search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    மருதமலை கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு கட்டுப்பாடு விதிப்பு
    X

    மருதமலை கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு கட்டுப்பாடு விதிப்பு

    • மாலை 5 மணிக்கு மேல் இருசக்கர வாகனத்தில் கோவிலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.
    • பக்தர்கள் தெரிந்து கொள்வதற்காக ஆங்காங்கே அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.

    கோவை அருகே மருதமலையில் சுப்பிரமணியசுவாமி கோவில் உள்ளது. முருகப்பெருமானின் 7-வது படை வீடாக போற்றப்படும் இந்த கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து விட்டு திரும்புகிறார்கள். இந்த கோவிலுக்கு அடிவாரத்தில் இருந்து படிக்கட்டு வழியாகவும், சாலை வழியாகவும் செல்லலாம். ஆனால் செல்லும் வழியில் வனவிலங்குகள் நடமாட்டம் உண்டு. இந்த நிலையில் மருதமலையில் தற்போது 7-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் முகாமிட்டு உள்ளன.

    இதற்கிடையே மருதமலை அருகே வனப்பகுதிக்குள் சென்ற ஐ.ஓ.பி. காலனியை சேர்ந்த குமார் என்பவரை காட்டு யானை தாக்கி கொன்றது. இதையடுத்து காட்டு யானைகளின் நடமாட்டத்தை வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள்.

    அத்துடன் மருதமலை கோவிலுக்கு செல்லும் வழியிலும் காட்டு யானைகளின் நடமாட்டம் இருப்பதால் பக்தர்களின் நலன் கருதி சில கட்டுப்பாடுகளை வனத்துறையினர் விதித்து உள்ளனர். இது குறித்து வனத்துறை உயர் அதிகாரிகள் கூறியதாவது:-

    மருதமலை வனப்பகுதியில் காட்டு யானைகள் முகாமிட்டு உள்ளன. அத்துடன் ஒற்றை யானையும் சுற்றி வருகிறது. யானைகள் நடமாட்டம் குறித்து தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறோம். மேலும் இங்கு முகாமிட்டு உள்ள காட்டு யானைகள் மருதமலை கோவிலுக்கு செல்லும் வழியாகதான் இடம்பெயர்ந்து செல்கிறது.

    எனவே கோவிலுக்கு செல்லும் பக்தர்களுக்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. அதன்படி மாலை 5 மணிக்கு மேல் அடிவாரத்தில் இருந்து இருசக்கர வாகனத்தில் கோவிலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. கார்களில் சென்றாலும் மிகவும் கவனத்துடன் செல்ல வேண்டும்.

    அதுபோன்று படிக்கட்டு பகுதியிலும் காட்டு யானைகள் நடமாடி வருவதால், மாலை 5 மணிக்கு மேல் பக்தர்கள் படிக்கட்டு வழியாக செல்லக்கூடாது. இது தொடர்பாக கோவில் நிர்வாகத்துக்கு நோட்டீஸ் வழங்கி இருக்கிறோம். அத்துடன் பக்தர்கள் தெரிந்து கொள்வதற்காக ஆங்காங்கே அறிவிப்பு பலகையும் வைக்க உள்ளோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    Next Story
    ×