என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கலெக்டர் ராகுல்நாத்
    X
    கலெக்டர் ராகுல்நாத்

    தேர்தல் நடத்தை விதிமுறை - அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் செங்கல்பட்டு கலெக்டர் ஆலோசனை

    மாமல்லபுரம் நகராட்சி அலுவலகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் நடத்தை விதிமுறைகளை பின்பற்றுவது தொடர்பாக அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் ஆலோசனை நடத்தினார்.
    செங்கல்பட்டு:

    தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ந் தேதி நடைபெற உள்ளது. தேர்தலில் போட்டியிட அரசியல் கட்சியினர் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    வேட்பாளர்கள் தேர்வு விறு விறுப்பாக நடந்து வருகிறது. வேட்பு மனு தாக்கல் நேற்று முன்தினம் தொடங்கி விட்டன. செங்கல்பட்டு மாவட்டத்தை பொறுத்தவரை தாம்பரம் மாநகராட்சியில் 70 வார்டுகள், நகராட்சிகளில் செங்கல்பட்டு 33 வார்டுகள், மதுராந்தகத்தில் 24 வார்டுகள், மறைமலை நகரில் 21 வார்டுகள், நந்திவரம் கூடுவாஞ்சேரியில் 30 வார்டுகள் உள்ளன.

    இதேபோல் பேரூராட்சியில் மாமல்லபுரத்தில் 15 வார்டுகள், அச்சரைப்பாக்கத்தில் 15 வார்டுகள், இடைக்கழிநாடு 21 வார்டுகள், கருங்குழி 15 வார்டுகள், திருப்போரூரில் 15 வார்டுகள், திருப்பரங்குன்றத்தில் 18 வார்டுகள் உள்ளன. தேர்தலுக்கான ஏற்பாடுகளை தேர்தல் அதிகாரிகள் செய்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் மாமல்லபுரம் நகராட்சி அலுவலகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் நடத்தை விதிமுறைகளை பின்பற்றுவது தொடர்பாக அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் ஆலோசனை நடத்தினார்.

    கூட்டத்தில் தேர்தல் நடத்தை விதி முறைகளை அரசியல் கட்சியினர் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.

    இதில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் செல்வக்குமார், தாம்பரம் மாநகராட்சி கமி‌ஷனர் இளங்கோவன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் பாலாஜி மற்றும் நகராட்சி கமி‌ஷனர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள் மற்றும் அரசியல் கட்சி பிரதிநிதிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×