என் மலர்
உள்ளூர் செய்திகள்

டாஸ்மாக் கடையில் வாங்கி அதிக விலைக்கு மது விற்ற துணை நடிகர் -2 பேர் கைது
- பிரபாகரன், நயன்தாரா நடித்த ஐரா, சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர் உள்ளிட்ட தமிழ் படங்களில் தயாரிப்பு உதவி மேலாளராக பணிபுரிந்தது குறிப்பிடதக்கது.
- கைதான 3 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.
சூலூர்,
சூலூர் அருகே நீலாம்பூர் பகுதியில் மது விற்பனை நடைபெறுவதாக கருமத்தம்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டுக்கு புகார்கள் வந்தது. இதனை அடுத்து நீலாம்பூர் பகுதிகளில் உள்ள மது விற்பனை இடங்களை கருமத்தம்பட்டி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் தையல்நாயகி தலைமையில் சிறப்புபடையினர் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது நீலாம்பூர் அருகே மர்ம நபர்கள் மது விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. உடனடியாக அவர்களை சிறப்பு படையினர் விரட்டிப் பிடித்தனர். பிடிபட்டவர்களிடம் விசாரித்த போது அவர்கள் ஏற்கனவே அருகில் உள்ள டாஸ்மார்க் மதுக்கடையில் மது பாட்டில்களை மொத்தமாக வாங்கி வைத்துக்கொண்டு அதிக விலைக்கு சில்லறை விற்பனையில் விற்றது தெரிய வந்தது.
விசாரணையில் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த முருகேசன் (43), புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் பகுதியைச் சேர்ந்த பாண்டி (40), சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை யைச் சேர்ந்த பிரபாகரன் (22) ஆகியோர் என மது விற்றது தெரியவந்தது. அவர்கள் மூன்று பேரையும் போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 53 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இவர்களில் பிரபாகரன், நயன்தாரா நடித்த ஐரா, சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர் உள்ளிட்ட தமிழ் படங்களில் தயாரிப்பு உதவி மேலாளராக பணிபுரிந்ததும், அந்த படங்களில் சிறு வேடங்களில் அவர் நடித்ததும் தெரியவந்தது.
பிரபாகரன் கூறுகையில் தற்போது படவாய்ப்புகள் இல்லாததால் இவ்வாறு அதிகவிலைக்கு மது விற்று பணம் சம்பாதிப்பதாக தெரிவித்தார். கைதான 3 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.






