search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "painter's"

    • மாநகராட்சி கமிஷனரான பிரதாப் மேம்பால தூண்களில் சுவரொட்டிகள் ஒட்டக்கூடாது என உத்தரவிட்டார்.
    • கோவை காந்திபுரம் பஸ் நிலையம் அருகே சுவரொவியங்கள் வரைய தொடங்கினர்.

    கோவை,

    தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என அழைக்கப்படும் கோவை மாநகரில் உள்ள மேம்பாலங்களில் கடந்த சில ஆண்டுகளாக அரசியல் கட்சியினர், அமைப்பினர் உள்பட பலரும் சுவரொட்டிகளை ஒட்டினர்.

    இதனால் அழகான அந்த சுவர்களின் முகமே முற்றிலும் மாறி போய் காணப்பட்டது. சில பாலங்களில் மக்கள் முகம் சுளிக்கும் வகையிலும் சுவரொட்டிகள் இடம் பெற்று இருந்தன.

    சுவரொட்டிகளை தாங்கும் நமக்கெல்லாம் எப்போது தான் விடிவு காலம் வருமோ என மேம்பாலங்களே கண்ணீர் விடுவதுபோல் அந்த தூண்களின் நிலைமை இருந்தது.

    அந்தளவுக்கு கோவையில் உள்ள காந்திபுரம் மேம்பாலம், திருச்சி மேம்பாலம், அவினாசி ரோடு, பொள்ளாச்சி ரோடு, ஜி.பி.சிக்னல், 100 அடி ரோடு உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் உள்ள மேம்பால தூண்களில் சுவரொட்டிகளாகவே காணப்பட்டது.

    இந்த நிலையில் கோவை மாநகராட்சி கமிஷனராக பிரதாப் பொறுப்பேற்றார். அவர் பொறுப்பேற்றதும் மாநகரில் உள்ள மேம்பால தூண்களில் சுவரொட்டிகள் ஒட்டக்கூடாது என உத்தரவிட்டார். அதனை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்தார்.

    சுவரொட்டிகளுக்கு பதிலாக மக்களுக்கு பிடித்தமான அவர்களது பழைய நினைவுகள் மற்றும் மக்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றிருக்கும் பல பொருட்கள், விலங்குகளின் உருவங்களையும் ஓவியமாக வரைந்தால் சுவர்களும் சுத்தமாக இருக்கும். மக்களும் அதனை கண்டு வியந்து செல்வார்கள் என்ற எண்ணம் தோன்றவே அதனை செயல்படுவத்தற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    அதன்படி கோவையில் பிரபல ஓவிய ஆசிரியரான விக்னேஷ் ஜெயக்குமார் என்பவரை மாநகராட்சி கமிஷனர் பிரதாப் நேரில் அழைத்து பேசினார்.

    அவரிடம் தனக்கு தோன்றியவற்றை கூறவே, விக்னேஷ் ஜெயகுமாரும், நமது ஊரை மாற்றுவதற்கான வாய்ப்பு கிடைக்கும் போது உடனே ஒப்புக்கொண்டு பணியை தொடங்கினார்.

    விக்னேஷ் ஜெயக்குமாரும், அவரது குழுவினரும் இணைந்து கோவையில் உள்ள அனைத்து மேம்பால தூண்களிலும் வண்ண, வண்ண ஓவியங்களை வரைந்து வருகின்றனர். அதில் முதல் கட்டமாக கோவை காந்திபுரம் பஸ் நிலையம் அருகே உள்ள மேம்பாலத்தில் சுவரொட்டிகள் அனைத்தையும் அகற்றி விட்டு, அந்த இடத்தில் சுவரொவியங்கள் வரைய தொடங்கினர்.

    அந்த பாலத்தில் உள்ள ஒவ்வொரு தூணிலும் பல வண்ண ஓவியங்களை வரைந்துள்ளனர். குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் எல்லோருக்கும் பயணிக்க விரும்பும் ஊட்டி மலைரெயில் வரையப்பட்டுள்ளது.

    அந்த மலைரெயில் ஓவியத்தை பார்க்கும் போது அதனை ஓவியம் என்றே கூற முடியாத அளவிற்கு அப்படியே தத்ரூபமாக நம் கண்முன் கொண்டு வந்து நிறுத்தி, நாம் நேரில் மலை ரெயிலை பார்ப்பது போலவும், அந்த ரெயில் நம்மை நோக்கி வருவது போலவும் இருக்கிறது.

    இதுதவிர 5 சி சிட்கோ பஸ்சையும் தத்ரூபமாக வரைந்துள்ளனர். தமிழ் பாரம்பரியத்தின் விருந்தோம்பலை விளக்கும் வகையில், பெண் ஒருவர், ஆணுக்கு பல்வேறு வகையான உணவுகளை விருந்தாக வைப்பதையும் அப்படியே வண்ண ஓவியமாக வரைந்துள்ளனர்.

    மேலும் கோவை வேளாண்மை பல்கலைக்கழகம், யானைகள் காப்பகம் போன்றவற்றை இந்த தூண்களில் வரைந்துள்ளனர்.

    இந்த ஓவியங்கள் வரையப்பட்ட பின்னர் அந்த சுவர்கள் வண்ணமயமாக ஜொலித்து கொண்டிருக்கிறது. அந்த வழியாக வாகனங்களில் செல்பவர்களுக்கும், நடந்து செல்பவர்களுக்கும் இது ஒருவித புது அனுபவத்தை தருகிறது.

    பொதுமக்கள் அனைவரும் அதனை நின்று பார்த்து ரசித்தபடியும், அதன் முன்பு நின்று செல்பி புகைப்படங்களும் எடுத்து மகிழ்ந்தனர். முன்பு சுவரொட்டி ஒட்டப்பட்டு அசிங்கமாக காட்சியளித்தது, இன்று ஓவியமாக ஜொலிப்பதை பார்த்ததும் அனைவரும் மகிழ்ச்சி அடைகின்றனர்.

    இதுபோன்று அனைத்து பகுதி பாலங்களிலும் ஓவியங்களை வரைந்தால் கோவை நகர் முற்றிலும் மாற்றம் அடையும் என தெரிவித்தனர்.

    இதுகுறித்து மேம்பா லங்களில் ஓவியம் வரைந்து வரும் ஓவியர் விக்னேஷ் ஜெயக்குமார் கூறியதாவது:-

    கோவை மாநகரில் உள்ள மேம்பாலங்கள் அனைத்தும் சுவரொட்டியாக காட்சியளித்தது. இதனை பார்த்த மாநகராட்சி கமிஷனர், என்னை அழைத்து, அந்த தூண்களில் ஓவியங்கள் வரைய முடியுமா என கேட்டார்.

    நானும் ஒப்புக் கொண்டேன். முதலில் காந்திபுரம் மேம்பாலத்தில் பல வண்ண ஓவியங்களை வரைந்துள்ளோம். இந்த பணியில் நான் மற்றும் தன்னார்வலர்கள் என 25 பேர் ஈடுபட்டு வருகிறோம். இதனை எங்கள் ஊரை மாற்றுவதற்கு எங்களுக்கு கிடைத்த வாய்ப்பாக கருதி செய்து வருகிறேன்.

    இந்த பாலத்தை போன்று, அடுத்த கட்டமாக ஜி.பி.சிக்னல், 100 அடி ரோடு, அவினாசி, திருச்சி உள்ளிட்ட மேம்பாலங்களிலும் ஓவியங்கள் வரைய உள்ளோம்.

    தற்போது மலைரெயில், 5 சி பஸ் போன்றவற்றை வரைந்த நாங்கள் அடுத்த கட்டமாக 90 காலகட்டத்தில் கிராமப்புறங்களில் மிகவும் பிரபலமாக இருந்த பல்லாங்குழி, நொண்டி, கண்ணாமூச்சி, கில்லி மற்றும் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான சிலம்பம், கபடி, உள்ளிட்ட அனைத்து விளையாட்டுகளையும், மேம்பால தூண்களில் ஓவியமாக வரைய உள்ளோம்.

    இந்த மேம்பாலங்களில் ஓவியங்கள் வரைவதிலும் பிரச்சினைகள் உள்ளது. படம் வரைந்த பின்னரும் பிரச்சினை இருக்க தான் செய்கின்றன.

    ஓவியம் வரைந்ததை பலர் ரசித்தாலும், சிலர் அநாகரீகமாக நடந்து கொள்கின்றனர். அதனை யும் தவிர்க்க வேண்டும். அப்படி செய்தால் நன்றாக இருக்கும்.

    நாங்கள் ஓவியம் வரைவதோடு மட்டுமல்லாமல் அடுத்த கட்டமாக, மேம்பாலங்களில் உள்ள இடைவெளிகளில் ஒரு தோட்டம் ஆரம்பிக்கவும் முடிவு செய்துள்ளோம். அந்த தோட்டங்களில் பல்வேறு வகையான செடி, கொடிகள் வளர்த்து, அதனை அழகாக மாற்றும் திட்டமும் எங்களிடம் உள்ளது. எங்களுக்கு எல்லா வகையிலும் மாநகராட்சி கமிஷனர் மற்றும் தனியார் பள்ளி உரிமையாளர் ஒருவர் உறுதுணையாக உள்ளனர். அவர்களுக்கு நன்றி.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    இதற்கிடையே கோவை காந்திபுரம் பகுதியில் மேம்பால தூண்களில் வண்ண ஓவியங்கள் வரையும் பணியில் ஈடுபட்ட ஓவியர்களை மாநகராட்சி கமிஷனர் பிரதாப் இன்று நேரில் அழைத்து பாராட்டினார். அத்துடன் அவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களையும் வழங்கி சிறப்பித்தார்.

    • சண்முகத்திடம், பிரபுகுமார் 100 ரூபாய் எனக்கு கடனாக கொடு என கேட்டுள்ளார். அதற்கு சண்முகம் என்னிடம் பணம் இல்லை என கூறியுள்ளார்.
    • கடன் கொடுக்க வக்கில்லாத உனக்கு என்னடா மரியாதை எனக் கூறி அருகில் இருந்த பிராந்தி பாட்டிலை எடுத்து தலையில் அடித்ததில் சண்முகத்திற்கு பலத்த காயம் ஏற்பட்டது.

    நம்பியூர்:

    நம்பியூர் அருகே உள்ள மேட்டுக்கடை பகுதியில் அரசு மதுபான கடை செயல்பட்டு வருகிறது.

    இதில் சம்பவத்தன்று மதியம் 2 மணி அளவில் சந்தனநகர் பகுதியை சேர்ந்த குமார் என்கிற சண்முகம் (45). பெயிண்டர். அவரது நண்பர் பிலியம்பாளையம் பகுதியை சேர்ந்த பிரபுகுமார் (27) ரிக் வண்டி தொழிலாளி. இருவரும் மது குடிக்க சென்றுள்ளனர்.

    அப்போது சண்முகத்திடம், பிரபுகுமார் 100 ரூபாய் எனக்கு கடனாக கொடு என கேட்டுள்ளார். அதற்கு சண்முகம் என்னிடம் பணம் இல்லை என கூறியுள்ளார். அதற்கு பிரபுகுமார் பணத்தை வைத்துக்கொண்டு இல்லை என்று சொல்கிறாயா என தகாத வார்த்தையில் பேசி யுள்ளார்.

    100 ரூபாய் கூட கடன் கொடுக்க வக்கில்லாத உனக்கு என்னடா மரியாதை எனக் கூறி அருகில் இருந்த பிராந்தி பாட்டிலை எடுத்து தலையில் அடித்ததில் சண்முகத்திற்கு பலத்த காயம் ஏற்பட்டது.

    இதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சண்முகம் கோபி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் ஒருவரை ஒருவர் தாக்கியதில் பிரபுகுமாருக்கு வாயின் கீழ் உதடு, வலது கண் புருவத்தில் காயம் ஏற்பட்டது.

    இதில் பலத்த காயமடை ந்த சண்முகம் கொடுத்த புகாரின் அடிப்படையில் வரப்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×