என் மலர்tooltip icon

    சென்னை

    • சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
    • தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது.

    மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக வருகிற 4-ந்தேதி வரை தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மறறும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யலாம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

    அதன்படி, தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், தமிழகத்தில் இன்று காலை 10 மணிவரை நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, தென்காசி ஆகிய 5 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • அரசுப் பள்ளி மாணவர் சேர்க்கை 4 இலட்சம்!
    • ஆயிரம் முத்தங்களுடன் மாணவச் செல்வங்களை வரவேற்கிறோம்.

    தமிழகத்தில் நடப்பு ஆண்டில் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையின் எண்ணிக்கை 4 லட்சத்தை கடந்துள்ளதாக பள்ளிக் கலவித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    அரசுப் பள்ளி மாணவர் சேர்க்கை 4 இலட்சம்!

    ஆயிரம் முத்தங்களுடன் மாணவச் செல்வங்களை வரவேற்கிறோம்.

    "அரசுப் பள்ளி என்பது வறுமையின் அடையாளம் அல்ல! அது பெருமையின் அடையாளம்"

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்..

    • தமிழக பாஜக மாநில துணைத் தலைவர்களாக 14 பேரை நியமனம்.
    • தமிழக பாஜக துணைத்தலைவராக (தென்சென்னை) நடிகை குஷ்பு தேர்வு.

    தமிழக பாஜக மாநில துணைத் தலைவர்களாக 14 பேரை நியமனம் செய்து மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் அறிவித்தார்.

    அதன்படி, தமிழக பாஜக துணைத்தலைவராக (தென்சென்னை) நடிகை குஷ்பு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    இந்நிலையில், புதிதாக நியமிக்கப்பட்டிருக்கும் பாஜக மாநில நிர்வாகிகளுக்கு அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அண்ணாமலை வௌியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-

    மரியாதைக்குரிய பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா அவர்களின் ஒப்புதலுடன், தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணன் நயினார் நாகேந்திரன் அவர்களால், புதிதாக நியமிக்கப்பட்டிருக்கும் பாஜக மாநில நிர்வாகிகள் மற்றும் அணித் தலைவர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    தங்களுக்குப் புதிதாக வழங்கப்பட்டிருக்கும் பொறுப்புகளைச் சிறப்புடன் கையாண்டு, கட்சியின் அடித்தளத்தை மேலும் வலுப்படுத்தும் இனிய தொடக்கத்திற்கு வாழ்த்துகள்!

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • துணைத் தலைவர்களாக 14 பேரை நியமனம் செய்து மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் அறிவிப்பு.
    • பாஜக மாநில பொருளாளராக சேகர், இணைப் பொருளாளராக சிவசுப்பிரமணியம் நியமனம்.

    தமிழக பாஜக மாநில துணைத் தலைவர்களாக 14 பேரை நியமனம் செய்து மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் அறிவித்துள்ளார்.

    அதன்படி, தமிழக பாஜக துணைத்தலைவராக (தென்சென்னை) நடிகை குஷ்பு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    மாநில துணைத்தலைவர்களாக சர்கவரத்தி, துரைசாமி, ராமலிங்கம், கரு. நாகராஜன், சசிகலா புஷ்பா கனகசபாபதி ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

    மேலும், பாஜக மாநில துணைத் தலைவர்களாக டால்பின் ஸ்ரீதர், சம்பத், பால் கனகராஜ், ஜெயபிரகாஷ், வெங்கடேசன் உள்ளிட்டோர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    பாஜக மாநில பொதுச் செயலாளர்களாக பால கணபதி, ஸ்ரீநிவாசன், முருகானந்தம், கார்த்தியாயினி, ஏ.பி. முருகானந்தம் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

    பாஜக மாநில பொருளாளராக சேகர், இணைப் பொருளாளராக சிவசுப்பிரமணியம் நியமனம் செய்து நயினார் நாகேந்திரன் அறிவித்துள்ளார்.

    • அரசு சார்பில் வழங்கப்பட்ட நிதியை கவினின் பெற்றோர் பெற்றுக்கொள்ளவில்லை.
    • இந்த வழக்கின் விசாரணையை சிபிசிஐடி-க்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டது.

    சென்னை:

    தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலத்தைச் சேர்ந்தவர் சந்திரசேகர். இவருடைய மகன் கவின் (வயது 27). சென்னையில் தகவல் தொழில்நுட்ப என்ஜினீயராக பணியாற்றி வந்த கவின் விடுமுறைக்காக ஊருக்கு சென்றிருந்தார். கடந்த 27-ந் தேதி தனது தாத்தாவை சிகிச்சைக்காக பாளையங்கோட்டை கே.டி.சி. நகர் பகுதியில் உள்ள ஒரு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார். அப்போது, அவரை நெல்லை பாளையங்கோட்டை கே.டி.சி. நகர் பகுதியைச் சேர்ந்த சுர்ஜித் (24) என்ற வாலிபர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்தார்.

    கைது செய்யப்பட்ட அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் சுர்ஜித்தின் அக்காளுடன் வேறு சமூகத்தைச் சேர்ந்த கவின் பழகியதால் அவர் ஆணவ கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது.

    சுர்ஜித் கைது செய்யப்பட்ட நிலையில், அவரது பெற்றோரான சரவணன் மற்றும் கிருஷ்ணகுமாரி ஆகியோர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. அவர்கள் இருவரும் சப்-இன்ஸ்பெக்டர்களாகப் பணியாற்றி வந்த நிலையில், இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

    அவர்கள் இருவரையும் கைது செய்தால் மட்டுமே கவினின் உடலை வாங்கி அடக்கம் செய்வோம் என உயிரிழந்த இளைஞரின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று அரசு அறிவித்த நிவாரண நிதியை கவினின் பெற்றோர் வாங்க மறுத்தனர்.

    இந்நிலையில், இந்த வழக்கின் விசாரணையை சிபிசிஐடி-க்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

    இதுதொடர்பாக தமிழக டிஜிபி வெளியிட்டுள்ள அறிக்கையில், விசாரணை பாரபட்சமின்றி நடைபெறுவதை உறுதிசெய்யும் வகையில் வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டுள்ளது. வழக்கு விசாரணை வெளிப்படையாக நடைபெறுவதற்காக குற்றம் சாட்டப்பட்டவரின் பெற்றோர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ளது.

    • தஞ்சாவூர், திருவாரூர், நாகபட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
    • சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்றும் நாளையும் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

    சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

    மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று மற்றும் நாளை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

    வரும் 1-ந்தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    வரும் 2-ந்தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தஞ்சாவூர், திருவாரூர், நாகபட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

    வரும் 3-ந்தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தஞ்சாவூர், திருவாரூர், நாகபட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, கடலூர், விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

    வரும் 4-ந்தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தஞ்சாவூர், திருவாரூர், நாகபட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, கடலூர், அரியலூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

    வரும் 5-ந்தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தஞ்சாவூர், திருவாரூர், நாகபட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, கடலூர், அரியலூர், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்றும் நாளையும் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36-37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28-29 செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ஆண்டுக்கு 1.50 லட்சம் வாகனங்களை உற்பத்தி செய்ய திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
    • ஆகஸ்ட் 3-ந்தேதி சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு விமானத்தில் செல்ல இருக்கிறார்.

    சென்னை:

    தூத்துக்குடியில் தயாராகி உள்ள மின்சார கார் உற்பத்தி தொழிற் சாலையையும் அதன் விற்பனையையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் ஆகஸ்ட் 4-ந்தேதி தூத்துக்குடிக்கு நேரில் சென்று திறந்து வைக்க உள்ளார்.

    உலகின் முன்னணி மின்சார வாகனத் தயாரிப்பு நிறுவனமான வியட்நாம் நாட்டைச் சேர்ந்த வின்பாஸ்ட் நிறுவனம் தூத்துக்குடியில் ரூ.16,000 கோடியில் மின்சார கார் உற்பத்தி தொழிற்சாலையை அமைக்க ஒப்பந்தம் செய்தது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் சென்னையில் கடந்த 2024-ம் ஆண்டு நடந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் மேற்கொள்ளப்பட்டது.

    இதைத்தொடர்ந்து கார் உற்பத்திக்கான ஆலை அமைப்பதற்கு தூத்துக்குடி சில்லாதத்தம் சிப்காட் பகுதியில் 408 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்தத் தொழிற்சாலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். முதற்கட்டமாக ரூ.1,119.67 கோடியில் 114 ஏக்கரில் தொழிற்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இங்கு ஆண்டுக்கு 1.50 லட்சம் வாகனங்களை உற்பத்தி செய்ய திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில், இந்த தொழிற்சாலையை ஆகஸ்ட் 4-ந்தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று திறந்து வைக்க உள்ளார். இதற்காக ஆகஸ்ட் 3-ந்தேதி சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு விமானத்தில் செல்ல இருக்கிறார்.

    • தகவல் தொழில்நுட்ப துறை சார்பில் தமிழ்நாட்டில் முதன்முறையாக அறிவுசார் சொத்துரிமை மாநாடு நடைபெறுகிறது.
    • கலைஞர் ஆட்சியில் தான் தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள் உருவாக்கப்பட்டன.

    சென்னை:

    சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் தமிழ்நாட்டின் புத்தமை அறிவுசார் சொத்துரிமை முதலாவது மாநாடு நடைபெற்றது.

    இதையொட்டி அமைக்கப்பட்டிருந்த கண்காட்சியில், தமிழ்நாட்டைச் சேர்ந்த 16 ஆராய்ச்சியாளர்களின் காப்புரிமை பெற்ற கண்டு பிடிப்புகள் அடங்கிய அரங்குகளை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பார்வையிட்டு, ஆராய்ச்சியாளர்களுடன் கலந்து ரையாடினார்.

    நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:-

    தகவல் தொழில்நுட்ப துறை சார்பில் தமிழ்நாட்டில் முதன்முறையாக அறிவுசார் சொத்துரிமை மாநாடு நடைபெறுகிறது. திராவிட மாடல் அரசு புதிய தொழில் நுட்பங்களை எப்போதும் வரவேற்கிறது. திராவிட மாடல் ஆட்சியில் தகவல் தொழில்நுட்பத் துறை சிறந்து விளங்குகிறது. தொழில் முதலீடுகளை ஈர்ப்பதில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக விளங்குகிறது. தமிழ் நாட்டில் அதிகளவில் தொழில் முதலீடுகள் குவிந்து வருகிறது. கலைஞர் ஆட்சியில் தான் தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள் உருவாக்கப்பட்டன.

    இன்று அது வளர்ச்சி அடைந்துள்ளது. மென்பொருள் ஏற்றுமதியில் இந்திய அளவில் 3-வது மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது. 'நான் முதல்வன்' திட்டம் மூலம் தமிழக மாணவர்கள் தகவல் தொழில்நுட்பத் துறையில் சாதித்து வருகின்றனர்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், மாநிலத் திட்டக்குழுவின் செயல் துணைத் தலைவர் ஜெ. ஜெயரஞ்சன், தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அரசு முதன்மைச் செயலாளர் பிரஜேந்திர நவ்னித், ஐடிஎன்டி மையத்தின் தலைமைச் செயல் அலுவலர் வனிதா வேணுகோபால், தேசிய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் கழகத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் (ஓய்வு) கமாண்டர் அமித்ரஸ்தோகி, ஜெட் வெர்க்கின் எலக்ட்ரானிக்ஸ் தலைவர் ஜோஷ் போல்கர், மற்றும் ஆராய்ச்சியாளர்கள், கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

    • இந்த பகுதியில் சில வாரங்களுக்கு முன்பு போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டன.
    • வாகன ஓட்டிகள் தவறான திசையில் செல்வதால் விபத்துக்கள் ஏற்படும் அபாயம் உள்ளது.

    சென்னை:

    சென்னை பள்ளிக்கரணையில், வேளச்சேரி மெயின்ரோடு மற்றும் பல்லாவரம்-துரைப்பாக்கம் ரேடியல் சாலை சந்திப்பில், காமாட்சி மருத்துவமனை அருகே சில மாதங்களுக்கு முன்பு கடுமையான போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது. இந்த நெரிசலை குறைக்க போக்குவரத்து போலீசார் போக்குவரத்தில் மாற்றம் செய்து சில நடவடிக்கைகளை எடுத்தனர். அதன் மூலம் அந்த பகுதிகளில் தற்போது போக்குவரத்து நெரிசல் குறைந்துள்ளது.

    இந்த நிலையில் பல்லாவரம் - துரைப்பாக்கம் ரேடியல் சாலையில் அமைந்துள்ள சுண்ணாம்பு கொளத்தூர் சந்திப்பில் சமீப காலமாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. இதையடுத்து இந்த பகுதியில் சில வாரங்களுக்கு முன்பு போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டன.

    சுண்ணாம்பு கொளத்தூர் மெயின்ரோடு மற்றும் டாக்டர் அம்பேத்கர் சாலை - விநாயகபுரம் மெயின்ரோடு ஆகிய 2 சந்திப்புகளில் சிக்னல்களை அகற்றி போக்குவரத்து போலீசார் சில மாற்றங்களை செய்தனர்.

    மேலும் ரேடியல் சாலையில் 'யு' வளைவில் திரும்புவதற்கும் ஏற்பாடுகளை செய்தனர். இதன் மூலம் தற்போது அந்த பகுதியில் வாகனங்கள் நெரிசலில் சிக்காமல் செல்ல முடிகிறது. இந்த புதிய போக்குவரத்து மாற்றங்கள் சிக்னல் சந்திப்புகளில் வாகன நெரிசலை குறைத்திருந்தாலும், சுண்ணாம்பு கொளத்தூர் மெயின்ரோடு மற்றும் டாக்டர் அம்பேத்கர் சாலை ஆகிய இடங்களில் வாகன ஓட்டிகள் தவறான திசையில் வாகனம் ஓட்டி செல்வது புதிய சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

    இதுகுறித்து அந்த பகுதி மக்கள் கூறியதாவது:-

    சுண்ணாம்பு கொளத்தூர் சந்திப்பில் தற்போது அமல்படுத்தப்பட்டு உள்ள புதிய போக்குவரத்து மாற்றங்கள் வாகன நெரிசலை குறைத்துள்ளன. ஆனால் அருகில் உள்ள ஓட்டல்கள் மற்றும் கடைகளுக்கு செல்லும் இரு சக்கர வாகன ஓட்டிகள் தவறான திசையில் செல்வது அதிகரித்துள்ளது. நீண்ட தூரம் செல்வதை தவிர்க்க அவர்கள் யு வளைவின் வழியாக தவறான திசையில் வாகனங்களில் செல்கிறார்கள்.

    வாகன ஓட்டிகள் தவறான திசையில் செல்வதால் விபத்துக்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே வாகன ஓட்டிகள் தவறான திசையில் செல்வதை தடுக்க போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    • பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் மொபைல் ஆப் மூலம் முன்பதிவு செய்து பயணிக்கலாம்.
    • சிறப்பு பஸ் இயக்கத்தை கண்காணிக்க அனைத்து பஸ் நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    கிளாம்பாக்கம்:

    அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    1-ந்தேதி வெள்ளிக்கிழமை, 2-ந் தேதி சனிக்கிழமை மற்றும் 3-ந்தேதி ஞாயிறுக்கிழமை ஆடிப்பெருக்கு (ஆடி-18) மற்றும் வார விடுமுறை நாட்களை முன்னிட்டு சென்னையில் இருந்தும் இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் தினசரி இயக்கப்படும் பஸ்களுடன் கூடுதலாக சிறப்பு பஸ்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு வரும் 1-ந்தேதி வெள்ளிக்கிழமை 340 பஸ்களும், 2-ந்தேதி சனிக்கிழமை 350 பஸ்களும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை கோயம்பேட்டில் இருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஒசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு 1-ந்தேதி 55 பஸ்களும் 2-ந் தேதி (சனிக்கிழமை) 55 பஸ்களும் மேற்கூறிய இடங்களில் இருந்தும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது மற்றும் பெங்களூரு, திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களில் இருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 250 சிறப்பு பஸ்களும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    மாதவரத்தில் இருந்து 1-ந்தேதி 20 பஸ்களும், 2-ந் தேதி 20 பஸ்களும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. மேலும், ஞாயிறு சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப வசதியாக பயணிகளின் தேவைக்கேற்ப அனைத்து இடங்களில் இருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    இந்த நிலையில், இந்த வார இறுதியில் வெள்ளிக்கிழமை 6,224 பயணிகளும் சனிக்கிழமை 2,892 பயணிகளும் மற்றும் ஞாயிறு 6,695 பயணிகளும் பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்துள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் மொபைல் ஆப் மூலம் முன்பதிவு செய்து பயணிக்கலாம். இச்சிறப்பு பஸ் இயக்கத்தை கண்காணிக்க அனைத்து பஸ் நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே, பயணிகள் மேற்கூறிய வசதியை பயன்படுத்தி தங்களது பயணத்தை மேற்கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தொடர்ந்து மக்களுடன் மக்களாகவே இருக்க போகிறோம்.
    • நல்லதே நடக்கும், வெற்றி நிச்சயம்.

    பனையூரில் அமைந்துள்ள தமிழக வெற்றிக்கழக தலைமை அலுவலகத்தில் MY TVK எனும் செயலி அறிமுகப்படுத்தப்பட்டது.

    தமிழக வெற்றிக்கழகத்தின் உறுப்பினர் சேர்க்கைக்காக 'வெற்றிப்பேரணியில் தமிழ்நாடு' என்ற செயலியை அக்கட்சியின் தலைவர் விஜய் வெளியிட்டார். ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேருக்கு தமிழக வெற்றிக்கழகத்தின் அடையாள அட்டையை அதன் தலைவர் விஜய் வழங்கினார்.

    இதன்பின் பேசிய விஜய் கூறியதாவது:-

    * 1967, 1977 போல் 2026 தேர்தலும் அமைய போகிறது.

    * 1967, 1977-ல் அதிகார பலம், அசுர பலத்தை எதிர்த்தே வெற்றி பெற்றுள்ளனர்.

    * மக்களிடம் செல், மக்களிடம் இருந்து கற்று கொள் என்ற அண்ணாவின் வார்த்தைகளை கடைபிடிப்போம்.

    * அண்ணா சொன்னதை கடை பிடித்தாலே நாம் வெற்றி பெற்று விடுவோம்.

    * தொடர்ந்து மக்களுடன் மக்களாகவே இருக்க போகிறோம். வீதிக்கு வீதி, தெருவுக்கு தெரு சென்று அனைவரையும் சந்தித்தவர்களே வெற்றி பெற்றனர்.

    * நல்லதே நடக்கும், வெற்றி நிச்சயம் என்றார். 

    • விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த பாபாஜி என்கிற சௌந்தர் என்பது தெரிய வந்துள்ளது.
    • கைது செய்யப்பட்ட சௌந்தர் மீது மறைமலைநகர் காவல் நிலையத்தில் செல்போன் பறிப்பு வழக்கு உள்ளது.

    சென்னை பெருங்குடி ரெயில் நிலையத்தில் தனியாக இருந்த பெண்ணிடம் இளைஞர் ஒருவர் நகை பறிப்பில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பான வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்நிலையில், நகை பறிப்பில் ஈடுபட்ட இளைஞரை போலீசார் கைது செய்தனர். போலீசார் நடத்திய விசாரணையில், அவர் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த பாபாஜி என்கிற சௌந்தர் (28) என்பது தெரிய வந்துள்ளது. கைது செய்யப்பட்ட சௌந்தர் மீது மறைமலைநகர் காவல் நிலையத்தில் செல்போன் பறிப்பு வழக்கு உள்ளது.

    மதிய வேளையில் தனியான இருந்ததால் பேச்சு கொடுத்து பெண்ணிடம் கைவரிசை காட்டியதாக அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

    ×