவர்களது பழைய நினைவுகள் மற்றும் மக்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றிருக்கும் பல பொருட்கள், விலங்குகளின் உருவங்களையும் ஓவியமாக வரைந்தால் சுவர்களும் சுத்தமாக இருக்கும். மக்களும் அதனை கண்டு வியந்து செல்வார்கள் என்ற எண்ணம் தோன்றவே அதனை செயல்படுவத்தற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    அதன்படி கோவையில் பிரபல ஓவிய ஆசிரியரான விக்னேஷ் ஜெயக்குமார் என்பவரை மாநகராட்சி கமிஷனர் பிரதாப் நேரில் அழைத்து பேசினார்.

    அவரிடம் தனக்கு தோன்றியவற்றை கூறவே, விக்னேஷ் ஜெயகுமாரும், நமது ஊரை மாற்றுவதற்கான வாய்ப்பு கிடைக்கும் போது உடனே ஒப்புக்கொண்டு பணியை தொடங்கினார்.

    விக்னேஷ் ஜெயக்குமாரும், அவரது குழுவினரும் இணைந்து கோவையில் உள்ள அனைத்து மேம்பால தூண்களிலும் வண்ண, வண்ண ஓவியங்களை வரைந்து வருகின்றனர். அதில் முதல் கட்டமாக கோவை காந்திபுரம் பஸ் நிலையம் அருகே உள்ள மேம்பாலத்தில் சுவரொட்டிகள் அனைத்தையும் அகற்றி விட்டு, அந்த இடத்தில் சுவரொவியங்கள் வரைய தொடங்கினர்.

    அந்த பாலத்தில் உள்ள ஒவ்வொரு தூணிலும் பல வண்ண ஓவியங்களை வரைந்துள்ளனர். குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் எல்லோருக்கும் பயணிக்க விரும்பும் ஊட்டி மலைரெயில் வரையப்பட்டுள்ளது.

    அந்த மலைரெயில் ஓவியத்தை பார்க்கும் போது அதனை ஓவியம் என்றே கூற முடியாத அளவிற்கு அப்படியே தத்ரூபமாக நம் கண்முன் கொண்டு வந்து நிறுத்தி, நாம் நேரில் மலை ரெயிலை பார்ப்பது போலவும், அந்த ரெயில் நம்மை நோக்கி வருவது போலவும் இருக்கிறது.

    இதுதவிர 5 சி சிட்கோ பஸ்சையும் தத்ரூபமாக வரைந்துள்ளனர். தமிழ் பாரம்பரியத்தின் விருந்தோம்பலை விளக்கும் வகையில், பெண் ஒருவர், ஆணுக்கு பல்வேறு வகையான உணவுகளை விருந்தாக வைப்பதையும் அப்படியே வண்ண ஓவியமாக வரைந்துள்ளனர்.

    மேலும் கோவை வேளாண்மை பல்கலைக்கழகம், யானைகள் காப்பகம் போன்றவற்றை இந்த தூண்களில் வரைந்துள்ளனர்.

    இந்த ஓவியங்கள் வரையப்பட்ட பின்னர் அந்த சுவர்கள் வண்ணமயமாக ஜொலித்து கொண்டிருக்கிறது. அந்த வழியாக வாகனங்களில் செல்பவர்களுக்கும், நடந்து செல்பவர்களுக்கும் இது ஒருவித புது அனுபவத்தை தருகிறது.

    பொதுமக்கள் அனைவரும் அதனை நின்று பார்த்து ரசித்தபடியும், அதன் முன்பு நின்று செல்பி புகைப்படங்களும் எடுத்து மகிழ்ந்தனர். முன்பு சுவரொட்டி ஒட்டப்பட்டு அசிங்கமாக காட்சியளித்தது, இன்று ஓவியமாக ஜொலிப்பதை பார்த்ததும் அனைவரும் மகிழ்ச்சி அடைகின்றனர்.

    இதுபோன்று அனைத்து பகுதி பாலங்களிலும் ஓவியங்களை வரைந்தால் கோவை நகர் முற்றிலும் மாற்றம் அடையும் என தெரிவித்தனர்.

    இதுகுறித்து மேம்பா லங்களில் ஓவியம் வரைந்து வரும் ஓவியர் விக்னேஷ் ஜெயக்குமார் கூறியதாவது:-

    கோவை மாநகரில் உள்ள மேம்பாலங்கள் அனைத்தும் சுவரொட்டியாக காட்சியளித்தது. இதனை பார்த்த மாநகராட்சி கமிஷனர், என்னை அழைத்து, அந்த தூண்களில் ஓவியங்கள் வரைய முடியுமா என கேட்டார்.

    நானும் ஒப்புக் கொண்டேன். முதலில் காந்திபுரம் மேம்பாலத்தில் பல வண்ண ஓவியங்களை வரைந்துள்ளோம். இந்த பணியில் நான் மற்றும் தன்னார்வலர்கள் என 25 பேர் ஈடுபட்டு வருகிறோம். இதனை எங்கள் ஊரை மாற்றுவதற்கு எங்களுக்கு கிடைத்த வாய்ப்பாக கருதி செய்து வருகிறேன்.

    இந்த பாலத்தை போன்று, அடுத்த கட்டமாக ஜி.பி.சிக்னல், 100 அடி ரோடு, அவினாசி, திருச்சி உள்ளிட்ட மேம்பாலங்களிலும் ஓவியங்கள் வரைய உள்ளோம்.

    தற்போது மலைரெயில், 5 சி பஸ் போன்றவற்றை வரைந்த நாங்கள் அடுத்த கட்டமாக 90 காலகட்டத்தில் கிராமப்புறங்களில் மிகவும் பிரபலமாக இருந்த பல்லாங்குழி, நொண்டி, கண்ணாமூச்சி, கில்லி மற்றும் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான சிலம்பம், கபடி, உள்ளிட்ட அனைத்து விளையாட்டுகளையும், மேம்பால தூண்களில் ஓவியமாக வரைய உள்ளோம்.

    இந்த மேம்பாலங்களில் ஓவியங்கள் வரைவதிலும் பிரச்சினைகள் உள்ளது. படம் வரைந்த பின்னரும் பிரச்சினை இருக்க தான் செய்கின்றன.

    ஓவியம் வரைந்ததை பலர் ரசித்தாலும், சிலர் அநாகரீகமாக நடந்து கொள்கின்றனர். அதனை யும் தவிர்க்க வேண்டும். அப்படி செய்தால் நன்றாக இருக்கும்.

    நாங்கள் ஓவியம் வரைவதோடு மட்டுமல்லாமல் அடுத்த கட்டமாக, மேம்பாலங்களில் உள்ள இடைவெளிகளில் ஒரு தோட்டம் ஆரம்பிக்கவும் முடிவு செய்துள்ளோம். அந்த தோட்டங்களில் பல்வேறு வகையான செடி, கொடிகள் வளர்த்து, அதனை அழகாக மாற்றும் திட்டமும் எங்களிடம் உள்ளது. எங்களுக்கு எல்லா வகையிலும் மாநகராட்சி கமிஷனர் மற்றும் தனியார் பள்ளி உரிமையாளர் ஒருவர் உறுதுணையாக உள்ளனர். அவர்களுக்கு நன்றி.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    இதற்கிடையே கோவை காந்திபுரம் பகுதியில் மேம்பால தூண்களில் வண்ண ஓவியங்கள் வரையும் பணியில் ஈடுபட்ட ஓவியர்களை மாநகராட்சி கமிஷனர் பிரதாப் இன்று நேரில் அழைத்து பாராட்டினார். அத்துடன் அவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களையும் வழங்கி சிறப்பித்தார்.

    • 4-வது நாளாக யானையை தேடும் பணி நடக்கிறது.
    • யானை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.

    மேட்டுப்பாளையம்,

    கோவை மேட்டுப்பா ளையம் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக ஒற்றை யானை சுற்றி திரிகிறது. இதனை பொதுமக்கள் செல்லமாக பாகுபலி என பெயரிட்டு அழைத்து வருகின்றனர்.

    இந்த யானை அடிக்கடி ஊருக்குள் நுழைந்து பயிர்களை சேதப்படுத்தி வந்தது. கடந்த சில தினங்க ளுக்கு முன்பு பாகுபலி யானை வாயில் காயத்துடன் சுற்றியதை வனப்பணி யாளர்கள் பார்த்தனர்.

    இதபற்றிய தகவல் அறிந்ததும் யானையின் காயத்துக்கு சிகிச்சை அளிப்பதற்காக வனத்துறை யினர், அந்த யானையை பிடிக்க முடிவு செய்தனர்.

    வனத்துறை 2 குழுக்கள் அமைத்தும், மோப்பநாய்கள் உதவியுடன் யானையை கண்காணித்து வந்தனர்.

    இந்த நிலையில் பாகுபலி யானையின் வாயில் உள்ள காயத்தின் தன்மையை அறிவதற்காவும், அதற்கு உரிய சிகிச்சை அளிப்பதற்கா கவும் அதனை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க வனத்து றையினர் திட்டமிட்டனர்.

    இதற்கு உதவியாக முதுமலை தெப்பக்காடு முகாமில் இருந்து வசீம், விஜய் ஆகிய 2 கும்கி யா னைகள் வரழைக்கப்பட்டன.

    அந்த யானைகள் உதவியுடன் பாகுபலி யானையை தேடும் பணியை வனத்துறையினர் மேற்கொ ண்டு வருகிறார்கள்.

    இன்று 4-வது நாளாக யானையை தொடர்ந்து தேடும் பணியில் வனத்து றையினர் ஈடுபட்டனர்.

    தற்போது யானையானது நெல்லித்துறை வனப்பகுதிக்குட்பட்ட குமரிக்காடு பகுதியில் முகாமிட்டு உள்ளது. இதனை அறிந்ததும் வனத்துறையினரும், கால்நடை மருத்துவ குழுவினரும் அங்கு விரைந்துள்ளனர்.

    அங்கு யானையின் நிலைமையை கண்காணித்து அதனை மயக்க ஊசி செலுத்தி பிடிப்பதற்கான பணியில் ஈடுபட்டுள்ளனர். யானை சரியான இடத்திற்கு வந்தவுடன் யானை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.

    • காடாம்பாடி ஊராட்சி பகுதிகளில் போலீசார் ரோந்து பணிக அதிகப்படுத்தப்படும்.
    • சட்ட விரோத செயல்கள் பற்றி காவல்துறையிடம் தயக்கமின்றி தெரிவிக்க வேண்டும்.

    சூலூர்,

    காடாம்பாடி ஊராட்சி யில் கருமத்தம்பட்டி உட்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளர் தையல்நாயகி தலைமையில் பொதுமக்களிடம் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு காடா ம்பாடி ஊராட்சி தலைவர் இந்திராணி தங்கராஜ் தலைமை தாங்கினார். சூலூர் இன்ஸ்பெக்டர் மா தையன், சப் இன்ஸ்பெக்டர் மாரிமுத்து உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் டி.எஸ்.பி. தையல்நாயகி கூறியதாவது:-

    பொதுமக்கள் தங்கள் வசிக்கும் பகுதிகளில் நடைபெறக்கூடிய சட்ட விரோத செயல்கள் பற்றி காவல்துறையிடம் தயக்கமின்றி தெரிவிக்க வேண்டும். முறைகேடாக மது பாட்டில்கள் விற்பது, கஞ்சா விற்பனை மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றச்செயல்கள் குறித்து உடனடியாக தெரிவிக்க வேண்டும். தகவல் தெரிவிப்பவர்கள் பெயர் ரகசியமாக வைக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது பொதுமக்கள் தாங்கள் வசிக்கும் பகுதி களில் சில ரவுடிகள் சாலையில் அமர்ந்து மது அருந்துவதாகவும், போதையில் அதிவேகமாக வாகனம் ஓட்டுவதால் சாலையில் செல்லும்போது அச்ச உணர்வு ஏற்படுவதாகவும் பொதுமக்கள் தெரிவித்தனர். மேலும் முறைகேடாக பொதுமக்கள் குடியிருக்கும் பகுதிக்கு அருகில் மது விற்பனை நடைபெறுவ தாகவும் காவல்துறையிடம் தகவல் தெரிவித்தால் அவர்கள் வரும் அப்போதுங்கிருந்து சென்று விடுகின்றனர். காவல்துறை சென்றவுடன் மீண்டும் அதே இடத்தில் விற்பனை தொடர்கின்றனர் என தெரிவித்தனர்.

    பொதுமக்களின் குறைகள் நிவர்த்தி செய்யப்படும் என டி.எஸ்.பி. தையல் நாயகி தெரி வித்தார்.

    இன்ஸ்பெக்டர் மாதையன் பேசுகையில் இப்பகுதியில் பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கஞ்சா தடுப்பு நடவடிக்கை பற்றி சிறப்பு கூட்டங்கள் நடத்தப்படும் என கூறினார்.

    காடாம்பாடி ஊராட்சி பகுதிகளில் போலீசார் ரோந்து பணிகளை அதிகப்படுத்துவதாகவும் உறுதி அளித்தார். கூட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • ரூ.8 ஆயிரம் முதல் அதிகபட்சம் 40 ஆயிரம் ரூபாய் வரை ஆடுகள் விற்பனையானது.
    • கிராமங்களில் இருந்து 1500 ஆடுகள் விற்பனைக்கு வந்திருந்தன.

    அன்னூர்,

    பக்ரீத் பண்டிகை வருகிற 29-ந் தேதி கொண்டாடப்படு கிறது. இதை யொட்டி சந்தைகளில் ஆடுகள் விற்பனை அதிகரித்துள்ளது. அன்னூர் ஆட்டு சந்தையில், நேற்று ஒரே நாளில் ஒரு கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனையானது.

    கோவை மாவட்டம், அன்னூரில் ஒவ்வொரு வாரமும், சனிக்கிழமை யன்று ஆட்டுச் சந்தை நடக்கிறது. நேற்று நடந்த சந்தையில் சத்தி, புளியம்பட்டி, அவிநாசி, திருப்பூர் மற்றும் அருகில் உள்ள கிராமங்களில் இருந்து, 1500 ஆடுகள் விற்பனைக்கு வந்திருந்தன.

    வருகிற 29-ந் தேதி பக்ரீத் பண்டிகை வருவதை முன்னிட்டு, செம்மறி கிடாய் ஆடுகள் அதிக விலைக்கு விற்பனையானது. குறைந்தபட்சம் ரூ.8 ஆயிரம் முதல் அதிகபட்சம் 40 ஆயிரம் ரூபாய் வரை ஆடுகள் விற்பனையானது.

    கால்நடை வளர்ப்போர் கூறுகையில் கடந்த வாரத்தை விட இந்த வாரம், ஒரு ஆட்டுக்கு 3 ரூபாய் வரை விலை உயர்ந்துள்ளது. இது மகிழ்ச்சி தருகிறது.

    ஒரே நாளில் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் ஆடுகள் விற்பனையாகி உள்ளன என்றார்.

    கோவை, திருப்பூர், மேட்டுப்பாளையம் பகுதியிலிருந்து நூற்றுக்கணக்கானோர் ஆடுகளை வாங்க வந்திருந்தனர்.

    • பிரபாகரன், நயன்தாரா நடித்த ஐரா, சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர் உள்ளிட்ட தமிழ் படங்களில் தயாரிப்பு உதவி மேலாளராக பணிபுரிந்தது குறிப்பிடதக்கது.
    • கைதான 3 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.

    சூலூர்,

    சூலூர் அருகே நீலாம்பூர் பகுதியில் மது விற்பனை நடைபெறுவதாக கருமத்தம்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டுக்கு புகார்கள் வந்தது. இதனை அடுத்து நீலாம்பூர் பகுதிகளில் உள்ள மது விற்பனை இடங்களை கருமத்தம்பட்டி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் தையல்நாயகி தலைமையில் சிறப்புபடையினர் ஆய்வு மேற்கொண்டனர்.

    அப்போது நீலாம்பூர் அருகே மர்ம நபர்கள் மது விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. உடனடியாக அவர்களை சிறப்பு படையினர் விரட்டிப் பிடித்தனர். பிடிபட்டவர்களிடம் விசாரித்த போது அவர்கள் ஏற்கனவே அருகில் உள்ள டாஸ்மார்க் மதுக்கடையில் மது பாட்டில்களை மொத்தமாக வாங்கி வைத்துக்கொண்டு அதிக விலைக்கு சில்லறை விற்பனையில் விற்றது தெரிய வந்தது.

    விசாரணையில் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த முருகேசன் (43), புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் பகுதியைச் சேர்ந்த பாண்டி (40), சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை யைச் சேர்ந்த பிரபாகரன் (22) ஆகியோர் என மது விற்றது தெரியவந்தது. அவர்கள் மூன்று பேரையும் போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 53 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    இவர்களில் பிரபாகரன், நயன்தாரா நடித்த ஐரா, சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர் உள்ளிட்ட தமிழ் படங்களில் தயாரிப்பு உதவி மேலாளராக பணிபுரிந்ததும், அந்த படங்களில் சிறு வேடங்களில் அவர் நடித்ததும் தெரியவந்தது.

    பிரபாகரன் கூறுகையில் தற்போது படவாய்ப்புகள் இல்லாததால் இவ்வாறு அதிகவிலைக்கு மது விற்று பணம் சம்பாதிப்பதாக தெரிவித்தார். கைதான 3 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டனர். 

    • மற்றொரு சம்பவத்தில் வாலிபர் கார் மோதி உயிரிழந்தார்.
    • 2 விபத்து குறித்தும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    கோவை,

    அசாமை சேர்ந்தவர் அதூர் ரகுமான்(37). இவரது மனைவி ஜூஸனரா பேகம்(36).

    கடந்த சில வருடங்களாக அதூர் ரகுமான் தனது மனைவியுடன் கோவை வடிவேலம்பாளையத்தில் தங்கி அங்குள்ள செங்கல் சூளையில் வேலை பார்த்து வருகிறார்.

    சம்பவத்தன்று ஜூஸனரா பேகம் வேலையை முடித்து விட்டு பொருட்கள் வாங்குவதற்காக அருகே உள்ள மளிகை கடைக்கு சென்றார். பொருட்களை வாங்கி கொண்டு மீண்டும் வீட்டிற்கு நடந்து வந்தார்.

    வடிவேலம்பாளையம்-பூலுவப்பட்டி ரோட்டில் வந்த போது எதிரே வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் ஜூஸனரா பேகம் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயத்துடன் உயிருக்கு போராடிய அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தொண்டாமுத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஜூஸனரா பேகம் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து ஆலாந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

    பொள்ளாச்சி வடுகபாளையத்தை சேர்ந்தவர் பிரபுசங்கர்(37). இவருக்கு இன்னும் திருமணம் ஆக வில்லை.

    இவர் அய்யம்பாளையத்தில் உள்ள தனியார் மில்லில் வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று வேலை முடிந்து வீட்டிற்கு செல்வதற்காக, சாலையை கடக்க முயன்றார்.

    அப்போது பாலக்காட்டில் இருந்து கோவை நோக்கி வந்த கார் இவர் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே பிரபுசங்கர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுதொடர்பாக பொள்ளாச்சி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கூட்டம் அதிகமாக இருப்பதை பயன்படுத்தி சீதாம்பாள் கழுத்தில் அணிந்திருந்த நகையை மர்மநபர் பறித்து தப்பி சென்றார்.
    • புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சி.சி.டி.வி. காமிரா காட்சிகளின் அடிப்படையில் விசாரணை நடத்தி வருகிறார்கள்

    கோவை,

    கோவை சுண்டக்கா முத்தூரை சேர்ந்தவர் சீதாம் பாள் (வயது 82). இவர் அப்பகுதியில் பெட்டி கடை வைத்து நடத்தி வருகிறார்.

    சம்பவத்தன்று இவர் டவுன்ஹாலில் இருந்து ராமநாதபுரத்துக்கு தனியார் பஸ்சில் சென்று கொண்டி ருந்தார். அப்போது பஸ் ராமநாதபுரம் சிக்னல் அருகே சென்ற போது மர்மநபர் ஒருவர் கூட்டம் அதிகமாக இருப்பதை பயன்படுத்தி சீதாம்பாள் கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் தங்க செயினை நைசாக பறித்து தப்பி சென்றார். சிறிது நேரம் கழித்து கழுத்தில் அணிந்திருந்த நகையை காணாததை கண்டு அவர் அதிர்ச்சி யடைந்தார்.

    பின்னர் அவர் இதுகுறித்து ராமநாதபுரம் போலீசில் புகார் அளித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சி.சி.டி.வி. காமிரா காட்சிகளின் அடிப்படையில் விசாரணை நடத்தி வருகிறார்கள். ஓடும் பஸ்சில் மூதாட்டியிடம் நகையை பறித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • இன்ஸ்டாகிராம் மூலம் நட்பாக தொடங்கிய பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது.
    • போலீசார் மீட்டபோது கணவருடனே வசிப்பதாக தெரிவித்தார்.

    கோவை,

    தூத்துக்குடி மாவட்டம் கொற்கையை சேர்ந்தவர் 19 வயது இளம்பெண்.

    இவர் 12-ம் வகுப்பு வரை படித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார்.

    இவர் செல்போனில் அதிக நேரம் செலவிட்டுள்ளார்.

    சமூக வலைதள பக்கங்க ளான இன்ஸ்டாகிராம், பேஸ்புக் போன்றவற்றில் கணக்கு தொடங்கி அதில் தனது நேரத்தை செல விட்டதாக தெரிகிறது.

    அப்போது அவருக்கு இன்ஸ்டாகிராம் மூலம் விக்ரமன் என்ற நபர் அறிமுகம் ஆனார். 2 பேரும் அடிக்கடி பேசி வந்தனர். முதலில் நட்பாக தொடங்கிய இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது.

    பின்னர் 2 பேரும் செல்போன் எண்களை பகிர்ந்து கொண்டு தங்களது காதலை வளர்த்து வந்தனர்.இந்த நிலையில் சம்பவத்தன்று இளம்பெண்ணின் தாயும், சகோதரரும் வேலை விஷயமாக வெளியில் சென்று விட்டனர். இளம் பெண் மட்டும் வீட்டில் தனியாக இருந்தார்.

    மாலையில், வீட்டிற்கு வந்த போது, இளம்பெண் வீட்டில் இல்லை. இதனால் அதிர்ச்சியான இளம் பெண்ணின் தாயார் அக்கம்பக்கத்தினர் வீடு மற்றும் உறவினர் வீடுகளில் தேடி பார்த்தனர்.

    ஆனால் எங்கு தேடியும் இளம்பெண்ணை கண்டு பிடிக்க முடியவில்லை. இதையடுத்து, இளம்பெண் ணின் தாய் சம்பவம் குறித்து, ஏரல் போலீசில் புகார் அளித்தார்.

    புகாரின் பேரில் போலீ சார் இளம்பெண் மாயம் என வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வந்தனர். போலீசாரின் விசாரணையில், இளம் பெண், தனது காதலரான விக்ரமன் என்பவரை பழனி கோவி லில் வைத்து திருமணம் செய்து கொண்டு, கோவை மாவட்டம் நெகமம் சின்னேரிபாளையம் எம்.ஜி.ஆர். நகரில் வசித்து வருவது தெரியவந்தது.இதையடுத்து ஏரல் போலீ சார் கோவைக்கு விரைந்து வந்தனர். பின்னர் நெகமம் அருகே கணவ ருடன் தங்கி இருந்த இளம்பெண்ணை யும், அவரது கணவரையும் தூத்துக்குடி ஏரல் போலீஸ் நிலையத்திற்கு விசாரணைக் காக அழைத்து சென்றனர்.

    அங்கு இளம்பெண்ணின் தாயையும் வரவழைத்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது இளம்பெண் தனது கணவருடன் செல்வதாக தெரிவித்தார். இதையடுத்து போலீசார் இளம் பெண்ணை அவரது கணவ ருடன் அனுப்பி வைத்தனர்.

    • கொரோனா நோய்தொற்று பரவலுக்கு முன் தினமும் குறைந்தபட்சம் 35 விமானங்கள் இயக்கப்பட்டு வந்தன
    • தற்போது தினமும் 25 விமானங்கள் இயக்கப்படுகின்றன.

    கோவை,

    கொரோனா பரவலுக்கு பின் கோவை விமான நிலையத்தில் மாதாந்திர பயணிகள் எண்ணிக்கை 3 லட்சத்தை நெருங்கியுள்ளது.

    கோவை சர்வதேச விமான நிலையம் கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி, நாமக்கல், சேலம், கரூர் உள்ளிட்ட ஏழு மாவட்ட மக்களுக்கு பயனளித்து வருகிறது. சென்ைன, பெங்க ளூரு, டெல்லி, மும்பை உள்ளிட்ட உள்நாட்டின் பல்வேறு நகரங்களுக்கும் ஷார்ஜா, சிங்கப்பூர் உள்ளிட்ட இரு வெளிநாடுகளுக்கும் விமான சேவை வழங்கப்படுகிறது.

    கடந்த 2020-ம் ஆண்டு கொரோனா நோய்தொற்று பரவலுக்கு முன் தினமும் குறைந்தபட்சம் 35 விமானங்கள் இயக்கப்பட்டு வந்தன. மாதந்தோறும் பயணிகள் எண்ணிக்கை 3 லட்சமாக பதிவு செய்யப்பட்டது.

    கொரோனா பரவலால் விமான இயக்கம் கோவையில் கடுமையாக பாதிக்கப்பட்டது. சில மாதங்கள் தினமும் 5 விமானங்கள் மட்டுமே இயக்கப்படும் அளவுக்கு நிலைமை மோசமடைந்தது. சரக்கக அலுவலகம் மட்டும் தொடர்ந்து செயல்பட்டு வந்தது.

    ஆக்சிஜன் கருவிகள், முகக்கவசம், 'பிபிஇ' என்று சொல்லக்கூடிய பாது காப்புக் கவச உடைகள் பல்ஸ் ஆக்ஸி மீட்டர், மருந்துகள் உள்ளிட்ட அத்திவாசிய மருத்துவ பொருட்கள் சரக்கு விமானங்களில் கையாளப்பட்டு வந்தன. கொரோனா பரவல் தாக்கத்தில் இருந்து விமான நிலையம் மீண்டு வரத்தொடங்கியது.

    தற்போது தினமும் 25 விமானங்கள் இயக்கப்படுகின்றன. சில நாட்களில் 27 அல்லது 28 விமானங்கள் கூட இயக்கப்படுகின்றன. விமான நிலையத்தில் மாதாந்திர பயணிகள் எண்ணிக்கை கொரோனாவுக்கு முன் 3 லட்சம் என்ற அளவில் இருந்தது.

    தற்ேபாது மூன்றாண்டுகளுக்கு பின் கடந்த மே மாதத்தில் உள்நாட்டு பிரிவில் 2 லட்சத்து 64 ஆயிரத்து 105 பேர், வெளிநாட்டு போக்குவரத்து பிரிவில் 19 ஆயிரத்து 178 பேர் என மொத்தம் 2 லட்சத்து 83 ஆயிரத்து 283-ஆக பயணிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

    விமான நிலைய அதிகாரிகள் கூறும்போது, "கொரோனா பரவலால் விமானங்கள் இயக்கம் படிப்படியாக குறைக்கப்பட்டன.

    தொற்று பரவல் முற்றிலும் குறைந்த நிலையில் பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியது.

    இதற்கேற்ப விமான நிறுவனங்களும் பல்வேறு நகரங்களுக்கு விமானங்களை இயக்கி வருகின்றன. இலங்கை நாட்டுக்கு தற்காலிகமாக ரத்து செய்யப்பட்ட சேவை மற்றும் உள்நாட்டின் சில நகரங்களுக்கு கூடுதல் விமான சேவை எதிர்வரும் மாதங்களில் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது" என்றனர்.

    • இறந்த ஜீவந்த் உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.
    • மாணவரின் உடலை இந்தியா கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை தற்போது தொடங்கியுள்ளனர்.

    கோவை:

    நீலகிரி மாவட்டம் ஊட்டியை சேர்ந்தவர் சிவகுமார். இவர் கடந்த சில வருடங்களாக தனது குடும்பத்துடன் கோவை நரசிம்மநாயக்கன் பாளையத்தில் வசித்து வருகிறார். இவரது மகன்கள் ஜீவந்த், ரோகன்.

    மூத்த மகன் ஜீவந்த் (வயது25) கடந்த 2015-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு வரை கோவையில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் பி.இ எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன் என்ஜினீயரிங் படித்தார்.

    இளநிலை படிப்பு முடித்தவுடன், எம்.எஸ்.சி. இன்டர்நேஷனல் பிசினஸ் படிக்க விரும்பினார். அந்த படிப்பினை வெளிநாட்டிற்கு சென்று படிக்க வேண்டும் என ஜீவந்த் நினைத்தார்.

    அவரது விருப்பத்திற்கு பெற்றோரும் சம்மதம் தெரிவித்தனர். இதையடுத்து அவர் இங்கிலாந்து நாட்டில் உள்ள பர்மிங்காமில் புகழ் பெற்ற ஆஸ்டன் பல்கலைக்கழகத்தில் எம்.சி. இன்டர்நேஷனல் பிசினஸ் படிக்க விண்ணப்பித்தார். அவருக்கு அங்கு இடமும் கிடைத்தது.

    இதனை தொடர்ந்து கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஜீவந்த் தனது ஒரு வருட படிப்பிற்காக இங்கிலாந்து நாட்டில் உள்ள பர்மிங்காம் நகருக்கு சென்றார்.

    அங்கு பல்கலைக்கழக விடுதியிலேயே தங்கி அவர் படித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 20-ந் தேதி மாலை 6.30 மணியளவில் ஜீவந்த் பல்கலைக்கழகம் அருகே உள்ள நூலகத்திற்கு படிக்க சென்றார்.

    அங்கு புத்தகங்களை எடுத்து படித்து கொண்டு, பாடத்திற்கு தேவையான குறிப்புகளையும் எடுத்துள்ளார். இரவு 9.30 மணியளவில் அவரது நண்பர்கள் ஜீவந்த்துக்கு போன் செய்து, நாங்கள் சாப்பிட போகிறோம். நீயும் சாப்பிட வா என அழைத்தனர்.

    அதற்கு அவர், நீங்கள் போய் சாப்பிடுங்கள். நான் சிறிது நேரம் கழித்து வருகிறேன் என தெரிவித்தார். இதையடுத்து அவர்களும் சென்று விட்டனர்.

    இரவு 11 மணியை கடந்தும் ஜீவந்த் பல்கலைக்கழக விடுதிக்கு வரவில்லை. இதனால் அவருடன் தங்கியிருந்த நண்பர்கள் அவரை மீண்டும் செல்போனில் தொடர்பு கொண்டனர்.

    அப்போது அவரது செல்போன் சுவிட்ச் ஆப் என வந்தது. இதனால் பயந்து போன நண்பர்கள் இதுகுறித்து பல்கலைக்கழக நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தனர்.

    அவர்களும் மாணவர் காணாமல் போனது தொடர்பாக போலீசாருக்கு தெரியப்படுத்தினர். போலீசார் மாயமான ஜீவந்த்தை தேடினர்.

    இந்த நிலையில் 21-ந் தேதி அதிகாலை 4.30 மணி அளவில் வெஸ்ட் மிட்லண்ட்ஸ் போலீசாருக்கு பர்மிங்காம் கால்வாயில் வாலிபர் ஒருவர் தண்ணீரில் அடித்து வரப்பட்டதாகவும், மயங்கிய நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருப்பதாகவும் தகவல் கிடைத்தது.

    தகவலின் பேரில் போலீசார், ஆம்புலன்ஸ் மருத்துவ உதவி குழுவினருடன் சம்பவ இடத்திற்கு சென்றனர்.

    பின்னர் அங்கு உயிருக்கு போராடிய வாலிபரை மீட்டு முதலுதவி சிகிச்சை அளித்து, அவர் யார் என விசாரித்தனர்.

    அப்போது அவர் காணாமல் போன ஜீவந்த் என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை மீட்டு அருகே உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கு அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி ஜீவந்த் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இந்த தகவல் பல்கலைக்கழகத்திற்கு தெரிவிக்கப்பட்டது. அவர்கள் கோவையில் உள்ள ஜீவந்த்தின் பெற்றோருக்கு தகவலை தெரிவித்தனர்.

    இதனை கேட்டதும் அவரது பெற்றோர் அதிர்ச்சியில் உறைந்தனர். மேலும் மகன் இறந்த செய்தி கேட்டு கதறி அழுதனர். இந்த தகவல் அறிந்ததும் ஜீவந்த்தின் உறவினர்கள் அவரது வீட்டில் குவிய தொடங்கி விட்டனர். இதனால் அந்த வீடே சோகமயமாக காட்சி அளிக்கிறது.

    இது தொடர்பாக இங்கிலாந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். அவரது நண்பர்களிடம் விசாரித்த போது, நூலகத்திற்கு படிக்க செல்வதாக கூறியதாக தெரிவித்தனர்.

    மேலும் இரவு 11 மணிக்கு பிறகு அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை எனவும் போலீசிடம் தெரிவித்தனர்.

    நூலகத்திற்கு படிக்க செல்வதாக கூறிய ஜீவந்த் எப்படி பர்மிங்காம் கால்வாயில் அடிபட்ட நிலையில் கிடந்தார் என்பது போலீசாருக்கு புரியாத புதிராக உள்ளது.

    எப்படி அவர் அங்கு வந்தார், தனியாக வந்தாரா? அல்லது வேறு யாரும் அவருடன் வந்தனரா? என்றும் விசாரிக்கின்றனர்.

    மேலும் அவரிடம் யாராவது தகராறில் ஈடுபட்டு அவரை அடித்து கால்வாயில் தூக்கி வீசினரா? என்ற கோணத்திலும் விசாரிக்கின்றனர்.

    இருந்த போதிலும் அவர் எப்படி இறந்தார் என்பது மர்மமாகவே உள்ளது. இதுதொடர்பாக தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    இறந்த ஜீவந்த் உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். இதுகுறித்த தகவல் இந்திய தூதரகத்திற்கும் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் மாணவரின் உடலை இந்தியா கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை தற்போது தொடங்கியுள்ளனர்.

    இதற்கிடையே கோவை என்ஜீனியரிங் மாணவர் லண்டனில் உயிரிழந்தது பெரியநாயக்கன்பாளையம் போலீசாருக்கு தெரியவந்தது. இதையடுத்து அவர்களும் ஜீவந்த் வீட்டிற்கு சென்று அவரது பெற்றோரிடம் விசாரித்து வருகின்றனர்.

    இதுகுறித்து இறந்த ஜீவந்த்தின் சகோதரர் ரோகன் கூறியதாவது:-

    எனது சகோதரர் நன்றாக படிக்கக்கூடியவர். தினமும் பெற்றோரிடமும் என்னிடமும் போனில் பேசிவிடுவார். சம்பவம் நடப்பதற்கு முந்தைய நாள் கூட அவர் எங்களிடம் போனில் பேசினார்.

    ஆனால் அடுத்த நாளே அவர் பர்மிங்காம் கால்வாயில் அடிபட்ட நிலையில் மீட்கப்பட்டதும், சிகிச்சை பலனின்றி இறந்து விட்டதாகவும் தகவல் வந்தது. இது எங்களுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    அவர் யாரிடமும் அதிகமாக பேசமாட்டார். தனது வேலையை மட்டும் பார்ப்பார். ஆனால் அவர் எப்படி இறந்தார் என்பது தெரியவில்லை. அவர் பர்மிங்காம் கால்வாய் பகுதிக்கு எதற்காக சென்றார். எப்படி அடிபட்டு கிடந்தார் என்பது தெரியவில்லை.

    அவரை யாரும் தாக்கினரா என்பதும் தெரியவில்லை. எனது சகோதரர் சாவில் மர்மம் இருக்கிறது. அது என்ன என்பதை போலீசார் கண்டுபிடித்து உண்மையை வெளியில் தெரிவிக்க வேண்டும். இதற்கு காரணமானவர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    தற்போது இந்திய தூதரகம் மூலம் இறந்த எங்கள் சகோதரரின் உடலை மீட்பதற்கான பணியை மேற்கொண்டு வருகிறோம். இந்திய தூதரகம் எங்களுடன் தொடர்பில் இருந்து தகவல்களை தெரிவித்து வருகின்றனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×