என் மலர்
உள்ளூர் செய்திகள்
- 2047-ல் இந்த நாடு வளர்ச்சி அடைந்த நாடாக உருவாக வேண்டும். என்றால் செலவினத்தை கட்டுப்படுத்த வேண்டும்.
- தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது. மக்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை இருக்கிறது.
திருச்செந்தூர்:
பாரதிய ஜனதா மத்திய மந்திரி எல்.முருகன் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இன்று சுவாமி தரிசனம் செய்தார்.
அப்போது புரோகிதர்கள் முன்னிலையில் எதிரிகளை வலுவிழக்கச் செய்யும் சத்ரு சம்ஹார யாகம் மற்றும் பூஜை செய்தார் .
தொடர்ந்து கோவிலில் மூலவர், சண்முகர், வள்ளி தெய்வானை, குரு பகவான், சத்ரு சம்ஹார மூர்த்தி உள்ளிட்ட சன்னதியில் வழிபட்டார். பின்னர் அவர் இரும்பு ஆர்ச் பகுதியில் பா.ஜ.க. புதிய உறுப்பினர் சேர்க்கையில் ஈடுபட்டார். அந்த பகுதியில் உள்ள கடைகளுக்கு சென்று உறுப்பினர்களை சேர்த்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
பிரதமர் நரேந்திர மோடி 3-வது முறையாக பொறுப்பேற்று முதல் 100 நாட்களில் 15 லட்சம் கோடி ரூபாய்க்கான திட்டங்களை வழங்கி உள்ளார். நாட்டின் அடிப்படை கட்டமைப்புகளுக்கு மட்டுமே ரூ.3 லட்சம் கோடி அளவிற்கு பிரதமர் ஒதுக்கீடு செய்துள்ளார்.
அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தில் பெண்கள் பெயரில் 3 கோடி வீடுகள் கட்ட ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. முத்ரா கடன் ரூ.20 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள 11 நகரங்கள் உட்பட நாடு முழுவதும் பி, சி நகரங்களில் எப்.எம். ரேடியோ அமைக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ரெயில்வே திட்டத்திற்கு மட்டும் ரூ.6,300 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
வருகிற 2047-ம் ஆண்டு நாம் 100-வது சுதந்திர தினத்தை கொண்டாடும் போது உலக நாடுகளுக்கு வழிகாட்டும் நாடாக, உலகிற்கே தலைமை வகிக்கும் நாடாக, வல்லரசு நாடாக மாறும் வகையில் இந்த 100 நாட்களில் மிகப்பெரிய சாதனைகளை பாரத பிரதமர் செய்துள்ளார்.
ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் கொண்டு வருவதற்காக கல்வியாளர்கள், நீதிபதிகள், துணை வேந்தர்கள், அரசியல் கட்சி பிரதிநிதிகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளிடம் இருந்து கருத்து கேட்கப்பட்டு திட்டம் வரையறை தயாரிக்கப்பட்டுள்ளது.
2047-ல் இந்த நாடு வளர்ச்சி அடைந்த நாடாக உருவாக வேண்டும். என்றால் செலவினத்தை கட்டுப்படுத்த வேண்டும். தேர்தலில் அதிக செலவினங்கள் ஏற்படுகிறது. இதனை கட்டுப்படுத்துவதற்கு நாட்டின் வளர்ச்சிக்காக ஒரே நாடு ஒரே தேர்தல் அவசியமான ஒன்று. அது காலத்தின் கட்டாயமானதாகும்.
பி.எம்.ஸ்ரீ திட்டத்தில் ஏற்றுக்கொள்வதாக கையெழுத்திட்டது தமிழக அரசு. மத்திய அரசு வழங்கக்கூடிய நிதிக்கு சில கட்டுப்பாடுகள் உள்ளன. அந்த கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு அந்த நிதி வழங்கப்படும்.
தமிழக முதலமைச்சர் முதலீட்டை ஈர்க்க வெளிநாடு சென்று வந்ததை பற்றி கேள்வி எழுப்பாமல் இருப்பதற்காக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சேர்ந்து நடத்தக்கூடிய நாடகம் தான் மது ஒழிப்பு மாநாடு.
தமிழக மீனவர்கள் கைது செய்யப்படும்போது மத்திய வெளியுறவுத்துறை துரிதமாக செயல்பட்டு தமிழக மீனவர்களை மீட்டுக்கொண்டு வருகிறது. மீனவர்கள் எல்லை தாண்டி செல்லாமல் இருக்க ஜி.பி.எஸ். கருவிகள் போன்றவற்றை வழங்கி உள்ளோம். மீனவர்கள் ஆழ் கடலில் மீன் பிடிக்க மானியத்துடன் கூடிய பெரிய மீன்பிடி படகுகளை வழங்கி உள்ளோம். மீனவர்களுக்கு கடல் பாசி பூங்கா கொண்டு வந்துள்ளோம்.
தொடர்ந்து மீனவர் நலனுக்காக தொடர்ந்து இந்த ஆட்சி பாடுபட்டு வருகிறது.
தூத்துக்குடி மாவட்டம் தருவைகுளம் கிராமத்தைச் சேர்ந்த மீனவர்கள் உடனடியாக இலங்கை அரசிடம் இருந்து விடுவிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சர் ஆன பின் தமிழகத்தில் என்ன மாற்றத்தை கொண்டு வர முடியும்?
தமிழகத்தில் ஆட்சிக்கு வந்த பின்பு டாஸ்மாக் கடை எண்ணிக்கை குறைக்கப்படும் என்று கூறிய தி.மு.க. அரசு ஆட்சிக்கு வந்த பின்பு டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கையை உயர்த்தி உள்ளது. கிராமங்களில் அங்கன்வாடி மையம் பள்ளிக்கூடம் இருக்கிறதோ இல்லையோ டாஸ்மாக் உங்களை வரவேற்கிறேன் என்கின்ற விளம்பரங்கள் இருக்கின்றன.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது. மக்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை இருக்கிறது.
வருகிற 2026-ம் ஆண்டு நடைபெறும் தேர்தலில் தமிழகத்தில் பா.ஜ.க. தலைமையிலான கூட்டணி ஆட்சி அமையும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது அவருடன் பா.ஜ.க. மாவட்ட பொதுச்செயலாளர் சிவமுருகன் ஆதித்தன், மகளிரணி மாநில பொதுச்செயலாளர் நெல்லையம்மாள், பாராளுமன்ற பொறுப்பாளர் விவேகம் ரமேஷ், பா.ஜ.க. நகர தலைவர் நவ மணிகண்டன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
- ரெயில்வே தண்டவாளத்தில் சிக்னல் இணைப்பு பெட்டியின் போல்ட் கழற்றப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
- அதிகாலை 2 மணி நேரம் ரெயில் சேவை பாதிக்கப்பட்டது.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி ரெயில் நிலையம் அருகே கடந்த 4 நாட்களுக்கு முன் தண்டவாள இணைப்பு கம்பிகள் அவிழ்க்கப்பட்டு சிதறி கிடந்தன. இந்த சம்பவம் தொடர்பாக ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் பொன்னேரி ரெயில் நிலையம் அருகே ரெயில்வே தண்டவாளத்தில் சிக்னல் இணைப்பு பெட்டியின் போல்ட் கழற்றப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் அதிகாலை 2 மணி நேரம் ரெயில் சேவை பாதிக்கப்பட்டது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தினர்.
வடமாநிலங்களை இணைக்கும் சென்னை-கும்மிடிப்பூண்டி ரெயில் மார்க்கத்தில் ரெயிலை கவிழ்க்க மர்ம நபர்கள் சதியா? என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இருவேறு சம்பவங்கள் குறித்தும் 2 தனிப்படைகள் அமைத்து கொருக்குப்பேட்டை ரெயில்வே போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தமிழக மக்கள் எப்போதும் பாரதிய ஜனதா கட்சியை ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்.
- இந்தியாவை காக்கும் பணியில் தி.மு.க. எப்போதுமே முன் வரிசையில் இருக்கும்.
சென்னை:
சென்னை தி.நகரில் "மீளும் மக்கள் ஆட்சி" என்கிற பெயரிலான புத்தக வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இதில் கலந்து கொண்டு புத்தகத்தை வெளியிட்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
பாராளுமன்ற தேர்தலின் போது 22 நாட்கள், 9 ஆயிரம் கிலோ மீட்டர் சுற்றுப்பயணம் செய்தேன். அப்போது தமிழக அரசின் திட்டங்களுக்கு மக்கள் மத்தியில் பெரிய ஆதரவு இருந்ததையும், பாரதிய ஜனதா மீது மக்கள் கடும் கோபத்தில் இருந்ததையும் உணர முடிந்தது.
2024 பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் பற்றி இந்த புத்தகத்தில் கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. நமது முதலமைச்சரின் கட்டுரை முதல் கட்டுரையாக உள்ளது. பாரதிய ஜனதாவின் 10 ஆண்டு பாசிச போக்கையும் அதற்கு இந்தியா கூட்டணியும் மக்களும் எப்படி கடிவாளம் போட்டார்கள் என்பதையும் முதலமைச்சர் 360 டிகிரியில் அலசியுள்ளார்.
தேர்தல் முடிவுகளுக்கு பிறகு மோடியின் நடை உடை பாவனைகள் தான் மாறி இருக்கிறதே தவிர அவரது பாசிச சிந்தனைகள் மாறாமலேயே உள்ளன. தேர்தலில் கடும் பின்னடைவை சந்தித்த பிறகும் கூட ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை செயல்படுத்த துடிக்கிறார்.
பிரதமர் மோடி பற்றி எப்படிப்பட்ட பிம்பம் உருவாக்கப்பட்டது என்று உங்களுக்கே தெரியும். அவரை தோற்கடிக்க முடியாது என்று சொன்னார்கள். 400 இடங்களில் வெற்றி பெறுவோம் என்று கலர் கலராய் ரீல் எல்லாம் விட்டார்கள்.
ஒரு மிஸ்டு கால் கொடுத்தால் போதும் பாரதிய ஜனதாவில் சேரலாம் என்று விளம்பரம் செய்தார்கள். ஆனால் மத்தியில் சொந்த காலில் கூட நின்று அவர்களால் ஆட்சி செய்ய முடியவில்லை. சந்திரபாபு நாயுடு, நிதிஷ்குமார் காலை பிடித்து ஆட்சி செய்து கொண்டிருக்கிறார்கள்.
மகாராஷ்டிராவில் சிவ சேனா, காஷ்மீரில் மக்கள் மாநாட்டு கட்சி, ஒடிசாவில் பிஜூ ஜனதாதளம் என பல்வேறு கட்சிகளை பாரதிய ஜனதா காலி செய்துள்ளது.
அந்த வரிசையில் முதல் இடத்தில் நிற்கும் கட்சியாக நமது எதிர்க்கட்சி (அ.தி.மு.க.) தள்ளப்பட்டு உள்ளது. அவர்கள் அதில் இருந்து மீண்டு வரவேண்டும் என்று தான் என்னைப் போன்றவர்களின் ஆசையாக உள்ளது.
மோடியை பார்த்து அமெரிக்காவே பயப்படுகிறது. ஐரோப்பாவே நடுங்குகிறது என்று சங்கிகள் கூறி வருகிறார்கள். ஆந்திரா மாநிலத்தில் சந்திரபாபு நாயுடுவை பார்த்துதான் மோடி பயப்படுகிறார் என்று கூறுகிறார்கள். மோடியின் பிம்பத்தை இனி பீகார் மக்கள் கூட நம்ப மாட்டார்கள்.
அயோத்தியில் ராமர் கோவிலை கட்டி நாங்கள் தான் ராமரின் அம்பாசிடர்கள் என்று காட்டிக்கொண்ட பிறகும் அயோத்தியை உள்ளடக்கிய பைசா பாத் தொகுதியில் அந்த கட்சியை மக்கள் புறக்கணித்துள்ளார்கள்.
தமிழ்நாட்டில் பாரதிய ஜனதா கட்சியால் ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியாமல் போனதற்கு மக்கள் அவர்கள் மீது வைத்துள்ள கோபமே முக்கிய காரணமாகும். தமிழக மக்கள் எப்போதும் பாரதிய ஜனதா கட்சியை ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். மோடி 8 முறை தமிழகத்துக்கு வருகை தந்தார். கடைசி கட்ட பிரசாரம் முடிந்த பிறகும் கன்னியாகுமரியில் போட்டோ சூட் நடத்தி தியானம் நடத்தினார். இருப்பினும் அவர்களின் நாடகம் தமிழகத்தில் எடுபடவில்லை.

பாரதிய ஜனதாவை மக்கள் நடுரோட்டில் நிறுத்தினார்கள். தி.மு.க. கூட்டணியை 40 தொகுதிகளிலும் வெற்றி பெற செய்தார்கள். மோடி நினைத்தது போல தேர்தல் முடிவுகள் வந்திருந்தால் மாநிலங்களை எல்லாம் முனிசிபாலிட்டியாக்கி இருப்பார்.
இந்தியாவை காக்கும் பணியில் தி.மு.க. எப்போதுமே முன் வரிசையில் இருக்கும். தி.மு.க.வின் வாக்கு சதவீதம் குறைந்து விட்டதாக எதிர்க்கட்சிகள் கூறியுள்ளன.
கடந்த தேர்தலில் 24 தொகுதிகளில் போட்டியிட்ட தி.மு.க. இம்முறை 22 இடங்களில்தான் போட்டியிட்டது வாக்கு சதவீதம் குறைந்ததற்கான காரணமும் புத்தகத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சவாலான தொகுதிகளை தி.மு.க. எடுத்துக் கொண்டு வெற்றி வாய்ப்பு அதிகமுள்ள தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்கு விட்டுக் கொடுத்தோம். எதிரிகளை வீழ்த்த முதலமைச்சர் மேற்கொண்ட வியூகம் இதுவாகும்.
இதையெல்லாம் கருத்தில் கொண்டுதான் தி.மு.க.வின் வாக்கு வங்கியை அணுக வேண்டும். கழகத்தின் வலிமை பெருகிக் கொண்டே செல்வதுதான் உண்மையாகும். முதலமைச்சர் உருவாக்கியுள்ள இந்த கூட்டணி 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலிலும் மிகப்பெரிய வெற்றியை பெறும்.
யூடியூப்பில் ஒரு செய்தியை பார்த்தேன். "உதயநிதி துணை முதலமைச்சர் ஆகிறாரா? ரஜினிகாந்த் ஆவேசம் என்று தலைப்பிட்டு வெளியிட்டுள்ளார்கள். துணை முதலமைச்சர் பதவி பற்றி ரோட்டில் போகிறவர்களிடம் எல்லாம் மைக்கை நீட்டி கருத்து கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். அப்படித்தான் ரஜினிகாந்திடமும் மைக்கை நீட்டி கேட்டுள்ளனர். அவர் பாவம். என்னிடம் அரசியல் பற்றி கேட்காதீர்கள் என்று கூறி விட்டு சென்று விட்டார். இதற்குதான் அப்படி தலைப்பு வைத்து உள்ளார்கள்.
இதுபற்றி நான் பேசியிருப்பதால் ரஜினிகாந்துக்கு உதயநிதி பதிலடி என்றும் போடுவார்கள். 2024 தேர்தலை பற்றி 25 கட்டுரைகளுடன் புத்தகம் வெளியிட்டுள்ளார்கள். 2026 தேர்தல் முடிவுக்கு பிறகு 50 கட்டுரைகள் அடங்கிய புத்தகமாக நீங்கள் வெளியிட வேண்டும்.
இவ்வாறு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
- நான் கருணாநிதியின் வாரிசும் அல்ல. எம்.ஜி.ஆரின் வாரிசு அல்ல.
- ஒரே நாடு, ஒரே தேர்தல் நடக்கப்போவது கிடையாது.
சிவகங்கை:
சிவகங்கை சிவன் கோவில் அருகே நாம் தமிழர் கட்சியின் சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு பேசியதாவது:-
சுதந்திரத்திற்காக போராடிய வீரமங்கை வேலு நாச்சியாருக்கு சிவகங்கை அரண்மனை வாசலில் மட்டுமே சிலை உள்ளது. ஆனால் திராவிட கட்சி தலைவர்களுக்கு அனைத்து இடங்களிலும் சிலை வைத்துள்ளனர்.
மறைந்த கருணாநிதிக்கு ரூ.250 கோடியில் நினைவிடம் கட்டி உள்ளனர். ஆனால் வீரமங்கை வேலு நாச்சியாருக்கு நினைவு இடம் கோழிக்கூடு போல சிறிதாக உள்ளது.
நான் கருணாநிதியின் வாரிசும் அல்ல. எம்.ஜி.ஆரின் வாரிசு அல்ல. சாதாரண குடிமகனான நான் தமிழ் உணர்வுகளை தட்டியெழுப்பி 36 லட்சம் வாக்குகள் பெற்று, 3-வது பெரிய கட்சியாக வந்து உள்ளேன். நான் தான் புரட்சியாளர்.
என்னைப்போல் கொள்கைக்காக தனிக்கட்சி ஆரம்பித்து மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி, ஜெயலலிதா போட்டியில் இருந்தால் அவர்களுக்கு 4 ஓட்டுகள் கூட கிடைத்திருக்காது.
லட்டில் மாட்டுக் கொழுப்பு தடவி இருப்பதாக புதிய பிரச்சனை கிளப்பி உள்ளனர். நான் கொழுப்பு தடவி இருந்தாலும் சாப்பிடுவேன். இல்லாவிட்டாலும் சாப்பிடுவேன். இதுவரை யாரும் உயிரிழக்கவில்லையே. இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை மொட்டை அடித்து அனுப்புகின்றனர். அது பிரச்சனையாக தெரியவில்லை. லட்டு தான் பிரச்சனையாக தெரிகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
திருப்பத்தூரில் சீமான் நிருபர்களிடம் கூறுகையில், ஒரே நாடு, ஒரே தேர்தல் நடக்கப்போவது கிடையாது. மக்கள் பிரச்சனையை திசை திருப்புவதற்காக பா.ஜனதா இதனை கையில் எடுத்துள்ளது. பீகார், மேற்கு வங்காளத்தில் 7 கட்டமாக தேர்தல் நடத்தியவர்கள், இந்தியா முழுவதும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்த முடியாது என்றார்.
- பல்வேறு விஷயங்கள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
- முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ட உள்ளன.
சென்னை:
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தலைமையில் பொதுக்குழு கூட்டம் சென்னை, தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் தொடங்கியது.
இந்தக் கூட்டத்தில் மக்கள் நீதி மய்யத்தின் தேர்தல் நிலைப்பாடு, கூட்டணி மற்றும் கட்சியை பலப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
கட்சி தொடர்பான எந்த முடிவையும் எடுப்பதற்குரிய அதிகாரம் தலைவர் கமல்ஹாசனுக்கு மக்கள் நீதி மய்யம் கட்சியின் அனைத்து பொதுக்குழு உறுப்பினர்களாலும் ஏகமனதாக அளிக்கப்படுவது உட்பட முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ட உள்ளன.
இதில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுச்செயலாளர் ஆ.அருணாச்சலம், துணைத் தலைவர்கள் ஏ.ஜி.மவுரியா, ஆர்.தங்கவேலு, தலைமை நிலையச் செயலாளர் செந்தில் ஆறுமுகம், தொழில் முனைவோர் அணி மாநில ஒருங்கிணைப்பாளர் மயில்வாகனம் தணிகைவேலு, விழுப்புரம் மண்டலச் செயலாளர் ஆர்.பி. ஸ்ரீபதி, மீனவர் அணி செயலாளர் ஆர்.பிரதீப் குமார், ஊடகப் பிரிவு மாநில செயலாளர் முரளி அப்பாஸ் மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் என 1000 பேர் கலந்து கொண்டனர்.
- சுமார் 90 சதவிகித சாம்சங் ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை அறிவித்துத் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
- பேச்சுவார்த்தையின் மூலம் சுமூகத் தீர்வு ஏற்படுத்தி தர வேண்டும்.
சென்னை:
த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ஸ்ரீபெரும்புதூர் சாம்சங் இந்தியா எலக்ட்ரானிக்ஸ் பிரைவேட் லிமிடட் நிறுவனத்தின் உற்பத்தி ஆலை தொழிலாளர்கள் செப்டம்பர் 9-ந்தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை அறிவித்து 12 நாட்களுக்கு மேலாக தொடர் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். குறிப்பாக ஊதியத்தை உயர்த்தி வழங்கிட, தொழிற்சங்கத்திற்கு அங்கீகாரம் கிடைத்திட, 9 மணி நேரத்திற்கும் அதிகமாக நீளும் பணிநேரத்தைக் குறைத்திட உள்ளிட்ட நியாயமான பல கோரிக்கைகளை முன்வைத்து சுமார் 90 சதவிகித சாம்சங் ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை அறிவித்துத் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
சாம்சங் தொழிற்சாலை சம்பந்தமாக, தொழிலாளர்கள் போராட்டம் சம்பந்தமாக, தீபாவளி போனஸ் சம்பந்தமாக உடனடியாக தமிழக அரசின் சார்பில் ஒரு குழு, சாம்சங் நிறுவனத்தின் சார்பில் ஒரு குழு, தொழிலாளர்கள் சார்பில் ஒரு குழு அமைத்து முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். இப்பேச்சுவார்த்தையின் மூலம் சுமூகத் தீர்வு ஏற்படுத்தி தர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- சாஹிர், ரபீக் ஆகியோரை இருசக்கர வாகனத்தில் வந்த 10-க்கும் மேற்பட்ட கும்பல் ஒன்று கல், கட்டை உள்ளிட்ட ஆயுதங்களால் சரமாரி தாக்கியது பதிவாகி இருந்தது.
- ஜாமின் வழங்க கோரி பூந்தமல்லி நீதிமன்றத்தில் பாடகர் மனோவின் மகன்கள் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
பாடகர் மனோவின் மகன்களால் தாக்கப்பட்டதாக மதுரவாயல் ஆலப்பாக்கத்தைச் சேர்ந்த கிருபாகரன் என்ற வாலிபரும், 16 வயது சிறுவன் ஒருவரும் கடந்த வாரம் வளசரவாக்கம் காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தனர்.
மதுபோதையில் சிறுவர் உட்பட இரண்டு பேரை தாக்கியதாக மனோவின் மகன்கள் மற்றும் அவர்களது நண்பர்கள் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் விக்னேஷ், தர்மா ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும், தலைமறைவாக உள்ள மனோவின் மகன்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இதற்கிடையே கடந்த சில தினங்களுக்கு முன்பு பாடகர் மனோவின் மகன்கள் மீது ஒரு கும்பல் தாக்குதல் நடத்தும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. அதில் பாடகர் மனோ மகன்கள் சாஹிர், ரபீக் ஆகியோரை இருசக்கர வாகனத்தில் வந்த 10-க்கும் மேற்பட்ட கும்பல் ஒன்று கல், கட்டை உள்ளிட்ட ஆயுதங்களால் சரமாரி தாக்கியது பதிவாகி இருந்தது.
மனோவின் மகன்களும் எதிர்தரப்பால் தாக்கப்பட்ட வீடியோ வெளியான நிலையில், சம்பவம் நடந்த அன்று தன்னையும், தனது மகன்களையும் ஆயுதங்களைக் கொண்டு சிலர் தாக்கியதாக பாடகர் மனோவின் மனைவி ஜமீலா வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அதன் அடிப்படையில் தற்போது வளசரவாக்கம் போலீசார் தாக்குதல் நடத்திய 8 பேர் மீது ஆயுதங்களை கொண்டு தாக்குதல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து அந்த கும்பலை தேடி வருகின்றனர்.
இதனிடையே முன் ஜாமின் வழங்க கோரி பூந்தமல்லி நீதிமன்றத்தில் பாடகர் மனோவின் மகன்கள் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில், பாடகர் மனோவின் மகன்களான சாஹிர், ரஃபீக் ஆகியோருக்கு முன் ஜாமின் வழங்கப்பட்டுள்ளது.
30 நாட்கள் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையோடு பூந்தமல்லி நீதிமன்றம் முன்ஜாமின் வழங்கி உள்ளது.
- திருப்பதி தேவஸ்தானத்தில் பிரசாதம் தயாரிக்க 5 நிறுவனங்களிடமிருந்து டெண்டர் மூலம் நெய் கொள்முதல் செய்யப்படுகிறது.
- திருப்பதி தேவஸ்தானத்தில் பிரசாதம் தயாரிக்க 5 நிறுவனங்களிடமிருந்து டெண்டர் மூலம் நெய் கொள்முதல் செய்யப்படுகிறது. திருப்பதி தேவஸ்தானத்தில் பிரசாதம் தயாரிக்க 5 நிறுவனங்களிடமிருந்து டெண்டர் மூலம் நெய் கொள்முதல் செய்யப்படுகிறது. ஏ.ஆர். டெய்ரி நிறுவனத்தில் பால், நெய் பொருட்களின் மாதிரிகளை மத்திய உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சேகரித்தனர்.
திருப்பதி தேவஸ்தானத்தில் பிரசாதம் தயாரிக்க 5 நிறுவனங்களிடமிருந்து டெண்டர் மூலம் நெய் கொள்முதல் செய்யப்படுகிறது.
லட்டு தயாரிப்பில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் நெய்யின் தரம் சரியில்லை என கூறியதையடுத்து, கடந்த ஜூலை 6-ந்தேதி முதல் 12 -ந்தேதி வரை கொள்முதல் செய்யப்பட்ட நெய்யை குஜராத்தில் உள்ள தேசிய பால்வள மேம்பாட்டு வாரியத்திற்கு அனுப்பி வைத்தனர்.
பரிசோதனை முடிவில் தமிழகத்தில் இருந்து சப்ளை செய்யப்பட்ட தனியார் நிறுவனத்தின் நெயில் கலப்படம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. நெய் வினியோக நிறுவனங்களில் திண்டுக்கல் ஏ.ஆர். டெய்ரி நிறுவனமும் ஒன்றாகும்.
இந்நிலையில் திண்டுக்கல் ஏ.ஆர். டெய்ரி நிறுவனத்தில் பால், நெய் பொருட்களின் மாதிரிகளை மத்திய உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சேகரித்தனர்.
மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் சோதனை நடத்திய நிலையில் உணவு பாதுகாப்புத்துறையினரும் சோதனை நடத்த திட்டமிட்டுள்ளனர்.
திருப்பதி லட்டு தயாரிப்பதற்கு விலங்கு கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் மாதிரி சேகரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- தண்டையார்பேட்டையில் மீண்டும் மீண்டும் சாலைகள் தோண்டப்பட்டு சீரமைக்கும் பணி நடைபெறுவதாக தெருக்கள் மோசமான நிலையில் உள்ளன.
- மயிலாப்பூர், பெரம்பூர் பகுதிகளில் சாலைகள் வெட்டப்பட்டு சீரமைக்க கால தாமதம் ஆகிறது.
சென்னை:
சென்னையில் பல்வேறு பகுதிகளில் கடந்த 3 மாதங்களாக சாலைகள் வெட்டப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. பஸ் வழித்தட சாலைகள் மட்டுமின்றி உள்புற சாலைகளும் வெட்டப்பட்டதால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
வேளச்சேரியில் சாலை துண்டிப்பு மற்றும் மெதுவாக சீரமைப்பு பணி நடைபெறுவதாக புகார்கள் வந்தன. தி.நகர் பகுதியிலும் சாலை சீரமைப்பு பணிகள் தொடர்பாக பொதுமக்களிடம் இருந்து புகார் வந்தன.
அடையாறு கழிவுநீர் மற்றும் குடிநீர் கொண்டு செல்லும் பாதையில் பல இடங்களில் சாலை வெட்டப்பட்டதால் மோசமான நிலை அங்கு ஏற்பட்டது. தண்டையார்பேட்டையில் மீண்டும் மீண்டும் சாலைகள் தோண்டப்பட்டு சீரமைக்கும் பணி நடைபெறுவதாக தெருக்கள் மோசமான நிலையில் உள்ளன.
மயிலாப்பூர், பெரம்பூர் பகுதிகளில் சாலைகள் வெட்டப்பட்டு சீரமைக்க கால தாமதம் ஆகிறது. முகப்பேர், திருவொற்றியூரிலும் சாலைகளில் குழிகள் தோண்டப்பட்டு பல்வேறு பணிகள் நடப்பதால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுகிறது. கோடம்பாக்கத்தில் மந்தமான சீரமைப்பு பணிகளால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளன.
பருவமழை தொடங்க உள்ள நிலையில் அடிக்கடி சாலைகளை தோண்டுவதால் கடும் சிரமம் ஏற்படும் என்று பொதுமக்கள் பயப்படுகின்றனர்.
இதுகுறித்து மாநகராட்சி கமிஷனர் குமரகுருபரன் கூறுகையில், வடகிழக்கு பருவமழை காலம் நெருங்கி வருவதால் சென்னையில் 30-ந்தேதி முதல் புதிய சாலைகள் வெட்டுவதை நிறுத்த மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. புதிதாக சாலைகள் வெட்ட அனுமதிக்கப்படமாட்டாது என்றார்.
- ஆகஸ்டு மாத முதல் வாரத்தில் இருந்தே தங்கத்தின் விலையில் மாற்றம் ஏற்பட்டு விற்பனையாகி வருகிறது.
- சென்னையில் நேற்று தங்கம் விலை மீண்டும் உயர்வை கண்டது.
சென்னை:
சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலையில் அவ்வப்போது மாற்றம் ஏற்பட்டு விற்பனையாகி வருகிறது. அந்த வகையில், கடந்த ஜூலை மாதம் பட்ஜெட்டில் தங்கத்தின் இறக்குமதி மீதான வரி குறைக்கப்பட்டதால் பவுன் ரூ.2 ஆயிரத்து 200 வரை குறைந்தது. இது இல்லத்தரசிகள் மற்றும் நகைப் பிரியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
பின்னர், ஆகஸ்டு மாத முதல் வாரத்தில் இருந்தே தங்கத்தின் விலையில் மாற்றம் ஏற்பட்டு விற்பனையாகி வருகிறது.
படிப்படியாக தங்கத்தின் விலை அதிகரித்து மீண்டும் ரூ.54 ஆயிரத்தை தாண்டி பழைய நிலைக்கே வந்தது. அந்த வகையில், தங்கத்தின் விலை கடந்த 16-ந்தேதி புதிய உச்சத்தை தொட்டது. அன்றைய தினம் பவுன் ரூ.55 ஆயிரத்து 40-க்கு விற்பனையானது. பின்னர், தங்கத்தின் விலை சற்று குறைந்தது.
அந்த வகையில், சென்னையில் நேற்று தங்கம் விலை மீண்டும் உயர்வை கண்டது. அதன்படி, தங்கம் விலை நேற்று கிராமுக்கு ரூ.60 அதிகரித்து ரூ.6 ஆயிரத்து 885-க்கும், பவுனுக்கு ரூ.480 உயர்ந்து ரூ.55 ஆயிரத்து 80-க்கும் விற்பனையானது. இந்த மாதத்தில் 2-வது முறையாக நேற்று தங்கம் விலை மீண்டும் ரூ.55 ஆயிரத்தை தாண்டி விற்பனையானது. இதேபோல, வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1.50 உயர்ந்து, ரூ.97.50-க்கு விற்பனையானது.
இந்நிலையில் சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.600 உயர்ந்து ரூ.55,680-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.75 உயர்ந்து ரூ.6,960-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை கிராமுக்கு 50 காசுகள் உயர்ந்தது. வெள்ளி ஒரு கிராம் ரூ.98-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
- ரவுடி தாக்கியதில் காயம் அடைந்த ஏட்டு ராஜ்குமார் கோவை ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
- ரவுடி ஆல்வின் மீது 3 கொலை வழக்குகள், 4 கொலை முயற்சிகள் வழக்குகள் உள்பட மொத்தம் 13 வழக்குகள் உள்ளது.
கோவை:
கோவையில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 12-ந் தேதி பிரபல ரவுடியான சத்தியாபாண்டி என்பவரை ஒரு கும்பல் ஓடஓட விரட்டி துப்பாக்கியால் சுட்டு கொலை செய்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து சஞ்சய் ராஜா, கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடசேரி அடுத்த வாத்தியார் விளையை சேர்ந்த பிரபல ரவுடியான ஆல்வின் உள்பட 5 பேரை கைது செய்தனர். பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.
இந்த நிலையில் ஜெயிலில் இருந்த ஆல்வின் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நிபந்தனை ஜாமினில் வெளியில் வந்தார். ஜாமினில் வெளியில் வந்த பின்னர் அவர் கையெழுத்திடாமல் தலைமறைவாக இருந்தார்.
இதுதொடர்பான வழக்கு கோவை ஜே.எம்.3 கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் ஆல்வினை நேரில் ஆஜராகுமாறு கோர்ட்டு உத்தரவிட்டது. ஆனால் அவர் நீண்ட காலமாக கோர்ட்டில் ஆஜராகாமல் இருந்து வந்தார்.
இதையடுத்து ரவுடி ஆல்வினை பிடிக்க கோர்ட்டு பிடிவாரண்டு பிறப்பித்தது. இதனை தொடர்ந்து மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் ரவுடி ஆல்வினை பிடிக்க ரேஸ்கோர்ஸ் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் தலைமையில் ஏட்டுகள் சந்திரசேகர், ராஜ்குமார், சசி ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.
தனிப்படையினர், ரவுடி ஆல்வினை பல்வேறு இடங்களிலும் தேடி வந்தனர். இந்த நிலையில் ரவுடி ஆல்வின் கோவை கொடிசியா மைதான பகுதியில் பதுங்கி இருப்பதாக இன்று அதிகாலை தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
தகவலின் பேரில், சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
பின்னர், ரவுடி ஆல்வின் இருக்கும் இடத்தை போலீசார் சுற்றி வளைத்தனர். அவரை போலீசார் தங்களிடம் சரண் அடையுமாறு தெரிவித்தனர்.
போலீசார் தன்னை சுற்றி வளைத்ததை அறிந்ததும் ரவுடி ஆல்வின் அங்கிருந்து தப்ப முயன்றார். மேலும் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, தன் அருகே வந்தால் உங்களை கத்தியால் வெட்டி விடுவேன் என மிரட்டினார்.
அப்போது ஏட்டு ராஜ்குமார், ரவுடி ஆல்வினின் அருகே சென்று அவரை பிடிக்க முயன்றார். இதனால் ஆத்திரம் அடைந்த ரவுடி தான் வைத்திருந்த கத்தியால் போலீஸ்காரரை வெட்டினார். இதில் பலத்த காயம் அடைந்த அவர் அப்படியே தரையில் விழுந்தார்.
ரவுடி ஆல்வின் அங்கிருந்து ஓட முயன்றார். இதையடுத்து, சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன், பாதுகாப்புக்காக, தான் வைத்திருந்த துப்பாக்கியால் ரவுடி ஆல்வினின் கால் முட்டிகளில் சுட்டார். இதில் அவரது 2 கால் முட்டிகளிலும் குண்டு பாய்ந்து, ரத்தம் வெளியேறியது. வலியால் அலறி துடித்த ரவுடி ஆல்வின், ஓட முடியாமல் அங்கேயே தரையில் விழுந்தார்.
இதையடுத்து போலீசார் விரைந்து சென்று அவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களை பறிமுதல் செய்தனர்.
தொடர்ந்து காலில் குண்டுகள் பாய்ந்து காயம் அடைந்த ரவுடி ஆல்வினை காரில் ஏற்றி கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு அவருக்கு காலில் பாய்ந்த குண்டுகளை அகற்றி டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
சிகிச்சை முடிந்து, குணமாகியதும், அவரிடம் விசாரணை நடத்துவதற்கு போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
ரவுடி தாக்கியதில் காயம் அடைந்த ஏட்டு ராஜ்குமார் கோவை ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரை போலீஸ் உயர் அதிகாரிகள் சந்தித்து நலம் விசாரித்தனர்.
இதற்கிடையே ரவுடி சுட்டுபிடிக்கப்பட்ட கொடிசியா மைதான பகுதியில் துணை கமிஷனர் ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
போலீசார் துப்பாக்கியால் சுட்டுபிடித்த ரவுடி ஆல்வின் மீது 3 கொலை வழக்குகள், 4 கொலை முயற்சிகள் வழக்குகள் உள்பட மொத்தம் 13 வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
கோவையில் பிரபல ரவுடியை, போலீசார் துப்பாக்கியால் சுட்டுபிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- தமிழகத்தில் வரும் நாட்களில் வெயில் படிப்படியாக குறையும் என வானிலை மையம் தெரிவித்திருந்தது.
- சென்னை மீனம்பாக்கம், கிண்டி, அடையாறு போன்ற இடங்களில் அதிகாலை முதல் மழை பெய்து வருகிறது.
சென்னை வானிலை தினந்தோறும் மாறிமாறி வருகிறது. நேற்று முன்தினம் காலையில் லேசான மழை பெய்தது. அன்றைய தினம் பெரும்பாலான இடங்களில் மாலை வரை மேகமூட்டமாக காணப்பட்டது. இதனால் வெயில் தாக்கம் குறைந்து இதமாக இருந்தது.
ஆனால் நேற்று காலையில் இருந்து வெளியில் வாட்டி வதைத்தது. காற்றும் வீசாத காரணத்தினால் வீட்டில் இருக்க முடியவில்லை. ஒரே புழுக்கமாக இருந்தது. இந்த நிலையில் இன்று அதிகாலை முதல் சென்னையில் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது.
சென்னை கிண்டி, நுங்கம்பாக்கம், மீனம்பாக்கம், தரமணி, அடையாறு, மெரினா உள்ளிட்ட பகுதியில் இன்னும் மழை பெய்து கொண்டிருக்கிறது. இதனால் இன்று காலை சில்லென்று வானிலை நிலவுகிறது. அதேபோல் திருவள்ளூர் மாவட்டம் அம்பத்தூர், ஆவடி போன்ற இடங்களிலும் லேசான மழை பெய்து வருகிறது.
இதற்கிடையே வடக்கு அந்தமான் கடல் பகுதியில் ஏற்படும் வளி மண்டல சுழற்சியின் தாக்கத்தால் வங்கக்கடலில் நாளை மறுநாள் புதிதாக காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகும்' என இந்திய வானிலை துறை அறிவித்துள்ளது. இதனால் தமிழகத்தின் வட மாவட்டங்கள் உள்ளிட்ட பகுதிகளில் அடுத்து வரும் நாட்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தில் சில நாட்களாக வாட்டி எடுத்த வெயில் அடுத்து வரும் நாட்களில் படிப்படியாக குறையும். மேற்கு திசை காற்று மாறுபாடு காரணமாக தமிழகத்தில் ஒரு சில இடங்கள், புதுச்சேரியில் இன்று இடி மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இது செப்.26 வரை நீடிக்கும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.






