என் மலர்tooltip icon

    சென்னை

    • கொடுத்த வாக்குறுதியை உங்களால் நிறைவேற்ற முடியாது எனில், ஏன் வாக்குறுதிகளைக் கொடுக்கிறீர்கள்?
    • அராஜகப் போக்குடன் கைது செய்யப்பட்ட தூய்மைப் பணியாளர்கள் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும்.

    தமிழக வெற்றிக்கழகம் தலைவர் விஜய் வெளியிட்டுள்ள எக்ஸ் பக்க பதிவில் கூறியிருப்பதாவது:-

    தங்களின் உரிமைகளுக்காக அறவழியில் போராடி வந்த தூய்மைப் பணியாளர்களை அராஜகப் போக்குடன் மனிதாபிமானமற்ற முறையில் இரவோடு இரவாகக் கைது செய்த பாசிசத் திமுக அரசுக்குக் கண்டனம்!

    குண்டுக்கட்டாக இழுத்துச் சென்று கைது செய்தபோது பெண் தூய்மைப் பணியாளர்கள் மயக்கம் அடைந்ததோடு மட்டுமல்லாமல், அவர்கள் படுகாயம் அடைந்திருப்பதாகவும் செய்திகள் வந்துள்ளன. நள்ளிரவில் நடைபெற்ற இந்தக் கைது நடவடிக்கையைப் பார்க்கும்போது மனசாட்சியுள்ள எவராலும் தாங்கிக்கொள்ள முடியாத அளவிற்குப் பெண்கள் மீது வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டிருப்பது தெரிகிறது. காயம் அடைந்தவர்களுக்குத் தேவையான மருத்துவ உதவியையும் சிகிச்சையையும் உடனடியாக வழங்கி, அவர்களின் உடல்நலத்தைக் காக்கத் தேவையான நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும்.

    கைது செய்யப்பட்ட தூய்மைப் பணியாளர்கள் வெவ்வேறு இடங்களில் தங்களின் குடும்பத்தினரோடு கூடத் தொடர்புகொள்ள முடியாத வகையிலும் எவ்வித உதவிகளும் கிடைக்காத வகையில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.

    குடும்பத்தினரோடு கூடத் தொடர்பு கொள்ள முடியாத அளவிற்கு அடைத்து வைக்க, தூய்மைப் பணியாளர்கள் என்ன தேச விரோதிகளா? ஆளும் அரசுக்கு மனசாட்சி சிறிதளவேனும் இருக்கிறதா? இந்தக் கொடூரமான நடவடிக்கையைப் பார்த்தால் தமிழ்நாட்டில் நடப்பது மக்களாட்சியல்ல, கொடுங்கோலாட்சிதான் என்பது தெள்ளத் தெளிவாகிறது.

    எதிர்க்கட்சியாக இருந்தபோது கொடுத்த வாக்குறுதியைத்தான் நிறைவேற்றச் சொல்லித் தூய்மைப் பணியாளர்கள் போராடி வருகிறார்கள்.

    அதை ஏன் இன்னும் நீங்கள் நிறைவேற்றவில்லை?

    அப்படிக் கொடுத்த வாக்குறுதியை உங்களால் நிறைவேற்ற முடியாது எனில், ஏன் வாக்குறுதிகளைக் கொடுக்கிறீர்கள்?

    அராஜகப் போக்குடன் கைது செய்யப்பட்ட தூய்மைப் பணியாளர்கள் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும். அவர்கள் தங்களின் கோரிக்கைகளை முன்னிறுத்திப் போராடுவதற்கு மாற்று இடம் வழங்கப்பட வேண்டும்.

    இவ்வாறு விஜய் தெரிவித்துள்ளார்.

    • இந்த ஆண்டு பாஸ் பெறுவதற்கு முதலில் வாகனமும், அதனுடன் இணைக்கப்பட்ட பாஸ்டேக் தகுதியும் சரிபார்க்கப்படும்.
    • இந்த பாஸ், எந்த வாகன எண்ணுக்கு பெறப்படுகிறதோ, அந்த வாகனத்திற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

    சென்னை:

    தேசிய நெடுஞ்சாலைகளில் செல்லும் வாகனங்களுக்கு சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதற்காக 'பாஸ்டேக்' முறை நடைமுறையில் உள்ளது. இதற்கிடையே ஓராண்டுக்கு ரூ.3 ஆயிரம் சலுகையில் பாஸ் வழங்கும் முறையை மத்திய அரசு அறிவித்தது. இந்த ஓராண்டு பாஸ் சுதந்திர தினமான நாளை முதல் அமலுக்கு வருகிறது.

    இந்த ஆண்டு பாஸ் பெறுவதற்கு முதலில் வாகனமும், அதனுடன் இணைக்கப்பட்ட பாஸ்டேக் தகுதியும் சரிபார்க்கப்படும். பின்னர் ரூ.3 ஆயிரம் கட்டணத்தை 'ராஜ்மார்க்யாத்ரா' செல்போன் செயலி அல்லது தேசிய நெடுஞ்சாலை இணையதளம் மூலம் செலுத்த வேண்டும். 2 மணி நேரத்திற்குள் 'பாஸ்' செயல்படுத்தப்படும். இது தேசிய நெடுஞ்சாலை மற்றும் தேசிய விரைவுச்சாலையில் மட்டுமே செல்லுபடியாகும். மாநில நெடுஞ்சாலை, மாநில-உள்ளாட்சி நிர்வாக கட்டண மையங்கள், 'பார்க்கிங்' போன்ற இடங்களில் வழக்கமான முறையில் செயல்படும். அதற்கு கட்டணங்கள் வழக்கம்போல் வசூலிக்கபபடும்.

    இந்த 'பாஸ்' ஓராண்டு அல்லது 200 பயணங்கள் என்று எது முதலில் வந்தாலும் அதுவரை மட்டுமே செல்லுபடியாகும். அதன்பிறகு இந்த பாஸ் தானாகவே வழக்கமான 'பாஸ்டேக்' ஆக மாறி விடும். அதனை நீட்டிக்க விரும்பினால் மீண்டும் ரூ.3 ஆயிரம் செலுத்த வேண்டும். இந்த பாஸ், தனியார் கார், ஜீப், வேன்களுக்கு மட்டுமே பொருந்தும். வணிக பயன்பாட்டுக்கான வாகனங்களில் பயன்படுத்தினால், முன் அறிவிப்பு இல்லாமல் உடனடியாக பாஸ் செயலிழக்கப்படும்.

    இந்த பாஸ், எந்த வாகன எண்ணுக்கு பெறப்படுகிறதோ, அந்த வாகனத்திற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். வேறு வாகனத்திற்கு பயன்படுத்தினால், அது செயலிழக்கப்படும். மேலும் இந்த ஆண்டு 'பாஸ்' ஒட்டிய வாகனங்கள், ஒவ்வொரு முறையும் சுங்கச்சாவடிகளை கடக்கும்போது, செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தி வந்து விடும். இந்த ஆண்டு பாஸ் கட்டாயம் பெற வேண்டும் என்பது அல்ல. வழக்கம்போல் பாஸ்டேக் கட்டணம் செலுத்தி சுங்கச்சாவடிகளை கடந்து செல்லாம். தற்போது பாஸ்டேக்கில் உள்ள தொகையை, ரூ.3 ஆயிரம் பாஸ் பெறுவதற்கு பயன்படுத்த முடியாது.

    • சென்னை கோட்டை பகுதி 5 அடுக்கு பாதுகாப்பு வளையத்திற்குள் இன்று இரவில் இருந்து கொண்டுவரப்படுகிறது.
    • தங்கும் விடுதிகள், ஓட்டல்களில் போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

    சென்னை:

    நமது நாட்டின் 79-வது சுதந்திரதின விழா நாளை (வெள்ளிக்கிழமை) நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. சென்னையில் கோட்டை கொத்தளத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசிய கொடியை ஏற்றிவைத்து சிறப்புரையாற்றுகிறார்.

    நிகழ்ச்சியில் சில புதிய அறிவிப்புகளை வெளியிடும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்த ஆண்டுக்கான தகைசால் தமிழர் விருது உள்பட பல்வேறு விருதுகளை வழங்குவார்.

    முன்னதாக கோட்டை முன்பு நடக்கும் பிரமாண்ட அணிவகுப்பையும் அவர் பார்வையிடுகிறார். இதற்காக கோட்டையில் பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    சுதந்திரதின விழாவையொட்டி தமிழகம் முழுவதும், பாதுகாப்புக்காக 1 லட்சம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் டி.ஜி.பி.சங்கர் ஜிவால், கூடுதல் டி.ஜி.பி. டேவிட்சன் தேவாசீர்வாதம் ஆகியோர் உத்தரவின்பேரில் தமிழகம் முழுவதிலும் அனைத்து மாவட்டங்களிலும் போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.

    சென்னையில் போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவின்பேரில் கூடுதல் கமிஷனர்கள் டாக்டர் கண்ணன், பர்வேஷ் குமார், கார்த்திகேயன் ஆகியோர் தலைமையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 9 ஆயிரம் போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர். இன்று இரவில் இருந்தே சென்னை முழுவதும் ரோந்துபணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    சுதந்திரதின விழா நடைபெறும் சென்னை கோட்டை பகுதி 5 அடுக்கு பாதுகாப்பு வளையத்திற்குள் இன்று இரவில் இருந்து கொண்டுவரப்படுகிறது.

    சென்னை முழுவதும் மக்கள் அதிகமாக கூடும் ரெயில் நிலையங்கள், பஸ் நிலையங்கள், மார்க்கெட் பகுதி, வணிக நிறுவனங்கள், வழிப்பாட்டு தலங்கள், மத்திய-மாநில அரசு அலுவலகங்கள் போன்ற முக்கியமான இடங்களில் பாதுகாப்பு பலபடுத்தப்பட்டுள்ளது. தங்கும் விடுதிகள், ஓட்டல்களில் சோதனை நடத்தப்படுகிறது.

    வேலூர் மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு மயில்வாகனன் உத்தரவின்பேரில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் பாஸ்கரன், அண்ணாதுரை ஆகியோர் தலைமையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மாவட்டம் முழுவதும் 850 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக பொதுமக்கள் அதிகம் கூடும் ரெயில், பஸ்நிலையங்கள், மார்க்கெட், வணிகவளாகங்கள் மற்றும் நகரின் முக்கிய பகுதிகளில் போலீசார் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணி மேற்கொண்டுள்ளனர்.

    தங்கும் விடுதிகள், ஓட்டல்களில் போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். விடுதிகள், ஓட்டல்களில் தங்கி உள்ள நபர்களின் பெயர், முகவரி உள்ளிட்ட விபரங்கள் சரியாக உள்ளதா என்றும், அறைகளில் பழைய குற்றவாளிகள் மற்றும் நாசவேலையில் ஈடுபடும் நோக்கத்தில் மர்மநபர்கள் தங்கி உள்ளனரா என்று சோதனையிட்டனர். மேலும் அவர்கள் தங்கியிருப்பதற்கான காரணத்தையும் போலீசார் விசாரித்தனர்.

    காட்பாடி ரெயில் நிலையத்தில் பயணிகளின் உடைமைகள் மெட்டல் டிடெக்டர் கொண்டு சோதனை செய்யப்படுகிறது. அதன்பின்னரே அவர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். இந்த பணியில் காட்பாடி ரெயில்வே போலீசாரும், ரெயில்வே பாதுகாப்பு படையினரும் ஈடுபட்டுள்ளனர். வெளி மாவட்டங்கள், பிறமாநிலங்களில் இருந்து வரும் வாகனங்களை மாநில மற்றும் மாவட்ட எல்லையான காட்பாடி கிறிஸ்டியான்பேட்டை, பத்தரப்பல்லி, பிள்ளையார்குப்பம், கண்ணமங்கலம் கூட்ரோடு அருகே, மாதனூர் அருகே ஆகிய பகுதிகளில் நிறுத்தி போலீசார் தீவிரமாக சோதனை செய்து வருகிறார்கள்.

    அதேபோன்று வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர், விரிஞ்சிபுரம் மார்கபந்தீஸ்வரர், ஸ்ரீபுரம் பொற்கோவில் உள்ளிட்ட முக்கிய கோவில்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். மாநில, மாவட்ட எல்லையோர பகுதிகள் மற்றும் சோதனை சாவடிகளில் உஷார் நிலையில் இருக்கவும், மாவட்டம் முழுவதும் ரோந்து பணியில் ஈடுபடவும் போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • சென்னையில் இன்று முதல் வரும் 18-ந் தேதி வரை 17 புறநகர் ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
    • ரத்து செய்யப்பட்டுள்ள 17 புறநகர் ரெயில்களுக்கு பதிலாக சிறப்பு புறநகர் ரெயில்கள் இயக்கப்படும்.

    சென்னையில் இன்று முதல் வரும் 18-ந் தேதி வரை 17 புறநகர் ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. சென்னை சென்ட்ரல் மற்றும் கூடூர் இடையே நடைபெறும் பொறியியல் பணி காரணமாக 3 நாட்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளதாக தென்னக ரெயில்வே அறிவித்துள்ளது.

    ரத்து செய்யப்பட்டுள்ள 17 புறநகர் ரெயில்களுக்கு பதிலாக சிறப்பு புறநகர் ரெயில்கள் இயக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு.
    • சென்னை உள்பட 5 மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு.

    நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, விருதுநகர், திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் காலை 10 மணி வரை லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

    சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு மாவட்டங்களில் காலை 10 மணி வரை லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் நேற்று வானம் மேக மூட்டமாகவும், சில இடங்களில் லேசான மழையும் பெய்தது. இன்று காலை மேகமூட்டமாக காணப்படுகிறது.

    வானிலை ஆய்வு மையம் நேற்று "மத்திய வங்கக்கடலின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இந்த நிலையில் மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள வடமேற்கு வங்கக்கடல் பகுதியில் இன்று காலையில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி (புயல் சின்னம்) உருவாகியுள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடையும். அடுத்த 48 மணி நேரத்தில் வடக்கு கடலோர ஆந்திரா மற்றும் தெற்கு ஒடிசா நோக்கி நகரக்கூடும்.

    இதன் காரணமாக தமிழகத்தில் வடக்கு மற்றும் தென் மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று முதல் வருகிற 18-ந்தேதி வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது" எனக் குறிப்பிட்டிருந்தது.

    • போராட்டத்தை கைவிட மறுப்பு தெரிவித்த தூய்மை பணியாளர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வந்தனர்.
    • போலீசார் நள்ளிரவில் குண்டுகட்டாக தூக்கி கைது செய்தனர்.

    தனியார்மயத்தை கைவிடக்கோரி போராட்டம் நடத்திய தூய்மைப்பணியாளர்கள் நள்ளிரவில் கைது செய்யப்பட்ட நிலையில், 4 இடங்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.

    சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட ராயபுரம், திரு.வி.க. நகர் ஆகிய மண்டலங்களின் தூய்மைப்பணி தனியாருக்கு வழங்கப்பட்டது. இதை எதிர்த்து கடந்த 1ஆம் தேதி 200-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் சென்னை மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் மாளிகை முன்பு திரண்டனர்.

    வளாகத்திற்குள் அவர்கள் போராட்டம் நடத்திய நிலையில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை வெளியே அப்புறப்படுத்தினார்கள். அவர்கள் மாநகராட்சி கட்டிடத்தின் நுழைவு வாயிலில் அமர்ந்து போராட்டம் செய்தார்கள். பின்னர், கோரிக்கை நிறைவேறும் வரை காத்திருப்பு போராட்டமாக நடத்தப்படும் என அறிவித்து நடைபாதையில் பந்தல் அமைத்து தங்களது போராட்டத்தை தொடங்கினார்கள்.

    தூய்மைப் பணியாளர்களின் போராட்டம் நாளுக்குநாள் தீவிரம் அடைந்தது. பலகட்ட பேச்சுவார்த்தை நடத்தியும், கோரிக்கையை நிறைவேற்றும் வரையில் போராட்டத்தை கைவிடப்போவதில்லை என திட்டவட்டமாக தெரிவித்தனர்.

    இந்தநிலையில், தூய்மைப்பணியாளர்கள் நேற்று 13-வது நாளாக தங்களுடைய போராட்டத்தை நடத்தினார்கள். அப்போது பா.ம.க. பொதுச்செயலாளர் முரளி சங்கர், தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சி நிறுவனர் பொற்கொடி ஆம்ஸ்ட்ராங், அ.தி.மு.க. முன்னாள் எம்.பி. பாலகங்கா, த.வெ.க. நிர்வாகிகள் உள்பட ஏராளமானோர் தூய்மைப் பணியாளர்களை சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.

    இதற்கிடையே, தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துவதாக ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு தலைமை நீதிபதி, 'சாலையை மறித்து போராட்டம் நடத்த அனுமதிக்க முடியாது. போராட்டத்தில் ஈடுபடும் தூய்மைப்பணியாளர்களை அப்புறப்படுத்த வேண்டும்' என உத்தரவிட்டார்.

    இதன் காரணமாக காலை 10.30 மணி முதல் ரிப்பன் மாளிகை முன்பு போலீசார் குவிக்கப்பட்டனர். தூய்மைப் பணியாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து ஏராளமானோர் குவியத் தொடங்கினார்கள். இதனால், ரிப்பன் கட்டிடம் முன்பு பரபரப்பாக காணப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மைப்பணியாளர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ஆனாலும் போராட்டம் தொடர்ந்தது.

    பின்னர், 8-ம் கட்ட பேச்சுவார்த்தைக்கு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு மதியம் 12 மணியளவில் போராட்ட குழுவினருக்கு அழைப்பு விடுத்தார். ஆனால் போராட்டகுழுவினர் மாலை 4.15 மணியளவில் ரிப்பன் மாளிகை வந்தனர். பின்னர் பேச்சுவார்த்தை தொடங்கிய 15 நிமிடத்தில் உடன்பாடு எட்டப்படாத நிலையில் போராட்ட குழுவினர் ரிப்பன் மாளிகையில் இருந்து வெளியேறினார்கள். போராட்டம் நடந்த இடத்தில் தொடர்ந்து பரபரப்பு நிலவியது. ஐகோர்ட்டு உத்தரவை மீறி தொடர்ந்து போராட்டம் நடைபெற்றது.

    இதையடுத்து, சுமார் 500-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். கோயம்பேட்டில் இருந்து பிராட்வே செல்லும் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் ரிப்பன் மாளிகை அருகில் உள்ள போக்குவரத்து சிக்னல் முதல் சென்டிரல் ரெயில் நிலையம் முன்பு உள்ள சிக்னல் வரையில் தடுப்புகள் கொண்டு போலீசார் அடைத்தனர். மறுபகுதியில் உள்ள ஒரு வழி போக்குவரத்து இருவழி போக்குவரத்தாக மாற்றப்பட்டது. இதனால் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் நிலவியது.

    தொடர்ந்து, தூய்மைப் பணியாளர்களை கைது செய்து அழைத்து செல்வதற்காக 10-க்கும் மேற்பட்ட பஸ்கள் போராட்டம் நடைபெறும் பகுதியில் நிறுத்தப்பட்டன. போலீசார் போராட்ட குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தினார்கள். ஆனால் யாரும் கலைந்து செல்லவில்லை. தொடர்ந்து போராட்டம் நடைபெற்றது.

    காலையில் தூய்மைப்பணியாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து போராட்டம் நடைபெறும் இடத்திற்கு வந்த பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் மாலை 6 மணியளவில் மீண்டும் தனது ஆதரவாளர்களோடு வந்து போராட்டத்தில் ஈடுபட்டார். மேலும், தடுப்புகள் கொண்டு அடைக்கப்பட்ட பகுதி வழியாக தூய்மைப் பணியாளர்களுக்கு ஆதரவாக ஏராளமானோர் உள்ளே நுழைய முற்பட்டனர்.

    அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்ப முயன்றனர். அப்போது, போலீசாருக்கும், அவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    முன்னதாக தமிழக பா.ஜனதா முன்னாள் தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் நேற்று மாலை போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சந்தித்து தனது ஆதரவை தெரிவித்தார்.

    இந்தநிலையில், நள்ளிரவில் தூய்மை பணியாளர்களை போலீசார் அதிரடியாக குண்டுகட்டாக தூக்கி கைது செய்தனர். அப்போது போலீசாருடன் அவர்கள் வாக்குவாதம் செய்து தள்ளுமுள்ளுவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    நேற்று போராட்டத்தின்போது அனைத்து தூய்மைப்பணியாளர்களும் கையில் தேசிய கொடியுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    கைது செய்யப்பட்ட தூய்மைப் பணியாளர்கள் அடையாறு, கிண்டி, சைதாபேட்டை, வேளச்சேரியில் உள்ள சமூகநல கூடங்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.

    • தி.மு.க.வின் தேர்தல் வாக்குறுதி எண் 285-ன் படி பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட பல கோரிக்கைகளையும் அவர்கள் முன்வைத்தனர்
    • பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

    சென்னையில் உள்ள இரண்டு மண்டல (5 மற்றும் 6) தூய்மை பணிகளை தனியாருக்கு விட்டதை எதிர்த்து தூய்மை பணியாளர்கள் ரிப்பன் மாளிகையில் கடந்த 14 நாட்களாக தொடர் போராட்டம் நடத்தி வந்தனர்.

    தி.மு.க.வின் தேர்தல் வாக்குறுதி எண் 285-ன் படி பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட பல கோரிக்கைகளையும் அவர்கள் முன்வைத்தனர்

    இதற்கிடையே போராட்டக்காரர்களை அப்புறப்படுத்த வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை தொடர்ந்து அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டனர்.

    நேற்று சேகர்பாபு உள்ளிட்ட அமைசர்கள் தலைமையிலான பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. இதைத்தொடர்ந்து இரவில் நீதிமன்ற உத்தரவை மீறி போராட்டம் நடத்தியதாக தூமைப்பனியர்களை போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்தனர்.

    முன்னதாக நேற்று மாலை தடையை மீறி போராட்டம் நடைபெறும் ரிப்பன் மாளிகை கட்டிடம் அமைந்துள்ள பகுதிக்கு சென்ற பாஜக மூத்த தலைவரும் முன்னாள் ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜன் தூய்மை பணியாளர்களை சந்தித்தார்.

    இதையடுத்து தமிழிசை சவுந்தரராஜன் மீது பெரியமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    நீதிமன்ற உத்தரவை மீறி தூய்மை பணியாளர்களை சந்தித்ததாக தமிழிசை சவுந்தரராஜன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    முன்னதாக தமிழிசை சவுந்தரராஜன் தூய்மை பணியாளர்களை சந்திக்க விடாமல் அவரது வீட்டிலேயே தடுத்து நிறுத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.

    இதற்கு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.  

    • போராட்டக்காரர்களை அப்புறப்படுத்த வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.
    • பேச்சுவார்த்தையிலும் உடன்பாடு எட்டப்படவில்லை.

    சென்னையில் உள்ள இரண்டு மண்டல (5 மற்றும் 6) தூய்மை பணிகளை தனியாருக்கு விட்டதை எதிர்த்து தூய்மை பணியாளர்கள் ரிப்பன் மாளிகையில் கடந்த 14 நாட்களாக தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    இதற்கிடையே போராட்டக்காரர்களை அப்புறப்படுத்த வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை தொடர்ந்து அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டனர்.

    அமைச்சர் சேகர்பாபு, கே.என். நேரு, மேயர் பிரியா உள்ளிட்டோர் தூய்மை பணியாளர்கள் போராட்டக்குழு நடத்திய பேச்சுவார்த்தையிலும் உடன்பாடு எட்டப்படவில்லை.

    இதனைத் தொடர்ந்து போராட்டம் தொடரும் என போராட்டக்குழு அறிவித்தது.

    இந்நிலையில் நீதிமன்ற உத்தரவை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறி தூய்மை பணியாளர்களை இரவோடு இரவாக  குண்டுக்கட்டாக போலீசார் கைது செய்தனர்.

    தங்கள் உரிமைகளை கோரி தொழிலாளர்கள் முழக்கங்களை எழுப்பியபடி இருந்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    • நீண்ட நாட்களாக பழுதடைந்து கேட்பாரற்று போக்குவரத்திற்கு இடையூறாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 525 வாகனங்கள் அகற்றம்.
    • 15 நாட்களில் உரிமை கோரப்படாத வாகனங்களை பொது ஏலம் விட நடவடிக்கை எடுக்கப்படும்.

    பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சாலையோரங்களில் நீண்ட நாட்களாக பழுதடைந்து கேட்பாரற்று போக்குவரத்திற்கு இடையூறாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களில் 525 வாகனங்கள் அகற்றப்பட்டு, மாநகராட்சி இடங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    இந்த வாகனங்களின் விவரங்கள் மாநகராட்சியின் www.chennaicorporation.gov.in என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இவ்வாகனங்களை உரிமை கோருவோர் சம்பந்தப்பட்ட வார்டு உதவிப் பொறியாளர்/மண்டல அலுவலகம்/காவல் நிலையத்தை 15 நாட்களுக்குள் அணுக வேண்டும். அவ்வாறு 15 நாட்களில் உரிமை கோரப்படாத வாகனங்களை பொது ஏலம் விட நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

    • மாதம்பட்டி ரங்கராஜ் ஸ்ருதி என்பவரை திருமணம் செய்துள்ளார்.
    • இந்த தம்பதிக்கு இரு குழந்தைகள் உள்ளனர்

    சென்னை:

    மாதம்பட்டி ரங்கராஜ் பிரபல சமையல்துறை நிபுணர் ஆவார். தமிழ் திரையுலகில் நடக்கும் பிரபலங்களின் திருமண நிகழ்ச்சிகளுக்கு கேட்டரிங் சேவையை செய்வது மாதம்பட்டி ரங்கராஜின் நிறுவனம்தான். தமிழ் திரைப்பட உலகில் வளர்ந்து வரும் நடிகராகவும் உள்ளார். அவரது முதல் படம் 'மெஹந்தி சர்க்கஸ்'.

    மாதம்பட்டி ரங்கராஜ் ஸ்ருதி என்ற பெண்ணை திருமணம் செய்துள்ளார். இந்த தம்பதிக்கு இரு குழந்தைகள் உள்ளனர்

    இதற்கிடையே, மாதம்பட்டி ரங்கராஜ் பேஷன் டிசைனரான ஜாய் கிரிஸ்ல்டாவை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். அவரது திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியது. ஜாய் தமிழ் திரையுலகில் புகழ்பெற்ற ஆடை வடிவமைப்பாளர் ஆவார். திருமணம் செய்துகொண்ட உடனேயே கிரிஸ்ல்டா 6 மாதம் கர்ப்பமாக இருக்கிறார் என்ற செய்தியை வெளியிட்டார்.

    ஆனால், கோவையில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் மாதம்பட்டி ரங்கராஜ் தனது மனைவி ஸ்ருதியுடன் பங்கேற்றது பேசுபொருளானது.

    இந்நிலையில், ஜாய் கிரிஸில்டா தனது இன்ஸ்டாகிராமில், குழந்தையின் பெயரை ராஹா ரங்கராஜ் என அறிவித்து பதிவிட்டுள்ளார்.

    கோவையில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் மாதம்பட்டி ரங்கராஜ், மனைவி ஸ்ருதியுடன் பங்கேற்ற நிலையில் ஜாஸ் கிரிசில்டாவின் இந்தப் பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    • பணியில் சேர்ந்த பின்னர் தூய்மை பணியாளர்களின் கோரிக்கை குறித்து பரிசீலிக்கப்படும்.
    • தூய்மை பணியாளர்களின் கோரிக்கைகளை கேட்பதற்கு சென்னை மாநகராட்சி தயாராக உள்ளது.

    பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததையொட்டி தூய்மை பணியாளர்கள், போராட்டம் தொடரும் என அறிவித்துள்ளனர். இந்த நிலையில் மேயர் பிரியா போராட்டம் குறித்து கூறியதாவது:-

    * சென்னை ரிப்பன் மாளிகை போராட்டம் நடத்தும் இடம் அல்ல. போராடுவதற்கு என்று ஒதுக்கப்பட்ட இடத்தில் போராடலாம்.

    * அனுமதிக்கப்பட்ட இடங்களில் போலீசாரிடம் அனுமதி பெற்ற பின்னர், தூய்மை பணியாளர்கள் போராட்டம் நடத்தலாம். தூய்மை பணியாளர்களின் கோரிக்கைகளை கேட்பதற்கு சென்னை மாநகராட்சி தயாராக உள்ளது.

    * பணியில் சேர்ந்த பின்னர் தூய்மை பணியாளர்களின் கோரிக்கை குறித்து பரிசீலிக்கப்படும்.

    * கோர்ட் உத்தரவின் அடிப்படையில் ரிப்பன் மாளிகை வளாகத்தில் போராடுவோரை கலைந்து செல்லுமாறு கேட்டுக்கொள்கிறோம். நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் மாநகராட்சி ஊழியர்கள் ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

    * 31ஆம் தேதிக்குள் தூய்மை பணியாளர்கள் பணிக்கு திரும்புமாறு வேண்டுகோள்

    • வெஸ்ட் இண்டீஸ் தொடரில் பாபர் அசாம் 3 போட்டிகளில் 56 ரன்கள் மட்டுமே அடித்தார்.
    • இதன் காரணமாக 2ஆவது இடத்தில் இருந்து 3ஆவது இடத்திற்கு சரிந்துள்ளார்.

    ஐசிசி வெளியிட்டுள்ள ஒருநாள் கிரிக்கெட் பேட்டர்களுக்கான தரவரிசையில் ரோகித் சர்மா 3ஆவது இடத்தில் இருந்து 2ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

    வெஸ்ட் இண்டீஸ்- பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடரையடுத்து ஐசிசி தரவரிசையை வெளியிட்டுள்ளது. வெஸ்ட் இண்டீஸ் தொடரில் பாபர் அசாம் 3 போட்டிகளில் 56 ரன்கள் மட்டுமே அடித்தார்.

    இதனால் 751 புள்ளிகளுடன் 3ஆவது இடத்திற்கு சரிந்துள்ளார். ரோகித் சர்மா 756 புள்ளிகளுடன் 2ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். சுப்மன் கில் 784 புள்ளிகளுடன் முதல் இடத்தில் நீடிக்கிறார். விராட் கோலி 4ஆவது இடத்தில் உள்ளார்.

    ஷ்ரேயாஸ் அய்யர் 8ஆவது இடத்தையும், கே.எல். ராகுல் 15ஆவது இடத்தையும் பிடித்துள்ளனர்.

    ×