search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    10 கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.60-க்கு விற்பனை- ஒரே நாளில் 2 ஆயிரம் கிலோ விற்று தீர்ந்தது

    • தக்காளியை பதுக்கி வைத்து விற்பனை செய்வதும் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது.
    • பொது மக்களின் அத்தியாவசிய உணவுப்பொருட்களில் தக்காளி குறிப்பிடத்தக்கது.

    கோவை:

    கோவையில் டி.கே.மார்க்கெட், அண்ணா மார்க்கெட் ஆகிய பகுதிகளில் ஒட்டுமொத்த காய்கறிசந்தை செயல்பட்டு வருகிறது. இங்கு வெளியூர், வெளி மாவட்டங்களில் இருந்து காய்கறிகள் இறக்குமதி செய்யப்படுகிறது.

    வியாபாரிகள் தினமும் கோவை வந்திருந்து, மேற்கண்ட சந்தைகளில் காய்கறிகளை வாங்கி சென்று விற்பனை செய்து வருகின்றனர்.

    இந்நிலையில் கோவை டி.கே.மார்க்கெட் மற்றும் அண்ணா மார்க்கெட் ஆகிய பகுதிகளுக்கு கடந்த சில நாட்களாக தக்காளி வரத்து மிகவும் குறைவாக உள்ளது. எனவே மாவட்டம் முழுவதும் தக்காளி விலை கிடுகிடுவென அதிகரித்த வண்ணம் உள்ளது. கோவையில் ஒரு கிலோ தக்காளி ரூ.100-க்கு விற்பனை செய்யப்பட்டது.

    பொதுமக்களின் அன்றாட சமையலில் தக்காளி முக்கியத்துவம் வாய்ந்தது. அது இல்லாமல் குழம்பு வைக்க முடியாது. எனவே பொதுமக்கள் சமையலில் தக்காளியை குறைத்து வருகின்றனர். இன்னொருபுறம் கோவையில் உள்ள உணவு வியாபார கடைகளில் தக்காளி சார்ந்த உணவுகள் தடாலடியாக நிறுத்தப்பட்டு உள்ளன.

    கோவை மாவட்டத்தில் 3 ஆயிரம் ஓட்டல்கள் மற்றும் 12 ஆயிரம் தள்ளுவண்டி உணவு கடைகள் உள்ளன. அங்கு வாடிக்கையாளருக்கு தக்காளி சட்னி நிறுத்தப்பட்டுவிட்டது. கோவையில் தக்காளி விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வருவது, பொதுமக்களை கவலை அடைய செய்து உள்ளது.

    இந்நிலையில் கோவை மாவட்டத்தில் தக்காளி விலை உயர்வை கட்டுப்படுத்தும் வகையில் கூட்டுறவுத்துறை ஒருசில நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன்ஒருபகுதியாக பெரியநாயக்கன்புதூர், கூட்டுறவு பண்டகசாலை, பெரியநாயக்கன்பாளையம் காய்கறி கூட்டுறவு விற்பனை சங்கம் ஆகியவை சார்பில் கோவை பூ மார்க்கெட், ஆவின், தெலுங்குபாளையம், சங்கனூர் கூட்டுறவு பண்டகசாலை, ஒண்டிப்புதூர் நகர கூட்டுறவு கடன் சங்கம் மற்றும் சிந்தாமணி, வடகோவை, சாய்பாபா காலனி, ஆர்.எஸ்.புரம் உள்ளிட்ட 10 பகுதிகளில் பசுமைப்பண்ணை கடைகள் திறக்கப்பட்டு உள்ளன. அங்கு கூட்டுறவுத்துறை அதிகாரிகள் வெளி மார்க்கெட்டில் தக்காளியை கொள்முதல் விலைக்கு வாங்கி, லாபம் இன்றி விற்பனை செய்து வருகின்றனர்.

    கோவையில் நேற்று மட்டும் 10 கூட்டுறவு சங்க கடைகளில் 2000 கிலோ தக்காளி இறக்குமதி செய்யப்பட்டது. அங்கு இவை கிலோ ரூ.60-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. எனவே பொது மக்கள் போட்டி போட்டுக் கொண்டு தக்காளி பழங்களை வாங்கி செல்கின்றனர்.

    இதுகுறித்து கோவை மாவட்ட கூட்டுறவு அதிகாரிகள் கூறுகையில், மாநகரில் மட்டும் 10 பகுதிகளில் தக்காளி கிலோ ரூ.60-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் பொது மக்கள் மகிழ்ச்சியுடன் பொருட்களை வாங்கி செல்கின்றனர். அதேநேரத்தில் தக்காளியை பதுக்கி வைத்து விற்பனை செய்வதும் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது என்றனர்.

    இதற்கிடையே கோவை காய்கறி மார்க்கெட்டுகளுக்கு தக்காளி வரத்து அதிகரிக்க தொடங்கி உள்ளது. இதனால் அங்கு தக்காளி விலை தற்போது கிலோ ரூ.75-க்கு விற்கப்பட்டு வருகிறது. சில்லறை விற்பனை கடைகளில் ரூ.90-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கோவை மார்க்கெட்டுகளுக்கு தக்காளி வரத்து அதிகரிக்க தொடங்கி உள்ளதால், இன்னும் ஒருசில நாட்களில் விலை மேலும் குறைய வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்து உள்ளனர்.

    கோவை மாவட்டத்தில் உள்ள தோட்டம் மற்றும் விளைநிலங்களில் தக்காளி பயிரிடப்பட்டு, சந்தைகளுக்கு கொண்டுவரப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    அங்கு உள்ள விவசாயிகள் கூறுகையில், பொது மக்களின் அத்தியாவசிய உணவுப்பொருட்களில் தக்காளி குறிப்பிடத்தக்கது. எனவே அவற்றின் விலையை கட்டுக்குள் வைத்து இருப்பது அரசின் முக்கிய பொறுப்பு.

    அரசாங்கமே கூட்டுறவுத்துறை மூலம் தக்காளியை நேரடியாக கொள்முதல் செய்து, ரேஷன் கடைகள் வாயிலாக விற்பனை செய்யலாம். தக்காளியை சேமித்து வைத்தால்தான் விலையை கட்டுக்குள் வைத்திருக்க முடியும்.

    இதற்காக அந்தந்த மார்க்கெட்டுகளில் அரசாங்கம் குளிர்பதன கிடங்குகளை ஏற்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    Next Story
    ×