என் மலர்tooltip icon

    மகாராஷ்டிரா

    • மத்திய சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறை மந்திரி நாராயண் ரானே.
    • நாராயண் ரானேவுக்கு ரூ.10 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

    மும்பை :

    மத்திய சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறை மந்திரியும், மகாராஷ்டிராவை சேர்ந்த பா.ஜனதா மூத்த தலைவருமான நாராயண் ரானேக்கு சொந்தமாக மும்பை ஜூகு கடற்கரை பகுதியில் 8 மாடி பங்களா வீடு உள்ளது. இந்த பங்களாவில் சட்டவிரோத கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட்டு இருப்பது சிவசேனா தலைமையிலான ஆட்சியின்போது கடந்த பிப்ரவரி மாதம் தெரியவந்தது. இதையடுத்து நாராயண் ரானேயின் பங்களாவில் சட்டவிரோத கட்டுமானத்தை இடிக்க மும்பை மாநகராட்சி உத்தரவிட்டிருந்தது. ஆனால் வீட்டில் மேற்கொள்ளப்பட்ட சட்டவிரோத கட்டுமான பணிகளை சீரமைக்க அனுமதி கோரி தாக்கல் செய்த விண்ணப்பத்தை பரிசீலிக்க மும்பை மாநகராட்சிக்கு உத்தரவிடகோரி மும்பை ஐகோர்ட்டில் நாராயண் ரானே தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

    நாராயண் ரானே பங்களா தொடர்பான வழக்கு நேற்று ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. மனுவை நீதிபதிகள் ஆர்.டி. தகானுகா, கமல் கட்டா ஆகியோர் விசாரித்தனர். விசாரணைக்கு பிறகு அவர்கள் அதிரடி உத்தரவை பிறப்பித்தனர்.

    இதுதொடர்பான உத்தரவில் நீதிபதிகள் கூறியதாவது:-

    அனுமதிக்கப்பட்ட திட்டம் மற்றும் சட்ட விதிகளை மீறி மனுதாரர் பெரிய அளவில் சட்டவிரோத கட்டுமான பணிகளை மேற்கொண்டு இருக்கிறார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. சட்டவிரோத பணிகளை ஒழுங்குப்படுத்த அனுமதித்தால், அது சட்ட விதிமீறல்களை ஊக்குவிப்பதாகவும், மும்பையில் சட்டவிரோத கட்டுமான பணிகள் அச்சமின்றி எந்த எல்லைக்கும் மேற்கொள்ளப்படுவதற்கு அழைப்பு விடுப்பது போல ஆகிவிடும். மனுதாரர் பங்களாவில் எப்.எஸ்.ஐ. எனப்படும் கட்டுமான பரப்பளவு மற்றும் கடல்சார் ஒழுங்குமுறை விதிகள் மீறப்பட்டுள்ளது. எனவே பங்களாவில் மேற்கொள்ளப்பட்டுள்ள சட்டவிரோத கட்டுமானங்களை 2 வாரங்களில் மாநகராட்சி இடிக்க வேண்டும்.

    இவ்வாறு நீதிபதிகள் தங்களது உத்தரவில் தெரிவித்தனர்.

    மேலும் அவர்கள் நாராயண் ரானேவுக்கு ரூ.10 லட்சம் அபராதம் விதித்தனர். மேலும் அந்த தொகையை மகாராஷ்டிரா மாநில சட்டசேவை ஆணையத்தில் 2 வாரத்தில் டெபாசிட் செய்ய உத்தரவிட்டனர்.

    இந்தநிலையில் நாராயண் ரானே தரப்பு வக்கீல், சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்ய வசதியாக ஐகோர்ட்டு தனது உத்தரவை 6 வாரங்களுக்கு நிறுத்தி வைக்குமாறு கோரிக்கை விடுத்தார். எனினும் நீதிபதிகள் அதை ஏற்க மறுத்துவிட்டனர்.

    • ராகுல்காந்தியின் பாதயாத்திரை காங்கிரசுக்கு பயனுள்ளதாக அமையும்.
    • எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து தேர்தலை சந்திக்க வேண்டும் என்று பலரும் விரும்புகிறார்கள்.

    மும்பை

    தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் நேற்று சோலாப்பூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது ராகுல்காந்தி மேற்கொள்ளும் பாதயாத்திரை குறித்த கேள்விக்கு அவர் பதிலளித்து கூறியதாவது:-

    ராகுல்காந்தி மேற்கொள்ளும் பாதயாத்திரை வரும் நாட்களில் அரசியலில் விளைவுகளை ஏற்படுத்தும். இது காங்கிரஸ் கட்சிக்கு பயனுள்ளதாக அமையும். முன்னாள் பிரதமர் சந்திரசேகர் இதுபோன்ற பாதயாத்திரை நடத்தியபோது, நல்ல வரவேற்பு கிடைத்தது. நான் கூட 1980-ம் ஆண்டில் ஜல்காவில் இருந்து நாக்பூருக்கு விவசாயிகளுக்காக பாதயாத்திரை மேற்கொண்டேன். ஜல்காவில் பாதயாத்திரையை தொடங்கியபோது 5 ஆயிரம் பேர் வந்தனர். புல்தானா சென்றபோது அந்த எண்ணிக்கை 50 ஆயிரமாக உயர்ந்தது. பின்னர் அகோலா மற்றும் அமராவதியில் யாத்திரை நடத்தியபோது 1 லட்சம் பேர் திரண்டனர். மாநிலம் முழுவதும் இது அரசியல் மாற்றத்தை ஏற்படுத்த காரணமாக அமைந்தது.

    இதுபோன்ற நிகழ்ச்சிகளை மிகுந்த முயற்சியுடன் நடத்தினால் மக்கள் வரவேற்பார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    2024-ம் ஆண்டு தேர்தலில் பிரதமர் மோடிக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்றுப்படுமா? என்ற கேள்விக்கு சரத்பவார் பதிலளிக்கையில், "எதிர்கால ஏற்பாடுகள் குறித்து தற்போது எதுவும் கூற முடியாது" என்றார்.

    இதுபற்றி மேலும் அவர் கூறுகையில், "எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து தேர்தலை சந்திக்க வேண்டும் என்று பலரும் விரும்புகிறார்கள். இது தொடர்பாக பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார் என்னை சந்தித்து பேசினார். அதற்கு முன்னதாக மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜியும் என்னை சந்தித்தார். கேரளா மற்றும் தமிழ்நாட்டை சேர்ந்த தலைவர்களும் இதே கருத்தை வலியுறுத்துகிறார்கள். இவை அனைத்து தலைவர்களின் கருத்தாக உள்ளது. ஆனால் இன்னும் இறுதி முடிவுக்கு வரவில்லை.

    அதேநேரத்தில் எதிர்க்கட்சிகளின் கூட்டணியில் காங்கிரசை சேர்க்கக்கூடாது என்று சிலர் நினைக்கிறார்கள். எனது கருத்து என்னவென்றால், ஒரு கட்சியை கூட்டணியில் சேர்ப்பதை, மற்றவர்கள் எதிர்க்கக்கூடாது" என்றார்.

    • சஞ்சய் ராவத் ஜாமீன் கேட்டு சிறப்பு கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.
    • ஜாமீன் மனு மீதான விசாரணை நாளை (புதன்கிழமை) நடைபெற உள்ளது.

    மும்பை :

    சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் எம்.பி. கடந்த மாதம் பத்ராசால் மோசடி தொடர்பான சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். இவர் பத்ராசால் மோசடியில் தொடர்புடைய பிரவின் ராவத்திடம் இருந்து பணப்பலன்கள் பெற்றதாக அமலாக்கத்துறை தரப்பில் கூறப்படுகிறது.

    தற்போது நீதிமன்ற காவலில் உள்ள சஞ்சய் ராவத் ஜாமீன் கேட்டு சிறப்பு கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அவருக்கு ஜாமீன் வழங்க அமலாக்கத்துறை எதிர்ப்பு தெரிவித்தது. இதில் சஞ்சய் ராவத் பத்ராசால் மோசடியில் திரைமறைவில் இருந்து செயல்பட்டதாக கூறியது. மேலும் பத்ராசால் மோசடி வழக்கில் கூடுதல் குற்றப்பத்திரிகையையும் தாக்கல் செய்தது. அதில் சஞ்சய் ராவத் பத்ராசால் மோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவராக சேர்க்கப்பட்டு இருந்தார்.

    இந்தநிலையில் நேற்று நீதிமன்ற காவல் முடிந்து சஞ்சய் ராவத் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது கோர்ட்டு கூடுதல் குற்றப்பத்திரிகையில் சஞ்சய் ராவத் குற்றம்சாட்டப்பட்டவராக சேர்க்கப்பட்டு இருப்பதை சுட்டிக்காட்டி அவரது நீதிமன்ற காவலை மேலும் 14 நாட்களுக்கு நீட்டித்து உத்தரவிட்டது. இதற்கிடையே சஞ்சய் ராவத் தாக்கல் செய்து உள்ள ஜாமீன் மனு மீதான விசாரணை நாளை (புதன்கிழமை) நடைபெற உள்ளது.

    • தினந்தோறும் சுமார் 80 லட்சம் பேர் மின்சார ரெயிலில் பயணம் செய்கின்றனர்.
    • ஓசிப்பயணம் செய்பவர்களால் ரெயில்வே நிர்வாகத்துக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது.

    மும்பை :

    மும்பையில் மின்சார ரெயில் போக்குவரத்து மக்களின் உயிர் நாடியாக உள்ளது. தினந்தோறும் சுமார் 80 லட்சம் பேர் மின்சார ரெயிலில் பயணம் செய்கின்றனர். இதில் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்யும் நபர்களால் ரெயில்வே நிர்வாகத்துக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது. இந்தநிலையில் சம்பவத்தன்று சர்ச்கேட் ரெயில் நிலையத்தில் டிக்கெட் பரிசோதகர் பணியில் ஈடுபட்டு கொண்டு இருந்தார்.

    அப்போது டிக்கெட் இன்றி ரெயிலில் வந்த ஒரு பயணி ரெயில்வே ஊழியர் என கூறி அடையாள அட்டையை காட்டினார். டிக்கெட் பரிசோதகருக்கு அவரது அடையாள அட்டையில் சந்தேகம் ஏற்பட்டது.

    இதையடுத்து அவர் அந்த பயணியை ரெயில்வே போலீசாரிடம் ஒப்படைத்தார். விசாரணையில் போலி ரெயில்வே ஊழியர் அடையாள அட்டையுடன் சிக்கியவர் பரேஷ் பட்டேல் என்பது தெரியவந்தது.

    மேலும் இவர் கடந்த 23 ஆண்டுகளாக ரெயில்வே ஊழியர் என கூறி மின்சார ரெயிலில் ஓசிப்பயணம் மேற்கொண்டது தெரியவந்தது.

    இதையடுத்து ரெயில்வே போலீசார் பரேஷ் பட்டேலை கைது செய்தனர்.

    • கைப்பையை குனிந்து எடுத்த நிலையில் தலை கதவுகளுக்கும் இடையே சிக்கியது.
    • சிசிடிவி காட்சி அடிப்படையில் போலீசார் தீவிர விசாரணை.

    மும்பை:

    மகாராஷ்டிரா மாநிலம் மும்பை நகரின் வடக்குப் பகுதியான மலாடில் செயல்பட்டு வரும் ஆங்கில உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியாக வேலை பார்த்து வந்தவர் ஜெனல் பெர்னாண்டஸ் (வயது 26).

    நேற்று தனது பள்ளியில் உள்ள 6வது மாடியில் இருந்து கீழே 2வது மாடியில் உள்ள ஆசிரியர்கள் ஓய்வு எடுக்கும் அறைக்கு செல்வதற்காக லிப்டில் ஏறியுள்ளார். அப்போது அவரது கைப் பை, லிப்ட் கதவுகளுக்கு இடையே மாட்டிக் கொண்டது. உடனே குனிந்த அந்த பையை ஆசிரியை எடுத்த நிலையில் அவரது தலை இரண்டு கதவுகளுக்கும் இடையே சிக்கியது.

    அவரது அபாய குரலை கேட்ட பள்ளி ஊழியர்கள் விரைந்து சென்று அந்த ஆசிரியை தலையை பிடித்து வெளியே இழுத்தனர். படுகாயம் அடைந்த நிலையில் அவர், தனியார் மருத்துவமனைக்கு கொண்டப்பட்டார். ஆனால் வழியிலேயே அவர் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

    இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், சிசிடிவி காட்சியின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டனர். லிப்ட் இயக்கப்பட்டதில் ஏதேனும் சதி இருந்ததாக தெரிய வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல் துணை ஆணையர் விஷால் தாக்கூர் தெரிவித்தார். லிப்ட் கதவுகளுக்கு இடையே சிக்கி ஆசிரியை உயிரிழந்தது அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • ரோஜர் பெடரர் விம்பிள்டன் டென்னிஸ் சாம்பியன் பட்டத்தை அதிக முறை வென்றவர்.
    • தரவரிசையில் 310 வாரங்கள் நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தவர் ரோஜர் பெடரர்.

    மும்பை:

    2022 லேவர் கோப்பை தொடருக்கு பின் டென்னிஸ் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக ரோஜர் பெடரர் அறிவித்துள்ளார். 41 வயதான ரோஜர் பெடரர், 20 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்ற முதல் வீரர் என்ற பெருமையை பெற்றவர்.

    பாரம்பரியமிக்க விம்பிள்டன் டென்னிஸ் சாம்பியன் பட்டத்தை அதிக முறை வென்ற சாதனை படைத்தவர் ரோஜர் பெடரர். தரவரிசையில் 310 வாரங்கள் நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தவர் என்ற சாதனைக்கும் ரோஜர் பெடரர் சொந்தக்காரர் ஆவார்.

    இந்நிலையில், ரோஜர் பெடரருக்கு இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், என்ன ஒரு அர்ப்பணிப்பு, ரோஜர் பெடரர்.. உங்கள் டென்னிஸ் பிராண்டை நாங்கள் காதலித்தோம். மெல்ல மெல்ல உங்கள் டென்னிஸ் பழக்கமாகிவிட்டது. மேலும் பழக்கவழக்கங்கள் ஒருபோதும் விலகாது, அவை நம்மில் ஒரு பகுதியாக மாறும். அனைத்து அற்புதமான நினைவுகளுக்கும் நன்றி என பதிவிட்டுள்ளார்.

    • சார்லஸ் இளவரசராக இருந்தபோது 30 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்தார்.
    • பத்மினி கோலாப்புரே முத்தமிட்ட இளவரசர் இங்கிலாந்தின் மன்னராக மகுடம் சூடி விட்டார்.

    மும்பை

    இங்கிலாந்து ராணி எலிசபெத் மரணத்தை தொடர்ந்து, அவரது மகன் சார்லஸ் புதிய மன்னராக பதவி ஏற்றுள்ளார்.

    இவர் இளவரசராக இருந்தபோது 30 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்தார். அப்போது மும்பை ராஜ்கமல் சினிமா ஸ்டூடியோ வருகை தந்தார். இந்த தருணத்தில் எதிர்பாராத நிகழ்வு நடந்தது.

    அந்த ஸ்டூடியோவில் இருந்த சினிமா பிரபலங்கள் அனைவரும் இளவரசர் சார்லசை வரவேற்க காத்து நின்றனர். சார்லசுக்கு வரவேற்பு அளிக்க ஆரத்தி எடுத்து மாலை அணிவிக்கப்பட்டது. அப்போது அங்கு நின்ற இந்தி மற்றும் மராத்தி நடிகையான பத்மினி கோலாப்புரே சார்லஸ் அருகே நெருங்கினார். திடீரென அவரது கன்னத்தில் "நச்"சென்று முத்தம் கொடுத்து விட்டார். இது இளவரசர் சார்லசுக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்தது. அங்கு நின்றவர்களையும் வியப்பில் ஆழ்த்தியது. பாதுகாப்பு அதிகாரிகள் பதற்றம் அடைந்தனர்.இது உலக அரங்கில் தீப்பொறியாக பரபரப்பை ஏற்படுத்தியது.

    இருப்பினும் இளம்பெண் ஒருவர் இதுபோன்று நடந்து கொண்டது இந்திய கலாசாரத்துக்கு எதிரானது என்ற எதிர்ப்பு போராட்டங்களும் நடந்தன. இதற்கெல்லாம் நடிகை பத்மினி கோலாப்புரே கவலைப்படவில்லை.

    தற்போது அவர் முத்தமிட்ட இளவரசர் இங்கிலாந்தின் மன்னராக மகுடம் சூடி விட்டார். இந்த தருணத்தில் நடிகை பத்மினி கோலாப்புரேயிடம் 30 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவம் குறித்து கேட்கப்பட்டது. அப்போது அவர் மிகவும் மகிழ்ச்சியுடன் பழைய நினைவலைகளை பகிர்ந்தார்.

    அவர் கூறியதாவது:-

    ராஜ்கமல் ஸ்டூடியோவில் நான் இளவரசர் சார்லசை முத்தமிட்ட நினைவுகளை ஒருபோதும் மறக்க முடியாது. அவர் தற்போது மன்னராகி விட்டார். இந்த சந்தர்ப்பத்தில் எனது நினைவுகள் வானத்தில் பறக்கிறது.

    இளவரசராக இருந்த சார்லசை முத்தமிடும் தைரியம் எனக்கு எப்படி வந்தது என்று தெரியவில்லை. ஆனால் அது நடந்து விட்டது. அதற்கு அவர் என்ன எதிர்வினையாற்றினார் என நினைவில்லை. ஆனால் அது என்னை சிரிக்க வைத்தது. அவருடைய அணுகுமுறையும், நடத்தையும் நட்பாக இருந்தது என்பது எனக்கு நினைவிருக்கிறது. மறுநாள் காலையில் உலக பத்திரிகைகளில் நான் முத்தமிட்ட படம் முதல் பக்கங்களில் வந்தது. இதை நான் நினைத்து கூட பார்க்கவில்லை.

    ஒரு தடவை நான் இங்கிலாந்து சென்றபோது, விமான நிலையத்தில் குடியுரிமை அதிகாரி எனது பாஸ்போர்ட்டை பார்த்தார். அப்போது நீங்கள் தான் இளவரசர் சார்லசை முத்தமிட்ட நடிகையா? என்று கேட்டார். அப்போது ஆமாம் என்றேன். அதற்கு அவர் வெட்கத்துடன் தலையை தாழ்த்தி கொண்டார்.

    இப்போது மன்னர் சார்லசை நீங்கள் எப்படி முத்தமிடுவீர்கள் என்று பலர் வேடிக்கையாக என்னை கேட்டு வருகிறார்கள்.

    இவ்வாறு நடிகை பத்மினி கோலாப்புரே கூறினார்.

    • மகா விகாஸ் அகாடி அரசு சிவசேனாவில் ஏற்பட்ட பிளவு காரணமாக கவிழ்ந்தது.
    • மகாராஷ்டிராவில் ஏற்பட்ட அரசியில் நெருக்கடிக்கு உத்தவ் தாக்கரே மட்டுமே காரணமாவார்.

    மும்பை :

    சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சியின் கூட்டணியில் இயங்கிய உத்தவ் தாக்கரே தலைமையிலான மகா விகாஸ் அகாடி அரசு, சிவசேனாவில் ஏற்பட்ட பிளவு காரணமாக கவிழ்ந்தது. இந்த பிளவுக்கு பா.ஜனதா தான் காரணம் என சிவசேனா கட்சியினர் குற்றம் சாட்டி வருகின்றனர்.

    இந்தநிலையில் இது குறித்து துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கூறியதாவது:-

    மகாராஷ்டிராவில் ஏற்பட்ட அரசியில் நிலைதன்மையின்மை மற்றும் நெருக்கடிக்கு உத்தவ் தாக்கரே மட்டுமே காரணமாவார். சிவசேனாவின் பிளவுக்கும் அவரது செயல்பாடு தான் காரணம். 40 எம்.எல்.ஏ.க்கள் அவரது மகாவிகாஸ் அகாடி கூட்டணியை விட்டு வெளியேறியது குறித்து எனக்கு எதுவும் தெரியாது.

    சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே எப்போதும் வழக்கமாக , "நீங்கள் எனது அரசை கவிழ்க்க முயற்சி செய்வதாக கூறுவார்" ஆனால் நான், "உங்கள் அரசு ஒரு நாள் கவிழும் அதை நீங்கள் உணர மாட்டீகள் என்று கூறுவேன். கடைசியில் நான் கூறியது தான் நடந்துள்ளது.

    பா.ஜனதாவும், சிவசேனாவும் இணைந்து ஆட்சி அமைக்க மக்கள் அளித்த தீர்ப்பை உத்தவ் தாக்கரே மாற்று கூட்டணி அமைத்து கேலி செய்தார். நாங்கள் கூட்டணியாக போட்டியிட்டபோது ஒவ்வொரு கூட்டத்திலும் பிரதமர் நரேந்திர மோடியும், உள்துறை மந்திரி அமித்ஷாவும் அடுத்த முதல்-மந்திரி பா.ஜனதாவை சேர்ந்தவர் தான் என்று கூறினர். அப்போது சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவும் மேடையில் அமர்ந்து கைத்தட்டினார். ஆனால் பேராசை திறன் அதிகரிக்கும்போது, இதுபோன்ற முடிவுகளை அவர்கள் எடுக்கிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • rbvisit.rajbhavan-maharashtra.gov.in என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்ய வேண்டும்.
    • காலை 6 மணி முதல் 8.30 மணி வரையில் அனுமதி வழங்கப்படுகிறது.

    மும்பை :

    மும்பை மலபார்ஹில் பகுதியில் மராட்டிய கவர்னரின் அதிகாரப்பூர்வ இல்லமான ராஜ்பவன் என்ற கவர்னர் மாளிகை உள்ளது. இந்த மாளிகையில் பருவமழை காரணமாக கடந்த ஜூன் மாதம் முதல் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது. தற்போது 4 மாத பருவமழை முடிவுக்கு வருவதை தொடர்ந்து மீண்டும் கவர்னர் மாளிகைக்கு சுற்றுலா பயணிகளுக்கு வருகை தர அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

    இது குறித்து கவர்னர் மாளிகை செய்தி தொடர்பாளர் கூறியதாவது:-

    பருவமழை காரணமாக சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது அது நீக்கப்பட்டு உள்ளது. எனவே வருகிற 1-ந் தேதி முதல் பயணிகள் வருகை தரலாம்.

    கவர்னர் மாளிகையைில் சுற்றுலா செல்ல விரும்புவர்கள் rbvisit.rajbhavan-maharashtra.gov.in என்ற இணையதளத்தில் கட்டாயம் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். வாரத்தின் திங்கட்கிழமைகள் மற்றும் அரசு விடுமுறை நாட்களை தவிர அனைத்து நாட்களிலும் காலை 6 மணி முதல் 8.30 மணி வரையில் அனுமதி வழங்கப்படுகிறது. இதைத்தவிர தீபாவளி பண்டிகையையொட்டி வருகிற 22-ந்தேதி முதல் 28-ந்ததேதி வரை கவர்னர் மாளிகைக்கு விடுமுறை வழங்கப்பட்டு உள்ளதால் அன்றைய தினங்களில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி கிடையாது.

    கவர்னர் மாளிகையில் சூரிய உதயம், தேவி கோவில், பதுங்கு குழிகள், புரட்சியாளர்களின் கேலரி, தர்பார் அரங்கு, ஜல் விகார் மற்றும் மராட்டிய மாநிலத்தின் உருவாக்கத்தின் நினைவகம் போன்ற இடங்களில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • புனேயை சேர்ந்த சீரம் நிறுவனம் கொரோனாவுக்காக கோவிஷீல்டு தடுப்பூசியை தயாரித்தது.
    • ஆதார் பூனாவாலா எனக்கூறி சீரம் நிறுவனத்திடம் மர்ம கும்பல் ரூ.1 கோடி மோசடி செய்துள்ளது.

    மும்பை:

    கொரோனா வைரஸ் தொற்றுக்கு கோவிஷில்டு தடுப்பூசி தயாரித்த புனேயை சேர்ந்த சீரம் நிறுவனத்தின் இயக்குனர்களில் ஒருவர் சதீஷ் தேஷ்பாண்டே.

    சில தினங்களுக்கு முன் சீரம் நிறுவன தலைமை நிர்வாக அதிகாரியான ஆதார் பூனாவாலா என கூறிக்கொண்டு ஒருவர் வாட்ஸ்அப்பில் குறுந்தகவல் அனுப்பினார். அவர் அவசரமாக ரூ.1 கோடியே 1 லட்சத்து ஆயிரத்து 554 தேவைப்படுவதாக கூறினார்.

    வாட்ஸ் அப்பின் முகப்படமாக அதார் பூனாவாலா படம் வைக்கப்பட்டு இருந்ததால், அவர் தான் தன்னிடம் பணம் கேட்பதாக சதீஷ் தேஷ்பாண்டே நினைத்தார். இதனால் அவர் அந்த நபர் கூறிய வங்கிக்கணக்கிற்கு நிறுவன அதிகாரிகள் மூலமாக பணத்தை அனுப்பினார். ஆனால் பணம் அனுப்பிய பிறகு தான், அதார் பூனாவாலா பணம் கேட்டு வாட்ஸ் அப்பில் எந்த குறுந்தகவலும் அனுப்பவில்லை என தெரியவந்தது. மோசடி கும்பல் ஆதார் பூனாவாலா எனக்கூறி மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.

    இதுதொடர்பாக வழக்கு பதிந்த புனே பந்த்கார்டன் போலீசார், சீரம் நிறுவன உரிமையாளர் பெயரில் மோசடியில் ஈடுபட்ட கும்பலை தேடி வருகின்றனர்.

    • கடந்த 31-ம் தேதி விநாயகர் சதுர்த்தி பண்டிகை கொண்டாடப்பட்டது.
    • மகாராஷ்டிராவில் விநாயகர் சிலை கரைப்பு ஊர்வலத்தில் 20 பேர் உயிரிழந்தனர்.

    மும்பை:

    மகாராஷ்டிரா மாநிலயத்தில் விநாயகர் சதுர்த்தியையொட்டி பொது இடங்களில் பிரமாண்ட விநாயகர் சிலைகள் நிறுவப்பட்டு 10 நாட்கள் வழிபாடு நடத்தப்பட்டது. இதனையடுத்து, சிலை கரைப்பு தினமான ஆனந்த சதுர்த்தி அன்று விநாயகர் சிலைகள் நீர்நிலைகளுக்கு ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு கரைக்கப்பட்டன.

    இந்நிலையில், மகாராஷ்டிராவின் பல்வேறு இடங்களில் சிலை கரைப்பு ஊர்வலத்தின் போது 20 பேர் உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். அதில், 14 பேர் நீரில் மூழ்கி பலியாகினர். ஊர்வலத்தின் போது சாலை விபத்தில் 4 பேரும், மரம் விழுந்து பெண் ஒருவர் என மொத்தம் 20 பேர் உயிரிழந்துள்ளதாக அம்மாநில போலீசார் தெரிவித்துள்ளனர்.

    • இந்தியாவில் 2,800 பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகள் உள்ளன.
    • நிதி மோசடி, வரி ஏய்ப்பு தொடர்பாக வருமான வரித்துறை நாடு முழுவதும் அதிரடி சோதனை

    மும்பை:

    தேர்தல் கமிஷனில் பதிவு செய்தபோதிலும் அங்கீகரிக்கப்படாமல் ஏராளமான அரசியல் கட்சிகள் உள்ளன. அதிகாரப்பூர்வ தகவல்களின்படி இந்தியாவில் 2,800 பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகள் உள்ளன.

    இந்த கட்சிகள் நன்கொடை குறித்த விவரங்களை சமர்ப்பித்தல் முகவரி, நிர்வாகிகள் குறித்த விவரங்களை புதுப்பிக்க தவறியது உள்ளிட்ட விதிகளையும், தேர்தல் சட்டங்களையும் மீறியது தொடர்பாகவும் நடவடிக்கை எடுக்க தேர்தல் கமிஷன் பரிந்துரை செய்தது. இதில் சில கட்சிகள் தீவிர நிதி மோசடியிலும் ஈடுபட்டன.

    இதைத்தொடர்ந்து நிதி மோசடி, வரி ஏய்ப்பு தொடர்பாக வருமான வரித்துறை நாடு முழுவதும் அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளுக்கு எதிராக நேற்று அதிரடி சோதனை நடத்தியது. குஜராத், டெல்லி, மராட்டியம், மத்திய பிரதேசம், அரியானா, சத்தீஷ்கர் உள்ளிட்ட மாநிலங்களில் 110 இடங்களில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது.

    மும்பையில் நடந்த சோதனையில் அங்குள்ள அங்கீகரிக்கப்படாத 2 கட்சிகள் ரூ.150 கோடி நன்கொடை பெற்றது தெரியவந்தது.

    சயான் கோலிவாடா குடிசை பகுதியில் உள்ள கட்சியும், போரிவிலியில் உள்ள கட்சி ஒன்றும் கடந்த 2 ஆண்டுகளில் ரூ.150 கோடி நன்கொடை பெற்றுள்ளன. ஹவாலா மூலம் இந்த பண பரிமாற்றம் நடைபெற்றதும், இதனால் வரி ஏய்ப்பு செய்ததும் கண்டறியப்பட்டது.

    அபனா தேஷ் கட்சி 2017-18 மற்றும் 2019-20ல் மொத்தம் ரூ.232 கோடி நன்கொடை பெற்றது. அந்த கட்சியின் முகவரி உத்தர பிரதேசத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் கட்சி தலைவரின் முகவரி குஜராத் மாநிலத்தில் பதிவு ஆகி இருந்தது.

    இப்படி பல கட்சிகள் நன்கொடை விவரம், முகவரியில் குழப்பம் இருப்பது இந்த சோதனையின் போது தெரியவந்தது.

    தேர்தல் கமிஷனில் அளித்த முகவரியில் செயல்படாத 87 அங்கீகரிக்கப்படாத கட்சிகளின் பதிவை தேர்தல் கமிஷன் சமீபத்தில் ரத்து செய்து இருந்தது.

    ×