என் மலர்
கோயம்புத்தூர்
- கடந்த 30 வருடங்களாக நஞ்சம்மாள் என்பவர் தூய்மை பணியாளராக வேலை பார்த்து வந்தார்.
- பணியாற்றிய இத்தனை வருடத்தில் எந்தவிதமான கோபமும் படாமல் பொதுமக்களிடம் நன்மதிப்பை பெற்று வந்துள்ளார்.
கவுண்டம்பாளையம்:
கோவை பெரியநாயக்கன்பாளையம் அடுத்துள்ளது கூடலூர் நகராட்சி.
இந்த நகராட்சியில் கடந்த 30 வருடங்களாக நஞ்சம்மாள் என்பவர் தூய்மை பணியாளராக வேலை பார்த்து வந்தார்.
அவர் தற்போது பணி நிறைவு பெற்றுள்ளார். இவர் பணியாற்றிய 30 வருடங்களில் எந்தவிதமான கோபமும் படாமல் பொதுமக்களிடம் நன்மதிப்பை பெற்று வந்துள்ளார்.
அதுவும் நகராட்சி 19-வது வார்டில் புதுப்புதூர் பகுதியில் மட்டுமே அதாவது ஒரே பகுதியில் மட்டுமே பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் நேற்று அவர் பணி நிறைவு பெற்றதை தொடர்ந்து அந்த பகுதி மக்கள் அவரை கவுரவிக்க முடிவு செய்தனர்.
இதற்காக சிறப்பு விழா எடுத்தனர். 19-வது வார்டு நகராட்சி கவுன்சிலர் கவிதாராணி அனைவரையும் வரவேற்றார்.
சிறப்பு விருந்தினராக கூடலூர் நகராட்சித்தலைவர் அ.அறிவரசு கலந்துக்கொண்டார். தொடர்ந்து அந்த பகுதி மக்கள் நஞ்சாம்மாள் வேலை செய்தபோது எப்படி நடந்துக்கொண்டார் என்று பெருமையாக தெரிவித்தனர்.
நகராட்சித்தலைவர் பேசும்போது, பணி நிறைவு பெற்ற நஞ்சம்மாளுக்கு மேற்கொண்டு உதவிகள் செய்யப்படும் என உறுதி அளித்தார்.
தொடர்ந்து நஞ்சம்மாளுக்கு சால்வைகள், சந்தன மாலைகள் அனுவிக்கப்பட்டது. மேலும் பொதுமக்கள் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து பணி நிறைவு பெற்ற நஞ்சம்மாளை கூடலூர் நகராட்சி தலைவர் அ.அறிவரசு தனது ஜீப்பிலேயே அழைத்து சென்று அவரை வீட்டில் விட்டுவிட்டு வந்தார்.
- சிவகாமிக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது.
- டோலி கட்டி தூக்கி செல்ல சிவகாமி மறுத்தார்.
அணைக்கட்டு:
வேலூர் மாவட்டம், அணைக்கட்டு பகுதியில் உள்ள மலை கிராமங்களில் போதிய சாலை வசதி இல்லை. கர்ப்பிணி, உடல் நலம் பாதிக்கப்பட்டவர்களை மலையில் இருந்து டோலி கட்டி தூக்கி செல்லும் அவலம் நீடித்து வருகிறது.
இந்த நிலையில் கர்ப்பிணி ஒருவர் மலையில் இருந்து நடந்தே ஆஸ்பத்திரிக்கு சென்று குழந்தை பெற்று ஆபத்திலிருந்து தப்பியுள்ளார்.
அணைக்கட்டு அருகே உள்ள ஜார்த்தான்கொல்லை ஊராட்சி, முத்தன் குடிசை மலை கிராமத்தை சேர்ந்தவர் சேட்டு (வயது26), கூலித்தொழிலாளி. இவரது மனைவி சிவகாமி (22). தம்பதியினருக்கு 3 வயதில் பெண் குழந்தை உள்ளது.
சிவகாமி மீண்டும் கர்ப்பமாக இருந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் திடீரென அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது. உறவினர்கள் சிவகாமியை ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்ல முடிவு செய்தனர்.
போதுமான சாலை வசதி இல்லாததால், வாகனங்கள் மூலம் அவரை அழைத்துச் செல்ல முடியாத சூழல் நிலவியது. டோலி கட்டி தூக்கி செல்ல சிவகாமி மறுத்தார்.
முத்தன்குடிசை கிராமத்தில் இருந்து ஆஸ்பத்திரி செல்ல வேண்டுமென்றால் சுமார் 30 கிலோமீட்டர் உள்ள ஒடுகத்தூர், 25 கிலோமீட்டர் தொலைவில் உள்ள நம்மியம்பட்டு அல்லது 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அடுக்கம்பாறைக்கு தான் செல்ல வேண்டும்.
என்ன செய்வது என தெரியாமல் திணறிய நேரத்தில், சிவகாமியை முத்தன் குடிசை கிராமத்தில் இருந்து நடைபயணமாக ஆஸ்பத்திரி செல்ல அழைத்து வந்தனர்.
கர்ப்பிணி பெண் பிரசவ வலியோடு நடந்தார். தெள்ளை மலை கிராமம் வழியாக 15 கிலோ மீட்டர் தூரம் நடந்தே கணியம்பாடி அடுத்த துத்திக்காட்டிற்கு வந்தார்.
பின்னர் அங்கிருந்து சிவகாமியை அவரது உறவினர்கள், ஆட்டோ மூலம் வேலூர் பாகாயத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு அவருக்கு சுகப்பிரசவத்தில் அழகான பெண் குழந்தை பிறந்தது. அதிர்ஷ்டவசமாக தாயும் சேயும் நலமுடன் உள்ளனர்.
சாலை வசதி மட்டும் இருந்திருந்தால் இது போன்ற ஆபத்தான சூழல் உருவாகி இருக்காது.
எங்களது நீண்ட கால சிரமத்தை போக்கும் வகையில் சாலை வசதியை ஏற்படுத்தி தர நடவடிக்கை வேண்டும் என மலைவாழ் மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
- யானை ஊருக்குள் சுற்றி திரிந்ததை அப்பகுதியை சேர்ந்த சிலர் செல்போனில் வீடியோ எடுத்து அதனை சமூக வலைதளங்களில் பகிர்ந்தனர்.
- பழுதடைந்த தெரு விளக்குகளை எல்லாம் சரி செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கவுண்டம்பாளையம்:
கோவை மாவட்டம் தடாகம், கணுவாய், மாங்கரை, பன்னிமடை தொண்டாமுத்தூர் பகுதிகளில் அடிக்கடி காட்டு யானைகள் நுழைந்து வருகின்றன.
அவ்வாறு வரும் யானைகள் விளைநிலங்களை சேதப்படுத்துவதோடு, சில சமயங்களில் வீடுகளில் வைத்துள்ள உணவுகளையும் சேதப்படுத்தி செல்கின்றன.
இந்த நிலையில் நேற்று நள்ளிரவு தடாகம் சாலை திருவள்ளுவர் நகர் பகுதிக்குள் வனத்தை விட்டு வெளியேறிய காட்டு யானை புகுந்தது.
சிறிது நேரம் அந்த யானை அப்பகுதியிலேயே சுற்றி திரிந்து கொண்டிருந்தது. அப்போது யானை அங்குள்ள ஒரு வீட்டின் முன்பு வைக்கப்பட்டிருந்த உணவு பொருளை எடுக்க முயன்றது.
ஆனால் அந்த இடம் மிகவும் குறுகலாக இருந்ததால் யானையால் நுழைய முடியவில்லை. இதனிடையே வீட்டின் முன்பு வைக்கப்பட்டிருந்த பாத்திரங்களை யானை சேதப்படுத்தியது. இதில் அவர்களது வீட்டின் ஓடுகள் சில சேதமடைந்தன.
சத்தம் கேட்டு வீட்டில் இருந்தவர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் எழுந்து பார்த்தனர். வீட்டிற்கு வெளியே யானை நின்றதை பார்த்ததும் அதிர்ச்சியான அவர்கள் சத்தம் போட்டனர்.
இருந்த போதிலும் யானை செல்லாமல் அங்கேயே சுற்றியது. இதுகுறித்து மக்கள், வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். இதனை தொடர்ந்து வனத்துறையினர் விரைந்து வந்து காட்டு யானையை வனபகுதிக்குள் விரட்டினர்.
இதற்கிடையே யானை ஊருக்குள் சுற்றி திரிந்ததை அப்பகுதியை சேர்ந்த சிலர் செல்போனில் வீடியோ எடுத்து அதனை சமூக வலைதளங்களில் பகிர்ந்தனர். தற்போது அந்த காட்சிகள் வைரலாகி வருகிறது.
காட்டு யானைகள் அடிக்கடி இப்பகுதியில் நுழைந்து பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி வருவதால், வனத்துறையினர் இரவு நேரங்களில் தீவிர ரோந்து பணிகளை மேற்கொள்ள வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் பழுதடைந்த தெரு விளக்குகளை எல்லாம் சரி செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- இளம்பெண் வேலை முடிந்ததும் குரும்பபாளையத்தில் இருந்து அன்னூர் செல்வதற்காக அந்த வழியாக வந்த தனியார் பஸ்சில் ஏறினார்.
- ஓடும் பஸ்சில் இளம்பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட தனியார் பஸ் டிரைவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, டிரைவரை கைது செய்தனர்.
கோவை:
கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 24 வயது இளம்பெண்.
இவர் தனியார் மருத்துவ கல்லூரியில் பிசியோதெரபி துறையில் முதன்மை செயலாளராக வேலை பார்த்து வருகிறார். இளம்பெண் தினமும் தான் வேலை பார்க்கும் கல்லூரிக்கு பஸ்சிலேயே பயணித்து செல்வது வழக்கம்.
சம்பவத்தன்று காலை இளம்பெண் வழக்கம் போல கல்லூரிக்கு புறப்பட்டு சென்றார். பின்னர் மாலையில் வேலை முடிந்ததும் குரும்பபாளையத்தில் இருந்து அன்னூர் செல்வதற்காக அந்த வழியாக வந்த தனியார் பஸ்சில் ஏறினார்.
அப்போது பஸ்சை ஓட்டிச்சென்ற சிறுமுகையை சேர்ந்த 35 வயது டிரைவர் ஓடும் பஸ்சில் இளம்பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த இளம்பெண் பஸ் அன்னூருக்கு சென்றதும், பஸ்சை விட்டு இறங்கி நேராக அன்னூர் போலீஸ் நிலையம் சென்று புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் ஓடும் பஸ்சில் இளம்பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட தனியார் பஸ் டிரைவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, டிரைவரை கைது செய்தனர். தொடர்ந்து போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- வெவ்வேறு சமூகம் என்பதால் காதலுக்கு இளம்பெண்ணின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தாக கூறப்படுகிறது.
- இளம்பெண்ணின் பெற்றோர் கோவில்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
கோவை,
கோவை குரும்பபாளையத்தை சேர்ந்தவர் பவுர்ணராஜ் (வயது 20). இவர் மோட்டார் சைக்கிள் மெக்கானிக்காக வேலை பார்த்து வருகிறார்.
இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த 18 வயது இளம்பெண் ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இருவரும் செல்போனில் பேசியும் நேரில் சந்தித்தும் தங்களது காதலை வளர்த்து வந்தனர். இவர்கள் இருவரும் வெவ்வேறு சமூகம் என்பதால் காதலுக்கு இளம்பெண்ணின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தாக கூறப்படுகிறது.
இந்நிலையில் சம்பவத்தன்று வீட்டில் இருந்த இளம்பெண் திடீரென மாயமானார். அவரது பெற்றோர் உறவினர் வீடு உட்பட பல்வேறு இடங்களில் தேடியும் காணவில்லை. எனவே கோவில்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து நடத்திய விசாரணையில் , இளம்பெண் வாலிபருடன் பழனி கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டது தெரிய வந்தது. பின்னர் 2 பேரும் பாதுகாப்பு கேட்டு கோவில்பாளையம் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர். இதனையடுத்து போலீசார் இருவரது பெற்றோரையும் அழைத்து பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார்கள்.
கோவை வழியாம் பாளையத்தை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவர் கோவை தனியார் கல்லூரியில் பி.காம். முதலாமாண்டு படித்து வந்தார்.
இந்நிலையில் இவருக்கும் கோவை காந்திபார்க்கை சேர்ந்த சிந்து ஜான் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் காதலாக மாறியது. இருவரும் செல்போனில் பேசியும் நேரில் சந்தித்தும் தங்களது காதலை வளர்த்து வந்தனர்.
சம்பவத்தன்று காலையில் கல்லூரி சென்ற மாணவி மாலையில் வீட்டுக்கு வரவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த மாணவியின் பெற்றோர் கோவில்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்நிலையில் சம்பவத்தன்று மாணவி கல்லூரிக்கு செல்லவில்லை என்பது தெரியவந்தது. மேலும் அன்று மாலை சிந்துஜான் மாணவியின் பெற்றோருக்கு போன் செய்து தங்கள் மகளை திருமணம் செய்து கொண்டேன் என்றும் தங்களை தேட வேண்டாம் என்றும் கூறியுள்ளார்.
மாணவி மைனர் என்பதால் வாலிபர் மீது போக்சோ வழக்கு பாயும் என கூறப்படுகிறது. இது குறித்த புகாரின் பேரில் கோவில்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- குறைதீர்ப்பு கூட்டத்திற்கு மாவட்டம் முழுவதிலும் இருந்து 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கோரிக்கை மனுவுடன் வந்திருந்தனர்.
- கோவை மாவட்டத்தில் கிராமப்புற ஊராட்சி மற்றும் எம்.பி, எம்.எல்.ஏ மூலம் பல்வேறு பணிகளுக்கு நிதிஒதுக்கீடு செய்யப்படுகிறது.
கோவை,
கோவை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் இன்று விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம் நடந்தது. இதற்காக மாவட்டம் முழுவதிலும் இருந்து 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கோரிக்கை மனுவுடன் வந்திருந்தனர்.
அப்போது அவர்களிடம் மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார்பாடி கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டு படித்து பார்த்தார். அதன்பிறகு விவசாயிகளின் கோரிக்கை மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுரை கூறினார்.
இந்த நிலையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் அதன் தலைவர் பழனிசாமி, கலெக்டரிடம் ஒரு கோரிக்கை மனு கொடுத்தார். அந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-
கோவை மாவட்டத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஒன்றியம், மாவட்ட பஞ்சாயத்து, கிராமப்புற ஊராட்சி மற்றும் எம்.பி, எம்.எல்.ஏ மூலம் பல்வேறு பணிகளுக்கு நிதிஒதுக்கீடு செய்யப்படுகிறது. இதுதவிர பொதுமக்களின் பயன்பாட்டுக்காக பல்வேறு துறைகளும் நிதி ஒதுக்கி வருகின்றன.
எனவே மேற்கண்ட பணிகள் நடக்கும் பகுதிகளில் ஒப்பந்ததாரர் பெயர், வேலையின் விவரம், நிதி ஓதுக்கீடு ஆகியவை பற்றி பொதுமக்கள் அறியும் வகையில் விளம்பர பலகை வைக்க வேண்டும். தரமான முறையில் பணிகள் நடக்க வேண்டும். ஒப்பந்ததாரர்கள் அதிக அளவில் கமிஷன் கொடுப்பதால் பணிகளை முழுமையாக செய்வதில் சிரமம் உள்ளது. எனவே பணிகள் நடக்கும்போது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும்.
போக்குவரத்து சாலை அமைக்கும்போது இருபுறமும் மழைநீர், கழிவுநீர் வாய்க்கால் அமைக்க வேண்டும். அரசாங்க திட்டங்களின்போது தரமான கட்டுமான பொருட்கள் பயன்படுத்துவதை கலெக்டர் உறுதி செய்ய வேண்டும். இதுகுறித்து அனைத்து உள்ளாட்சி அமைப்புகளுக்கும் எழுத்துபூர்வமாக தகவல் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது.
- 50-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் காலை, மாலை நேரங்களில் நடந்து சென்று கல்வி பயின்று வந்தனர்.
- மாணவ, மாணவிகள் மட்டுமல்லாமல் பெற்றோர்கள், உள்ளூர் மக்களும் மகிழ்ச்சி அடைந்தனர்.
மேட்டுப்பாளையம்,
மேட்டுப்பாளையம் அருகே உள்ள இலுப்பநத்தம் ஊராட்சியில் 12 வார்டுக்கு உள்ளன. இதில் 6-வது வார்டுக்குட்பட்ட பகுதியில் எஸ். மேடூர், காரனூர், ராமேகவுண்டபுதூர், இலுப்பநத்தம், திம்மனூர் உள்ளிட்ட கிராமங்களில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன.
இதில் எஸ். புங்கம்பாளையம் பகுதியில் உள்ள அரசு பள்ளி கடந்த 2002-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. மேற்கண்ட கிராமங்களில் இருந்து சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இப்பள்ளிக்கு தினசரி 50-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் காலை, மாலை நேரங்களில் நடந்து சென்று கல்வி பயின்று வந்தனர்.
எனவே தினசரி காலை புளியம்பட்டியில் இருந்து மேட்டுப்பாளையத்திற்கு செல்லும் அரசு பஸ் மேலூர் பிரிவில் இருந்து மாதப்பன் நகர் வழியாக எஸ். புங்கம்பாளையத்தில் உள்ள அரசு பள்ளி வழியாக செல்ல வேண்டுமென இப்பகுதி 6-வது வார்டு உறுப்பினர் சத்தியமூர்த்தி போக்குவரத்து துறை அதிகாரிகளிடம் நீண்ட நாட்களாக வலியுறுத்தி வந்தார். அதன் பலனாக எஸ்.புங்கம்பாளையத்துக்கு இன்று முதல் அரசு பஸ் தொடங்கியது.
புளியம்பட்டி பஸ் நிலையத்தில் இருந்து காலை 8.05 மணிக்கு புறப்படும் 10 ஏ அரசு பஸ் 8.40 மணிக்கு எஸ். மேடூர் பிரிவுக்கு வந்தது. அங்கிருந்து மாதப்பநகர் வழியாக எஸ். புங்கம்பாளையம் அரசுப் பள்ளியை சென்றடைந்து பின்னர் அங்கிருந்து மேட்டுப்பாளையம் சென்றது.
இவ்வழியாக 21 ஆண்டுகளுக்கு பின்பு இன்று முதல் போக்குவரத்து சேவை தொடங்கியதால் மாணவ, மாணவிகள் மட்டுமல்லாமல் பெற்றோர்கள், உள்ளூர் மக்களும் மகிழ்ச்சி அடைந்தனர்.
இதனையொட்டி நடந்த பஸ் தொடக்க விழாவில் 6-வது வார்டு உறுப்பினர் சக்திவேல் தலைமை தாங்கினார். ஊராட்சி தலைவர் ரங்கசாமி முன்னிலை வகித்தார். காரமடை தி.மு.க. ஒன்றிய செயலாளர் கல்யாணசுந்தரம் சிறப்பு விருந்தினராக பங்கேற்று மாணவ மாணவிகளுக்கும், பொதுமக்களுக்கும் இனிப்புகளை வழங்கி பஸ்சேவை தொடங்கி வைத்தார்.
இதில் மேட் டுப்பாளையம் போக்கு வரத்து கழக தொ.மு.ச. செயலாளர் சசிராஜ், தலைவர் கோவிந்தராஜ், பொருளாளர் வேல்முருகன், துணை தலைவர் செல்வகுமார், பொதுக்குழு உறுப்பினர் சசிகுமார் உள்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
- மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள் இருவர் சந்தியாவை மறித்து கத்தியை காட்டி மிரட்டியுள்ளனர்.
- இதுகுறித்து சந்தியா பீளமேடு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
கோவை,
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை சேர்ந்தவர் சந்தியா (வயது 21). இவர் கோவை மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் காசாளராக வேலை பார்த்து வருகிறார்.
சில நாட்களுக்கு முன்பு இவர் தனது சொந்த ஊரான அறந்தாங்கிக்கு சென்றார். பின்னர் நேற்று காலை மீண்டும் கோவைக்கு தனது அக்காவுடன் வந்தார். சம்பவத்தன்று 2 பேரும் கோவை நேரு நகரில் உள்ள தங்களது வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தனர்.
அப்போது திடீரென மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள் இருவர் சந்தியாவை மறித்து கத்தியை காட்டி மிரட்டியுள்ளனர். மேலும் கழுத்தில் அணிந்திருந்த 1 பவுன் தங்கசெயின் மற்றும் மொபைல் போனை அவரிடமிருந்து பறித்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த அவர் கத்தி சத்தம் போட்டார். அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வருவதற்குள் மர்மநபர்கள் தப்பி சென்றனர்.
பின்னர் இதுகுறித்து அவர் பீளமேடு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து நடத்திய விசாரணையில் நகை பறிப்பில் ஈடுபட்டது அதே பகுதியை சேர்ந்த தியாகராஜன் (19), சங்கர் (18) என்பது தெரியவந்தது. இவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
- ராணி நகையை திருடிவிட்டு வெளியே வரவும் தயாராக நின்ற காரில் ஏறி தப்பிச் சென்றது தெரியவந்தது.
- கைது செய்யப்பட்ட மதன்ராஜிடம் 4½ பவுன் தங்க நகை பறிமுதல் செய்யப்பட்டது.
சூலூர்,
சூலூர் அருகே கலங்கல் செல்லும் பாதையில் வசிக்கும் கண்ணன் (44) தனது வீட்டின் கீழ் தளத்தில் நகைக்கடை நடத்தி வருகிறார். கடந்த 13-ந் தேதி கடையில் உரிமையாளர் கண்ணன் மற்றும் தங்க வேலை செய்யும் ஆசாரி சீனிவாசன் ஆகியோர் இருந்தனர். அப்போது பர்தா அணிந்த பெண் ஒருவர் கடைக்கு வந்து தன்னிடம் 13 பவுன் பழைய தங்க நகை உள்ளது, அதை மாற்றி எனக்கு 10 பவுன் புதிய தங்க நகை தருமாறு கேட்டார்.
நகைக்கடை உரிமையாளர் 13 பவுன் பழைய தங்க நகையை உரசி பார்க்க திரும்பிய போது அங்கிருந்த புதிய 10 பவுன் தங்க நகைகளை எடுத்துக்கொண்டு தயாராக இருந்த காரில் அந்த பெண் தப்பி ஓடி விட்டார்.
இதையடுத்து கண்ணன் சூலூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். சூலூர் போலீசார் கண்காணிப்பு காமிரா காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர்.
விசாரணையில் நகை கடையில் 10 பவுன் நகையை திருடிச் சென்றது சேலம் மாவட்டம் மணியனூர் காந்தி நகரைச் சேர்ந்த மதன்ராஜ் (வயது 40) மற்றும் அவரது உறவுப் பெண் காட்பாடியைச் சேர்ந்த ராணி (35) என்பது தெரியவந்தது. 2 பேரும் திட்டமிட்டே அந்த நகைக்க டைக்கு சென்றுள்ளனர்.
மதன்ராஜ் காருடன் வெளியே தயாராக நின்றுள்ளார். ராணி நகையை திருடிவிட்டு வெளியே வரவும் தயாராக நின்ற காரில் ஏறி தப்பிச் சென்றது தெரியவந்தது. இவர்களில் மதன்ராஜ் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து 4½ பவுன் தங்க நகை பறிமுதல் செய்யப்பட்டது.
ராணி தலைமறைவாக உள்ளார். அவரை பிடிக்க போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகிறார்கள்.
- செங்குளம் பகுதியில் இருந்து மழைக்காலங்களில் அதிக உபரி நீர் வெளியேறுகிறது.
- பில்லூர் அணை 3-வது குடிநீர் திட்டம் ஜூலை மாதம் கடைசி வாரத்தில் பயன்பாட்டுக்கு வரும்.
கோவை,
கோவை மாநகராட்சி சாதாரண கூட்டம் மேயர் கல்பனா ஆனந்தகுமார் தலைமையில் இன்று நடைபெற்றது. துணை மேயர் வெற்றிசெல்வன், மாநகராட்சி கமிஷனர் பிரதாப் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
வழக்கமாக திருக்குறள் வாசிப்பு மற்றும் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழியுடன் கூட்டம் தொடங்கும். இன்று முதல் தமிழ்த்தாய் வாழ்த்து பாடி கூட்டம் தொடங்கியது.
கூட்டத்தில் காங்கிரஸ் கவுன்சிலர் நவீன்குமார், அமைச்சர் செந்தில்பாலாஜியை பதவியில் இருந்து நீக்கி, பின்னர் அந்த உத்தரவை ரத்து செய்த கவர்னரின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து பேசினார். அவரது பேச்சை தி.மு.க. மற்றும் காங்கிரஸ் கவுன்சிலர்கள் வரவேற்று மேஜையை தட்டினர்.
தொடர்ந்து பேசிய கவுன்சிலர்கள் தங்கள் வார்டுகளில் குடிநீர் பிரச்சினை இருப்பதாகவும், பில்லூர் அணை 3-வது குடிநீர் திட்டம் எப்போது தொடங்கும் என சரமாரியகா கேள்வி எழுப்பினர். மேலும் தெருநாய்கள் தொல்லை இருப்பதாகவும் தெரிவித்தனர்.
அதற்கு பதில் அளித்து மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் பேசியதாவது:-
மாநகராட்சி பகுதியில் தெருநாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இந்த ஒரு மாதத்தில் மட்டும் 600 நாய்கள் பிடிக்கப்பட்டு உள்ளது.
பருவமழை பெய்யாததால் சிறுவாணி அணையில் தண்ணீர் குறைந்து விட்டது. இதனால் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. ஜூலை முதல் வாரத்தில் மழை பெய்யும் என்று எதிர்பார்க்கிறோம். மழை பெய்தால் தண்ணீர் பிரச்சினை சீராகும்.
பில்லூர் அணை 3-வது குடிநீர் திட்டம் பணிகள் வேகமாக நடந்து வருகிறது. ஜூலை மாதம் கடைசி வாரத்தில் அந்த திட்டம் பயன்பாட்டுக்கு வரும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் நிறை வேற்றப்பட்ட முக்கிய தீர்மானங்கள் வருமாறு:-
கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம் 88-வது வார்டுக்கு உட்பட்ட செங்குளம் பகுதியில் இருந்து மழைக்காலங்களில் அதிக உபரி நீர் வெளியேறுகிறது. அங்கு வடிகால் இல்லாத காரணத்தினால் அருகில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் சூழ்ந்து மக்கள் பெரும் அவதிக்கு ஆளாகிறார்கள். குடியிருப்பு பகுதிகளான அம்மன் கோவில் சாலை, குறிஞ்சி நகர், லவ்லி கார்டன், எஸ்.என்.ஆர். கார்டன், பிரண்ட்ஸ் அவென்யூ, வசந்தம் நகர், வசந்தம் கார்டன், கிளாசிக் பார்க், மகாராஜா காலனி ஆகிய பகுதிகளில் மழைநீர் சூழ்ந்து பொதுமக்கள் சிரமப்படுகின்றனர்.
எனவே இந்த பகுதியில் சின்ன சுடுகாடு முதல் எஸ்.என்.ஆர்.கார்டன் 1-வது வீதி வரையில் மழைநீர் வடிகால் அமைத்து மழைக்காலத்தில் செங்குளத்தில் இருந்து வரும் உபரி நீர் மற்றும் மழை நீரை வெளியேற்ற மாநகராட்சி முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்காக ரூ. 97 லட்சத்தில் பணிகள் மேற்கொள்ள தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கோவை மாநகராட்சியில் ஒருங்கிணைந்த பாதாள சாக்கடை திட்டம் பழைய 60 வார்டுகளுக்கு ஜவகர்லால் நேரு தேசிய நகர்ப்புற புனரமைப்பு திட்டத்தின் கீழ் ரூபாய் 377.13 கோடி செலவில் மேற்கொள்ள நிர்வாக அனுமதி பெறப்பட்டது. மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
- அய்யனார் திடீரென நெஞ்சு வலியில் மயங்கி விழுந்து சரிந்தார்.
- ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோவை,
சேலம் தடாகப்பட்டியை சேர்ந்தவர் அய்யனார் (வயது 33). கூலி தொழிலாளி. இவர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு கோவை மத்திய ஜெயிலில் தண்டனை கைதியாக இருந்து வந்ததாக தெரிகிறது.
சம்பவத்தன்று இவர் திடீரென நெஞ்சு வலியில் மயங்கி விழுந்து சரிந்தார். அவரை ஜெயில் போலீசார் உடனடியாக மீட்டு ஜெயில் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு 108 ஆம்புலன்சு மூலம் கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- வேல்முருகன் கருத்து வேறுபாடு காரணமாக தனது பெற்றோர் மற்றும் அண்ணனுடன் பேசாமல் இருந்ததாக தெரிகிறது.
- புகாரின் பேரில் கே.ஜி.சாவடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோவை,
சேலம் மாவட்டம் அம்மாப்பேட்டையை சேர்ந்தவர் வேல்முருகன் (வயது 24). இவர் கோவைபுதூரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் படித்துள்ளார். வேல்முருகன் கருத்து வேறுபாடு காரணமாக தனது பெற்றோர் மற்றும் அண்ணனுடன் பேசாமல் இருந்ததாக தெரிகிறது.
தான் படித்த கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றும் ஒருவரது வீடு கோவை கே.ஜி. சாவடியில் உள்ளது. சம்பவத்தன்று பேராசிரியர் வீட்டுக்கு வேல்முருகன் வந்தார். அங்கு அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்த புகாரின் பேரில் கே.ஜி.சாவடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.






