என் மலர்
செங்கல்பட்டு
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19-ந் தேதி நடக்கிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்கியது. வேட்பு மனுதாக்கல் செய்ய கடைசி நாள் பிப்ரவரி 4-ந் தேதி ஆகும்.
வேட்பு மனுக்கள் 5-ந் தேதி பரிசீலனை செய்யப்படுகிறது. வேட்பு மனுவை திரும்ப பெற 7-ந் தேதி கடைசி நாள். பிப்ரவரி 21-ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
தமிழகத்தில் உள்ள மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் உள்ள வார்டுகளில் இந்த உள்ளாட்சி தேர்தல் நடக்கிறது. மேயர், துணை மேயர், நகராட்சி தலைவர், நகராட்சி துணை தலைவர், பேரூராட்சி தலைவர், பேரூராட்சி துணைதலைவர், கவுன்சிலர் ஆகிய பதவிகளுக்கு இந்த தேர்தல் நடைபெறுகிறது.
செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில் உள்ள மொத்தம் 751 வார்டுகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது.
தமிழகத்தில் கடந்த 2011-ம் ஆண்டு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. அதன்பிறகு நகர்புற உள்ளாட்சிகளுக்கு தேர்தல் நடத்தப்படவில்லை. 11 ஆண்டுகளுக்கு பிறகு உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவதால் வாக்காளர்கள் இந்த தேர்தல் மூலம் கவுன்சிலர்களை தேர்வு செய்ய உள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 1,883 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2 லட்சத்து 17 ஆயிரத்து 757-ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 1 லட்சத்து 98 ஆயிரத்து 571 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளனர்.
நேற்று சிகிச்சை பலனின்றி ஒரே நாளில் 6 பேர் உயிரிழந்தனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,597- ஆக உயர்ந்துள்ளது. 16,589 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று 545 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 89 ஆயிரத்து 85 -ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 82 ஆயிரத்து 894 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளனர்.
இதுவரை 1,283 பேர் உயிரிழந்துள்ளனர். 4,908 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் அடுத்த கூடலூர் ஏரி பகுதியில் திருட்டுத்தனமாக மது விற்கப்படுவதாக மறைமலை நகர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்று பார்த்தபோது ஏரி கரையில் உள்ள முள்புதரில் பாண்டியமீனா (வயது 40), என்ற பெண் மது விற்று கொண்டிருந்தார். இதனையடுத்து போலீசார் அந்த பெண்ணை கைது செய்து அவரிடம் இருந்து மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
இது குறித்து மறைமலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இதேபோல வண்டலூர் வெளிவட்ட சாலை அருகே திருட்டுத்தனமாக மது விற்றுக்கொண்டிருந்த தாம்பரம் பகுதியை சேர்ந்த பழனி (வயது 35), என்பவரை ஓட்டேரி போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து ஓட்டேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
காஞ்சிபுரம்:
நாட்டின் 73-வது குடியரசு தின விழா காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள அண்ணா காவல் மைதானத்தில் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர் போலீசாரின் அணி வகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.
இதைத்தொடர்ந்து மூவர்ண பலூனை கலெக்டர் ஆர்த்தி பறக்கவிட்டார். பின்னர் சிறப்பாக அரசுத்துறையில் பணியாற்றிய அதிகாரிகளுக்கு நற்சான்றிதழ் வழங்கினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுதாகர், வருவாய் அலுவலர் பன்னீர் செல்வம், கோட்ட வருவாய் அலுவலர் ராஜலட்சுமி, முதன்மை கல்வி அலுவலர் திருவளர்செல்வி கலந்து கொண்டனர்.
காஞ்சிபுரம் மாநகராட்சி அலுவலகத்தில் கமிஷனர் நாராயணன் தேசிய கொடி ஏற்றி இனிப்புகள் வழங்கினார்.
காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்திற்கு எதிரே அமைந்துள்ள மாவட்ட இணைப்பதிவாளர் அலுவலகத்தில் மண்டல இணைப் பதிவாளர் லட்சுமி தேசிய கொடி ஏற்றினார். துணைப் பதிவாளர் தயாளன், கண்காணிப்பாளர்கள் சிவமணி, அருண்குமார், சத்தியநாராயணன், சரளா, ரகு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதேபோல் காஞ்சிபுரம் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில் மாவட்டத் தலைவர் அளவூர் நாகராஜன் மாநகராட்சி அலுவலகத்திற்கு எதிரில் தேசிய கொடியேற்றி இனிப்புகள் வழங்கினார். நிகழ்ச்சியில் நிர்வாகிகள் பத்மநாபன், அன்பு, மணிகண்டன், சுமங்கலி ஸ்ரீனிவாசன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் வாலாஜாபாத் பா.கணேசன் வங்கி வளாகத்தில் தேசிய கொடி ஏற்றி இனிப்பு வழங்கினார். மேலாண்மை இயக்குனர் முருகன், பொது மேலாளர் விஜயகுமாரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
திருவள்ளூர் கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் அவர் திறந்த ஜீப்பில் சென்று போலீசாரின் அணிவகுப்பை பார்வையிட்டு போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். பின்னர் வண்ணப் பலூன் மற்றும் சமாதான புறாக்களை பறக்க விட்டார்.
இதைத்தொடர்ந்து அரசின் பல்வேறு துறையின் கீழ் 34 பயனாளிகளுக்கு ரூ.4 கோடியே 91 லட்சத்து 77 ஆயிரம் மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் வழங்கினார்.விழாவில் தமிழக முதல்வரின் காவலர் பதக்கங்களை 26 போலீசா ருக்கும், பல்வேறு அரசுத் துறைகளில் கொரோனா தொற்றில் சிறப்பாகப் பணியாற்றிய 78 அலுவலர்களுக்கும் மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய 188 பேருக்கும் சான்றிதழ்களை வழங்கினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வருண் குமார், பயிற்சி கலெக்டர் அனாமிகா, மாவட்ட திட்ட அலுவலர் ஜெயக்குமார், சுகாதார துறை துணை இயக்குனர் ஜவகர்லால், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் இயேசுதாஸ், மீனாட்சி, கலெக்டரின் நேர்முக உதவி யாளர் வித்யா,கோட்டாட்சியர் ரமேஷ் வட்டாட்சியர் செந்தில்குமார் திருவள்ளூர் துணை சூப்பிரண்டு சந்திரதாசன் மற்றும் அரசு அலுவலர்கள் பங்கேற்றனர். முன்எச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடை பெறவில்லை.
மேலும் சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு சம்பந்தப்பட்ட வட்டாட்சியர்கள் அவர்களது வீடு தேடி சென்று கவுரவித்தனர்.
ஊத்துக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு சாரதி டி.எஸ்.பி. அலுவலகத்தில் தேசிய கொடி ஏற்றி வைத்தார். போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன் தேசிய கொடியை ஏற்றினார்.
குற்றவியல் மற்றும் உரிமையியல் நீதிமன்றத்தில் வக்கீல்கள் சங்க தலைவர் சீனிவாசன் தேசிய கொடி ஏற்றி இனிப்பு வழங்கினார். இதில் செயலாளர் மகேந்திரன், பொருளாளர் கன்னியப்பன், அரசு வழக்கறிஞர் வெஸ்லி மற்றும் பலர் கலந்து கொண்டனர். பேரூ ராட்சி அலுவலகத்தில் செயல் அலுவலர் மாலா தேசியக் கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார்.
செங்கல்பட்டில் உள்ள அரசினர் தொழில் பயிற்சி நிலைய வளாக மைதானத்தில் குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது. தேசிய கொடியை மாவட்ட கலெக்டர் ராகுல் நாத் ஏற்றி வைத்து போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். இதைத்தொடர்ந்து நலதிட்ட உதவிகள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு பாராட்டு நற்சான்றிதழ்களை மாவட்ட கலெக்டர் ராகுல் நாத் வழங்கினார்.
நிகழ்ச்சியில் செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு அரவிந்தன், மாவட்ட வருவாய் அலுவலர் மேனுவல் ராஜ் பங்கேற்றனர். காட்டாங் கொளத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஒன்றிய குழு தலைவர் உதயாகருணாகரன் தேசிய கொடியை ஏற்றினார். இதில் துணை தலைவர் ஆராமுதன், வட்டார வளர்ச்சி அலுவலர் சாய்கிருஷ்ணன் கலந்து கொண்டனர்.
சோழிங்கநல்லூர்:
நீலாங்கரையை சேர்ந்தவர் அரவிந்த். ஆழ்கடல் பயிற்சியாளர். இவர் கடல் வளத்தை பாதுகாக்க பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தி வருகிறார்.
ஆழ்கடலில் திருமணம் நடத்தியது, சைக்கிள் ஓட்டியது, உடற்பயிற்சி, யோகா, கிரிக்கெட் விளையாட்டு, தேசிய கொடி பறக்கவிட்டது என கடலுக்குள் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி உள்ளார்.
மேலும் கடந்த 16 ஆண்டுகளாக கடல் நீச்சல் பயிற்சியும் அளித்து வருகிறார். இவரது மகள் தாரகை ஆராதனா (வயது 8). இவர் தந்தையிடம் தொடர்ந்து நீச்சல் பயிற்சி பெற்று வருகிறார்.
இந்த நிலையில் சிறுமி தாரகை ஆராதனா கோவளத்தில் இருந்து நீலாங்கரை வரை 19 கி.மீ. தூரத்தை கடலில் நீந்தினார். இதனை அவர் 6 மணி நேரம் 14 நிமிடத்தில் கடந்து சாதனை படைத்தார்.
கடலோர பாதுகாப்பு துறையிடம் அனுமதி பெற்று, இந்த நிகழ்ச்சியை நடத்தியதாக அரவிந்த் தெரிவித்துள்ளார்.
தாம்பரம்:
தாம்பரம் நகராட்சி மற்றும் அருகில் உள்ள நகராட்சி, பேரூராட்சிகளை இணைத்து, தாம்பரம் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது.
இதையடுத்து புதிதாக வார்டுகள் வரையறை செய்யப்பட்டு 70 வார்டுகள் நிர்ணயிக்கப்பட்டன. இந்த நிலையில் தாம்பரம் மாநக ராட்சியை 5 மண்டலங்களாக பிரித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் இந்த 5 மண்டலங்களில் எந்தெந்த வார்டுகள் இடம் பெற்றுள்ளன என்பதும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி மண்டலம் 1-ல் வார்டுகள் 1 முதல் 8 வரையும் மற்றும் 10,11,12, 29,30,31 என மொத்தம் 14 வார்டுகள்.
மண்டலம் 2-ல் வார்டுகள் 9,13 முதல் 21 வரை மற்றும் 24, 26,27,28 என மொத்தம் 14 வார்டுகள்.
மண்டலம் 3-ல் 22, 23, 25 மற் றும் 34 முதல் 44 வரை மொத்தம் என 14 வார்டுகள்.
மண்டலம் 4-ல் வார்டு 32, 33 மற்றும் 49 முதல் 61 வரை என மொத்தம் 15 வார்டுகள்.
மண்டலம் 5-ல் வார்டு 45 முதல் 48 வரையும் மற்றும் 62 முதல் 70 வரையும் என மொத்தம் 13 வார்டுகள் இடம் பெற்றுள்ளன.
தாம்பரம் மாநகராட்சியில் மண்டல அலுவலகங்கள் எந்த பகுதியில் அமைய உள்ளன என்பது குறித்து ஆய்வுகள் செய்யப்பட்டு அமைக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
மாமல்லபுரம்:
மாமல்லபுரத்தில் மத்திய கப்பல் போக்குவரத்துத்துறை மற்றும் கலங்கரைவிளக்க இயக்குனரகத்தின் கீழ் கலங்கரைவிளக்கம், கடல்சார் அருங்காட்சியகம் ஆகியவை இயங்கி வருகிறது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் மாமல்லபுரத்தில் ஏசி வசதியுடன் இயங்கும் கடல்சார் அருங்காட்சியமும், குறுகிய வழியுடைய கலங்கரை விளக்கமும் இன்று முதல் மறு உத்தரவு வரும் வரை தற்காலிகமாக, சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது.
சென்னை அடுத்த வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் பணிபுரியும் அதிகாரிகள், ஊழியர்கள் உள்பட 75 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து விலங்குகளின் பாதுகாப்பை கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த 17-ந்தேதி முதல் வருகிற 31-ந்தேதி வரை வண்டலூர் உயிரியல் பூங்கா பார்வையாளர்களுக்கு தடை செய்யப்பட்டு மூடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பூங்கா நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கொரோனா தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பூங்காவில் உள்ள 11 சிங்கங்கள், 4 சிறுத்தைகள், 6 புலிகள் உட்பட 21 பூனை இனங்களிலிருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டு கொரோனா பரிசோதனைக்காக போபாலில் உள்ள விலங்கு நோய்களுக்கான உயர் பாதுகாப்பு தேசிய நிறுவனத்துக்கு அனுப்பப்பட்டு முடிவுகள் பெறப்பட்டன. அவ்வாறு பெறப்பட்ட முடிவுகளின்படி பரிசோதனைக்காக அனுப்பப்பட்ட விலங்குகளுக்கு கொரோனா தொற்று இல்லை என தெரியவந்துள்ளது.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் வட்டத்திற்குட்பட்ட இடையாத்தூரில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் சார்பில் நேரடி கொள்முதல் நிலையத்தை அமைச்சர் தா.மோ.அன்பரசன் திறந்து வைத்தார். பின்னர் அவர் கூறியதாவது:-
விவசாயிகள் கோரிக்கையை ஏற்று 5 இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படுகிறது. இடையாத்தூர், படாளம், மதுராபுதூர், சூணாம்பேடு மற்றும் காரியந்தாங்கல் ஆகிய இடங்களில் தொடங்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் ஏற்கனவே சொர்ணவாரி பருவத்தில் 35இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் தொடங்கப்பட்டு 40,000 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
சம்பா பருவத்தில் தொடங்க உள்ள 5 இடங்களையும் சேர்த்து மொத்தம் 59 இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் தொடங்கப்பட்டுள்ளது. இந்த 59 இடங்களிலும் 70,000 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்ய முதன்மையான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டுள்ளது.
கடந்த காலங்களில் மொத்தம் 7 இடங்களில் மட்டுமே நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட்டது. சொர்ணவாரி பருவத்தில் 1000 மெட்ரிக் டன் அளவில் சம்பா பருவத்தில் 25 இடங்கள் மூலம் 30,000 மெட்ரிக் டன் அளவிற்கு மட்டுமே நெல் கொள்முதல் செய்யப்பட்டு இருந்தது. தமிழக முதல்வர் விவசாயிகள் மீது அக்கறை கொண்டு எங்கெல்லாம் விவசாயிகள் நெல் கொள்முதல் நிலையங்கள் கேட்கிறார்களோ அந்த இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் தொடங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.
அதன் அடிப்படையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் மட்டும் 59 இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் தொடங்க திட்டமிடப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. முதல் கட்டமாக இன்றையதினம் 5 இடங்களில் தொடங்கி வைக்கப்பட்டது.
இந்த நேரடி கொள்முதல் நிலையங்கள் விவசாயிகளிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்யப்பட்டு அதற்கான தொகை விவசாயிகளுக்கு வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்பட உள்ளது.
முதல்-அமைச்சர் மத்திய அரசு நிர்ணயம் செய்யப்பட்ட நெல் கொள்முதலுக்கான அடிப்படை ஆதார விலையுடன் சேர்த்து மாநில ஊக்க தொகையான குவிண்டால் ஒன்றுக்கு சின்னரகத்திற்கு கூடுதலாக ரூ.100 பொது ரகத்திற்கு கூடுதலாக ரூ.75 வழங்க உத்தரவிட்டுள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் கலெக்டர் ராகுல் நாத், செல்வம் எம்.பி., சட்டமன்ற உறுப்பினர்கள் க.சுந்தர், எம்.பாபு, மாவட்ட குழு உறுப்பினர் செம்பருத்தி, ஒன்றிய குழு உறுப்பினர்கள் அரசு, இதயவர்மன், வேளாண்மை துறை இணை இயக்குநர் சுரேஷ், கலெக்டரின் நேர்முக உதவியாளர் தியாகராஜன் கலந்து கொண்டனர்.
மாமல்லபுரம் கடற்கரை கோவில் வளாகத்தில் கடந்த டிசம்பர் 23-ந்தேதி இந்திய நாட்டிய விழா தொடங்கியது. இதை அமைச்சர்கள் மதிவேந்தன், தா.மோ.அன்பரசன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
தொடர்ந்து தினமும் மாலையில் பரதநாட்டியம், குச்சிப்புடி, கரகாட்டம், கதக், ஒடிசி, தப்பாட்டம், காவடி, பொய்கால்குதிரை, சிலம்பம், கதகளி என பல மாநில கிராமிய கலாச்சார நடனங்கள் நடத்தப்பட்டது. தினமும் 4 மணி நேரம் விழா நடைபெற்றது.
நாளை (23-ந்தேதி) வரை நாட்டிய விழா நடத்த சுற்றுலாத்துறை திட்டமிட்டிருந்தது. நாளை கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதால், இன்று மாலை 5.15-க்கு நாட்டுப்புற நடனத்துடன் தொடங்கி இரண்டு குழுவின் பரத நாட்டியத்துடன் இரவு 8.15-க்கு இந்திய நாட்டிய விழா நிறைவடைகிறது.






