என் மலர்tooltip icon

    கோயம்புத்தூர்

    • தக்காளியை பதுக்கி வைத்து விற்பனை செய்வதும் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது.
    • பொது மக்களின் அத்தியாவசிய உணவுப்பொருட்களில் தக்காளி குறிப்பிடத்தக்கது.

    கோவை:

    கோவையில் டி.கே.மார்க்கெட், அண்ணா மார்க்கெட் ஆகிய பகுதிகளில் ஒட்டுமொத்த காய்கறிசந்தை செயல்பட்டு வருகிறது. இங்கு வெளியூர், வெளி மாவட்டங்களில் இருந்து காய்கறிகள் இறக்குமதி செய்யப்படுகிறது.

    வியாபாரிகள் தினமும் கோவை வந்திருந்து, மேற்கண்ட சந்தைகளில் காய்கறிகளை வாங்கி சென்று விற்பனை செய்து வருகின்றனர்.

    இந்நிலையில் கோவை டி.கே.மார்க்கெட் மற்றும் அண்ணா மார்க்கெட் ஆகிய பகுதிகளுக்கு கடந்த சில நாட்களாக தக்காளி வரத்து மிகவும் குறைவாக உள்ளது. எனவே மாவட்டம் முழுவதும் தக்காளி விலை கிடுகிடுவென அதிகரித்த வண்ணம் உள்ளது. கோவையில் ஒரு கிலோ தக்காளி ரூ.100-க்கு விற்பனை செய்யப்பட்டது.

    பொதுமக்களின் அன்றாட சமையலில் தக்காளி முக்கியத்துவம் வாய்ந்தது. அது இல்லாமல் குழம்பு வைக்க முடியாது. எனவே பொதுமக்கள் சமையலில் தக்காளியை குறைத்து வருகின்றனர். இன்னொருபுறம் கோவையில் உள்ள உணவு வியாபார கடைகளில் தக்காளி சார்ந்த உணவுகள் தடாலடியாக நிறுத்தப்பட்டு உள்ளன.

    கோவை மாவட்டத்தில் 3 ஆயிரம் ஓட்டல்கள் மற்றும் 12 ஆயிரம் தள்ளுவண்டி உணவு கடைகள் உள்ளன. அங்கு வாடிக்கையாளருக்கு தக்காளி சட்னி நிறுத்தப்பட்டுவிட்டது. கோவையில் தக்காளி விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வருவது, பொதுமக்களை கவலை அடைய செய்து உள்ளது.

    இந்நிலையில் கோவை மாவட்டத்தில் தக்காளி விலை உயர்வை கட்டுப்படுத்தும் வகையில் கூட்டுறவுத்துறை ஒருசில நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன்ஒருபகுதியாக பெரியநாயக்கன்புதூர், கூட்டுறவு பண்டகசாலை, பெரியநாயக்கன்பாளையம் காய்கறி கூட்டுறவு விற்பனை சங்கம் ஆகியவை சார்பில் கோவை பூ மார்க்கெட், ஆவின், தெலுங்குபாளையம், சங்கனூர் கூட்டுறவு பண்டகசாலை, ஒண்டிப்புதூர் நகர கூட்டுறவு கடன் சங்கம் மற்றும் சிந்தாமணி, வடகோவை, சாய்பாபா காலனி, ஆர்.எஸ்.புரம் உள்ளிட்ட 10 பகுதிகளில் பசுமைப்பண்ணை கடைகள் திறக்கப்பட்டு உள்ளன. அங்கு கூட்டுறவுத்துறை அதிகாரிகள் வெளி மார்க்கெட்டில் தக்காளியை கொள்முதல் விலைக்கு வாங்கி, லாபம் இன்றி விற்பனை செய்து வருகின்றனர்.

    கோவையில் நேற்று மட்டும் 10 கூட்டுறவு சங்க கடைகளில் 2000 கிலோ தக்காளி இறக்குமதி செய்யப்பட்டது. அங்கு இவை கிலோ ரூ.60-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. எனவே பொது மக்கள் போட்டி போட்டுக் கொண்டு தக்காளி பழங்களை வாங்கி செல்கின்றனர்.

    இதுகுறித்து கோவை மாவட்ட கூட்டுறவு அதிகாரிகள் கூறுகையில், மாநகரில் மட்டும் 10 பகுதிகளில் தக்காளி கிலோ ரூ.60-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் பொது மக்கள் மகிழ்ச்சியுடன் பொருட்களை வாங்கி செல்கின்றனர். அதேநேரத்தில் தக்காளியை பதுக்கி வைத்து விற்பனை செய்வதும் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது என்றனர்.

    இதற்கிடையே கோவை காய்கறி மார்க்கெட்டுகளுக்கு தக்காளி வரத்து அதிகரிக்க தொடங்கி உள்ளது. இதனால் அங்கு தக்காளி விலை தற்போது கிலோ ரூ.75-க்கு விற்கப்பட்டு வருகிறது. சில்லறை விற்பனை கடைகளில் ரூ.90-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கோவை மார்க்கெட்டுகளுக்கு தக்காளி வரத்து அதிகரிக்க தொடங்கி உள்ளதால், இன்னும் ஒருசில நாட்களில் விலை மேலும் குறைய வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்து உள்ளனர்.

    கோவை மாவட்டத்தில் உள்ள தோட்டம் மற்றும் விளைநிலங்களில் தக்காளி பயிரிடப்பட்டு, சந்தைகளுக்கு கொண்டுவரப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    அங்கு உள்ள விவசாயிகள் கூறுகையில், பொது மக்களின் அத்தியாவசிய உணவுப்பொருட்களில் தக்காளி குறிப்பிடத்தக்கது. எனவே அவற்றின் விலையை கட்டுக்குள் வைத்து இருப்பது அரசின் முக்கிய பொறுப்பு.

    அரசாங்கமே கூட்டுறவுத்துறை மூலம் தக்காளியை நேரடியாக கொள்முதல் செய்து, ரேஷன் கடைகள் வாயிலாக விற்பனை செய்யலாம். தக்காளியை சேமித்து வைத்தால்தான் விலையை கட்டுக்குள் வைத்திருக்க முடியும்.

    இதற்காக அந்தந்த மார்க்கெட்டுகளில் அரசாங்கம் குளிர்பதன கிடங்குகளை ஏற்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • குர்பானி கொடுப்பதற்காக சென்ற சிறுமி டிராக்டரில் சிக்கி உயிரிழந்த சம்பவம் கரட்டுமேடு பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    • மாணவி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேட்டுப்பாளையம்:

    மேட்டுப்பாளையம் கரட்டுமேடு பகுதியை சேர்ந்தவர் சையது முஸ்தபா (40). இவரது ஒரே மகள் இபான் நசீரா. இவர் அந்த பகுதியில் உள்ள அரசுப்பள்ளியில் 4-ம் வகுப்பு பயின்று வந்தார்.

    இந்த நிலையில் நேற்று பக்ரீத் பண்டிகை என்பதால் தந்தை சையது முஸ்தபா மற்றும் மகள் இபான் நசீரா உள்ளிட்ட இருவரும் குர்பானி கொடுப்பதற்காக இருசக்கர வாகனத்தில் வெளியில் சென்று விட்டு அன்னூர் சாலையின் வழியாக வந்து கொண்டிருந்தனர்.

    இந்நிலையில் அன்னூர் சாலையில் டேங்குமேடு பகுதியில் இருந்து நேசனல் பள்ளி வழியாக கரட்டுமேடு செல்வதற்காக சென்று கொண்டிருந்த போது சாலையில் முன்னே சென்று கொண்டிருந்த டிராக்டரை சையது முஸ்தபா முந்த முயன்றுள்ளார்.

    அப்போது,திடீரென இருசக்கர வாகனம் நிலை தடுமாறி கிழே விழுந்ததில் தந்தை மற்றும் மகள் இருவரும் சாலையில் விழுந்துள்ளனர்.

    இதில் டிராக்டரின் பின்சக்கரத்தில் இபான் நசீரா சிக்கி கொண்ட நிலையில் அவர் மீது டிராக்டர் ஏறி இறங்கியதில் சிறுமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.தந்தை சையது முஸ்தபா லேசான காயத்துடன் உயிர் தப்பினார்.

    இச்சம்பவம் குறித்து அறிந்து விரைந்து வந்த மேட்டுப்பாளையம் போலீசார் சிறுமியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும்,இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    குர்பானி கொடுப்பதற்காக சென்ற சிறுமி டிராக்டரில் சிக்கி உயிரிழந்த சம்பவம் கரட்டுமேடு பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • 120 அடி உயர ஆழியாறு அணையில் தற்போது 56 அடிக்கு மட்டும் தண்ணீர் உள்ளது. இங்கு கடந்த ஆண்டு இதே மாதத்தில் 88 அடிக்கு நீர்மட்டம் இருந்தது.
    • 63 அடி உயர திருமூர்த்தி அணையில் தற்போது 23 அடிக்கு மட்டுமே தண்ணீர் உள்ளது. கடந்தாண்டு இதே நாளில் 30 அடிக்கு தண்ணீர் இருந்தது.

    கோவை:

    தமிழகத்தில் பரம்பிக்குளம்-ஆழியாறு பாசனத்திட்டம் கொங்கு மண்டலத்தில் பாசனப்பரப்புகளை அபிவிருத்தி செய்வதற்காக உருவாக்கப்பட்டது. இங்கு ஆண்டுதோறும் நல்ல மழை பொழியும்.

    கொங்கு மண்டலத்தில் ஆனைமலையாறு, நீராறு, சோலையாறு, பரம்பிக்குளம், தூணக்கடவு, பெருவாரிப்பள்ளம், ஆழியாறு, பாலாறு ஆகிய 8 நதிகளை உள்ளடக்கி பரம்பிக்குளம்-ஆழியாறு பாசனத்திட்டம் உருவாக்கப்பட்டு உள்ளது. இங்கு மேல்நீராறு, கீழ்நீராறு, சோலையாறு, பரம்பிக்குளம், பெருவாரிப்பள்ளம், தூணக்கடவு, ஆழியாறு, அப்பர் ஆழியாறு, திருமூர்த்தி ஆகிய 9 பகுதிகளில் தடுப்பு அணைகள் உள்ளன.

    இதன்மூலம் கோவை, திருப்பூரில் 4.25 லட்சம் ஏக்கர் பாசனப்பரப்பில் விவசாயம் நடக்கிறது. இதுதவிர பரம்பிக்குளம்-ஆழியாறு திட்டம் மூலம் கேரளாவில் 22 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் விவசாயமும் செழித்து வருகிறது.

    தமிழகத்தில் பெரும்பாலும் ஆண்டுதோறும் ஜூன் மாதத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கிவிடும். இதனால் அடுத்த மாதமே 9 அணைக்கட்டுகளிலும் தண்ணீர் நிரம்பி, கோவை, திருப்பூர் மட்டுமின்றி கேரளாவிலும் விவசாயிகள் வேளாண்மையை தொடங்கி விடுவர்.

    ஆனால் நடப்பாண்டில் ஜூன் மாதம் கடைசிவரையிலும் தென்மேற்கு பருவமழை தொடங்கவில்லை. பொள்ளாச்சி உள்ளிட்ட ஒருசில பகுதிகளில் சாரல் மழை மட்டுமே பெய்து வருகிறது. இதனால் அணையின் நீர் மட்டம் வெகுவாக குறைந்து உள்ளது.

    கடந்தாண்டு இதே கால கட்டத்தில் சோலையாறு, பரம்பிக்குளம் அணைகள் கிட்டத்தட்ட நிரம்பி விட்டன. 120 அடி உயரம் உடைய ஆழியாறு அணைக்கட்டு பகுதியில் 112 அடிக்கு தண்ணீர் இருந்தது. 160 அடி உயரம் கொண்ட சோலையாறு அணையில் கடந்த ஆண்டு இதே மாதத்தில் 108 அடிக்கு தண்ணீர் இருந்தது. அங்கு தற்போது 8 அடி மட்டுமே தண்ணீர் உள்ளது.

    அதேபோல 72 அடி உயரம் கொண்ட பரம்பிக்குளம் அணையில் தற்போது 18 அடிக்கு தண்ணீர் உள்ளது. அங்கு கடந்த ஜூன் மாதம் 44 அடி தண்ணீர் இருந்தது.

    120 அடி உயர ஆழியாறு அணையில் தற்போது 56 அடிக்கு மட்டும் தண்ணீர் உள்ளது. இங்கு கடந்த ஆண்டு இதே மாதத்தில் 88 அடிக்கு நீர்மட்டம் இருந்தது.

    63 அடி உயர திருமூர்த்தி அணையில் தற்போது 23 அடிக்கு மட்டுமே தண்ணீர் உள்ளது. கடந்தாண்டு இதே நாளில் 30 அடிக்கு தண்ணீர் இருந்தது.

    பரம்பிக்குளம்-ஆழியாறு பாசனப்பரப்பு திட்டத்தில் தென்மேற்கு பருவமழை தள்ளிப்போவதால், கோவை, திருப்பூர் மற்றும் கேரள மாநிலத்திலும் வேளாண்மை பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.

    • தமிழகம் முழுவதும் திறந்தவெளி மைதானங்கள் மற்றும் மசூதிகளில் சிறப்பு தொழுகைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
    • பள்ளிவாசல் வளாகத்தில் தொழுகை செய்பவர்களுக்காக தொப்பி, அத்தர், கண் சுருமா ஆகியவை விற்கப்பட்டன, வடமாநில் தொழிலாளர்கள் ஆர்வமுடன் வாங்கிச் சென்றனர்.

    கோவை,

    இறைவனின் தூதரான இப்ராகிமின் தியாகத்தை நினைவு கூரும் வகையில் ஆண்டுதோறும் இஸ்லாமியர்கள் பக்ரீத் பண்டி கையை கொண்டாடி வருகின்றனர்.

    தமிழகம் முழுவதும் இன்று இஸ்லாமியர்கள் பக்ரீத் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடினார்கள். பக்ரீத் பண்டிகை தியாகத்துக்கான பெருநாளாக கொண்டாடப் படுகிறது. பக்ரீத் பண்டிகையை யொட்டி இன்று காலையிலேயே இஸ்லாமியர்கள் தமிழகம் முழுவதும் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். தொழுகை முடிந்ததும் ஒருவருக்கு ஒருவர் கட்டித் தழுவி வாழ்த்துக்களையும் பரிமாறி உற்சாகம் அடைந்த னர்.

    தமிழகம் முழுவதும் திறந்தவெளி மைதானங்கள் மற்றும் மசூதிகளில் சிறப்பு தொழுகைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஒவ்வொரு மைதானங்களில் நடந்த தொழுகையிலும் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். அனைத்து மக்களும் அமைதியோடு வாழ வேண்டும். நாட்டில் அமைதி நிலவ வேண்டும் என்று இஸ்லாமியர்கள் பிரார்த்தனை செய்தனர்.

    பக்ரீத் பெருநாளில் ஏழைகளுக்கு உதவி செய்வதும் வழக்கம். அதன்படி இஸ்லாமியர்கள் இன்று பல இடங்களில் ஏழைகளுக்கு உதவி வழங்கினார்கள்.

    மேலும் பல இடங்களில் இறைச்சிகளையும் ஏழைகளுக்கு கொடுத்து மகிழ்ந்தனர். சென்னையிலும் இன்று பக்ரீத் பண்டிகை உற்சாக மாக கொண்டாடப்பட்டது. காலையிலேயே இஸ்லாமியர்கள் புத்தாடை அணிந்து சிறப்பு தொழுகையில் ஈடு பட்டு ஒருவருக்கொருவர் வாழ்த்து தெரிவித்து மகிழ்ந்தனர். இதல் சிறுவர்களும் ஏராளமானோர் பங்கேற்றனர்.

    கோவை மாவட்டத்தில் உள்ள பள்ளிவாசல் மற்றும் மைதானங்களில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் புத்தாடைகளுடன் திரளாக வந்திருந்து சிறப்பு தொழுகை நடத்தினார்கள். அதன்பிறகு ஒருவருக்கொருவர் கட்டித்தழுவி, பக்ரீத் வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர்.

    கோவை பூ மார்க்கெட் பகுதியில் உள்ள திப்பு சுல்தான் தக்னி ஜமாத் பள்ளிவாசலில் தமிழகம் மட்டுமின்றி வடமாநில தொழிலாளர்களும் பக்ரீத் சிறப்பு தொழுகை மேற்கொண்டனர். அப்போது அங்கு உள்ள பள்ளிவாசல் வளாகத்தில் தொழுகை செய்பவர்களுக்காக தொப்பி, அத்தர், கண் சுருமா ஆகியவை விற்கப்பட்டன. இதனை வடமாநில் தொழி லாளர்கள் ஆர்வமுடன் வாங்கிச் சென்றனர்.

    பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் சிறப்பு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. போலீசார் மப்டி உடையில் ரோந்து சென்று கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒருபகுதியாக கோவை மாநகர வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் அதிநவீன கருவிகள் மூலம் பள்ளிவாசல் வளாகம், வாகன நிறுத்துமிடம் ஆகிய பகுதிகளில் அதிரடியாக சோதனை மேற்கொ ண்டனர்.

    தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் சென்னை பிராட்வேயில் உள்ள டான்பாஸ்கோ பள்ளியில் இன்று காலை யில் பக்ரீத் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் மனித நேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாகிருல்லா எம்.எல்.ஏ. மற்றும் 1000-க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் பங்கேற்ற னர். தொழுகை முடிந்த பிறகு அவர்கள் ஒருவருக்கொருவர் கட்டித் தழுவி வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.

    திருவல்லிக்கேணி பெரிய மசூதியில் இன்று காலையில் பக்ரீத் பண்டிகையை யொட்டி சிறப்பு தொழுகை நடை பெற்றது. இதில்

    1000- க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு தொழுகையில் ஈடுபட்டனர். பின்னர் ஒருவருக்கொருவர் வாழ்த்து தெரிவித்தனர்.

    இதேபோல் சென்னை பெரம்பூர், ஓட்டேரி, ராயபு ரம், புரசைவாக்கம், அண்ணா நகர், ஐஸ் அவுஸ், வண்ணாரப் பேட்டை, தண்டையார் பேட்டை, கொடுங்கையூர் உள்ளிட்ட சென்னை முழுவதும் உள்ள மசூதிகளில் நடந்த சிறப்பு தொழுகையில் ஏராளமான இஸ்லாமியர்கள் பங்கேற்ற னர். 

    • பூமிக்கடியில் புதையல் இருப்பதாகவும் அதனை குறைந்த விலைக்கு விற்பதாகவும் சுதாகரிடம் கூறியுள்ளனர்.
    • தம்பதியினர் 2 பேரையும் பிடித்து தர்ம அடி கொடுத்து பெரிய கடை வீதி போலீசில் ஒப்படைத்தனர்.

    கோவை

    கோவை குனியமுத்தூரை சேர்ந்தவர் சுதாகர் (வயது 42). இவர் அதே பகுதியில் ஜூஸ் கடை வைத்து நடத்தி வருகிறார்.

    கர்நாடக மாநிலம் மைசூரை சேர்ந்தவர்கள் குடியா (35) மற்றும் பீம் (42). இவர்கள் தற்போது கோவையில் வசித்து வருகிறார்கள். 2 பேரும் சுதாகரின் கடைக்கு தினமும் பழஜூஸ் குடிக்க வருவது வழக்கம்.

    இவர்கள் தங்கள் ஊரில் பூமிக்கடியில் புதையல் இருப்பதாகவும் அதனை குறைந்த விலைக்கு விற்பதாகவும் அவரிடம் கூறியுள்ளனர். இதனை நம்பிய சுதாகர் மற்றும் அவரது மனைவி ரூ.25 ஆயிரத்தை அவர்களிடம் கொடுப்பதாக தெரிவித்துள்ளனர்.

    சம்பவத்தன்று ஒப்பணக்கார வீதியில் உள்ள கோவிலுக்கு வந்து நகைகளை பார்க்க வருமாறு பீம் அழைத்துள்ளார். இதையடுத்து தம்பதியினர் கோவிலுக்கு பணத்துடன் சென்றனர். ஆனால் குடியா , பீம் 2 பேரும் நகைகளை காட்டாமல் பணத்தை நைசாக திருடி செல்ல முயன்றனர்.

    உடனே சுதாரித்து கொண்ட தம்பதியினர் 2 பேரையும் பிடித்து தர்ம அடி கொடுத்து பெரிய கடை வீதி போலீசில் ஒப்படைத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் 2 பேர் மீதும் வழக்குபதிவு செய்து கைது செய்தனர். பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    • வாழ்க்கையில் விரக்தி அடைந்த சுமதி, வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • சூலூர் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சூலூர்,

    திருப்பூர் மாவட்டம் பெரிச்சிபாளையத்தைச் சேர்ந்தவர் முருகேஷ். இவர் பனியன் நிறுவனம் ஒன்றில் டெய்லராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி சுமதி (42). இவரும் அதே பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார்.

    முருகேஷ்- சுமதி தம்பதிக்கு மகள் பிரியா (வயது 21) உள்ளார். இவர் அவிநாசிபாளையத்தை சேர்ந்த சரவணன் என்பவரை காதலித்தார். இதற்கு பிரியா வீட்டில் எதிர்ப்பு வலுத்தது.

    இந்த நிலையில் பிரியா கடந்த 27-ந்தேதி வீட்டில் இருந்து மாயமானார். எனவே அவரை உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தனர். வீட்டில் இருந்து மாயமான பிரியா, சரவணனுடன் சென்று திருமணம் செய்து கொண்டது தெரியவந்தது.

    இது சுமதியை வேதனைக்கு உள்ளாக்கியது. ஆசை ஆசையாய் வளர்த்த மகள் பெற்றோரின் பேச்சை கேளாமல், இப்படி காதல் திருமணம் செய்து கொண்டாளே? என்று அக்கம் பக்கத்தினரிடம் அவர் புலம்பி வந்து உள்ளார்.

    எனவே சூலூர் செங்கத்துறையில் வசிக்கும் சகோதரி ராணி என்பவர், தங்கையை தேற்றுவதற்காக தனது வீட்டுக்கு அழைத்து வந்து உள்ளார். அங்கும் சுமதி தீராத மனஉளைச்சலில் இருந்து உள்ளார்.

    இந்த நிலையில் சுமதி நேற்று காலை வீட்டில் இருந்தார். அப்போது அங்கு யாரும் இல்லை. எனவே வாழ்க்கையில் விரக்தி அடைந்த சுமதி, வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து தகவலறிந்த சூலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக சிங்கா நல்லூர் இ.எஸ்.ஐ மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சம்பவத்தன்று அண்ணாதுரை திருச்சி-கோவை சாலையில் தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
    • சூலூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோவை,

    திருச்சி மாவட்டம் மீனாட்சிபுரத்தை சேர்ந்தவர் அண்ணாதுரை (வயது 42). இவர் காரணம்பேட்டையில் உள்ள ஓட்டலில் சப்ளையராக வேலை பார்த்து வந்தார்.

    சம்பவத்தன்று இவர் திருச்சி-கோவை சாலையில் தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவில் இருக்கும் தடுப்பில் மோதியது. இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் சூலூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோவை மதுக்கரையை சேர்ந்தவர் செந்தில் (52). இவர் சம்பவத்தன்று சேலம்-பாலக்காடு ரோட்டில் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வந்த லாரி ஒன்று நடந்து சென்ற செந்தில் மீது மோதியது.

    இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. படுகாயமடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.இதுகுறித்த புகாரின்பேரில் மதுக்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • சிட்டேபாளையம் கிராம மக்கள் கடந்த 25 ஆண்டுகாலமாக வீட்டு மனைப்பட்டா வழங்க கோரி போராடி வருகின்றனர்.
    • தேர்வு செய்யப்பட்ட 92 பயனாளிகளில் உள்ளூரை சேர்ந்த 52 பேருக்கு பட்டா வழங்கப்படும் என உறுதி

    மேட்டுப்பாளையம்,

    மேட்டுப்பாளையம், இரும்பொறை ஊராட்சியில் உள்ள சிட்டேபாளையம் கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட தலித் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அவர்கள் கடந்த 25 ஆண்டுகாலமாக வீட்டு மனைப்பட்டா வழங்க கோரி போராடி வருகின்றனர்.

    இந்த நிலையில் சிட்டேபாளையம் பகுதியில் 2.50 ஏக்கர் பரப்பளவில் ஆதிதிராவிடர் மட்டுமின்றி வெளியூர் நபர்களுக்கும் பட்டா வழங்கப்போவதாக தகவல் வெளியானது. இதற்காக கோவை, பெரியநாயக்கன்பாளையம், மேட்டுப்பாளையம், மூலத்துறை ஆகிய பகுதிகளை சேர்ந்த பொதுமக்களும் திரண்டு வந்திருந்தனர்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த சிட்டேபாளையம்வாசிகள், ஆதிதிராவிடர்களுக்கு பட்டா வழங்குவதில் முன்னுரிமை தர வேண்டும் என்பவை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நிலத்தை அளவீடு செய்ய வந்திருந்த அதிகாரிகளை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து தகவலறிந்த மேட்டுப்பாளையம் தனி தாசில்தார் ரங்கராஜன், இரும்பொறை ஊராட்சி மன்ற தலைவி ராஜேஸ்வரி மற்றும் சிறுமுகை போலீசார் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது ஏற்கனவே தேர்வு செய்யப்பட்ட 92 பயனாளிகளில் உள்ளூரை சேர்ந்த 52 பேருக்கு பட்டா வழங்கப்படும், அதன்பிறகு மற்றவர்களுக்கு வழங்குவோம் என உறுதி அளித்தனர். இதை தொடர்ந்து அங்கு போராட்டம் கைவிடப்பட்டது.

    • பாரத் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 60 ரயில் நிலையங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
    • ரயில் நிலையத்தை அழகுபடுத்துதல், மேம்படுத்துதல் உள்ளிட்டவை குறித்து ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.

    மேட்டுப்பாளையம்

    இந்திய நாட்டின் 75 வது ஆண்டு சுதந்திர தினத்தை கொண்டாடும் விதமாக தென்னக ரயில்வேயின் கீழ் உள்ள சென்னை, திருச்சி, மதுரை, கோவை உள்ளிட்ட 4 கோட்டங்களிலும் தலா 15 ரயில் நிலையங்கள் அம்ருத் பாரத் திட்டத்தின் கீழ் பயணிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

    அதனடிப்படையில் அம்ருத் பாரத் திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தை இன்று தென்னக ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தை மேம்படுத்துதல் குறித்து அதிகாரிகள் இடையே அவர் ஆலோசனை மேற்கொண்டார்.

    மேலும் மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தை அம்ருத் பாரத் திட்டத்தின் கீழ் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல். பயணிகளின் தேவைகள், புட் ப்ளாசா, ரயில் நிலையத்தை அழகுபடுத்துதல், ரயில் பயணிகள் தங்கும் ,அறை,வாகன பார்க்கிங் மேம்படுத்துதல் உள்ளிட்ட வை குறித்து அதிகாரிகளுடன் சென்று ரயில் நிலைய ரயில் நடை மேடை,நடைமேடை கூரை,கேன்டீன்,டிக்கெட் கொடுக்கும் இடம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை ஆய்வு செய்தார்.

    ஆய்வின் போது சேலம் கோட்ட மேலாளர் பங்கஜ்குமார் சின்ஹா, உதவி கோட்ட மேலாளர் சிவலிங்கம்,முதன்மை வணிக மேலாளர் பூபதி ராஜா உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் உட்பட பலர் உடன் இருந்தனர்.

    பின்னர்,நிருபர்களை சந்தித்த தென்னக ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் அம்ருத் பாரத் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 60 ரயில் நிலையங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.அதில் மேட்டுப்பாளையம், குன்னூர்,ஊட்டி உள்ளிட்ட ரயில் நிலையங்கள் அடங்கும்.

    அம்ருத் பாரத் திட்டத்தின் கீழ் ரயில் நிலையங்களை மேம்படுத்துதல், உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், அடிப்படை வசதிகளை மேம்படுத்துதல், பயணிகளின் தேவைகள்,வாகன பார்க்கிங், டிக்கெட் கொடுக்கும் இடம்,பயணிகள் தங்கும் அறை, ரயில் நிலையத்தை அழகுபடுத்துதல், மேம்படுத்துதல் உள்ளிட்டவை குறித்து ஆய்வு மேற்கொண்டு அதிகாரிகளிடம் கலந்து ஆலோசித்தோம் என தெரிவித்தார்.

    மேலும்,மேட்டுப்பாளையம் - ஊட்டி மலை ரயிலில் செல்லும் பயணிகளின் வசதிக்காக ஹில்கு ரோவ் ரயில் நிலையத்தை தவிர்த்து மேலும் ஒரு ரயில் நிலையத்தை தேர்ந்தெடுத்து அங்கு கேண்டீன் அமைக்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிவித்தார்.

    • கூட்டத்தில் புதிதாக தேர்வான உறுப்பினர்கள் பங்கேற்பு
    • மாவட்ட திட்டக்குழுக்களை அமைத்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    கோவை,

    கோவை ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட திட்டக்குழு கூட்டம், கலெக்டர் கிராந்திகுமார்பாடி தலைமையில் நடந்தது.

    இதில் மாவட்ட திட்டக்குழு தலைவர் சாந்திமதி அசோகன், கோவை எம்.பி பி.ஆர்.நடராஜன், எம்.எல்.ஏ.க்கள் வி.பி.கந்தசாமி (சூலூர்), அமுல் கந்தசாமி (வால்பாறை), வானதி சீனிவாசன் (கோவை தெற்கு), மாவட்ட ஊராட்சி செயலர் பாஸ்கர் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    மாவட்ட திட்டக்குழு கூட்டத்தில் புதிதாக வெற்றி பெற்ற உறுப்பினர்கள் கோபால்சாமி, கந்தசாமி, சக்திவேல், ராஜன், அப்துல் காதர், உமாமகஷே்வரி, செல்வராஜ், சிவா, கபிலன், ஜம்ருத்பேகம் முகமதுயூ னூஸ், கனகராஜ், ஸ்ரீதரன், கிருஷ்ணகுமாரி, மோகனப்ரியா, மனோகரன், பழனிசாமி என்ற சிரவை சிவா, ராமு ஆகியோர் கலந்து கொண்டனர்.

    இதனை தொடர்ந்து மாவட்ட அளவில் வளர்ச்சி திட்டங்களை உருவாக்கி ஒருங்கிணைத்து செயல்படுத்த ஏதுவாக மாவட்ட திட்டக்குழுக்களை அமைத்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    • ரூ.6 லட்சத்தை இழந்த வாலிபர் போலீசில் புகார்
    • கோவை சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோவை,

    கோவை பி.என்.புதூரை சேர்ந்தவர் ஹரிபிரசாத் (வயது 29). இவர் நெட் வொர்க் என்ஜீனியராக வேலை பார்த்து வருகிறார். இவர் கோவை சைபர் கிரைம் போலீசில் புகார் ஒன்றினை அளித்தார். அதில் கூறியிருப்பதாவது,

    கடந்த 8-ந்தேதி எனது வாட்ஸ் ஆப்க்கு தேவிகா என்ற பெயரில் குறுஞ்செய்தி வந்தது. அதில் அவர் டிஜிட்டல் மார்க்கெட்டிங் நிறுவனம் வைத்திருப்பதாக தெரிவித்தார். மேலும் தான் யூடியூபர்களுடன் சேர்ந்து வேலை செய்வதாகவும் அவர்களுக்கு சந்தாதாரர்களை அதிகரிக்க மார்க்கெட்டிங் செய்வதாகவும் கூறினார். இந்நிலையில் டெலிகிராமில் தனது விளம்பர வீடியோக்களை பார்த்து, அதனை ஸ்கிரீன் சாட் எடுத்து அனுப்பினால் கமிஷன் தருவதாக ஆசை வார்த்தை கூறினார்.

    இதை உண்மை என நம்பிய நானும் விளம்பர வீடியோ பார்த்தேன். பின்னர் ரூ.150 முதலீடு செய்ய சொன்னார். நானும் பணம் அனுப்பினேன். அதில் எனக்கு சிறிது பணம் வந்தது. பின்னர் எனது வங்கி கணக்கில் இருந்து தவணை முறையில் பல கட்டங்களாக ரூ.6 லட்சத்து 3 ஆயிரத்து இரு நூறு அனுப்பினேன். ஆனால் எனக்கு கமிஷன் எதுவும் கிடைக்கவில்லை. பணத்தை பெறுவதற்காக நான் அவரை தொடர்பு கொள்ள முயன்றேன். ஆனால் அந்த நபர் சரிவர பதில் அளிக்கவில்லை. எனவே நான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தேன்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்த புகாரின்பேரில் கோவை சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • தள்ளுவண்டியில் மூட்டைகளை இழுத்துச் செல்லும் கூலி தொழிலாளிகளையும் அதிகமாக காணமுடிகிறது.
    • ஆங்காங்கே நிறுத்தி இருக்கும் 4 சக்கர வாகன உரிமையாளர்கள் மீது போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    குனியமுத்தூர்,

    கோவை மாநகரின் மையப்பகுதி டவுன்ஹால் ஆகும். கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதியிலிருந்து ஏராளமான பொதுமக்கள் இங்கு வந்து பொருட்களை வாங்கிச் செல்கின்றனர்.ஒப்பணக்கார வீதி, பெரிய கடை வீதி, தாமஸ் வீதி, ராஜவீதி, ரங்கே கவுடா் வீதி, இடையர் வீதி உள்ளிட்ட பகுதிகள் அனைத்தும் டவுன்ஹால் பகுதி என்று அழைக்கப்படுகிறது.

    இத்தகைய சாலைகள் அனைத்திலும் எப்போதும் போக்குவரத்து நெரிசல் காணப்படும். மளிகை சாமான்கள், இஞ்சி, பூண்டு போன்ற அனைத்து பொருட்களும் விற்பனை செய்யக்கூடிய மொத்த விற்பனை நிலையங்கள் மற்றும் காய்கறி மார்க்கெட் இப்பகுதியில் உள்ளது. அத்தகைய கடைகளுக்கு ராஜவீதி வழியாகத்தான் சென்றாக வேண்டும்.

    மேலும் நகைக்கடைகளும் இப்பகுதியில் அதிகமாக உள்ளது. எனவே ராஜவீதியில் எந்த நேரமும் போக்குவரத்து நெரிசல் மிகுந்ததாக காணப்படும். சரக்கு ஆட்டோக்களும், இருசக்கர வாகனங்களும் ,நான்கு சக்கர வாகனங்களும் நீண்ட தூரம் அணிவகுத்து நிற்கும் காட்சியை இங்கு காண முடிகிறது.

    இதற்கிடையில் தள்ளுவண்டியில் மூட்டைகளை இழுத்துச் செல்லும் கூலி தொழிலாளிகளையும் அதிகமாக காணமுடிகிறது. நாள் முழுவதும் போக்குவரத்து நெரிசல் மிகுந்த கோவையின் முக்கியமான பகுதி இப்பகுதி ஆகும். இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது, ராஜவீதியை பொறுத்த அளவு சற்று அகலமான சாலை தான். ஆனாலும் சாலைகளின் 2 புறங்களிலும் வாகனங்களை நிறுத்தி விட்டு சென்று விடுகின்றனர்.

    இதனால்தான் இப்பகுதியில் போக்குவரத்து நெருக்கடி ஏற்படும் சூழ்நிலை உள்ளது. சாலையின் ஒரு புறம் மட்டுமே பார்க்கிங் என்ற முறை அமலுக்கு வந்தால் போக்கு வரத்து நெருக்கடியை தவிர்க்க முடியும்.

    மேலும் சாலைகளின் ஓரங்களில் ஆங்காங்கே நிறுத்தி இருக்கும் 4 சக்கர வாகன உரிமையாளர்கள் மீது போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு செயல்பட்டால் ராஜவீதியில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க முடியும் .

    இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

    ×