என் மலர்tooltip icon

    சென்னை

    • வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது.
    • பார் வெள்ளி 1 லட்சத்து 99 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    சென்னை:

    தங்கம் விலை ஒரு நாள் ஏறுவதும், மறுநாள் இறங்குவதுமான நிலையிலேயே நீடித்து வருகிறது. கடந்த வாரமும் இதே நிலை நீடித்தாலும், வார இறுதிநாளான கடந்த 29-ந்தேதி ஒரு சவரன் 95 ஆயிரத்து 840 ரூபாய்க்கு விற்பனையானது. இதனை தொடர்ந்து கடந்த திங்கட்கிழமை தங்கம் சவரனுக்கு 720 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.96,560 ஆயிரத்துக்கு விற்பனையானது. அதன் பின்னர் விலை குறைவதும், ஏறுவதுமாக இருந்து வருகிறது

    இந்த நிலையில், வார இறுதிநாளான இன்று தங்கம் விலை சற்று உயர்ந்துள்ளது. கிராமுக்கு 40 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.12,040-க்கும் சவரனுக்கு 320 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.96,320 ஆயிரத்துக்கும் விற்பனையாகிறது.



    வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. கிராமுக்கு மூன்று ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 199 ரூபாய்க்கும் கிலோவுக்கு மூவாயிரம் ரூபாய் உயர்ந்து பார் வெள்ளி 1 லட்சத்து 99 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    05-12-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.96,000

    04-12-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.96,160

    03-12-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.96,480

    02-12-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.96,320

    01-12-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.96,560

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    05-12-2025- ஒரு கிராம் ரூ.196

    04-12-2025- ஒரு கிராம் ரூ.200

    03-12-2025- ஒரு கிராம் ரூ.201

    02-12-2025- ஒரு கிராம் ரூ.196

    01-12-2025- ஒரு கிராம் ரூ.196

    • அம்பேத்கரை அடக்க நினைத்த அதே ஆதிக்கக் கூட்டம் இன்று அவரைத் துதிப்பதுபோல நடிக்கிறதே, அதுதான் அவரது வெற்றி.
    • அம்பேத்கரின் வாழ்வே ஒரு பாடம்! அவரது போராட்டங்களே சமத்துவச் சமூகத்தை நோக்கிய பயணத்தில் நமக்கு ஊக்கம்!

    சட்டமேதை அண்ணல் அம்பேத்கரின் நினைவு தினத்தையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    புரட்டுகளைப் பொசுக்கிய புரட்சியாளர் அம்பேத்கர் நினைவு நாள்!

    எல்லா விதத்திலும் தன்னை அடக்கி ஒடுக்கும் ஓர் அமைப்புக்குள் இருந்து, கல்வி எனும் ஆயுதத்தால் அனைத்தையும் தகர்த்தெறிந்து மேலெழுந்த அறிவுச்சூரியன்தான் அம்பேத்கர். அன்று அவரை அடக்க நினைத்த அதே ஆதிக்கக் கூட்டம் இன்று அவரைத் துதிப்பதுபோல நடிக்கிறதே, அதுதான் அவரது வெற்றி.

    அவரது வாழ்வே ஒரு பாடம்! அவரது போராட்டங்களே சமத்துவச் சமூகத்தை நோக்கிய பயணத்தில் நமக்கு ஊக்கம்! அண்ணல் #Ambedkar எனும் பேரொளியின் வெளிச்சத்தில் தொடர்ந்து முன்னேறுவோம்!

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளது.
    • எழும்பூர், சென்டிரல் ரெயில் நிலையத்தில் பயணிகள் உடமைகள் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

    சென்னை:

    பாபர் மசூதி இடிப்பு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. சமீபத்தில் டெல்லியில் நடைபெற்ற கார் குண்டுவெடிப்பு சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியதால் இந்த ஆண்டு பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் தமிழ்நாட்டில் பாதுகாப்பு உஷார் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    பஸ், ரெயில் நிலையங்கள், வழிப்பாட்டு தலங்கள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கூடுதல் கண்காணிப்பு நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். சென்னையில் 15 ஆயிரம் போலீசார் உள்பட தமிழகம் முழுவதும் 1 லட்சம் போலீசார் இன்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    எழும்பூர், சென்டிரல் ரெயில் நிலையத்தில் பயணிகள் உடமைகள் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. அதே போன்று சென்னை முழுவதும் நேற்றிரவு வாகன சோதனையில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டிருந்தனர்.

    தனியார் தங்கும் விடுதிகளிலும் போலீசார் சோதனை நடத்தி, சந்தேகத்துக்குரிய நபர்கள் தங்கி இருக்கிறார்களா? என்பதை ஆய்வு செய்தனர்.

    • கடலோர மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை வரை பதிவாக வாய்ப்புள்ளது.
    • இந்த ஆண்டு பருவமழையை பொறுத்தவரையில், ஜனவரி முதல் வாரம் வரை நீடிக்க வாய்ப்பு இருக்கிறது.

    சென்னை:

    தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை பெய்து வரும் சூழலில், இன்றும் (சனிக்கிழமை), நாளையும் (ஞாயிற்றுக்கிழமை) கிழக்கு திசை காற்றின் ஊடுருவலால், டெல்டா, தென் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது. மேலும் இம்மாதத்தில் பருவமழை எப்படி இருக்கும்? என்ன மாதிரியான மழை நிகழ்வுகள் உருவாகும்? என்பது குறித்து தனியார் வானிலை ஆய்வாளர் டெல்டா வெதர்மேன் ஹேமசந்தரிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது:-

    வருகிற 10-ந்தேதி முதல் 12-ந்தேதி வரை கிழக்கு திசை காற்றினால் தமிழ்நாட்டில் மீண்டும் மழைக்கான சூழல் ஆரம்பிக்கிறது. கடலோர மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை வரை பதிவாக வாய்ப்புள்ளது. அதனைத் தொடர்ந்து கடல் சார்ந்த அலைவுகள் சாதகமாக அமைவதால், வருகிற 15-ந்தேதிக்கு பிறகு அடுத்தடுத்த மழை நிகழ்வுகள் உருவாகி பருவமழை தீவிரம் அடைவதற்கான சூழல் அதிகம் இருக்கிறது.

    அதன்படி, 15-ந் தேதிக்கு பின் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகி டெல்டா, தென்மாவட்டங்களிலும், 20-ந்தேதி அடுத்த தாழ்வுப்பகுதி உருவாகி சென்னை-கன்னியாகுமரி வரையிலான கடலோரப் பகுதிகளிலும் மழைக்கான வாய்ப்பை கொடுக்கும்.

    இதனையடுத்து வடகிழக்கு பருவமழை காலத்தின் 3-வது புயல் சின்னம் தெற்கு வங்கக்கடலில் 23-ந்தேதிக்கு பிறகு உருவாவதற்கான சாதகமான சூழல் நிலவி வருகிறது.

    இது சமீபத்தில் கடந்து சென்ற 'டிட்வா' புயலை போல நல்ல மழையை கொடுக்கக் கூடிய புயல் சின்னமாகவே இருக்கும் என கணிக்கப்பட்டிருக்கிறது. இந்த ஆண்டு பருவமழையை பொறுத்தவரையில், ஜனவரி முதல் வாரம் வரை நீடிக்க வாய்ப்பு இருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
    • சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

    சென்னை:

    தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான முதல் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

    இந்த நிலையில், தமிழ்நாட்டில் இன்று காலை 10 மணிவரை 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    கோவை, நீலகிரி, கடலூர், விழுப்புரம், திருவாரூர், மயிலாடுதுறை, நாகை, தேனி, ஆகிய மாவட்டங்களிலும் புதுவை மற்றும் காரைக்காலிலும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • ஜெர்மனி 3-1 என்ற கோல் கணக்கில் பிரான்சை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது.
    • சூட் அவுட் முறையில் 4-3 என்ற கோல் கணக்கில் இந்திய அணி திரில் வெற்றி பெற்றுள்ளது.

    14-வது ஜூனியர் உலக கோப்பை ஹாக்கி போட்டி சென்னை, மதுரையில் நடைபெற்று வருகிறது. கடந்த 28-ந்தேதி தொடங்கிய இந்த போட்டியில் நாக் அவுட்டான கால் இறுதி ஆட்டங்கள் நேற்று நடைபெற்றது.

    முன்னதாக 2 முறை சாம்பியனான இந்தியா, 7 தடவை உலக கோப்பையை வென்ற ஜெர்மனி, 2 முறை பட்டம் வென்ற அர்ஜென்டினா, ஸ்பெயின், நெதர்லாந்து, பிரான்ஸ் நியூசிலாந்து, பெல்ஜியம் ஆகிய அணிகள் கால் இறுதிக்கு தகுதி பெற்றன.

    இந்நிலையில், நேற்று நடைபெற்ற கால் இறுதி ஆட்டம் ஒன்றில் 7 முறை சாம்பியனான ஜெர்மனி, பிரான்ஸ் அணியுடன் மோதியது. இரு அணி வீரர்களும் சிறப்பாக ஆடினர்.

    இதனால் 2-2 என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்தது. இதையடுத்து, ஷூட் அவுட் முறை கடைபிடிக்கப்பட்டது. இதில் ஜெர்மனி 3-1 என்ற கோல் கணக்கில் பிரான்சை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது.

    தொடர்ந்து நடந்த ஆட்டத்தில் பெல்ஜியம் அணியுடன் மோதிய இந்திய ஹாக்கி அணி வெற்றி பெற்று அரை இறுதிக்கு முன்னேறி உள்ளது.

    சென்னையில் நடைபெற்ற இந்த கால் இறுதி போட்டியில் சூட் அவுட் முறையில் 4-3 என்ற கோல் கணக்கில் இந்திய அணி திரில் வெற்றி பெற்றுள்ளது.  

    • இன்று வழக்கமாக பயணிகள் வந்து சென்றுகொண்டிருந்தனர்.
    • இந்த சம்பவத்தால் விமான நிலைய பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில், கேட்பாரற்று கிடந்த சூட்கேஸ் அங்கு சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இன்று வழக்கமாக பயணிகள் வந்து சென்றுகொண்டிருந்த நிலையில் டிராலியல் வைக்கப்பட்டிருந்த சூட்கேஸ் நீண்டநேரமாக கேட்பாரற்று இருந்துள்ளது.

    இதனால் சந்தேகமெழுந்த நிலையில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் அதனை மோப்ப நாய் உதவியுடன் பரிசோதனை செய்தனர். ஆனால் அதில் ஆபத்தான பொருள் ஏதும் கண்டுபிடிக்கப்படவில்லை.

    இந்த சம்பவத்தால் விமான நிலைய பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. அந்த சூட்கேஸ் அங்கு எப்படி வந்தது என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது. 

    • 14-வது ஜூனியர் உலக கோப்பை ஹாக்கி போட்டி சென்னையில் நடைபெறுகிறது.
    • இன்று நடந்த காலிறுதியில் 7 முறை சாம்பியனான ஜெர்மனி அரையிறுதிக்கு முன்னேறியது.

    சென்னை:

    14-வது ஜூனியர் உலக கோப்பை ஹாக்கி போட்டி சென்னை, மதுரையில் நடைபெற்று வருகிறது. கடந்த 28-ந்தேதி தொடங்கிய இந்த போட்டியில் நாக் அவுட்டான கால் இறுதி ஆட்டங்கள் இன்று நடைபெற்றது.

    2 முறை சாம்பியனான இந்தியா , 7 தடவை உலக கோப்பையை வென்ற ஜெர்மனி, 2 முறை பட்டம் வென்ற அர்ஜென்டினா, ஸ்பெயின், நெதர்லாந்து, பிரான்ஸ் நியூசிலாந்து, பெல்ஜியம் ஆகிய அணிகள் கால் இறுதிக்கு தகுதி பெற்றன.

    இந்நிலையில், இன்று நடைபெற்ற கால் இறுதி ஆட்டம் ஒன்றில் 7 முறை சாம்பியனான ஜெர்மனி, பிரான்ஸ் அணியுடன் மோதியது.

    இரு அணி வீரர்களும் சிறப்பாக ஆடினர். இதனால் 2-2 என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்தது.

    இதையடுத்து, ஷூட் அவுட் முறை கடைபிடிக்கப்பட்டது. இதில் ஜெர்மனி 3-1 என்ற கோல் கணக்கில் பிரான்சை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது.

    • தீபத்தூண் என்பது கோவில் சொத்து என்பது ஊர்ஜிதமாகியுள்ளது.
    • இதுதொடர்பாக உள்துறை மந்திரி அமித்ஷாவுக்கு அறிக்கை அனுப்பியுள்ளோம்.

    சென்னை:

    தமிழக பா.ஜ.க. முன்னாள் தலைவர் அண்ணாமலை சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    திருப்பரங்குன்றம் விவகாரத்தில் நீதிமன்ற தீர்ப்பை மதிக்காமல் மத மோதலில் ஏற்படுத்தும் முயற்சியில் தி.மு.க. அரசு இறங்கியுள்ளது.

    ஐகோர்ட் தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அளித்த தீர்ப்பு குறித்து தமிழக அமைச்சர் ரகுபதி வேண்டும் என்றே பொய் சொல்லியுள்ளார். நீதிபதி தவறான தீர்ப்பு கொடுத்துள்ளார் என ரகுபதி தவறான வாதத்தைவைக்கிறார்.

    தீபத்தூண் என்பது கோவில் சொத்து என்பது ஊர்ஜிதமாகியுள்ளது. இதனை எதிர்த்து செயல் அலுவலர் ஏன் மேல்முறையீடு செய்ய வேண்டும். அதுவும் சரியாக செய்யவில்லை. செயல் அலுவலரை திமுக அரசு தூண்டிவிட்டு மேல்முறையீடு செய்ய வைத்துள்ளது.

    திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது மோசடி என நீதிபதிகள் அமர்வு கண்டுபிடித்தனர். திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிமன்ற உத்தரவில் எந்த தவறும் இல்லை.

    நீதிபதி தீர்ப்புக்கு எதிராக சட்டவிரோதமாக மோதல் போக்கை தி.மு.க. அரசு கடைபிடித்துள்ளது. ஒரு தலைபட்சமாக இந்து மதத்தை நம்பும் பக்தர்களுக்கு எதிராக உச்சபட்சமாக திருப்திப்படுத்தும் அரசியலை தி.மு.க. செய்கிறது. சட்டத்தைப் பாதுகாக்க வேண்டிய சட்டத்துறை அமைச்சர் பழைய தீர்ப்புகளை திரித்து பேசுகிறார் என தெரிவித்துள்ளார்.

    • மழை காரணமாக 2ம் தேதி அளிக்கப்பட்ட விடுமுறையை ஈடுசெய்ய பள்ளி இயக்கம்.
    • புதன்கிழமை பாட அட்டவணையை பின்பற்றி பள்ளிகள் இயக்கம்.

    சென்னை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு நாளை வேலை நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    மழை காரணமாக 2ம் தேதி அளிக்கப்பட்ட விடுமுறையை ஈடுசெய்யும் விதமாக நாளை வேலைநாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    புதன்கிழமை பாட அட்டவணையை பின்பற்றி சென்னையில் நாளை பள்ளிகளில் வகுப்புகள் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • சமூக அமைதியை சீர்கெடுக்கும் நோக்கோடு செய்யப்படும் இத்தகைய சதிச்செயல்கள் ஒருபோதும் ஏற்புடையதல்ல.
    • பல நூறு ஆண்டுகளாக இருக்கக்கூடிய இந்த வழிபாட்டுத்தலங்களால் எந்தச் சமயத்தவரிடையேயும் எந்த மோதலும் இதுவரை நிகழ்ந்ததில்லை.

    நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளார் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

    திருப்பரங்குன்றம் மலையைச் சிக்கலாக்கி, மதுரையை இன்னொரு அயோத்தியாக்கும் சதிச்செயல்களுக்கு நீதித்துறையே துணைபோவதா? மதவாதிகளின் பிரித்தாளும் சூழ்ச்சியை முறியடிக்க தமிழர் எனும் இனஉணர்வோடு மண்ணின் மக்கள் ஓர்மைப்படுவோம்!

    மதுரையிலுள்ள திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றுவதை முன்வைத்துக் கலவரத்தை தூண்ட முயலும் மதவாத கும்பல்களின் பிரித்தாளும் அரசியல் வன்மையான கண்டனத்துக்குரியது. ஏற்கனவே, திருப்பரங்குன்றம் மலையில் வழிபாடு சிக்கலாகவும், அரசியலாகவும் ஆக்கப்பட்டுவிட்ட நிலையில், இதுநாள்வரை பின்பற்றாத ஒரு நடைமுறையைச் சட்டத்தின் வாயிலாகப் புகுத்தி, தர்காவுக்கு அருகாமையில் தீபமேற்ற அனுமதிப்பது தேவையற்ற பிரிவினைகளுக்கே வழிவகுக்கும். இராமஜென்ம பூமியை வழிபடத்தான் போகிறோமென உச்ச நீதிமன்றத்தில் கூறிய இதே மதவாத கும்பல், பாபர் மசூதியை அயோத்தியில் என்ன செய்தது என்பதை நாடறியும். அதுபோல, மதுரை மண்ணை இன்னொரு அயோத்தியாக மாற்றும் சூழ்ச்சிக்கு நீதித்துறையே துணைநிற்பது வெட்கக்கேடானதாகும்.

    சமூக அமைதியை சீர்கெடுக்கும் நோக்கோடு செய்யப்படும் இத்தகைய சதிச்செயல்கள் ஒருபோதும் ஏற்புடையதல்ல. மதம் கடந்த ஒற்றுமையைப் போற்றிக் காத்து வரும் மகத்துவம் மிகுந்த மதுரை மண்ணில் மதமோதலை உருவாக்குவதற்காகக் குறிவைத்து நடத்தப்படும் இந்துத்துவ அமைப்புகளின் மதவாத அரசியல் செயல்பாடுகள் யாவும் தொடக்கத்திலேயே முறியடிக்கப்பட வேண்டியதாகும்.

    முப்பாட்டன் முருகன் திருக்கோயில் அமைந்துள்ள மலை உச்சியின் இடதுபுறத்தில் சிவன் கோயிலும், மறுபுறம் சுல்தான் பாதுஷா சிக்கந்தர் அவுலியா தர்காவும் அமைந்துள்ளன. பல நூறு ஆண்டுகளாக இருக்கக்கூடிய இந்த வழிபாட்டுத்தலங்களால் எந்தச் சமயத்தவரிடையேயும் எந்த மோதலும் இதுவரை நிகழ்ந்ததில்லை. 'உன் மதம் சிறந்ததென்றால் வழிபடு! என் மதமும் சிறந்ததது; வழிவிடு' எனும் மதநல்லிணக்கக் கோட்பாட்டைப் பின்பற்றி, ஒருதாய் வயிற்றுப்பிள்ளைகளாகச் சமத்துவத்தோடும், சகோதரத்துவத்தோடும் மதுரை மண்ணின் மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.

    திருப்பரங்குன்றம் மலையில் இருக்கும் சிக்கந்தர் தர்காவைக் குறிவைத்து, 'சிக்கந்தர் மலை' எனப் புதிய பெயரைப் புனைந்து, இசுலாமியர்கள் மலையை ஆக்கிரமிக்க முயல்வதாக அவதூறைப் பரப்பி, மதவுணர்வுகளைத் தூண்டக்கூடிய வேலையை இந்துத்துவ அமைப்புகள் செய்வது மிக ஆபத்தான அரசியலாகும். சிக்கந்தர் மலை என எந்த இசுலாமிய இயக்கமும் கூறாத சொல்லாடலை வலியத் திணித்து, திருப்பரங்குன்றம் மலைக்காகப் போராடுவதாகக் கூறும் பெருமக்களே! 'குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம்' என்று கூறும் நிலையில், தமிழ்நாட்டிலுள்ள மலைகள் எல்லாம் வேட்டையாடப்பட்டு, கனிமவளங்களாக அண்டை மாநிலங்களுக்கு அள்ளிச் செல்லப்படும்போது எங்கே போனீர்கள்? அப்போதெல்லாம் முருகன் மீதான உங்கள் இறைப்பற்று எங்கே போனது? தமிழ் வழிவந்த முப்பாட்டன் முருகப் பெருமானுக்கு பல நூறு கோயில்களில் குடமுழுக்கும், வழிபாடும் செய்யக்கூட வழியற்ற நிலை தாய்த்தமிழ்நாட்டில் இருக்கிறதே? அதற்கெதிராக ஒருநாளும் நீங்கள் வீதிக்கு வந்து போராடியதில்லையே ஏன்? வாக்குவேட்டைக்காக சமூக அமைதியைக் கெடுக்க முயல்வதுதான் உங்களது ஆன்மீகப்பற்றா? வழிபாட்டுணர்வா? பேரவலம்!

    சிக்கந்தர் தர்காவில் ஆடு, கோழி பலியிட்டு வழிபடும் முறை இசுலாமியச் சொந்தங்களிடையே பல நூறு ஆண்டுகளாக இருந்து வருகிறது. அதனைச் சிக்கலாக்கி, அரசியல் ஆதாயம் தேட முற்படும் இந்துத்துவ அமைப்புகளின் செயல்பாடுகளை உரிய நேரத்தில் கட்டுப்படுத்தத்தவறிய திமுக அரசு, 2024ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சிக்கந்தர் தர்காவில் நேர்த்திக்கடன் செலுத்தி வழிபடச் சென்ற அபுதாஹீரைத் தடுத்து நிறுத்தி, அனுமதி மறுத்த காவலர்கள் மீது துறைசார்ந்து நடவடிக்கை எடுத்து, அங்கு பல ஆண்டுகளாக ஆடு, கோழி பலியிட்டு வழிபாடு செய்யும் முறை இருக்கிறதென்பதை அரசுத்தரப்பு மக்களுக்கு எடுத்துரைத்திருந்தால் மதவெறியர்களின் அரசியல் சூழ்ச்சிகள் நடந்தேறியிருக்குமா? தும்பை விட்டுவிட்டு இப்போது வாலைப் பிடிக்கிற வேலையைச் செய்கிறது ஆளும் திமுக அரசு. 'இந்துக்களின் விரோதி' என மதவாதிகள் செய்யும் அரசியல் பரப்புரைக்குப் பயந்து, சமரசம் செய்துகொள்ளும் திமுக அரசின் கையாலாகாத்தனமே இந்தளவில் கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறது.

    • தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது.
    • அதற்கான ஆயத்த பணிகளில் அனைத்துக் கட்சிகளும் ஈடுபட்டு வருகின்றன.

    சென்னை:

    தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது.

    தொகுதிகள், வேட்பாளர் தேர்வு, கூட்டணி உள்ளிட்ட ஆயத்த பணிகளில் அனைத்துக் கட்சிகளும் ஈடுபட்டு வருகின்றன.

    இதற்கிடையே, தமிழக சட்டசபை தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிடும் என அக்கட்சியின் தலைவர் சீமான் அறிவித்தார்.

    நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட உள்ள 234 வேட்பாளர்களையும் ஒரே நிகழ்வில் அறிமுகப்படுத்தும் மக்களின் மாநாடு அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் திருச்சியில் நடைபெறும் என அக்கட்சி தெரிவித்துள்ளது.

    இந்நிலையில், தமிழக சட்டசபையில் போட்டியிட உள்ள 100 வேட்பாளர்கள் அடங்கிய முதல் கட்ட பட்டியலை அக்கட்சியின் தலைவர் சீமான் இன்று வெளியிட்டார்.

    ×