என் மலர்tooltip icon

    கேரளா

    • பொதுக்கூட்டங்களில் பங்கேற்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தனர்.
    • மோடி, அதானி போன்ற தொழில் அதிபர்களையும் மக்களையும் வெவ்வேறாக கருதுகிறார்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் வயநாடு பாராளுமன்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பிரியங்கா காந்தி எம்.பி.யாக பதவியேற்றார்.

    தொடர்ந்து அவர் தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக வயநாடு வந்தார். அவருடன் பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவரும் அவரது சகோதரருமான ராகுல்காந்தியும் வந்திருந்தார்.

    அவர்கள் இருவரும் மலப்புரம், நிலம்பூர், வண்டூர், எடாவண்ணா, ஏர்நாடு பகுதிகளில் நடை பெற்ற பொதுக்கூட்டங்களில் பங்கேற்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தனர்.

    கூட்டத்தில் பேசிய ராகுல்காந்தி, வயநாடு மக்களுக்கு கிடைக்க வேண்டிய நிதியுதவியை விடுவிக்காமல் பிரதமர் மோடி பாரபட்சமாக செயல்படுகிறார். குடிமக்கள் அனைவரையும் சமமாக நடத்த வேண்டுமென அரசமைப்பு சட்டம் கூறுகிறது.

    ஆனால் பிரதமர் மோடி, அதானி போன்ற தொழில் அதிபர்களையும் மக்களையும் வெவ்வேறாக கருதுகிறார் என்றார்.

    பிரியங்கா காந்தி பேசும் போது, வயநாடு மக்களுக்கான என்னுடைய போராட்டம் தொடங்கிவிட்டது. உங்களது பிரச்சனைகள் என்ன என்பது எனக்கு தெரியும். அவற்றை தீர்த்து வைப்பது தான் எனது முதல் கடமை. பா.ஜ.க.வுக்கு அரசியல் மரியாதை எதுவும் தெரியாது.

    நாட்டில் தேர்தல் நடை முரைகள் குறித்த நம்பிக்கை போய்விட்டது. நாட்டை நிலைநிறுத்தும் அடிப்படை அம்சங்களுக்காக நாம் போராட வேண்டும் என்றார். நேற்று பல்வேறு கூட்டங்களில் பங்கேற்ற ராகுல்காந்தி, அதன்பிறகு டெல்லி சென்றார்.

    ஆனால் பிரியங்கா செல்லவில்லை. அவர் வயநாடு தொகுதியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) 2-வது நாளாக மக்களை சந்தித்து நன்றி தெரிவித்தார். அவருக்கு கட்சியினரும், பொதுமக்களும் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.

    அப்போது பேசிய பிரியங்கா காந்தி, பல வழிகளில் இன்று நாம் எதிர்கொள்ளும் அரசியல் சவால்கள், வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு போன்றது என்றார். மேலும் வயநாடு மக்களின் பிரச்சனைகளை பாராளுமன்றத்தில் எனது குரல் தெரிவிக்கும் என்றார்.

    • வளர்ப்பு மகளை கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் தொடர் பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார்.
    • குற்றவாளிக்கு 7.85 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    கேரளாவில் வளர்ப்பு மகளை தொடர் பாலியல் பலாத்காரம் செய்த தந்தைக்கு 141 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. குற்றம்சாட்டப்பட்டவரும் அவரது வளர்ப்பு மகளும் தமிழகத்தை சேர்ந்தவர்கள் ஆவர்.

    தாய் வீட்டில் இல்லாத சமயத்தில் தந்தை தனது வளர்ப்பு மகளை கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் தொடர் பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார். சிறுமி தனது நண்பரின் ஆலோசனையின் பேரில், இறுதியாக தனது தாயிடம் இதை கூறியதை அடுத்து குற்றம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

    இந்த வழக்கை விசாரித்த மஞ்சேரி விரைவு சிறப்பு நீதிமன்ற நீதிபதி அஷ்ரப் ஏஎம், போக்சோ, ஐபிசி மற்றும் சிறார் நீதிச் சட்டம் ஆகியவற்றின் பல்வேறு விதிகளின் கீழ் குற்றவாளிக்கு மொத்தம் 141 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தார்.

    முதலில் அவருக்கு விதிக்கப்பட்ட அதிகபட்ச சிறை தண்டனையான 40 ஆண்டுகள் அவர் சிறையில் இருப்பார். அதன்பின் தொடர்ந்து மீதியுள்ள காலமும் அவர் சிறை தண்டனை அனுபவிப்பார் என்று கூறப்பட்டுள்ளது. மேலும், குற்றவாளிக்கு 7.85 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது .

    • வனத்தை ஒட்டிய பகுதியில் மாடுகளை மேய விட்டிருந்தனர்.
    • தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசாரும் தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் கொத்தமங்கலம் பகுதியை சேர்ந்த பெண்கள் பாருக்குட்டி, மாயா, டார்லி ஸ்டீபன். மாடு மேய்க்கும் தொழிலாளியான இவர்கள் தினமும் தங்களின் மாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்வார்கள்.

    அதேபோல் நேற்றும் அவர்கள் சென்றனர். வனத்தை ஒட்டிய பகுதியில் மாடுகளை மேய விட்டிருந்தனர். அப்போது அவர்களது மாடுகள் வனப்பகுதிக்குள் சென்றுவிட்டன. இதையடுத்து தங்களின் மாடுகளை தேடி 3 பேரும் காட்டுப் பகுதிக்குள் சென்றனர்.

    ஆனால் காட்டுக்குள் சென்ற 3 பேரும் மாலை 4 மணியாகியும் திரும்பி வரவில்லை. அவர்கள் திரும்பி வர வழி தெரியாமல் காட்டுக்குள் சிக்கிக் கொண்டனர். மதியம் ஒரு மணியளவில் மாயாவிடம் அவரது கணவர் செல்போனில் பேசியிருக்கிறார்.

    அதன்பிறகு அவரது செல்போன் கிடைக்க வில்லை. இதனால் காட்டுக்குள் சென்ற 3 பெண்களும் எங்கு சென்றார்கள்? என்ன ஆனார்கள்? என்பது தெரியாமல் அவர்களது குடும்பத் தினர் பரிதவித்தனர்.

    இதுகுறித்து 3 பெண்களின் குடும்பத்தினரும் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து காணாமல் போன 3 பெண்களை கண்டுபிடிக்கும் பணியை வனத்துறையினர் உடனடயாக தொடங்கினர். அவர்களுடன் தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசாரும் தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.

    மாலை தொடங்கிய தேடுதல் பணி இரவிலும் நீடித்தது. ஆனால் 3 பெண்களையும் கண்டுபிடிக்க முடியவில்லை. இருந்தபோதிலும் வனத்துறையினர், போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் தேடுதல் பணியை விடவில்லை.அப்போது காட்டுக்குள் சிக்கிய 3 பெண்களும் கண்டு பிடிக்கப்பட்டனர்.

    அவர்கள் அடர்ந்த காட்டுக்குள் வழி தெரியாமல் 6 கிலோமீட்டர் தூரம் வரை சென்றுவிட்டனர். திரும்பி வர வழி தெரியாமல் தவித்த அங்கேயே ஒரு இடத்தில் ஒன்றாக அமர்ந்து கொண்டனர். அவர்களை தேடுதல் பணியில் ஈடுபட்டவர்கள் கண்டுபிடித்து மீட்டனர்.

    மீட்கப்பட்ட பெண்கள் இன்று காலை வரை வனப்பகுதியில் இருந்தனர். அவர்களை வனத்துறையினர் இன்றுகாலை விடிந்தபிறகு காட்டில் இருந்து வெளியே அழைத்தது வந்தனர். பெண்களை மீட்டு வந்த குழுவினருக்கு அவர்களது குடும்பத்தினர் நன்றி தெரிவித்தனர்.

    வனப்பகுதியில் சிக்கிய பெண்களை இரவு என்றும் பாராமல் விரைந்து செயல்பட்டு மீட்ட வனத் துறையினர், போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்களை பொதுமக்கள் பாராட்டினர்.

    • கூட்ட நெரிசலின்றி பக்தர்கள் சென்று சாமி தரிசனம் செய்கிறார்கள்.
    • குழந்தைகள் பெற்றோரில் ஒருவரை அழைத்துச்சென்று சாமி தரிசனம் செய்யலாம்.

    திருவனந்தபுரம்:

    சபரிமலை ஐயப்பன் கோவில் நடை மண்டல பூஜைக்காக கடந்த 15-ந்தேதி மாலை திறக்கப் பட்டது. மறுநாள் (16-ந்தேதி) மண்டல பூஜை தொடங்கி நடந்து வரும் நிலையில், தினமும் ஆயிரக் கணக்கான பக்தர்கள் சபரி மலைக்கு வந்த வண்ணம் உள்ளனர்.

    பக்தர்கள் கூட்ட நெரிசலில் சிக்காமல் சாமி தரிசனம் செய்வதற்காக சபரி மலையில் இந்த ஆண்டு பல்வேறு புதிய நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றன. இதன் காரணமாக, மண்டல பூஜை தொடங்கியதில் இருந்தே பக்தர்கள் கூட்ட நெரிசலில் சிக்காமல் சாமி தரிசனம் செயது வருகின்றனர்.

    வாரத்தின் இறுதி நாட்க ளான சனி மற்றும் ஞாயிறு தினங்களில் மட்டும் கூட்டம் அதிகமாக இருக்கிறது. மற்ற நாட்களில் அதிகாலை நடை திறக்கப்படும் நேரத்தில் மட்டும் சில மணி நேரம் பக்தர்கள் கூட்டம் இருக்கிறது. மற்ற நேரங்களில் கூட்ட நெரிசலின்றி பக்தர்கள் சென்று சாமி தரிசனம் செய்கிறார்கள்.

    இந்தநிலையில் சபரிமலைக்கு வரும் குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் சாமி தரிசனத்துக்கு வரிசையில் காத்து நிற்பதை தவிர்க்கும் விதமாக, அவர்களுக்கு சிறப்பு வாயில் அமைக்கப்பட்டு இருக்கிறது.

    அவர்கள் பதினெட்டாம்படி ஏறிய பிறகு சன்னதிக்கு அருகில் அமைக்கப்பட்டுள்ள வாயில் வழியாக முதல் வரிசையை அடைந்து சாமி தரிசனம் செய்யலாம்.

    குழந்தைகள் தங்களின் பெற்றோரில் ஒருவரை தங்களுடன் இந்த வழியில் அழைத்துச்சென்று சாமி தரிசனம் செய்யலாம். இந்த சிறப்பு வாயிலை பயன்படுத்தி இன்று ஏராளமான பெண்கள், குழந்தைகள், வயதானவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் சாமி தரிசனம் செய்தார்கள். 

    • பெண்களின் நளினமான நடன அசைவுகளுக்கு ஏற்றவாறு அந்த யானை, தன்னுடைய ராட்சத காதுகளை அசைத்தும் தலையை ஆட்டியும் காட்டுகிறது.
    • வீடியோ 2 நாட்களில் 10 லட்சம் பார்வைகளை கடந்துள்ளது.

    கேரள மாநிலத்தில் உள்ள தோட்டத்தில் படம்பிடிக்கப்பட்டுள்ள ஒரு வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது. அந்த வீடியோவில் யானை இரும்பு சங்கிலியால் கட்டப்பட்டுள்ளது. யானைக்கு முன்பாக இரண்டு இளம்பெண்கள் பரதநாட்டியம் ஆடுகிறார்கள். அப்போது அந்த பெண்களின் நளினமான நடன அசைவுகளுக்கு ஏற்றவாறு அந்த யானை, தன்னுடைய ராட்சத காதுகளை அசைத்தும் தலையை ஆட்டியும் காட்டுகிறது.

    பெண்களுடன் இணைந்து ஆடிய யானை என்ற தலைப்புடன் எக்ஸ் தளத்தில் வெளியான அந்த வீடியோ சமூக வலைத்தளவாசிகளிடையே விவாதத்தை கிளப்பி உள்ளது.

    அந்த யானை மகிழ்வுடன் இல்லை எனவும், மன அழுத்தம் காரணமாக அந்த யானை அவதிப்படுவதாகவும் இந்திய வனத்துறை அதிகாரி உள்பட ஏராளமானவர்கள் இந்த வீடியோவுக்கு கருத்துகளை பதிவிட்டுள்ளனர். இந்த வீடியோ 2 நாட்களில் 10 லட்சம் பார்வைகளை கடந்துள்ளது.



    • பதினெட்டாம் படியில் பக்தர்களுக்கு உதவும் பணியில் ஈடுபட்டிருக்கும் போலீசார் 12 நாட்களுக்கு ஒரு முறை மாற்றப்படுவார்கள்.
    • மதியம் கோவில் நடை சாத்தப்பட்டிருந்த நேரத்தில் பதினெட்டாம் படியில் நின்று குரூப் போட்டோ எடுத்துள்ளனர்.

    திருவனந்தபுரம்:

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் மிகவும் புனிதமாக கருதப்படும் ஒன்று பதினெட்டாம் படி. மாலையணிந்து கடும் விரதம் இருந்து இருமுடி கட்டி வரும் பக்தர்கள் மட்டுமே பதினெட்டாம் படி ஏற அனுமதிக்கப்படுவார்கள்.

    இந்நிலையில், பதினெட்டாம் படியில் பணியில் இருந்த போலீசார், அதில் நின்று குரூப்-போட்டோ எடுத்திருக்கின்றனர். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவியது. சபரிமலையில் மிகவும் புனிதமாக மதிக்கப்படும் பதினெட்டாம் படியில் போலீசார் இவ்வாறு நடந்து கொண்டது பக்தர்களின் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. போலீசாரின் இந்த செயலுக்கு இந்து அமைப்புகள் கடும் கண்டனத்தை தெரிவித்தன.

    பதினெட்டாம் படியில் பக்தர்களுக்கு உதவும் பணியில் ஈடுபட்டிருக்கும் போலீசார் 12 நாட்களுக்கு ஒரு முறை மாற்றப்படுவார்கள். அது போன்று தான் கடந்த 14-ந்தேதி பணிக்கு வந்த போலீசார், 25-ந்தேதியுடன் பணி முடிந்து புறப்படும் போது, மதியம் கோவில் நடை சாத்தப்பட்டிருந்த நேரத்தில் பதினெட்டாம் படியில் நின்று குரூப் போட்டோ எடுத்துள்ளனர்.

    இந்த நிலையில், பதினெட்டாம்படியில் நின்று குரூப் போட்டோ எடுத்த 23 போலீசார் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 23 போலீசாருக்கு நன்னடத்தை பயிற்சி அளிக்க டி.ஜி.பி. உத்தரவிட்டுள்ளது. மேலும் இச்சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு கேரள உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் இச்சம்பவம் குறித்து விளக்கம் அளிக்குமாறு உத்தரவிட்டுள்ளது. 

    • பல மாவட்டங்களுக்கு புயல் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
    • மழை காரணமாக பலர் சபரிமலை யாத்திரை மேற்கொள்ள முடியாக நிலை ஏற்பட்டிருக்கிறது.

    திருவனந்தபுரம்:

    சபரிமலை ஐயப்பன் கோவில் நடை மண்டல பூஜைக்காக கடந்த 15-ந்தேதி மாலை திறக்கப்பட்டது. மறுநாள் (16-ந்தேதி) மண்டல பூஜை தொடங்கி நடந்து வரும் நிலையில், தினமும் ஆயிரக் கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு வந்த வண்ணம் உள்ளனர்.

    பக்தர்கள் கூட்ட நெரிசலில் சிக்காமல் சாமி தரிசனம் செய்வதற்காக சபரிமலையில் இந்த ஆண்டு பல்வேறு புதிய நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றன. அதன்படி தினமும் 80 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள்.

    மேலும் சபரிமலைக்கு வரும் பக்தர்கள் அனைவரும் சாமி தரிசனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேவசம்போர்டு அறிவித்திருக்கிறது. கூட்ட நெரிசல் ஏற்படாமல் இருக்க பல்வேறு புதிய நடைமுறைகள் பின்பற்றப்படுவதன் காரணமாக, மண்டல பூஜை தொடங்கியதில் இருந்தே பக்தர்கள் கூட்ட நெரிசலில் சிக்காமல் சாமி தரிசனம் செயது வருகின்றனர்.

    வாரத்தின் இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிறு தினங்களில் மட்டும் கூட்டம் அதிகமாக இருக்கிறது. மற்ற நாட்களில் பக்தர்கள் வருகை குறைவாகவே இருக்கிறது. நேற்றைய தினம் இரவு 9 மணி நிலவரப்படி 63,242 பக்தர்கள் பதினெட்டாம் படி ஏறிச் சென்று சாமி தரிசனம் செய்திருக்கிறார்கள். அவர்களில் ஸ்பாட் புக்கிங் அடிப்படையில் 10,124 பேர் வந்துள்ளனர்.

    இந்தநிலையில் சபரி மலையில் இன்றும் பக்தர் கள் கூட்டம் குறைவாகவே காணப்பட்டது. அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்ட போது, வலிய நடைப் பந்தலில் 5 வரிசையில் மட்டும் பக்தர்கள் வரிசையில் இருந்தனர். அதிகாலை 5 மணிக்கு பிறகு வலிய நடைப்பந்தலில் பக்தர்கள் காத்து நிற்காமல் பதினெட்டாம் படி ஏறிச் சென்றனர்.

    தமிழக பக்தர்கள் குறைவான அளவில் வருவதே சபரிமலையில் கூட்டம் இல்லாமல் இருக்க காரணம் என்று கூறப்படுகிறது. தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. மேலும் பல மாவட்டங்களுக்கு புயல் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

    இதன் காரணமாக ஐயப்ப பக்தர்கள் பலர் சபரிமலை யாத்திரை மேற்கொள்ள முடியாக நிலை ஏற்பட்டிருக்கிறது. மழை மற்றும் புயல் அச்சுறுத்தல் நீங்கியபிறகு தமிழகத்தில் இருந்து வழக்கம்போல் அதிக பக்தர்கள் சபரிமலைக்கு வரத் தொடங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • பதினெட்டாம் படியில் போலீசார் குரூப்-போட்டோ எடுத்துக் கொண்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.
    • மதியம் கோவில் நடை சாத்தப்பட்டிருந்த நேரத்தில் பதினெட்டாம் படியில் நின்று குரூப் போட்டோ எடுத்துள்ளனர்.

    திருவனந்தபுரம்:

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் மிகவும் புனிதமாக கருதப்படும் ஒன்று பதினெட்டாம் படி. மாலையணிந்து கடும் விரதம் இருந்து இருமுடி கட்டி வரும் பக்தர்கள் மட்டுமே பதினெட்டாம் படி ஏற அனுமதிக்கப்படுவார்கள்.

    அதிலும் பக்தர்கள் படியில் ஏறிச்செல்ல மட்டுமே அனுமதிக்கப்படுவார்களே தவிர, இறங்கி வர அனுமதி கிடையாது. பந்தள மன்னரின் பிரதிநிதிகள், கோவிலில் தந்திரி மற்றும் மேல்சாந்தி ஆகியோர் மட்டுமே பதினெட்டாம் படியில் மேலே இருந்து கீழே இறங்க அனுமதி உள்ளது.

    அவ்வாறு அவர்கள் இறங்கும் போது பின்நோக்கியே இறங்குவார்கள். சாமிக்கு மரியாதை கொடுக்கும் வகையில் பின்நோக்கி வரக்கூடிய மரபே சபரிமலையில் பின்பற்றப்பட்டு வருகிறது. இருமுடி கட்டாமல் பதினெட்டாம் படியில் ஏறுவதற்கு, அங்கு பக்தர்களை படியேற உதவக்கூடிய போலீசார் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.

    அவர்களும் பல்வேறு நடைமுறைகளை பின்பற்றியே பதினெட்டாம் படியில் நிற்பார்கள். இந்த நிலையில் பதினெட்டாம் படியில் பணியில் இருந்த போலீசார், அதில் நின்று குரூப்-போட்டோ எடுத்திருக்கின்றனர். அதிலும் தங்களின் பின்புறத்தை காண்பித்து நின்று கொண்டு புகைப்படம் எடுத்திருக்கின்றனர்.

    இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவியது. சபரிமலையில் மிகவும் புனிதமாக மதிக்கப்படும் பதினெட்டாம் படியில் போலீசார் இவ்வாறு நடந்து கொண்டது பக்தர்களின் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. போலீசாரின் இந்த செயலுக்கு இந்து அமைப்புகள் கடும் கண்டனத்தை தெரிவித்தன. மேலும் சபரிமலையின் ஆச்சார விதிகளை மீறிய போலீசாரின் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

    இதையடுத்து பதினெட்டாம் படியில் போலீசார் குரூப்-போட்டோ எடுத்துக் கொண்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால் சபரிமலை மரபுகளை மீறும் வகையில் போலீசார் செயல்பட்டது குறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய சன்னிதான போலீஸ் சூப்பிரண்டு பைஜூவுக்கு கேரள மாநில ஏ.டி.ஜி.பி. ஸ்ரீஜித் உத்தரவிட்டார்.

    இதையடுத்து போலீஸ் சூப்பிரண்டு பைஜூ விசாரணையை தொடங்கினார். பதினெட்டாம் படியில் பக்தர்களுக்கு உதவும் பணியில் ஈடுபட்டிருக்கும் போலீசார் 12 நாட்களுக்கு ஒரு முறை மாற்றப்படுவார்கள். அது போன்று தான் கடந்த 14-ந்தேதி பணிக்கு வந்த போலீசார், 25-ந்தேதியுடன் பணி முடிந்து புறப்படும் போது, மதியம் கோவில் நடை சாத்தப்பட்டிருந்த நேரத்தில் பதினெட்டாம் படியில் நின்று குரூப் போட்டோ எடுத்துள்ளனர்.

    பதினெட்டாம் படியில் குரூப்-போட்டோ எடுத்துக்கொண்ட சம்பவம் தொடர்பாக அவர்களுக்கு பொறுப்பாக பணியில் இருந்த போலீஸ் அதிகாரியிடம் விளக்கம் கேட்கப்பட்டிருக்கிறது. அதனடிப்படையில் குரூப்-போட்டோ எடுத்துக்கொண்ட 30 போலீசாரின் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    • பாரம்பரிய வழக்கப்படி பூக்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
    • தேங்காய்களை கொப்பரை தொழிலாளர்கள் சட்ட விரோதமாக சேகரிக்க தடை.

    திருவனந்தபுரம்:

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜைக்காக நடை திறக்கப்பட்ட நாளில் இருந்து பக்தர்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அவர்களது வசதிக்காக பல்வேறு ஏற்பாடுகளை தேவசம் போர்டு செய்து வருகிறது. கேரள ஐகோர்ட்டும் பக்தர்கள் வசதிக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கி வருகிறது.


    இந்த நிலையில் சபரிமலை சன்னிதானத்தில் ஆர்க்கிட் மலர்கள் மற்றும் இலைகளை அலங்காரத்திற்கு பயன்படுத்தக் கூடாது என்று தேவசம் போர்டுக்கு ஐகோர்ட்டு அறிவுறுத்தி உள்ளது.

    பாரம்பரிய வழக்கப்படி பூக்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும் அவற்றை தினமும் மாற்ற வேண்டும் என்றும் நீதிபதிகள் அனில் கே.நரேந்திரன், எஸ்.முரளி கிருஷ்ணா ஆகியோர் உத்தர விட்டு உள்ளனர்.


    மேலும் பக்தர்கள் உடைக்கும் தேங்காய்களை கொப்பரை தொழிலாளர்கள் சட்ட விரோதமாக சேகரிப்பதை தடுக்க சன்னிதானம் நிர்வாக அதிகாரி மற்றும் தேவசம் விஜிலென்ஸ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் தெரிவித்து உள்ளனர்.

    • சாலையோரம் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது லாரி ஏறியதால் பலரும் அதன் சக்கரத்தில் சிக்கினர்.
    • விபத்து குறித்து கொடுங்கல்லூர் போலீஸ் துணை சூப்பிரண்டு ராஜூ மற்றும் வாழப்பாடி போலீசார் விசாரணை நடத்தினர்.

    திருவனந்தபுரம்:

    கேரளா - தமிழ்நாடு எல்லை அருகே உள்ள பாலக்காடு கோவிந்தபுரத்தை சேர்ந்தவர் காளியப்பன் (வயது 50). இவர் மேலும் சிலருடன் சேர்ந்து திருச்சூர் பகுதியில் நாடோடியாக வாழ்ந்து வந்தார். அவர்கள் நாட்டிகா என்ற இடத்தில் இரவு சாலையோரம் தூங்கி வந்தனர்.

    நேற்று இரவும் அவர்கள் ஒரு கும்பலாக அங்கு படுத்திருந்தனர். அந்த பகுதியில் சாலை பணி நடப்பதால் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. எனவே அங்கு வாகனங்கள் எதுவும் வராது என்ற நம்பிக்கையில் 25-க்கும் மேற்பட்டோர் அங்கு தூங்கிக் கொண்டிருந்தனர்.

    இந்த நிலையில் அவர்கள் படுத்திருந்த பகுதிக்கு எதிர்புறம் இன்று அதிகாலை 4 மணிக்கு மரக்கட்டைகள் ஏற்றிய லாரி சென்றுள்ளது. அந்த லாரி எதிர்பாராதவிதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி உள்ளது.

    அதே வேகத்தில் சாலையின் நடுவே இருந்த தடுப்புச்சுவரை இடித்துக்கொண்டு எதிர்புறம் பாய்ந்துள்ளது. அங்கு சாலையோரம் படுத்திருந்தவர்கள் மீது லாரி ஏறியது. என்ன நடந்தது என்று தெரியாமல் லாரியின் அடியில் சிக்கிக்கொண்டவர்கள் அலறினர். ஆனால் சிறிது தூரம் சென்ற பிறகே லாரி நின்றுள்ளது.

    சாலையோரம் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது லாரி ஏறியதால் பலரும் அதன் சக்கரத்தில் சிக்கினர். மேலும் சிலர் சாலையின் பல பகுதிகளிலும் தூக்கி வீசப்பட்டனர். இதனால் அந்த பகுதி போர்க்களம் போல காணப்பட்டது.

    விபத்தில் சிக்கியவர்கள் எழுப்பிய கூக்குரல் அந்த பகுதி முழுவதும் எதிரொலித்ததால் அந்தப்பகுதி மக்கள் அங்கு திரண்டனர். அப்போது சாலை முழுவதும் மனித உடல்கள் சிதறி கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    இதுகுறித்து போலீசாருக்கும் 108 ஆம்புலன்சுக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடம் விரைந்து வந்தனர். போலீசாரும், பகுதி மக்களும் மீட்பு பணியில் வேகமாக ஈடுபட்டனர். இருப்பினும் இந்த விபத்தில் 2 குழந்தைகள் உள்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகி விட்டனர்.

    மேலும் 11 பேர் பலத்த காயத்துடன் உயிருக்கு போராடிக் கொண்டி ருந்தனர். அவர்கள் ஆம்புலன்சு மூலம் உடனடியாக ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இவர்களில் 7 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதால், அவர்கள் திருச்சூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    விபத்து குறித்து கொடுங்கல்லூர் போலீஸ் துணை சூப்பிரண்டு ராஜூ மற்றும் வாழப்பாடி போலீசார் விசாரணை நடத்தினர். லாரி டிரைவர் கண்ணூர் அலெக்ஸ் (33), கிளீனர் ஜோஸ் (54) ஆகியோரை கைது செய்தனர். கண்ணூரில் இருந்து மரக்கட்டை பாரம் ஏற்றிக் கொண்டு லாரி வந்துள்ளது.

    விபத்துக்கு காரணம் டிரைவர் தூங்கியதா? அல்லது மதுபோதையில் வந்தாரா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில் விபத்தில் பலியானவர்கள் காளியப்பன், நாகம்மா (39), பங்காழி (20), ஜீவன் (4), விஷ்வா (11) என தெரியவந்துள்ளது. இவர்கள் ஓரே குடும்பத்தை சேர்ந்தவர்களா? அல்லது வேறு வேறு பகுதிகளை சேர்ந்தவர்களா? என்ற விவரம் தெரிய வரவில்லை. இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • சிக்னல்களை மதிக்காமல் போக்குவரத்து விதிகளை மீறி சென்றுள்ளார்.
    • குடி போதையில் ஆபத்தான முறையில் வானம் ஓட்டியதாக வழக்கு.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் பையனூர் பகுதியை சேர்ந்தவர் கணபதி. மலையாள திரைப் பட நடிகரான இவர் சம்பவத்தன்று இரவு தனது காரில் வேகமாக சென்றுள் ளார். அங்கமாலி-களமச்சேரி இடையே தேசிய நெடுஞ்சாலையில் இருந்த சிக்னல்களை மதிக்காமல் போக்குவரத்து விதிகளை மீறி அதிவேகமாக சென்றிருக்கிறார்.

    இதுகுறித்து தகவலறிந்த போலீசார், அத்தானி மற்றும் ஆலுவா பகுதியில் காரை நிறுத்துமாறு சைகை காண்பித்துள்ளனர். ஆனால் அதன்பிறகும் நடிகர் தனது காரை நிறுத்தாமல் வேகமாகவும், தாறுமாறாகவும் காரை ஓட்டிச் சென்றார். இதையடுத்து நடிகரின் காரை போலீசார் தங்களின் வாகனத்தில் காரை பின்தொடர்ந்து சென்றனர்.

    களமச்சேரி பகுதியில் நடிகரின் காரை போலீசார் தடுத்து நிறுத்தினர். காரில் இருந்த நடிகர் கணபதிக்கு மது பரிசோனை செய்யப்பட்டது. அப்போது அவர் குடிபோதையில் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து நடிகரை போலீசார் கைது செய்தனர். பின்பு அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

    அவர் மீது குடி போதையில் ஆபத்தான முறையில் வானம் ஓட்டியதாகவும், போலீசாரின் அறிவுறுத்தல்களை மீறியதாகவும் வழக்கு பதியப்பட்டது. குடிபோதையில் காரை வேகமாகவும், தாறு மாறாகவும் காரை ஓட்டிச் சென்ற நடிகரை போலீசார் கைது செய்த சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • சபரிமலைக்கு ரூ.41கோடியே 64 லட்சம் வருவாய் கிடைத்துள்ளது.
    • பக்தர்களை சன்னதிக்கு நேராக அனுப்ப சில மாற்றங்கள்.

    திருவனந்தபுரம்:

    சபரிமலை ஐயப்பன்கோவிலில் மண்டல பூஜை கடந்த 16-ந்தேதி தொடங்கி யது. தினமும் ஆயிரக்கணக் கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். மண்டல பூஜைக்காக கோவில் நடை திறக்கப்பட்டு நேற்றுடன் 9 நாட்கள் ஆகும் நிலையில், 6 லட்சம் பக்தர்கள் சபரிமலைக்கு வந்துள்ளனர். ரூ.41கோடியே 64 லட்சம் வருவாய் கிடைத்துள்ளது.

    இது கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் பக்தர்கள் வருகை மற்றும் வருமானம் அதிகம் என்று தேவசம் போர்டு தலைவர் பிரசாந்த் தெரிவித்துள்ளார். சபரிமலைக்கு வரக்கூடிய பக்தர்கள் சாமி தரிசனம் செய்யாமல் திரும்ப வேண்டிய அவசியம் இருக்காது என்றும், அதற்கான அனைத்து வசதிகளும் செய்துகொடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

    பக்தர்கள் சிரமமின்றி சாமி தரிசனம் செய்யவும், தினமும் அதிகமான பக்தர்கள் சபரிமலைக்கு வருவதற்கும் தேவையான பல்வேறு நடவடிக்கைகளை தேவசம்போர்டு செய்திருக்கிறது.

    கூடுதல் நேரம் சாமி தரிசனம் செய்ய வழிவகை செய்ய வேண்டும் என்று பக்தர்களின் தரப்பில் கோரிக்கை வைக்கப் பட்டுள்ளது.

    அதற்கான ஏற்பாடுகளை செய்ய தேவசம்போர்டு தயாராகி வருகிறது. தற்போது பதினெட்டாம் படி ஏறும் பக்தர்கள், சாமி தரிசனம் செய்ய செல்வதற்கு சன்னிதான பகுதியில் உள்ள மேம்பால பகுதியில் நடந்து செல்ல வேண்டும். கூட்ட நெரிசல் அதிகம் உள்ள நேரங்களில் பக்தர்கள் இந்த மேம்பால பகுதியில் வெகுநேரம் காத்திருக்கும் நிலை ஏற்படும்.

    இதனை மாற்றுவது குறித்து தேவசம்போர்டு பரிசீலனை செய்து வருகிறது. பதினெட்டாம் படி ஏறி வரும் பக்தர்களை, பாலத்தில் ஏறச்செய்யாமல் நேரடியாக சன்னதிக்கு முன்புறம் அனுப்புவதன் மூலம் பக்தர்கள் கூடுதல் நேரம் சாமியை தரிசிக்க முடியும். ஆகவே அந்த முறையை செயல்படுத்த தேவசம் போர்டு திட்டமிட்டு வருகிறது.

    இதுதொடர்பாக பரிசீலனை செய்யப்பட்டு வருவதாக தேவசம்போர்டு தலைவர் பிரசாந்த் தெரிவித் துள்ளார். அவ்வாறு பாலத்தில் ஏறிச் செல்லாமல் பக்தர்களை சன்னதிக்கு நேராக அனுப்பவதற்கு சில மாற்றங்களை செய்ய வேண்டும். அதனை செய்த பிறகு இந்த முறை அமல்படுத்தப்படலாம் என தெரிகிறது.

    ×