என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • கழகத்தின் போர்வாளான முரசொலி நாளேட்டின் ஆசிரியராகப் பொறுப்பேற்று தன் எழுத்துகளால் ஜனநாயகக் குரலாக ஒலித்தவர்.
    • என்னை நானே ஆற்றுப்படுத்த முடியாத நிலையில், கழகத்திலும் குடும்பத்திலும் யாருக்கு எப்படி ஆறுதல் சொல்லப் போகிறேன்.

    சென்னை:

    மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் மகள் செல்வியின் கணவரான முரசொலி செல்வம் வயது மூப்பு மற்றும் உடல் நலக்குறைவு காரணமாக பெங்களூருவில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் இன்று மரணம் அடைந்தார்.

    82 வயதான அவர் தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலியில் 50 ஆண்டுகளாக நிர்வாக ஆசிரியராக பணிபுரிந்துள்ளார். பெங்களூருவில் இருந்து சென்னைக்கு கொண்டு வரப்படும் முரசொலி செல்வத்தின் உடல் கோபாலபுரத்தில் உள்ள இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது.

    முரசொலி செல்வத்தின் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தில் கூறியிருப்பதாவது:-

    முத்தமிழறிஞர் தலைவர் கலைஞரின் அன்பு மருமகனும், அவரது மனசாட்சியான முரசொலி மாறனின் இளவலும், தங்கை செல்வியின் கணவருமான என் அன்புக்குரிய முரசொலி செல்வம் மறைந்தார் என்ற செய்தி இடி போல என் நெஞ்சத்தைத் தாக்கி, வேதனைக் குருதியை வடியச் செய்கிறது.

    கழகத்தின் போர்வாளான முரசொலி நாளேட்டின் ஆசிரியராகப் பொறுப்பேற்று தன் எழுத்துகளால் ஜனநாயகக் குரலாக ஒலித்தவர்.

    தலைவர் கலைஞர் நம்மை விட்டுப் பிரிந்த பிறகு, நான் சாய்வதற்குக் கிடைத்த கடைசித் தோளை, கொள்கைத் தூணை இழந்து நிற்கிறேன்.

    என்னை நானே ஆற்றுப்படுத்த முடியாத நிலையில், கழகத்திலும் குடும்பத்திலும் யாருக்கு எப்படி ஆறுதல் சொல்லப் போகிறேன்.

    செல்வமே.. முரசொலி செல்வமே.. பண்பின் திருவுருவமே... திராவிட இயக்கத்தின் படைக்கலனே... கழகத்தின் கொள்கைச் செல்வமே.. நெஞ்சிலும் நினைவிலும் என்றும் நிலைத்திருப்பீர் என்று தெரிவித்துள்ளார்.

    • ஏரியின் கொள்ளளவு 500 மில்லியன் கன அடி ஆகும்.
    • ஏரியில் தண்ணீரை சேமித்து வைப்பதில் சிரமம் ஏற்படும்.

    ஊத்துக்கோட்டை:

    பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பாக்கம் ஏரிகளில் சேமித்து வைக்கும் தண்ணீரைக் கொண்டு சென்னை நகர மக்களின் குடிநீர் பூர்த்தி செய்யப்பட்டு வந்தது. சென்னையில் மக்கள் தொகை பெருக்கத்துக்கு ஏற்ப குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு ஊத்துக்கோட்டை அருகே உள்ள கண்ணன்கோட்டை, தேர்வாய்கண்டிகை கிராமங்களில் உள்ள 2 ஏரிகளை ஒன்றிணைத்து சுமார் 1600 ஏக்கர் நிலப்பரப்பில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ரூ.350 கோடி செலவில் புதிய ஏரிஅமைக்க உத்தரவிட்டார். இதைத்தொடரந்து சென்னைக்கு குடிநீர் வழங்கும் 5-வது ஏரியாக கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரி கடந்த 2020-ம் ஆண்டுஉருவாக்கப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது.

    இந்த ஏரியின் கொள்ளளவு 500 மில்லியன் கன அடி ஆகும். இதில் சேமிக்கப்படும் தண்ணீரை தேவைப்படும் போது பூண்டி ஏரிக்கு அனுப்பி வைக்கும் விதத்தில் திட்டம் வகுக்கப்பட்டது. அதன்படி தேர்வாய்கண்டிகை ஏரியில்ருந்து சுமார் 9 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ஊத்துக்கோட்டை அம்பேத்கார் நகர் பகுதியில் உள்ள கிருஷ்ணா கால்வாய் வரை ராட்சத குழாய்கள் அமைக்கப்பட்டது. கண்ணன்கோட்டை ஏரியில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் இந்த ராட்சத குழாய் வழியாக அம்பேத்கர் நகரில் உள்ள கிருஷ்ணா கால்வாயில் வந்து சேர்ந்து அதன் பிறகு பூண்டி ஏரிக்கு சென்றடையும் வகையில் உள்ளது.

    கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரி உருவான பின்னர் கடந்த ஆண்டு ஏரியில் இருந்து சோதனையை முறையில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்தத் தண்ணீர் தங்கு தடையின்றி ஊத்துக்கோட்டை அருகில் அம்பேத்கர் நகரில் உள்ள கிருஷ்ணா கால்வாயில் வந்து சேர்ந்தது.

    கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரியில் தற்போதைய நிலவரப்படி மொத்த கொள்ளளவான 500 மில்லியன் கனஅடியில் 301 மி.கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது. விரைவில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் ஏரிக்கு நீர்வரத்து அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ஏரியில் தண்ணீரை சேமித்து வைப்பதில் சிரமம் ஏற்படும்.

    இதனை கருத்தில் கொண்டு கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரியில் இருந்து பூண்டி ஏரிக்கு முதன் முதலாக இன்று தண்ணீர் திறக்கப்பட்டது. 50 கன அடி நீர் ராட்சத குழாய்கள் மூலம் பாய்ந்து கிருஷ்ணா கால்வாயில் சேர்ந்து பூண்டி ஏரிக்கு சென்றடைகிறது. வரும் நாட்களில் தண்ணீர் திறப்பு மேலும் அதிகரிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். ஏற்கனவே கிருஷ்ணா நதிநீர் பங்கீடு திட்டத்தின் படி ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே உள்ள கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் வந்து கொண்ட இருக்கிறது. பூண்டிஏரியின் உயரம் 35 அடி. இதில் 3.231 டி.எம்.சி. தண்ணீரை சேமித்து வைக்கலாம். இன்று காலை நிலவரப்படி ஏரியின் நீர்மட்டம் 19.88 அடியாக பதிவானது. 240 மில்லியன் கன அடி தண்ணீர் இருப்பு உள்ளது. பூண்டி ஏரியில் இருந்து செம்பரம்பாக்கம் ஏரிக்கு இணைப்பு கால்வாய் வழியாக வினாடிக்கு 250 கனஅடியும், சென்னை குடிநீர் வாரியத்திற்கு பேபி கால்வாயில்17 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

    • உள்நாட்டு விமானங்களின் டிக்கெட் கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது.
    • சென்னை - கோவை இடையே விமான டிக்கெட் கட்டணம் ரூ.3,290-ல் இருந்து ரூ.10,996-ஆக அதிகரித்துள்ளது.

    சென்னை:

    ஆயுத பூஜை மற்றும் தொடர் விடுமுறையை ஒட்டி சொந்த ஊர்களுக்கு மக்கள் படையெடுத்து வரும் நிலையில், சென்னையில் உள்நாட்டு விமானங்களின் டிக்கெட் கட்டணம் பல மடங்கு உயர்ந்துள்ளது.

    சென்னையில் இருந்து மதுரை, திருச்சி, கோவை, சேலம், தூத்துக்குடி செல்லும் விமானங்களின் டிக்கெட் கட்டணம் பல மடங்கு அதிகரித்துள்ளது.

    தமிழகத்தில் தற்போது நவரத்திரி, ஆயுத பூஜை, விஜயதசமி போன்ற தொடர் விடுமுறைகள் காரணமாக சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் பயணிகள் கூட்டம் அதிகரித்துள்ளது. இதனால் உள்நாட்டு விமானங்களின் டிக்கெட் கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது.

    சென்னை - மதுரை வழக்கமான விமான கட்டணம் ரூ.4,200 என இருந்த நிலையில் தற்போது ரூ.12,026-லிருந்து ரூ.18,626-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    சென்னை - தூத்துக்குடி விமான டிக்கெட் கட்டணம் ரூ.5006-ல் இருந்து ரூ.11,736 முதல் ரூ.13,626 வரை அதிகரித்துள்ளது.

    சென்னை - கோவை இடையே விமான டிக்கெட் கட்டணம் ரூ.3,290-ல் இருந்து ரூ.10,996-ஆக அதிகரித்துள்ளது.

    சென்னை - சேலம் இடையே வழக்கமான டிக்கெட் கட்டணம் ரூ.3317-ல் இருந்து 10,792-ஆக அதிகரித்துள்ளது.

    தொடர் விடுமுறை காரணமாக சொந்த ஊர்களுக்கு செல்பவர்களை குறிவைத்து கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக பயணிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    • அனைத்து நிறுவனங்களிலும் உள்ளூர் புகார்குழு ஏற்படுத்துமாறு தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
    • அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்களில் உள்ள புகார் குழு ஏற்படுத்தப்பட்ட வேண்டும்.

    சென்னை:

    சென்னை மாவட்ட கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    சென்னை மாவட்டத்தில் 10-க்கும் மேற்பட்ட பெண்கள் பணிபுரியும் நிறுவனங்கள் மற்றும் அரசு அலுவலகங்கள், அரசு சாரா நிறுவனங்கள், வியாபார நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள், மென் பொருள் தொழில்நுட்ப நிறுவனம் போன்ற நிறுவனங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் (தடுப்பு, தடை மற்றும் தீர்வு) சட்டம் 2013 ன் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

    பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்களை தடுக்க அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்களில் உள்ள புகார் குழு ஏற்படுத்தப்பட்ட வேண்டும். இக்குழுவில் குறைந்தபட்சம் 5 உறுப்பினர்களை கொண்டு அமைக்க வேண்டும். அவற்றில் அதிகபட்சமாக (3) பெண் உறுப்பினர்கள் இருக்கவேண்டும்.

    இச்சட்டத்தின் கீழ் புகார் அளிக்க ஏதுவாக நிறுவனம் புகார்பெட்டி ஒன்றை அமைக்க வேண்டும். புகார்கள் பெறப்பட்டவுடன் உள்ளக புகார்குழு உறுப்பினர்களை கொண்டு விசாரணை மேற்கொள்ளப்படும். 10 க்கும் குறைவாக உள்ள பெண் பணியாளர்கள் அல்லது வீட்டு வேலை செய்பவர்கள் பாதிக்கப்பட்டால் அந்நபர் தனது முதலாளிக்கு எதிராக நேரடியாக மாவட்டங்களில் செயல்படும் உள்ளூர்புகார் குழுவில் மனு அளிக்க சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

    உள்ளூர் புகார்குழுவில் பதிவு செய்யப்படும் புகார் மற்றும் நடவடிக்கை குறித்து வருடத்திற்கு ஒரு முறை மாவட்ட சமூகநல அலுவலகத்தில் அறிக்கையாக ஒவ்வொரு நிறுவனமூம் வருடாந்திர அறிக்கையாக வழங்கப்பட வேண்டும்.

    உள்ளக புகார்குழு அமைக்கப்படாமல் இருந்தாலோ அல்லது புகார் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படாமல் இருந்தாலோ, சம்மந்தப்பட்ட நிறுவனங்களின் உரிமம் அல்லது பதிவு ரத்து செய்யப்படும்.

    இப்புகார்குழு ஏற்படுத்தாத நிறுவனங்களின் உரிமையாளருக்கு 50 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் செலுத்த நேரிடும். பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்பாக புகார்களை www.shebox.nic.in என்ற இணையதள முகவரியில் புகார்களை பதிவு செய்யலாம். எனவே, சென்னை மாவட்டத்தில் செயல்படும் அனைத்து நிறுவனங்களிலும் உள்ளூர் புகார்குழு ஏற்படுத்துமாறு தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை வருவதால் வெளியூர்களுக்கு செல்பவர்கள், பஸ், ரெயில்களில் நேற்று முதல் பயணத்தை தொடங்கி விட்டனர்.
    • தீபாவளிக்கு இன்னும் 2 வாரம் இருப்பதால் முன்பதிவு மேலும் அதிகரிக்கும்.

    சென்னை:

    ஆயுத பூஜை, விஜயதசமி பண்டிகைகள் நாளை (வெள்ளிக்கிழமை)யும் அதனை தொடர்ந்து சனிக்கிழமையும் கொண்டாடப்படுகிறது. மறுநாள் 13-ந் தேதி ஞாயிற்றுக்கிழமை அரசு பொது விடுமுறை நாளாகும். தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை வருவதால் வெளியூர்களுக்கு செல்பவர்கள், பஸ், ரெயில்களில் நேற்று முதல் பயணத்தை தொடங்கி விட்டனர்.

    பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் அனைத்திற்கும் விடுமுறை விடப்பட்டதால் இன்று வெளியூர் பயணம் அதிகரிக்கும் என்பதால் அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பாக 2 ஆயிரம் சிறப்பு பஸ்கள் இன்று காலை முதல் இயக்கப்படுகிறது.

    கிளாம்பாக்கம், கோயம்பேடு, மாதவரத்தில் வழக்கமாக இயக்கப்படும் 2024 பஸ்களுடன் சேர்த்து கூடுதலாக 2 ஆயிரம் பஸ்கள் என மொத்தம் 4 ஆயிரம் பேருந்துகள் இயக்கப்படுகிறது. இன்று பயணம் செய்ய 41 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளனர். இதில் சென்னையில் இருந்து வெளியூர் செல்ல மட்டும் 24 ஆயிரம் பேர் முன்பதிவு செய்து இருக்கிறார்கள்.

    ஞாயிற்றுக்கிழமை தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. அவற்றில் பயணம் செய்ய 34 ஆயிரம் பேர் முன்பதிவு செய்து காத்திருக்கிறார்கள்.

    சென்னைக்கு வருவதற்கு மட்டும் 25 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளனர். விடுமுறை முடிந்து சென்னை, பெங்களூரு, கோவை உள்ளிட்ட பல பகுதிகளுக்கு பயணம் செய்ய அதிகளவில் முன்பதிவு நடப்பதாக அதிகாரி தெரிவித்தார்.

    தீபாவளி பண்டிகை இந்த மாதம் 31-ந் தேதி (வியாழக்கிழமை) கொண்டாட இருப்பதால் 29, 30 ஆகிய இரண்டு நாட்களுக்கு பயணம் செய்ய 60 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளனர். தீபாவளிக்கு இன்னும் 2 வாரம் இருப்பதால் முன்பதிவு மேலும் அதிகரிக்கும்.

    தீபாவளி சிறப்பு பஸ்கள் தமிழ்நாடு முழுவதும் இயக்கப்படுவது குறித்து வருகிற 15-ந் தேதி அமைச்சர் சிவசங்கர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.

    போக்குவரத்து கழக அதிகாரிகள், போலீசாருடன் நடைபெறும் ஆலோசனைக்கு பிறகு சிறப்பு பஸ்கள் எத்தனை நாட்கள் இயக்கப்படுகிறது. எந்தெந்த நாட்களில் இயக்கப்படுகிறது. இயக்கப்படும் பஸ்களின் எண்ணிக்கை என்ன? சென்னையில் இருந்து இயக்கப்படும் சிறப்பு பஸ்கள் எத்தனை என்பது போன்ற விவரங்களை அமைச்சர் அறிவிக்கிறார்.

    இந்த ஆண்டு கிளாம்பாக்கத்தில் இருந்து பெரும்பாலான சிறப்பு பஸ்கள் இயக்கப்படுவதால் அங்கு செல்வதற்கு தேவையான இணைப்பு பஸ்கள் குறித்தும் அறிவிப்பு வெளியாகும்.

    • மாணவர்களுக்கு ஆலோசனை வழங்க 14417 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்.
    • இதுவரை 224 பள்ளிகளில் ஆய்வு மேற்கொண்டு கலந்துரையாடி உள்ளார்.

    சென்னை:

    பொது தேர்வு எழுதும் மாணவர்கள் தேர்வின் மீதான பயம் காரணமாக பல்வேறு தவறான முடிவுகளை எடுக்கிறார்கள். தற்கொலை செய்து கொ்ளவது, வீட்டை விட்டு ஓடிப்போவது என மாணவர்கள் மேற்கொள்ளும் செயல்களை தடுப்பதற்கும் அவர்களுக்கு உரிய ஆலோசனைகளை வழங்குவதற்கும் 14417 என்கிற கட்டணமில்லா தொலைபேசி எண் செயல்பட்டு வருகிறது.

    கடந்த 2018-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட இந்த எண் மாணவர்களுக்கு மிகவும் பயன் உள்ளதாகவே செயல்பட்டு வருகிறது.


    இந்த எண்ணை மாணவர்கள் மத்தியில் மேலும் கொண்டு சேர்க்க வேண்டும் என்கிற நல்ல எண்ணத்தில் பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் 14417 எண்கள் பொறிக்கப்பட்ட மஞ்சள் நிற டி-சர்ட்டை அணிந்து வருகிறார். டி-சர்ட்டின் பின்பகுதியில் இந்த எண் பொறிக்கப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக கல்வி துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது;-

    பள்ளி கல்வி துறையின் தகவல் மையம் போலவும் மாணவ-மாணவிகளுக்கு உரிய மனநல ஆலோசனையை வழங்குவதற்கும் செயல்பட்டுவரும் 14417 என்கிற எண்கள் பொறிக்கப்பட்ட டி.சர்ட்டை அமைச்சர் அன்பில் மகேஷ் கடந்த 6 மாதமாக அணிந்து வருகிறார்.

    கடந்த 3 ஆண்டுகளாக பள்ளிகளில் ஆய்வு மேற் கொண்டு வரும் அவர் இது வரை 224 பள்ளிகளில் ஆய்வு மேற்கொண்டு மாணவ-மாணவிகளுடன் கலந்துரையாடியுள்ளார். விரைவில் முதல் அமைச்சரின் கொளத்தூர் தொகுதியில் தனது ஆய்வை அமைச்சர் முடிக்க உள்ளார்.


    மாணவர்களின் மனதில் 14417 என்கிற எண் முழுமையாக பதிய வேண்டும் என்ற எண்ணத்தில்தான் அந்த எண்கள் பொறிக்கப்பட்ட டி.சர்ட்டை அமைச்சர் அணிந்து வருகிறார். இது நல்ல பலனையும் கொடுத்துள்ளது.

    மனநல ஆலோசனை தொடர்பான எண் எது என்று தெரியாமல் இருந்த மாணவ, மாணவிகளின் மனதிலும் அந்த எண் பதிவாகி இருக்கிறது.

    மாணவர்கள் தங்களுக்கு தேவைப்படும் அத்தனை தகவல்களையும் இந்த எண்ணில் தொடர்பு கொண்டு கேட்டு தெரிந்து கொள்ளலாம்.

    இவ்வாறு அந்த அதிகாரி தெரிவித்தார்.

    • முரசொலியின் நிர்வாக ஆசிரியராக இருந்தவர் முரசொலி செல்வம்.
    • முரசொலி செல்வத்தின் உடல் இன்று பிற்பகல் சென்னைக்கு கொண்டு வரப்படுகிறது.

    முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் மருமகனான முரசொலி செல்வம் (82) வயது மூப்பு, உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். முரசொலி செல்வம் மாரடைப்பு காரணமாக பெங்கரூரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி முரசொலி செல்வம் காலமானார்.

    முரசொலியின் நிர்வாக ஆசிரியராக இருந்தவர் முரசொலி செல்வம். முரசொலி நாளிதழை மேம்படுத்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக உழைத்தவர். முரசொலி செல்வம் முரசொலி மாறனின் சகோதரருமாவார். முரசொலி செல்வத்தின் உடல் இன்று பிற்பகல் சென்னைக்கு கொண்டு வரப்படுகிறது. கோபாலபுரம் இல்லத்தில் கட்சித்தொண்டர்களின் அஞ்சலிக்காக முரசொலி செல்வத்தின் உடல் வைக்கப்பட உள்ளது.

    • தமிழக மீனவர்கள் வேதனை அடைந்துள்ளனர்.
    • மீனவர்களின் மீன்பிடி வலைகளை துண்டித்ததற்கு நஷ்ட ஈடு பெற்றுத்தரவும் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.

    சென்னை:

    த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் மற்றும் கோட்டைப்பட்டினம் மீனவர்கள் 21 பேரை இலங்கை கடற்படையினர் அவர்களது விசைப்படகுகளுடன் சிறைப்பிடித்துச் சென்றதால் தமிழக மீனவர்கள் வேதனை அடைந்துள்ளனர்.


    மேலும் நாகை மாவட்ட வெள்ளப்பள்ளம் மற்றும் புஷ்பவனம் மீனவ கிராமத்தைச் சேர்ந்த மீனவர்கள் கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்த போது இலங்கை கடற்கொள்ளையர்கள் மீனவர்களின் மீன்பிடி வலைகளை துண்டித்து எடுத்துச் சென்றனர்.

    மத்திய அரசு இலங்கை அரசுடன் பேசி இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களையும், விசைப்படகுகளையும் மீட்கவும், இலங்கை கடற்கொள்ளையர்கள் மீனவர்களின் மீன்பிடி வலைகளை துண்டித்ததற்கு நஷ்ட ஈடு பெற்றுத்தரவும் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். இனிமேல் தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையினரின் கைது நடவடிக்கைகள் தொடரக்கூடாது என்பதை மத்திய அரசு இலங்கை அரசுக்கு கண்டிப்போடு தெரிவிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • நெல்லை மாவட்டத்தில் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் பிற்பகலில் கனமழை பெய்தது.
    • ஓட்டப்பிடாரத்தில் 30 மில்லி மீட்டர் மழை பதிவாகியது.

    நெல்லை:

    நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் நேற்று காலையில் ஓரளவு வெயில் அடித்து வந்த நிலையில் பிற்பகலில் திடீரென வானில் கருமேக கூட்டங்கள் திரண்டன. தொடர்ந்து மாவட்டங்கள் முழுவதும் கனமழை பெய்ய ஆரம்பித்தது.

    நெல்லை மாவட்டத்தில் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் பிற்பகலில் கனமழை பெய்தது. பெரும்பாலான இடங்களில் இடி- மின்னலுடன் கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதை காண முடிந்தது.

    சில பகுதிகளில் தாழ்வான இடங்களில் மழை நீர் குளம் போல் தேங்கியது. புறநகர் பகுதியை பொருத்தவரை கண்ணடியன் கால்வாய் பகுதியில் சுமார் 2 மணி நேரத்துக்கு மேலாக கனமழை பெய்தது. அங்கு அதிகபட்சமாக 6.5 சென்டிமீட்டர் மழை பெய்தது.

    மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி அமைந்துள்ள அம்பாசமுத்திரம், களக்காடு சுற்றுவட்டார பகுதிகளிலும் கனமழை பெய்தது. பெரும்பாலான இடங்களில் மாலையில் தொடங்கி இரவு வரையிலும் சாரல் மழை பெய்து கொண்டே இருந்தது.

    அணைகளை பொருத்த வரை சேர்வலாறு, பாபநாசம் அணையில் நீர்பிடிப்பு பகுதிகளில் தலா 2 மில்லி மீட்டர் மழை பெய்தது. மணிமுத்தாறு அணை பகுதியில் 4 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. களக்காட்டில் 44 மில்லி மீட்டர் மழை பெய்தது.

    அம்பை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த மழையால் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியது. அங்கு அதிகபட்சமாக 26 மில்லி மீட்டர் மழை பதிவாகியது. நாங்குநேரியில் லேசான சாரல் மழை விட்டு விட்டு பெய்த வண்ணம் இருந்தது.

    மாநகர் பகுதியில் சுமார் 2 மணி நேரம் பெய்த மழையின் காரணமாக பெரும்பாலான இடங்களில் தண்ணீர் தேங்கியது. பாளை மனக்காவலம் பிள்ளை ஆஸ்பத்திரியில் முட்டு அளவிற்கு மழை நீர் தேங்கியது. அவற்றை வெளியேற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர். பாளையில் 4 மில்லி மீட்டர் மலை பதிவாகியது. மாநகரில் இடி-மின்னல் காரணமாக சில இடங்களில் மின் தடையும் ஏற்பட்டது.

    நெல்லை வண்ணார்பேட்டை பிரிவு மின்வாரிய அலுவலகத்திற்கு உட்பட்ட தெற்கு புறவழிச்சாலையில் இன்சுலேட்டர் சேதமடைந்தது. அதை மாற்றும் பணி நடைபெற்றுக் கொண்டிருப்பதால் இன்று பகலில் வண்ணார்பேட்டை தெற்கு மற்றும் வடக்கு பைபாஸ் சாலை, நெல்லை சந்திப்பு பகுதிகளில் மின் விநியோகம் இல்லை. மின் ஊழியர்கள் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    தென்காசி மாவட்டத்தை பொருத்தவரை ஆய்க்குடி, தென்காசி பகுதிகளில் சாரல் மழை பெய்தது. அணைகளின் நீர்பிடிப்பு பகுதியில் மழை பரவலாக பெய்தது. ராமநதி அணை பகுதியில் கனமழை கொட்டியது. அங்கு அதிகபட்சமாக 12 மில்லி மீட்டர் மழை பெய்தது. கடனா அணையின் நீர்பிடிப்பு பகுதியில் சாரல் அடித்தது. கருப்பாநதி, குண்டாரில் 2 மில்லி மீட்டரும், அடவிநயினார் அணையில் 3 மில்லி மீட்டரும் மழை பதிவாகியது. சங்கரன்கோவில், சிவகிரி சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்தது. அதிகபட்சமாக சிவகிரியில் 20 மில்லி மீட்டரும், சங்கரன்கோவிலில் 17 மில்லி மீட்டரும் மழை பதிவாகி உள்ளது.

    தூத்துக்குடி மாவட்டத்தை பொறுத்தவரை ஓட்டப்பிடாரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்தது. சில இடங்களில் இடி-மின்னலுடன் மழை பெய்தது. அதிகபட்சமாக ஓட்டப்பிடாரத்தில் 30 மில்லி மீட்டர் மழை பதிவாகியது.

    • கடைசி மூன்று நாட்களில் சரஸ்வதி தேவியையும் மக்கள் வணங்கி வழிபடுவார்கள்.
    • தொழில் சார்ந்த கருவிகளை தெய்வத்தின் திருவடிகளில் படைத்து வழிபடும் நாள் ஆயுத பூஜை திருநாள்.

    அதிமுக பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    நவராத்திரி எனப்படும் ஒன்பது திருநாட்களின் இறுதியில், ஒன்பதாவது நாளான ஆயுத பூஜை மற்றும் பத்தாவது நாளான விஜயதசமி திருநாளை பக்தியுடனும், மகிழ்ச்சியுடனும் கொண்டாடும் தமிழக மக்கள் அனைவருக்கும் என் உளங்கனிந்த இனிய ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

    ஆதி பராசக்தியை துர்க்கை வடிவில் வழிபட்டால் வீரம் பிறக்கும்; லட்சுமி வடிவில் வழிபட்டால் செல்வம் பெருகும்; சரஸ்வதி வடிவில் வழிபட்டால் கல்வி சிறந்தோங்கும் என்கிற நம்பிக்கையின் அடிப்படையில், நவராத்திரி பண்டிகையின் முதல் மூன்று நாட்களில் துர்க்கா தேவியையும்; அடுத்த மூன்று நாட்களில் லட்சுமி தேவியையும்; கடைசி மூன்று நாட்களில் சரஸ்வதி தேவியையும் மக்கள் வணங்கி வழிபடுவார்கள்.

    உழைப்பின் உன்னதத்தை அனைவரும் அறிந்து, செய்யும் தொழிலை தெய்வமென மதித்து, அன்னை பராசக்தியின் அருளை வேண்டி, தொழில் சார்ந்த கருவிகளை தெய்வத்தின் திருவடிகளில் படைத்து வழிபடும் நாள் ஆயுத பூஜை திருநாள் ஆகும்.

    ஊக்கமுடன் கூடிய உழைப்பே வறுமையை அகற்றி, செல்வத்தைப் பெருக்கி, வாழ்வில் வளம் சேர்க்கும் என்பதை உணர்த்தும் திருநாளாக இந்தப் பண்டிகை விளங்குகிறது.

    விஜயதசமி நாளில் ஆரம்பிக்கும் அத்தனை காரியங்களும் வெற்றியில் முடியும் என்ற நம்பிக்கையில் மக்கள் அன்னை மகா சக்தியை வழிபட்டு நற்காரியங்களைத் தொடங்கும் வெற்றித் திருநாளே விஜயதசமி பண்டிகையாகும்.

    மக்கள் அனைவரும் கல்வியிலும், செல்வத்திலும், துணிவிலும் சிறந்து விளங்கவும், அவர்களது வாழ்வில் வெற்றிகள் குவியவும் அருள் புரியுமாறு, உலகிற்கெல்லாம் தாயாக விளங்கும் அன்னை பராசக்தியைப் போற்றி வணங்கி, அனைவருக்கும் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித் தலைவி அம்மா ஆகியோரது வழியில், ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி நல்வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை உரித்தாக்கிக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

    • 2 பைபர் படகுகளில் இலங்கையைச் சேர்ந்த கடற்கொள்ளையர்கள் 6 பேர் வந்தனர்.
    • மீனவர்கள் இது குறித்து வேதாரண்யம் கடற்கரை காவல்துறையில் புகார் அளித்தனர்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் செருதூர் மீனவகிராமத்திலிருந்து சத்தியசீலன் என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் அதே பகுதியை சேர்ந்த விஜயன், ரமணன், விக்னேஷ் குமார், ரீகன் ஆகிய 4 பேரும் கடந்த 8-ந் தேதி கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

    அவர்கள் நேற்று இரவு கோடியக்கரையில் இருந்து தென்கிழக்கே 15 நாட்டிகள் கடல் மைல் தூரத்தில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு 2 பைபர் படகுகளில் இலங்கையைச் சேர்ந்த கடற்கொள்ளையர்கள் 6 பேர் வந்தனர்.

    அவர்கள் நாகை மீனவர்களிடம் கத்தியை காட்டி மிரட்டி அவர்களை தாக்கி சுமார் 250 கிலோ மதிப்புள்ள மீன்பிடி வலை, செல்போன் 1 ஜிபிஎஸ் 1, டீசல் சுமார் 100 லிட்டர் மற்றும் ரேசன் பொருட்களை பறித்துச் சென்று விட்டனர்.

    இந்நிலையில் கோடியக்கரை திரும்பிய மீனவர்கள் இது குறித்து வேதாரண்யம் கடற்கரை காவல்துறையில் புகார் அளித்தனர். பின்னர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.

    இலங்கை கடற்படையினர் மற்றும் இலங்கை கடற்கொள்ளையர்கள் தொடர்ந்து நமது மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தி வருவது மீனவர்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இதனை தடுக்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • அறநிலையத்துறை தீட்சிதர்கள் 2 ஆயிரம் ஏக்கரை விற்றுவிட்டதாக கூறுகின்றனர்.
    • தமிழகத்திலேயே உண்டியல் இல்லாத கோவில் நடராஜர் கோவில்.

    சிதம்பரம்:

    சிதம்பரத்தில் பா.ஜ.க. மாநில ஒருங்கிணைப்புக்குழு அமைப்பாளர் எச்.ராஜா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    2014 உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி சிதம்பரம் நடராஜர் கோவிலை நிர்வாகம் செய்ய பொதுதீட்சிதர்களுக்கு உரிமை அளித்துள்ளது. இதில் அறநிலையத்துறை தலையிடக்கூடாது. அவர்களுக்கு அதிகாரம் இல்லை என உச்சநீதிமன்ற தீர்ப்பு உள்ளது.

    இருந்தாலும் இந்த கோவிலின் சொத்துக்கள் 1976-ம் ஆண்டிலிருந்து தனி தாசில்தாரால் பராமரித்து நிர்வகிக்கப்படுகிறது. இந்த நிலங்கள் பொதுதீட்சிதர்களிடம் கிடையாது.

    2006-ல் உயர்நீதிமன்ற நீதிபதி பானுமதி, இந்த கோவில் நிலங்கள் 3 ஆயிரம் ஏக்கரிலிருந்து கோவிலுக்கு வரும் நிதி சொற்பமாக உள்ளது என்று தீர்ப்பில் கூறியுள்ளார். அரசு கோவில் நிலங்களில் இருந்து வருடத்திற்கு ரூ.90 ஆயிரம் கொடுக்கிறது.

    தற்போது திடீரென அறநிலையத்துறை தீட்சிதர்கள் 2 ஆயிரம் ஏக்கரை விற்றுவிட்டதாக கூறுகின்றனர்.

    1976- ஆண்டிலிருந்து நிலங்கள் உங்களிடம் உள்ளது. எப்படி விற்க முடியும். இடையில் 2006-லிருந்து 2014 வரை அரசாங்கத்திடம் இருந்தது. 2006-ல் கருணாநிதிஆட்சி பொறுப்பேற்ற பின்னர் பொதுதீட்சிதர்களிடம் இருந்து, அரசாங்கம் எடுத்துக்கொண்டது.

    2014 உச்சநீதிமன்ற தீர்ப்பிற்கு பிறகுதான் மீண்டும் தீட்சிதர்கள் வசம் கோவில் நிர்வாகம் வந்தது. ஆனால் இன்னமும் நிலங்கள் தனி தாசில்தார் பொறுப்பில் உள்ளது. அப்படி இருக்கும் போது எப்படி விற்க முடியும். இதற்கான ஆதாரத்துடன் கோவில் வக்கீல் சந்திரசேகர் மற்றும் தீட்சிதர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.

    அறநிலையத்துறை கொள்கை விளக்க குறிப்பில் 4 லட்சத்து 76 ஆயிரத்து 581 ஏக்கர் நிலங்கள் எங்களிடம் உள்ளது என சட்டப்பேரவையில் அமைச்சர் சேகர்பாபு அளித்துள்ளார். 22,600 கட்டடங்கள், 33,600 மனைக்கட்டுகள் உள்ளது என கூறுகிறார்.

    இவ்வளவு கோவில் சொத்துக்களை வைத்துக் கொண்டு தற்போதைய நிலவரப்படி வரி வசூலிக்க வேண்டும். அப்படியென்றால் வருடத்திற்கு ரூ.8 ஆயிரம் கோடிக்கு மேல் வருமானம் வர வேண்டும். ஆனால் வசூலிக்கவில்லை.

    7-6-2021 சுயமோட்டோ வழக்கில் நீதிபதி மகாதேவன், ஆதிகேசவலு ஆகியோர் வரி வசூலிக்கவில்லை என தீர்ப்பு அளித்துள்ளனர். ஏன் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. எப்படியாவது பொய்யை சொல்லி நடராஜர் கோவிலை அபகரிக்க வேண்டும் என்ற நோக்கமாகும்.

    அரசு கோவிலை அபகரிக்க சதித்திட்டம் தீட்டுகிறது என குற்றம் சாட்டுகிறோம். நடராஜர் கோவிலில் தரிசன கட்டணம் கிடையாது. அபிஷேக கட்டணம் கிடையாது. உண்டியல் கிடையாது. அரசு தனி தாசில்தாரிடம் உள்ள நிலங்களை எப்படி தீட்சிதர்கள் விற்க முடியும். தமிழகத்திலேயே உண்டியல் இல்லாத கோவில் நடராஜர் கோவில். தரிசனம் கட்டணம் இல்லாத கோவில்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×