என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

பெரும்பாக்கம் அரசு பள்ளியில்தான் இந்த நிலை: மாணவர்கள் வந்தாச்சு, ஆசிரியர்கள் இல்லை
- ஆசிரியர்கள் பற்றாக்குறை காரணமாக இந்த பள்ளியில் மாணவர் சேர்க்கை தற்போது நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது.
- கழிவறையை பயன்படுத்த வேண்டும் என்றால் மாணவர்களை வீட்டுக்கு அனுப்பும் அவல நிலை உள்ளது.
தாம்பரம்:
பெரும்பாக்கத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இங்கு சுமார் 400க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். ஆனால் ஆசிரியர்கள் 8 பேர் மட்டுமே உள்ளனர். இதனால் மாணவர்களுக்கு கல்வி கற்பிப்பதில் ஆசிரியர்களுக்கு சிரமம் ஏற்பட்டு வருகிறது.
இரண்டு வகுப்புகளில் உள்ளவர்களை ஒன்றாக சேர்த்து சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்களை ஒரே வகுப்பறையில் அமர வைத்து கல்வி கற்பிக்கும் நிலை உருவாகி இருக்கிறது.
இதன் காரணமாக மாணவர்களின் கல்வி தரம் கேள்விக்குறியாக மாறி உள்ளது. மாணவர்களை கண்காணித்து கல்வி கற்பிக்க ஆசிரியர்கள் படாத பாடுபட்டு வருகிறார்கள்.
மேலும் ஆசிரியர்கள் பற்றாக்குறை காரணமாக இந்த பள்ளியில் மாணவர் சேர்க்கை தற்போது நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது.
இது குறித்து ஆசிரியர் ஒருவர் கூறும்போது:- பள்ளியில் ஆசிரியர் பற்றாக்குறை உள்ளது . இது குறித்து மாவட்ட கல்வித்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளோம். ஆனால் இன்னும் ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை. இதன் காரணமாக இரண்டு வகுப்பறைகளில் உள்ள மாணவர்களை ஒரே வகுப்பறையில் அமர வைத்து பாடம் எடுக்கும் நிலை உள்ளது என்றார்.
தொடக்க வகுப்புகளில் மாணவர்-ஆசிரியர் விகிதம் 30:1 என்று இருக்க வேண்டும். அதன்படி பார்த்தால் இந்தப் பள்ளியில் 13 முதல் 14 ஆசிரியர்கள் இருக்க வேண்டும். ஆனால் 8 ஆசிரியர்கள் மட்டுமே இருப்பதால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது. எனவே பள்ளியில் கூடுதல் ஆசிரியர்களை நியமிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மாணவர்களின் கல்வித்தரம் எந்த விதத்திலும் பாதிக்கப்படக்கூடாது என்றார்
கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறும்போது-
சம்பந்தப்பட்ட பள்ளியில் உள்கட்டமைப்பு மேம்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது. தற்காலிக ஆசிரியர்கள் விரைவில் நியமிக்கப்படுவார்கள் என்றார்.
அதேபோல் பெரும்பாக்கத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் போதிய அடிப்படை வசதிகள் இல்லாமல் மாணவர்கள் கடும் அவதி அடைந்து வருகிறார்கள்.
இந்தப் பள்ளியில் அருகில் உள்ள குடிசை மாற்று வாரிய குடியிருப்பை சேர்ந்த ஏராளமான மாணவர்கள் படிக்கின்றனர். இப்பள்ளியில் 10-க்கும் மேற்பட்ட கழிவறைகள் உள்ளன, ஆனால் தண்ணீர் இல்லாததால் அவை எதுவும் பயன்பாட்டில் இல்லை.
கழிவறையை பயன்படுத்த வேண்டும் என்றால் மாணவர்களை வீட்டுக்கு அனுப்பும் அவல நிலை உள்ளது.
மேலும் மாணவர்கள் மதிய உணவுக்குப் பிறகு கழிவறையைப் பயன்படுத்தவோ அல்லது தட்டுகளைக் கழுவவோ தேவைப்பட்டால் வீட்டிற்கு அனுப்பப்படுகிறார்கள். சில நேரங்களில் மாணவர்கள் விரும்பும் நேரங்களில் செல்ல அனுமதிக்கப்படுவதில்லை.
இது குறித்து அப்பள்ளியை சேர்ந்த ஊழியர் ஒருவர் கூறும்போது:- குடியிருப்பு பகுதிக்குள் பள்ளி உள்ளது. பள்ளிக்குள் புகும் மர்மநபர்கள் குடிநீர் குழாய்களை சேதப்படுத்தி சென்று விடுகிறார்கள். இதனால் குடிநீர் விநியோகிப்பதில் சிரமம் ஏற்படுகிறது என்றனர்.
ஆசிரியர் கூறும் பள்ளியில் குடிநீர் குழாய்கள் சேதப்படுத்தப்படுவது தொடர்பாக போலீசில் பல புகார்கள் கொடுக்கப்பட்டு ள்ளன, ஆனால் கண்காணிப்பு கேமரா இல்லாததால் குற்றவாளிகளை அடையாளம் காணமுடியவில்லை. வாரத்திற்கு ஒருமுறை, குழாய்களை சரி செய்ய வேண்டிய நிலை உள்ளது. பள்ளியை சுற்றி சுவர் அமைத்தால் இதைத் தடுக்கலாம். டிரம்களில் தண்ணீரை சேமித்து வைத்து தண்ணீர் பிரச்சினைக்கு தீர்வு காண முயற்சிக்கிறோம். இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க, சுற்றுச்சுவர் கட்ட தன்னார்வலர்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளோம், என்றார்.






