search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    மும்பையில் சட்டவிரோதமாக கட்டப்பட்ட மத்திய மந்திரியின் பங்களாவை இடிக்க ஐகோர்ட்டு உத்தரவு
    X

    நாராயண் ரானேயின் சட்டவிரோத பங்களாவை படத்தில் காணலாம்.

    மும்பையில் சட்டவிரோதமாக கட்டப்பட்ட மத்திய மந்திரியின் பங்களாவை இடிக்க ஐகோர்ட்டு உத்தரவு

    • மத்திய சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறை மந்திரி நாராயண் ரானே.
    • நாராயண் ரானேவுக்கு ரூ.10 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

    மும்பை :

    மத்திய சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறை மந்திரியும், மகாராஷ்டிராவை சேர்ந்த பா.ஜனதா மூத்த தலைவருமான நாராயண் ரானேக்கு சொந்தமாக மும்பை ஜூகு கடற்கரை பகுதியில் 8 மாடி பங்களா வீடு உள்ளது. இந்த பங்களாவில் சட்டவிரோத கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட்டு இருப்பது சிவசேனா தலைமையிலான ஆட்சியின்போது கடந்த பிப்ரவரி மாதம் தெரியவந்தது. இதையடுத்து நாராயண் ரானேயின் பங்களாவில் சட்டவிரோத கட்டுமானத்தை இடிக்க மும்பை மாநகராட்சி உத்தரவிட்டிருந்தது. ஆனால் வீட்டில் மேற்கொள்ளப்பட்ட சட்டவிரோத கட்டுமான பணிகளை சீரமைக்க அனுமதி கோரி தாக்கல் செய்த விண்ணப்பத்தை பரிசீலிக்க மும்பை மாநகராட்சிக்கு உத்தரவிடகோரி மும்பை ஐகோர்ட்டில் நாராயண் ரானே தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

    நாராயண் ரானே பங்களா தொடர்பான வழக்கு நேற்று ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. மனுவை நீதிபதிகள் ஆர்.டி. தகானுகா, கமல் கட்டா ஆகியோர் விசாரித்தனர். விசாரணைக்கு பிறகு அவர்கள் அதிரடி உத்தரவை பிறப்பித்தனர்.

    இதுதொடர்பான உத்தரவில் நீதிபதிகள் கூறியதாவது:-

    அனுமதிக்கப்பட்ட திட்டம் மற்றும் சட்ட விதிகளை மீறி மனுதாரர் பெரிய அளவில் சட்டவிரோத கட்டுமான பணிகளை மேற்கொண்டு இருக்கிறார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. சட்டவிரோத பணிகளை ஒழுங்குப்படுத்த அனுமதித்தால், அது சட்ட விதிமீறல்களை ஊக்குவிப்பதாகவும், மும்பையில் சட்டவிரோத கட்டுமான பணிகள் அச்சமின்றி எந்த எல்லைக்கும் மேற்கொள்ளப்படுவதற்கு அழைப்பு விடுப்பது போல ஆகிவிடும். மனுதாரர் பங்களாவில் எப்.எஸ்.ஐ. எனப்படும் கட்டுமான பரப்பளவு மற்றும் கடல்சார் ஒழுங்குமுறை விதிகள் மீறப்பட்டுள்ளது. எனவே பங்களாவில் மேற்கொள்ளப்பட்டுள்ள சட்டவிரோத கட்டுமானங்களை 2 வாரங்களில் மாநகராட்சி இடிக்க வேண்டும்.

    இவ்வாறு நீதிபதிகள் தங்களது உத்தரவில் தெரிவித்தனர்.

    மேலும் அவர்கள் நாராயண் ரானேவுக்கு ரூ.10 லட்சம் அபராதம் விதித்தனர். மேலும் அந்த தொகையை மகாராஷ்டிரா மாநில சட்டசேவை ஆணையத்தில் 2 வாரத்தில் டெபாசிட் செய்ய உத்தரவிட்டனர்.

    இந்தநிலையில் நாராயண் ரானே தரப்பு வக்கீல், சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்ய வசதியாக ஐகோர்ட்டு தனது உத்தரவை 6 வாரங்களுக்கு நிறுத்தி வைக்குமாறு கோரிக்கை விடுத்தார். எனினும் நீதிபதிகள் அதை ஏற்க மறுத்துவிட்டனர்.

    Next Story
    ×