என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோவையில் 673 பயனாளிகளுக்கு ரூ.1.83 கோடியில் நலத்திட்ட உதவிகள்
- கிராமத்தில் மாதந்தோறும் மக்கள் தொடர்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
- அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் 2000 இடங்கள் காலியாக உள்ளன.
மேட்டுப்பாளையம்,
கோவை மாவட்டம் காரமடை அருகே உள்ள தோலம்பாளையத்தில் மக்கள் தொடர்பு முகாம் நடந்தது. முகாமுக்கு, கலெக்டர் கிராந்தி குமார் பாடி தலைமை தாங்கினார்.
முகாமில் 309 பேருக்கு பழங்குடியின உரிமை சான்று, 51 பேருக்கு விலையில்லா வீட்டு மனைப்பட்டா, 5 பேருக்கு முதல்-அமைச்சரின் சாலை விபத்து நிவாரண நிதி வழங்கப்பட்டது.
மேலும் 151 பேருக்கு முதியோர் மற்றும் இதர உதவித்தொகை, 52 பேருக்கு ரேஷன் அட்டை, 50 பேருக்கு பழங்குடி சாதி சான்றிதழ் உள்பட மொத்தம் 673 பயனாளிகளுக்கு ரூ.1.83 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் கிராந்திகுமார் வழங்கினார்.
விழாவில் கலெக்டர் கிராந்திகுமார் பாடி பேசியதாவது:-
மாவட்டத்தில் ஏதாவது ஒரு கிராமத்தில் மாதந்தோறும் மக்கள் தொடர்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இதில் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு கோரிக்கை மனுக்களை அளிக்கலாம்.
பெண்கள் மகளிர் சுய உதவி குழுக்களில் சேர வேண்டும். அதன் மூலம் கடனுதவி பெற்று ஏதாவது ஒரு தொழிலை செய்து, அந்த பொருட்களை விற்பனை செய்வதன் மூலம் வருமானம் ஈட்டலாம்.
பள்ளி செல்லாத குழந்தைகளை கணக்கெடுத்து அவர்களை மீண்டும் பள்ளியில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பள்ளிப்படிப்பை முடித்து கல்லூரியில் சேராமல் உள்ள மாணவர்கள் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர்ந்து ஏதாவது ஒரு தொழிலை கற்றுக்கொள்ளலாம்.
கோவை தொழில்நகரம் என்பதால் இங்கு பல்வேறு தொழில்துறைகளில் வேலைவாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன.
அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் மட்டும் 2000 இடங்கள் காலியாக உள்ளன. அதனை மாணவர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
தமிழக அரசு நரிக்குறவ இன மக்களை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் வகுப்பில் இருந்து பழங்குடியினர் பட்டியலுக்கு மாற்றி உள்ளது.
எனவே அவர்களில் 50 பேருக்கு தற்போது ஜாதிச்சான்றிதழ் வழங்கப்பட்டு உள்ளது. அடுத்தபடியாக விரைவில் சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
இதனை தொடர்ந்து பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. இதில் கோவை தனித்துணை கலெக்டர்(சமூக பாதுகாப்புத் திட்டம்) சுரேஷ்குமார், வேளாண்மை இணை இயக்குனர் முத்துலட்சுமி, மேட்டுப்பாளையம் தாசில்தார் சந்திரன், ஊராட்சி மன்றத்தலைவர்கள் ஜெயா செந்தில் (தோலம்பாளையம்), பொன்னுச்சாமி (காளம்பாளையம்), ஞானசேகரன் (சிக்காரம்பாளையம்), வடக்கு மாவட்ட திமுக துணைச் செயலாளர் எம்.என்.கே.செந்தில், காரமடை தி.மு.க மேற்கு ஒன்றிய செயலாளர், மாவட்ட பிரதிநிதி மேடூர் கணேசன் உள்பட பலர் கலந்து ெகாண்டனர்.






