என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kudampuli"

    • உடலானது கொழுப்பை உருவாக்க பயன்படுத்தும் சிட்ரேட் லைஸ் என்ற நொதியின் செயல்பாட்டை தடுக்கக்கூடியவை.
    • குடம் புளியை உணவில் சேர்ப்பது வயிறு வீக்கத்தையும், இன்சுலின் அளவையும் குறைக்க உதவும்.

    உணவில் புளிப்பு சுவைக்காக சேர்க்கப்படும் புளி வகைகளுள் பழமையான ஒன்று குடம் புளி. மலையாளத்தில் மலபார் புளி என்றும், கன்னடத்தில் உப்பேஜ் என்றும் அழைக்கப்படும் இது, தென்னிந்திய சமையலில் பரவலாக இடம் பெறுகிறது.

    இந்த புளியில் ஹைட்ராக்ஸி சிட்ரிக் அமிலம் (எச்.சி.ஏ.) என்னும் பைட்டோ கெமிக்கல்கள் உள்ளன. அவை கொழுப்பை எரிக்கும் திறன் கொண்டவை. குறிப்பாக உடலானது கொழுப்பை உருவாக்க பயன்படுத்தும் சிட்ரேட் லைஸ் என்ற நொதியின் செயல்பாட்டை தடுக்கக்கூடியவை.

    பசி உணர்வையும் கட்டுப்படுத்தக்கூடியவை. அதனால் உடல் எடையை குறைப்பதற்கு இந்த புளி முக்கிய பங்கு வகிக்கிறது.

    அத்துடன் குடம் புளியை உணவில் சேர்ப்பது வயிறு வீக்கத்தையும், இன்சுலின் அளவையும் குறைக்க உதவும். ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தவும், செரிமான செயல்முறையை தூண்டவும், மகிழ்ச்சிக்கான ஹார்மோனை வெளியிடவும் வழிவகை செய்யும். வயிற்று புண் ஏற்படாமல் தடுக்கும். இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், கொழுப்பை கட்டுப்படுத்தவும் உடலில் இருக்கும் நச்சுக்களை நீக்கவும், எலும்புகளை வலுப்படுத்தவும் துணைபுரியும்.

    • நல்ல புளிப்பும், இனிப்பும் கலந்த சுவையுடையதாக கோடம்புளி உள்ளது.
    • கோடம்புளி வாத நோய்களுக்கு நல்ல மருந்து என்கிறது சித்த மருத்துவம்.

    தமிழர்களின் உணவில் இன்றியமையாத அஞ்சறைப் பெட்டி கடைச்சரக்காக உள்ளது 'புளி'. அந்த வகையில் புளிக்கு மாற்றாக பயன்படுத்தப்பட்ட மருத்துவ குணமிக்க மற்றொரு மூலிகை கடைச்சரக்குப் பொருள் 'கோடம்புளி'. தற்போதைய காலத்தில் நாம் பயன்படுத்த மறந்த கடைச்சரக்காக இருப்பது இந்த 'பழம் புளி' எனும் 'கோடம்புளி'. மேற்கத்திய மலைத்தொடரில் கேரளாவை ஒட்டிய பகுதிகளில் இந்த மரங்கள் அதிகம் காணப்படுவதால் இவற்றிற்கு 'மலபார் புளி' என்ற பெயரும் உண்டு.

    நல்ல புளிப்பும், இனிப்பும் கலந்த சுவையுடையதாக கோடம்புளி உள்ளது. 5 முதல் 8 விதைகளை உடையது. அதனைச்சுற்றி பழம் வெண்மை நிறமும், பழத்தோல் கருஞ்சிவப்பு நிறமும் உடையது. இதன் பழம் மங்குஸ்தான் பழத்தை ஒத்து காணப்படும். கோடம்புளி நம் நாட்டை பிறப்பிடமாகக் கொண்டதால், பாரம்பரியமாக நமது நாட்டு மருத்துவத்தில் அதிகம் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது.

    கோடம்புளியின் பழம் 20-85 கிராம் எடை உடையது. பழத்தில் கணிசமான அளவு மாலிக் அமிலம் உள்ளது. சிட்ரிக் அமிலம் மற்றும் அசிட்டிக் அமிலம் மிகக் குறைவாக உள்ளதாக நவீன அறிவியல் கூறுகின்றது. இந்த மாலிக் அமிலமானது பழங்களுக்கு கடும் புளிப்பு சுவையை அளிக்கிறது.

    'அஸ்கார்பிக் அமிலம்' எனும் வைட்டமின்-சி யும் உள்ளதால் கோடம்புளி, நோய் எதிர்ப்புசக்தியை அதிகரிப்பதாக உள்ளது. மேலும் மாங்கனீசு, பொட்டாசியம், மெக்னீசியம், இரும்புச்சத்து, கால்சியம் சத்து போன்ற உடலுக்கு அத்தியாவசிய தாது உப்புக்களும் உள்ளதால் இதயத்தின் நலம் காப்பதாக உள்ளது. நீரில் கரையக்கூடிய இயற்கை நிறமிசத்துக்களை கோடாம்புளி கொண்டுள்ளதால், புற்றுநோய்களை தடுக்கும் தன்மையும் உடையது.

    பாரம்பரிய மருத்துவத்தில் வாயுத்தொல்லை, உடல் வெப்பம், வயிற்றுப்போக்கு, கழிச்சல், வயிறுப்பொருமல், மலச்சிக்கல், தோல்நோய்கள், கல்லீரல் நோய்கள், மூலம், கட்டிகள் போன்ற பல நோய்நிலைகளில் கோடாம்புளி பயன்படுத்தப்படுகிறது. வட இந்தியாவில் உடலை குளிர்ச்சியாக்கும் குளிர்பானங்களில் கோடம்புளி பயன்படுத்துவது குறிப்பிடத்தக்கது.

    சித்த மருத்துவம் கூறும் வாதம், பித்தம், கபம் இவை மூன்றில் வாதத்தையும், கபத்தையும் குறைத்து வாழ்நாளைக் கூட்டக்கூடியது இந்த கோடாம்புளி. சித்த மருத்துவமானது தீர்க்க முடியாத நோய்நிலையாக கருதுவது வாதமும், கபமும் சேர்ந்த கூட்டணியைத் தான். அது 'வாதகபம்' அல்லது 'கபவாதம்' எதுவாக இருந்தாலும் அதனை தீராத நோய்நிலையாக சித்த மருத்துவம் எச்சரிக்கின்றது. ஆனால், அஞ்சறைப்பெட்டி கடைச்சரக்கான எளிய மூலிகை கோடம்புளி மேற்கூறிய நோய்நிலைகளில் நல்ல பலன் தந்து, வாதமும், கபமும் உடலில் சேராமல் தடுக்கும்.

    மருத்துவர் சோ.தில்லைவாணன்

    மருத்துவர் சோ.தில்லைவாணன்

     ஆயுளைக் கெடுக்கும் தொற்றா நோய்நிலைகளான உடல் பருமன், மாரடைப்பு, அதிக ரத்த அழுத்தம், ரத்தத்தில் அதிகரித்த கொழுப்பு, புற்றுநோய், இதய நோய்கள் ஆகியவற்றை சித்த மருத்துவம் கபவாதம் சேர்ந்த நோய்நிலையாக கருதுகிறது. மேலும் இன்றைய வளர்ச்சிதை மாற்ற நோய்நிலைகளான நீரிழிவு நோய், உடல் பருமன் ஆகிய நோய்நிலைகளுக்கும் கபவாதம் தான் அடிப்படை என்கிறது சித்த மருத்துவம். மேற்கூறிய தொற்றா நோய்நிலைகள், உடலில் முற்றாமல் இருக்க கபவாதம் போக்குவது அவசியம். அந்த வகையில் உணவில் தினசரி கோடம்புளியை சேர்ப்பது வளர்ச்சிதை மாற்ற நோய்களில் நன்மை பயக்கும். நோய்களை வரவிடாமல் தடுக்கும்.

    உலக அளவில் உடல் பருமனைக் குறைக்கும் பல்வேறு மருந்துகளில் கூடுதல் சரக்காக சேர்க்கப்படும் மூலிகைச் சரக்கு இந்த கோடம்புளி. கோடம்புளியில் உள்ள 'ஹைட்ராக்சி சிட்ரிக் அமிலம்' எனும் வேதிப்பொருள், பசியை அடக்கி, அதிக உணவு உண்பதை தடுப்பதாக உள்ளது.

    எந்நேரமும் நொறுக்கு தின்பண்டங்களிடம் நேரத்தை செலவழித்து, ஆயுளைக் குறைத்துக் கொள்பவர்கள் அவசியம் சேர்க்க வேண்டிய அஞ்சறைப்பெட்டி கடைச்சரக்கு இது. ஆனால் இதனைப் பற்றிய விழிப்புணர்வு நம் நாட்டில் சற்று குறைவாகவே உள்ளது. கோடம்புளியை கரைத்து ரசமாக்கி உணவுக்கு முன்னர் எடுத்துக்கொள்ள பசியை தடுக்கும். உணவுக்கு பின்னர் எடுத்துக்கொள்ள உடல் எடை கூடுவதைத் தடுக்கும்.

    அடினோசின் டிரைபாஸ்படேஸ்-சிட்ரேட்-லையேஸ் என்ற நொதியை தடுப்பதன் மூலம் கோடம்புளி உடல் எடை இழப்பை ஏற்படுத்துவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மேலும் கோடம்புளியில் உள்ள 'ஹைட்ராக்சி சிட்ரிக் அமிலம்' -ஆனது மூளையில் செரடோனின் எனும் ஹார்மோனை அதிகம் வெளியிட்டு, அதன் மூலம் பசியை அடக்குவதாகவும் நவீன ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

    மேலும் கணைய ஆல்பா அமிலேஸ் மற்றும் குடலில் உள்ள ஆல்பா குளுக்கோசிடேஸ் ஆகிய நொதிகளைத் தடுப்பதன் மூலம் கார்போஹைட்ரேட் வளர்சிதை மாற்றத்தைக் குறைக்க வழிவகை செய்கிறது. இதன் மூலம் நீரிழிவு நோயில் (சர்க்கரை நோயில்) நல்ல பலன் தருவதாகவும் உள்ளது.

    தாய்லாந்து நாட்டில், உடல் பருமன் உடைய பெண்களை கொண்டு நடைபெற்ற ஆய்வில் கோடம்புளி உடல் பருமன் நிலையில் நல்ல பலன் தருவதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. மேற்கூறிய ஆய்வில் உணவு கட்டுப்பாடுடன், கோடம்புளியை மாத்திரையாக எடுத்துக்கொண்டதில், ஆய்வில் பங்கு பெற்ற பெண்களின் உடல் பருமன் இரண்டு மாதங்களில் கணிசமாக குறைந்ததாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. ஆக, இனி ரசத்தில் கோடாம்புளியை சேர்ப்பது உடல் பருமனைக் குறைத்து ஆயுளை நீட்டும்.

    அதே போல் கோடம்புளியில் உள்ள முக்கிய வேதிப்பொருளான 'கார்சினால்' பல்வேறு மருத்துவ குணங்களை வாய்ந்ததாக நவீன அறிவியல் கூறுகின்றது. இது ரத்தத்தில் கொழுப்பு (கொலஸ்டிரால்), டிரைகிளிசெரைட், மற்றும் கெட்ட கொழுப்பு (எல்.டி.எல்) இவற்றைக் குறைத்து, நல்ல கொழுப்பின் அளவை (எச்.டி.எல்) அதிகரிக்கக் கூடியதாக உள்ளது. ஆக, உணவில் பழம்புளியை நாடுவது, இதயத்தின் ஆரோக்கியத்திற்கு பலத்தை சேர்க்கும் என்பது உறுதி.

    கோடம்புளி வாத நோய்களுக்கு நல்ல மருந்து என்கிறது சித்த மருத்துவம். மூட்டு வாத நோயாளிகள் உணவில் புளிக்கு பதிலாக கோடம்புளியை சேர்ப்பது மூட்டு வலியைக் குறைக்கும். கோடம்புளியில் உள்ள கார்சினால் எனும் வேதிப்பொருள் உடலில் மூட்டு வீக்கத்தை உண்டாக்கும் பல்வேறு நொதிகளை தடுத்து வீக்கத்தைக் குறைப்பதாக உள்ளது என நவீன ஆய்வு முடிவுகளும் தெரிவிப்பது கூடுதல் சிறப்பு.

    இன்றைய நவீன வாழ்வியலில் மன அழுத்தமும், மன பதட்டமும் வாழ்க்கையின் ஒரு அங்கமாகவே மாறிவிட்டன. அதற்காக மருந்துகளை நெடுநாள் நாடும்போது இன்னும் பல பின் விளைவுகளை சந்திக்க நேரிடுகிறது. இத்தகைய நிலையில் நாம் உணவில் கோடம்புளியை பயன்படுத்துவது மன அழுத்தம் மற்றும் மன பதட்டத்தைப் போக்குவதாக எலிகளில் நடந்த சோதனை முடிவுகள் தெரிவிக்கின்றன. ஆக, கோடம்புளியை பயன்படுத்துவது உடல் நலத்திற்கு மட்டுமின்றி மன நலத்திற்கும் நன்மை பயக்கும்.

    கோடம்புளியை கொண்டு தயாரிக்கப்படும் 'கோகம் சிரப்' மற்றும் 'கோகம் சர்பத்' (குளிர்பானம்) ஆகியவை வடஇந்தியாவில் மிகவும் பிரபலமானவை. கோடம்புளி பழங்கள் மார்ச் முதல் மே மாதம் வரை மட்டும் கிடைக்கக்கூடும். ஆகையால், சேகரித்த கோடம்புளியுடன் சர்க்கரை சேர்த்து 8 முதல் 10 நாட்கள் வெயிலில் வைக்க அதில் உள்ள சாறு சர்க்கரையுடன் கலந்து பாகு போல் மாறும். இதை எடுத்து வடித்து வைத்துக்கொண்டு பயன்படுத்துவது நல்லது. இதனை 'கோடம்புளி மணப்பாகு' (கோகம் சிரப்) என்று கூறுவர்.

    சுமார் 5-8 காய்ந்த கோடம்புளியின் பழத்தோல்களை வெதுவெதுப்பான நீரில் சுமார் 30 நிமிடம் ஊறவைத்து பிழிந்து வடிகட்டினால் அடர் சிவப்பு நிறத் தண்ணீர் கிடைக்கும். இந்த ஊறல் நீருடன் 3 முதல் 4 பங்கு தேங்காய் பால், தேவையான அளவு உப்பு மற்றும் பிற அஞ்சறைப்பெட்டி கடை சரக்குகளாகிய இஞ்சி, மிளகு, சீரகம் மற்றும் கறிவேப்பிலை ஆகியவையும் சேர்த்து பயன்படுத்தலாம். இது உணவுக்கு முன் பசியை தூண்டும் பானமாக (சூப்) பல நாடுகளில் பயன்படுத்தப்படுகிறது.

    ஆய்வுக்கூட பரிசோதனையில் கோடம்புளியின் கார்சினால் மற்றும் மஞ்சளில் உள்ள குர்குமின் ஆகிய இரண்டும் லுகீமியா எனும் ரத்த புற்றுநோய் பெருக்கத்தை தடுப்பதாக ஆய்வு முடிவுகள் கூறுவது, அஞ்சறைப்பெட்டி கடைச்சரக்குகள் உயிர் காக்கும் மருந்துகள் என்பதற்கு மிகச்சிறந்த சான்று.

    கோடம்புளியில் உள்ள கார்சினால், நமது உடலில் அழற்சி மற்றும் கட்டிகளின் உருவாக்கத்திற்கு காரணமாகும் புரோஸ்டாகிளான்டின் மற்றும் லாக்ஸ் நொதிகளின் செயல்பாட்டினை தடுக்கிறதாக நவீன அறிவியல் கூறுகின்றது. மேலும் கோடம்புளியின் இந்த கார்சினால், மார்பகப் புற்றுநோய், பெருங்குடல் புற்றுநோய் மற்றும் நுரையீரல் புற்றுநோய் ஆகிய நிலைகளில் நல்ல பலன் தருவதாக ஆய்வுகள் தெரிவிப்பது கூடுதல் சிறப்பு.

    தமிழர்களின் உணவியலோடு ஒன்றிணைந்த கோடம்புளி ஆரோக்கியத்திற்கு அடிப்படை. நாம் அன்றாடம் உணவில் கோடம்புளியை சேர்ப்பது நலத்திற்கு வலுசேர்க்கும். கோடம்புளியின் மருத்துவ குணங்களை அறிந்துகொண்ட வெளிநாட்டினர் உடல் பருமனைக் குறைக்க கோடாம்புளியை மாத்திரைகளாக எடுத்துக்கொண்டு அதன் மருத்துவப் பயன் அடைகின்றனர். தமிழர்களின் 'உணவே மருந்து' என்ற பாரம்பரிய கோட்பாட்டுக்கு இது மிகச்சிறந்த உதாரணம். ஆக, நம் முன்னோர்கள் மரபு வழியில் பழகி வந்ததை மாற்றாமல், நாமும் பழக முற்பட்டால் நலம் நம்மை நாடிவரும்.

    தொடர்புக்கு:

    drthillai.mdsiddha@gmail.com

    ×