என் மலர்
மகாராஷ்டிரா
- குடிநீர் வினியோகம் ரத்து செய்யப்படும் என மாநகராட்சி அறிவித்து உள்ளது.
- பொதுமக்கள் தண்ணீரை சேமித்து சிக்கனமாக பயன்படுத்துமாறு மாநகராட்சி கேட்டு கொண்டு உள்ளது.
மும்பை:
மும்பை பவாய் ஆங்கர் பிளாக் முதல் அந்தேரி மரோஜி தண்ணீர் சுரங்கம் வரை மாநகராட்சி குடிநீர் குழாய் பதிக்கும் பணி வருகிற 5-ந் தேதி (புதன்கிழமை) காலை 11 மணிக்கு தொடங்கி மறுநாள் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது. இந்த பணிகள் நடைபெறும் நேரத்தில் மும்பை பாண்டுப், குர்லா, தாராவி, அந்தேரி, பாந்திரா ஆகிய பகுதிகளில் குடிநீர் வினியோகம் ரத்து செய்யப்படும் என மாநகராட்சி அறிவித்து உள்ளது.
அதன்படி வருகிற 5-ந் தேதி பாண்டுப்பில் உள்ள ஸ்ரீராம்பாடா, கின்டிபாடா, துல்சிபாடா, மிலிந்த் நகர், நரதாஸ் நகர், சிவாஜிநகர், மரோதாஹில், பாண்டுப் மேற்கு, கவுதம்நகர், பில்டர்பாடா, மகாத்மாபுலே நகர், பாஸ்போலிகாவ், தானாஜிவாடி பம்பிங் நிலையம், மொரார்ஜி நகர், சர்வோதயா நகர், காவ்தேவி ஹில், டெம்பிபாடா, ரமாபாய் நகர், சாய்ஹில், பாண்டுப் நீர்தேக்கம், குர்லா தெற்கு பகுதியில் உள்ள காஜூபாடா, சுந்தர்பாக், நவ்பாடா, ஹலாவ்புல், நியுமில் ரோடு, கபாடியா நகர், நியுமகாடா காலனி உள்ளிட்ட பகுதிகள்.
தாராவியில் தாராவி மெயின் ரோடு, கணேஷ் மந்திர் ரோடு, திலிப் கதம் ரோடு, ஜாஸ்மின் மில் ரோடு, மாகிம் பாடக், ஏ.கே.ஜி. நகர்.
அந்தேரியில் விஜய்நகர் மரோல், மிலிட்டரி ரோடு, வசந்த் ஒசிஸ், காவ்தேவி, மரோல் விலேஜ், சர்ச் ரோடு, ஹில் வியு சொசைட்டி, கதம்வாடி உள்ளிட்ட பகுதிகளில் குடிநீர் வினியோகம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
6-ந் தேதி பாண்டுப் குவாரி ரோடு, பிரதாப்நகர் ரோடு, ஜங்கல் மங்கல் ரோடு, தெம்பிவாடா, காவ்தேவி, தத்தா மந்திர் ரோடு, ராம் நகர் பம்பிங் நிலையம், அனுமன்ஹில், அசோக் ஹில், நியு அனுமன் நகர், குர்லா பகுதியில் 90 அடி சாலை, குர்லா-அந்தேரி ரோடு, ஜெரிமெரி, காட்கோபர்- அந்தேரி லிங் ரோடு, சாகிவிகார், மார்வா தொழில்பேட்டை, சத்யாகர் பைப்லைன், தாராவியில் ஜாஸ்மின் மில் ரோடு, மாட்டுங்கா லேபர் கேம்ப், சந்த் ரோகிதாஸ் ரோடு, 60 அடி சாலை, 90 அடி சாலை, சந்த்கக்கயா மார்க், எம்.பி.நகர் தோர்வாடா, எம்.ஜி. ரோடு, தாராவி லூப் ரோடு, ஏ.கே.ஜி.நகர், அந்தேரி பகுதியில் ஓம்நகர், காந்திநகர், ராஜஸ்தான் சொசைட்டி, சாய் நகர், சகார் விலேஜ், பைப்லைன் பகுதிகளில் குடிநீர் வினியோகம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதேபோல 5, 6-ந்தேதி ஆகிய 2 நாட்களிலும் அந்தேரி சர்வதேச விமான நிலையம், சீப்ஸ், முல்காவ் டோங்கிரி, எம்.ஐ.டி.சி., கோன்டிவிடா, மகேஷ்வரி நகர், உபாதய்நகர், தாகுர் சால், சால்வே நகர், சக்காலா, இந்திரநகர், ஜே.பி. நகர், கபிர்நகர், பார்சிவாடா, ஏர்போர்ட் ஏரியா, பி.டி. காலனி, பாந்திரா டெர்மினஸ், ஆகிய பகுதிகளில் குடிநீர் வினியோகம் செய்யப்படாது. எனவே பொதுமக்கள் தண்ணீரை சேமித்து சிக்கனமாக பயன்படுத்துமாறு மாநகராட்சி கேட்டு கொண்டு உள்ளது.
- முதலில் ஆடிய இந்தியா 181 ரன்களைக் குவித்தது.
- ஷிவம் துபே, பாண்ட்யா அதிரடியில் மிரட்டினர்.
மும்பை:
இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதும் 4-வது டி20 போட்டி மகாராஷ்டிர மாநிலம் புனேவில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, இந்திய அணி முதலில் பேட் செய்தது. ஆட்டத்தின் 2-வது ஓவரில் சாகிப் மகமூது ரன் எதுவும் கொடுக்காமல் 3 விக்கெட்டை கைப்பற்றினார்.
4-வது விக்கெட்டுக்கு அபிஷேக் சர்மாவுடன் ரிங்கு சிங் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி 45 ரன்கள் சேர்த்த நிலையில் அபிஷேக் சர்மா 29 ரன்னில் அவுட்டானார். ரிங்கு சிங் 30 ரன்னில் ஆட்டமிழந்தார்.
ஷிவம் துபேவுடன், ஹர்திக் பாண்ட்யாவுடன் இணைந்தார். இந்த ஜோடி ஆரம்பம் முதலே வீறு கொண்டு எழுந்தது. கிடைத்த பந்துகளை சிக்சர், பவுண்டரிகளாக விளாசினர். ஹர்திக் பாண்ட்யா 27 பந்துகளில் அரை சதம் கடந்தார்.
6-வது விக்கெட்டுக்கு 87 ரன்கள் சேர்த்த நிலையில் பாண்ட்யா 53 ரன்னில் வெளியேறினார். ஷிவம் துபே 53 ரன் எடுத்துள்ளார்.
இறுதியில், இந்திய அணி 9 விக்கெட்டுக்கு 181 ரன்களைக் குவித்துள்ளது.
இங்கிலாந்து சார்பில் சாகிப் மகமூது 3 விக்கெட்டும், ஓவர்டன் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 182 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து விளையாடுகிறது.
- டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பவுலிங் தேர்வு செய்துள்ளது.
- ஒரே ஓவரில் ரன் எதுவும் கொடுக்காமல் இந்தியாவின் 3 விக்கெட் கைப்பற்றினார்.
மும்பை:
இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதும் 4-வது டி20 போட்டி மகாராஷ்டிர மாநிலம் புனேவில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பவுலிங் தேர்வு செய்துள்ளது. இதையடுத்து, இந்திய அணி முதலில் பேட் செய்தது.
தொடக்க ஆட்டக்காரர்களாக சஞ்சு சாம்சன், அபிஷேக் சர்மா களமிறங்கினர். முதல் ஓவரில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 12 ரன்கள் எடுத்தது.
இரண்டாவது ஓவரை சாகிப் மகமூது வீசினார். முதல் பந்தில் சஞ்சு சாம்சன் ஒரு ரன்னில் அவுட்டானார். அடுத்த பந்தில் திலக் வர்மா கேட்ச் கொடுத்து டக் அவுட்டானார். ஹாட்ரிக் முயற்சியை தடுத்த சூர்யகுமார் யாதவ், 6-வது பந்தில் ஆட்டமிழந்தார்.
இப்படி ஒரே ஓவரில் ரன் எதுவும் கொடுக்காமல் இந்தியாவின் முன்னணி வீரர்களை வெளியேற்றி அதிர்ச்சி அளித்தார் சாகிப் மகமூது.
- 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி 2-1 என முன்னிலை வகிக்கிறது.
- இரு அணிகள் மோதும் 4வது டி20 போட்டி மகாராஷ்டிராவின் புனேவில் இன்று தொடங்கியது.
மும்பை:
இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி 2-1 என முன்னிலை வகிக்கிறது.
இந்நிலையில், இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் 4-வது டி20 போட்டி மகாராஷ்டிர மாநிலம் புனேவில் இன்று தொடங்கியது.
டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பவுலிங் தேர்வு செய்துள்ளது. இதையடுத்து, இந்திய அணி முதலில் பேட் செய்கிறது.
இந்திய அணியில் 3 மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஷமி, வாஷிங்டன் சுந்தர், துருவ் ஜுரல் ஆகியோருக்கு பதிலாக ரிங்கு சிங், சிவம் துபே, அர்ஷ்தீப் சிங் இடம்பிடித்துள்ளனர்.
இந்திய அணி விவரம் வருமாறு:
சஞ்சு சாம்சன், அபிஷேக் சர்மா, திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), ரிங்கு சிங், ஹர்திக் பாண்ட்யா, சிவம் துபே, அக்சர் படேல், அர்ஷ்தீப் சிங், ரவி பிஷ்னோய், வருண் சக்கரவர்த்தி
இங்கிலாந்து அணி விவரம் வருமாறு:
பில் சால்ட், பென் டக்கெட், ஜோஸ் பட்லர் (கேப்டன்), ஹாரி புரூக், லிவிங்ஸ்டன், ஜேக்கப் பெத்தேல், ஓவர்டன், ஜோப்ரா ஆர்ச்சர், அதில் ரஷீத், , சாகிப் மகமூது, பிரைடன் கார்ஸ்.
- மகாராஷ்டிராவில் 2023 ஆம் ஆண்டு பள்ளி மாணவர்களுக்கு முட்டை வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
- முட்டை சாப்பிடாத மாணவர்களுக்கு வாழைப்பழம் வழங்கப்பட்டு வந்தது.
தமிழ்நாட்டில் 30 வருடங்களுக்கும் மேலாக பள்ளிகளில் மாணவர்களுக்கு மதிய உணவுடன் முட்டை வழங்கப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு அரசை பின்பற்றி பல மாநிலங்களும் ஊட்டச்சத்திற்காக பள்ளி மாணவர்களுக்கு முட்டை வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியது.
அவ்வகையில் மகாராஷ்டிராவில் 2023 ஆம் ஆண்டு நவம்பரில் பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவுடன் முட்டை வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்படி மாணவர்களுக்கு வாரம் ஒரு முட்டை வழங்கப்பட்டு வந்தது. அதே சமயம் முட்டை சாப்பிடாத மாணவர்களுக்கு வாழைப்பழம் வழங்கப்பட்டு வந்தது.
அரசுப் பள்ளிகளில் படிக்கும் 24 லட்சம் மாணவர்களுக்கு வாரத்திற்கு ஒரு முட்டை வழங்குவதற்கு மாநில அரசு ஒரு வருடத்திற்கு ரூ.50 கோடி செலவு செய்கிறது.
அரசின் இந்த திட்டத்திற்கு வலதுசாரி அமைப்புகள் கடும் எதிர்ப்புகளை தெரிவித்ததை அடுத்து, 40% பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் பள்ளிகளுக்கு முட்டை வழங்கப்படாது என்று அறிவிக்கப்பட்டது.
மேலும் அக்சய பாத்ரா என்ற என்.ஜி.ஓ. மூலம் வழங்கப்படும் பள்ளிகளிலும் மாணவர்களுக்கு முட்டை வழங்கப்பட்டது அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், அரசுப் பள்ளிகளுக்கான மதிய உணவுடன் முட்டை மற்றும் சர்க்கரை வழங்குவதற்கான நிதியை நிறுத்துவதாக மகாராஷ்டிரா அரசு அறிவித்துள்ளது.
மகாராஷ்டிராவிக்ரு முன்னதாக மத்தியப்பிரதேசம், கோவா மாநிலங்களில் முட்டை வழங்கும் திட்டம் கைவிடப்பட்டது. அதே சமயம் தென்னிந்திய மாநிலங்களில் மாணவர்களுக்கு வழங்கப்படும் முட்டைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.
- அதானியின் இளைய மகனான ஜீத் அதானி அடுத்த மாதம் திருமணம் நடைபெறவுள்ளது.
- ஜீத் அதானி தனது வருங்கால மனைவி திவா ஷாவுடன் பொது இடங்களுக்கு சென்று வருகிறார்.
இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரர் அதானி. அவரின் இளைய மகனான ஜீத் அதானிக்கும் திவா ஜெய்மின் ஷாவிற்கும் அடுத்த மாதம் திருமணம் நடைபெறவுள்ளது.
திருமணத்திற்கு முன்பாக ஜீத் அதானி தனது வருங்கால மனைவியுடன் பொது இடங்களுக்கு சென்று வருகிறார்.
இந்நிலையில், இந்த ஜோடி மும்பை சர்வதேச விமான நிலையத்தில் உள்ள மிட்டி கஃபேவிற்கு ஒன்றாக சென்றுள்ளனர். மாற்றுத் திறனாளிகளால் நடத்தப்படும் இந்த கஃபேவில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு தங்களது திருமண பத்திரிகையை அவர்கள் வழங்கியுள்ளனர். மேலும், ஊழியர்களுடன் சேர்ந்து ஜீட் அதானி - திவ்யா ஷா ஜோடி கேக் வெட்டி உற்சாகமாக கொண்டாடியுள்ளனர்.
2023 ஆண்டு ஜூலை மாதம் இந்த மிட்டி கஃபேவை ஜீத் அதானி தான் திறந்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனையடுத்து, மிட்டி கஃபே நிறுவனரான அலினா ஆலம், ஜீத் அதானி - திவா ஜெய்மின் ஷா ஜோடிக்கு நன்றி கூறியதோடு அவர்களின் திருமணத்திற்கு வாழ்த்தும் தெரிவித்துள்ளார்.
- நடிகர் சைஃப் அலி கான் வீட்டில் கடந்த 16-ந்தேதி நடந்த கொள்ளை முயற்சியில் அவர் கத்தியால் தாக்கப்பட்டார்.
- பாந்த்ரா வீட்டிற்கு வெளியே நிற்க வேண்டாம்.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பை பாந்த்ராவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த பிரபல இந்தி நடிகர் சைஃப் அலி கான் வீட்டில் கடந்த 16-ந் தேதி நடந்த கொள்ளை முயற்சியில், அவர் 6 முறை கத்தியால் குத்தப்பட்டார். லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. 5 நாள் சிகிச்சைக்கு பிறகு அவர் வீடு திரும்பினார்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வங்கதேச நாட்டை சேர்ந்த முகமது ஷரிபுல் இஸ்லாம் என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில் சைஃப் அலி கான் மற்றும் கரீனா கபூர் கான் தங்கள் மகன்களான தைமூர் அலி கான் மற்றும் ஜஹாங்கிர் அலி கானை போட்டோ எடுப்பதை தவிர்க்குமாறு புகைப்படக்காரர்களை (paparazzi) வலியுறுத்தி உள்ளனர்.
மேலும், பாந்த்ரா வீட்டிற்கு வெளியே நிற்க வேண்டாம் என்றும், வெளியே செல்லும்போதும் (அ) வீட்டிற்கு திரும்பும்போதும் அவர்களை புகைப்படம் எடுக்க வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டனர்.
- சோனோகிராபி செய்தபோது அவரின் 'கருவில் கரு' வளருவது கண்டறியப்பட்டது.
- இதுவரை உலகில் வெறும் 200 பேருக்கு மட்டுமே இந்த நிலை உண்டாகியது.
மகாராஷ்டிராவில் கர்ப்பிணி பெண்ணின் கருவிலுள்ள குழந்தைக்குள் கரு வளரும் அரிதினும் அரிதான நிலையை மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர்.
மகாராஷ்டிராவில் புல்தானா மாவட்டத்தின் அரசு பெண்கள் மருத்துவமனையில் 35 வார [9 மாத] கர்ப்பிணியான 32 வயது பெண் ஒருவருக்கு சோனோகிராபி செய்தபோது அவரின் 'கருவில் கரு' [Foetus inside foetus] வளருவது கண்டறியப்பட்டது.
அதாவது பெண்ணின் வயிற்றுக்குள் உண்டாகியுள்ள குழந்தையின் உடலினுள் மற்றொரு முழு வளர்ச்சியடையாத கரு உருவாகி உள்ளது. இதுகுறித்து அந்த மருத்துவமனையின் மகப்பேறு மருத்துவர் பிரசாத் அகர்வால் கூறுகையில், ஆரம்பத்தில் நான் ஆச்சரியமடைந்தேன், பின்னர் கவனமாக ஸ்கேனை மறுபரிசீலனை செய்தேன்.
இது முந்தைய சோனோகிராஃபியில் தவறவிடப்பட்டது. ஏனெனில் இது மிகவும் அரிதான நிலை, இதுபோன்ற ஒரு நிலை இருக்கும் என்று யாரும் கற்பனை கூட செய்ய முடியாது. எனவே, நான் இரண்டு மருத்துவர்களிடம் விரிவான ஆலோசனைக்கு பின் அதை உறுதி செய்தேன் என்று தெரிவித்தார்.

மேலும், குழந்தை பிறந்த பின்னரே இந்த நிலை பெரும்பாலும் கண்டறியப்படும். ஆனால் இப்பெண்ணுக்கு பிரசவத்துக்கு முன்னரே கண்டறியப்பட்டுள்ளது.
இது 5 லட்சத்தில் ஒருவருக்கு மட்டும் நிகழக்கூடிய அரிய வகையான மருத்துவ நிலை. இதுவரை உலகில் வெறும் 200 பேருக்கு மட்டுமே இந்த நிலை உண்டாகியது. அதில் இந்தியாவில் 15-20 பேரில் மட்டுமே இந்த நிலை பதிவாகியது என்று தெரிவித்தார்.
இந்த நிலைக்கான சரியான காரணம் முழுமையாக புரிந்து கொள்ளப்படவில்லை, ஆனால் இது ஒரே மாதிரியான இரட்டையர்களின் வளர்ச்சியின் போது நிகழும் ஒழுங்கின்மையின் விளைவு என நம்பப்படுகிறது.

இதற்கிடையே அந்த பெண் பாதுகாப்பான பிரசவத்திற்காக சத்திரப்பதி சம்பாஜி நகர் பகுதியிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
- ஸ்ரீ சித்திவிநாயக கணபதி கோயில் அறக்கட்டளை (SSGTT) அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
- பக்தர்கள் இந்திய பாணி உடைகளை அணிந்து வர ஊக்குவிக்கப்படுகிறது.
மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் பிரபாதேவி அருகே பிரசித்தி பெற்ற சித்திவிநாயகர் கோவில் அமைந்துள்ளது. ஆண்டுதோறும் இங்கு விமரிசையாக கொண்டாடப்படும் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு உலகெங்கிலும் இருந்து பக்தர்கள் வருகை தருவார்கள்.
பாலிவுட் பிரபலங்கள் முதல் அரசியல் தலைவர்கள் வரை இக்கோவிலுக்கு பிரதானமாக வருகை தந்து வழிபாடு நடத்துவது வழக்கம். ஆண்டு முழுவதிலும் பக்தர்கள் இங்கு வருகை தந்தவண்ணம் உள்ளனர். இந்நிலையில் பக்தர்களுக்கு ஆடை உள்ளிட்ட விஷயங்களில் சித்திவிநாயகர் கோவில் நிர்வாகம் புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

இதுதொடர்பாக ஸ்ரீ சித்திவிநாயக கணபதி கோயில் அறக்கட்டளை (SSGTT) வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
"வெட்டப்பட்ட அல்லது கிழிந்த துணியுடன் கூடிய கால்சட்டை அணிந்த பக்தர்கள், குட்டைப் பாவாடைகள் அல்லது உடல் உறுப்புகளை வெளிப்படுத்தும் ஆடைகளை அணிந்து வருபவர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்" என்று கூறப்பட்டுள்ளது. புதிய ஆடை கட்டுப்பாடு அடுத்த வாரம் முதல் அமலுக்கு வருகிறது.

பக்தர்கள் இந்திய பாணி உடைகளை அணிந்து வர ஊக்குவிக்கப்படுகிறது. பொருத்தமற்ற உடையில் வருகை தருவோர் குறித்து பக்தர்கள் சார்ப்பில் கோயில் அறக்கட்டளைக்குப் பல புகார்கள் வந்ததை அடுத்து கோயிலின் புனிதத்தைக் காக்கும் வகையில் ஆடைக் கட்டுப்பாட்டை அமல்படுத்தக் கோயில் அறக்கட்டளை முடிவு செய்தது.
- ஆனால் இதை பள்ளி நிர்வாகம் மூடி மறைக்க முயன்றுள்ளது.
- இதனை சிறுமி வகுப்பு ஆசிரியையிடம் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிராவில் 7 ஆம் வகுப்பு மாணவியை உடன் படிக்கும் சக மாணவன் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ய திட்டம் தீட்டிய சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
மகாராஷ்டிர மாநிலம் புனேவில் டவுண்ட் டெசில் [Daund Tehsil] பகுதியில் செயல்பட்டுவரும் செயின்ட். செபாஸ்டின் ஆங்கில வழி தனியார் பள்ளியில் 2 மாதங்களுக்கு முன் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. 7 ஆம் வகுப்பு மாணவன் அவனது ரிப்ரோட் கார்டில் திருட்டுத்தனமாகப் பெற்றோரின் கையெழுத்தை போடுவதை அதே வகுப்பில் படிக்கும் சிறுமி பார்த்துள்ளார். இதனை சிறுமி வகுப்பு ஆசிரியையிடம் தெரிவித்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த சிறுவன், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ய சொல்லி 9 ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவனிடம் அதற்கு கட்டணமாக 100 ரூபாய் கொடுத்துள்ளான். ஆனால் அந்த மூத்த மாணவன் இந்த திட்டத்தை பள்ளி நிர்வாகத்திடம் சென்று சொல்லியுள்ளான்.
விஷயம் அறிந்த சிறுமியின் பெற்றோர்கள் பல முறை இதுகுறித்து நடவடிக்கை எடுக்க பள்ளி நிர்வாகத்திடம் முறையிட்டுள்ளனர்.
ஆனால் இதை பள்ளி நிர்வாகம் மூடி மறைக்க முயன்றுள்ளது. சிறுவனை கண்டித்து அனுப்பிவிட்டோம் என பூசி முழுகியுள்ளது. இதனால் பெற்றோர் கடந்த நவம்பர் 23 ஆம் தேதி போலீசிடம் சென்றுள்ளனர். நீண்ட தாமதத்திற்கு பின் கடந்த ஞாயிற்றுக்கிழமை[ஜனவரி 26] போலீசார் எப்ஐஆர் பதிந்துள்ளனர்.
சிறார் நீதிச் சட்டம் பிரிவு 75 உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் விஷயத்தை மறைக்க முயன்ற பள்ளியின் தலைமையாசிரியர் மற்றும் 2 ஆசிரியர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கொலைக்கு திட்டம் தீட்டிய சிறுவனுக்கு இன்னும் 12 வயது ஆகாததாலும், சிறார் நீதிச் சட்டம், 12 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு எதிரான குற்றவியல் நடவடிக்கையை அனுமதிக்காததாலும் அவனுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
- 2 சிறுவர்கள் உள்பட 3 பேரை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.
- ஆசிரியை போலீசில் புகார் அளித்தார்.
மும்பை:
மும்பையை சேர்ந்த ஓய்வுபெற்ற 67 வயது ஆசிரியை ஒருவருக்கு, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 16-ந்தேதி செல்போனில் வீடியோ அழைப்பு ஒன்று வந்தது. அந்த அழைப்பை ஆசிரியை ஏற்று பேசினார். அப்போது, எதிர்முனையில் போலீஸ் சீருடையில் தோன்றிய 2 பேர் தங்களை மும்பை சைபர் பிரிவு போலீஸ் அதிகாரி என அறிமுகப்படுத்தி கொண்டனர்.
பின்னர் அவர்கள் ஆசிரியையிடம் உங்கள் வங்கிக்கணக்கில் இருந்து சட்டவிரோதமாக அதிகளவில் பணம் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. எனவே உங்களை டிஜிட்டல் கைது செய்யப்போகிறோம் என மிரட்டி உள்ளனர்.
இந்த வழக்கில் இருந்து தப்பிக்க பணத்தை உடனடியாக தங்களுக்கு அனுப்புமாறு கட்டாயப்படுத்தினர். இதனால் செய்வதறியாது திகைத்த ஆசிரியை தனது நிரந்தர வைப்பு தொகையில் இருந்த ரூ.5 கோடியே 26 லட்சம் மற்றும் கிரெடிட் கார்டில் இருந்து ரூ.21 லட்சத்தை எடுத்து அவர்கள் தெரிவித்த வங்கி கணக்கிற்கு அனுப்பி வைத்தார்.
இதன் பின்னர் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ஆசிரியை போலீசில் புகார் அளித்தார். இதில், டிஜிட்டல் கைது என்ற பெயரில் ஆசிரியையை மிரட்டி பணம் பறித்தது மும்பையை சேர்ந்த சபீர் அன்சாரி(வயது39) மற்றும் 2 சிறுவர்கள் உள்பட 3 பேரையும் போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.
- மாணவி படிப்பில் சிறந்து விளங்கிய போதும் ஆன்லைன் விளையாட்டில் ஆர்வமாக இருந்து உள்ளார்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மும்பை:
'மரணத்துக்கு பிறகு என்ன நடக்கும்?' என்பதை இணையதளத்தில் தேடிய ரிசர்வ் வங்கி உயர் அதிகாரியின் ஒரே மகளான பிளஸ்-2 மாணவி கழுத்தை அறுத்து தற்கொலை செய்துகொண்ட அதிர்ச்சி சம்பவம் நடந்து உள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தின் 2-வது நிர்வாக தலைநகராக கருதப்படும் நாக்பூரில் உள்ள சத்ரபதி நகரில் ரிசர்வ் வங்கியின் மண்டல இயக்குனர் ஒருவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
இவருக்கு 17 வயதில் ஒரே மகள் இருந்தார். சிறுமி நாக்பூரில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.
அவர் படிப்பில் சிறந்து விளங்கி உள்ளார். இந்தி, மராத்தி, ஆங்கிலம், ஜெர்மன் என 12 மொழிகளை கற்று தேர்ந்தவராக இருந்து இருக்கிறார்.
நேற்று அதிகாலை மாணவியின் தாய் அவரது படுக்கை அறைக்கு சென்றார். அப்போது மாணவி ரத்த வெள்ளத்தில் கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக குடும்பத்தினர் மாணவியை அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு தூக்கி சென்றனர். அங்கு மாணவியை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறினர்.
தகவல் அறிந்து சென்ற போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில், மாணவி கல்லால் செய்யப்பட்ட கத்தியால் கை, கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சி தகவல் தெரியவந்தது. மேலும் போலீசார் மாணவியின் தற்கொலை குறித்து விசாரித்தபோது நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு அதிர்ச்சி தகவல்கள் வெளியானது.
மாணவி படிப்பில் சிறந்து விளங்கிய போதும் ஆன்லைன் விளையாட்டில் ஆர்வமாக இருந்து உள்ளார். மேற்கத்திய கலாசாரத்திலும் அதீத ஆர்வம் காட்டி உள்ளார். நாட்கள் செல்ல செல்ல செல்போனில் மூழ்கிய மாணவி, ஆன்லைன் விளையாட்டுக்கு அடிமையாகி விட்டார். வெளிநாட்டு கலாசாரம் பற்றியும் ஆன்லைனில் அதிகம் தேடிப்பார்த்து இருக்கிறார்.
இதையடுத்து மாணவிக்கு விபரீத சிந்தனைகள் உருவாகின. 'மரணத்துக்கு பிறகு என்ன நடக்கும்?' என்பதை தெரிந்து கொள்வதில் மாணவி அதீத ஆர்வம் காட்டினார். இதனை ஆன்லைனில் பார்த்து தெரிந்து கொண்டு இருக்கிறார்.
சமீபத்தில் அவர் ஆன்லைனில் கற்காலத்தில் மனிதர்கள் வேட்டையாட பயன்படுத்தும் கல்லால் செய்யப்பட்ட கத்தியை ஆர்டர் செய்தார். அந்த கத்தியால் தான் அவர் தற்கொலை செய்து உள்ளார். மாணவி கத்தியை பயன்படுத்தி கையின் மணிக்கட்டு பகுதியில் 5 முறை அறுத்து உள்ளார். இறுதியில் அவர் கழுத்தை அறுத்து தற்கொலை செய்தது தெரியவந்து உள்ளது.
மரணத்துக்கு பிறகு என்ன நடக்கும் என பிளஸ்-2 மாணவி ஒருவர் ஆன்லைனில் தேடிப்பார்த்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஒரே மகளை இழந்த மாணவியின் பெற்றோர் மீள முடியாத துயரத்திற்கு தள்ளப்பட்டு உள்ளனர். இந்த சம்பவம் குறித்து நாக்பூர் தன்தோலி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தற்கொலை செய்து கொண்ட பிளஸ்-2 மாணவியின் வீட்டில் இருந்து ஜெர்மன் மொழியில் எழுதப்பட்ட தற்கொலை கடிதத்தை போலீசார் கைப்பற்றி உள்ளனர். அந்த கடிதம் 4 பக்கத்தில் எழுதப்பட்டுள்ளது. அதில் மரணம் மீதான ஈர்ப்பு, வெளிநாட்டு சித்தாந்தம், நாசிசம், ரஷிய கலாசாரம், மெட்டா பிசிக்ஸ் பற்றி மாணவி குறிப்பிட்டு இருந்ததாக கூறப்படுகிறது.






