என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாமல்லபுரம் கடற்கரையில் திரண்டு காணப்படும் சுற்றுலா பயணிகளை காணலாம்
    X
    மாமல்லபுரம் கடற்கரையில் திரண்டு காணப்படும் சுற்றுலா பயணிகளை காணலாம்

    ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு வாபஸ் எதிரொலி: மாமல்லபுரம் கடற்கரையில் திரண்ட சுற்றுலா பயணிகள்

    பிப்ரவரி 1-ந் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு வாபஸ் பெறப்பட்டதால் மாமல்லபுரத்தில் சுற்றுலா பயணிகள் திரண்டனர்.
    மாமல்லபுரம்:

    கொரோனா பரவல் காரணமாக கடந்த 3 வார காலமாக ஞாயிற்றுகிழமை தோறும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு இருந்தது. அதேபோல் தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில் பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை விடப்பட்டு இருந்தது. இந்நிலையில் நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்பட உள்ளதாலும், ஞாயிறு ஊரடங்கு உத்தரவு திரும்ப பெறப்பட்டதாலும், ஞாயிறு விடுமுறை தினத்தை முன்னிட்டு நேற்று மாமல்லபுரத்தில் சுற்றுலா பயணிகள் குடும்பமாக திரண்டு வந்ததை காண முடிந்தது.

    இதனால் கடற்கரை கோவில், வெண்ணை உருண்டை பாறை, அா்ச்சுனன் தபசு, ஐந்துரதம் உள்ளிட்ட புராதன சின்னங்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலை மோதியது. பலர் ஆர்வமுடன் அங்குள்ள புராதன சின்னங்கள் முன்பு தங்கள் குடும்பத்துடன் செல்பி எடுத்து மகிழ்ந்ததை காண முடிந்தது. கடற்கரைக்கு செல்ல விதிக்கப்பட்ட தடையும் நீக்கப்பட்டதால் சுற்றுலா பயணிகள் மாமல்லபுரம் கடற்கரைக்கு வந்திருந்ததை காண முடிந்தது.

    அங்குள்ள கடற்கரைக்கு செல்ல தடை விதித்து அமைக்கப்பட்டிருந்த தடுப்புகள் நேற்று அகற்றப்பட்டன. கடற்கரைக்கு வந்திருந்த பலர் கடும் கடல் சீற்றத்தையும் பொருட்படுத்தாமல் கடலில் குளித்து மகிழ்ந்தனர்.

    இதையொட்டி, கடற்கரைச்சாலை, அா்ச்சுணன் தபசு சாலை பகுதிகளில் உள்ள நடைபாதை கடைகளில் வழக்கத்தை விட நேற்று வியாபாரம் களை கட்டியது. கடந்த 3 வாரமாக ஞாயிறு ஊரடங்கால் பாதிக்கப்பட்ட கடற்கரை பகுதி வியாபாரிகள் நேற்று மகிழ்ச்சியுடன் காணப்பட்டனர்.
    Next Story
    ×