என் மலர்
கோயம்புத்தூர்
- சேர்ந்துவாழ வரமறுத்ததால் வேதனை
- மனைவி வீட்டின் முன்பு தூக்கில் தொங்கினார்
கோவை,
சிறுமுகை அருகே உள்ள பெத்திக்குட்டையை சேர்ந்தவர் நாகராஜ் (வயது38). கூலித் தொழிலாளி. இவர் கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு நந்தினி என்ற பெண்ணை திருமணம் செய்தார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
நாகராஜ் கடந்த 2 ஆண்டுகளாக மதுகுடித்து வந்ததால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. சம்பவத்தன்றும் அவர்களுக்குள் இது தொடர்பாக பிரச்சினை எழவே நந்தினி கோபித்து கொண்டு தனது தாய் வீட்டிற்கு சென்றார்.
நாகராஜ் தனது மனைவியை அழைத்து வருவதற்காக அங்கு சென்றார். மனைவியை தன்னுடன் வாழ வருமாறு அழைத்தார். ஆனால் அவர் மறுப்பு தெரிவிக்கவே, வாழ்க்கையில் விரக்தி அடைந்த நாகராஜ் மனைவி யின் வீட்டு முன்பு உள்ள மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்த சிறுமுகை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து நாகராஜின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பண்ணாரி சோதனை சாவடியில் நின்றிருந்த போலீசார் சிறுமியை அழைத்து விசாரித்த போது, சிறுமி நடந்தவற்றை கூறினார்.
- போலீசார் அவரை தொடர்ந்து தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கோவை:
கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள பாசூரை சேர்ந்தவர் சுப்புராஜ் (வயது50).
இவர் ஈரோடு மாவட்டம் கொடிவேரியில் உள்ள ஸ்பின்னிங் மில்லில் காண்டிராக்டராக உள்ளார்.
இவரது மனைவி சித்ரா (34). இவர்களுக்கு வேத விக்னேஷ்வரி(13) என்ற மகளும் மோகன்ராம், அகிலேஷ்வரன் என்ற 2 மகன்களும் உள்ளனர்.
வேத விக்னேஷ்வரி அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறார்.
சுப்புராஜூக்கு தொழிலில் போதிய வருமானம் கிடைக்கவில்லை என தெரிகிறது. இதனால் அவரது மில்லில் வேலை பார்ப்பவர்களுக்கு கூட சம்பளம் கொடுக்க முடியாமல் இருந்துள்ளார்.
தொழிலாளர்களுக்கு சம்பளம் கொடுப்பதற்காக கடந்த சில மாதங்களுக்கு முன்பு சுப்புராஜ் ரூ.2 லட்சம் கடன் வாங்கி தொழிலாளர்களுக்கு சம்பளம் கொடுத்தார்.
ஆனால் வாங்கிய கடனை அவரால் திருப்பி அடைக்க முடியவில்லை. இதனால் கடந்த சில நாட்களாகவே அவர் யாருடனும் பேசாமல் தனிமையில் இருந்து வந்தார். கடனை அடைக்க முடியாததை நினைத்து வருத்தப்பட்டும் வந்துள்ளார்.
வேதவிக்னேஷ்வரியை, தினமும் சுப்புராஜ் தான் பள்ளிக்கு அழைத்து சென்று விட்டு, மீண்டும் அழைத்து வருவது வழக்கம். அதன்படி சம்பவத்தன்று மகளை அழைப்பதற்காக பள்ளிக்கு சென்றார்.
பின்னர் அங்கு மகளை அழைத்து கொண்டு கொல்லிமலைக்கு சென்றார். அங்குள்ள மலை உச்சிக்கு சென்ற அவர், திடீரென, அங்கிருந்து, மகளை தள்ளி விட முயற்சித்தார்.
அப்போது சிறுமி தனது தந்தையிடம் பஸ்சுக்கு லேட் ஆகுது, எனக்கு பசிக்கிறது என கூறி தந்தையை அழைத்தார். இதையடுத்து, சுப்புராஜ் மகளுடன் ஈரோட்டுக்கு சென்றார்.
பின்னர் பன்னாரி அம்மன் கோவில் அருகே உள்ள காட்டுப்பகுதிக்கு அழைத்து சென்றார். அங்கு வைத்து அவர் பூச்சி மருந்தை குடித்து விட்டு, அதனை மகளின் வாயில் ஊற்றி குடிக்க சொல்லியுள்ளார். ஆனால் சிறுமி குடிக்க மறுப்பு தெரிவித்து கதறி அழுதார்.
குழந்தை அழுததை பார்த்ததும் பதறிபோன சுப்புராஜ், தனது மகளிடம் ரூ.70-யை கொடுத்து, நீ வீட்டுக்கு செல் நான் வந்து விடுகிறேன் என தெரிவித்து அனுப்பி வைத்தார்.
சிறுமியும் அங்கிருந்து நேராக வீட்டிற்கு புறப்பட்டு வந்தார். வரும் வழியில் பண்ணாரி சோதனை சாவடியில் நின்றிருந்த போலீசார் சிறுமியை அழைத்து விசாரித்த போது, சிறுமி நடந்தவற்றை கூறினார்.
இதையடுத்து போலீசார் சிறுமியை மீட்டு அன்னூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் விரைந்து வந்து சிறுமியை மீட்டு அவரது தாயிடம் ஒப்படைத்தனர்.
அன்னூர் போலீசார் இதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பூச்சி மருந்துடன் காட்டுக்குள் சென்ற சுப்புராஜை வனத்துறையினரும், போலீசாரும் இணைந்து தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதுவரை அவரை பற்றிய தகவல்கள் கிடைக்கவில்லை. அவரின் கதி என்ன என்பது தெரியவில்லை. போலீசார் அவரை தொடர்ந்து தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
- 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் 4 மாதங்களாக சம்பளம் தராததை கண்டித்து கோஷம்
- கூலித்தொழிலாளிகள் உள்பட காங்கிரசார் பங்கேற்பு
கோவை,
கோவை எஸ்.எஸ். குளத்தில் உள்ள கனரா வங்கி முன்பு மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு காங்கிரஸ் கட்சி ஓ.பி.சி. பிரிவு மாநில பொதுச் செயலாளர் நாகராஜன் தலைமை தாங்கினார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி மாநில பொதுச் செயலாளர் பச்சை முத்து, கவுன்சிலரும் தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் மாநிலத் துணைத் தலைவருமான ஜி. வி. நவீன் குமார் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள்மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டமான 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் வேலை செய்தவர்களுக்கு 4 மாதங்களாக சம்பளம் கொடுக்காமல் திட்டத்தை முடக்க நினைக்கும் மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் வேலை செய்த பெண்கள் உள்பட காங்கிரஸ் கட்சியினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
- மகரஜோதியை முன்னிட்டு யானை வாத்தியத்துடன் காட்சி சீவேலி, முத்தாயம்பகையம் நடக்கிறது
- கோவை ஸ்ரீ அய்யப்பசேவா சங்க செயலாளர் கே.விஜயகுமார் அறிவிப்பு
கோவை,
கோவை சித்தாபுதூர் அய்யப்ப சாமி பொற்கோவிலில் மண்டல பூஜை விழா வருகிற 17 -ந் தேதி (வெள்ளிக்கிழமை)தொடங்குகிறது. அன்றைய தினம் கோவிலுக்கு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மாலை அணிய வருவது வழக்கம்.
அய்யப்பசாமி மண்டல பூஜை விழாவை முன்னிட்டு டிசம்பர் 1-ந்தேதி வெள்ளிக்கிழமை முதல் 12-ந்தேதி செவ்வாய்க்கிழமை வரை ஆலய தந்திரி பிரம்மஸ்ரீ சிவபிரசாத் நம்பூதிரி தலைமையில் புகழ்பெற்ற தாந்திரீக ஆச்சாரியார்கள் முன்னிலையில் லட்சார்ச்சனை நடைபெற உள்ளது.
இதில் பல்வேறு காரிய சித்திக்கான சிறப்பு அர்ச்சனைகள், சனிதோஷ சாந்திஜெபம் நடத்தவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. டிசம்பர் 13-ந்தேதி அய்யப்பசாமிக்கு களபாபிஷேகம் நடைபெறும்.
மண்டல பூஜை விழாவை முன்னிட்டு 16 -ந்தேதி சனிக்கிழமை அகண்டநாம பஜனையும், 17 -ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அன்னதானமும் நடைபெற உள்ளது.27-ந்தேதி புதன்கிழமை மகாகணபதி ஹோமம், மண்டல விளக்கு பூஜை நடக்கிறது. அன்றையதினம் மண்டல மகரவிளக்கு காலத்தில் பக்தர்களுக்கு மாலை அணிவிக்கப்படுகிறது.
மேலும் இருமுடி கட்டி சபரிமலை பயணம் செல்ல வருகை தரும் பக்தர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் அய்யப்ப சேவாசங்கம் செய்து வருகிறது.ஜனவரி 15-ந்தேதி திங்கட்கிழமை மகரஜோதியை முன்னிட்டு யானை வாத்தியத்துடன் காட்சி சீவேலியும், மாலையில் மகா தீபாராதனை, முத்தாயம்பகையும் நடைபெறும்.
இந்த தகவலை கோவை ஸ்ரீ அய்யப்பசேவா சங்க செயலாளர் கே.விஜயகுமார் தெரிவித்து உள்ளார்.
- பொதுமக்கள் திருத்தம் மேற்மேகொள்ள பயன்படுத்திக் கொள்ளலாம்
- கோவை கலெக்டர் கிராந்திகுமார் அறிவுறுத்தல்
கோவை,
கோவை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
கோவை மாவட்டத்தில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் வருகிற 18, 19-ந்தேதிகளில் வாக்காளர் பட்டியல் திருத்த முகாம் நடப்பதாக இருந்தது.
அது தற்போது வருகிற 25, 26-ந்தேதிக்கு மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது. எனவே வாக்காளர் பட்டியலில் பெயர்சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தம் செய்வது ஆகிய பணிகளை பொதுமக்கள் மேற்கொள்ளலாம். அதன்படி வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க படிவம்-6, பெயர்நீக்கம் செய்ய படிவம்-7, வாக்காளர் பட்டியலில் திருத்தம் மற்றும் முகவரி மாற்றம் செய்வதற்கு படிவம்-8 ஆகியவற்றை நேரடியாக சமர்ப்பிக்க வேண்டும்.
பிரத்யேக இணையதளம் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம். மொபைல் செயலியை தரவிறக்கம் செய்தும் விண்ணப்பிக்க இயலும்.மேலும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தங்களை செய்வதற்கு அடுத்த மாதம் 9-ந்தேதிவரை விண்ணப்பிக்கலாம். எனவே பொதுமக்கள் மேற்கண்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்த முகாம்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.
- தண்ணீரில் படர்ந்து நிற்பதால் படகுகளை அதிக தூரம் செலுத்த முடியவில்லை
- படகுகள் மூலம் செடிகளை வெட்டி அகற்றும் பணி நடைபெற்று வருகிறது
வால்பாறை,
கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் நகராட்சி சார்பாக படகு இல்லம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த படகு இல்லம் நீண்ட நாள் பிறகு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு சில தினங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது.
படகு இல்லத்தில் சுமார் 20-க்கும் மேற்பட்ட படகுகள் பயன்படுத்தப்படுகின்றன. நகராட்சி ஊழியர்கள் பணி நியமிக்கப்பட்டு பொது மக்களுக்கு படகு சவாரிக்கு 40 ரூபாய் வீதம் வசூல் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் தீபாவளி விடுமுறை நாள் என்பதால்அ திகமாக பொது மக்கள் வந்து சென்று உள்ளனர்.
படகு இல்லத்தின் ஒரு பகுதியில் ஆகாயத்தாமரைகள் இருப்பதால் தண்ணீர் மாசு அடைந்து இருப்பதாகவும் படகுகளை அதிக தூரத்திற்கு செலுத்த முடியாமல் உள்ளதாகவும் சுற்றுலா பயணிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில் இன்று வால்பாறை நகராட்சி பொறியாளர் வெ ங்கடாசலம் தலைமையில் படகு இல்லத்தில் உள்ள ஆகாயத்தாமரை செடிகளை அகற்றும் பணி நடந்தது. தாமரை செடிகளை படகுகள் மூலமாக வெட்டி அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
- மீட்டு தரக்கோரி கணவர் போலீசில் புகார்
- அன்னூர் போலீசார் தீவிர விசாரணை
கோவை,
திருப்பூர் மாவட்டம் சேவூரை சேர்ந்தவர் 27 வயது இளம்பெண். இவருக்கு திருமணமாகி கணவர் மற்றும் ஒரு மகள் மற்றும் 2 மகன்கள் உள்ளனர்.
இளம்பெண் தனது குடும்பத்துடன் கோவை மேட்டுப்பாளையம் குமாரகவுண்டன்புதூரில் உள்ள தனியார் நிறுவன குடியிருப்பில் தங்கி இருந்து தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.
அப்போது இளம்பெண்ணுக்கு அங்கு வேலை பார்க்கும் ஈரோட்டை சேர்ந்த வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்கா தலாக மாறியது. கணவர் வீட்டில் இல்லாத நேரத்தில் இளம்பெண் வாலிபரை வீட்டிற்கு அழைத்து ஜாலியாக இருந்து வந்தார்.
இந்த கள்ளகாதல் விவகாரம் இளம்பெண்ணின் கணவருக்கு தெரிய வரவே அவர் தனது மனைவியை கண்டித்தார். இதனால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்த இளம்பெண் 3 குழந்தைகளுடன் அவரது கள்ளக்காதலனுடன் ஓட்டம் பிடித்தார். வேலை முடிந்து வீட்டிற்கு திரும்பிய இளம்பெண்ணின் கணவர் மனைவி மற்றும் குழந்தைகள் வீட்டில் இல்லாதது கண்டு அதிர்ச்சி யடைந்தார். அக்கம் பக்கத்தினரிடம் விசாரித்தபோது இளம்பெண் 3 குழந்தைகளுடன் வாலிபருடன் சென்றது தெரிய வந்தது.
இதுகுறித்து இளம்பெண்ணின் கணவர் குழந்தைகளுடன் வாலிபருடன் ஓட்டம் பிடித்த தனது மனைவியை மீட்டு தரும்படி அன்னூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 குழந்தைகளை அழைத்துக் ெகாண்டு கள்ளக்காதலனுடன் ஓட்டம் பிடித்த இளம்பெண்ணை தேடி வருகின்றனர்.
- குடிமை வழங்கல் அதிகாரிகள் தீவிர பரிசீலனை
- கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் அமலில் உள்ளதால் பொதுமக்களில் பலர் ஆர்வம்
கோவை,
கோவை மாவட்டத்தில் 1405 ரேஷன்கடைகள் உள்ளன. இங்கு 11.02 லட்சம் குடும்ப அட்டைகள் பயன்பாட்டில் உள்ளன. ரேஷன்கடைகள் மூலம் குடும்ப அட்டைதாரருக்கு மாதந்தோறும் சுமார் 20 ஆயிரம் டன் அரிசி, 1200 டன் துவரம்பருப்பு, 600 டன் சர்க்கரை, 9 லட்சம் பாமாயில் பாக்கெட்டுகள் ஆகியவை வழங்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் கோவை மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்கள் புதிய ரேஷன்கார்டுகள் வழங்க கோரி அந்தந்த பகுதிகளில் உள்ள குடிமைப்பொருள் வழங்கல் அலுவலகங்களில் விண்ணப்பம் செய்து வருகின்றனர்.
மேலும் ஆன்லைன் வாயிலாகவும் புதிய ரேஷன் கார்டுகள் கேட்டு விண்ணப்பங்கள் குவிந்து வருகின்றன. இதுதவிர ரேஷன்கார்டு தாரர்களில் திருமணமான பலர் பெயர் நீக்கம் கோரி விண்ணப்பம் செய்து உள்ளனர். தொடர்ந்து அவர்கள் புதிய ரேஷன்கார்டு வழங்க க்கோரி விண்ணப்பம் செய்து வருகின்றனர்.
கோவை மாவட்டத்தில் மட்டும் ஒட்டுமொத்தமாக 7 ஆயிரம் பேர் புதிய ரேஷன்கார்டு கேட்டு விண்ணப்பித்து இருப்பதால் அவற்றை சரிபார்த்து ஆய்வுசெய்து பரிசீலனை செய்யும் பணியில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
கோவை மாவட்டத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு புத்தக வடிவில் ரேஷன்கார்டுகள் அச்சிட்டப்பட்டு தகுதியானவர்களுக்கு வினியோகிக்கப்பட்டது. ஆனால் தற்போது ஸ்மார்ட் கார்டுகள் மூலம் பொதுமக்களுக்கு ரேஷன் பொருட்கள் வினியோகிக்கப்படுகிறது.
தமிழக அளவிலான ஸ்மார்ட் ரேஷன்கார்டுகள் சென்னையில் மட்டுமே தயாராகி வருகிறது. தொடர்ந்து அவை மாவட்டந்தோறும் பொது மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து கோவை மாவட்ட குடிமைப்பொருள்வழங்கல் துறை அதிகாரிகள் கூறியதாவது:-
கோவையில் புதிய ரேஷன்கார்டுகள் கோரி இதுவரையில் 7 ஆயிரம் பேர் விண்ணப்பித்து உள்ளனர். கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் அமலில் உள்ளதால் பொதுமக்களில் பலர் ஆர்வத்துடன் புதிய கார்டுகள் வழங்க கோரி விண்ணப்பம் செய்து வருகின்றனர். அவர்களின் விண்ணப்பங்கள் தற்போது பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது.
இதற்காக சம்பந்தப்பட்டவர்களின் வீடுகளுக்கு அதிகாரிகள் நேரடியாக சென்று கள ஆய்வு செய்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். விரைவில் தகுதியுடைய அனைவருக்கும் புதிய ரேஷன்கார்டுகள் வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
- பொதுமக்கள் கடும் அவதி
- எந்தவித முன்னறிவிப்பும் இன்றி சாலை அடைக்கப்பட்டதால் அனைத்து பேருந்துகளும் மேம்பாலத்தில் சென்றது
கிணத்துகடவு,
கோவை-பொள்ளாச்சி தேசிய நெடுஞ்சாலையில் கிணத்துக்கடவு மேம்பாலத்தின் கீழ் புதிய பஸ்நிலையம் அருகே தார் சாலை போடும் பணிகள் நேற்று திடீரென தொடங்கியது.
இதன்காரணமாக கிணத்துக்கடவு-அரசம்பாளையம் பிரிவு அருகே தடுப்பு அமைக்கப்பட்டு, அங்கிருந்து பொள்ளாச்சி செல்லும் பஸ்கள் மேம்பாலம் வழியாக திருப்பி விடப்பட்டன. இதனால் காலை நேரத்தில் பள்ளி-கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகள் மற்றும் வேலைக்கு செல்லும் பொதுமக்கள் ஆகியோர் பெரும் அவதிக்கு உள்ளாகினர்.
மேலும் அரசம்பாளையம் பிரிவில் இருந்து, சுமார் ஒரு கி.மீ. தூரம் நடந்து சென்று கிணத்துக்கடவு பஸ் நிலையம் செல்ல வேண்டி உள்ளது. அதேபோல பொள்ளாச்சியில் இருந்து கிணத்துக்கடவு வரும் பயணிகள் முத்தூர் பிரிவில் இறங்கி அங்கிருந்து பாதசாரியாக பஸ் நிலையம் வர வேண்டும் என்ற நிலை ஏற்பட்டது.
எந்தவித முன்னறிவிப்பும் இன்றி கிணத்துக்கடவு பகுதியில் தார்சாலை அமைக்கும் பணி திடீரென நடைபெற்றதால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டனர். மேலும் மேம்பாலத்தின்கீழ் டிவைடர் வைத்து உள்ளதால், வாகன ஓட்டிகள் மீண்டும் ஒரு வழிப்பாதையில் திரும்ப வேண்டிஉள்ளது. எனவே இந்த பகுதியில் கடும் போக்கு வரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதுகுறித்து கிணத்துக்கடவு பகுதியை சேர்ந்த பெண்கள் கூறியதாவது: காலைநேரத்தில் தார்சாலை அமைக்கும் பணி நடை பெற்றதால் நாங்கள் மிகவும் சிரமப்பட்டோம். மேலும் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி சாலை அடைக்கப்பட்டதால் அனைத்து பேருந்துகளும் மேம்பாலத்தின் மேல் சென்றது.
எனவே பஸ்சுக்காக காத்திருந்த நாங்கள் அனைவரும் திரும்பவும் அரசம்பாளையம் பிரிவு சென்று, அங்கிருந்து மேம்பாலத்தின் வழியாக செல்லும் பேருந்துகளை மறித்து ஏற வேண்டி இருந்தது. எனவே பயணிகளுக்கு எந்தவித இடையூறும் ஏற்படுத்தாமல் தார்சாலை அமைக்கும் பணியை செய்து முடிக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
- போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை
- நீர்வழிப் பாதையை பொதுப்பணித் துறையுடன் இணைந்து அளவீடு செய்து ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை
மேட்டுப்பாளையம்,
அன்னூரில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான 100 ஏக்கர் பரப்பளவுள்ள குளம் உள்ளது. இந்தக் குளம் அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தில் இணைக்கப்பட்டு, தற்போது சோதனை ஓட்டமாக குளத்துக்கு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. மேலும், அன்னூர் சுற்றுவட்டரப் பகுதியில் பெய்து வரும் மழையால் குளத்தின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
இந்நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்பு அன்னூர் சுற்றுவட்டாரத்தில் பெய்த பலத்த மழையால் குடியிருப்புகள், விவசாய நிலங்களில் மழைநீர் புகுந்தது.
பல இடங்களில் நீர்வழிப்பாதைகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால மழைநீர் செல்ல வழியில்லாமல் குடியிருப்புப் பகுதியில் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால், பொதுமக்கள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.
இந்நிலையில், நீர்வழிப் பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி பொதுமக்கள் தாலுகா அலுவலகத்தை முற்றுகை யிட்டனர். தகவல் அறிந்து வந்த தாசில்தார் காந்திமதி, பேரூராட்சித் தலைவர் பரமேஸ்வரன் உள்ளிட்டோர் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.
அப்போது, பொதுமக்கள் கூறியதாவது:-
பொதுப்பணித் துறைக்கு சொந்தமான குளம் நிரம்பும் நிலையில் உள்ளது. ஒரு நாள் பெய்த மழைக்கே குடியிருப்புப் பகுதிக்குள் மழைநீர் புகுந்தது. மீண்டும் கனமழை பெய்தால் குளம் நிரம்பி குடியிருப்புகளை மழைநீர் சூழ வாய்ப்புள்ளது.
எனவே, அன்னூர் குளத்தில் இருந்து குன்னத்தூராம்பாளையம் குளத்துக்கு செல்லும் நீர்வழிப் பாதையை அளவீடு செய்து, நீர்வழிப் பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி குன்னத்தூராம் பாளையம் குளத்துக்கு தடையின்றி மழைநீர் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
நீர்வழிப் பாதையை பொதுப்பணித் துறையுடன் இணைந்து அளவீடு செய்து ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என தாசில்தார் காந்திமதி உறுதி அளித்ததையடுத்து முற்றுகைப் போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
- பொருட்கள் எரிந்து நாசமானது
- கணவன்-மனைவி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்
சூலூர்,
சூலூர் அருகே புதிய பஸ் நிலையம் பின்புறம் குடியிருப்பு பகுதியில் நல்லுசாமி (வயது 68) என்பவர் தனது மனைவியுடன் வசித்து வருகிறார். நல்லுசாமி கூட்டுறவுத் துறையில் துணை பதிவாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
நேற்று முதல் மாடியில் வீட்டின் படுக்கை அறையில் ஏசி எந்திரத்தை இயக்கி விட்டு விட்டு கீழே உள்ள வரவேற்பறையில் தனது உறவினருடன் பேசிக் கொண்டு இருந்தார். அப்போது திடீரென மேல் மாடியில் படுக்கை அறையில் இருந்து புகை வருவதை கண்டார்.
உடனே சத்தமிட்டு அருகில் இருப்போரை அழைத்தார். அப்போது தீ மளமளவென அறை முழுவதும் பரவியது. உடன டியாக மின்சாரத்தை துண்டித்து இது பற்றி சூலூர் தீயணைப்பு துறை மற்றும் மீட்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
சூலூர் தீயணைப்பு துறை அலுவலர் ரகுநாதன் தலைமையில் அங்கு வந்த தீயணைப்பு படையினர் உடனடியாக படுக்கை அறை க்குள் சென்று அங்கு பற்றி இருந்த தீயை அணைத்தனர். அப்போது படுக்கை அறையில் மாட்டி இருந்த ஏசி மெஷினில் தீப்பிடித்து உருகிய நிலையில் இருந்தது தெரிய வந்தது.
மேலும் அதில் இருந்து தீ பரவி அருகில் உள்ள பொருட்கள் அனைத்தும் பற்றி எரிந்துள்ளது. தெரிய வந்தது. தீப்பற்றும் போது அந்த அறையில் நல்லுசாமி மற்றும் அவரது மனைவி இல்லாததால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இதில் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது.
- திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி கடத்தி சென்றது அம்பலம்
- மேட்டுப்பாளையம் போலீசார் விசாரணை
கோவை,
கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள சின்னபுதூரை சேர்ந்தவர் 15 வயது சிறுமி. இவர் 10-ம் வகுப்பு படித்து முடித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிறுமிக்கு சாலையூரை சேர்ந்த 23 வயது வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. 2 பேரும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்தனர்.
சம்பவத்தன்று சிறுமி தனது தாயிடம் மேட்டுப்ப ளையம் பத்ரகாளியம்மன் கோவிலுக்கு செல்வதாக கூறி விட்டு சென்றார். அங்கு சென்ற வாலிபர் சிறுமியிடம் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி அவரை கடத்தி சென்றார். கோவிலுக்கு சென்ற மகள் நீண்ட நேரம் ஆகியும் திரும்பி வராததால் அவரை அவரது தாய் பல்வேறு இடங்களில் தேடினார்.
ஆனால் சிறுமியை கண்டுபிடிக்க முடியவில்லை. அவரது செல்போனும் சுவிட்ஆப் செய்யப்பட்டு இருந்தது. அப்போது தான் சிறுமியை வாலிபர் கடத்தி சென்றது தெரியவந்தது.
இது குறித்து சிறுமியின் தாய் மேட்டுப்பாளையம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கோவிலுக்கு சென்ற 15 சிறுமியை கடத்தி சென்ற வாலிபரை தேடி வருகின்றனர்.






