என் மலர்
கோயம்புத்தூர்
- எச்சரிக்கை பலகைகள் வைக்க வலியுறுத்தி வருகின்றனர்
- திருச்சி சாலையில் பாலம் மற்றும் சாலை விரிவாக்க பணிகள் நடந்து வருகிறது.
சூலூர்,
சூலூர் அடுத்த பாப்பம்பட்டி பிரிவில் உள்ள திருச்சி சாலையில் பாலம் மற்றும் சாலை விரிவாக்க பணிகள் நடந்து வருகிறது. இதனால் சாலையை இரண்டாக பிரிக்க நடுவில் தடை கற்கள் வைக்கப்பட்டுள்ளன. இந்தத் தடை கற்களுக்கு அருகே எந்தவித எச்சரிக்கை பலகையும் வாகன ஓட்டிகளுக்கு தெரியும் வகையில் வைக்கவில்லை என்று கூறப்படுகிறது.இந்நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு இரவில் அந்த வழியே வந்த கார் ஒன்று மற்றொரு காரை முந்தியபோது இந்த சாலை தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் இன்ப துரைராஜ் என்பவருக்கும் அவருடன் வந்த மற்றொருவருக்கும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதேபோல மேலும் ஒரு கார் ஒன்று நிலைதடுமாறி சாலை தடுப்பில் மோதி தலைகுப்புற கவிழ்ந்தது. இப்பகுதியில் குறுகிய காலத்தில் 10-க்கும் மேற்பட்டவர்கள் அதே இடத்தில் விபத்தில் சிக்கியதாக தெரிகிறது. நெடுஞ்சாலை துறையினர் சாலை தடுப்பு அருகே போதிய எச்சரிக்கை பலகைகள் வைக்க வேண்டும் அல்லது பால வேலை நடைபெறும் இடம் வரை சாலை தடுப்பு கற்களை வைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதைத்தொடர்ந்து சூலூர் போலீசார் சாலையின் மத்தியில் சாலை தடுப்பு கற்களை முழுவதுமாக வைத்தனர். மேலும் அதன் மீது ஒளிரும் பட்டைகளையும் ஒட்டினர்.
- மாணவ-மாணவிகளுக்கு ஆடை கட்டுப்பாடு அமல்படுத்தப்பட்டுள்ளது.
- கல்லூரிகளில் முதுகலை படிப்புகளும் கற்றுத்தரப்பட்டு வருகின்றன.
கோவை,
கோவை மாவட்டத்தில் கோவை, தொண்டாமுத்தூர், மேட்டுப்பாளையம், வால்பாறை ஆகிய பகுதி களில் அரசு கலைக்கல்லூரி கள் இயங்கி வருகின்றன. புலியகுளத்தில் அரசு பெண்கள் கலைக்கல்லூரி உள்ளது.
இங்கு இளநிலை படிப்பு களான பி.ஏ தமிழ், ஆங்கி லம், வரலாறு, பி.காம், பி.எஸ்சி வேதியியல், இயற்பி யல், கணிதம் உள்பட 23 துறைகள் உள்ளன. இதுதவிர மேற்கண்ட கல்லூரிகளில் முதுகலை படிப்புகளும் கற்றுத்த ரப்பட்டு வருகின்றன.
கோவை அரசு கலைக்க ல்லூரியில் இளநிலை படிப்பு களுக்காக 1626 இடங்கள் காலியாக இருந்தன.
எனவே அங்கு இனசுழற்சி மற்றும் கலந்தாய்வு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்த ப்பட்டது. இதன்வாயிலாக 1494 இடங்கள் நிரப்பப்பட்டு உள்ளன.
இந்த நிலையில் கோவை அரசு கலைக்கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவ ர்களுக்கு இன்று முதல் வகுப்புகள் தொடங்கும் என்று கல்லூரி நிர்வாகம் ஏற்கனவே அறிவித்து இருந்தது.
முன்னதாக கல்லூரிக்கு வரும் மாணவ- மாணவி கள் நாகரீகமாக ஆடை அணிய வேண்டும். கால்கள் தெரியும் வகையில் அரை க்கால் பேண்ட் அணிந்து வரக்கூடாது என்பவை உள்ளிட்ட பல்வேறு கட்டு ப்பாடுகள் அறிவிக்கப்பட்டு இருந்தன. அதன்படி மாணவ மாணவிகள் நவநாகரீகமாக உடை அணிந்து வந்திருந்தனர்.
அவர்களுக்கு கல்லூரி நிர்வாகம் சார்பில் பூங்கொத்து கொடுத்து உற்சாக வரவேற்பு தரப்பட்டது. அடுத்தபடியாக சீனியர் மாணவர்கள் கல்லூரி வளாகத்தில் ஜூனியர்களுக்கு இனிப்பு வழங்கி வரவேற்றனர்.
கோவை அரசு கலைக்கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவ ர்களுக்கு வகுப்புகள் தொடங்கி நடந்து வருகிறது. இங்கு காலை 9 மணி முதல் 1.45 மணி வரையும், மதியம் 1.45 மணி முதல் மாலை 6 மணிவரை இரண்டு ஷிப்டு களாக வகுப்புகள் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதற்கிடையே கல்லூரி க்கு புதிதாக வரும் ஜூனியர் மாணவர்களை ராக்கிங் செய்யக்கூடாது என்று சீனியர் மாணவர்களுக்கு நிர்வாகம் ஏற்கனவே அறிவுறுத்தி உள்ளது.
இதனை கண்காணிக்கும் வகையில் பேராசிரியர்கள் அடங்கிய ஒரு கமிட்டியும் அமைக்கப்பட்டு உள்ளது. அவர்கள் கல்லூரி வளா கத்தில் தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுதவிர கல்லூரி வகுப்பறை மற்றும் வளாகத்தில், ராக்கிங் புகார் செய்வதற்காக, புகார் பெட்டிகளும் வைக்கப்பட்டு உள்ளன.
கோவை அரசு கலைக்க ல்லூரியில் மேலும் 132 இடங்கள் காலியாக உள்ளன. அவற்றை வராண்டா கவுன்சிலிங் மூலம் நிரப்புவது என்று கல்லூரி நிர்வாகம் முடிவு செய்து உள்ளது. இதற்கான மாணவர் சேர்க்கை வருகிற 7-ந்தேதி வரை நடக்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
எனவே கோவை அரசு கலைக்கல்லூரியில் சேர விரும்பும் மாணவர்கள் வராண்டா கவுன்சிலிங்கில் பங்கேற்று பயன்பெறலாம் என்று கல்லூரி நிர்வாகம் தற்போது அறிவித்து உள்ளது.
- கடந்த 5 மாதங்களில் மட்டும் 6 கோடி இளநீர்கள் வெளி மாநிலம், மாவட்டங்களுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு உள்ளன.
- கடந்த பிப்ரவரி மாதம் முதல் பொள்ளாச்சி இளநீர் விற்பனை கிடுகிடுவென அதிகரித்து வருகிறது.
பொள்ளாச்சி:
கோவை மாவட்டத்தில் பொள்ளாச்சி, ஆனைமலை, கிணத்துக்கடவு மற்றும் சுற்றுவட்டாரப்பகுதிகளில் லட்சத்துக்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் உள்ளன. இங்கு விளையும் செவ்விளநீர், பச்சை இளநீருக்கு தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் அமோக கிராக்கி உள்ளது.
எனவே அங்கு வசிக்கும் விவசாயிகள் தென்னை தோட்டங்களில் இளநீர்களை அறுவடை செய்து, வெளியூர்-வெளி மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இங்கு தற்போது ஒரு இளநீர் 35 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்படுகிறது.
பொள்ளாச்சி பகுதியில் விளையும் இளநீர் சற்று பெரிதாக இருக்கும். அதில் சுவை மிகுந்த தண்ணீர் அதிகம் இருக்கும். இது உடல்வெப்பத்தை தணிக்கும் இயற்கை அருமருந்து. எனவே தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, மும்பை, டெல்லி ஆகிய பகுதிகளிலும் பொள்ளாச்சி இளநீருக்கு அதிக மவுசு உண்டு.
எனவே பொள்ளாச்சி மற்றும் சுற்றுவட்டரப்பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தோட்டங்களில் இளநீரை அறுவடை செய்து லாரிகள் மூலம் தமிழகத்தின் ஒருசில மாவட்டங்கள் மட்டுமின்றி, பல்வேறு மாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்து வருகின்றனர்.
கடந்த 5 மாதங்களில் மட்டும் 6 கோடி இளநீர்கள் வெளி மாநிலம், மாவட்டங்களுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு உள்ளன.
இதுகுறித்து பொள்ளாச்சி விவசாயிகள் கூறுகையில், கோவை மாவட்டத்தில் கடந்த ஆண்டு வடகிழக்கு-தென்மேற்கு பருவமழை தொடர்ச்சியாக இருந்தது. எனவே தமிழகத்தில் இளநீர் விற்பனை சரிந்தது. இதனால் அப்போது ஒரு இளநீரின் கொள்முதல் விலை ரூ.17 ஆக இருந்தது.
ஆனால் நடப்பாண்டு பருவமழை சரிவர பெய்யவில்லை. இதனால் தமிழகம் முழுவதும் கடும் வெயில் சுட்டெரித்தது. எனவே கடந்த பிப்ரவரி மாதம் முதல் பொள்ளாச்சி இளநீர் விற்பனை கிடுகிடுவென அதிகரித்து வருகிறது.
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கும்வரை பொள்ளாச்சி இளநீர் ஏற்றுமதி தொடரும் என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்து உள்ளனர்.
- வால்பாறை பகுதியிலுள்ள மேல்நீராறு, கீழ்நீராறு, சோலையாறு அணைகளின் நீர் இருப்பும் உயரவில்லை.
- தென்மேற்கு பருவமழையால் ஆழியாறு அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து ரம்மியமாக காட்சியளிக்கும்.
பொள்ளாச்சி:
ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை மே மாத இறுதியில் தொடங்குவது வழக்கம். இந்தாண்டு ஜூலை முதல் வாரமாகியும், இதுவரை தென்மேற்கு பருவமழை தொடங்காததால், பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, ஆனைமலை ஆகிய பகுதிகளில் பருவமழையை பயன்படுத்தி நடைபெறும் விவசாய பணிகள் இதுவரை தொடங்கப்படவில்லை.
மேலும், வால்பாறை பகுதியிலுள்ள மேல்நீராறு, கீழ்நீராறு, சோலையாறு அணைகளின் நீர் இருப்பும் உயரவில்லை. நேற்று காலை நிலவரப்படி 72 அடி உயரம் கொண்ட பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் 19.05 அடியாகவும்,120 அடி உயரம் கொண்ட ஆழியாறு அணையின் நீர்மட்டம் 56.45 அடியாகவும் உள்ளது.
தென்மேற்கு பருவமழையால் ஆழியாறு அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து ரம்மியமாக காட்சியளிக்கும். தற்போது, அணைப்பகுதி தண்ணீர் இன்றி மண் திட்டுகளாகவும், பாறை முகடுகளாகவும் காட்சியளிக்கிறது. மழைப்பொழிவு இன்றி விவசாயம் பொய்த்துவிடும் சூழல் ஏற்படாமல் இருக்கவும், விரைவில் தென்மேற்கு பருவமழை பெய்து அணைகளின் நீர்மட்டம் உயர வேண்டியும் ஆழியாறு அணையின் மீது உள்ள விநாயகர் கோவிலில் விவசாயிகள் கணபதி யாகம் நடத்தினர்.
ஆழியாறு அணை உதவி செயற்பொறியாளர் சிங்கார வேல், உதவிப் பொறியாளர் கார்த்திக் கோகுல் மற்றும் விவசாயிகள் பங்கேற்றனர்.
- வாக்குவாதம் முற்றவே ஆத்திரம் அடைந்த நண்பர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து அங்கிருந்த கட்டையை எடுத்து விஜயராகவனை சரமாரியாக தாக்கினர்.
- கால்வாயை திறந்து பார்த்த போது உள்ளே வாலிபர் ஒருவர் இறந்த நிலையில் கிடந்தார்.
சூலூர்:
திருவாரூரை சேர்ந்தவர் ரவி (60). இவரது மகன் விஜயராகவன் (வயது44). இவருக்கு திருமணமாகி விட்டது.
திருமணம் ஆன சில ஆண்டுகளிலேயே கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.
இதனால் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டில் விஜயராகவனை அவரது மனைவி பிரிந்து சென்று விட்டார். இதன் காரணமாக விஜயராகவன் தனியாக வசித்து வந்தார்.
இந்த நிலையில் விஜயராகவன் திருவாரூரில் இருந்து கோவை செங்கத்துறைக்கு வந்தார்.
அங்கு தனது தந்தை ரவி மற்றும் நண்பர் ஸ்டாலின் (45) ஆகியோருடன் தங்கி கட்டிட வேலைக்கு சென்று வந்தார். இவர்களுடன் திருவாரூரை சேர்ந்த மேலும் சிலரும் தங்கி இருந்தனர்.
இவர்கள் அனைவரும் ஒன்றாகவே வேலைக்கு செல்வது, குடிப்பது வழக்கம். தினமும் குடித்து விட்டு தகராறில் ஈடுபடுவதும், பின்னர் அவர்களே சமாதானம் அடைவதையும் வாடிக்கையாக வைத்துள்ளனர்.
நேற்று விடுமுறை என்பதால் முந்தைய நாள் இரவு விஜயராகவன், அவரது தந்தை ரவி, ஸ்டாலின் மற்றும் நண்பர்கள் அனைவரும் ஒன்றாக மதுகுடிக்க சென்றனர்.
டாஸ்மாக் கடைக்கு சென்று மது வாங்கி குடித்தனர். பின்னர் அருகே உள்ள ஓட்டலில் சாப்பிட சென்றனர்.
அங்கு சாப்பிட்டு கொண்டிருந்த போது, அவர்களுக்கு இடையே திடீரென தகராறு ஏற்பட்டது.
இதில் வாக்குவாதம் முற்றவே ஆத்திரம் அடைந்த நண்பர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து அங்கிருந்த கட்டையை எடுத்து விஜயராகவனை சரமாரியாக தாக்கினர்.
இதில் பலத்த காயம் அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து விட்டார்.
அவர் இறந்து போனதால் நண்பர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் விஜயராகவனின் உடலை அங்கிருந்து சாக்கடை கால்வாய்க்குள் தூக்கி வீசி விட்டு உடல் வெளியில் தெரியாத படி பலகையை போட்டு மூடி விட்டு தப்பியோடி விட்டனர்.
நேற்று ஓட்டல் திறக்க வந்த ஊழியர்கள், கடையின் முன்பு ரத்தக்கறை படிந்து இருந்ததாலும், அருகே உள்ள கால்வாய் திடீரென மூடப்பட்டிருந்ததாலும் அதிர்ச்சி அடைந்தனர்.
கால்வாயை திறந்து பார்த்த போது உள்ளே வாலிபர் ஒருவர் இறந்த நிலையில் கிடந்தார். உடனே இதுகுறித்து அவர்கள் சூலூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இன்ஸ்பெக்டர் மாதையன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை மீட்டனர்.
பின்னர் அந்த பகுதிகளில் இருந்த கண்காணிப்பு கேமிராவை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் கால்வாயில் கிடந்தது விஜயராகவன் என்பதும், அவரை அவரது நண்பர்கள் அடித்து கொன்று சாக்கடையில் வீசியதும் தெரியவந்தது.
தொடர்ந்து போலீசார் கொல்லப்பட்ட விஜயராகவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சூலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த சூலூர் போலீசார் விஜயராகவனை மது குடித்த போது ஏற்பட்ட தகராறில் நண்பர்கள் அடித்து கொன்றனரா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த வழக்கில் தொடர்புடைய ஸ்டாலின் உள்பட அனைவரும் திருவாரூரை சேர்ந்தவர்கள். இதனால் இவர்கள் அங்கு சென்றிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
இதையடுத்து அவர்களை பிடிப்பதற்காக தனிப்படையும் அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படையினர் அவர்களை பிடிப்பதற்காக திருவாரூக்கு விரைந்துள்ளனர். அவர்கள் பிடிபட்ட பின்னரே கொலைக்கான முழுமையான காரணம் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.
- கடந்த 6 ஆண்டுகளாக ஜி.எஸ்.டி. வருவாய் மட்டுமின்றி வரி செலுத்துவோரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.
- 2017-ம் ஆண்டு ரூ.1,106 கோடியாக இருந்த வருவாய், 2022-ம் ஆண்டு ரூ.3,003 கோடியாக அதிகரித்துள்ளது.
கோவை:
தொழில் நிறுவனங்களே தொடங்காமல் 186 நிறுவனங்கள் பெயரில் ரூ.127 கோடி மோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டுள்ளதாக கோவை மண்டல மத்திய ஜி.எஸ்.டி. முதன்மை ஆணையர் குமார் தெரிவித்தார்.
ஜி.எஸ்.டி. அறிமுகம் செய்யப்பட்டு ஆறாம் ஆண்டு தினத்தை முன்னிட்டு கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள ஜி.எஸ.டி. அலுவலகத்தில் நேற்று சிறப்பு விழா நடந்தது. இதையொட்டி கோவை மண்டல ஜி.எஸ்.டி. அலுவலகத்தின் முதன்மை ஆணையர் குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-
கடந்த 6 ஆண்டுகளாக ஜி.எஸ்.டி. வருவாய் மட்டுமின்றி வரி செலுத்துவோரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.
நாடு முழுவதும் வரி வருவாய் 2017-ம் ஆண்டு 7.19 லட்சம் கோடியாக இருந்தது. 2022-23-ம் ஆண்டில் 18.10 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.
கோவை மண்டலத்தை பொறுத்தவரை 2017-ம் ஆண்டு ரூ.1,106 கோடியாக இருந்த வருவாய், 2022-ம் ஆண்டு ரூ.3,003 கோடியாக அதிகரித்துள்ளது.
வரி செலுத்துவோர் எண்ணிக்கை நாடு முழுவதும் 2017-ம் ஆண்டு 67.83 லட்சமாக இருந்தது. இது 2023-ம் ஆண்டு 1.40 கோடியாக உயர்ந்துள்ளது.
கோவை மண்டலத்தில் 2017-ம் ஆண்டு 53,800-ஆக இருந்த வரி செலுத்துவோர் எண்ணிக்கை 2022-ம் ஆண்டு 77,484-ஆக உயர்ந்துள்ளது.
குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
60 நாட்களுக்குள் 'ரீபண்ட்' வழங்க வேண்டும் என்ற சட்டம் உள்ள நிலையில், முறையான ஆவணங்கள் இருப்பின் 30 நாட்களில் திருப்பி அளிக்கப்படுகிறது.
கோவை மண்டலத்தில் தொழில் நிறுவனங்களே தொடங்காமல் 186 நிறுவனங்கள் பெயரில் 127 கோடி வரி மோசடி செய்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. வரி ஏய்ப்பை தடுக்க தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- தமிழகம் முழுவதும் காய்கறிகளின் திடீர் விலை உயர்வு பொதுமக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
- ஏராளமான பொதுமக்கள் மீன் மார்க்கெட்டில் குவிந்ததால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.
கோவை,
தமிழகம் முழுவதும் காய்கறிகளின் திடீர் விலை உயர்வு பொதுமக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தக்காளி இல்லாமல் சமையல் செய்யும் நிலைக்கு இல்லத்தரசிகள் சென்று விட்டனர்.
இதனால் பொதுமக்கள் மீன் மற்றும் இறைச்சிக்கடைகளை நோக்கி சென்று விட்டனர். கோவை உக்கடத்தில் மீன் மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இந்த மீன் மார்க்கெட்டிற்கு தூத்துக்குடி, கேரளா, ராமேஸ்வரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மீன்கள் அதிகளவில் விற்பனைக்கு வருகின்றன.
இன்று காலை வழக்கம் போல உக்கடம் மீன் சந்தை கூடியது. தற்போது கேரளாவில் மீன்பிடி தடை காலம் என்பதால் தமிழகத்தில் உள்ள தூத்துக்குடி, ராமேஸ்வரத்தில் இருந்து அதிகளவில் மீன்கள் விற்பனைக்கு வந்துள்ளன.
இந்த மீன்களை வாங்குவதற்காக அதிகாலை முதலே மீன் மார்க்கெட்டில் மக்கள் கூட்டம் அலைமோதியது.
அந்த பகுதியே எங்கு பார்த்தாலும் மக்கள் தலைகளாக காணப்பட்டன. பொதுமக்கள் தங்களுக்கு பிடித்த மீன்களை வாங்கி சென்றனர். விலா, நெத்திலி, சங்கரா, பாறை என பல்வேறு வகையான மீன்களை ஆர்வத்துடன் வாங்கி செல்வதை காண முடிந்தது.
ஏராளமான பொதுமக்கள் மீன் மார்க்கெட்டில் குவிந்ததால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.
கோவை உக்கடம் மீன் மார்க்கெட்டில் விற்பனையான மீன்களின் விலை கிலோவில் வருமாறு:-
விளமீன்-ரூ.400, நெத்திலி-ரூ.150, சங்கரா-ரூ.270, வாவல்-ரூ.130, நெய்மீன்-ரூ.90, கொல்லி-ரூ.130, அயிரை-ரூ.200, முரள்-ரூ.200, பாறை-ரூ.400, வஞ்சிரம்-ரூ.700, மத்தி-ரூ.150க்கு விற்பனையாகி வருகிறது.இதேபோல் கோவையில் உள்ள இறைச்சி கடைகளிலும் வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக இருந்தது. அங்கு நீண்ட வரிசையில் காத்திருந்து, ஆடு, கோழி உள்ளிட்ட இறைச்சிகளை வாங்கி சென்றனர். புறநகர் பகுதி களான மேட்டுப்பாளையம், காரமடை, பொள்ளாச்சி, சூலூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள இறைச்சி கடைகளிலும் கூட்டம் காணப்பட்டது.
- இந்த விபத்தில் காரில் இருந்த 2 பேர் அதிர்ஷ்டவமாக உயிர் தப்பினர்
- அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து தீயை அணைத்தனர்.
குனியமுத்தூர்,
கோவை ராமநாதபுரம் பழைய சுங்கத்தை சேர்ந்தவர் ஆரோக்கியராஜ்.
இவர் சிட்கோ பகுதியில் சொந்தமாக நிறுவனம் ஒன்று வைத்து நடத்தி வருகிறார். இவர் தினமும் தனது காரில் தனது நிறுவனத்திற்கு சென்று வருவது வழக்கம். இவரிடம் டிரைவராக சுந்தராபுரம் கே.வி.கே. நகரை சேர்ந்த பால்ராஜ் என்பவர் வேலை பார்த்து வருகிறார்.
இன்று காலை ஆரோக்கியராஜ் வழக்கம் போல தனது காரில் சிட்கோவில் உள்ள நிறுவனத்திற்கு சென்றார். அங்கு பணிகளை பார்வையிட்ட அவர் மீண்டும் மதியம் 12.15 மணியளவில் நிறுவனத்தில் இருந்து வீட்டிற்கு புறப்பட்டார். காரை டிரைவர் பால்ராஜ் ஓட்டி வந்தார்.கார் சிட்கோ ஆர்ச் அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது, காரின் முன்பகுதியில் இருந்து புகை வந்தது.
சிறிது நேரத்தில் தீ பற்றி எரிய தொடங்கியது. கார் சென்று கொண்டிருந்த போதே தீ பிடித்ததால் டிரைவர் காரை சாதுர்யமாக இயக்கி சாலையோரம் நிறுத்தி விட்டார்.
பின்னர் காரில் இருந்த ஆரோக்கியராஜ் மற்றும் பால்ராஜ் ஆகியோர் கதவை திறந்து கொண்டு வெளியில் ஓடி வந்தனர். இதனால் பெரும் விபத்து தவிர்க்க ப்பட்டது.கார் தீ பற்றி எரிவதை பார்த்ததும் அக்கம்பக்கத்தினர் ஏராளமானோர் அங்கு குவிந்தனர். அவர்கள் தீபிடித்து எரிந்து கொண்டிருந்த கார் மீது தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். இதுகுறித்து சுந்தராபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீ பிடித்து எரிந்த காரை பார்வையிட்டு காரை மீட்டனர். மேலும் இது தொடர்பாக சுந்தராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கார் தீ பிடித்து எரிந்ததற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.கோவையில் இன்று காலை சாலையில் வந்து கொண்டிருந்த கார் திடீரென தீ பிடித்து எரிந்த சம்பவம் மக்கள் மத்தியில் பரபரப்பையும், அச்சத்தையும் ஏற்படுத்தியது.
- 3 பேர் வாலிபரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்து அங்கிருந்து தப்பி சென்றனர்.
- விசாரணையில், கள்ளக்காதல் விவகாரத்தில் டிரைவர் தாக்கப்பட்டது தெரியவந்தது.
கோவை,
கோவை சரவணம்பட்டி அருகே உள்ள நேதாஜி நகரை சேர்ந்தவர் 22 வயது வாலிபர். இவர் தனியார் டிராவல்ஸ் நிறுவனத்தில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார்.
வாலிபர் தினசரி கீரணத்தம் மற்றும் பீளமேட்டில் உள்ள ஐ.டி நிறுவனத்தில் வேலை பார்க்கும் ஊழியர்களை அழைத்து செல்வது வழக்கம். அப்போது வாலிபருக்கு ஐடி நிறுவனத்தில் வேலை பார்க்கும் குனியமுத்துரைச் சேர்ந்த திருமணமான இளம்பெண் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது.
இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து ஜாலியாக இருந்து வந்தனர். அப்போது வாலிபர் இளம்பெண்ணுக்கு ரூ. 3 ஆயிரம் கடன் கொடுத்துள்ளார். அதை திருப்பி கேட்ட போது அவர்களிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
இதனால் இளம்பெண் வாலிபருடன் பேசுவதையும் பழகுவதையும் தவிர்த்து வந்தார். சம்பவத்தன்று வாலிபர் கீரணத்தம் தொழில்நுட்ப பூங்கா அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 3 பேர் வாலிபரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்து அங்கிருந்து தப்பி சென்றனர். இதுகுறித்து வாலிபர் கோவில்பாளையம் போலீசில் புகார் செய்தார்.
புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், கள்ளக்காதல் விவகாரத்தில் டிரைவர் தாக்கப்பட்டது தெரியவந்தது.இதையடுத்து போலீசார் வாலிபரை தாக்கிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சுமதி வீட்டில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு காமிராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர்.
- பெரியநாயக்கன்பாளையம் போலீசார் மர்மநபரின் கைரேகைகளை பதிவுசெய்தனர்.
கோவை,
கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள சாமிசெட்டிப்பாளையத்தை சேர்ந்தவர் மதியழகன். நூல் வியாபாரி. இவரது மனைவி சுமதி (வயது 52). இவர்களுக்கு லாவண்யா, ஸ்ரீமது மிதா என்ற 2 மகள்கள் உள்ளனர். மூத்த மகள் திருமணமாகி கிருஷ்ணகிரியில் வசித்து வருகிறார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு சுமதி ரூ.2.33 லட்சத்துக்கு வைர நெக்லஸ் வாங்கினார். இதனை அவர் வீட்டில் உள்ள பீரோவில் வைத்து இருந்தார்.
சம்பவத்தன்று சுமதியின் மூத்த மகள் கிருஷ்ணகிரியில் இருந்து தாய் வீட்டிற்கு வந்தார். தனது மகளிடம் அவரது தாய் புதிதாக வாங்கி வைத்து இருந்த வைர நெக்லசை காட்டுவதற்காக அறையில் உள்ள பீரோவை திறந்தார்.
அப்போது அதில் இருந்த கல் பதித்த நெக்லஸ், தங்க நெக்லஸ், செயின், கம்மல், மோதிரம், ஆரம் வளையல் மற்றும் புதிதாக வாங்கிய வைர நெக்லஸ் ஆகியவை மாயமாகி இருந்தது. இதனை பார்த்து சுமதி அதிர்ச்சியடைந்தார்.
பின்னர் அவர் வீட்டில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு காமிராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தார். நேற்று நள்ளிரவு 1.30 மணியளவில் முகமூடி அணிந்த மர்மநபர் ஒருவர் காம்பவுண்டு சுவரை ஏறி குதித்து உள்ளே வரும் காட்சிகள் பதிவாகி இருந்தது. அந்த மர்மநபர் முதல் மாடிக்கு சென்று அங்குள்ள கண்ணாடி கதவின் வழியாக உள்ளே நுழைந்தார்.
தொடர்ந்து அவர் கீழே சுமதி மற்றும் அவரது மகள் ஸ்ரீமதுமிதா ஆகியோர் அயர்ந்து தூங்கி கொண்டு இருந்த அறைக்கு சென்றார். பின்னர் அந்த மர்மநபர் அறையில் இருந்த பீரோவை திறந்து அதில் இருந்த ரூ.2.33 லட்சம் மதிப்பிலான வைர நெக்லஸ் மற்றும் 28 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்து செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது.
இது குறித்து சுமதி பெரியநாயக்கன்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் சம்பவஇடத்துக்கு கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் வீட்டில் பதிவாகி இருந்த மர்மநபரின் கைரேகைகளை பதிவுசெய்தனர்.
இது குறித்து பெரியநாயக்கன்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து வீட்டுக்குள் அத்து மீறி நுழைந்த தங்கம் வைர நகைளை கொள்ளையடித்து சென்ற மர்மநபரை கண்காணிப்பு காமிராவில் பதிவான காட்சிகளை வைத்து தேடி வருகிறார்கள்.
- போலீசார் ரோந்தில் ஈடுபட்ட போது 2 பேரை பிடித்து விசாரித்தனர்.
- 24 மணி நேரத்தில் கைது செய்த போலீசாருக்கு மக்கள் பாராட்டு தெரிவித்தனர்.
மேட்டுப்பாளையம்
மேட்டுப்பாளையம் செல்வபுரம் பகுதியை சேர்ந்தவர் அருண்பிரசாத்(25).
இவர் கோவையில் உள்ள தனியார் ஐ.டி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.
சம்பவத்தன்று அருண்பிரசாத் வேலைக்கு சென்று விட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு வந்தார். பின்னர் மோட்டார் சைக்கிளை வெளியில் நிறுத்தி விட்டு வீட்டிற்குள் தூங்க சென்றார்.
மறுநாள் காலை எழுந்து வந்து பார்த்த போது, மோட்டார் சைக்கிள் மாயமாகி இருந்தது. நள்ளிரவில் புகுந்த மர்மநபர்கள் இவரது மோட்டார் சைக்கிளை திருடி சென்றது தெரிய வந்தது.
இதுகுறித்து அருண்பிரசாத் மேட்டுப்பாளையம் போலீசில் புகார் அளித்தார். மேட்டுப்பாளையம் இன்ஸ்பெக்டர் நவநீதகிருஷ்ணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மர்மநபர்களை தேடி வந்தார்.
இந்த நிலையில், மேட்டுப்பாளையம் இன்ஸ்பெக்டர் நவநீதகி ருஷ்ணன் தலைமையிலான போலீசார் மேட்டுப்பாளையம்-காரமடை செல்லும் சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை பிடித்து விசாரித்தனர். அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளிக்கவே, அவர்களை போலீஸ் நிலையம் அழைத்துச்சென்று விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், அவர்கள் புதுக்கோட்டை கடையாத்திப்பட்டி இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்த இயேசு ராஜன்(20), புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி இலங்கை அகதிகள் முகாம் பகுதியை சேர்்ந்த கோகுல் சாந்த்(18) என்பது தெரியவந்தது.
இவர்கள் தான் ஐ.டி.ஊழியர் அருண்பிரசாத்தின் மோட்டார் சைக்கிளை திருடியதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் 2 பேரையும் கைது செய்தனர். பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை மத்திய ஜெயிலில் அடைத்தனர்.
மேலும் அவர்களிடம் இருந்து திருடப்பட்ட மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.
- போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் என்று கூறி கடைக்குள் நுழைந்தனர்.
- புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
குனியமுத்தூர்,
கோவை மாவட்டம் குனியமுத்தூர் அடுத்த இடையர்பாளையத்தை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (வயது 52). . இவர் இடையர்பாளையம் சர்ச் தெருவில் 35 வருடங்களாக மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார். இவரது மகன் பரத் (24). இவர் தந்தைக்கு உதவியாக கடையை பார்த்து கொண்டிருந்தார்.
சம்பவத்தன்று மாலை அவர் வழக்கம்போல் கடையில் வியாபாரம் செய்து கொண்டிருந்தார். அப்போது காரில் வந்து இறங்கிய மர்ம நபர்கள் 3 பேர் தாங்கள் போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் என்று கூறி கடைக்குள் நுழைந்தனர். உங்கள் கடையில் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் இருப்பதாக தகவல் வந்தது என்றும் கடையை சோதனை செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளனர். அவர்களை அதிகாரிகள் என நம்பிய பரத்தும் சோதனை செய்ய அனுமதித்துள்ளார்.
பின்னர் கடையில் இருந்து சில புகையிலை பொருட்களை மர்மநபர்கள் கைப்பற்றியுள்ளனர். மேலும் கடையில் இருந்து ரூ.2 லட்சம் பணத்தையும் பறிமுதல் செய்துள்ளனர். உடனே பரத், பணத்தை ஏன் எடுக்குறீங்க என்று கேட்டுள்ளார்.
அதற்கு அவர்கள் பணத்தை அபராதம் என்றும் போலீஸ் நிலையத்துக்கு வந்து கணக்கு காட்டி விட்டு பெற்று செல்லுங்கள் என்று கூறியுள்ளனர். இதனையடுத்து பரத்தை மர்ம நபர்கள் காரில் ஏற்றி போலீஸ் நிலையம் கூட்டி செல்வதாக கூறியுள்ளனர். 2 மணி நேரத்துக்கும் மேலாக அவரை காரிலேயே வைத்து நகரை சுற்றியுள்ளனர். அவரிடம் புகையிலை பொருட்கள் விற்கும் ஏஜெண்ட் விவரத்தை கேட்டுள்ளனர்.
இதையடுத்து கார் சுந்தராபுரம் அருகே செல்லும் போது வண்டியை நிறுத்தி அவரிடம் ரூ.30 ஆயிரம் பணத்தை கொடுத்துள்ளனர். பின்னர் மர்மநபர்கள் அவரை நடுரோட்டில் இறக்கிவிட்டு சென்று விட்டனர்.
இந்நிலையில் காரில் வந்தது அதிகாரிகள் இல்லை என்றும் தான் அவர்களால் ஏமாற்றப்பட்டிருப்பதும் அவருக்கு தெரியவந்தது.
இதுகுறித்து அவர் குனியமுத்தூர் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சினிமா பாணியில் அதிகாரிகள் போல நடித்து மளிகை கடைகாரரிடம் பணத்தை திருடி சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.






