என் மலர்
கர்நாடகா
- மழை பெய்ததால் டாஸ் சுண்டுவதில் தாமதம் ஏற்பட்டது.
- டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
பெங்களூரு:
ஐபிஎல் சீசனின் 34-வது லீக் போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடந்து வருகிறது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. மழை பெய்ததால் டாஸ் சுண்டுவதில் தாமதம் ஏற்பட்டது.
சுமார் 9.30 மணிக்கு டாஸ் சுண்டப்பட்டது. பஞ்சாப் கிங்ஸ் அணி கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி, பெங்களூரு அணி முதலில் களமிறங்கியது. ஆரம்பம் முதலே பெங்களூரு அணியின் விக்கெட்கள் சீரான இடைவெளியில் விழுந்தன.
கேப்டன் ரஜத் படிதார் 18 பந்தில் 23 ரன்கள் எடுத்தார். மற்றவர்கள் விரைவில் வெளியேறினர். கடைசி கட்டத்தில் போராடிய டிம் டேவிட் 26 பந்தில் 50 ரன்கள் எடுத்தார். கடைசி ஓவரில் 3 சிக்சர் விளாசினார்.
இறுதியில், பெங்களூரு அணி நிர்ணயிக்கப்பட்ட 14 ஓவரில் 95 ரன்கள் எடுத்தது.
பஞ்சாப் அணி சார்பில் யான்சேன், சஹல், அர்ஷ்தீப் சிங், பிரார் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து, 96 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் அணி களமிறங்குகிறது.
- அமைச்சரவை கூட்டத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கை தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது.
- மீடியாக்களில் சில அமைச்சர்கள் ஒருவருக்கொருவர் ரத்த குரலுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக வெளியாக செய்தி பொய்யானது.
கர்நாடகா மாநிலத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டு அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது. ஆனால் அறிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்டு அமல்படுத்தப்படவில்லை.
இந்த அறிக்கை தொடர்பாக சிறப்பு அமைச்சரவை கூட்டப்பட்டு ஆலோசனை நடத்தப்படும் என முதல்வர் சித்தராமையா தெரிவித்திருந்தார். அதன்படி நேற்று அமைச்சரவை கூடி, ஆலோசனை நடத்தப்பட்டது. அந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டு, உரத்த குரலுடன் விவாதம் நடைபெற்றதாக மீடியாக்களில் செய்திகள் வெளியானது.
இந்த நிலையில் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாக இது தொடர்பாக கூறியதாவது:-
நேற்று அமைச்சரவை கூட்டத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கை தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது. ஆலோசனை இன்னும் முடிவடையவில்லை. அடுத்த அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்படும். இதற்கு யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.
மீடியாக்களில் சில அமைச்சர்கள் ஒருவருக்கொருவர் ரத்த குரலுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக வெளியாக செய்தி பொய்யானது. எங்களுடைய கருத்துகனை முன்வைத்தோம். அவ்வளவுதான். வாக்குவாதமோ, குரலை உயர்த்தி பேசிய சம்பவங்களோ நடைபெறவில்லை. ஆலோசனைகள் கொடுக்கப்பட்டது. அதைத்தவிர வேறும் எதுவும் முடிவு செய்யப்படவில்லை.
இவ்வாறு சித்தராமையாக தெரிவித்தார்.
- கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர்.
- போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பெங்களூரு:
மேற்கு வங்காள மாநிலம் கூச் பெகர் பகுதியை சேர்ந்த சுமார் 20 வயது இளம்பெண் ஒருவர் கேரளாவில் உள்ள ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த 16-ந்தேதி மங்களூருவில் உள்ள நிறுவனங்களில் வேலை தேடுவதற்காக தனது நண்பர்களுடன் அந்த இளம்பெண் வந்தார். அப்போது அவர்களுக்குள் திடீரென்று தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில் இளம்பெண்ணின் செல்போன் சேதம் அடைந்தது. இதையடுத்து அவர் செல்போனை பழுது பார்க்க ஒரு ஆட்டோவில் ஏறி சென்றார்.
அப்போது அவர்களுக்குள் நட்பு ஏற்பட்டது. பின்னர் இரவு ரெயில் நிலையத்தில் தன்னை இறக்கி விடும்படியும், சொந்த ஊருக்கு செல்ல இருப்பதாகவும் இளம்பெண் ஆட்டோ டிரைவரிடம் தெரிவித்துள்ளார்.
ஆனால் ஆட்டோ டிரைவர் இளம்பெண்ணை ரெயில் நிலையத்துக்கு அழைத்து செல்லாமல் உல்லால் அருகே முன்னூர் பகுதியில் உள்ள நேத்ராவதி ஆற்றங்கரைக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு வைத்து இளம்பெண்ணை அவர் வலுக்கட்டாயமாக மதுவை குடிக்க வைத்ததாக தெரிகிறது.
இதனால் அவர் சுயநினைவை இழந்துள்ளார். பின்னர் ஆட்டோ டிரைவர், தனது நண்பர்கள் 2 பேரை அங்கு வரவழைத்துள்ளார். அங்கு வைத்து 3 பேரும் சேர்ந்து இளம்பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்ததாக தெரிகிறது.
இதையடுத்து அவர்கள் 3 பேரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இந்த நிலையில் அதிகாலை 1.30 மணி அளவில் அவருக்கு சுயநினைவு திரும்பியது. அப்போது தான் தன்னை ஆட்டோ டிரைவர் உள்பட 3 பேர் கூட்டு பலாத்காரம் செய்தது அவருக்கு தெரியவந்தது.
இதையடுத்து அவர் உள்ளூர் மக்கள் மற்றும் ஒய்சாலா போலீசார் உதவியுடன் ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற்றார்.
பின்னர் இந்த சம்பவம் குறித்து அந்த பெண், உல்லால் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார், அந்தப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர்.
மேலும் இளம்பெண் ஆட்டோ டிரைவருக்கு கூகுள் பே மூலம் பணம் செலுத்தியிருந்தார். அதன் அடிப்படையிலும் போலீசார் விசாரணை நடத்தினர்.
அப்போது அவர் முல்கியை சேர்ந்த பிரபுராஜ் (வயது 38) என்பது தெரியவந்தது. மேலும் அவர் தான் இளம்பெண்ணை கடத்தி சென்றதும், தனது நண்பர்களுடன் சேர்ந்து கூட்டு பலாத்காரம் செய்ததும் தெரியவந்தது.
பின்னர் போலீசார் ஆட்டோ டிரைவர் பிரபுராஜ், அவரது நண்பர்களான கும்பாலாவை சேர்ந்த மிதுன் (30), மணீஷ் (30) ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- சதீசுக்கு சொந்தமான ஜே.பி.நகர் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.
- காகசியன் ஷெப்பர்டு இன நாய் வாங்கியதற்கான எந்த ஆவணங்களும் அதிகாரிகளுக்கு சிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
பெங்களூரு ஜே.பி.நகரை சேர்ந்தவர் சதீஸ்(வயது 51). தொழில் அதிபரான இவர், விலை உயர்ந்த நாய்களை வாங்கி வளர்ப்பது வழக்கம். மேலும் அந்த நாய்களை பொது நிகழ்ச்சிகளுக்கு அழைத்து சென்று வந்தார். அதன்படி கடந்த சில நாட்களுக்கு முன்பு 'காகசியன் ஷெப்பர்டு' வகையை சேர்ந்த நாய் ஒன்றை வாங்கியிருந்தார்.
அந்த நாயின் விலை ரூ.50 கோடி என்று கூறப்படுகிறது. சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அந்த வளர்ப்பு நாயுடன் சதீஸ் கலந்து கொண்டார். அப்போது நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களிடம் ரூ.50 கோடி விலை கொடுத்து இந்த நாயை வாங்கியதாக கூறினார். இதுகுறித்த தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகி பேசுபொருளாக மாறியது.
இதுபற்றி அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு புகார் வந்தது. இதையடுத்து அமலாக்கத்துறை அதிகாரிகள், தொழில் அதிபர் சதீஸ் வீட்டில் சோதனை நடத்த முடிவு செய்தனர்.
அதன்படி நேற்று சதீசுக்கு சொந்தமான ஜே.பி.நகர் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். காலை முதல் மாலை வரை நடந்த இந்த சோதனையில் காகசியன் ஷெப்பர்டு இன நாய் வாங்கியதற்கான எந்த ஆவணங்களும் அதிகாரிகளுக்கு சிக்கவில்லை என்று கூறப்படுகிறது. அதாவது விலை உயர்ந்த நாயை வாங்கியது உண்மை. ஆனால் அதற்கான ஆவணங்கள் கிடைக்கவில்லை.
இதையடுத்து சதீஸ் ரூ.50 கோடி கொடுத்து நாய் வாங்கியது பொய்யான தகவல் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இருப்பினும் தொழில் அதிபர் சதீசுக்கு இந்த விலை உயர்ந்த நாய் வாங்க பணம் எப்படி வந்தது என்பது பற்றிய ஆவணங்கள் அதிகாரிகளுக்கு கிடைத்திருப்பதாக கூறப்படுகிறது. அதன் அடிப்படையில் சதீசிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்த முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
- 2014ஆம் ஆண்டுக்கு முன் 10 கிராம் தங்கம் விலை 28 ஆயிரம் ரூபாயாக இருந்தது. தற்போது 95 ஆயிரம் ரூபாயாக உயர்ந்துள்ளது.
- அமெரிக்க டாலருக்கு நிகராக இந்தியாவின் பண மதிப்பு 2014-ல் 59 ரூபாயாக இருந்தது. தற்போது 87 ரூபாயாக உள்ளது.
தங்கம் முதல் அனைத்து பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது என பிரதமர் மோடியை, கர்நாடக மாநில முதலமைச்சர் சித்தராமையா கடுமையாக விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக சித்தராமையா கூறியதாவது:-
பாஜக பெட்ரோல் மற்றும் டீசல் மீதான விலையை தலா 2 ரூபாய் உயர்த்தியுள்ளது. சமையல் எரிவாயு விலையும் 50 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. நாட்டில் உள்ள விலைவாசி உயர்வுக்கு நரேந்திர மோடி பொறுப்பேற்க வேண்டும். நல்ல நாட்கள் வரும்? என பிரதமர் மோடி சொல்வில்லையா?.
2014ஆம் ஆண்டுக்கு முன் 10 கிராம் தங்கம் விலை 28 ஆயிரம் ரூபாயாக இருந்தது. தற்போது 95 ஆயிரம் ரூபாயாக உயர்ந்துள்ளது.
அதேபோல் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியின்போது வெள்ளி விலை ஒரு கிலோ 43 ஆயிரமாக இருந்தது. தற்போது 94 ஆயிரம் ரூபாயாக உயர்ந்துள்ளது.
அமெரிக்க டாலருக்கு நிகராக இந்தியாவின் பண மதிப்பு 2014-ல் 59 ரூபாயாக இருந்தது. தற்போது 87 ரூபாயாக உள்ளது. மிஸ்டர் நரேந்திர மோடி, நீங்கள் ஆட்சிக்கு வரும்போது டாலருக்கு இணையாக இந்தியாவின் பண மதிப்பை கொண்டு வருவோம் என வாக்கு அளித்தீர்கள். இதற்கு பொறுப்பேற்பது யார்?. இது ஏழைகளின் ரத்தத்தை உறிஞ்சுவது இல்லையா? மிஸ்டர் மோடி.
50 கிலோ சிமெண்ட் மூட்டை 2014-க்கு முன்னதாக 268 ரூபாயாக இருந்தது. ஆனால் இன்று 410 ரூபாயாக உள்ளது.
இரும்பு ஒரு டன் 19 ஆயிரமாக இருந்தது. தற்போது 73 ஆயிரமாக உள்ளது. பிவிசி பைப்புகள் ஒரு யுனிட் 60 ரூபாய் என்ற வகையில் இருந்தது. இதை தற்போது 150 ரூபாயாக உயர்ந்து்ளது.
கர்நாடகாவில் பொதுமக்கள் கோபம் பேரணியை பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சி நடத்த திட்டமிட்டுள்ளது. பாஜக மத்தியில் ஆட்சிக்கு வந்ததில் இருந்து, விலைவாசி உயர்வால் மக்கள் மீது சுமையை திணித்தது. வெட்கமில்லாத பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சியான ஜேடி(எஸ்) கட்சிக்கு போராட்டம் நடத்த தார்மீக உரிமை இல்லை. அவர்களுக்கு சுயமரியாதை அல்லது வெட்கம் இருக்கிறதா?.
இவ்வாறு சித்தராமையா தெரிவித்துள்ளார்.
- போராட்டத்தை தீவிரப்படுத்துவதாக லாரி உரிமையாளர்கள் சங்கங்கள் அறிவித்துள்ளன.
- 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட லாரிகள் தடைபட்டுள்ளது.
டீசல் விலை உயர்வு மற்றும் சுங்கசாவடி கட்டண உயர்வை திரும்ப பெறுவது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கர்நாடக மாநில லாரி உரிமையாளர்கள் கடந்த 2 நாட்களாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இன்று 3-வது நாளாக வேலைநிறுத்தம் தொடர்கிறது.
இதனால் கர்நாடக மாநிலத்தில் தண்ணீர், கியாஸ் உள்பட அத்தியாவசிய பணிகள் முடங்கி உள்ளது. இது தொடர்பாக கர்நாடகாவில் முதலமைச்சர் தலைமையில் பேச்சு வார்த்தை நடத்தியும் எந்த வித உடன்பாடும் இல்லாததால் இன்று முதல் போராட்டத்தை தீவிரப்படுத்துவதாக லாரி உரிமையாளர்கள் சங்கங்கள் அறிவித்துள்ளன.
இந்த வேலை நிறுத்த போராட்டத்தால் கர்நாடக மாநிலம் வழியாக வட மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வரும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட லாரிகள் தடைபட்டுள்ளது.
இதேபோல தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கர்நாடக மாநிலம் வழியாக வட மாநிலங்களுக்கு செல்லும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட லாரிகளும் செல்ல முடியாமல் கர்நாடக எல்லை பகுதி உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்த போராட்டத்தால் தமிழகத்தில் இருந்து வட மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படும் இரும்பு தளவாடங்கள், கனிம வளங்கள், முட்டைகள், கறிக்கோழிகள், வெல்லம், கோழித்தீவனம், கயிறு பண்டல்கள், எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள், சின்டெக்ஸ் டேங்குகள், பி.வி.சி. பைப்புகள், மஞ்சள், ஜவ்வரிசி, ஜவுளி, கல்மாவு, தீப்பெட்டிகள், காய்கறிகள் உள்பட ரூ.200 கோடி மதிப்பிலான பொருட்கள் 2 நாட்களில் தேக்கம் அடைந்துள்ளன. இதனால் அதில் தொடர்புடை யவர்கள் வேலையின்றி தவித்து வருகிறார்கள்.
இதே போல கர்நாடகா வழியாக வடமாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு கொண்டு வரப்படும் வெங்காயம், பருப்பு வகைகள், மக்காச்சோளம், கார் மற்றும் இரு சக்கர வாகனங்கள், தானிய வகைகள், பூண்டு, எண்ணை வகைககள், தக்காளி, பீட்ரூட், கேரட், முட்டை கோஸ், காலிபிளவர், ஆப்பிள், ஆரஞ்சு, சாத்துக்குடி உள்பட பழ வகைகள், தொழில் நிறுவனங்களுக்கு தேவையான உபகரணங்கள், கொண்டு வரப்படுவதும் முற்றிலும் தடை பட்டுள்ளது.
இதனால் தமிழகத்தில் உள்ள காய் கறி மார்க்கெட்டுகள், பழ மார்க்கெட்டுகள், தொழில் நிறுவனங்களுக்கு தேவையான பொருட்கள் வரத்து குறைந்துள்ளது . இதனால் அந்த பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இந்த போராட்டத்தால் லாரி உரிமையாளர்களுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதுடன், டிரைவர், கிளீனர்கள் உள்பட 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வேலை இழந்து தவித்து வருகிறார்கள். எனவே இந்த போராட்டத்தை கர்நாடக அரசு உடனடியாக முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்பது அனைவரின் பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது.
- அரசு ஒப்பந்தத்தில் முஸ்லிம்களுக்கு 4 சதவீதம் வழங்க விதமாக சட்டத்தில் திருத்தம்.
- திருத்த மசோதா கவர்னர் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது.
சித்தராமையா தலைமையிலான கர்நாடக மாநில காங்கிரஸ் அரசு, அரசு ஒப்பந்தங்களில் முஸ்லிம்களுக்கு 4 சதவீதம் ஒதுக்கீடு வழங்க முடிவு செய்தது. இதற்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. அதனைத் தொடர்ந்து மசோதா சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது.
இந்த மசோதாவை கவர்னருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்திய அரசியலமைப்பு மதம் அடிப்படையில் இடஒதுக்கீட்டை அனுமதிக்கவில்லை என கவர்னர், மசோதாவை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளார்.
- இந்த விபத்தினால் டேங்கர் லாரியில் இருந்த தண்ணீர் சாலையில் கொட்டியது.
- இந்த விபத்தில் தண்ணீர் டேங்கர் லாரி ஓட்டுநர் உட்பட 2 பேர் காயமடைந்தனர்.
கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் கட்டுப்பாட்டை இழந்த தண்ணீர் டேங்கர் லாரி ஒன்று சாலையில் உருண்டு விபத்துக்குள்ளான அதிர்ச்சி வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
ஒரு லாரியை முந்தி செல்ல முயன்றபோது கட்டுப்பாட்டை இழந்த தண்ணீர் டேங்கர் லாரி சாலையில் கவிழ்ந்துள்ளது. டேங்கர் லாரிக்கு பின்னால் வந்த லாரியின் ஓட்டுநர் உடனடியாக லாரியை நிறுத்தினார். இந்த விபத்தினால் டேங்கர் லாரியில் இருந்த தண்ணீர் சாலையில் கொட்டியது.
இந்த விபத்தில் தண்ணீர் டேங்கர் லாரி ஓட்டுநர் உட்பட 2 பேர் காயமடைந்தனர். இந்த சம்பவத்தில் டேங்கர் லாரியின் ஓட்டுநர் மற்றும் உடன் பயணித்தவர் காயமடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
- கர்நாடகாவில் நேற்று நள்ளிரவு 12 மணி முதல் லாரிகள் இயங்கவில்லை.
- மாநிலங்களிடையேயான சரக்கு லாரிகள் போக்குவரத்து சேவை முடக்கம்.
கர்நாடக மாநிலத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு டீசல் விலை லிட்டருக்கு 2 ரூபாய் உயர்த்தப்பட்டது. இதற்கு லாரி உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன், அதனை வாபஸ் பெறாவிட்டால் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபடுவோம் என எச்சரிக்கை விடுத்தனர். ஆனால் மாநில அரசு அதனை கண்டு கொள்ளவில்லை.
இதையடுத்து டீசல் விலையை திரும்ப பெற வேண்டும், எல்லையில் உள்ள சுங்கச்சாவடியை அகற்ற வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி கர்நாடகாவில் நேற்று நள்ளிரவு 12 மணி முதல் லாரிகள் இயங்கவில்லை.
இந்த போராட்டத்தில் 5 லட்சத்திற்கும் அதிகமான லாரிகள் பங்கேற்றுள்ளதால் மாநிலங்களிடையேயான சரக்கு லாரிகள் போக்குவரத்து சேவை முற்றிலும் முடங்கி உள்ளது.
குறிப்பாக கர்நாடக மாநிலம் வழியாக மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், உத்திரபிரதேசம், டெல்லி உள்பட பல்வேறு மாநிலங்களுக்கு தினசரி தமிழகத்தில் இருந்து 5 ஆயிரம் லாரிகள் செல்கின்றன.
இதே போல வட மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு தினசரி 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட லாரிகள் கர்நாடகா வழியாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் வருகின்றன.
கர்நாடகாவில் லாரி ஸ்டிரைக் தொடங்கி உள்ளதால் அந்த மாநிலம் வழியாக லாரிகள் இயக்கினால் கற்கள் வீசப்படலாம், மேலும் டிரைவர்களை தாக்கி லாரிகளை சேதப்படுத்தலாம் என்ற நிலை உள்ளதால் அந்த வழியாக லாரிகளை இயக்க வேண்டாம் என்று தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் அறிவித்துள்ளது.
இதனால் கர்நாடகா வழியாக தமிழகத்தில் இருந்து வட மாநிலம் செல்லும் லாரிகள் இயக்கப்பட வில்லை. இதே போல வடமாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வரும் லாரிகளும் இயக்கப்பட வில்லை. இதனால் தமிழகத்தில் இருந்து செல்லும் லாரிகள் கிருஷ்ணகிரி மவாவட்ட எல்லை பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
அத்தியாவசிய தேவைகளுக்காக செல்லும் லாரிகள் ஆந்திரா மாநிலம் வழியாக சுற்றி சென்று வருகின்றன. இதனால் கூடுதலாக 200 கி.மீ. தூரம் வரை சுற்றி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் இருந்து வடமாநிலத்திற்கு செல்லும் லாரிகள் நிறுத்தப்பட்டுள்ளதால் இங்கிருந்து வடமாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படும் தேங்காய், ஜவுளி, ஜவ்வரிசி, தீப்பெட்டி, மஞ்சள், முட்டை, கறிக்கோழி, இரும்பு தளவாடங்கள், காய்கறிகள் உள்பட பல்வேறு பொருட்கள் கொண்டு செல்ல முடியாமல் தேக்கம் அடைந்துள்ளன .
பால், மருந்து பொருட்கள் உள்பட அத்தியாவசிய பொருட்கள் கொண்டு செல்லப்படும் லாரிகள் மட்டும் இயக்க அனுமதிக்கபபடுகிறது. இதே போல வடமாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு கொண்டு வரப்படும் பூண்டு, எண்ணை வகைகள், வெங்காயம், பருப்பு, மக்காச்சோளம் மற்றும் காய்கறிகள் தமிழகத்திற்கு கொண்டு வரப்படுவது முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக தமிழகம் மற்றும் கர்நாடகாவிற்கு இடையே 700 சரக்கு லாரிகள் இயக்கப்படுகின்றன. இவற்றில் 50 சதவீத லாரிகளில் தக்காளி, பீட்ரூட், கோஸ், கேரட் ஆகியவை சென்னை உள்பட பல்வேறு மார்க்கெட்களுக்கு கொண்டு வரப்படுகிறது.
லாரிகள் வேலை நிறுத்தத்தால் காய்கறிகள் வரத்து பாதிப்பு ஏற்படும். இதனால் இந்த பொருட்கள் தட்டுப்பாடு ஏற்படும் நிலையில் அதற்கான விலை உடனடியாக உயரும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே லாரி உரிமையாளர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
கர்நாடக போக்குவரத்து துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி கூறுகையில் கடந்த 10 ஆண்டுகளில் மத்திய அரசு டீசல் விலையை உயர்த்திய போது லாரி உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவிக்க வில்லை. மாநில அரசின் சிறிய விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்னர்.
புதுச்சேரியை தவிர கர்நாடகாவில் தான் டீசல் விலை தென்னகத்திலேயே மலிவானது. பொது நலனுக்காக வேலை நிறுத்தத்தை அவர்கள் ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
- பெலகாவி-மிரஜ் வழித்தடத்தில் அனைத்து ரெயில் சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளன.
- 3 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் ஆங்காங்கே நடுவழியில் நிறுத்தப்பட்டது.
பெங்களூரு:
கர்நாடக மாநிலம் பெலகாவி பகுதியில் உள்ள ஒரு தனியார் தொழிற்சாலையில் இருந்து மீரஜ் நோக்கி இரும்புதாது ஏற்றிக்கொண்டு ஒரு சரக்கு ரெயில் இன்று காலை புறப்பட்டது. இந்த ரெயில் பெலகாவி பகுதியில் தடம் புரண்டு விபத்தானது.
இதுப்பற்றி தெரியவந்ததும் ரெயில்வே உயர் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அப்போது தடம் புரண்ட ரெயிலை மீட்கும் பணி சுமார் 3 மணி முதல் 4 மணி நேரம் ஆகும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த விபத்து காரணமாக பெலகாவி-மிரஜ் வழித்தடத்தில் அனைத்து ரெயில் சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளன. சீரமைப்பு பணிகள் முடிந்ததும் மீண்டும் ரெயில் சேவை தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்து காரணமாக அந்த வழியாக வந்து கொண்டு இருந்த 3 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் ஆங்காங்கே நடுவழியில் நிறுத்தப்பட்டது.
- சாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கை தொடர்பாக வருகிற 17ஆம் தேதி ஆலோசனை நடத்த அமைச்சரவை கூட்டப்பட்டுள்ளது.
- அமைச்சரவையில் சாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கை குறித்து ஆலோசனைப்படுத்தப்படும்.
கர்நாடகா மாநிலத்தில் ஹெச். கந்தராஜு தலைமையில் அம்மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் முந்தைய சித்தராமையாக ஆட்சிக்காலத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு பணியை தொடங்கியது. கடந்த 2018ஆம் ஆண்டு இந்த பணி முடிவடைந்தது. பின்னர் கடந்த ஆண்டு 2024ஆம் ஆண்டு கே. ஜெயபிரகாஷ் ஹெக்டே தலைமையிலான ஆணையம் அறிக்கை தயார் செய்தது.
ஆனால் அறிக்கை இன்னும் வெளியிடாமல் உள்ளது. இந்த நிலையில் இன்று கர்நாடகா மாநில முதல்வரிடம் இது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது வருகிற 17ஆம் தேதி அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது. அதன்பின் இது தொடர்பாக பேசுகிறேன் என்றார்.
இது தொடர்பாக சித்தராமையா கூறுகையில் "சாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கை தொடர்பாக வருகிற 17ஆம் தேதி ஆலோசனை நடத்த அமைச்சரவை கூட்டப்பட்டுள்ளது. அமைச்சரவையில் இது தொடர்பாக ஆலோசனை நடத்தப்படும். இந்த ஆலோசனைக்குப் பிறகு நான் இது தொடர்பாக பேசுவேன்" என்றார்.
கடந்த 11ஆம் தேதி சமூக-பொருளாதார மற்றும் கல்வி ஆய்வறிக்கையை கர்நாடக மாநில அமைச்சரவை ஏற்றுக்கொண்டது.
- சிறுமியை கடத்தி செல்லும் காட்சி கேமராவில் பதிவாகி இருந்தது.
- சிறுமியின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் இழப்பீடு
பெங்களூரு:
கர்நாடக மாநிலம் தார்வார் மாவட்டம் உப்பள்ளி விஜய நகரில் வசித்து வந்த தம்பதிக்கு 5 வயதில் மகள் இருந்தாள். அந்த சிறுமியின் தந்தை பெயிண்டராகவும், தாய் வீட்டு வேலையும் செய்து வந்தனர். அவளது தாய், விஜயநகர் அத்யபாக் நகரில் உள்ள வீட்டுக்கு வேலைக்கு சென்றார்.
அப்போது தாயுடன் அந்த சிறுமியும் சென்றுள்ளாள். அவளது தாய் வீட்டிற்குள் வேலை பார்த்து கொண்டிருந்தார். அப்போது, சிறுமி வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்தாள். அங்கு வந்த பீகார் மாநிலம் பாட்னாவை சேர்ந்த ரித்தேஷ் குமார் (வயது 35) என்பவர் சிறுமியை கடத்தி சென்று கற்பழித்து கழுத்தை நெரித்து கொலை செய்தார். பின்னர் சிறுமியின் உடலை அருகாமையில் உள்ள ஒரு கொட்டகைக்குள் போட்டு விட்டு தப்பி ஓடினார்.
இது குறித்து அசோக் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சி.சி.டி.வி. காமிராவை ஆய்வு செய்தனர். அதில் ரித்தேஷ் குமார் சிறுமியை கடத்தி செல்லும் காட்சி பதிவாகி இருந்தது.
அவர் ஹூப்பள்ளியில் கூலி வேலை செய்து வருவதும், வீடு எதுவும் கிடைக்காததால் தாரிஹாலா பாலத்திற்கு அருகில் உள்ள பழைய கொட்டகையில் தங்கியிருப்பதும் தெரியவந்தது. அவரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
இதையடுத்து அசோக் நகர் போலீஸ் நிலைய பெண் சப்-இன்ஸ்பெக்டர் அன்னபூர்ணா தலைமையிலான போலீசார் விசாரணைக்காக ரித்தேஷ் குமாரை அவர் தங்கியிருந்த இடத்துக்கு அழைத்து சென்றனர்.
அப்போது தாரிஹால் பாலம் அருகே அழைத்து சென்றபோது ரித்தேஷ் குமார் தப்பிப்பதற்காக போலீஸ் வாகனத்தின் மீது கற்களை வீசி போலீசாரை கல்லால் தாக்கி தப்ப முயன்றார்.
இந்த தாக்குதலில் போலீஸ்காரர்கள் மொராபா மற்றும் வீரேஷ் ஆகியோர் காயம் அடைந்தனர். இதனால் தற்காப்புக்காக சப்-இன்ஸ்பெக்டர் அன்னப்பூர்ணா தனது துப்பாக்கியால் ரித்தேஷ் குமாரை சுட்டார்.
இதில் ரித்தேஷ் குமார் காலில் குண்டு பாய்ந்தது. இருப்பினும் அவர் தப்பிக்க முயன்றபோது அவரது நெஞ்சு பகுதியில் சுட்டார். இதில் மார்பு பகுதியில் குண்டு பாய்ந்து சம்பவ இடத்திலேயே பலியானார்.
ரித்தேஷ் குமார் உடல் கே.எம்.சி.ஆர்.ஐ. மருத்துவமனையில் வைக்கப்பட்டு உள்ளது. காயம் அடைந்த போலீசார் மொராபா மற்றும் வீரேஷ் ஆகியோருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
என்கவுன்டரில் குற்றவாளி கொலை செய்யப்பட்டதை அறிந்ததும் பொதுமக்கள் தங்கள் போராட்டத்தை கைவிட்டு கே.எம்.சி. மருத்துவமனை முன்பு கொண்டாடினர். மருத்துவமனைக்கு வருகை புரிந்த போலீஸ் கமிஷனர் சசிகுமாருக்கு அவர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
மேலும் எம்.எல்.ஏ பிரசாத் அப்பாய்யா மற்றும் தலைவர்கள் கே.எம்.சி.ஆர்.ஐ மருத்துவமனைக்குச் சென்று கமிஷனரை வாழ்த்தினர். சிறுமியின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கி முதல்-மந்திரி சித்தராமையா உத்தரவிட்டுள்ளார்.






