என் மலர்
இந்தியா
- ஒரே ஒரே குடும்பம் மட்டும் தமிழ்நாட்டை சுரண்டி நல்லா வாழணும் என்று நினைப்பது அரசியலா?
- அத்தனை தடைகள் எல்லாம் தாண்டி தோழர்கள் சந்திப்பு, மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடந்திட்டு தான் இருக்கும்.
சென்னை:
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டத்தில் அதன் தலைவர் விஜய் உரையாற்றினார்.
உரை தொடக்கத்தில் என் நெஞ்சில் குடியிருக்கும் என்னுடைய தோழர்களுக்கும் தோழிகளுக்கும் என்னுடைய வணக்கம் என தெரிவித்து அவர் பேசியதாவது:-
* தமிழுக்கு அமுதென்று பேர் அந்த தமிழன்ப தமிழ் எங்கள் உயிருக்கு நேர். இன்றைக்கு தமிழ்நாடு இருக்கிற சூழலில் நாம் ஒரு புதிய வரலாற்றை படைப்பதற்கு தயாராக வேண்டிய அவசியத்தை நீங்கள் எல்லாம் புரிந்து வைத்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்.
* அரசியல் என்றால் என்ன? ஒவ்வொரு குடும்பமும் நல்லா வாழணும் என்று நினைப்பது அரசியலா? இல்லை ஒரே ஒரே குடும்பம் மட்டும் தமிழ்நாட்டை சுரண்டி நல்லா வாழணும் என்று நினைப்பது அரசியலா? எது அரசியல்? எல்லாரும் நடக்கும் என்பது தான் அரசியல். அதுதான் நம் அரசியல்.
* காட்சிக்கு திராவிடம்.. ஆட்சிக்கு திராவிட மாடல் என்று தினம் தினம் மக்கள் பிரச்சனைகளை மடைமாற்றி மக்கள் விரோத ஆட்சியை மன்னராட்சி போல் நடத்துற இவங்க நமக்கு எதிராக பண்ணுகிற செயல்கள் ஒன்றா, இரண்டா... மாநாட்டில் ஆரம்பித்தது... புத்தக வெளியீட்டு விழா, பரந்தூர், 2-ம் ஆண்டு தொடக்க விழா, பொதுக்குழு வரைக்கும் எங்கெல்லாம் இப்படியெல்லாம் தடைகள். அத்தனை தடைகள் எல்லாம் தாண்டி தோழர்கள் சந்திப்பு, மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடந்திட்டு தான் இருக்கும்.
* மாண்புமிகு மன்னராட்சி முதல்வர் அவர்களே.... மாண்புமிகு திரு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களே... பெயரை மட்டும் வீராப்பா சொன்னா பத்தாது. செயலையும், ஆட்சியிலும் அதை காட்டணும் அவர்களே...
* ஒன்றியத்தில் பாஜக அரசை பாசிச அரசு என்று அடிக்கடி அறிக்கைகள் வெளியிட்டு விட்டு நீங்க பண்றது என்னவாம். அதுக்கு கொஞ்சம் கூட குறைவில்லாத பாசிச ஆட்சிதானே. ஒர கட்சி தலைவனா ஜனநாயக முறைப்படி என் கழக தோழர்களையும், என் நாட்டு மக்களையும் பார்க்கறதுக்கும் சந்திக்குறதுக்கும் தடை போறது நீங்க யார்?
இவ்வாறு அவர் பேசினார்.
- சட்டம் ஒழுங்கை நிலைநாட்டத் தேவையான நடவடிக்கைகளைப் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும்.
- குழந்தைகள், பெண்கள் மீதான பாலியல் சீண்டல்கள் மற்றும் வன்கொடுமை வழக்குகளை விசாரிக்கத் தமிழக அரசு, சிறப்பு விரைவு நீதிமன்றங்கள் அமைக்க வேண்டும்.
சென்னை:
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டத்தில் மொத்தம் 17 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதன் விவரம் வருமாறு:-
* மீனவர் போராட்டத்திற்கு ஆதரவு மற்றும் அவர்களின் பிரச்சனைகளுக்கு நிரந்தரத் தீர்வு எட்டப்பட வேண்டும். கடந்த 40 ஆண்டுகளாக, இதுவரை 800-க்கும் அதிகமான தமிழக மீனவர்கள், இலங்கைக் கடற்படையால் தாக்கிக் கொல்லப்பட்டு உள்ளனர்.
இப்போது வரை அது தொடர்ந்துகொண்டே இருக்கிறது. குஜராத் மற்றும் இதர மாநில மீனவர்களைப் போலவே, ஒன்றிய அரசின் பிரதமர், தமிழக மீனவர்களையும் சமமாகக் கருதித் தமிழக மீனவர்களின் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும்.
* பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்கக் கூடாது. புதிய விமான நிலையத்தை யாருக்கும் எவ்விதப் பாதிப்பும் இல்லாத வண்ணம், விவசாய நிலங்களை, நீர்நிலைகளை, இயற்கைச் சூழல்களை அழிக்காமல், வேறு இடத்தில்தான் அமைக்க வேண்டும் என்றும் ஒன்றிய அரசையும் தமிழ்நாடு அரசையும் தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்குழு வலியுறுத்துகிறது.
* அனைத்து மொழிகளையும் மதிப்போம். தனிப்பட்ட முறையில் யார் வேண்டுமானாலும், எந்தப் பள்ளியிலும் படிக்கலாம், எந்த மொழியையும் கற்கலாம். அது அவரவரின் தனிப்பட்ட உரிமை என்பதில் தமிழக வெற்றிக்கழகம் உறுதியாக உள்ளது. ஆனால், கூட்டாட்சி உரிமையை மீறி, மாநில சுயாட்சி உரிமைக்கு எதிராக ஒரு மாநில அரசின் மொழிக் கொள்கையை, கல்விக் கொள்கையைக் கேள்விக் குறியாக்கி, வேற்று மொழியை வலுக்கட்டாயமாக அரசியல் ரீதியாகத் திணிப்பதை ஒருபோதும் ஏற்க முடியாது. முரட்டுப் பிடிவாதத்துடன் மும்மொழிக் கொள்கையைத் திணிக்க முயலும் ஒன்றிய அரசுக்குக் கடும் கண்டனத்தைத் தெரிவிப்பதுடன், தமிழ்நாட்டுக்கு எப்போதும் இருமொழிக் கொள்கை தான் என்பதை இப்பொதுக் குழு திட்டவட்டமாகத் தெரிவித்துக் கொள்கிறது.
* மாநிலங்களிடையே ஏற்றத் தாழ்வுகளை உருவாக்கும் தொகுதி மறுசீரமைப்பு தேவையற்றது. இப்போது இருக்கும் தொகுதிகளான 543 என்ற எண்ணிக்கையே காலவரையின்றி தொடர வேண்டும் என்பதே தமிழக வெற்றிக் கழகத்தின் நிலைப்பாடாகும். எனவே தொகுதி மறுசீரமைப்பு முடிவை ஒன்றிய அரசு கைவிட வேண்டும்.
* ஜி.எஸ்.டி. மூலம் நிதி அதிகாரத்தையும், நீட் மூலம் கல்வி அதிகாரத்தையும், மும்மொழித் திணிப்பின் மூலம் மொழி அதிகாரத்தையும், தொகுதி மறு சீரமைப்பு என்ற முறையில் மாநில அரசுகளிடையே பிளவினை ஏற்படுத்த முயல்வதையும், வேளாண் சட்டங்கள் மூலம் வேளாண் கொள்கைகளை மாநில அரசிடமிருந்து ஒன்றிய அரசு பறிப்பதையும் இப்பொதுக் குழு கண்டிக்கிறது. அதிகாரம் ஒன்றிய அரசிடம் குவியாமல், மாநில அரசுக்குப் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்.
* அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ, பழைய ஓய்வூதியத் திட்டத்தைச் செயல்படுத்துதல் உள்ளிட்ட பத்து அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி வருடக் கணக்காகப் போராடி வருகின்றது. அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களின் ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பின் போராட்டத்திற்குத் தமிழக வெற்றிக் கழகம், தன் மனப்பூர்வமான ஆதரவை இப்பொதுக்குழு வாயிலாகத் தெரிவித்துக் கொள்கிறது.
* ஆட்சிக்கு வந்து நான்காண்டுகள் ஆகியும் சட்டம் ஒழுங்கைச் சீர்ப்படுத்த இயலாத தி.மு.க. அரசு, தன் பொறுப்பற்ற தன்மையை ஒப்புக்கொண்டு, மக்களிடம் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்க வேண்டும். மேலும், சட்டம் ஒழுங்கை நிலைநாட்டத் தேவையான நடவடிக்கைகளைப் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும்.
* டாஸ்மாக் முறைகேடு குறித்து, முறையான விசாரணை நடத்தி, உண்மையை மக்களுக்கு வெளிச்சம் போட்டுக் காட்ட வேண்டும். தவறிழைத்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களைச் சட்டத்தின் முன் நிறுத்தி, பாரபட்சமின்றித் தண்டிக்க வேண்டும்.
* சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தாமல், சமூக நீதி, இடஒதுக்கீடு என்று ஆளும் தி.மு.க.வினரும், பா.ஜ.க.வினரும் மேடைக்கு மேடை பேசி, மக்களை ஏமாற்றி வருகின்றனர். இந்த விவகாரத்தில் கபட நாடகமாடுவதை நிறுத்தி விட்டு, சாதிவாரிக் கணக்கெடுப்புக்கான ஆய்வு நடத்தும் பணிகளைத் தமிழ்நாடு அரசு முன்னெடுக்க வேண்டும்.
* இலங்கைத் தமிழர்கள் சுதந்திரமாகத் தங்கள் நாட்டிலேயே வாழ்வதற்கும், அவர்களின் உரிமைகளைப் பெறுவதற்கும் நிரந்தரத் தீர்வு காண, ஐ.நா. சபை மூலம் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என உலக சமுதாயத்திற்கு இப்பொதுக்குழு வேண்டுகோள் விடுக்கிறது.
* சென்னை, கிழக்குக் கடற்கரைச் சாலையில், முட்டுக்காடு பகுதியில், தமிழக அரசால் பெரும் பொருட்செலவில், உலகத் தர வசதிகளுடன் அமைக்கப்பட உள்ள பன்னாட்டு அரங்கத்திற்குத் தந்தை பெரியாரின் பெயரைச் சூட்டிப் பெருமை சேர்க்க வேண்டும்.
* தமிழக வெற்றிக் கழகத்தின் ஐம்பெரும் கொள்கைத் தலைவர்கள் தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், பெருந்தலைவர் காமராஜர், வீரமங்கை வேலு நாச்சியார், மக்கள் சேவகர் அஞ்சலை அம்மாள் ஆகியோர் காட்டிய கொள்கை வழியில் சமரசமின்றி மக்கள் பணியில் ஈடுபடுவதே முக்கியக் கடமையாகும்.
* தலைவருக்கே முழு அதிகாரம். தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடமே இருக்கிறது. இந்நிலையில், தமிழகம் முழுவதும் கோடிக்கணக்கான இளைஞர்கள் மற்றும் பெண்களின் பேராதரவையும், பேரன்பையும் பெற்றுள்ள நம் கழகத் தலைவர், தன்னுடைய மக்கள் சந்திப்பு மாநாடுகள், பொதுக்கூட்டங்கள், சுற்றுப் பயணங்கள் மற்றும் தேர்தல் சார்ந்த முடிவுகள் எடுக்கும், பரிபூரண அதிகாரத்தையும் உரிமையையும் நம் கழகத் தலைவருக்கு அளிப்பது என இப்பொதுக்குழு முழு மனதுடன் முடிவெடுக்கிறது.
* தலைமைக் கழக நிர்வாகிகள், கழக விதிகளின்படி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மாவட்ட நிர்வாகிகள் மற்றும் கழக விதிகளின்படி கழகத் தலைவரால் நியமனம் செய்யப்பட்டுள்ள பொதுக்குழு உறுப்பினர்கள் என அனைத்து நிர்வாகிகளுக்கும் இப்பொதுக்குழு வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறது.
* திருநெல்வேலி வடக்கு மாவட்டச் செயலாளர் சஜி என்கிற பி.அந்தோணி சேவியர் மற்றும் தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் மதுரை மாநகர் தெற்கு மாவட்ட மாணவரணித் தலைவர் யு.பி.எம்.ஆனந்த் ஆகியோரின் மறைவுக்கு இப்பொதுக்குழு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.
* பாலியல் வன்கொடுமை வழக்குகளை விசாரிக்க, சிறப்பு விரைவு நீதிமன்றங்கள் தேவை. மாநில அரசுக்குச் சுமார் 50 ஆயிரம் கோடி வருமானம் வரும் டாஸ்மாக் நிறுவனத்தினாலும், கட்டற்ற போதைப் பொருட்களின் புழக்கத்தினாலும் தமிழகத்தில் உள்ள பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பே கேள்விக்குறியாகி வருகிறது. பள்ளிச்சிறார்களே போதைக்கு அடிமையாகி, வளரும் தலைமுறையே போதையால் சீரழிந்து வருகிறது. இந்தப் போதைப் பொருட்களால், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் நாள்தோறும் அதிகரித்த வண்ணமே உள்ளன.
* மது மற்றும் போதைப் பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வை உருவாக்காமல், போதைப் பொருட்கள் தமிழகத்தில் சரளமாகப் புழங்கும் நிலையை உரு வாக்கியுள்ள தி.மு.க. அரசை தமிழக வெற்றிக் கழகப் பொதுக்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.
* பாலியல் புகார்களை விசாரிக்கச் சிறப்புப் புலனாய்வுக் குழுக்களை ஏற்படுத்த வேண்டும். அதில் முன்னாள் பெண் நீதிபதிகள் மற்றும் முன்னாள் காவல்துறை உயர் அதிகாரிகள் இடம் பெற வேண்டும்.
* குழந்தைகள், பெண்கள் மீதான பாலியல் சீண்டல்கள் மற்றும் வன்கொடுமை வழக்குகளை விசாரிக்கத் தமிழக அரசு, சிறப்பு விரைவு நீதிமன்றங்கள் அமைக்க வேண்டும். இந்தச் சிறப்பு நீதிமன்றங்கள், 90 நாட்களுக்குள் விசாரித்துத் தீர்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.
* தற்போதைய அரசு இதைச் செய்யத் தவறும் பட்சத்தில், இந்த அரசுக்குத் தமிழக மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள். மேலும், வரும் சட்டமன்றத் தேர்தலில் மக்கள் ஆதரவுடன் அமையும் தமிழக வெற்றிக் கழக ஆட்சியில் மது மற்றும் போதைப் பொருட்களுக்கு எதிராக சட்டம் இயற்றப்பட்டு, பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பிற்காக தனித்துறை உருவாக்கப்படும் என இப்பொதுக்குழு தெரிவித்துக்கொள்கிறது.
* இஸ்லாமியர்களின் உரிமைகளைப் பறிக்கும் வக்பு சட்டத் திருத்த மசோதாவை ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும். நாடு முழுவதும் உள்ள வக்பு சொத்துகளைப் பதிவு செய்து வெளிப்படைத் தன்மையுடன் நிர்வகிப்பது என்ற காரணத்தைக் கூறி, வக்பு சட்டத் திருத்த மசோதாவை ஒன்றிய அரசு திடீரெனக் கொண்டு வந்தது. இதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து, கூட்டுக் குழு ஆய்வுக்கு இந்த மசோதா அனுப்பப்பட்டது. இக்குழுவில் எதிர்க்கட்சி உறுப்பினர்களை விட, ஆளும் கூட்டணி உறுப்பினர்களின் ஆதரவு பலமாக இருந்த காரணத்தினால் புதிய திருத்தங்களைக் கூட்டுக்குழு ஏற்றுக் கொண்டது.
இதையடுத்து, கூட்டுக்குழுவில் பரிந்துரைக்கப்பட்ட மாற்றங்கள், வக்பு சட்டத் திருத்த மசோதாவில் சேர்க்கப்பட்டன. இதற்கு ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. புதிய நிபந்தனைகளை உருவாக்கி, இஸ்லாமிய மக்களின் அதிகாரத்தைப் பறிக்கும் வகையிலும், இதுவரை அவர்கள் பயன்படுத்தி வந்த உரிமைகளை நசுக்கும் வகையிலும் கொண்டு வரப்பட்ட வக்பு சட்டத் திருத்த மசோதாவை ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்குழு வலியுறுத்துகிறது.
வக்பு சட்டத் திருத்த மசோதாவை எதிர்த்து, தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மாநில அரசுகள் சட்டசபைகளில் தீர்மானங்கள் நிறைவேற்றி உள்ளன. இந்த விவகாரத்தில் மாநில அரசுகளின் கோரிக்கைகளையும் ஒன்றிய அரசு கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். வக்பு சட்டத் திருத்த மசோதா வழியாகச் சிறுபான்மை மக்களை அச்சத்தில் ஆழ்த்தக் கூடாது என்று இப்பொதுக்குழு கேட்டுக்கொள்கிறது.
மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
- பள்ளி சீருடைக்கு அளவெடுப்பதற்காக ஒரு ஆண் டெய்லரும், பெண் டெய்லரும் பள்ளிக்கு வந்தனர்.
- இந்த சம்பவம் குறித்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கவிதா விசாரணை நடத்தினார்.
மதுரை நகர் அனைத்து மகளிர் போலீசில் மாணவி ஒருவர் புகார் அளித்து இருந்தார். அந்த புகாரில், நான் தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறேன். பள்ளி சீருடைக்கு அளவெடுப்பதற்காக ஒரு ஆண் டெய்லரும், பெண் டெய்லரும் பள்ளிக்கு வந்தனர். அவர்களிடம் அளவு எடுப்பதற்கு நான் எதிர்ப்பு தெரிவித்தேன். இதுதொடர்பாக வகுப்பு ஆசிரியையிடம் கூறினேன். ஆனால், அவர் கண்டிப்பாக சீருடைக்கு அளவெடுக்க வேண்டும் என கூறிவிட்டார். இதுபற்றி பள்ளி நிர்வாகத்தினரிடம் புகார் கூறினேன். அவர்களும் அது பற்றி கண்டுகொள்ளவில்லை.
பள்ளிக்கு வந்த ஆண் டெய்லர் அளவெடுத்தபோது என்னிடம் அத்துமீறினார். உடல் பாகங்களை தொட்டு, பாலியல் சீண்டலில் ஈடுபட்டார். எனவே, அவர் மீதும் அவருக்கு உடந்தையாக இருந்த ஆசிரியை மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார்.
இந்த சம்பவம் குறித்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கவிதா விசாரணை நடத்தினார்.
இதில், பள்ளிக்கு வந்து சீருடைக்காக அளவெடுத்தபோது மாணவியிடம் அத்துமீறியதாக 60 வயதுடைய டெய்லர் மற்றும் அவரது சகோதரியான மற்றொரு டெய்லர், இதற்கு உடந்தையாக இருந்ததாக ஆசிரியை ஒருவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருப்பதாக போலீசார் தெரிவித்தனர். தொடர்ந்து மாணவியிடமும், அந்த 3 பேரிடமும் விசாரணை நடத்தினர்.
இந்நிலையில் மாணவிகளுக்கு சீருடை அளவெடுத்த விவகாரம் தொடர்பாக 3 பேர் போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளனர். 2 டெய்லர்கள், அளவெடுக்க வைத்த ஆசிரியை உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மாணவி அளித்த புகாரின் பேரில் டெய்லர்கள் பாரதி மோகன், கலாதேவி, மாணவியை கட்டாயப்படுத்தியதாக ஆசிரியை சாராவும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
- மக்களை சந்திக்கும் முன்பே த.வெ.க.வின் வாக்கு சதவீதம் 20 விழுக்காடு இருக்கும் என கூறுகிறார்கள்.
- தலைவர் விஜய் மக்களை சந்தித்தால், வாக்கு சதவீதம் எவ்வளவு உயரும்?
சென்னை:
சென்னை திருவான்மியூரில் நடைபெற்று வரும் தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டத்தில் டாஸ்மாக் ஊழலுக்கு எதிர்ப்பு உள்ளிட்ட 17 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. மேலும் தேர்தல் சார்ந்த முடிவுகள் எடுக்க விஜய்க்கு அதிகாரம் வழங்கி பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதையடுத்து பொதுக்குழுவில் த.வெ.க. தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா பேசியதாவது:-
ஊழல் அமைச்சர்கள், ஊழல் குடும்பத்தை தூக்கி எறிய தயாராகிவிட்டோம். பலமான உட்கட்டமைப்போடு தேர்தல் போருக்கு தயாராகி வருகிறோம். அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தை மாநில அரசு மூட பார்த்தது.
டெல்லியில் மோடியும், தமிழகத்தில் அண்ணாமலையும் பல்வேறு அரசியல் விஷயங்களை திசை திருப்புகிறார்கள். பெண்களுக்கு ஆதரவாக போராட்டம் நடைபெறும் போது சாட்டையால் அடித்து கொண்டு திசைதிருப்ப முயற்சிகிறார்கள்.
அண்ணாமலையை செட் செய்து தி.மு.க. வைத்துள்ளது. புலி அமைதியாக இருக்கும்போது ஆடு வந்து சம்பந்தம் இல்லாமல் பேசுகிறது. எங்கள் கட்சியையும், தலைவரையும் தொட்டால் உங்கள் உண்மை முகத்தை வெளிக்காட்டுவோம்.
மக்களை சந்திக்கும் முன்பே த.வெ.க.வின் வாக்கு சதவீதம் 20 விழுக்காடு இருக்கும் என கூறுகிறார்கள். தலைவர் விஜய் மக்களை சந்தித்தால், வாக்கு சதவீதம் எவ்வளவு உயரும்?
இன்றுவரையும் மக்களால், கட்சியால் பாசமுடன் அழைத்த நம்முடைய தளபதியை இனி வெற்றித் தலைவர் என்று ஒரே குரலுடன் அழைக்க வேண்டும்.
எம்.ஜி.ஆரை இழிவுபடுத்தியது போல், தற்போது த.வெ.க. தலைவர் விஜயை இழிவுபடுத்திக் கொண்டிருக்கின்றனர். தி.மு.க. பற்றிய உண்மை தெரியவந்த காரணத்தினால் தான் அங்கிருந்து வெளியே வந்துவிட்டேன்.
Work From Home அரசியல் இல்லை. உங்களை வீட்டுக்கு அனுப்பப்போகும் அரசியல். உங்களுக்கு எல்லாம் ஓய்வு கொடுக்கவே நாங்கள் தயாராகி கொண்டிருக்கிறோம்.
என்ன சார் போராட்டம் நடத்துறாங்க? எல்லாம் நடிக்கிறாங்க! வெயிட் பண்ணுங்க... இன்னும் ரெண்டே மாசம்... உண்மையான போராட்டம்ன்னா என்னன்னு விஜய் காண்பிப்பார் என்றார்.
- 2-ந்தேதி முதல் 5 நாட்கள் நடக்கிறது.
- பொதுக்கூட்டம் பாண்டி கோவில் அருகே நடைபெற உள்ளது.
மதுரை:
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் 24-வது அகில இந்திய மாநாடு மதுரையில் வருகிற ஏப்ரல் 2-ந்தேதி முதல் 6-ந்தேதி வரை 5 நாட்கள் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஆயிரக்கணக்கான பிரதிநிதிகள் பங்கேற்கிறார்கள்.
மாநாட்டில் அகில இந்திய தலைவர்கள் மற்றும் அகில இந்திய ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ்காரத், கேரளா முதல்-மந்திரி பினராய் விஜயன், பிருந்தா காரத், திரிபுரா முன்னாள் முதல்வர் மாணிக் சர்க்கார் உள்ளிட்ட அகில இந்திய தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள்.
மாநாட்டின் முதல் நாளான 2-ந்தேதி காலை பொது மாநாடு நடைபெறுகிறது. இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பொதுச்செயலாளர் டி.ராஜா. சி.பி.ஐ. (எம்எல்) விடுதலை பொதுச் செயலாளர் திபாங்கர் பட்டாச்சாரியார், ஆர்.எஸ்.பி. பொதுச்செயலாளர் மனோஜ் பட்டாச்சாரியார், அகில இந்திய பார்வர்டு பிளாக் பொதுச்செயலாளர் தேவ ராஜன் உள்ளிட்டோர் பங்கேற்று வாழ்த்தி பேசுகின்றனர்.
சி.பி.எம். எம்.எல்.ஏ.வும், வரவேற்பு குழு தலைவருமான கே.பாலகிருஷ்ணன் வரவேற்கிறார். வரவேற்பு குழு செயலாளர் சு.வெங்கடேசன் மற்றும் மாநில தலைவர்கள் பங்கேற்க உள்ளார்கள்.
முன்னதாக 1-ந்தேதி தமுக்கம் மைதானத்தில் கட்சியின் வரலாற்று கண்காட்சி, பாசிசத்தின் கோர முகங்களை வெளிப்படுத்தும் கண்காட்சி, இந்திய விடுதலைப் போராட்டத்தில் பெண்களின் பங்களிப்பு குறித்த கண்காட்சி, புத்தக கண்காட்சி போன்றவைகள் அங்கு அமைக்கப்பட உள்ளது.
இந்த கண்காட்சியை மூத்த பத்திரிக்கையாளர்கள் தோழர் என்.ராம், பரமேஸ்வரன் ஆகியோர் திறந்து வைக்கிறார்கள். அன்றே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியால் போற்றப்படுகிற மற்றும் ஆக்சிஸ் கம்யூனிஸ்ட் கட்சியின் தியாகிகளின் சுடர் பெறப்படுகிறது.
குறிப்பாக சென்னையில் இருந்து சிந்தனை சிற்பி சிங்காரவேலர் நினைவுச் சுடர், சேலம் சிறை தியாகிகள் நினைவுச் சுடர், கோவை சின்னியம்பாளையம் தியாகிகள் நினைவுச்சுடர், மாணவத் தியாகிகள் சோமசுந்தரம் செம்புலிங்கம் நினைவுச் சுடர், மதுரை தியாகிகள் நினைவுச் சுடர், அதேபோல மாநாட்டில் ஏற்றப்பட உள்ள வெண் மணி தியாகிகள் நினைவு கொடி பிரசார இயக்கமாக எடுத்து வரப்பட உள்ளது.
இந்த நினைவுச் சுடர் அனைத்தும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களால் 1-ந்தேதி மாலை பெறப்படுகிறது.
2-ந்தேதி காலை மேற்குவங்க மூத்த தலைவர் பீமன் பாசு கொடியேற்றி வைக்கிறார். அன்று மாலையில் இருந்து ஒவ்வொரு நாளும் தமிழகத்தினுடைய தலைசிறந்த கலை குழுக்கள் மற்றும் கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகள் நடை பெறும்.
திரைக்கவிஞர்கள், திரைப்பட இயக்குனர்கள் கலந்து கொள்ளும் கருத்தரங்கங்கள் தமுக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது. மாநாடு நிறைவு பெறும் 6-ந்தேதி மாலை 25 ஆயிரம் செந்தொண்டர்கள் பங்கேற்கும் அணிவகுப்பு நடைபெறுகிறது.
அன்று மாலை தமிழகம் முழுவதும் இருந்து சுமார் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட உழைப்பாளி மக்கள் பங்கேற்கும் பொதுக்கூட்டம் பாண்டி கோவில் அருகே நடைபெற உள்ளது.
தமுக்கம் மைதானத்தில் 2-ந்தேதி நடைபெறும் கருத்தரங்க நிகழ்ச்சியில் சாலமன் பாப்பையா, திரைப்பட இயக்குனர்கள் ராஜூமுருகன், சசிகுமார் ஆகியோர் பங்கேற்கிறார்கள்.
3-ந்தேதி மாலை கூட்டாட்சி கோட்பாடு இந்தியாவில் வலிமை என்ற மாநில உரிமைகள் பாதுகாப்பு மாநாட்டில் கேரளா முதல்வர் பினராய் விஜயன், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கர்நாடக மாநில வருவாய் துறை அமைச்சர் கிருஷ்ணா பைரே கவுடா கலந்து கொண்டு பேசுகிறார்கள்.
4-ந்தேதி மாலை நடிகர்கள் விஜய் சேதுபதி, சமுத்திரகனி, இயக்குனர் வெற்றிமாறன் ஆகியோர் கலந்து கொள்ள இருக்கிறார்கள். 5-ந்தேதி மாலை நடிகை ரோகினி வழங்கும் ஒரு ஆள் நாடகம் நடைபெறுகிறது.
அதனை தொடர்ந்து நடிகர் பிரகாஷ்ராஜ் திரைப் பட இயக்குனர்கள் மாரி செல்வராஜ், ஞானவேல் ஆகியோர் பங்கேற்று பேச உள்ளனர்.
6-ந்தேதி வண்டியூர் ரிங் ரோடு சுங்கச்சாவடி அருகில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் கேரளா முதல் மந்திரி பினராய் விஜயன், ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ்காரத் தலைமை குழு உறுப்பினர்கள் பிருந்தாகாரத், ஜி.ராமகிருஷ்ணன், மத்திய குழு உறுப்பினர்கள் கே.பாலகிருஷ்ணன், உ.வாசுகி, பி.சம்பத் கலந்து கொண்டு பேசுகிறார்கள்.
முன்னதாக பாண்டி கோவில் அருகில் இருந்து துவங்கும் அணிவகுப்பை 30 ஆண்டுகளுக்கு மேலாக போராடிய வாச்சாத்தி போராளிகள் தொடங்கி வைக்க உள்ளனர். மாநாட்டையொட்டி அதற்கான அழைப்பிதழை மாநில செயலாளர் சண்முகம் வெளியிட்டார்.
- மலை ரெயிலில் பயணம் செய்ய உள்நாடு மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
- மேட்டுப்பாளையத்தில் இருந்து கோடைகால சிறப்பு மலை ரெயில் இன்று காலை 9.10 மணிக்கு புறப்பட்டது.
மேட்டுப்பாளையம்:
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு தினசரி நீலகிரி மலை ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. யுனெஸ்கோ அந்தஸ்து பெற்ற நூற்றாண்டு பழமையான இந்த மலை ரெயிலில் பயணம் செய்ய உள்நாடு மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
மேலும் ஒவ்வொரு ஆண்டும் கோடை விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக, தென்னக ரெயில்வே சார்பில் சிறப்பு மலை ரெயில்கள் இயக்கப்படுவது வழக்கம்.
அதன்படி இந்தாண்டு கோடைகால விடுமுறை நாட்களில் மேட்டுப்பாளையம்-ஊட்டி இடையே இருமார்க்கங்களிலும் மார்ச் 28-ந்தேதி முதல் ஜூலை 6-ந்தேதி வரை வாரந்தோறும் வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்படும் என்று தென்னக ரெயில்வே நிர்வாகம் ஏற்கனவே அறிவித்திருந்தது.
இதன்படி மேட்டுப்பாளையத்தில் இருந்து கோடைகால சிறப்பு மலை ரெயில் இன்று காலை 9.10 மணிக்கு புறப்பட்டது. இதில் பள்ளி மாணவர்கள் மற்றும் ஏராளமான சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியுடன் பயணம் செய்தனர்.
மேலும் மேட்டுப்பாளையம்-ஊட்டி இடையே கோடைக்கால சிறப்பு மலை ரெயில்கள் இன்று முதல் இயக்கப்படுவது பொதுமக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மேட்டுப்பாளையத்தில் இருந்து புறப்பட்ட சிறப்பு மலை ரெயில் மதியம் 2.25 மணிக்கு ஊட்டியை சென்றடையும். அதேபோல சனி மற்றும் திங்கட்கிழமைகளில் காலை 11.25 மணிக்கு ஊட்டியில் இருந்து புறப்படும் சிறப்பு மலை ரெயில், மாலை 4.20 மணிக்கு மேட்டுப்பாளையம் ரெயில் நிலையத்தை வந்தடையும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
- ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்கள் பல்வேறு படைப்புகளை காட்சிபடுத்தினார்கள்.
- வானவில் மன்ற செயல்பாடுகளும் கண்காட்சியில் இடம்பெற்றன.
சண்முகபுரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. பள்ளியின் தலைமை ஆசிரியை (பொ) அருள் செல்வி அறிவியல் கண்காட்சியை தொடங்கி வைத்தார். ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்கள் பல்வேறு படைப்புகளை காட்சிபடுத்தினார்கள்.
வானவில் மன்ற செயல்பாடுகளும் கண்காட்சியில் இடம்பெற்றன. பள்ளி மாணவ-மாணவிகள் நூற்றுக்கும் மேற்பட்ட படைப்புகளை வைத்திருந்தார்கள். உலக வெப்பமயமாதல் காலநிலை மாற்றம் போன்ற தலைப்பில் வானவில் மன்ற கருத்தாளர் ஆல்வின் கருத்துரையாற்றினார்கள்.
பள்ளியில் அனைத்து மாணவ-மாணவிகளும் கண்காட்சியை கண்டு களித்தனர். அறிவியல் கண்காட்சிக்கான ஏற்பாடுகளை பள்ளியின் பட்டதாரி அறிவியல் ஆசிரியர் தங்கபாண்டி மற்றும் கணித ஆசிரியை பர்வீன் ராணி மற்றும் ஆய்வக உதவியாளர் லதாவும் செய்திருந்தார்கள். சிறந்த படைப்புகளுக்கு வானவில் மன்ற கருத்தாளர் ஆல்வின் புத்தக பரிசு வழங்கி மாணவர்களை பாராட்டி ஊக்கமளித்தார்.
- நடிகர் புகழ் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.
- நிகழ்ச்சி பொழுதுபோக்கு, சிரிப்பு மற்றும் திறமைகளின் சங்கமமாக விளங்கியது.
எஸ்.ஏ. கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 'அலப்பறை கிளப்பறோம்' என்ற தலைப்பில் எதார்த்த நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர். பிரபல தமிழ் நடிகரும் நகைச்சுவை நடிகருமான புகழ் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். நிகழ்ச்சியை அக்ஷிதா தொகுத்து வழங்கினார்.

இந்த நிகழ்ச்சி பொழுதுபோக்கு, சிரிப்பு மற்றும் திறமைகளின் சங்கமமாக விளங்கியது. மாணவர்கள் தங்கள் பல்வேறு திறமைகளை ஆர்வமுடனும் உற்சாகத்துடனும் வெளிப்படுத்தினர்.
நிகழ்ச்சியில் உற்சாகமான வேடிக்கையான விளையாட்டுகள் மேலும் மெருகூட்டின.
இளைஞர்களின் வேடிக்கை மற்றும் பொழுதுபோக்கு உணர்வுகளை மகிழ்ச்சியோடு வெளிப்படுத்தி ஒரு ரம்யமான சூழலை கல்லூரி வளாகத்தில் வெளிப்படுத்தியது.
- காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த மழை குறைந்தது.
- சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் பரிசல் பயணம் மேற்கொண்டு காவிரி ஆற்றின் அழகை ரசித்தனர்.
ஒகேனக்கல்:
கர்நாடகா காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பரவலாக மழை பெய்துள்ளது. இதனால் அங்குள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. பாதுகாப்பு கருதி அணைகளில் இருந்து தமிழக காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டது.
இதனால் தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 4 ஆயிரம் கனஅடியாக அதிகரித்து வந்தது.
இந்த நிலையில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த மழை குறைந்தது. இதனால் இன்று காலை 8 மணி நிலவரப்படி 2 ஆயிரம் கனஅடியாக குறைந்து வந்தது.
மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.
சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் பரிசல் பயணம் மேற்கொண்டு காவிரி ஆற்றின் அழகை ரசித்தனர். மேலும் தொங்கு பாலத்தில் நின்று காவிரி ஆற்றில் விழும் தண்ணீரை ஆர்வமுடன் ரசித்து மகிழ்ந்தனர்.
பின்னர் அவர்கள் மெயின் அருவியில் குளித்தும், பெண்கள் காவிரி ஆற்றில் குளித்தும் மகிழ்ந்தனர்.
காவிரி ஆற்றில் நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
- கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் 100-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் வந்திருந்தனர்.
- வியாபாரிகள் விலை உயர்வை பற்றி கவலைப்படாமல் கூடுதல் விலை கொடுத்து ஆடுகளை வாங்கி சென்றனர்.
பொள்ளாச்சி:
பொள்ளாச்சி சந்தையில் வாரந்தோறும் வியாழக்கிழமை ஆட்டுச்சந்தை நடைபெறும். அதன்படி நேற்று காலை ஆட்டுச்சந்தை தொடங்கியது.
இதற்காக பொள்ளாச்சி, ஆனைமலை, கிணத்துக்கடவு, நெகமம், வேட்டைக்காரன்புதூர், கோமங்கலம், வடக்கிபாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்தும் வெள்ளாடு, செம்மறியாடு உள்பட சுமார் 800-க்கும் மேற்பட்டவவை விற்பனைக்காக கொண்டு வரப்பட்டு இருந்தன.
மேலும் சிலர் ஆட்டுக்குட்டிகளையும் விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். ரம்ஜான் பண்டிகை வருகிற 31-ந்தேதி கொண்டாடப்படுவதால், பொள்ளாச்சி சந்தையில் சுமார் 800 முதல் 1000 வரையிலான ஆடுகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டு இருந்தன.
மேலும் அவற்றை வாங்கி செல்வதற்காக உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்தும், கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் 100-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் வந்திருந்தனர். இதன்காரணமாக பொள்ளாச்சி சந்தையில் ஆடுகளின் விற்பனை மும்முரமாக நடைபெற்றது.
தொடர்ந்து அங்கு 8 கிலோ முதல் 25 கிலோ வரையிலான ஆடுகள் எடைக்கு ஏற்ப தரம் நிர்ணயிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டன. அதாவது 8 கிலோ எடையுள்ள ஆடு ரூ.5500 வரையும், 20 கிலோ ஆடு ரூ.16-17 ஆயிரம் வரையும், 25 கிலோ ஆடு ரூ.22 ஆயிரம் வரையும் விலை போனது.
பொள்ளாச்சி சந்தையில் ரம்ஜான் பண்டிகையையொட்டி ஆடுகளின் வரத்து அதிகரித்து இருந்தபோதிலும் அவற்றின் விலையில் சிறிதும் சரிவு ஏற்படவில்லை. இருந்தபோதிலும் வியாபாரிகள் விலை உயர்வை பற்றி கவலைப்படாமல் கூடுதல் விலை கொடுத்து ஆடுகளை வாங்கி சென்றனர்.
இதன் காரணமாக பொள்ளாச்சி ஆட்டுச்சந்தையில் நேற்று மட்டும் ரூ.80 லட்சம் வரை ஆடுகளின் வர்த்தகம் நடைபெற்றதாக வியாபாரிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்து உள்ளனர்.
- தி.மு.க. அரசை பொறுத்தவரை எதிர்க்கட்சிகளுக்கு தான் அதிக வாய்ப்பு தருகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
- மதுரை காவலர் கொலையில் தொடர்புடையவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள்.
சட்டசபையில் இருந்து வெளியேற்றப்பட்ட நிலையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மதுரையில் காவலர் கொலை தொடர்பாக அவையில் பேச சபாநாயகர் அனுமதி அளிக்கவில்லை என்று குற்றம்சாட்டி இருந்தார்.
இந்நிலையில் எதிர்க்கட்சி தலைவரின் குற்றச்சாட்டிற்கு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பதில் அளித்தார். செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:
* சட்டசபையில் என்ன பேச போகிறோம் என்பதை அரை மணி நேரத்திற்கு முன்னதாகவே சபாநாயகரிடம் கூற வேண்டும்.
* என்ன பிரச்சனை எழுப்பப் போகிறோம் என்பதை அ.தி.மு.க.வினர் சொல்லவில்லை.
* அ.தி.மு.க.வினர் திட்டமிட்டு திசை திருப்பும் செயலில் ஈடுபட்டுள்ளனர்.
* விதிகளை மீறி அ.தி.மு.க.வினர் பேச முற்பட்டனர்.
* அ.தி.மு.க.வினர் சட்டமன்றத்தை அவமரியாதை செய்தனர்.
* தி.மு.க. அரசை பொறுத்தவரை எதிர்க்கட்சிகளுக்கு தான் அதிக வாய்ப்பு தருகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
* காவலர் பணியில் இல்லாதபோது தனிப்பட்ட பகையில் மதுரையில் காவலர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
* மதுரை காவலர் கொலையில் தொடர்புடையவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள்.
* பொதுமக்கள் இடையே அச்சத்தை உருவாக்கும் வகையில் பொய்யான குற்றச்சாட்டுகளை அ.தி.மு.க.வினர் கூறுகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
- சிறுபான்மையினருடன் தெலுங்கு தேசம் கட்சிக்கு வலுவான தொடர்பு உள்ளது.
- முஸ்லிம்களின் நலனுக்காக பட்ஜெட்டில் 5,300 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
திருப்பதி:
ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் மாநில அரசு ஏற்பாடு செய்த இப்தார் விருந்தில் முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு பங்கேற்றார்.
பணக்காரர்கள், ஏழைகளுக்கு உதவுவது குர்ஆன் கற்றுக்கொடுத்த ஒரு நல்ல பண்பு. சிறுபான்மையினருடன் தெலுங்கு தேசம் கட்சிக்கு வலுவான தொடர்பு உள்ளது.
தெலுங்கு தேசம் கட்சியின் ஆட்சியின் கீழ் ஐக்கிய மாநிலத்தில் முஸ்லிம்களுக்கு நீதி நிலைநாட்டப்பட்டது.
சிறுபான்மை நிதிக் குழுவை முதன்முறையாக அமைத்தது என்.டி.ஆர், மாநிலத்தில் உருது மொழியை 2-வது மொழியாக அமல்படுத்தினேன்.
முஸ்லிம்களின் நலனுக்காக பட்ஜெட்டில் 5,300 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
வக்பு சொத்துக்களைப் பாதுகாக்க குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆந்திரா, தெலுங்கானா ஒருங்கிணைந்த மாநிலமாக இருந்தபோது, ஐதராபாத்தில் ஒரு உருது பல்கலைக்கழகம் நிறுவப்பட்டது. பிரிவினைக்குப் பிறகு, கர்னூலில் ஒரு உருது பல்கலைக்கழகம் நிறுவப்பட்டது.
தெலுங்கு தேசம் கட்சி முதன்முறையாக இமாம்களுக்கு கவுரவ ஊதியத்தை அமல்படுத்தியது.
இவ்வாறு அவர் பேசினார்.






