என் மலர்
செங்கல்பட்டு
செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கம் அருகே உள்ள காரணைப்புதுச்சேரி கோகுலம் காலனி கிருஷ்ணன் தெருவை சேர்ந்தவர் செல்வி (வயது 38). இவர் நேற்று முன்தினம் கிளாம்பாக்கத்தில் ஜி.எஸ்.டி.சாலையை கடக்க முயன்றபோது, அப்போது அந்த வழியாக மின்னல் வேகத்தில் வந்த மோட்டார் சைக்கிள் கண்ணிமைக்கும் நேரத்தில் செல்வி மீது பயங்கரமாக மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட அவர், பலத்த காயம் அடைந்தார். உடனே அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சென்னை அரசு ராஜீவ்காந்தி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி செல்வி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து கூடுவாஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 1,534 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2 லட்சத்து 24 ஆயிரத்து 265 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 2 லட்சத்து 7 ஆயிரத்து 306 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளனர். நேற்று சிகிச்சை பலனின்றி ஒரே நாளில் 6 பேர் உயிரிழந்தனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,621 ஆக உயர்ந்துள்ளது. 14,338 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று 494 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 91 ஆயிரத்து 178 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 85 ஆயிரத்து 619 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளனர். இதுவரை 1,285 பேர் உயிரிழந்துள்ளனர். 4,274 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கொரோனா பரவல் காரணமாக கடந்த 3 வார காலமாக ஞாயிற்றுகிழமை தோறும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு இருந்தது. அதேபோல் தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில் பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை விடப்பட்டு இருந்தது. இந்நிலையில் நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்பட உள்ளதாலும், ஞாயிறு ஊரடங்கு உத்தரவு திரும்ப பெறப்பட்டதாலும், ஞாயிறு விடுமுறை தினத்தை முன்னிட்டு நேற்று மாமல்லபுரத்தில் சுற்றுலா பயணிகள் குடும்பமாக திரண்டு வந்ததை காண முடிந்தது.
இதனால் கடற்கரை கோவில், வெண்ணை உருண்டை பாறை, அா்ச்சுனன் தபசு, ஐந்துரதம் உள்ளிட்ட புராதன சின்னங்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலை மோதியது. பலர் ஆர்வமுடன் அங்குள்ள புராதன சின்னங்கள் முன்பு தங்கள் குடும்பத்துடன் செல்பி எடுத்து மகிழ்ந்ததை காண முடிந்தது. கடற்கரைக்கு செல்ல விதிக்கப்பட்ட தடையும் நீக்கப்பட்டதால் சுற்றுலா பயணிகள் மாமல்லபுரம் கடற்கரைக்கு வந்திருந்ததை காண முடிந்தது.
அங்குள்ள கடற்கரைக்கு செல்ல தடை விதித்து அமைக்கப்பட்டிருந்த தடுப்புகள் நேற்று அகற்றப்பட்டன. கடற்கரைக்கு வந்திருந்த பலர் கடும் கடல் சீற்றத்தையும் பொருட்படுத்தாமல் கடலில் குளித்து மகிழ்ந்தனர்.
இதையொட்டி, கடற்கரைச்சாலை, அா்ச்சுணன் தபசு சாலை பகுதிகளில் உள்ள நடைபாதை கடைகளில் வழக்கத்தை விட நேற்று வியாபாரம் களை கட்டியது. கடந்த 3 வாரமாக ஞாயிறு ஊரடங்கால் பாதிக்கப்பட்ட கடற்கரை பகுதி வியாபாரிகள் நேற்று மகிழ்ச்சியுடன் காணப்பட்டனர்.
மாமல்லபுரம்:
முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் அவ்வப்போது உடற்பயிற்சிக்காக கிழக்கு கடற்கரை சாலையில் சைக்கிள் பயணம் மேற்கொள்கிறார்.
அதேபோல் வீட்டில் உள்ள நவீன உடற்பயிற்சி கூடத்தில் உடற்பயிற்சி செய்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு மு.க.ஸ்டாலின் உடற்பயிற்சி செய்யும் வீடியோ சமூக வலைதலங்களில் வைரலாக பரவியது.
இந்த நிலையில் இன்று காலை மு.க.ஸ்டாலின் கிழக்கு கடற்கரை சாலையில் உத்தண்டி சுங்கச்சாவடி முதல் மாமல்லபுரம் வரை சைக்கிள் ஓட்டி சென்றார். அவருடன் அதிகாரிகள் தனித்தனி சைக்கிளில் சென்றனர். மு.க.ஸ்டாலின் சைக்கிள் பயணத்தால் கிழக்கு கடற்கரை சாலையில் சைக்கிளிங் செல்வோர் மத்தியில் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது.
இதற்கு முன்பு கிழக்கு கடற்கரை சாலையில் சைக்கிளிங் செய்வோரின் எண்ணிக்கை குறைந்த அளவே இருக்கும்.
ஆனால் இப்போது சைக்கிளிங் செல்வோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தபடி உள்ளது. முதல்- அமைச்சர் மு.க. ஸ்டாலின் செல்லும் அதே பாதையில் ஏராள மானோர் விரும்பி சைக்கிளிங் சென்று வருகின்றனர்.
இன்று காலை ஏராளமானோர் தனித்தனி குழுக்களாக கிழக்கு கடற்கரை சாலையில் சைக் கிளிங் சென்றனர். பின்னர் அவர்கள் மாமல்லபுரம் புரதான சின்னங்கள் முன்பு நின்று செல்போனில் செல்பி எடுத்துக்கொண்டனர்.
செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் பேரூராட்சியில் 15 வார்டுகளில் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அரசியல் கட்சியினர் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் குறித்து அனைத்து கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் மாமல்லபுரம் பேரூராட்சி அலுவலகத்தில் செயல் அலுவலர் கணேஷ் தலைமையில் நடந்தது.
கூட்டத்தில் கலந்து கொண்ட அனைத்து கட்சி பிரதிநிதிகள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் குறித்து விளக்கி செயல் அலுவலர் கணேஷ் பேசும்போது கூறியதாவது:-
தற்போது கொரோனா பரவல் குறித்த அச்சம் உள்ளதால் வேட்பு மனுதாக்கல் செய்ய வரும் வேட்பாளர்கள் கூட்டமாக வராமல் தனக்கு முன் மொழிபவர் ஒருவரை மட்டுமே உடன் அழைத்து வரவேண்டும். தேர்தல் பிரசாரத்துக்கு கூட்டமாக செல்வதை தவிர்த்து தன்னுடன் 3 பேரை மட்டுமே அழைத்து செல்ல வேண்டும். தன்னுடைய ஆதரவாளர்கள் அதிகமானோரை உடன் அழைத்து செல்வதை கட்சி சார்பில் போட்டியிடுபவர்கள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
பேரூராட்சி அலுவலகத்தில் இருந்து கிழக்கு ராஜ வீதி, திருக்கழுக்குன்றம் சாலை, கோவளம் சாலை போன்ற மும்முனை சந்திப்பு பகுதியில் 100 மீட்டர் தூரத்திற்கு எல்லை வரையறை செய்யப்பட்ட இந்த பகுதிக்குள் எந்தவித பதாகையும், விளம்பர தட்டிகளும் அமைக்க கூடாது. அப்படி தடையை மீறி அமைத்தால் அவை அகற்றப்படும்.
இவ்வாறு அரசியல் கட்சியினர் பின்பற்ற வேண்டிய விதிமுறைகளை விளக்கி செயல் அலுவலர் கணேஷ் கூறினார்.
இந்த கூட்டத்தில் மாமல்லபுரம் பேரூராட்சி முன்னாள் தலைவர்கள் விசுவநாதன், பி.ஏ.எஸ்வந்த்ராவ், திருக்கழுக்குன்றம் கிழக்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் ராகவன் மற்றும் பல்வேறு கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
தாம்பரம்:
சென்னை சிட்லபாக்கம் ஏரியை ஆக்கிரமித்து ஏராளமான வீடுகள் கட்டப்பட்டு இருந்தன.
இந்தநிலையில் சிட்லபாக்கம் ஏரியை சுற்றி உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று கோர்ட்டு உத்தரவிட்டது.
இந்தநிலையில் கடந்த 14-ந்தேதி பொதுப்பணித் துறை சார்பில் சிட்லபாக்கம் ஏரியை சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளைஅளவீடு செய்யும் பணி நடைபெற்றது.
அதன்படி ஏரியில் இருந்து 71 அடி ஆக்கிரமிப்பு நிலத்தில் கட்டப்பட்டு இருந்த 417 வீடுகளை உடனடியாக இடித்து அகற்ற வேண்டும் என்று கோர்ட்டு உத்தரவிட்டது.
இந்தநிலையில் சிட்லபாக்கம் ஏரியை ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருந்த 417 வீடுகளை இடித்து அப்புறப்படுத்தும் பணி இன்று தொடங்கியது. முதல்கட்டமாக இன்று 14 வீடுகளை இடிக்கும் பணியை பொதுப்பணி துறை என்ஜினீயர் பிரபு, தாம்பரம் கோட்டாட்சியர் அறிவுடைநம்பி, தாம்பரம் வட்டாட்சியர் பாலாஜி ஆகியோர் மேற்கொண்டனர்.
அங்கு ஜே.சி.பி. எந்திரம் கொண்டு வரப்பட்டு ஆக்கிரமிப்புகளை இடிக்கும் பணி தொடங்கியது. வீடுகளை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வீடுகளை இடிக்க வந்த ஜே.சி.பி. எந்திரங்களை சிறைபிடித்தனர். பொதுப்பணித் துறை அதிகாரிகளுடன் வாக்கு வாதத்திலும் ஈடுபட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது.
இதனைத்தொடர்ந்து தாம்பரம் போலீஸ் துணை கமிஷனர் குமார் தலைமையில் 200-க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர்.
மேலும் தாம்பரம் தொகுதி எம்.எல்.ஏ. எஸ்.ஆர். ராஜா மற்றும் அதிகாரிகள், பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்கள்.
ஆனாலும் பொதுமக்கள் ஆக்கிரமிப்பு வீடுகளை இடிக்க தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து பொதுமக்களை போலீசார் அப்புறப்படுத்தி ஆக்கிரமிப்பு வீடுகளை இடிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.
தாம்பரம்:
தமிழகத்தில் நடைபெற உள்ள நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு இன்றுடன் துவங்கியது. இந்தநிலையில் புதிதாக உருவாக்கப்பட்ட தாம்பரம் மாநகராட்சி ஆணையர் இளங்கோவன் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
புதிதாக உருவாக்கப்பட்டுள்ள தாம்பரம் மாநகராட்சியில் வேட்பு மனு இன்று முதல் வருகிற 4-ந் தேதி வரை தாக்கல் செய்யலாம் அதற்காக 7 தேர்தல் நடத்தும் உதவி அலுவலகங்கள் அமைக்கபட்டுள்ளது.
ஒன்று முதல் பத்து வார்டுகள் அனகாபுத்தூரிலும், 11 முதல் 20 வார்டுகள் பம்மல் பகுதியிலும், 21 முதல் 30 வார்டு பல்லாவரம் நகராட்சி அலுவலகத்திலும், 31 முதல் 40 வரை பல்லாவரம் நகராட்சி அலுவலகத்தில் அமைந்துள்ள பழைய தாசில்தார் கட்டிடத்திலும், 41 முதல் 50 வரை தாம்பரம் மாநகராட்சி அலுவலகத்திலும் 51 முதல் 60 வரை பெருங்களத்தூர் பேரூராட்சி அலுவலகத்திலும், 61 முதல் 70 வரை செம்பாக்கம் நகராட்சி அலுவலகத்திலும் மனு தாக்கல் செய்யலாம்.
தாம்பரம் மாநகராட்சி முழுவதும் 703 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அதில் பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு போடப்படும் அனைத்து வாக்கு மையங்களிலும் சி.சி.டி.வி. கேமராக்கள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்படும்.
வேட்புமனு தாக்கல் செய்வதற்கு வேட்பாளர் அல்லது முன்மொழிபவர் என ஒருவருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும்.
வேட்பாளருடன் 4 பேர் சென்று வாக்கு சேகரிக்க அனுமதிக்கபடுவார்கள். வருகிற 31-ந் தேதி வரை பேரணி,சைக்கிள் பேரணி,திறந்தவெளியில் பொதுக்கூட்டங்கள் போன்றவை நடத்த தடை செய்யப்பட்டுள்ளது
உள்ளரங்கில் கூட்டம் நடத்த 100 நபர்களுக்கு மட்டுமே அனுமதி தேர்தல் நடத்தும் அதிகாரிகள் அனுமதி பெற்றிருக்க வேண்டியது கட்டாயம். மாநகராட்சி முழுவதும் சுவர் விளம்பரம், சுவரொட்டிகள், பிளக்ஸ் பேனர்கள் போன்றவை வைக்க அனுமதி கிடையாது.
வேட்புமனு தாக்கல் முதல் வாக்குப்பதிவு வரை அனைத்தும் கேமராவில் பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுபோல் 7 தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு ஒன்று என்ற வீதத்தில் 7 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளது.
இவர்கள் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பணி செய்வர் இதுபோல் தாம்பரம் மாநகராட்சி அலுவலகத்தில் 24 மணி நேரமும் இயங்கக்கூடிய தேர்தல் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது.
பொது மக்களுக்கு ஏதேனும் புகார் இருந்தால் இந்த கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் தாம்பரம் மாநகராட்சியும், நந்திவரம், செங்கல்பட்டு, மறைமலைநகர், மதுராந்தகம் ஆகிய 4 நகராட்சிகளும், மாமல்லபுரம், திருப்போரூர், கருங்குழி, அச்சிறுப்பாக்கம், திருக்கழுக்குன்றம், இடைக்கழி நாடு ஆகிய 6 பேரூராட்சிகளும் உள்ளன.
தாம்பரம் மாநகராட்சியில் 70 வார்டுகள் உள்ளன. இதில் 7 லட்சத்து 64 ஆயிரத்து 731 வாக்காளர்கள் தேர்தலில் வாக்களிக்க உள்ளனர். நந்திவரம் நகராட்சியில் 30 வார்டுகள், செங்கல்பட்டு நகராட்சியில் 33 வார்டுகள், மறைமலை நகர் நகராட்சியில் 21 வார்டுகள், மதுராந்தகம் நகராட்சியில் 24 வார்டுகள் என மொத்தம் 108 வார்டுகள் உள்ளன.
இந்த 4 நகராட்சிகளிலும் 2 லட்சத்து 20 ஆயிரத்து 413 வாக்காளர்கள் உள்ளனர். மாமல்லபுரம், திருப்போரூர், கருங்குழி, அச்சிறுப்பாக்கம் ஆகிய பேரூராட்சிகளில் தலா 15 வார்டுகளும், திருக்கழுக்குன்றனம் பேரூராட்சியில் 18 வார்டுகளும் உள்ளன. இடைக்கழி நாடு பேரூராட்சியில் 21 வார்டுகள் உள்ளன. இந்த 6 பேரூராட்சிகளிலும் மொத்தம் 91 ஆயிரத்து 618 வாக்காளர்கள் உள்ளனர். ஆக மொத்தம் செங்கல்பட்டு மாவட்டத்தில் 277 வார்டுகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இதில் மொத்தம் 10 லட்சத்து 76 ஆயிரத்து 762 வாக்காளர்கள் ஓட்டுபோட உள்ளனர்.தேர்தலுக்காக 1067 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. 8 இடங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.






