என் மலர்tooltip icon

    பொது மருத்துவம்

    • உடலில் போதுமான அளவு நீர்ச்சத்து இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
    • ஒற்றைத் தலைவலியை குணப்படுத்துவதற்கு சீரான உறக்க முறைகளை ஒருவர் கடைபிடிப்பது அவசியம் ஆகும்.

    இன்றைய இறுக்கமான பணி சூழலில் மைக்ரேன் என்ற ஒற்றைத் தலைவலி ஏற்படுவது பலருக்கும் வழக்கமாக உள்ளது. பணி வாழ்க்கை அல்லது தொழில் வாழ்க்கையில் மன அழுத்தம் ஏற்படுவதை தவிர்க்க இயலாது. அதன் காரணமாக ஒற்றைத் தலைவலி ஏற்படுவதையும் தவிர்க்க இயலாது. ஆனால் ஒற்றைத் தலைவலி எந்த சூழ்நிலைகளில் உருவாகிறது என்பதை தெரிந்து கொண்டு அவற்றை புத்திசாலித்தனமாக தவிர்ப்பதன் மூலம் இந்த சிக்கலுக்கு ஒரு தீர்வு காணலாம் என்று மருத்துவர் வல்லுனர்கள் குறிப்பிடுகிறார்கள்.

    ஒற்றைத் தலைவலி என்ற சிக்கலை பொறுத்தவரை சில உணவு முறைகளாலும் கூட ஏற்படலாம். அதாவது ஆல்கஹால் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளாலும் கூட அது ஏற்படலாம். மோனோசோடியம் குளூட்டமேட் (MSG) மற்றும் செயற்கை இனிப்புகள் ஆகியவையும் அதற்கான காரணங்களாக இருக்கலாம்.

    அத்துடன் தட்பவெப்ப நிலை மாற்றங்கள் மற்றும் பார்வையை பாதிக்கக்கூடிய பிரகாசமான மின்விளக்குகள், சுற்றுப்புறத்தில் உள்ள சப்தம், மனம் இருக்கும் வாசனைகள் ஆகியவை காரணமாகவும் ஒற்றைத் தலைவலி ஏற்படலாம்.



    அது மட்டுமல்லாமல் உடல் நிலையில் ஏற்படக்கூடிய ஹார்மோன் மாற்றங்கள், குறிப்பாக பெண்களுக்கு மாதவிடாய் காலம் அல்லது கர்ப்ப காலங்களில் ஏற்படக்கூடிய ஹார்மோன் மாற்றங்களும் ஒற்றைத் தலைவலியை உருவாக்கலாம் என்று மருத்துவ ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது.

    மேலும் ஒருவருடைய ஒழுங்கு முறையற்ற தூக்கம் முறைகள், அதிகப்படியான மன அழுத்தம், உணவு உண்ணும் நேரத்தை அல்லது உணவையே தவிர்ப்பது ஆகியவையும் ஒற்றைத் தலைவலிக்கு காரணமாக இருக்கலாம் என்று மருத்துவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.

    ஒரு சிலர் உடற்பயிற்சிகள் மீது உள்ள அதீத ஆர்வம் காரணமாக கடுமையாக உடற்பயிற்சி செய்வது, அதிகப்படியான உடல் உழைப்பு, மன பதற்றம் ஆகியவையும் கூட ஒற்றைத் தலைவலியை உருவாக்கலாம்.

    பல்வேறு காரணங்களால் ஒற்றைத் தலைவலி ஏற்படலாம் என்று குறிப்பிட்ட மருத்துவ வல்லுனர்கள் அவற்றை தவிர்ப்பதற்கான வழிமுறைகளையும் தெரிவித்துள்ளார்கள். அது குறித்த தகவல்களையும் இங்கே பார்க்கலாம்.

    உடலில் போதுமான அளவு நீர்ச்சத்து இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். ஏனென்றால் உடலில் நீர்ச்சத்து இல்லை என்றாலும் கூட அது ஒற்றைத் தலைவலிக்கு காரணமாக அமையலாம். அன்றாடம் உண்ணும் உணவு வகைகளில் கண்டிப்பாக பதப்படுத்தப்பட்ட, துரித உணவு வகைகளை தவிர்ப்பது அவசியம். தேவைப்பட்டால் மட்டும் காபி அல்லது தேநீர் அருந்தும் பழக்கத்தை ஒழுங்குபடுத்திக் கொள்வதும் அவசியமானது.

    ஒற்றைத் தலைவலியை குணப்படுத்துவதற்கு சீரான உறக்க முறைகளை ஒருவர் கடைபிடிப்பது அவசியம் ஆகும். இரவு குறிப்பிட்ட நேரத்தில் படுக்கைக்கு செல்வது, குறிப்பிட்ட நேரத்தில் படுக்கையில் இருந்து எழுந்து அன்றாட பணிகளை செய்வது என்ற ஒரு சீரான அட்டவணையை பின்பற்றுவதன் மூலமாகவும் ஒற்றைத் தலைவலியை வராமலேயே தடுக்க முடியும்.

    ஊட்டச்சத்துக்களை பொறுத்தவரை விட்டமின் பி-2 என்று சொல்லப்படும் ரிபோபிளேவின் ஒற்றைத் தலைவலி ஏற்படாமல் தவிர்க்க உதவுவதாக ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.

    அதிகப்படியான உழைப்பு, மன அழுத்தம், இறுக்கம் ஆகியவற்றை தவிர்ப்பதன் மூலமாகவும் ஒற்றை தலைவலியை ஏற்படாமல் பார்த்துக் கொள்ள முடியும். எதிலும் அளவான போக்கை கடைபிடிப்பதன் மூலமாகவே உடலின் சமநிலையை பேணிக் காப்பதோடு மைக்ரேன் என்ற ஒற்றைத் தலைவலி போன்ற பிரச்சனைகளையும் தவிர்க்க முடியும் என்று தான் மருத்துவ வல்லுனர்கள் குறிப்பிடுகிறார்கள்.

    • அதிக நார்ச்சத்து இருப்பதால் எடை குறைக்க உதவுகிறது.
    • இதய ஆரோக்கியத்தை ஆதரிக்கும் அதே வேளையில் ரத்த அழுத்தத்தை பராமரிக்க உதவுகிறது.

    வெண்டைக்காய் சாப்பிடுவதால் ரத்த அழுத்தம், சர்க்கரை நோயாளிகளுக்கு மிகப்பெரிய பயனுள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

    வெண்டைக்காய் ஏ பிரிவு ரத்த சர்க்கரையை ஒழுங்குபடுத்துகிறது

    இது டைப் 2 நீரிழிவு நோய்க்கு சிறந்தது. செரிமானம், நீரேற்றம் மற்றும் வளர்சிதை மாற்றத்தை ஆதரிக்கிறது.

    இதில் அதிக நார்ச்சத்து இருப்பதால் எடை குறைக்க உதவுகிறது.

    இதய ஆரோக்கியத்தை ஆதரிக்கும் அதே வேளையில் ரத்த அழுத்தத்தை பராமரிக்க உதவுகிறது. இது வயிற்றுப் புண்களைக் குணப்படுத்துகிறது.

    நீரழிவு நோயாளிகள் 8 வாரங்களுக்கு ஒவ்வொரு 6 மணி நேரத்திற்கும் 1000 மைக்ரோகிராம் வெண்டைக்காயை உட்கொள்வது சர்க்கரை குறைப்பில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

    வெண்டைக்காயை காய்கறி உணவாகச் சாப்பிடுவதோடு மட்டுமல்லாமல், வெண்டைக்காய் தண்ணீரைக் குடிக்கலாம்.

    2அல்லது 3 வெண்டைக்காய்களை எடுத்து, அவற்றை நன்கு கழுவி, முனைகளை வெட்டி, சிறிய பிளவுகளை உருவாக்குங்கள்.

    அவற்றை தண்ணீரில் இரவு முழுவதும் ஊறவைத்து, தண்ணீரை வடிகட்டி, காலையில் வெறும் வயிற்றில் குடிக்கலாம்.

    நார்ச்சத்து நிறைந்த இந்த பானம் செரிமானத்தை மெதுவாக்குகிறது. சர்க்கரை அதிகரிப்பதைத் தடுக்கிறது மற்றும் குடல் ஆரோக்கியத்தை ஆதரிக்கிறது.

    இருப்பினும், சில சந்தர்ப்பங்களில், அதிகப்படியான நார்ச்சத்து வீக்கம் அல்லது லேசான வயிற்று அசவுகரியத்தை ஏற்படுத்தக்கூடும்,

    வெண்டைக்காய் நீர் வளர்சிதை மாற்றத்தையும் மேம்படுத்துகிறது. மன அழுத்தம் மற்றும் தூக்கமின்மை போன்ற பிரச்சனைகள் தீரும், அதே நேரத்தில் வலிமை இயற்கையாகவே அதிகரிக்கும்," என்று இருதயநோய் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

    • வேகவைத்த முட்டைகள் கொழுப்புகள் சேர்க்கப்படாமல் ஊட்டச்சத்துக்களை தக்கவைக்கும் தன்மை கொண்டது.
    • ஆம்லெட் விரும்புபவர்கள் அதில் ஊட்டச்சத்துமிக்க காய்கறிகளை சேர்த்து உட்கொள்வதுதான் சிறந்தது.

    முட்டையை வேக வைத்தோ அல்லது ஆம்லெட் தயாரித்தோ ருசிக்கவே பலரும் விரும்புகிறார்கள். இதில் எதை சாப்பிடுவது சிறந்தது என்ற கேள்வியும் அவ்வப்போது எழுவதுண்டு. குறைந்த கலோரியுடன் உடல் எடையை சீராக நிர்வகிக்கும் உணவு பழக்கத்தை மேற்கொள்ள ஆர்வம் காட்டுபவர்களுக்கு வேகவைத்த முட்டை ஏற்றது.

    இது எளிதாக ஜீரணமாகும். செரிமான பிரச்சினை உள்ளவர்களுக்கும் ஏற்றதாக அமையும். இதில் புரதம் அதிகம் உண்டு. எலும்பு ஆரோக்கியத்திற்கு தேவையான வைட்டமின் டி, மூளை செயல்பாட்டிற்கு அவசியமான வைட்டமின் பி12 ஆகிய ஊட்டச்சத்துக்களையும் வழங்கும். வேகவைத்த முட்டைகள் கொழுப்புகள் சேர்க்கப்படாமல் ஊட்டச்சத்துக்களை தக்கவைக்கும் தன்மை கொண்டது.

    ஆம்லெட் விரும்புபவர்கள் அதில் ஊட்டச்சத்துமிக்க காய்கறிகளை சேர்த்து உட்கொள்வதுதான் சிறந்தது. அதிலும் நார்ச்சத்து நிறைந்த காய்கறிகள், ஆரோக்கியமான கொழுப்பு நிறைந்த பொருட்களை ஆம்லெட்டில் சேர்த்து உட்கொள்ள வேண்டும். அதேவேளையில் ஆம்லெட்டில் எண்ணெய் அதிகம் சேர்ப்பதை தவிர்க்க வேண்டும். கலோரி, கொழுப்பு உட்கொள்ளலை கட்டுப்படுத்த நினைப்பவர்கள் ஆம்லெட்டை தவிர்ப்பது நல்லது.

    • பேரீச்சம் பழங்கள் சாப்பிட்டால் அதிலிருக்கும் நார்ச்சத்து மற்றும் ஆன்டி ஆக்சிடென்டுகள் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை அளிக்கும்.
    • நீரிழிவு நோயாளிகளுக்கு பேரீச்சம் பழம் ஏற்புடையதல்ல.

    தினமும் 2 அல்லது 3 பேரீச்சம் பழங்கள் சாப்பிட்டால் அதிலிருக்கும் நார்ச்சத்து மற்றும் ஆன்டி ஆக்சிடென்டுகள் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை அளிக்கும். 3 பேரீச்சம் பழங்களுக்கு மேல் சாப்பிட்டால் என்னவாகும் என்கிறீர்களா? அப்படி அதிகம் சாப்பிடுவது பக்கவிளைவுகளை உண்டாக்கும்.

    ஏனெனில் பேரீச்சம்பழங்கள் கலோரிகள் நிறைந்தவை. ஒரு பேரீச்சம் பழத்திலேயே 20 முதல் 30 கலோரிகள் இருக்கும். அதனை அதிகமாக உட்கொள்வது உடல் எடை அதிகரிப்புக்கு வழிவகுக்கும். அதிக நார்ச்சத்து காரணமாக வயிறு வீக்கம், வாயுத்தொல்லை போன்ற செரிமான கோளாறுகளும் உண்டாகும்.

    பேரீச்சம் பழம் அதிக கிளைசெமிக் குறியீடுகளை (சுமார் 55) கொண்டிருப்பதால் ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்க செய்துவிடும். அதனால் நீரிழிவு நோயாளிகளுக்கு இது ஏற்புடையதல்ல.

    • உடலில் குளிர்ச்சித்தன்மையை உண்டாக்கி வெப்பநிலையை சீராக்க வழிவகை செய்யும்.
    • காய்ச்சல் கடுமையாகவோ அல்லது தொடர்ந்து நீடித்தாலோ மருத்துவரின் ஆலோசனை பெற்று பருக வேண்டும்.

    காய்ச்சலின்போது இளநீர் குடிப்பது நல்லது என்பதே மருத்துவ நிபுணர்களின் கருத்தாக இருக்கிறது. ஏனெனில் காய்ச்சல் மற்றும் வியர்வை காரணமாக உடலில் ஏற்பட்ட நீரிழப்பையும், எலக்ட்ரோலைட்டுகளையும் சமநிலைப்படுத்த இளநீர் உதவும்.

    மேலும் உடலில் குளிர்ச்சித்தன்மையை உண்டாக்கி வெப்பநிலையை சீராக்கவும் வழிவகை செய்யும்.

    காய்ச்சல் கடுமையாகவோ அல்லது தொடர்ந்து நீடித்தாலோ மருத்துவரின் ஆலோசனை பெற்று பருக வேண்டும். இளநீரை அதிகமாக உட்கொள்ளவும் கூடாது. அதில் சோடியம் அதிகமாக இருப்பது பக்கவிளைவுகளை ஏற்படுத்திவிடும்.

    • ஹார்மோன் பெருமளவு நீரிழிவு பாதிப்பை ஏற்படுத்துகிறது.
    • கார்டிசோல் சுரப்பி அதிகரிக்கும்போது ஒரு நபரின் முகம், கழுத்து, வயிறு பகுதிகளில் கொழுப்பு அதிகரித்து காணப்படும்.

    மனித உடலின் இயக்கத்திற்கு ஹார்மோன்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. உடலில் இருக்கும் பல்வேறு சுரப்பிகள் வெவ்வேறு ஹார்மோன்களை உற்பத்தி செய்கின்றன.

    இதில் அட்ரீனல் சுரப்பியால் உற்பத்தி செய்யப்படும் கார்டிசோல் என்ற ஹார்மோன் மன அழுத்தத்திற்கு முக்கிய காரணமாக உள்ளது.

    பாம்பு, கரடி போன்றவை விரட்டும்போது மனிதர்கள் ஓடி, ஆபத்து காலத்தில் உயிர் தப்பிக்க இந்த கார்டிசோல் ஹார்மோன் தூண்டுகிறது. ஒருவருக்கு மன அழுத்தம் தொடர்ந்து நீடிக்கும் நிலையில் கார்டிசோல் ஹார்மோன் அதிகப்படியாக சுரக்கிறது. அது போன்ற நிலையில் உடலில் ரத்த அழுத்தம் அதிகரித்து சர்க்கரை அளவு உயர்ந்து விடும். இதனால் ரத்த அழுத்த பாதிப்பும், டைப்-2 வகை சர்க்கரை நோயும் உருவாகிவிடும். இந்த ஹார்மோன் பெருமளவு நீரிழிவு பாதிப்பை ஏற்படுத்துகிறது.

    கார்டிசோல் சுரப்பி அதிகரிக்கும்போது ஒரு நபரின் முகம், கழுத்து, வயிறு பகுதிகளில் கொழுப்பு அதிகரித்து காணப்படும். ரத்த அழுத்தம் அதிகரிக்கும். சிலருக்கு கழுத்து பகுதியில் `எருமை திமில்' போன்ற கொழுப்பு திரட்சி நிலை காணப்படும். பொதுவாக, மன அழுத்தத்தை ஏற்படுத்தும் சூழ்நிலைகளை தவிர்ப்பது, இன்ப துன்பங்களை சமமாக கருதும் மனநிலை, தியானம் போன்றவற்றால் இந்த கார்டிசோல் ஹார்மோனின் அதிகப்படியான சுரப்பை கட்டுப்படுத்தலாம்.

    • பாரம்பரிய இந்திய கழிப்பறைகளில் பயன்படுத்தப்படும் முழு குந்து நிலை மிகவும் ஆரோக்கியமானது.
    • முழு குந்து நிலையில் இடுப்பு தசைகள் ஓய்வு எடுக்கின்றன.

    சிறுநீரை அதிகநேரம் அடக்கி வைப்பது பல்வேறு உடல்நல பாதிப்புகளை ஏற்படுத்தும் என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். பொதுமக்கள் பலரும் பொது கழிப்பறைகளில் சிறுநீர் கழித்தால் கிருமிகளால் பாதிப்பு வரக்கூடும் என கருதி பொது கழிப்பறைகளில் சிறுநீர் கழிப்பதையோ அல்லது பொது இடங்களில் கழிப்பறைகளை பயன்படுத்துவதையோ தவிர்த்து வருகின்றனர்.

    இவ்வாறு சிறுநீரை அடக்குவது அல்லது நீண்ட நேரம் அடக்கி வைப்பது பல்வேறு உடல்நல பாதிப்பை ஏற்படுத்தும் என்கின்றனர்.

    இதுகுறித்து டாக்டர்கள் கூறுகையில், பெண்கள் பெரும்பாலும் ஏற்றுக்கொள்ளும் அரை குந்து நிலை முழு சிறுநீர் பை காலியாவதை தடுக்கிறது. சிறுநீர் திரும்புதல், சிறுநீர் பாதை நோய் தொற்றுகள் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கிறது.

    இது சிறுநீர்ப்பை அழுத்தத்தை அதிகரிக்கிறது. மற்றும் சிறுநீர் பாதையில் நோய் தொற்றுகள், சிறுநீர்ப்பை எரிச்சல் மற்றும் நீண்டகால பிரச்சனைகள் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கிறது.



    மேலும் சிறுநீர்ப்பை தசைகள் ஏற்படும் செயல்படும் விதத்தை பாதிக்கிறது. சிறுநீர் சேமிப்பது பாக்டீரியாக்கள் வளர ஒரு நல்ல சூழலை வழங்குகிறது. இது மீண்டும் மீண்டும் சிறுநீர் பாதை நோய் தொற்றுகள் மற்றும் சில சந்தர்ப்பங்களில் சிறுநீரக தொற்றுகள் ஏற்படுவதற்கான வாய்ப்பை அதிகரிக்கிறது.

    சிறுநீரை அடக்கி வைத்திருந்தாலும் அல்லது சரியாக உட்காராவிட்டாலும் 2 பழக்கங்களிலும் இடுப்பு, தலை, தசை பகுதிகளுக்கு தீங்கு விளைவிக்கும் என்றனர்.

    இதுகுறித்து டாக்டர்கள் மேலும் கூறுகையில், பாரம்பரிய இந்திய கழிப்பறைகளில் பயன்படுத்தப்படும் முழு குந்து நிலை மிகவும் ஆரோக்கியமானது. முழு குந்து நிலையில் இடுப்பு தசைகள் ஓய்வு எடுக்கின்றன என்றனர்.

    • மவுனமாக இருக்கும் சுபாவத்தை வளர்த்துக்கொள்வது அதிகம் பேசுவதை தவிர்க்க உதவிடும்.
    • எல்லோரிடமும், எல்லா நேரங்களிலும் திறந்த புத்தகமாக இருக்க வேண்டியதில்லை.

    இன்றைய காலகட்டத்தில் அமைதியாக, மவுனமாக இருப்பவர்கள் பெரும்பாலும் கவனிக்கப்படுவதில்லை. பிறரின் கவனத்தை ஈர்க்கும் விதத்தில் குரல் கொடுப்பவராக, சமூகவலைத்தள பக்கங்களில் கருத்து பதிவிடுபவராக, அசாத்திய துணிச்சலுடன் செயல்படுவராக இருப்பவர்களுக்குத்தான் சமூகத்தில் மதிப்பு உண்டு என்ற எண்ணமும் சிலரிடத்தில் இருக்கிறது. ஆனால் மவுனத்தை விட சிறந்த ஆயுதம் வேறு எதுவும் இல்லை என்பதை மறந்துவிடக்கூடாது. இந்த பதிவில் மவுனம் என்னென்ன வாழ்வியல் பாடங்களையெல்லாம் கற்றுத்தரும் என்று பார்ப்போமா?

    * கவனிக்கும் திறனை வளர்த்தெடுக்கும்

    உங்களிடம் மற்றவர்கள் ஏதேனும் ஒரு விஷயத்தை சுவாரசியமாக பேசிக்கொண்டிருக்கும்போது குறுக்கிட்டு பேசாமல், அவர்களின் பேச்சில் வெளிப்படும் உணர்வுகளை கவனிக்க வேண்டும். உடல்மொழியையும் கவனத்தில் கொள்ள வேண்டும். ஏனென்றால் அவர்களின் பேச்சு ஆழ்மனதை அறிந்து கொள்ளும் வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுக்கும். கவனிக்கும் திறனையும் வளர்த்தெடுக்கும். ஏனெனில் மற்றவர்கள் செய்யும் தவறுகளை, மவுனமாக, அமைதியாக இருப்பவர்கள்தான் அதிகம் கவனிக்கிறார்கள்.

    * தெளிவை தரும்

    ஏதேனும் ஒரு செயலில் அவசர அவசரமாக ஈடுபடும்போது நம்முடைய கவனமெல்லாம் எப்படியாவது அதனை சிறப்பாக செய்து முடித்துவிட வேண்டும் என்பதில்தான் இருக்கும். திடீரென குறுக்கீடு எழுந்தால், மற்றவர்கள் உங்கள் செயல்பாட்டை விமர்சனம் செய்தால் உடனே கோபம் கொந்தளிக்கும்.

    அது அந்த செயலில் இருந்து கவனத்தை திசை திருப்பிவிடக்கூடும். அந்த சமயத்தில் மவுனமாக அவர்களின் கருத்தை ஆமோதித்துவிட்டு, அதன் பிறகு அதிலிருக்கும் நிறை, குறைகளை நிதானமாக அலசி ஆராய்ந்து செயல்படுவதுதான் சிறப்பானது. அந்த மனத்தெளிவை மவுனம் உங்களுக்கு ஏற்படுத்திக்கொடுக்கும். மீண்டும் சரியான பாதையில் எண்ணங்களை கட்டமைக்க வழிவகை செய்யும்.

    * அர்த்தமுள்ள வார்த்தைகளை பேச வைக்கும்

    மவுனமாக இருக்கும் சுபாவத்தை வளர்த்துக்கொள்வது அதிகம் பேசுவதை தவிர்க்க உதவிடும். அர்த்தமுள்ள சொற்களை பேசுவதற்கும் ஊக்குவிக்கும். அந்த சொற்களில் பயனுள்ள தகவல்கள் இடம் பெற்றிருக்கும். உணர்ச்சிவசப்பட்டு பேசுவதற்கும், அர்த்தமுள்ள சொற்களை பேசுவதற்கும் இடையிலுள்ள வித்தியாசத்தை மவுனம் கற்றுக்கொடுக்கும். குறைவாக பேசினாலும் அற்புதமாக பேசினார் என்ற பாராட்டையும் பெற்றுக்கொடுக்கும்.

    * உடல் சக்தியை பாதுகாக்கும்

    தேவையற்ற கருத்துகளை பேசி வாக்குவாதத்தில் ஈடுபடுபவர்களிடம் இருந்து ஒதுங்கியே இருங்கள். அந்த இடத்தில் மவுனம்தான் சிறந்தது. அது நேரமும், உடல் சக்தியும் வீணாகுவதை தடுக்கும். ஒவ்வொருவரின் கருத்துக்கும் பதில் சொல்ல வேண்டும் என்ற தேவையில்லை.

    அதிலும் எதிர்மறை கருத்துகளை தெரிவிப்பவர்களிடம் தவறுகளை சுட்டிக்காட்டும்போது அதனை ஏற்றுக்கொண்டால் மட்டுமே பேச்சை தொடர வேண்டும். இந்த நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கும்பட்சத்தில், அடுத்த முறை தேவையற்ற பேச்சுகளை பேசுவதற்கு முன்வர மாட்டார்கள். அப்படி அவர்கள் பேசினாலும் நீங்கள் அதனை மவுனமாக கடந்து சென்று விடுவீர்கள் என்பது அவர்களுக்கு தெரியும்.



    * ரகசியம் காக்கச் செய்யும்

    எல்லோரிடமும், எல்லா நேரங்களிலும் திறந்த புத்தகமாக இருக்க வேண்டியதில்லை. மவுனம் உங்கள் வாழ்க்கையை இன்னும் ரகசியம் நிறைந்ததாக மாற்றும். அந்த ரகசியங்களை தெரிந்து கொள்வதற்காக மற்றவர்கள் அதிக ஆர்வம் காட்டுவார்கள்.

    * கேட்கும் திறனை அதிகரிக்கும்

    நீங்கள் ஒரு பேச்சாளராக இருப்பதை விட கேட்பாளராக இருப்பது எளிதானது. மற்றவர்களின் பேச்சை ரசித்து கேட்க தொடங்கும்போது இயல்பாகவே உங்கள் மனம் அமைதியாகும். நீங்கள் அதிகமாக கருத்துகளை உள்வாங்கிக்கொண்டு உங்கள் சந்தேகங்களை சம்பந்தப்பட்டவர்களிடம் கேட்கும்போது அவர்களும் ஆர்வமாக பதிலளிப்பார்கள். மீண்டும் கருத்துகளை பரிமாறிக்கொள்ளவும், நட்பு வட்டத்தை வளர்த்துக்கொள்ளவும் வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுக்கும்.

    * உணர்ச்சி ரீதியாக புத்திசாலியாக்கும்

    மவுனம் உங்களை உணர்ச்சி ரீதியாகவும் புத்திசாலியாகவும் மாற்றும். தன்னுடைய மனக் குமுறலை வெளிப்படுத்தும் நோக்கத்தில் பேசுபவர், தன் பேச்சை கேட்பவரிடம் ஆலோசனையையோ, அனுதாபத்தையோ எதிர்பார்ப்பதில்லை. ஆழ்மனதில் பதிந்திருக்கும் உணர்வுகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பை தான் எதிர்பார்க்கிறார். அவரது மனக் குமுறலை எந்த குறுக்கீடும் செய்யாமல் மவுனமாக கேட்பதையே அவர் விரும்பவும் செய்வார். உங்கள் மவுனம் அவரை ஆசுவாசப்படுத்தும். உங்களையும் மற்றவர்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளக்கூடிய நல்ல மனிதராக அடையாளம் காட்டும்.

    • சோப்புக் கட்டி ஈரப்பதத்தை இழுத்து வைத்திருக்கும்.
    • சோப்புக் கட்டியை பலபேர் உபயோகப்படுத்தும்போது, இந்த நுண்கிருமிகள் ஒருவரிடமிருந்து இன்னொருவருக்குப் பரவ வாய்ப்பு அதிகம்.

    அந்தக் காலத்தில், ஒரு சோப்பை வீட்டிலுள்ள அனைவரும் உபயோகப்படுத்திக் கொண்டுதான் இருந்தார்கள். அதை ஒரு பெரிய விஷயமாக யாரும் அப்பொழுது நினைத்ததில்லை. ஆனால், இப்பொழுது பொதுமக்களிடையே விழிப்புணர்வு அதிகமாக ஏற்பட்டுவிட்டது. அதனால், குடும்பத்துக்குள்ளேயே ஒவ்வொருவரும் தனித்தனியே தங்களுக்குப் பிடித்த சோப்பை வாங்கி பயன்படுத்த ஆரம்பித்துவிட்டார்கள். இது நல்லதே.

    பலவிதமான சரும அமைப்புகள் உள்ளவர்கள் ஒரே வீட்டில் இருப்பார்கள். இப்படியிருக்கும்போது, ஒரே சோப்பை பலர் உபயோகிப்பதால், தீமைதான் அதிகமே தவிர, நன்மை இல்லை.

    பாத்ரூமில் பலர் சோப்பை உபயோகித்தபின் அதன் மீது நிற்கும் நுரையைக் கழுவாமல் சோப்பை அப்படியே வைத்துவிட்டு வந்துவிடுவார்கள். இதனால் ஏற்கனவே சோப்பை உபயோகித்தவருக்கு ஏதாவது சரும நோய் இருந்திருந்தாலும் நன்றாகக் கழுவி உலர வைத்துவிட்டால் அடுத்தவர் உபயோகிக்கும்போது தொற்று ஏற்படாமல் தடுக்க ஓரளவு வாய்ப்பாகும்.

    சோப்புக் கட்டி ஈரப்பதத்தை இழுத்து வைத்திருக்கும். இதனால் பாக்டீரியா, வைரஸ், பங்கஸ் கிருமிகள் போன்றவை சோப்பின் மேல் பகுதியில் தங்கியிருக்கும். ஆக, ஒரு சோப்புக் கட்டியை பலபேர் உபயோகப்படுத்தும்போது, இந்த நுண்கிருமிகள் ஒருவரிடமிருந்து இன்னொருவருக்குப் பரவ வாய்ப்பு அதிகம்.

    நல்ல, சுத்தமான, ஆரோக்கியமான உடலமைப்பு கொண்டவர்கள் உபயோகிக்கும்போது, அந்த சோப்பின் மூலம் அதிகமாக கிருமிகள் பரவ வாய்ப்பில்லை. வெளிக்காயம், அதிக எதிர்ப்புச்சக்தி இல்லாதவர்கள், 'எக்ஸிமா' என்று சொல்லக்கூடிய சரும நோய் உள்ளவர்களிடமிருந்து கண்டிப்பாக சருமநோய் பரவத்தான் செய்யும்.

    ஒருவர் உபயோகித்த சோப்பை இன்னொருவர் உபயோகித்துத்தான் ஆகவேண்டும் என்ற நிலை வந்தால், நீங்கள் உபயோகித்த சோப்பை நன்கு கழுவி, உலரவிட்டு உபயோகிக்க வேண்டும். கணவன்-மனைவி என்றாலும் கூட இதே முறையைத்தான் கடைப்பிடித்தாக வேண்டும்.

    இப்பொழுதெல்லாம் 'லிக்யுட் சோப்' என்கிற திரவ வடிவ சோப்புக் கரைசல் பாட்டில்களில் கிடைக்கிறது. இதை பயன்படுத்தும்போது தொற்று என்கிற பேச்சுக்கே இடமில்லை.

    சோப்பை நாம் உபயோகிப்பதே, நம் உடம்பை சுத்தம் செய்ய, நம் உடம்பு புத்துணர்ச்சி பெற, நம் உடம்பில் ஒட்டியிருக்கும் அழுக்கு, தூசி, பாக்டீரியா, வைரஸ் கிருமிகள், எண்ணெய் படலம், வியர்வை நாற்றம் முதலியவற்றை அகற்றத்தான். எனவே அந்த சோப் தரமானதாக இருக்க வேண்டும்.

    தோல் பராமரிப்பு என்பது, பாத்ரூமுக்கு போனவுடன் 2 சொம்பு தண்ணீரை ஊற்றி, சோப்பை உடல் முழுவதும் ஒரு நிமிடத்தில் தேய்த்துவிட்டு, தண்ணீரை மறுபடியும் ஊற்றிக் கொண்டு, பாத்ரூமை விட்டு வெளியே ஓடி வந்துவிடுவதல்ல. சிறிது கவனம், சிறிது நேரம், சிறிது அக்கறை, தரமான குளியல் சோப்புடன் சேரும்போது, அந்தக் குளியல், ஆனந்தக் குளியலாக எப்பொழுதும் இருக்கும்.

    • பூஞ்சை நோய் எல்லா வயதினரையும் பாதிக்கும் என்றாலும், சிறு குழந்தைகளை அதிகமாய் பாதிக்கும்.
    • பொடுகு என்பது தலையிலிருந்து சிறு துகள்கள் உதிர்ந்துவிழும் ஒரு பொதுவான நிலையாகும்.

    தலையின் குறிப்பிட்ட ஒரு பகுதியில் இருந்து மொத்தமாக தலைமுடி உதிர்ந்து, அந்தப்பகுதி மட்டும் பளபளவென்று காணப்படும். இது 'அலோபேசியா ஏறேட்டா' என்ற நோய் காரணமாக ஏற்படும். தலையில் உள்ள முடிகள் மொத்தமாக உதிர்ந்து வழுக்கையுடன் காணப்பட்டால் அது 'அலோபேசியா டோட்டாலிஸ்' என்று அழைக்கப்படும்.

    இதற்கான சித்த மருத்துவம்: சிவனார் வேம்புக் குழித்தைலம், சிரட்டைத் தைலம் மருந்துகளை சித்த மருத்துவரின் ஆலோசனைப்படி தேங்காய் எண்ணெய்யில் கலந்து பாதிக்கப்பட்ட இடத்தில் தேய்த்துவர முடி நன்றாக வளரும்.

    'டீனியா கப்பைடிஸ்' என்னும் பூஞ்சையால் சிலருக்கு தலைமுடி உதிரும். முடி உதிரும் பகுதிகள் வெள்ளை அல்லது சிவப்பு வட்ட வடிவத்துடன் காணப்படும்.

    இப்பூஞ்சை நோய் எல்லா வயதினரையும் பாதிக்கும் என்றாலும், சிறு குழந்தைகளை அதிகமாய் பாதிக்கும். இது பொதுவாக ஒருவர் பயன்படுத்திய சீப்பை இன்னொருவர் பயன்படுத்துவது மற்றும் பொது இடங்களில் கையை வைத்து விட்டு தலையை சொறிவது போன்ற காரணங்களால் ஒருவருக்கு ஏற்படுகின்றது.

    இதற்கான சித்த மருத்துவம்: சீமை அகத்தி இலைச் சாற்றை தேங்காய் எண்ணெய் சேர்த்து காய்ச்சி வடிகட்டி அந்த இடத்தில் பூசிவர, ஊறல், செதில் உதிர்தல் நின்று மீண்டும் அவ்விடத்தில் விரைவில் முடி வளர்ந்து வரும்.

    பொடுகு என்பது தலையிலிருந்து சிறு துகள்கள் உதிர்ந்துவிழும் ஒரு பொதுவான நிலையாகும். தலையில் தேய்க்கும் எண்ணெய் பசையை உண்டு வாழும் ஈஸ்ட் வகைகளில் ஒன்று 'மாலசீயா'. இது பொடுகு செதில்களுக்கு உள்ளே வளர்ச்சி அடைந்து ஊறல், அதனுடன் பொடித்துகள்கள் முகம், கழுத்து பகுதிகளில் உதிர்ந்து காணப்படும்.

    தலையில் ஏற்படும் எக்ஸீமா என்னும் கரப்பானில் தோல் அழற்சி, அரிப்பு, சிறுசெதில் மற்றும் வீக்கத்துடன் இருக்கும். சோரியாசிஸ் எனப்படும் காளாஞ்சகப்படை என்பது ஒரு பொதுவான, நீண்டகால நாள்பட்ட நோயாகும். இதில் தலையில் செதில்கள், ஊறல், முடி உதிர்தல் போன்ற பிரச்சினைகள் காணப்படும். இவற்றுக்கான சித்த மருத்துவ சிகிச்சைகள்:

    கரிசாலைச் சூரணம் 1 கிராம், அயப்பிருங்க ராஜ கற்பம் 200 மி.கி., சங்கு பற்பம் 200 மி.கி. இவற்றை இருவேளை தேன் அல்லது வெந்நீரில் சாப்பிட வேண்டும்.

    அரிப்பு இருந்தால், கந்தக பற்பம் 200மி.கி., சிவனார் பற்பம் 200மி.கி., பலகரை பற்பம் 200 மி.கி. இவற்றை தேன் அல்லது வெந்நீரில் இருவேளை சாப்பிட வேண்டும். தலையில் தேய்ப்பதற்கு கரிசலாங்கண்ணி தைலம் அல்லது செம்பருத்தி தைலம் பயன்படுத்தலாம்.

    • நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கிறது.
    • நார்ச்சத்து குடல் இயக்கத்தை சீராக்கி மலச்சிக்கலைத் தடுக்கிறது.

    பொதுவாக சாதம் வடித்தவுடன் அந்த கஞ்சியை கீழே ஊற்றிவிடுகிறோம். அதன் நன்மைகள் தெரிந்தவர்கள் மட்டும் தான் அந்த கஞ்சியை கீழே ஊற்ற மாட்டார்கள். நம் வீட்டில் உள்ள பெரியவர்கள் நீராகாரம் என சொல்லி அதை வீணாக்காமல் குடித்துவிடுவர். அவர்களைப் போல நீங்களும் வடித்த கஞ்சியில் உள்ள நன்மைகள் பற்றி தெரிந்துகொண்டால் அதை வீணாக கீழே ஊற்ற மாட்டீர்கள்.

    சாதம் வடித்த கஞ்சியில் கார்போஹைட்ரேட்டுகள் அதிகமாக உள்ளது. சாதத்தில் எவ்வளவு ஆற்றல் இருக்கிறதோ அதே அளவு ஆற்றல் இந்த கஞ்சியிலும் உள்ளது. இளஞ்சூடான வடித்த கஞ்சியுடன் சிறிதளவு உப்பு சேர்த்து குடித்தால் வயிறும் நிறைந்துவிடும் தேவையான ஆற்றலும் கிடைத்துவிடும்.

    சாதம் வடித்த இந்த கஞ்சியில் பி1,பி2,பி6 ஆகியவை உள்ளது. உங்கள் உடலுக்கு தேவையான பொட்டாசியம், மக்னீசியம் சத்தையும் அதிகரிக்கச் செய்கிறது. உடலை நீரேற்றமாக வைத்திருக்க உதவுகிறது. உடலில் எலக்ரோலைட்டுகளை சமநிலைப்ப்படுத்துகிறது. சரும பிரச்சனைகளை சரி செய்வதற்கும், சில நேரத்தில் சருமத்தில் எரிச்சலை போக்கவும், முகப்பருக்களை குறைப்பதற்கும் கூட பயன்படுகிறது.

    இதிலுள்ள பொட்டாசியம் உடலில் உள்ள சோடியம் அளவை கட்டுப்படுத்தி இதய ஆரோக்கியத்தை ஒழுங்குபடுத்துகிறது. மேலும் ரத்த அழுத்தத்தையும் குறைக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கிறது. மேலும் இதில் நிறைந்துள்ள நார்ச்சத்து குடல் இயக்கத்தை சீராக்கி மலச்சிக்கலைத் தடுக்கிறது.

    காலையில் எழுந்தவுடன் வடித்த கஞ்சி குடித்தால் அந்த நாள் புத்துணர்ச்சி நிறைந்த நாளாக இருக்கும். அதுமட்டுமின்றி வயிறு நிறைந்த உணர்வையும் பெறுவதால் அதிகமாக சாப்பிட வேண்டும் என்ற எண்ணமும் தோன்றாது. அன்றைய நாளைக்கு தேவையான ஆற்றலும் கிடைத்து விடும்.

    • எடையை ஏற்படுத்தாமல் இரவு முழுவதும் உங்களை நிறைவாக வைத்திருக்கும் புரதத்தையும் வழங்குகிறது.
    • பாதாமில் மெக்னீசியம் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைந்துள்ளன.

    இன்றைய காலக்கட்டத்தில் காலையில் சீக்கிரம் எழுந்திருப்பது என்பது பலருக்கும் சவாலாகவே இருந்து வருகிறது. காலையில் சீக்கிரம் எழுந்திருக்க எத்தனை அலாரம் வைத்தாலும் அதனை அணைத்துவிட்டு மறுபடியும் தூங்குவதை பலரும் வாடிக்கையாக வைத்துள்ளனர். இதற்கு பல காரணங்கள் கூறப்பட்டாலும் முக்கிய காரணமாக இரவு உணவிற்கு நீங்கள் சாப்பிடுவது அடுத்த நாள் காலையில் நீங்கள் எவ்வளவு புத்துணர்ச்சியுடன் உணர்கிறீர்கள் என்பதில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தும்.

    நீங்கள் உண்ணும் இரவு நேர உணவு செரிமானம், ஹார்மோன் கட்டுப்பாடு, தூக்கத்தின் தரம் மற்றும் நீரேற்றம் ஆகியவற்றை பாதிக்கிறது. இவை அனைத்தும் நிதானமான தூக்கம் மற்றும் உற்சாகமான தொடக்கத்திற்கான முக்கிய காரணிகளாகும்.

    மெலடோனின் உற்பத்தியை ஆதரிக்கும், ரத்த சர்க்கரை அளவை உறுதிப்படுத்தும் மற்றும் கனமான தன்மையைத் தவிர்க்கும் சீரான இரவு உணவு ஆழ்ந்த தூக்கத்தை ஊக்குவிக்கும். மறுபுறம், கனமான, கொழுப்பு நிறைந்த அல்லது அதிக சர்க்கரை நிறைந்த உணவுகள் தூக்க சுழற்சிகளை சீர்குலைத்து, அடுத்த நாள் உங்களை சோர்வாகவோ அல்லது சோம்பலாகவோ உணர வைக்கும்.

    இரவில் சரியான உணவுகளைத் தேர்ந்தெடுப்பது உடல் ஓய்வெடுக்கவும், மிகவும் திறமையாக சரிசெய்யவும் உதவும். நீங்கள் புத்துணர்ச்சியுடன் எழுந்திருக்க விரும்பினால், உங்கள் இரவு உணவில் சேர்க்க 5 சிறந்த உணவுகள் எவை என்பதை தொடர்ந்து பார்ப்போம்.

    1. சால்மன் மீன்

    ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் வைட்டமின் டி நிறைந்த சால்மன், மெலடோனின் உற்பத்தியை ஆதரிக்கிறது மற்றும் வீக்கத்தைக் குறைக்கிறது. இது ஆழ்ந்த தூக்கத்தை ஊக்குவிக்கிறது. இது மனநிலை மற்றும் தூக்கத்தின் தரத்தை மேம்படுத்தும் செரோடோனின் அளவைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது. இது புத்துணர்ச்சியுடன் எழுவதற்கு முக்கியமாகும்.

    2. சர்க்கரைவள்ளிக் கிழங்கு

    இவை கார்போஹைட்ரேட், பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் ஆகியவற்றால் நிரம்பியுள்ளன. அவை தசைகளை தளர்த்தி ஆழ்ந்த தூக்கத்தை ஆதரிக்க உதவுகின்றன. இனிப்பு சர்க்கரைவள்ளி கிழங்கு மெதுவாக வெளியிடும் ஆற்றலையும் வழங்குகிறது. இது இரவில் உங்களை எழுப்பக்கூடிய ரத்த சர்க்கரை குறைவதைத் தடுக்கிறது.

    3. கீரைகள்

    மெக்னீசியம், கால்சியம் மற்றும் நார்ச்சத்து நிறைந்த இலைக் கீரைகள், ஓய்வை ஊக்குவிக்கின்றன. மற்றும் இரவில் செரிமானத்தை உதவுகின்றன. இந்த ஊட்டச்சத்துக்கள் உடல் அமைதியாக இருக்க உதவுகின்றன மற்றும் இரவு நேர விழிப்பு அல்லது அமைதியற்ற தூக்கத்தின் வாய்ப்புகளைக் குறைக்கின்றன.



    4. கொண்டைக்கடலை அல்லது பருப்பு

    சிறந்த தாவர அடிப்படையிலான புரத மூலங்களான கொண்டைக்கடலை மற்றும் பயறு வகைகளில் வைட்டமின் B6 உள்ளது, இது மெலடோனின் உற்பத்தியில் பங்கு வகிக்கிறது. அவற்றின் நார்ச்சத்து செரிமானத்திற்கும் உதவுகிறது. மற்றும் இரவு முழுவதும் ரத்த சர்க்கரை அளவை சீராக வைத்திருக்கிறது.

    5. கிரேக்க தயிர்

    டிரிப்டோபன் மற்றும் கால்சியத்தின் நல்ல மூலமாகும் கிரேக்க தயிர், மூளை டிரிப்டோபனைப் பயன்படுத்தி மெலடோனின் மற்றும் செரோடோனின் உற்பத்தி செய்ய உதவுகிறது. இது எடையை ஏற்படுத்தாமல் இரவு முழுவதும் உங்களை நிறைவாக வைத்திருக்கும் புரதத்தையும் வழங்குகிறது.

    6. பாதாம்

    பாதாமில் மெக்னீசியம் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைந்துள்ளன, அவை தரமான தூக்கத்தை ஆதரிக்கின்றன. இரவு உணவில் ஒரு சிறிய பகுதியை சாப்பிடுவது உடல் ஓய்வெடுக்கவும் ஓய்வுக்குத் தயாராகவும் உதவும், அதே நேரத்தில் மூளைக்கு ஊட்டமளிக்கும்.

    7. பிரவுன் ரைஸ் அல்லது குயினோவா

    பழுப்பு அரிசி அல்லது குயினோவா போன்ற முழு தானியங்கள் குறைந்த கிளைசெமிக் குறியீட்டைக் கொண்டுள்ளன, இன்சுலின் வெளியீட்டை ஊக்குவிக்கின்றன. இது மூளையில் டிரிப்டோபனை அதிகரிக்கிறது. இந்த சிக்கலான கார்போ-ஹைட்ரேட்டுகள் நிலையான ஆற்றல் மட்டங்களையும் பராமரிக்கின்றன.

    8. வாழைப்பழத் துண்டுகள்

    இரவு உணவிலோ அல்லது இனிப்புப் பண்டத்திலோ சிறிது வாழைப்பழத்தைச் சேர்ப்பது பொட்டாசியம் மற்றும் மெக்னீசியத்தை வழங்குகிறது. இவை இரண்டும் இயற்கையான தசை தளர்த்திகளாகும். அவற்றின் இயற்கையான சர்க்கரைகள், மிதமாகச் சாப்பிடும்போது, ரத்த சர்க்கரையை அதிகரிக்காது. ஆனால் தூக்கத்திற்கு மென்மையான மாற்றத்தை ஆதரிக்கின்றன.

    9. மூலிகை தேநீர்

    இது ஒரு உணவாக இல்லாவிட்டாலும், இரவு உணவை முடிக்கும்போது கெமோமில் போன்ற அமைதியான தேநீர் குடிப்பது சிறந்த தூக்கத்தை ஊக்குவிக்கும். இந்த தேநீர்கள் லேசான மயக்க பண்புகளைக் கொண்டுள்ளன. பதட்டத்தைக் குறைக்கின்றன. மேலும் நீங்கள் புத்துணர்ச்சியுடன் எழுந்திருக்க நிம்மதியான தூக்கத்தைத் தூண்ட உதவுகின்றன.

    10. பூசணி விதைகள்

    மெக்னீசியம், துத்தநாகம் மற்றும் டிரிப்டோபான் நிறைந்த பூசணி விதைகள் ஒரு சிறந்த இரவு நேர சிற்றுண்டியாகும். அவை நரம்பியக்கடத்தி செயல்பாடு மற்றும் ஹார்மோன் சமநிலையை ஆதரிக்கின்றன, அவை நிம்மதியான தூக்கத்திற்கும் உற்சாகமான காலைக்கும் அவசியமானவை.

    இரவு உணவிற்கு லேசான, ஊட்டச்சத்து நிறைந்த மற்றும் குறைவான உணவுகளைத் தேர்ந்தெடுப்பது தரமான தூக்கத்தையும், புத்துணர்ச்சியூட்டும், துடிப்பான காலையையும் உங்களுக்கு அமைக்கும்.

    ×