என் மலர்
ஆந்திர பிரதேசம்
- அப்பா நீங்கள் 10 நிமிடங்கள் தாமதமாக வந்தாலும் பரவாயில்லை. பத்திரமாக வீட்டிற்கு வாருங்கள் என எழுதப்பட்டுள்ளது.
- முதற்கட்டமாக ஏலூர் மாவட்டத்தில் 33 இடங்களில் இந்த விழிப்புணர்வு வாசகங்கள் வைக்கப்பட்டுள்ளன.
திருப்பதி:
ஆந்திர மாநிலம் ஏலூர் மாவட்டத்தில் சாலை விபத்துகளை குறைக்க போலீசார் புதுமையான விழிப்புணர்வு தொடங்கியுள்ளனர்.
வழக்கமான வேகம் மற்றும் எச்சரிக்கை அறிவுரைகளையும் தாண்டி இந்த மாவட்டத்தில் விபத்துகள் அதிகரித்தது.
இதனால் வாகன ஓட்டிகளுக்கு அவர்களுடைய வீட்டில் உள்ளவர்களை நினைவுபடுத்தும் வகையில் உணர்ச்சிகரமான வாசகங்கள் அடங்கிய பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.
சாலை சந்திப்புகள், விபத்து நடைபெறும் இடங்களில் சிறுமி ஒருவர் தனது கையில் வாசகத்துடன் நிற்பது போல பொம்மை அமைக்கப்பட்டுள்ளது.
அதில் அப்பா நீங்கள் 10 நிமிடங்கள் தாமதமாக வந்தாலும் பரவாயில்லை. பத்திரமாக வீட்டிற்கு வாருங்கள் என எழுதப்பட்டுள்ளது.
இது வாகன ஓட்டுபவர்கள் இதயத்தை வருடும் வார்த்தைகளாக உள்ளன. இதனால் வாகன ஓட்டிகள் நெகிழ்ச்சி அடைந்தனர்.
முதற்கட்டமாக ஏலூர் மாவட்டத்தில் 33 இடங்களில் இந்த விழிப்புணர்வு வாசகங்கள் வைக்கப்பட்டுள்ளன. கடுமையான தண்டனை, எச்சரிக்கை போன்றவற்றை விட உணர்ச்சிகரமான அணுகுமுறை பொதுமக்களுக்கு விரைவான விழிப்புணர்வை ஏற்படுத்தும் என போலீஸ் சூப்பிரண்டு பிரதாப் சிவ கிஷோர் தெரிவித்தார்.
- ஆந்திர மாநிலத்தில் மது கடைகள் தனியார் மயமாக்கப்பட்டுள்ளன.
- விலை பட்டியலை மதுக்கடைகளில் கட்டாயம் வைக்க வேண்டும்.
திருப்பதி:
ஆந்திர மாநிலத்தில் மது கடைகள் தனியார் மயமாக்கப்பட்டுள்ளன. ஏலம் மூலம் கடைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு மாநிலம் முழுவதும் தனியார் மது கடைகள் திறக்கப்பட்டன.
இந்த மதுக்கடைகளில் அரசு நிர்ணயித்துள்ள விலையைக் காட்டிலும் கூடுதல் விலைக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
இந்த நிலையில் நேற்று முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு தலைமையில் அரசு அதிகாரிகள் ஆய்வு கூட்டம் நடந்தது. இதில் முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு பேசுகையில், `மதுக்கடைகளில் கூடுதல் விலைக்கு மது பாட்டில்கள் விற்பனை செய்யக்கூடாது.
அரசு நிர்ணயித்துள்ள விலை பட்டியலை மதுக்கடைகளில் கட்டாயம் வைக்க வேண்டும். அனைத்து மது கடைகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும்.
மது பிரியர்கள் புகார் செய்வதற்காக கட்டணமில்லா தொலைபேசி வசதியை ஏற்படுத்தி, அந்த எண்ணை மது கடைகள் முன்பு எழுதி வைக்க வேண்டும்.
மதுபானங்கள் கூடுதல் விலைக்கு விற்பனை செய்தால் கடையின் உரிமையாளருக்கு ரூ.5 லட்சம் அபராதம் விதிக்கப்படும். தொடர்ந்து தவறு செய்தால் அவருடைய உரிமம் ரத்து செய்யப்படும்.
கள்ளத்தனமாக மது விற்பனையை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.
- வெடிகுண்டு கண்டறியும் கருவி மற்றும் மோப்ப நாய்களுடன் சோதனை நடத்தினர்.
- விஜயவாடா கிருஷ்ணா அலங்கா பகுதியில் உள்ள ஓட்டலுக்கு நேற்று வெடிகுண்டு மிரட்டல் வந்தது.
திருப்பதியில் உள்ள வராஹ சாமி கோவில், இஸ்கான் கோவில் மற்றும் 4 ஓட்டல்களுக்கு நேற்று வெடிகுண்டு மிரட்டல் விடுத்து தபால் வந்தது.
இதையடுத்து போலீசார் திருப்பதியில் வராக சாமி கோவில் இல்லாததால் இஸ்கான் கோவில் மற்றும் தபாலில் தெரிவிக்கப்பட்டு இருந்த ஓட்டல்களில் வெடிகுண்டு கண்டறியும் கருவி மற்றும் மோப்ப நாய்களுடன் சோதனை நடத்தினர்.
சோதனையில் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. இதனால் வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரிய வந்தது.
தொடர் வெடிகுண்டு மிரட்டலால் திருப்பதியில் தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் யாரும் வெடி குண்டு மிரட்டல் குறித்து அச்சம் கொள்ள தேவையில்லை என திருப்பதி போலீஸ் சூப்பிரண்டு சுப்பா ராயுடு தெரிவித்தார்.
இதேபோல் விஜயவாடா கிருஷ்ணா அலங்கா பகுதியில் உள்ள ஓட்டலுக்கு நேற்று வெடிகுண்டு மிரட்டல் வந்தது.
போலீசார் மோப்பநாய் மற்றும் வெடிகுண்டு கண்டறியும் கருவிகளுடன் ஓட்டல் முழுவதும் சோதனை நடத்தினர். அங்கு எந்த வெடிகுண்டும் இல்லை என்பது தெரிய வந்தது.
- என்னை ஜெகன் மோகன் ரெட்டி கோர்ட்டுக்கு இழுத்துச் சென்றார்.
- இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு தற்போது கோர்ட்டில் வழக்கு நிலுவையில் உள்ளது.
திருப்பதி:
ஆந்திர மாநில முன்னாள் முதல் மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி மற்றும் அவருடைய தங்கையும் மாநில காங்கிரஸ் தலைவருமான ஒய்.எஸ்.ஷர்மிளா இடையே சொத்து பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
அவருடைய தந்தை ராஜசேகர ரெட்டிக்கு சொந்தமான சரஸ்வதி பவர் அண்ட் இண்டஸ்ட்ரீஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவன பங்குகள் தொடர்பாக இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு தற்போது கோர்ட்டில் வழக்கு நிலுவையில் உள்ளது.
இதுகுறித்து ஷர்மிளா அளித்த பேட்டியில் கூறியதாவது:-
நான் ஜெகன்மோகன் ரெட்டிக்காக பல தியாகங்கள் செய்துள்ளேன். பாத யாத்திரையின் போது அர்ப்பணிப்போடு நடந்து கொண்டேன். ஜெகன்மோகன் ரெட்டி முதல் மந்திரி ஆவதற்கு முன்பாக நடந்த தேர்தலில் என்னுடைய அம்மாவைப் போல நானும் அயராது உழைத்தேன்.
வெற்றிக்காக நாங்கள் எல்லாவற்றையும் செய்தோம். ஆனால் ஜெகன்மோகன் ரெட்டி எனக்கு என்ன செய்திருக்கிறார். அவர் எனக்கும் என்னுடைய குழந்தைகளுக்கும் அநீதி இழைத்துள்ளார்.
கடந்த 5 ஆண்டுகளாக நான் 4 சுவற்றுக்குள் அடைத்து வைக்கப்பட்டிருந்தேன். என்னை ஜெகன் மோகன் ரெட்டி கோர்ட்டுக்கு இழுத்துச் சென்றார்.
இது நியாயமா? எங்கள் தந்தைக்கு சொந்தமான சொத்துக்கள் எங்கள் தந்தையின் விருப்பப்படியே பகிர்ந்து அளிக்கப்பட வேண்டும். எல்லாவற்றையும் கடவுள் பார்த்துக் கொண்டிருக்கிறார். நீதி வெல்லும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தனது அண்ணன் குறித்து பேசியது ஷர்மிளா கண்ணீர் விட்டு அழுதார். அவர் கண்கலங்கிய காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவியது.
இது ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- காரின் டயர் வெடித்து சாலையோரத்தில் நின்றிருந்த லாரியின் அடியில் புகுந்து நசுங்கியது.
- காரில் பயணித்த 6 பேரும் உடல் நசுங்கி உயிரிழந்தனர்.
ஆந்திர மாநிலம் அனந்தபூர் அருகே சிங்கள மலை என்ற பகுதியில் கார் டயர் வெடித்து நிகழ்ந்த விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
தேசிய நெடுஞ்சாலையில் வேகமாக சென்று கொண்டிருந்த காரின் டயர் வெடித்து சாலையோரத்தில் நின்றிருந்த லாரியின் அடியில் புகுந்து நசுங்கியது.
இந்த விபத்தில், காரில் பயணித்த 6 பேரும் உடல் நசுங்கி உயிரிழந்தனர்.
விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மற்றும் மீட்பு குழுவினர் விரைந்தனர்.
உடல்களை கைப்பற்றிய நிலையில் போலீசார் விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
உயிரிழந்தவர்கள் அனந்தபூரில் உள்ள இஸ்கான் கோவில் பிரதிநிதிகள் என முதற்கட்ட தகவலில் தெரியவந்துள்ளது.
- திருப்பதி மலை கடல் மட்டத்திலிருந்து மிக உயரமாக இருப்பதால் ஆக்சிஜன் அளவு குறைவாக இருக்கும்.
- திருப்பதிக்கு பாதயாத்திரையாக வர விரும்பும் பக்தர்கள் மேற்கண்ட வழிமுறைகளைப் பின்பற்றி ஒத்துழைக்க வேண்டும்.
திருப்பதி:
திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
உடல் பருமன் உள்ள பக்தர்களும், இதயம் தொடர்பான நோய்கள் உள்ளவர்களும் திருப்பதி மலைக்கு நடந்து செல்வது நல்லதல்ல. திருப்பதி மலை கடல் மட்டத்திலிருந்து மிக உயரமாக இருப்பதால் ஆக்சிஜன் அளவு குறைவாக இருக்கும்.
இதனால் பாதயாத்திரை செல்வது மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்துவதாகவும், இதயம் தொடர்பான நோய்கள் மற்றும் ஆஸ்துமா உள்ளவர்களுக்கு அது மேலும் மோசமாக்கும் என்பதால் பக்தர்கள் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
தீராத நோய்களால் அவதிப்படும் பக்தர்கள் தங்கள் அன்றாட மருந்துகளை எடுத்துச்செல்வதன் மூலம் சிக்கல்களைத் தவிர்க்கலாம்.
பாதயாத்திரையாக வரும் பக்தர்கள் ஏதேனும் பிரச்சனைகளை எதிர்கொண்டால், அலிபிரி மலைப்பாதையில் 1500 படியில் மற்றும் காளி கோபுரம் மற்றும் பாஷ்யகர்லா சன்னதி அருகே மருத்துவ உதவி மையம் உள்ளதால் அங்கு முதலுதவி பெறலாம். திருப்பதியில் உள்ள அஷ்வினி மருத்துவமனை மற்றும் பிற மருத்துவமனைகளில் 24 மணி நேர மருத்துவ வசதி உள்ளது.
நாள்பட்ட சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவசர காலங்களில் திருப்பதியில் உள்ள சுவிம்ஸ் மருத்துவமனையில் டயாலிசிஸ் வசதி உள்ளதால் அதனை பயன்படுத்தி கொள்ளவும்.
திருப்பதிக்கு பாதயாத்திரையாக வர விரும்பும் பக்தர்கள் மேற்கண்ட வழிமுறைகளைப் பின்பற்றி ஒத்துழைக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று 64,447 பேர் சாமி தரிசனம் செய்தனர். 25, 555 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ. 3.38 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. நேரடி இலவச தரிசனத்தில் பக்தர்கள் 8 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
- பாதிக்கப்பட்ட பெண்களின் குடும்பத்தினருக்கு அரசு சார்பில் நிதி உதவி வழங்க வேண்டும்.
- அதிகரித்து வரும் பெண்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு அமைச்சர்கள் பொறுப்பேற்க வேண்டும்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம் குண்டூர் மற்றும் கடப்பா மாவட்டங்களில் 2 இளம் பெண்கள் கொடூரமாக கொலை செய்யப்பட்டனர். அவர்களின் குடும்பத்தினரை ஆந்திர மாநில முன்னாள் முதல் மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
அப்போது அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:-
ஆந்திர மாநிலத்தில் தெலுங்கு தேசம் கட்சி ஆட்சிக்கு வந்த 4½ மாதங்களுக்குள் 77 பெண்கள் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளனர். 7 பெண் கொலைகள் மற்றும் 5 இளம் பெண்கள் தற்கொலைகள் செய்துள்ளனர். குற்றவாளிகளை கைது செய்யும் நடவடிக்கையில் அரசாங்கம் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இது போன்ற கேடுகெட்ட செயல்களில் ஈடுபடும் நபர்களுக்கு ஆளுங்கட்சி கேடயமாக விளங்குகிறது.
பாதிக்கப்பட்ட பெண்களின் குடும்பத்தினருக்கு அரசு சார்பில் நிதி உதவி வழங்க வேண்டும். எங்களுடைய கட்சி சார்பில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு நீதி வழங்கப்படும்.

சந்திரபாபு நாயுடு ஆட்சிக்கு வந்த பிறகு ஆந்திராவில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள், கொலைகள் மற்றும் தற்கொலைகள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.
இது மாநிலத்திற்கு நல்லதல்ல. சில சம்பவங்களில் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க தயங்குவது அதிகாரத்தில் இருப்பவர்கள் எந்த தவறு செய்தாலும் மறைக்கப்படலாம் என்ற ஆபத்தான சூழ்நிலையை உருவாக்கி வருகிறது.
எங்களுடைய ஆட்சியில் திஷா செயலி மூலம் பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்தோம். இதன் மூலம் 1.56 கோடி அழைப்புகள் வரப்பட்டு 31 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் சிறுமிகள் காப்பாற்றப்பட்டனர். இதற்காக 19 தேசிய விருதுகளும் கிடைத்தது.
தற்போது காவல்துறை சிறந்து விளங்க முடியவில்லை. அதிகரித்து வரும் பெண்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு அமைச்சர்கள் பொறுப்பேற்க வேண்டும். அவர்கள் மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். இதுபோன்ற குற்றங்கள் மீண்டும் நடக்காது என்று உறுதி அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- எனது சில சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கி வைத்துள்ளது.
- சூழ்நிலை காரணமாக, அந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தை ரத்து செய்ய விரும்புவதாக ஷர்மிளாவுக்கு கடிதம் மூலம் தெரிவித்தேன்.
ஆந்திர மாநில முன்னாள் முதல்-மந்திரி ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி, 2009-ம் ஆண்டு ஹெலிகாப்டர் விபத்தில் மரணம் அடைந்தார்.
அவருடைய மகன் ஜெகன்மோகன் ரெட்டி, கடந்த 2019-ம் ஆண்டு முதல் கடந்த மே மாதம்வரை, ஆந்திர மாநில முதல்-மந்திரியாக இருந்தார். ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் தலைவராக இருந்து வருகிறார்.
ராஜசேகர ரெட்டியின் மகள் ஷர்மிளா, தெலுங்கானாவில் ஒய்.எஸ்.ஆர்.தெலுங்கானா என்ற தனிக்கட்சி நடத்தி வந்தார். இந்த ஆண்டு பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பு, தனது கட்சியை காங்கிரசுடன் இணைத்து விட்டார்.
அந்த கட்சியின் ஆந்திர மாநில தலைவராக நியமிக்கப்பட்டார். கடப்பா பாராளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.
ஆந்திராவில், ஜெகன்மோகன் ரெட்டியை எதிர்த்து அரசியல் நடத்தி வருகிறார்.
இந்நிலையில், தனது தங்கை ஷர்மிளாவுக்கு எதிராக தேசிய கம்பெனி சட்ட தீர்ப்பாயத்தின் ஐதராபாத் கிளையில் ஜெகன்மோகன் ரெட்டி வழக்கு தொடர்ந்துள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:-
எனது சில சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கி வைத்துள்ளது. அதுதொடர்பான வழக்குகள் நிலுவையில் உள்ளன.
அந்த வழக்குகளின் முடிவை பொறுத்து, சரஸ்வதி பவர் அண்ட் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தில் எனக்கும், என் மனைவி பாரதிக்கும் சொந்தமான பங்குகளை பிற்காலத்தில் தான் செட்டில்மெண்ட் மூலம் என் தங்கை ஷர்மிளா பெயருக்கு மாற்றுவதாக கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்டு 31-ந் தேதி ஷர்மிளாவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டேன்.
இது, முற்றிலும் பாசம் மற்றும் அன்பின் காரணமாக செய்து கொள்ளப்பட்டது.
பின்னர், மாறிவிட்ட சூழ்நிலை காரணமாக, அந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தை ரத்து செய்ய விரும்புவதாக ஷர்மிளாவுக்கு கடிதம் மூலம் தெரிவித்தேன்.
ஆனால், எங்களுக்கு அதிர்ச்சி அளிக்கும்விதமாக சரஸ்வதி பவர் நிறுவனத்தில் எனக்கும், என் மனைவிக்கும் சொந்தமான பங்குகள் ஷர்மிளாவின் பெயருக்கு வாரிய தீர்மானம் மூலம் சட்டவிரோதமாக மாற்றப்பட்டுள்ளன. அதுபோல், எங்கள் குடும்பத்துக்கு சொந்தமான கிளாசிக் ரியால்டி நிறுவனத்தின் ஒட்டுமொத்த பங்குகளும் எங்கள் தாயார் விஜயம்மா பெயருக்கு மாற்றப்பட்டுள்ளன.
ஷர்மிளா சிறிது கூட நன்றி இல்லாமலும், தன் சகோதரர் நலனில் அக்கறை இல்லாமலும் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
மேலும், அரசியல்ரீதியாக எனக்கு எதிராக செயல்பட்டு வருவதுடன், உண்மையற்ற, பொய்யான அறிக்கைகளை பகிரங்கமாக வெளியிட்டு வருகிறார். அவரது செயல்பாடுகள், சகோதர-சகோதரிக்கு இடையிலான உறவை சீர்குலைத்து விட்டன. ஒரு அண்ணன், தனது தங்கை மீது வைத்திருந்த பாசம் அனைத்தையும் நீர்த்துப் போகச் செய்து விட்டது.
எங்களுக்கிடையே இனிமேல் பாசம் எதுவும் இல்லை. எனவே, புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கூறியபடி, ஷர்மிளா பெயருக்கு பங்குகளை மாற்ற நான் விரும்பவில்லை என்று தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இந்த வழக்கு, அடுத்த மாதம் விசாரணைக்கு வருகிறது.
- டோனியின் தலைமையில் இந்திய அணி டி20 மற்றும் ஒருநாள் உலக கோப்பைகளை வென்றுள்ளது.
- கோலி தலைமையில் விளையாடிய இந்திய அணி நம்பர் 1 டெஸ்ட் அணியாக திகழ்ந்தது.
நடிகரும் அரசியல்வாதியுமான நந்தமூரி பாலகிருஷ்ணா என்கிற பாலய்யா தொகுத்து வழங்கும் 'Unstoppable with NBK' என்கிற நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கலந்து கொண்டார்.
அந்த நிகழ்ச்சியில் பல சுவாரசியமான கேள்விகளுக்கு சந்திரபாபு நாயுடு பதில் அளித்தார். அப்போது நீங்கள் எம்.எஸ்.டோனியை போன்ற ஒரு தலைவர், நான் விராட் கோலியை போன்ற ஒரு வீரர் என்று பாலய்யா கூற, எனக்கு எப்போதும் விராட் கோலி தான் பிடிக்கும் என்று சந்திரபாபு நாயுடு பதில் அளிக்கிறார்.
கோலியை பிடிக்கும் என்று சந்திரபாபு நாயுடு பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.
டோனியின் தலைமையில் இந்திய அணி டி20 மற்றும் ஒருநாள் உலக கோப்பையையும் சாம்பியன் டிராபி கோப்பையையும் வென்றுள்ளது. கோலி தலைமையில் விளையாடிய இந்திய அணி நம்பர் 1 டெஸ்ட் அணியாக திகழ்ந்தது குறிப்பிடத்தக்கது.
- இந்துக்களின் மனம் புண்படும் வகையில் பேசினார்.
- ஏழுமலையான் கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.
திருப்பதி கோவிலில் மிகவும் பிரசித்தி பெற்ற லட்டு பிரசாதம் தயாரிக்க பயன்படுத்தப்பட்ட நெய்யில் மாட்டிறைச்சி கொழுப்பு, மீன் எண்ணெய் உள்ளிட்டவை கலக்கப்பட்டதாக ஆந்திர பிரதேச முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு குற்றம்சாட்டிய விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சிறப்பு பூஜை மற்றும் பரிகாரங்கள் செய்யப்பட்டன.
இந்த விவகாரம் தொடர்பாக ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண், திருப்பதி லட்டில் கலப்படம் செய்யப்பட்டதாக எந்த அறிவியல் ஆதாரமும் இல்லாமல், இந்துக்களின் மனம் புண்படும் வகையில் பேசினார் என்று வழக்கறிஞர் ஒருவர் வழக்கு தொடர்ந்து இருந்தார்.
இது தொடர்பாக ஐதராபாத் சிட்டி சிவில் நீதிமன்றம் ஆந்திர பிரதேச மாநிலத்தின் துணை முதலமைச்சர் பவன் கல்யாணுக்கு சம்மன் அனுப்பியுள்ளது. அதன்படி துணை முதல்வர் பவன் கல்யாண் வருகிற நவம்பர் 22 ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிட்டுள்ளது.
- ‘தீபம்' திட்டத்தை செயல்படுத்துவதற்கான வழிகாட்டுதல்கள் குறித்து சந்திரபாபு நாயுடு ஆலோசனை செய்தார்.
- சிலிண்டர்களை இலவசமாக வழங்குவதால், அடுத்த 5 ஆண்டுகளில் மாநிலத்தின் மொத்த கூடுதல் சுமை ரூ.13,423 கோடியாக இருக்கும்.
திருப்பதி:
ஆந்திராவில் ஆண்டுதோறும் பெண்களுக்கு 3 இலவச சமையல் கியாஸ் சிலிண்டர்கள் வழங்கப்படும் என முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு தேர்தல் அறிக்கையில் அறிவித்தார். இந்த திட்டத்திற்கு தீபம் என பெயரிட்டார்.
வருகிற தீபாவளி பண்டிகை முதல் பெண்களுக்கு இலவச கியாஸ் சிலிண்டர்கள் வழங்கப்படும் என முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார்.
இது பெண்கள் நலனை ஆதரிப்பது மற்றும் வீட்டுச் செலவுகளைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
'தீபம்' திட்டத்தை செயல்படுத்துவதற்கான வழிகாட்டுதல்கள் குறித்து சந்திரபாபு நாயுடு ஆலோசனை செய்தார்.
"பெண்கள் கியாஸ் சிலிண்டர்களுக்காக செலவழித்த பணத்தை மற்ற வீட்டு தேவைகளுக்கு பயன்படுத்தலாம், " என்று அவர் கூறினார்.
சிலிண்டர்களை இலவசமாக வழங்குவதால், அடுத்த 5 ஆண்டுகளில் மாநிலத்தின் மொத்த கூடுதல் சுமை ரூ.13,423 கோடியாக இருக்கும். சராசரியாக ஆண்டுக்கு ரூ.2,684 கோடி செலவாகும் என தெரிவித்துள்ளனர்.
- ஹெலிகாப்டர் பறந்த நிகழ்விற்கு ஆச்சாரியார்கள், வேத பண்டிதர்கள், மடாதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர்.
- மத்திய அரசு திருப்பதி மலையை தடை மண்டலமாக அறிவிக்க முடியாது என தெரிவித்து உள்ளது.
திருப்பதி:
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆகம சாஸ்திரப்படி கருவறையின் உச்சியின் மீது விமானங்கள், ஹெலிகாப்டர் பறக்க கூடாது என விதிமுறை உள்ளது. இதனால் திருப்பதி மலையில் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் பறக்கவும் ஆளில்லா குட்டி விமானங்கள் மூலம் வீடியோ போட்டோ எடுக்கவும் திருப்பதி தேவஸ்தானம் தடை விதித்து உள்ளது.
இந்த நிலையில் நேற்று இந்திய ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று அதிக சத்தத்துடன் ஏழுமலையான் கோவில் கருவறை மீது பறந்தது. ஹெலிகாப்டர் பறந்த நிகழ்விற்கு ஆச்சாரியார்கள், வேத பண்டிதர்கள், மடாதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர்.
ஏழுமலையான் கோவில் மீது விமானங்கள், ஹெலிகாப்டர்கள் பறக்க தடை செய்யப்பட்ட மண்டலமாக அறிவிக்க வேண்டும் என திருப்பதி தேவஸ்தானம் பலமுறை மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்து இருந்தது. ஆனால் மத்திய அரசு திருப்பதி மலையை தடை மண்டலமாக அறிவிக்க முடியாது என தெரிவித்து உள்ளது.






