என் மலர்
கோயம்புத்தூர்
- மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர்கள் கைவரிசை காட்டினர்.
- வடவள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து வாலிபர்களை தேடி வந்தனர்.
கோவை,
கோவை வடவள்ளி அருகே உள்ள ராஜமாதா நகரை சேர்ந்தவர் சத்யதேவ். இவரது மனைவி லட்சுமி பிரபா (வயது 36). சம்பவத்தன்று இவர் தனது குழந்தையுடன் மொபட்டில் சென்று கொண்டு இருந்தார்.
அப்போது எதிரே மோட்டார் சைக்கிளில் வந்த 20 வயது மதிக்கத்தக்க 2 வாலிபர்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் லட்சுமி பிரபா கழுத்தில் அணிந்து இருந்த 1 ½ பவுன் தங்க செயினை பறித்து தப்பிச் சென்றனர். சுண்டப்பாளையம் விநாயகர் கோவில் வீதியை சேர்ந்தவர் கார்த்திக்.
இவரது மனைவி உமாதேவி (27). சம்பவத்தன்று இவர் தனது மொபட்டில் 2 குழந்தைகளை ஏற்றிக்கொண்டு கெம்பனூரில் உள்ள தோழி ஒருவரின் வீட்டிற்கு சென்றார். பின்னர் குழந்தைகளுடன் மொபட்டில் வீட்டிற்கு புறப்பட்டார். அப்போது மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்து வந்த 2 வாலிபர்கள் உமாதேவி கழுத்தில் அணிந்து இருந்த 5 பவுன் தங்க செயினை பறித்து தப்பிச் சென்றனர்.
இந்த 2 செயின் பறிப்பு சம்பவம் குறித்து வடவள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வாலிபர்களை தேடி வருகிறார்கள்.
சோமையனூர் அருகே உள்ள திருவள்ளூவர் நகரை சேர்ந்தவர் இளங்கோவன். இவரது மனைவி மேகலா (50). சம்பவத்தன்று இவர் அந்த பகுதியில் உள்ள கம்பெனிக்கு வேலைக்கு சென்றார். வேலை முடிந்ததும் பஸ் ஏறுவதற்காக பஸ் நிறுத்தத்துக்கு நடந்து சென்றார். அப்போது மேகலாவை மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்து வந்த 2 வாலிபர்கள் கண்இமைக்கும் நேரத்தில் அவர் கழுத்தில் அணிந்துஇருந்த 3 ½ பவுன் தங்க செயினை பறித்து தப்பிச் சென்றனர்.
குப்பநாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகள் கீர்த்தனா (24). சம்பவத்தன்று இவர் ரெயில் நிலையம் அருகே உள்ள தனியார் கம்பெனியில் வேலையை முடித்து விட்டு கே.என்.ஜி. புதூர் அருகே இறங்கி வீட்டிற்கு நடந்து சென்றார். அப்போது பின் தொடர்ந்து வந்த 2 வாலிபர்கள் கீர்த்தனா கழுத்தில் அணிந்து இருந்த 1 பவுன் தங்க செயினை பறித்து தப்பிச் சென்றனர்.
செயினை பறிகொடுத்த பெண்கள் இது குறித்து துடியலூர் போலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வாலிபர்களை தேடி வருகிறார்கள்.
- சிறப்பு முகாம் இன்று முதல் 30-ம் தேதி வரை மேற்கொள்ளப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- தெருநாய்கள் சம்பந்தமான புகார்களை தெரிவிக்க தன்னார்வலர்களின் கைப்பேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
கோவை,
கோவை மாநகரில் தெருநாய்களுக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள சிறப்பு முகாம் இன்று முதல் 30-ம் தேதி வரை மேற்கொள்ளப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாநகராட்சி ஆணையர் பிரதாப் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கோவை மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் தெருநாய்களை கட்டுப்படுத்தும் பணியானது, இரு தொண்டு நிறுவனங்கள் மூலமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில், கிழக்கு, தெற்கு மற்றும் மத்திய மண்டலங்கள், பிராணி மித்ரன் என்ற தொண்டு நிறுவனத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
மேற்கு, வடக்கு மண்ட லங்களுக்கு ஹியூமன் அனிமல் சொசைட்டி என்ற தொண்டு நிறுவனத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு தெருநாய்களை பிடிக்க வாகனங்கள் வழங்கப்பட்டு உள்ளன.மேலும், சீரநாய்க்கன்பாளையம், ஒண்டிப்புதூர், உக்கடம், ஆகிய பகுதிகளில் ஆதரவற்ற நாய்களுக்கான கருத்தடை அறுவை சிகிச்சை மற்றும் வெறிநோய் தடுப்பூசி செலுத்த முகாம் நடைபெறுகிறது. மக்கள், தெருநாய்கள் சம்பந்தமான புகார்களை தெரிவிக்க 99444 34706, (பிராணி மித்ரன்), 93661 27215 (ஹியூமன் அனிமல் சொசைட்டி) ஆகிய தன்னார்வலர்களின் கைப்பேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
சம்பந்தப்பட்ட மாநகராட்சி உதவி ஆணையர்கள், சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் சுகாதார அலுவலர்களைத் தொடர்பு கொண்டும் புகார் தெரிவிக்கலாம். சாலை மற்றும் தெருக்களில் போக்குவரத்துக்கும், மக்களுக்கும் இடையூறு ஏற்படுத்துவதால், தன்னார்வலர்களைக் கொண்டு வாகனங்கள் மூலமாக தெருநாய்களை பிடிக்க ஏற்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தன்னார்வலர்களுக்கு, மக்கள் முழு ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
- கள்ளக்காதல் விவகாரம் அக்கம் பக்கத்தினர் மூலமாக இளம்பெண்ணின் கணவருக்கு தெரிய வந்தது.
- இளம்ெபண்ணின் கணவர் ஆழியாறு போலீசில் புகார் செய்தார்.
கோவை,
கோவை மாவட்டம் ஆழியாறு அருகே உள்ள அர்த்தனாரிபாளையத்தை சேர்ந்த 24 வயது இளம்பெண். இவருக்கு திருமணமாகி கணவர் உள்ளார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு இளம்பெண்ணுக்கு அதே பகுதியை சேர்ந்த திருமணமாகாத வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது.
இளம்பெண் அவரது கணவர் வேலைக்கு செல்லும் நேரத்தில் வாலிபரை வீட்டிற்கு அழைத்து அவருடன் ஜாலியாக இருந்து வந்தார்.
இந்த கள்ளக்காதல் விவகாரம் அக்கம் பக்கத்தினர் மூலமாக இளம்பெண்ணின் கணவருக்கு தெரிய வந்தது. அவர் தனது மனைவியை கண்டித்தார். இதன் காரணமாக கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
சம்பவத்தன்று இளம்பெண்ணின் கணவர் வேலைக்கு சென்று இருந்தார். அப்போது வீட்டில் தனியாக இருந்த இளம்பெண் தனது கள்ளக்காதலனுடன் ஓட்டம் பிடித்தார்.
வேலை முடிந்து வீட்டிற்கு திரும்பிய இளம்பெண்ணின் கணவர் அவரது மனைவி வீட்டில் இல்லாதது கண்டு அதிர்ச்சியடைந்தார். அவரை அக்கம் பக்கத்தில் தேடினார். ஆனால் எந்த பலனும் இல்லை.
இது குறித்து அவர் மாயமான தனது மனைவியை கண்டுபிடித்து தரும்படி ஆழியாறு போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கள்ளக்காதலனுடன் ஓட்டம் பிடித்த இளம்பெண்ணை தேடி வருகிறார்கள்.
- ஊட்டி வெள்ளைப்பூண்டு கிலோவுக்கு ரூ.150 முதல் ரூ.350 வரை விற்பனையானது.
- வெளியூர் வரத்தும் குறைந்ததால் மேலும் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
மேட்டுப்பாளையம்,
மேட்டுப்பாளையம் - அன்னூர் சாலையில் காய்கறி மண்டி செயல்பட்டு வருகிறது. இங்கு நீலகிரி மாவட்டத்தில் விளையும் உருளைக்கிழங்கு, முட்டைக் கோஸ், பூண்டு, தக்காளி, டர்னீப், கேரட், பீன்ஸ், பீட்ரூட், வெள்ளைப்பூண்டு, இஞ்சி உள்ளிட்ட பல்வேறு காய்கறிகளை விவசாயிகள் கொண்டு வந்து ஏலமுறையில் விற்பனை செய்து வருகின்றனர்.
மேட்டுப்பாளையம் காய்கறி மண்டிக்கு கர்நாடகா, ஆந்திரா, அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து உருளைக்கிழங்கும், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், ஹிமாச்சல்பிரதேசம், காஷ்மீரில் இருந்து வெள்ளைப்பூண்டும் இறக்குமதி செய்யப்பட்டு விற்கப்படுகிறது.
அதேபோல மத்திய பிரதேசம், ராஜஸ்தான், இமாச்சல் பிரதேசம் காஷ்மீர் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும், நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வெள்ளைப்பூண்டு கொண்டு வரப்பட்டு விற்கப்பட்டு வருகிறது.
ஊட்டியில் தற்போது வெள்ளைப்பூண்டு சீசன் இல்லை. எனவே வெளிமாநில வெள்ளைப்பூண்டு மட்டுமே தற்போது அதிகளவில் விற்கப்பட்டு வருகிறது. மேட்டுப்பாளையம் காய்கறி மண்டியில் தற்போது வெளிமாநில பூண்டு கிலோவுக்கு ரூ.85 முதல் அதிகபட்சமாக ரூ.145 வரை விற்பனை செய்யப்படுகிறது.
அடுத்தபடியாக இருப்பு வைக்கப்பட்ட ஊட்டி வெள்ளைப்பூண்டு கிலோவுக்கு ரூ.150 முதல் ரூ.350 வரை விற்பனை ஆகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். அதே நேரத்தில் வெள்ளைப்பூண்டு விலை ஏற்றத்தால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.
இதுகுறித்து வெள்ளைப் பூண்டு மண்டி உரிமையாளர் ஜோசப் பேபி கூறுகையில், கடந்த ஆண்டு வெள்ளைப் பூண்டிற்கு போதிய விலை கிடைக்கவில்லை. இதனால் அதிகபட்சமாக கிலோவுக்கு ரூ.50 வரை மட்டுமே விற்பனை ஆனது.எனவே விவசாயிகளில் 50 சதவீதம் பேர் வெள்ளைப் பூண்டு பயிரிடுவதில் போதிய ஆர்வம் காட்டவில்லை.
இதனால் தற்போது வரத்து குறைவாக உள்ளது. எனவே, ஊட்டி வெள்ளைப் பூண்டு கிலோ ஒன்றிற்கு ரூ.150 முதல் ரூ.350 வரை விற்பனையாகிறது.
வெளி மாநிலங்களில் இருந்து கொண்டு வரப்படும் வெள்ளைப்பூண்டு கிலோ ஒன்றிற்கு ரூ.85 முதல் ரூ.145 வரை விற்பனையாகிறது. இந்த விலையேற்றம் இனிவரும் காலங்களில் மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என தெரிவித்தார்.
- மொத்தம் 334 அறை கண்காணிப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
- தேர்வு மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
கோவை,
இன்று நாடு முழுவதும் யு.பி.எஸ்.சி. தேர்வு நடந்து வருகிறது. கோவை மாவட் டத்தில் 8 மையங்களில் இந்த தேர்வானது நடந்தது.
கோவையில் 8 மையங்களில் யுபிஎஸ்சி தேர்வு நடைபெற்றது. இதனையொட்டி காலையிலேயே தேர்வர்கள் தேர்வு மையங்களுக்கு வந்திருந்தனர்.
தேர்வு மையத்திற்கு வந்ததும், அவர்களின் ஹால் டிக்கெட் உள்ளிட்டவற்றை சரி பார்த்து விட்டு தேர்வு அறைக்கு அனுப்பினர்.பின்னர் தேர்வறைக்கு சென்று தேர்வர்கள் தேர்வினை எழுதினர்.
இந்த தேர்வினையொட்டி மத்திய அரசுப்பணியாளர் தேர்வாணைய மாவட்ட ஒருங்கிணைப்பு மேற்பார்வையாளர், மாவட்ட ஆட்சியரின் தலைமையில் துணை ஆட்சியர் நிலையில் 2 உதவி ஒருங்கிணைப்பு மேற்பார்வையாளர்கள், வட்டாட்சியர் நிலையில் 8 தேர்வு மையங்களுக்கு தலா ஒரு தேர்வு மைய உதவி கண்காணிப்பாளர்கள், 171 அறைக் கண்காணிப்பாளர்கள் மாவட்ட நிர்வாகத்தின் மூலமும், 163 அறைக் கண்காணிப்பாளர்கள் தேர்வு மைய கண்காணிப்பாளர்கள் மூலமும் என மொத்தம் 334 அறை கண்காணிப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.தேர்வின் செயல்பாடுகளை ஆய்வு செய்ய மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் துணை செயலர் நிலையில் அலுவலர் ஒருவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர்கள் தேர்வு அறைகளில் அடிக்கடி ஆய்வு மேற்கொண்டனர்.
ேதர்வினையொட்டி தேர்வு மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது. தேர்வு மையங்களுக்கு செல்வதற்கு வசதியாக கோவை உக்கடம், சிங்காநல்லூர், சூலூர், காந்திபுரம் பஸ் நிலையங்களில் இருந்து பஸ்களும் இயக்கப்பட்டன.
- சிங்காநல்லூர் 57-வது வார்டுக்கு உட்பட்ட ஒண்டிப்புதூரில் குப்பைகளை தரம் பிரிக்கும் நுண்ணுயிர் உரக்கிடங்கு உள்ளது.
- தீயணைப்பு துறையினர் தீயை சுமார் ஒரு மணி நேரம் போராடி கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர்.
பீளமேடு,
கோவை மாநகராட்சி சிங்காநல்லூர் 57-வது வார்டுக்கு உட்பட்ட ஒண்டிப்புதூரில் குப்பைகளை தரம் பிரிக்கும் நுண்ணுயிர் உரக்கிடங்கு உள்ளது.
இந்த உரக்கிடங்கில் இன்று அதிகாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. உரக்கிடங்கில் இருந்து புகை வெளியேறியது.இதனை பார்த்தவர்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர். ஆனால் அவர்கள் வருவதற்கு தீ மலமலவென பரவியது.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை சுமார் ஒரு மணி நேரம் போராடி கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர்.
இந்த தீ விபத்தின் காரணமாக உரக்கிடங்கில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து சிங்காநல்லூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் இது குறித்து தகவல் அறிந்ததும் கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல உதவி கமிஷனர் செந்தில்குமரன், கோவை மாநகராட்சி உதவி நிர்வாக பொறியாளர் ராமசாமி, சுகாதார அலுவலர் ஜீவன்முருகதாஸ் ஆகியோரும் ஆய்வு செய்து வருகின்றனர்.
இந்தநிலையில் தகவல் அறிந்த முன்னாள் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினரும் கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளருமான நா.கார்த்திக் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். யாரும் இல்லாத நேரத்தில் தீ விபத்து ஏற்பட்டதால் உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டன.
- பிள்ளையார்புரத்தில் இருந்து மேடு பள்ளம் நிறைந்த மண் ரோடு வழியாக, 2 கி.மீ. கடந்துதான் செல்ல வேண்டி உள்ளது.
- பிள்ளையார்புரம்-நாகராஜபுரம் ரோட்டில் போலீசார் அடிக்கடி ரோந்து பணியில் ஈடுபட வேண்டும்.
குனியமுத்தூர்,
கோவை சுந்தராபுரம் -மதுக்கரை சாலையில், பிள்ளையார்புரம் செல்லும் வழியில் நாகராஜபுரம் உள்ளது. இது கோவை மாநகராட்சி 97-வது வார்டுக்கு உட்பட்டது. இங்கு 1000-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.
நாகராஜபுரத்தில் அடிப்படை வசதிகள் இல்லை. பிள்ளையார்புரத்தில் இருந்து மேடு பள்ளம் நிறைந்த மண் ரோடு வழியாக, 2 கி.மீ. கடந்துதான் செல்ல வேண்டி உள்ளது. அங்கு வழிநெடுகிலும் மின்சாரம் இல்லை. எனவே அந்த பகுதி முழுவதும் இருள்சூழ்ந்து காட்சியளிக்கிறது.
இதனால் அங்கு குடிமகன்களின் தொல்லை மட்டுமின்றி கூடவே வழிப்பறி, மிரட்டல் ஆகிய சம்பவங்களும் தொடர்கதையாக உள்ளது.
எனவே பள்ளி, கல்லூரி முடிந்து வரும் மாணவ, மாணவிகள், வேலை முடிந்து வீடு திரும்பும் பெண்கள் உள்ளிட்ட அனைவரும் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர்.
எனவே பிள்ளையார்புரம்-நாகராஜபுரம் ரோட்டில் போலீசார் அடிக்கடி ரோந்து பணியில் ஈடுபட வேண்டும். இங்கு 30 நாட்களுக்கு ஒரு முறை தான் போர்வெல் தண்ணீர் வருகிறது. எனவே மாநகராட்சி நிர்வாகம் இந்த விஷயத்தில் உடனடியாக தலையிட்டு, நாகராஜபுரம் கிராமத்தில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும் என்று அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
- சம்பவத்தன்று மாலையில் சாந்தி வீட்டை பூட்டி விட்டு தனது மகன் வீட்டிற்கு சென்றார்.
- சாந்தி ராமநாதபுரம் போலீசில் புகார் அளித்தார்.
கோவை,
கோவை சுங்கம் பைபாஸ் ரோடு, சிவராம் நகரை சேர்ந்தவர் சண்முகம். வக்கீல். இவரது மனைவி சாந்தி (வயது 58).
சம்பவத்தன்று மாலையில் இவர் வீட்டை பூட்டி விட்டு தனது மகன் வீட்டிற்கு சென்றார். இரவில் வீட்டுக்கு திரும்பி வந்தார். அப்போது வீட்டு கதவு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அவர் அதிர்ச்சியடைந்தார்.
வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 18 பவுன் நகை, ரூ.40 ஆயிரம் பணம், 1 ஜோடி வெள்ளி தோடு, வெள்ளி செயின், வெளி நாட்டு பணம் ஆகியவை மாயமாகி இருந்தது.இவர் வெளியில் சென்றதை நோட்டமிட்ட மர்மநபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து, நகை பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.
இதுகுறித்து அவர் ராமநாதபுரம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- மணிகண்டனை பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
- வெங்கடேஷ் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோவை,
கோவை மாவட்டம் கோட்டூர் அருகே உள்ள சோமந்துதுறையை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது30). கூலித் தொழிலாளி.
இவர் திருமணமாகி தனது மனைவியை பிரிந்து பெற்றோருடன் வசித்து வருகிறார். இவரது தம்பி வெங்கடேஷ் (23). இவருக்கு இன்னும் திருமணம் ஆக வில்லை.
இவரும், மணிகண்டனுடன் வசித்து வந்தார். சம்பவத்தன்று வெளியே சென்ற இவர் ஒரு பெண்ணை அழைத்துக் கொண்டு வீட்டிற்கு வந்தார்.
வீட்டில் இருந்த மணிகண்டன் தனது தம்பி, ஒரு பெண்ணுடன் வருவதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். பின்னர் அவர் தனது தம்பி வெங்கடேஷிடம் இது யார் என்று கேட்டார்.
அதற்கு அவர் 2 பேரும் திருமணம் செய்து கொண்டதாக கூறினார். மேலும் வீட்டில் தங்க அனுமதி வேண்டும் என கேட்டார். இதற்கு மணிகண்டன் எதிர்ப்பு தெரிவித்தார்.
அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. இதில் ஆத்திரம் அடைந்த வெங்கடேஷ் அங்கு இருந்த கல்லை எடுத்து தனது அண்ணன் மணிகண்டனின் தலையில் தாக்கினார். பின்னர் பெண்ணுடன் அங்கு இருந்து தப்பிச் சென்றார்.
தாக்குதலில் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய அவரை அங்கு இருந்தவர்கள் மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு மணிகண்டனுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
இது குறித்து கோட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பெண்ணுடன் வீட்டிற்கு வந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்த அண்ணனை தாக்கிய வெங்கடேஷ் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- தேர்வு மையங்களில் கைப்பேசி ஜாமர்கள் பொருத்தப்பட்டுள்ளன.
- மத்திய அரசால் வழங்கப்பட்டுள்ள அடையாள அட்டைகளில் ஏதாவது ஒன்று எடுத்து வர வேண்டும்
கோவை,
யுபிஎஸ்சி தேர்வு கோவை மாவட்டத்தில் 8 மையங்களில் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 2) நடைபெறவுள்ளது.
இது குறித்து மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி கூறியுள்ளதாவது:-
கோவை மாவட்டத்தில் 8 மையங்களில் நடைபெறும் இந்தத் தேர்வை 7,815 பேர் எழுதவுள்ளனர். மத்திய அரசுப்பணியாளர் தேர்வாணைய மாவட்ட ஒருங்கிணைப்பு மேற்பார்வையாளர், மாவட்ட ஆட்சியரின் தலைமையில் துணை ஆட்சியர் நிலையில் 2 உதவி ஒருங்கிணைப்பு மேற்பார்வையாளர்கள், வட்டாட்சியர் நிலையில் 8 தேர்வு மையங்களுக்கு தலா ஒரு தேர்வு மைய உதவி கண்காணிப்பாளர்கள், 171 அறைக்கண்காணிப்பாளர்கள் மாவட்ட நிர்வாகத்தின் மூலமும், மேலும் 163 அறைக் கண்காணிப்பாளர்கள் தேர்வு மைய கண்காணிப்பாளர்கள் மூலமும் என மொத்தம் 334 அறை கண்காணிப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
தேர்வின் செயல்பாடுகளை ஆய்வு செய்ய மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் துணை செயலர் நிலையில் அலுவலர் ஒருவரும் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
காவல் துறையினரால் தேர்வு மையங்களுக்கு போதுமான பாதுகாப்பு வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
தேர்வு மையங்களில் கைப்பேசி ஜாமர்கள் பொருத்தப்பட்டுள்ளன. தேர்வு மையங்களுக்கு மாணவர்கள் எளிதில் செல்லும் வகையில், உக்கடம், சிங்காநல்லூர், சூலூர், காந்திபுரம் பஸ் நிலையங்களில் இருந்து பஸ் வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
தேர்வர்கள் தேர்வு தொடர்பான அறிவுரைகளை பெறும் வகையில் ஒரு மணி நேரத்திற்கு முன்பாகவே வர வேண்டும்.
யுபிஎஸ்சி இணையதளம் வழியே பதிவிறக்கம் செய்யப்பட்ட நுழைவுச்சீட்டு மற்றும் தேர்வரின் புகைப்படத்துடன் கூடிய ஆதார், ஓட்டுநர் உரிமம் போன்ற மத்திய அரசால் வழங்கப்பட்டுள்ள அடையாள அட்டைகளில் ஏதாவது ஒன்று, பாஸ்போர்ட் அளவிலான புகைப்படம் ஒன்றை எடுத்து வர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- சுகுணா வீட்டுக்குள் மர்மநபர்கள் 3 பேர் அத்துமீறி நுழைந்தனர்.
- போலீசார் நாகேந்திரனை கைது செய்தனர்.
கோவை,
கோவை இருகூரை சேர்ந்தவர் செல்வன். கட்டிட தொழிலாளி. இவரது மனைவி சுகுணா (வயது 39).
சம்பவத்தன்று இவர் தனது வீட்டில் தனியாக இருந்தார். அப்போது வீட்டுக்குள் மர்மநபர்கள் 3 பேர் அத்துமீறி நுழைந்தனர்.
அவர்கள் சுகுணாவிடம் கத்தியை காட்டி மிரட்டி கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் தங்க நகைகளை பறித்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த அவர் அலறல் சத்தம் போட்டார். அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். ஆனால் வருவதற்குள் மர்மநபர்கள் தப்பி ஓடினர்.
இதுகுறித்து அவர் சிங்காநல்லூர் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் இளம்பெண்ணிடம் நகை பறித்தது வேதாரண்யத்தை சேர்ந்த நாகேந்திரன்(39) மற்றும் அவரது நண்பர்கள் என்பது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் நாகேந்திரனை கைது செய்தனர். தலைமறைவான மற்ற 2 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.
- காதல் விவகாரம் மாணவியின் பெற்றோருக்கு தெரிய வரவே அவர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
- மாணவியின் பெற்றோர் மேட்டுப்பாளையம் போலீசில் புகார் அளித்தனர்.
கோவை,
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் 19 வயது மாணவி. இவர் கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார்.
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மாணவிக்கு சமயபுரத்தை சேர்ந்த வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது.
2 பேரும் அடிக்கடி நேரில் சந்தித்தும் செல்போனில் பேசியும் தங்களது காதலை வளர்த்து வந்தனர். இந்த காதல் விவகாரம் மாணவியின் பெற்றோருக்கு தெரிய வரவே அவர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் ஒழுங்காக படிக்குமாறு தங்களது மகளுக்கு அவர்கள் அறிவுரை கூறினர்.
சம்பவத்தன்று வீட்டில் இருந்த மாணவி தனது பெற்றோரிடம் கடைக்கு செல்வதாக கூறி விட்டு சென்றார். பின்னர் அவர் தனது காதலனுடன் ஓட்டம் பிடித்தார்.
நீண்ட நேரம் ஆகியும் மகள் வீட்டுக்கு திரும்பி வராததால் அச்சம் அடைந்த பெற்றோர் அவரை அக்கம் பக்கத்தில் தேடினர். ஆனால் அவர் கிடைக்கவில்லை. இது குறித்து அவர்கள் மேட்டுப்பாளையம் போலீசில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து காதலனுடன் ஓட்டம் பிடித்த கல்லூரி மாணவியை தேடி வருகிறார்கள்.
ராமசாமி நகரை சேர்ந்தவர் 18 வயது கல்லூரி மாணவி. இவர் சரவணம்பட்டியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.டெக். முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு மாணவிக்கு வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் இது காதலாக மாறியது.
சம்பவத்தன்று மாணவி தனது பெற்றோரிடம் கல்லூரிக்கு செல்வதாக கூறி விட்டு சென்றார். ஆனால் அவர் கல்லூரி முடிந்து நீண்ட நேரம் ஆகியும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இது குறித்து மாணவியின் பெற்றோர் மேட்டுப்பாளையம் போலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் மாணவி அவரது காதலனுடன் சென்றது தெரிய வந்தது. மாணவியை போலீசார் தேடி வருகிறார்கள்.






