என் மலர்
இந்தியா

5 வயது சிறுமியை கடத்தி கொன்ற இளைஞர் என்கவுண்டரில் சுட்டுக்கொலை
- சிறுமியை கடத்தி செல்லும் காட்சி கேமராவில் பதிவாகி இருந்தது.
- சிறுமியின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் இழப்பீடு
பெங்களூரு:
கர்நாடக மாநிலம் தார்வார் மாவட்டம் உப்பள்ளி விஜய நகரில் வசித்து வந்த தம்பதிக்கு 5 வயதில் மகள் இருந்தாள். அந்த சிறுமியின் தந்தை பெயிண்டராகவும், தாய் வீட்டு வேலையும் செய்து வந்தனர். அவளது தாய், விஜயநகர் அத்யபாக் நகரில் உள்ள வீட்டுக்கு வேலைக்கு சென்றார்.
அப்போது தாயுடன் அந்த சிறுமியும் சென்றுள்ளாள். அவளது தாய் வீட்டிற்குள் வேலை பார்த்து கொண்டிருந்தார். அப்போது, சிறுமி வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்தாள். அங்கு வந்த பீகார் மாநிலம் பாட்னாவை சேர்ந்த ரித்தேஷ் குமார் (வயது 35) என்பவர் சிறுமியை கடத்தி சென்று கற்பழித்து கழுத்தை நெரித்து கொலை செய்தார். பின்னர் சிறுமியின் உடலை அருகாமையில் உள்ள ஒரு கொட்டகைக்குள் போட்டு விட்டு தப்பி ஓடினார்.
இது குறித்து அசோக் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சி.சி.டி.வி. காமிராவை ஆய்வு செய்தனர். அதில் ரித்தேஷ் குமார் சிறுமியை கடத்தி செல்லும் காட்சி பதிவாகி இருந்தது.
அவர் ஹூப்பள்ளியில் கூலி வேலை செய்து வருவதும், வீடு எதுவும் கிடைக்காததால் தாரிஹாலா பாலத்திற்கு அருகில் உள்ள பழைய கொட்டகையில் தங்கியிருப்பதும் தெரியவந்தது. அவரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
இதையடுத்து அசோக் நகர் போலீஸ் நிலைய பெண் சப்-இன்ஸ்பெக்டர் அன்னபூர்ணா தலைமையிலான போலீசார் விசாரணைக்காக ரித்தேஷ் குமாரை அவர் தங்கியிருந்த இடத்துக்கு அழைத்து சென்றனர்.
அப்போது தாரிஹால் பாலம் அருகே அழைத்து சென்றபோது ரித்தேஷ் குமார் தப்பிப்பதற்காக போலீஸ் வாகனத்தின் மீது கற்களை வீசி போலீசாரை கல்லால் தாக்கி தப்ப முயன்றார்.
இந்த தாக்குதலில் போலீஸ்காரர்கள் மொராபா மற்றும் வீரேஷ் ஆகியோர் காயம் அடைந்தனர். இதனால் தற்காப்புக்காக சப்-இன்ஸ்பெக்டர் அன்னப்பூர்ணா தனது துப்பாக்கியால் ரித்தேஷ் குமாரை சுட்டார்.
இதில் ரித்தேஷ் குமார் காலில் குண்டு பாய்ந்தது. இருப்பினும் அவர் தப்பிக்க முயன்றபோது அவரது நெஞ்சு பகுதியில் சுட்டார். இதில் மார்பு பகுதியில் குண்டு பாய்ந்து சம்பவ இடத்திலேயே பலியானார்.
ரித்தேஷ் குமார் உடல் கே.எம்.சி.ஆர்.ஐ. மருத்துவமனையில் வைக்கப்பட்டு உள்ளது. காயம் அடைந்த போலீசார் மொராபா மற்றும் வீரேஷ் ஆகியோருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
என்கவுன்டரில் குற்றவாளி கொலை செய்யப்பட்டதை அறிந்ததும் பொதுமக்கள் தங்கள் போராட்டத்தை கைவிட்டு கே.எம்.சி. மருத்துவமனை முன்பு கொண்டாடினர். மருத்துவமனைக்கு வருகை புரிந்த போலீஸ் கமிஷனர் சசிகுமாருக்கு அவர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
மேலும் எம்.எல்.ஏ பிரசாத் அப்பாய்யா மற்றும் தலைவர்கள் கே.எம்.சி.ஆர்.ஐ மருத்துவமனைக்குச் சென்று கமிஷனரை வாழ்த்தினர். சிறுமியின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கி முதல்-மந்திரி சித்தராமையா உத்தரவிட்டுள்ளார்.






