என் மலர்tooltip icon

    செங்கல்பட்டு

    • அம்பிகா, 5வயது மகனுடன் வீட்டில் இருந்து வெளியே சென்றவர் பின்னர் திரும்பி வரவில்லை.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து மகனுடன் மாயமான இளம்பெண்ணை தேடிவருகிறார்கள்.

    மாமல்லபுரம்:

    கல்பாக்கம் அடுத்த வாயலூரை சேர்ந்த சுதாகர். இவரது மனைவி அம்பிகா (வயது30). கடந்த 14-ந் தேதி அம்பிகா, 5வயது மகனுடன் வீட்டில் இருந்து வெளியே சென்றவர் பின்னர் திரும்பி வரவில்லை. உறவினர்கள், வீடுகளில் தேடியும் அவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை.

    இதுகுறித்து சுதாகர் சதுரங்கபட்டினம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து மகனுடன் மாயமான இளம்பெண்ணை தேடிவருகிறார்கள்.

    • மேகநாதன் மூலம் தலைமறைவாக இருந்த சிவசங்கரையும் போலீசார் நேற்று மாலை பிடித்து வந்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • சிவசங்கர் விட்டு விட்டு சென்ற தொழிலை மேகநாதன் தொடர்ந்து செய்து வந்தபோது தனிப்படை போலீசில் சிக்கியதும் தெரிய வந்தது.

    வண்டலூர்:

    சென்னை வண்டலூர் அடுத்த ஊரப்பாக்கம், ரோகிணி நகர், ரெயில்வே ஸ்டேஷன் ரோட்டை சேர்ந்தவர் அபுதாகிர் (36) இவர் செங்கல்பட்டில் துணி கடை வைத்து நடத்தி வருகிறார்.

    இந்த நிலையில், செங்கல்பட்டு பகுதி சேர்ந்த சிவசங்கர், அவரது மனைவி பெர்னா, சிவசங்கரின் தந்தை சம்பத் மற்றும் அவரது நண்பர் மேகநாதன் ஆகியோர் சேர்ந்து ஊரப்பாக்கத்தில் பலரிடம் மாதம் 50,000 வட்டி தருவதாகவும், இதனால் பல மடங்கு லாபம் சம்பாதிக்கலாம் என்று கூறியும் நிதி நிறுவனம் நடத்தி வந்துள்ளார்.

    இதனை நம்பிய அபுதாகீர் அவரது அக்கா, தங்கை, தம்பி, உறவினர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினரிடம் நகை, பணம் ஆகியவற்றை வாங்கி சிவசங்கரிடம் ரூ.5 லட்சம் பணம் ரொக்கமாக கொடுத்துள்ளார். இதில் தொடர்ச்சியாக 4 மாதம் தலா ரூ.50 ஆயிரம் என அபுதாகீரிடம் சிவசங்கர் வட்டி கொடுத்துள்ளார்.

    இதனால் சிவசங்கர் மீது அபுதாகீருக்கு மேலும் நம்பிக்கை ஏற்படவே நிதி நிறுவனத்தில் அக்கம்பக்கத்தினரையும் சேர்த்து விட்டுள்ளார்.

    இதனையடுத்து அடுத்த சில மாதங்களில் சிவசங்கரின் போன் சுவிட்ச் ஆப் என வந்ததால் அதிர்ச்சி அடைந்த அபுதாகிர் சிவசங்கரை தேடி அலைந்து திரிந்துள்ளார். ஆனால் அவர் கிடைக்கவில்லை.

    இதுகுறித்து அபுதாகிர் சிவசங்கரின் வீட்டு முகவரி கண்டுபிடித்து அவரது மனைவி பெர்னாவிடம் சென்று கேட்டதற்கு, எனது கணவரை காணவில்லை என்று கடந்த ஆண்டு ஜூலை மாதம் 21-ந் தேதி செங்கல்பட்டு நகர காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளோம்.

    இதுகுறித்து செங்கல்பட்டு நகர காவல் துறையினர் எனது கணவரின் புகைப்படத்துடன் காவல் நிலையத்தில் நோட்டீஸ் ஒட்டி வைத்துள்ளனர் என்று கூறியுள்ளார். இதில் சந்தேகம் அடைந்த அபுதாகிர் கடந்த மாதம் 23-ந்தேதி கூடுவாஞ்சேரி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.

    கூடுவாஞ்சேரி போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவான சிவசங்கரின் நண்பர் மேகநாதனை நேற்று காலை பிடித்து வந்து விசாரித்தனர். இதனை அடுத்து மேகநாதன் மூலம் தலைமறைவாக இருந்த சிவசங்கரையும் போலீசார் நேற்று மாலை பிடித்து வந்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் விலை உயர்ந்த காரையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் ஊரப்பாக்கத்தில் நிதி நிறுவனம் நடத்தி மாதம் ரூ.50 ஆயிரம் வட்டி தருவதாக கூறி பல கோடி சுருட்டிய மோசடி கும்பல் மீது செங்கல்பட்டு காவல் நிலையங்களில் இதுபோன்று 13 புகார்கள் உள்ளது என்றும், இதில் கோடி கணக்கில் சுருட்டிய பணத்தை மேகநாதனிடம் கொடுத்துவிட்டு சிவசங்கர் தலைமறைவானதும், அந்த பணத்தில் செங்கல்பட்டு பகுதியில் தலா ரூ.16 லட்சம் மதிப்பீட்டில் இரண்டு வீடுகள் வாங்கி போட்டதும், ரூ.21 லட்சத்தில் விலை உயர்ந்த கார் ஒன்று வாங்கியதும், இதில் சிவசங்கர் விட்டு விட்டு சென்ற தொழிலை மேகநாதன் தொடர்ந்து செய்து வந்தபோது தனிப்படை போலீசில் சிக்கியதும் தெரிய வந்தது.

    இதில் சுமார் ரூ.4½ கோடி வரை மோசடி செய்த சிவசங்கரை செய்யாரில் தலைமறைவாக இருந்தபோது மேகநாதன் மூலம் பிடிபட்டதும் போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

    • பணம் கட்டி சூதாட்டம் ஆடிய 3 பேரை கையும் களவுமாக பிடித்து கூடுவாஞ்சேரி காவல் நிலையத்திற்கு கொண்டு வந்தனர்.
    • கூடுவாஞ்சேரி போலீசார் வழக்கு பதிவு செய்து 3 பேரை கைது செய்தனர்.

    கூடுவாஞ்சேரி:

    கூடுவாஞ்சேரி அருகே தைலாவரத்தில் உள்ள வசந்தம் ஹோம்ஸ் குடியிருப்பில் பணம் கட்டி சூதாட்டம் ஆடுவதாக கூடுவாஞ்சேரி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன் அடிப்படையில், கூடுவாஞ்சேரி போலீஸ் எஸ்.ஐ. யோகானந்தம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர், பணம் கட்டி சூதாட்டம் ஆடிய 3 பேரையும் கையும் களவுமாக பிடித்து கூடுவாஞ்சேரி காவல் நிலையத்திற்கு கொண்டு வந்தனர். விசாரணையில், அவர்கள் தாம்பரம் அடுத்த பெருங்களத்தூர் சீனிவாசா நகரை சேர்ந்த திருநாவுக்கரசு (42), வண்டலூர் அடுத்த ஓட்டேரியை சேர்ந்த நந்தகுமார் (40), பெருங்களத்தூர் பாரதி மெயின் ரோட்டை சேர்ந்த சேகர் (44) என தெரியவந்தது.

    மேலும், இதுகுறித்த புகாரின் பேரில் கூடுவாஞ்சேரி போலீசார் வழக்கு பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனர். செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி அவர்களை அங்குள்ள கிளை சிறையில் அடைத்தனர். மேலும், அவர்களிடமிருந்து ரூ.1,800 பணத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

    • அறுபதுக்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
    • பேரணியின் இறுதியில் இன்ஸ்பெக்டர் ருக்மாங்கதன் அறிவுரைகளை வழங்கினார்.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரம் காவல் நிலையம் சார்பில் போதைப்பொருள் பயன்பாடு தடுப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி மாமல்லபுரம் பேரூராட்சி அலுவலகத்தில் இருந்து கடற்கரை கோயில் வரை நடைபெற்றது. பேரணியை டி.எஸ்.பி. ஜெகதீஸ்வரன் துவக்கி வைத்தார். 60க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

    பேரணியின் இறுதியில் இன்ஸ்பெக்டர் ருக்மாங்கதன், போதை பழக்கத்தால் ஏற்படும் தீமைகள், குற்ற செயல்கள், உடல்நலம் பாதிப்பு, எதிர்காலம் சீரழிந்து போவது குறித்து கல்லூரி மாணவர்களுக்கு எடுத்து கூறி அறிவுரைகளை வழங்கினார்.

    • செங்கல்பட்டு- திண்டிவனம் சாலை 8 வழிச் சாலையாக மேம்படுத்த திட்டமிடப்பட்டு இருக்கிறது.
    • ரூ.3,523 கோடியில் இந்த பணி நடைபெற இருக்கிறது.

    சென்னை நகர பகுதிக்கு இணையாக புறநகர் பகுதிகள் அசுர வளர்ச்சி பெற்று வருகிறது. தாம்பரம், பல்லாவரம், பெருங்களத்தூர், கூடுவாஞ்சேரி, உள்ளிட்ட பகுதிகள் வளர்ச்சியாலும் அதன் உள் கட்டமைப்பு வசதிகளாலும் உச்சம் அடைந்து வருகின்றன.

    இதேபோல் பெருகிவரும் மக்கள் தொகை, வாகன பெருக்கம் காரணமாக போக்குவரத்து நெரிசலும் சென்னை நகரத்துக்கு இணையாக புறநகர் பகுதிகளிலும் நீடித்து வருகிறது.

    சென்னைக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து தினமும் பல்லாயிரக் கணக்கானோர் வந்து செல்கின்றனர். அரசு பஸ்கள், ஆம்னி பஸ்கள், கார்கள், கனரக வாகனங்கள் என லட்சக்கணக்கான வாகனங்கள் புறநகர் பகுதி வழியாக சென்னை நகருக்குள் வந்து செல்கின்றன.

    காலை நேரங்களில் தாம்பரம், பல்லாவரம், பெருங்களத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் எப்போதும் போக்குவரத்து நெரிசல் இருக்கும். இதேபோல மாலை நேரங்களில் சென்னையில் இருந்து வெளியூர் செல்லும் வாகனங்களால் போக்குவரத்து ஸ்தம்பிப்பது தினந்தோறும் நிகழ்ந்து வருகிறது. தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட விடுமுறை நாட்களில் வாகன பயணம் மிக மோசமாக இருக்கும்.

    இதைத் தொடர்ந்து போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் புறநகர் பகுதிகளில் பல்வேறு இடங்களில் மேம்பாலம் கட்டுதல் உள்ளிட்ட பணிகள் நடந்து வருகிறது. தற்போது பெருங்களத்தூரில் கட்டப் பட்டு உள்ள மேம்பாலத்தால் போக்குவரத்து பெரும்பாலும் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்நிலையில் வாகன போக்குவரத்து எளிதாகும் வகையில் தாம்பரம்- செங்கல்பட்டு இடையே 27 கி.மீட்டர் தூரத்துக்கு உயர்த்தப்பட்ட வழித் தடத்தில் மேம்பாலம் கட்ட திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்கான விரிவான திட்ட அறிக்கை நிறைவடைந்து உள்ளன. ரூ.3,523 கோடியில் இந்த பணி நடைபெற இருக்கிறது.

    இதில் 6 வழித்தடங்கள் அமைய உள்ளன. பெருங்களத்தூரில் மேம்பாலம் தொடங்கி பரனூர் சுங்கசாவடியை தாண்டி இந்த பாலம் முடிவடையும். இதற்கான பணியை அடுத்த சில மாதங்களில் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தொடங்க உள்ளது.

    இந்த மேம்பாலப் பணி முடிவடையும் போது தாம்பரம்-செங்கல்பட்டு இருவழித்தடத்திலும் குறைந்த நேரத்தில் விரைவாக வாகனங்களில் செல்ல முடியும். இதனால் போக்குவரத்து நெரிசல் இன்றி பயண நேரம் குறையும்.

    மேம்பாலத்தில் கிளாம் பாக்கம் பஸ் நிலையம், பொத்தேரியில் உள்ள தனியார் கல்லூரி, மகேந்திரா சிட்டி ஆகிய இடங்களில் வாகனங்கள் நுழைவு மற்றும் வெளியேறும் படிகள் அமைய இருக்கிறது. வாகனங்கள் சுமார் 100 கி.மீட்டர் வேகத்தில் பயணம் செய்யும் வகையில் பாலம் அமைய இருப்பது குறிப்பிடத்தக்கது.

    இதே போல் செங்கல்பட்டு- திண்டிவனம், ஜி.எஸ்.டி. சாலை விரிவாக்கப் பணியும் நடைபெற உள்ளது. 67.1 கி.மீட்டர் நீளமுள்ள செங்கல்பட்டு- திண்டிவனம் சாலை தற்போது 4 வழிச் சாலையாக உள்ளது. இதில் இருபுறமும் சர்வீஸ் சாலைகளுடன் 8 வழிச் சாலையாக மேம்படுத்த திட்டமிடப்பட்டு இருக்கிறது.

    அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலை கணக்கிட்டு இந்த சாலையை மேம்படுத்த தேசிய நெடுஞ் சாலை ஆணையம் முடிவு செய்துள்ளது. இதற்கான திட்ட அறிக்கையும் தயாரிக்கப்பட்டு இருக்கிறது.

    இது குறித்து தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரி ஒருவர் கூறும்போது:- ஜி.எஸ்.டி. சாலையில் 94 கி.மீட்டர் தாம்பரம்- திண்டிவனம் பாதைக்கான விரிவாக்க திட்ட அறிக்கை நிறை வடைந்து உள்ளது. இதில் தாம்பரம்- செங்கல்பட்டு இடையேயான 27 கி.மீட்டர் தூரத்துக்கு உயர்மட்ட மேம்பாலம் அமைகிறது. இந்த வழித்தடத்துக்கான கட்டுமான பணி இந்த ஆண்டு மேற்கொள்ளப்படும் என்றார்.

    தாம்பரம்- செங்கல்பட்டு இடையே மேம்பாலம் அமையும்போது லட்சக்கணக்கான வாகனங்கள் செல்லும் இந்த வழித்தடத்தில் சுமார் 50 சதவீத வாகனங்கள் உயர்த்தப்பட்ட மேம்பால சாலையில் செல்லும் வகையில் மாறும். இதனால் வாகன நெரிசலும், விபத்துக்களும் குறையும். ஏற்கனவே இந்த வழித்தடத்தில் 12 இடங்கள் விபத்து அபாயம் உள்ள பகுதியாக கண்டறியப்பட்டு உள்ளது. புதிய பாலத்தால் விபத்துக்களால் ஏற்படும் உயிரிழப்புகள் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதே போல் திண்டிவனம் வரையிலான வழித்தடத்தில் 20 இடங்கள் விபத்து ஏற்படும் பகுதியாக உள்ளது. இந்த இடங்களில் மேம்பாலங்கள், சுரங்கப் பாதை அமைக்கவும் திட்டமிடப்பட்டு இருக்கிறது.

    மேலும் மாமண்டூர், மதுராந்தகம், படாளம் சந்திப்பு, கருங்குழி சந்திப்பு, சாரம் கிராமம் பகுதிகளில் 6 வழிச்சாலையுடன் உயர்மட்ட மேம்பாலம் அமைக்கவும் திட்டம் முன் மொழியப்பட்டு இருக்கிறது. மேல்மருவத்தூர், மற்றும் அச்சரப்பாக்கத்தில் தற்போது உள்ள சுரங்கப்பாதைக்கு மேல் உயர்த்தப்பட்ட சாலை அமைக்க தேசிய நெடுஞ்சாலை ஆணையம் முடிவு செய்துள்ளது.

    இதேபோல் சென்னை- பெங்களூரு நெடுஞ்சாலை மதுரவாயல்- ஸ்ரீபெரும்புதூர் வரை 23.2 கி.மீட்டர், சென்னை- கொல்கத்தா நெடுஞ்சாலையில், மாதவரம் சந்திப்பு முதல் வெளிவட்ட சாலை வரை 10.4 கி.மீட்டர், திருச்சி- தஞ்சாவூர் நெடுஞ்சாலையில் திருச்சி- துவாக்குடி 14 கி.மீட்டருக்கு உயர்த்தப் பட்ட மேம்பாலம் அமைக்கவும் தேசிய நெடுஞ் சாலை ஆணையம் முன் மொழிந்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • மோகனுக்கு ஜாமீன் கிடைத்தது. அவர் செங்கல்பட்டு சிறையில் இருந்து வெளியே வந்தார்.
    • போலீசார் ஜெயில் வாசல் முன்பே வேறொரு திருட்டு வழக்கில் மோகனை கைது செய்ய முயன்றனர்.

    செங்கல்பட்டு:

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த சங்கராபுரத்தை சேர்ந்தவர் மோகன் (32). வாய்பேச முடியாத மாற்றுத்திறனாளி ஆவார். இவருக்கு மனைவியும், ஒரு மகனும் உள்ளனர்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு திருப்போரூர் அடுத்த ஏகாட்டூர் பகுதியில் உள்ள தனியார் பெண்கள் மற்றும் ஆண்கள் தங்கும் விடுதிகளில் லேப்-டாப் மற்றும் செல்போன்கள் திருடு போனது.

    இந்த வழக்கு தொடர்பாக கேளம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஏகாட்டூர் பகுதியில் இரவு நேரத்தில் சுற்றி திரிந்த மோகனை கைது செய்து செங்கல்பட்டு கிளை சிறையில் அடைத்தனர்.

    இதற்கிடையே மோகனுக்கு ஜாமீன் கிடைத்தது. அவர் செங்கல்பட்டு சிறையில் இருந்து வெளியே வந்தார். அவரை சொந்த ஊருக்கு அழைத்து செல்வதற்காக அவரது மனைவி, மகனுடன் வந்து இருந்தார். அவர்களுடன் வக்கீலும் இருந்தார்.

    ஜெயிலில் இருந்து மோகன் வெளிய வந்ததும் அவரை பாசத்துடன் மனைவி கட்டி அணைத்து வரவேற்றார். ஆனால் இந்த மகிழ்ச்சி நீண்ட நேரம் நீடிக்கவில்லை.

    அப்போது அங்கு சாதாரண உடையில் இருந்த கேளம்பாக்கம் போலீசார் ஜெயில் வாசல் முன்பே வேறொரு திருட்டு வழக்கில் மோகனை கைது செய்ய முயன்றனர். அவர்கள் மோகனை வலுக்கட்டாயமாக அவர்களது வாகனத்தில் ஏற்ற இழுத்து சென்றனர். இதனை கண்ட மோகனின் மனைவி அதிர்ச்சி அடைந்தார். அவர் கணவரை கைது செய்ய எதிர்ப்பு தெரிவித்து போலீசாரிடம் கடும் வாக்குவாதம் செய்தார். மேலும் அவரது வக்கீலும் பிடிவாரண்டு இல்லாமல் எப்படி கைது செய்யமுடியும்? பிடிவாரண்டை காட்டிவிட்டு மோகனை அழைத்து செல்லுங்கள் என்றார்.

    எனினும் இதனை போலீசார் கண்டு கொள்ளாமல் மோகனை தங்களது வாகனத்தில் ஏற்றி செல்வதில் மும்முரமாக இருந்தனர். ஒரு கட்டத்திற்கு மேல் கணவரை காப்பாற்ற என்ன செய்வது என்று தெரியாமல் மோகனின் மனைவி தவித்தார்.

    திடீரென அவர் தனது கணவர் மோகனை கட்டி அணைத்தபடி கதறி அழுதார். மேலும் தனது மகனையும் ஒரு கையில் வைத்தபடி போலீசாரிடம் கெஞ்சினார். இதனால் ஜெயில் வாசல் முன்பு பரபரப்பு ஏற்பட்டது. கணவரை காப்பாற்ற வேண்டும் என்ற மனைவியின் பாசப்போட்டம் அங்கிருந்தவர்களின் மனதை கனக்க செய்தது.

    இந்நிலையில் என்ன செய்வது என்று தெரியாமல் போலீசார் தவித்து நேரத்தில் கணவர் மோகனை அழைத்துக்கொண்டு அவரது மனைவி மகனுடன் வேறொரு காரில் அங்கிருந்து சென்றுவிட்டார். இதனால் மோகனை கைது செய்ய வந்த போலீசார் ஏமாற்றம் அடைந்தனர்.

    இதுகுறித்து போலீசார் கூறும்போது, ஏகாட்டூர் பகுதியில் உள்ள விடுதிகளில் 100-க்கும் மேற்பட்ட லேப்டாப் மற்றும் செல்போன்கள் திருடு போனதாக புகார்கள் வந்து உள்ளன. இதுபற்றி மோகனிடம் விசாரிக்க முடிவு செய்து வந்தோம் என்றனர்.

    • பெரியார், அண்ணா போன்ற மாபெரும் தலைவர்களை கொச்சைபடுத்தி சீமான் ஆவேசமாக பேசி வருவது கண்டிக்கத்தக்கது.
    • கலைஞரின் பேச்சை பாருங்கள், அவரின் வரலாற்றை படியுங்கள்.

    மாமல்லபுரம்:

    காஞ்சிபுரம் வடக்கு மாவட்டம் திருக்கழுக்குன்றம் பேரூர் தி.மு.க சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் பேரூராட்சி தலைவர் யுவராஜ் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறுகுறு மற்றும் நடுத்தர தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் கலந்துகொண்டு, பள்ளி மாணவ, மாணவிகள், பெண்கள் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    அப்போது அவர் பேசியதாவது:

    பெரியார், அண்ணா போன்ற மாபெரும் தலைவர்களை கொச்சைபடுத்தி சீமான் ஆவேசமாக பேசி வருவது கண்டிக்கத்தக்கது. ஆவேசமாக ஒருவர் பேசுவதால் தலைவர் ஆகிவிட முடியாது. இந்த ஆவேசமான நாடக அரசியல் பேச்சையும், மூளைச்சலவை வீடியோக்களையும் தற்போது இளைஞர்கள் அதிகளவில் பொபைல் போன்களில் பார்த்து வருகிறார்கள். இது ஆபத்தானது இதற்கு இளைஞர்கள் அடிமையாக கூடாது.

    கலைஞரின் பேச்சை பாருங்கள், அவரின் வரலாற்றை படியுங்கள். அப்போதுதான் அவர் இளைஞர்களுக்கு செய்த நலத்திட்டங்கள் உங்களுக்கு தெரியவரும் என்று பேசினார்.

    தமிழ்நாடு பாடநூல் கழக தலைவரும், தலைமை கழக பேச்சாளருமான திண்டுக்கல் ஐ.லியோனி, காஞ்சிபுரம் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம், ஒன்றிய கழக செயலாளர் தமிழ்மணி, ஆர்.டி.அரசு, இளங்கோ, மாமல்லபுரம் வெ.விசுவநாதன், அரவிந்த் சம்பத்குமார் உள்ளிட்ட தி.மு.க நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

    • வீடு திரும்பிய போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
    • கோகுல ராமன் ஓட்டேரி போலீசில் புகார் செய்தார்.

    வண்டலூர்:

    செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் ஊராட்சிக்குட்பட்ட வெங்கடேசபுரம் 4-வது தெருவை சேர்ந்தவர் கோகுல ராமன் (வயது 32), இவர் தனது வீட்டை பூட்டிவிட்டு தனது உறவினர் வீட்டிற்கு சென்றிருந்தார். பின்னர் வீடு திரும்பிய போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 28 பவுன் தங்க நகை திருட்டு போனது தெரிய வந்தது. இது குறித்து கோகுல ராமன் ஓட்டேரி போலீசில் புகார் செய்தார்.

    போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அக்கம் பக்கத்தில் உள்ள நபர்களிடம் விசாரித்தனர். மேலும் வீட்டில் பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்தனர்.

    இது குறித்து ஓட்டேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் அந்த பகுதியில் பதிவாகி இருந்த கண்காணிப்பு கேமரா காட்சியின் அடிப்படையில் வீட்டின் பூட்டை உடைத்து திருடிய நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    • தமிழ்நாட்டில் இன்று 1200 இடங்களில் யோகா திருவிழா நடைபெறுகிறது
    • தமிழகத்தில் 39 இடங்களில் பா.ஜனதா வெற்றி பெறுவது நிச்சயம்.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரத்தில், சர்வதேச யோகா தினத்தையொட்டி செங்கல்பட்டு தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா சார்பில் யோகா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை, தமிழக மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்று யோகாசனம் செய்தனர்.

    பின்னர் அண்ணாமலை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழ்நாட்டில் இன்று 1200 இடங்களில் யோகா திருவிழா நடைபெறுகிறது. யோகக்கலையின் மையப் புள்ளி தமிழ்நாடு தான். வருகிற பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவாய்ப்பு இல்லை. தமிழகத்தில் 39 இடங்களில் பா.ஜனதா வெற்றி பெறுவது நிச்சயம்.

    திருவாரூர் கலைஞர் கோட்டம் திறப்பு விழாவிற்கு பீகார் முதல்-மந்திரியும், ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவருமான நிதிஷ்குமார் வரவில்லை. இதில் இருந்து அகில இந்திய அளவில் தி.மு.க.வுக்கு மரியாதை இல்லை என்பது தெரிகிறது. நிதிஷ்குமார் தமிழகம் வராமல் இருந்தது தி.மு.க.வின் எதிர்க்கட்சி ஒருங்கிணைப்புக்கு கிடைத்த தோல்வி ஆகும்.

    செந்தில் பாலாஜி விஷயத்தில் தமிழக மனித உரிமை ஆணையம் தி.மு.க.வின் ஆணையமாக செயல்படுகிறது. செந்தில் பாலாஜிக்கு மருத்துவ சிகிச்சை அரசு ஆஸ்பத்திரியில் இல்லாமல் தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு உள்ளது. அப்படியானால் ஓமந்தூரார் அரசு ஆஸ்பத்திரியில் தரம் இல்லையா? இதனை மக்கள் கவனித்து வருகிறார்கள். வருகிற பாராளுமன்ற தேர்தலில் இதற்கு மக்கள் பதிலடி கொடுப்பார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இளநிலை என்ஜினீயர் சந்திரசேகர். ரூ.25 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார்.
    • மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலிசார் அவரை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.

    செங்கல்பட்டு:

    சென்னை, சிட்லபாக்கம் மின்வாரிய அலுவலகத்தில் இளநிலை என்ஜினீயராக சந்திரசேகர்(47) வேலை பார்த்து வந்தார். கடந்த 9-6-2009 அன்று அந்த பகுதியைச் சேர்ந்த சந்திரசேகரன் என்பவர் தான் புதியதாக கட்டியுள்ள வீட்டுக்கு 3 பேஸ் மின் இணைப்பு கேட்டார்.

    அதற்கு இளநிலை என்ஜினீயர் சந்திரசேகர். ரூ.25 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத சந்திரசேகரன் இது குறித்து சென்னை லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார்.

    போலீசாரின் ஆலோசனைபடி ரசாயனம் தடவிய ரூ.5 ஆயிரத்தை மின்வாரிய அதிகாரி சந்திரசேகரிடம் வழங்கினார்.

    மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலிசார் அவரை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.

    இது தொடர்பாக செங்கல்பட்டு மாவட்ட முதன்மை குற்றவியல் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயஸ்ரீ மின்வாரிய அதிகாரி சந்திரசேகரனுக்கு 3 ஆண்டு ஜெயில் தண்டனையும் ரூ.40 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.

    • ஆசிரியர்கள் பற்றாக்குறை காரணமாக இந்த பள்ளியில் மாணவர் சேர்க்கை தற்போது நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது.
    • கழிவறையை பயன்படுத்த வேண்டும் என்றால் மாணவர்களை வீட்டுக்கு அனுப்பும் அவல நிலை உள்ளது.

    தாம்பரம்:

    பெரும்பாக்கத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இங்கு சுமார் 400க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். ஆனால் ஆசிரியர்கள் 8 பேர் மட்டுமே உள்ளனர். இதனால் மாணவர்களுக்கு கல்வி கற்பிப்பதில் ஆசிரியர்களுக்கு சிரமம் ஏற்பட்டு வருகிறது.

    இரண்டு வகுப்புகளில் உள்ளவர்களை ஒன்றாக சேர்த்து சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்களை ஒரே வகுப்பறையில் அமர வைத்து கல்வி கற்பிக்கும் நிலை உருவாகி இருக்கிறது.

    இதன் காரணமாக மாணவர்களின் கல்வி தரம் கேள்விக்குறியாக மாறி உள்ளது. மாணவர்களை கண்காணித்து கல்வி கற்பிக்க ஆசிரியர்கள் படாத பாடுபட்டு வருகிறார்கள்.

    மேலும் ஆசிரியர்கள் பற்றாக்குறை காரணமாக இந்த பள்ளியில் மாணவர் சேர்க்கை தற்போது நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது.

    இது குறித்து ஆசிரியர் ஒருவர் கூறும்போது:- பள்ளியில் ஆசிரியர் பற்றாக்குறை உள்ளது . இது குறித்து மாவட்ட கல்வித்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளோம். ஆனால் இன்னும் ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை. இதன் காரணமாக இரண்டு வகுப்பறைகளில் உள்ள மாணவர்களை ஒரே வகுப்பறையில் அமர வைத்து பாடம் எடுக்கும் நிலை உள்ளது என்றார்.

    தொடக்க வகுப்புகளில் மாணவர்-ஆசிரியர் விகிதம் 30:1 என்று இருக்க வேண்டும். அதன்படி பார்த்தால் இந்தப் பள்ளியில் 13 முதல் 14 ஆசிரியர்கள் இருக்க வேண்டும். ஆனால் 8 ஆசிரியர்கள் மட்டுமே இருப்பதால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது. எனவே பள்ளியில் கூடுதல் ஆசிரியர்களை நியமிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மாணவர்களின் கல்வித்தரம் எந்த விதத்திலும் பாதிக்கப்படக்கூடாது என்றார்

    கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறும்போது-

    சம்பந்தப்பட்ட பள்ளியில் உள்கட்டமைப்பு மேம்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது. தற்காலிக ஆசிரியர்கள் விரைவில் நியமிக்கப்படுவார்கள் என்றார்.

    அதேபோல் பெரும்பாக்கத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் போதிய அடிப்படை வசதிகள் இல்லாமல் மாணவர்கள் கடும் அவதி அடைந்து வருகிறார்கள்.

    இந்தப் பள்ளியில் அருகில் உள்ள குடிசை மாற்று வாரிய குடியிருப்பை சேர்ந்த ஏராளமான மாணவர்கள் படிக்கின்றனர். இப்பள்ளியில் 10-க்கும் மேற்பட்ட கழிவறைகள் உள்ளன, ஆனால் தண்ணீர் இல்லாததால் அவை எதுவும் பயன்பாட்டில் இல்லை.

    கழிவறையை பயன்படுத்த வேண்டும் என்றால் மாணவர்களை வீட்டுக்கு அனுப்பும் அவல நிலை உள்ளது.

    மேலும் மாணவர்கள் மதிய உணவுக்குப் பிறகு கழிவறையைப் பயன்படுத்தவோ அல்லது தட்டுகளைக் கழுவவோ தேவைப்பட்டால் வீட்டிற்கு அனுப்பப்படுகிறார்கள். சில நேரங்களில் மாணவர்கள் விரும்பும் நேரங்களில் செல்ல அனுமதிக்கப்படுவதில்லை.

    இது குறித்து அப்பள்ளியை சேர்ந்த ஊழியர் ஒருவர் கூறும்போது:- குடியிருப்பு பகுதிக்குள் பள்ளி உள்ளது. பள்ளிக்குள் புகும் மர்மநபர்கள் குடிநீர் குழாய்களை சேதப்படுத்தி சென்று விடுகிறார்கள். இதனால் குடிநீர் விநியோகிப்பதில் சிரமம் ஏற்படுகிறது என்றனர்.

    ஆசிரியர் கூறும் பள்ளியில் குடிநீர் குழாய்கள் சேதப்படுத்தப்படுவது தொடர்பாக போலீசில் பல புகார்கள் கொடுக்கப்பட்டு ள்ளன, ஆனால் கண்காணிப்பு கேமரா இல்லாததால் குற்றவாளிகளை அடையாளம் காணமுடியவில்லை. வாரத்திற்கு ஒருமுறை, குழாய்களை சரி செய்ய வேண்டிய நிலை உள்ளது. பள்ளியை சுற்றி சுவர் அமைத்தால் இதைத் தடுக்கலாம். டிரம்களில் தண்ணீரை சேமித்து வைத்து தண்ணீர் பிரச்சினைக்கு தீர்வு காண முயற்சிக்கிறோம். இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க, சுற்றுச்சுவர் கட்ட தன்னார்வலர்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளோம், என்றார்.

    • படூர் வரை 50 சதவீத பணிகள் மட்டுமே நடைபெற்றுள்ளன.
    • தினமும் வாகன ஓட்டிகள் கேளம்பாக்கம் நகருக்குள் வந்து கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கும் நிலை உள்ளது.

    திருப்போரூர்:

    பழைய மாமல்லபுரம் சாலை திருப்போரூர் மற்றும் கேளம்பாக்கம் பகுதிகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையிலும், கிழக்கு கடற்கரை சாலைக்கு விரைவாக செல்லவும் தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவனம் சார்பில் கடந்த 2017 -ம் ஆண்டு சுமார் ரூ. 250 கோடி மதிப்பீட்டில் புறவழிச்சாலை அமைக்க திட்டமிடப்பட்டது. ஆலத்தூர் ஊராட்சி வெங்கலேரி கிராமத்தில் இருந்து காலவாக்கம் தனியார் கல்லூரி வரை சுமார் ஐந்து கிலோமீட்டர் தூரம் மற்றும் தையூர் ஊராட்சி செங்கன் மால் பகுதியில் இருந்து படூர் வரை சுமார் 2½ கிலோ மீட்டர் தூரம் என மொத்தம் 7½ கிலோமீட்டர் தூரத்திற்கு சாலை அமைக்க நிதி ஒதுக்கப்பட்டது.

    இதற்காக விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டன. கடந்த 2020-ம் ஆண்டு இச்சாலை பணிகள் முடிக்கப்பட வேண்டும். இடையில் கொரோனா காலகட்டம், ஆட்சி மாற்றம் ஆகியவற்றால் இந்தப் புறவழிச் சாலை பணிகள் மந்தகதியில் நடைபெற்று வந்தன. வெங்கலேரி முதல் காலவாக்கம் தனியார் கல்லூரி வரை 90 சதவீத பணிகள் நிறை வடைந்துள்ளன. இப்பணிகள் நிறைவு பெறும் முன்னே இச்சாலையில் வாகனங்கள் சென்று வருகின்றன. திருப்போரூர் நகரத்துக்குள் வராமல் இந்த புறவழிச் சாலையை வாகன ஓட்டிகள் பயன்படுத்துவதால் போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் பயண நேரம் குறைவதாக வாகன ஓட்டிகள் தெரிவிக்கின்றனர். ஆனால் தையூர் செங்கண்மால் பகுதியில் இருந்து படூர் வரை இரண்டரை கிலோ மீட்டர் தூரத்தில் அமைய உள்ள சாலையில் ஒரு மேம்பாலம் அமைகிறது.

    இதில் படூர் வரை 50 சதவீத பணிகள் மட்டுமே நடைபெற்றுள்ளன. மீதமுள்ள பாதி பணிகள் நடைபெறவில்லை. இதனால் தினமும் வாகன ஓட்டிகள் கேளம்பாக்கம் நகருக்குள் வந்து கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கும் நிலை உள்ளது. இந்த பணிகள் நிறைவடைந்தால் இப்பகுதியில் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்புவாசிகள், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் மற்றும் பணிக்கு குறித்த நேரத்தில் செல்லும் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைவர்.

    மந்தகதியில் நடைபெறும் திருப்போரூர், கேளம்பாக்கம் புறவழிச்சாலை பணிகளை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்காக விரைவில் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    ×