என் மலர்tooltip icon

    ஆரோக்கியம் தலைப்புச்செய்திகள்

    நேற்று என்பது முடிந்த ஒன்று. நாளை என்பது வந்தால் உண்டு. இன்று மட்டுமே உண்மை என்று உணர்ந்து நம்மைப் போற்றும் உறவுகளை நாம் போற்றினால் இந்த நாள் மட்டுமல்ல எல்லா நாட்களும் சுகமே!
    நம் வாழ்வின் வசந்த நிமிடங்கள் இனிய உறவுகளால் உருவாக்கப்படுகிறது. ஒன்றின் விழுது, அடுத்தடுத்து வேராய் தரை நோக்கிக் கால்பரப்பிப் பாரத்தைத் தாங்குவதால் குடும்பமும் ஒருவகையில் கால மரம்தான். பாட்டி, தாத்தா, அப்பா, அம்மா, அண்ணன், அண்ணி, மாமா, அத்தை, தம்பி, தங்கை, மகன், மகள் என உறவுகளால் இணைத்து ஒவ்வொரு குடும்பங்களும் நிம்மதியின் சன்னிதிகளாகக் காலம் கட்டமைத்திருக்கிறது.

    திருக்கடையூர் போனால் மூத்தோரின் எண்பதுக்கு எண்பது கல்யாணக் காட்சிகளைக் காணமுடிகிறது. அறுபது ஆண்டுகள் கணவன் மனைவியாக வாழ்ந்து பேரன் பேத்திகள் எடுத்து, அவர்களுக்கு முன்னால் பாட்டிக்குத் தாலிகட்டும் பொழுதில் எண்பது வயதுப் பெரியவரின், பெரிய மனிஷியின் முகத்தில்தான் எவ்வளவு வெட்கம் கலந்த பெருமிதம்.

    அரை நூற்றாண்டு இல்லறத்தில் எத்தனை சிகரங்களை, எத்தனை சறுக்கல்களை அவர்கள் சந்தித்திருப்பார்கள். ஆனாலும் அவற்றைத் துணிச்சலோடு எதிர்கொண்டு இதோ இந்த நிமிடம் வரை அவர்களை அன்போடு வைத்திருப்பது அவர்கள் கொண்டாடி கொண்டிருக்கும் உறவுகள்தான்.

    ஆனால் இன்றைய கால கட்டத்தில் உறவுகளின் இனிய பக்கங்களில் உன்னதமாகப் பதிவு செய்யப்பட வேண்டியவர்களை நாம் வேரோடு பிடுங்கிக்கொண்டிருக்கிறோம். சில நிமிட சினத்தால் சின்னாபின்னமாகிப்போன உறவுகள் எத்தனை? நம் இனிய இருப்பை வெறுப்பால் ஏன் நிரப்பவேண்டும்? புரிதல்களில் சரிதல்கள் ஏற்பட்டு கண்ணாடிபோல் கண்எதிரே நொறுங்கிப் போவதைப் பார்க்கிறோமே.

    வீட்டில் மனம் விட்டுப் பேசும் பேச்சு சுருங்கிவிட்டது, கைக்கொரு செல்போனோடு மாயத்திரையில் மயங்கி ஆளுக்கொருபக்கம் தலைகுனிந்தபடி தனித்தனியே சிரித்துக்கொண்டிருக்கிறோம். நேரில் சந்தித்து அரட்டை அடித்துச் சிரித்த உறவுகள் இன்று வாட்ஸ்-அப்பில் குறுஞ்செய்திகள் அனுப்பி கொண்டிருக்கிறார்கள். முகநூலில், பத்தாண்டுகளுக்கு முன் எப்படி இருந்தேன் தெரியுமா? என்று ஊருக்குக் காட்டிக்கொண்டிருக்கிறார்கள்.

    கூட்டுக் குடும்பங்களின் சிதைவு குடும்ப உறவுகளைப் பெரிதும் பாதித்துள்ளது. பின்பற்ற வேண்டிய முன்மாதிரி உறவுகள் இல்லாத நிலையில் குழந்தைகள் பாதிக்கப்படுகின்றன. பிடிவாதங்களும் சந்தேகங்களும் கணவன்-மனைவி உறவைச் சிதைத்து சின்னாபின்னமாக்கி அவர்களை நீதிமன்றங்களில் கொண்டு நிறுத்திக்கொண்டிருகின்றன.



    சொந்த கிராமத்திற்குச் சென்று உறவினர்களுடன் ஒன்றாக இணைந்து குலதெய்வ வழிபாடுகள் நடத்திய காலங்கள் பழங்கனவாய் அப்பால் போய்க்கொண்டிருக்கின்றன. குழந்தைகளுடன் ஒன்றாக உறவினர் இல்லத்திருமணத்திற்குச் செல்லும் வழக்கம் குறைந்துவிட்டது.

    அன்பான இதயங்களால் நிரப்பவேண்டிய இல்லங்களைப் பொருட்களால் நிரப்பி வைத்திருக்கிறோம். வரவுக்கு ஏற்ப செலவு செய்யக் குழந்தைகளைப் பழக்கும் இடம் இல்லம்தான். விட்டுக்கொடுத்தலையும் பொறுமையையும் எல்லோரிடமும் அன்பாகப் பழகுவதையும் சகமனிதர்களை வேறுபாடு இல்லாமல் ஏற்றுக்கொள்வதையும் குடும்பம்தான் கற்றுத்தருகிறது.

    குழந்தைகளுக்காகவும், குடும்பத்திற்காகவும்தான் நாம் இவ்வளவு பாடுபடுகிறோம், ஆனால் அவர்களுடன் நிம்மதியாக இருக்கமுடியவில்லை எனும் போது எதற்காக இப்படி ஓடியாடி உழைக்கிறோம் என்று நம்மை நாமே கேட்கத் தோன்றுகிறது. நம் வாழ்வின் முதல்பகுதி பொருளைத் தேடி ஓடுவதிலும் இரண்டாம் பகுதி அவற்றைக் காப்பற்றுவதிலுமே கழிகிறது.

    பொதுவாழ்வில் சாதனை படைத்த மனிதர்கள்கூடக் குடும்பவாழ்வில் மனஅழுத்தம் தாங்கமுடியாமல் உயிரை மாய்த்துக்கொள்வதைக் காண்கிறோம். இன்றைய காலகட்டத்தில் காதலை விட கள்ளக்காதல் மேன்மையானது, புனிதம்மிக்கது என்ற மோசமான செயல்பாடுகளை நோக்கி சமூகம் சென்று கொண்டிருக்கிறது.

    இந்த கொடிய நோயின் பிடியில் சிக்கி பலர் தங்கள் குடும்ப உறவுகளை தொலைத்து வருகின்றனர். இந்த மோசமான காதலுக்காக பெற்ற மகனை உயிரோடு எரித்தல், கணவனை கொல்லுதல், மனைவியை கொல்லுதல் என்ற கொடூரமான சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருவதை காண்கிறோம்.

    இந்த கொடூர எண்ணங்களுக்கு எல்லாம் விதை போடுவது உறவுகளை விட்டு மெல்ல, மெல்ல பிரிந்து வருவதுதான். கணவனோ, மனைவியோ, பிள்ளைகளோ மனம் விட்டு பேசினால் இத்தகைய மோசமான செயல்களை நோக்கி எண்ணம் ஓடவே செய்யாதே.

    இந்த வாழ்வில் எல்லாம், வாழப் பொருள்தேட ஓடியோடி ஒருவினாடியில் மூச்சு இறைக்க நின்று திரும்பிப் பார்க்கும்போது நாம் தூக்கிவளர்த்த குழந்தைகள் பெரியவர்களாகி நம்மை விட்டு விலகி நிற்கிறார்கள், வாழ்வின் பொருளை இழந்து நிற்கிறோம். அப்போது நாம் விலக்கிவைத்த உறவுகள் நம்மைவிட்டு வெகுதூரத்தில் போய்க்கொண்டிருக்கிறார்கள். வாழ்க்கை அனுபவங்களைக் கற்பிக்கும் செய்முறைக்கூடம். கற்றுக்கொள்வதற்கும் வாழ்விலிருந்து பெற்றுக் கொள்வதற்கும் நம் உறவுகளிடம் நிறைய உண்டு.

    நேற்று என்பது முடிந்த ஒன்று. நாளை என்பது வந்தால் உண்டு. இன்று மட்டுமே உண்மை என்று உணர்ந்து நம்மைப் போற்றும் உறவுகளை நாம் போற்றினால் இந்த நாள் மட்டுமல்ல எல்லா நாட்களும் சுகமே!

    சவுந்தர மகாதேவன், தமிழ்த்துறை தலைவர், சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி, திருநெல்வேலி.
    பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு மதியம் சாப்பிட முட்டை சப்பாத்தி செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். இன்று இந்த சப்பாத்தி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான  பொருட்கள் :

    சப்பாத்தி - 5
    முட்டை - 4
    கடலை மாவு - 1 டேபிள்ஸ்பூன்
    பச்சை மிளகாய் - 1  
    பெ.வெங்காயம் - 3  
    சீரகம் - அரை டீஸ்பூன்
    மஞ்சள் தூள் - சிறிதளவு
    கொத்தமல்லி தழை, கறிவேப்பிலை - சிறிதளவு
    உப்பு, எண்ணெய் - தேவைக்கு



    செய்முறை :

    வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    வாணலியில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் வெங்காயம், மிளகாய் ஆகியவற்றை கொட்டி வதக்கவும்.

    வெங்காயம் சற்று வதங்கியதும் அதனுடன் கடலை மாவு, உப்பு, மஞ்சள் தூள், கொத்தமல்லி தழை, கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து கிளறவும்.

    அதனுடன் முட்டையை உடைத்து ஊற்றி கிளறி இறக்கவும்.

    அடுப்பில் தோசைக்கல்லை வைத்து அது சூடேறியதும் ஒரு சப்பாத்தியை அதில் போட்டு முட்டை கலவையை ஊற்றி தடவி விடவும். சுற்றி எண்ணெய் விடவும்.

    அது வெந்ததும் திருப்பி போட்டு அடுத்த பகுதியிலும் முட்டை கலவையை ஊற்றி வேக வைத்து எடுக்கவும்.

    ருசியான முட்டை சப்பாத்தி ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    கம்ப்யூட்டர் பயன்பாட்டுக்கு வந்த புதிதில் இளவயதினர் இடுப்பு வலிக்கு ஆளாயினர். மொபைல் போன் வந்தபிறகு இளவயதினருக்கு கழுத்துவலி வரத் தொடங்கி இருக்கிறது.
    நம் கையில் எப்போதும் ஒட்டிக் கிடக்கிறது செல்போன். நமது உடலின் ஒரு அங்கம் என்று கூட சொல்லலாம்.

    கம்ப்யூட்டர் பயன்பாட்டுக்கு வந்த புதிதில் இளவயதினர் இடுப்பு வலிக்கு ஆளாயினர். மொபைல் போன் வந்தபிறகு இளவயதினருக்கு கழுத்துவலி வரத் தொடங்கி இருக்கிறது.

    தலையின் சராசரி எடை சுமார் 5 கிலோ. செல்போன் திரையை பார்க்க கீழ்நோக்கி குனியும்போது கழுத்தின் மீது தலை செலுத்தும் விசையின் அளவு கூடுகிறது.

    குனியும் கோணத்துக்கு ஏற்ப தலையின் அழுத்தம் அதிகரிக்கிறது. இதனால் கழுத்து தசைகள் களைப் படைந்து கழுத்து வலி, தோல் பட்டைவலி, தலைவலி உண்டாகிறது.



    அழுத்தம் காரணமாக ஜவ்வுகள் வெளியே துருத்தி வந்து கை நரம்புகளை அழுத்துவதால் கை குடைச்சல் மற்றும் நரம்பு தளர்ச்சி ஏற்படுகிறது. இளம் வயதிலேயே எலும்பு தேய்வதும் நடக்கிறது.

    தடுப்பதற்கான வழிகள்:

    * அதிக நேரம் செல்போன் பயன் படுத்துவதை தவிர்க்க வேண்டும். அரைமணி நேரத்துக்கு ஒரு முறை பிரேக் எடுத்துக் கொள்ள வேண்டும்.

    * மிக முக்கியமாக செல்போனை முகத்துக்கு நேராக வைத்து பார்க்க வேண்டும். கீழே குனிந்து பார்ப்பது நல்லதல்ல.

    * படுத்துக்கொண்டு செல்போன் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.

    * கழுத்து தசைகளை பயிற்சிகள் செய்து ஆரோக்கியமாக வைத்திருக்க வேண்டும்.
    கிரீன் டீ நமது ஆரோக்கியத்தை மட்டுமில்லாமல் அழகை பாதுகாக்கவும் எந்தெந்த வகையில் உதவுகிறது என்பது பற்றி இந்த பகுதியில் விரிவாக காணலாம்.
    கிரீன் டீ நமது ஆரோக்கியத்தை மட்டுமில்லாமல் அழகை பாதுகாக்கவும் எந்தெந்த வகையில் உதவுகிறது என்பது பற்றி இந்த பகுதியில் விரிவாக காணலாம்.

    சூரியனில் இருந்து வெளியாகும் புறஊதா கதிர்கள் சருமத்தில் பாதிப்பை ஏற்படுத்தும். இக்கதிர்கள் சருமத்தில் எரிச்சல், குழிகள், கருமை போன்றவற்றை ஏற்படுத்தும். கிரீன் டீயை முகத்திற்கு அப்ளை செய்வதன் மூலம் இந்த பாதிப்புகளை சரி செய்யலாம்.

    முகப்பருக்கள் வலியைத் தரக்கூடியவை. முகப்பருக்கள் அதிகமாக உள்ளவர்கள், முகத்திற்கு கிரீம் உடன் 2 % மட்டும் கிரீன் டீயை கலந்து 6 வாரங்களுக்கு அப்ளை செய்து வந்தால், பருக்கள் குறைவதை பார்க்கலாம்.

    டீயில் ஆன்டி - மைக்ரோபயல் மூலக்கூறுகள் உள்ளன. இவை கொசுக்கள், மற்றும் பூச்சிக்கடிகளால் உண்டான வீக்கங்கள் மற்றும் காயங்களை குணமாக்க உதவுகிறது. டீ பேக்கை வைத்து காயம் உள்ள இடத்தில் ஒத்திடம் கொடுத்தால் காயம் இருந்த இடம் தெரியாமல் போகும்.

    கிரீன் டீயை முகத்திற்கு தொடர்ந்து எட்டு வாரங்கள் அப்ளை செய்வதன் மூலம், முகத்தில் உள்ள எண்ணெய் பசையானது குறையும். மேலும், எதிர்காலத்தில் முகப்பரு வருவது போன்ற பிரச்சனைகளும் குறைக்கப்படுகின்றன.

    இரவு தாமதமாக தூங்குவதாலும், அதிக வேலையினாலும் கண்களுக்கு கீழ் கருவளையங்கள் உண்டாகக்கூடும். இதனை போக்க கண்களுக்கு மேல் டீ பேக்குகளை வைத்து 20 நிமிடங்கள் ஓய்வெடுக்கலாம். இதனால் கண்களில் உள்ள வீக்கங்கள் குறைவதோடு சுறுசுறுப்பும் அதிகரிக்கும்.

    கிரீன் டீ ஆனது சருமத்தை இறுக செய்கிறது. இதனால் சருமத்துளைகள் அடைக்கப்படுகின்றன. டீ பேக்கை சருமத்திற்கு போடுவதன் மூலம் சருமத்தின் நிறம் மேம்படுத்தப்படுகிறது. இது சருமத்திற்கு மிகச்சிறந்த பாதுகாப்பானாகவும் பயன்படுகிறது.

    பயன்படுத்திய டீ பேக்குகளை செடிகளுக்கு உரமாகவும் போடலாம். இதனால் செடிகளின் வளர்ச்சிக்கு தேவையான சத்துக்கள் கிடைக்கின்றன. எனவே அவை ஆரோக்கியமாகவும், செழிப்பாகவும் வளர உதவியாக இருக்கும்.
    சினைப்பை நீர்க்கட்டி என்றால் என்ன, எதனால் இந்த பாதிப்பு ஏற்படுகிறது, இதை கவனிக்காமல் விடும் பட்சத்தில் என்னென்ன பிரச்சனைகள் ஏற்படும் என்று அறிந்து கொள்ளலாம்.
    இந்தியாவில் வருடத்துக்கு பத்து லட்சம் பெண்கள், `சினைப்பை நீர்க்கட்டி’ எனப்படும் பி.சி.ஓ.எஸ் (Polycystic Ovary Syndrome) பிரச்னையால் பாதிக்கப்படுகிறார்கள். ‘குறிப்பிட்ட நாள்களுக்கு ஒருமுறை மாதவிடாய் வராதது, அதிக நாள்கள் ரத்தப்போக்கு இருப்பது, அளவுக்கதிகமான அல்லது மிகக்குறைவான அளவே ரத்தப்போக்கு, மாதவிடாயின்போது தாங்க முடியாத வலி ஏற்படுவது என்று பெண்களுக்கு மாதவிடாயில் பல சிக்கல்கள் இருக்கின்றன. இப்படியான சிக்கல்கள் நமக்குச் சொல்லவரும் செய்தி, ‘குறிப்பிட்ட அந்த உடலில் ஹார்மோன் குறைபாடுகள் இருக்கின்றன’ என்பதுதான். சினைப்பை நீர்க்கட்டிப் பிரச்னையும் அப்படிப்பட்ட ஒன்றுதான்.

    ஒரு வகையில், இது எச்சரிக்கையும்கூட. ஆனால், `அலட்சியமாகப் பிரச்சனையை கவனிக்காமல் விட்டுவிட்டால், வருங்காலத்தில் கருத்தரித்தலில் தொடங்கி, புற்றுநோய்வரையிலான பல பாதிப்புகள் ஏற்படலாம்’ என்கிறார்கள் மருத்துவர்கள். இது குறித்து, போதிய விழிப்புஉணர்வு இல்லை. பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனை செல்லாமல், உரிய சிகிச்சையும் பெறாமல் தங்களுடைய உடல்நிலையை, மேலும் மேலும் கெடுத்துக்கொள்கிறார்கள். சினைப்பை நீர்க்கட்டி என்றால் என்ன, எதனால் இந்த பாதிப்பு ஏற்படுகிறது, இதை கவனிக்காமல் விடும் பட்சத்தில் என்னென்ன பிரச்னைகள் ஏற்படும், இதற்கான முறையான சிகிச்சைகள் என்னென்ன?

    “சினைப்பை நீர்க்கட்டிக்கான அடிப்படைக் காரணம், ஹார்மோன் சமச்சீரின்மைதான். உலக சுகாதார அமைப்பின் அறிக்கைப்படி, 11.6 கோடி பெண்கள், ஹார்மோன் சமச்சீரின்மையால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

    அறிகுறிகள்

    பி.சி.ஓ.எஸ் பிரச்சனை இருப்பவர்களுக்கு, ஒன்றுக்கும் மேற்பட்ட அறிகுறிகள் தெரியும். வயதைப் பொறுத்தும், பாதிப்பின் தீவிரத்தைப் பொறுத்தும் இவை அமையும்.

    * முகம், மார்பு ஆகிய பகுதிகளில் முடி வளர்ச்சி காணப்படுவது

    * தீவிரமான முடி உதிர்தல் பிரச்சனை

    * சருமம் மற்றும் முடி சார்ந்த ஒவ்வாமைகள் ஏற்படுவது



    * உடல் எடை அதிகரித்துக்கொண்டே போவது

    * கர்ப்பப்பை விரிந்து அதில் சிறிது சிறிதாக நிறைய கட்டிகள் இருப்பது

    * ஒழுங்கற்ற மாதவிடாய்

    * கர்ப்பமாவதில் சிக்கல் உண்டாவது.

    இவற்றோடு, உடலில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக, தீவிரமான மனஅழுத்தமும் ஏற்படும்.

    கவனிக்கத் தவறினால் ஏற்படும் பிரச்சனைகள்

    * 25 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு, கரு உண்டாவதில் சிக்கல் ஏற்படுக்கூடும். கர்ப்பமானாலும், கரு கலைந்துவிட வாய்ப்பிருக்கிறது.

    * பி.சி.ஓ.எஸ் பிரச்னை இருந்தால், உடலில் இன்சுலின் சுரக்கும் தன்மையில் பாதிப்பு ஏற்படக்கூடும். அதனால், சர்க்கரைநோய் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. மற்றவர்களைவிட, கர்ப்பிணிகளுக்கு இதற்கான வாய்ப்புகள் அதிகம்.

    * 30 வயதைத் தாண்டியவர்களுக்கு, உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அளவு அதிகரித்து, இதயப் பிரச்னைகள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது.

    * 40 வயதைத் தாண்டிய பெண் என்றால் சர்க்கரைநோய், இதயப் பிரச்சனைகள், உடலில் கெட்ட கொழுப்புச்சத்து அதிகமாவது, உயர் ரத்த அழுத்தம் போன்ற பாதிப்புகள் ஏற்படக்கூடும்.

    * பெண்களின் உடலில் ஒவ்வொரு மாதவிடாய் காலத்திலும் புரோஜெஸ்ட்ரான் (Progesterone) ஹார்மோன் சுரக்கும். ஒழுங்கற்ற மாதவிடாய் காரணமாக, ஹார்மோன் சுரப்பதில் சிக்கல் ஏற்படும். நாட்பட, கர்ப்பப்பை பாதிப்பும் சேர்ந்துகொள்ளும். இது, கர்ப்பப்பை புற்றுநோய்க்கு வழிவகுக்கும்.

    * 14 முதல் 20 வயதுக்குட்பட்ட பெண்களே இந்தப் பிரச்சனையால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். ஆனால், தொடக்கநிலையிலேயே சரியான சிகிச்சை எடுத்துக்கொள்ளாமல் அலட்சியம் காட்டிவிடுகிறார்கள். 14 வயதிலிருக்கும் பெண்களுக்கு, பெரும்பாலும் ஒழுங்கற்ற மாதவிடாய் மற்றும் அதீத ரத்தப்போக்குதான் அறிகுறிகளாக இருக்கும். எனவே, உடனே சிகிச்சையைத் தொடங்கிவிட வேண்டும்.
    மாதுளம், பச்சைபயிறு உடலுக்கு ஆரோக்கியமானது. இதை சாலட் செய்து தினமும் காலையில் உணவாக சாப்பிட்டால் உடலில் சர்க்கரையின் அளவு சீராக்கும்.
    தேவையான பொருட்கள் :

    முளைகட்டிய பச்சைபயிறு - 1 கப்
    மாதுளை விதைகள் - 1 கப்
    கொத்தமல்லி இலை - தேவையான அளவு
    எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்
    வறுத்த வேர்க்கடலை - சிறிதளவு
    கடுகு - டீஸ்பூன்
    உப்பு - போதுமான அளவு
    சீரகம் - 1 டீஸ்பூன்
    எண்ணெய் - அரை டீஸ்பூன்
    கரம் மசாலா - 1 டீஸ்பூன்



    செய்முறை :

    கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    முதலில் ஒரு சிறிய பாத்திரத்தில் முளைகட்டிய பச்சை பயிறு, மாதுளை விதைகள், வறுத்த வேர்க்கடலை, கரம் மசாலா, கொத்தமல்லி, தேவையான உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

    அடுத்து அதில் எலுமிச்சை சாற்றை பிழிந்து நன்றாக கலக்கவும்.

    அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் சீரகம், கடுகு போட்டு பொரிந்ததும் சாலட்டில் ஊற்றி நன்கு கலக்க வேண்டும்.

    ஆரோக்கியம் மற்றும் சுவையான மாதுளை பச்சைபயிறு சாலட் ரெடி!!!

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    தினமும் உடற்பயிற்சி செய்வது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. அந்த வகையில் எந்த வயதில் உள்ளவர்கள் எந்த அளவு ஏரோபிக் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்று பார்க்கலாம்.
    யார் எந்த அளவு மிதமான ஏரோபிக் உடற்பயிற்சி செய்ய வேண்டும்?

    5 முதல் 18 வயது வரை உள்ளவர்கள் வாரந்தோறும் 60 நிமிடம் உடற்பயிற்சி செய்வது அவசியமானது.

    19 முதல் 64 வயதுடையவர்கள் வாரந்தோறும் 150 நிமிட மிதமான ஏரோபிக் உடற்பயிற்சி செய்ய வேண்டும்.

    65 வயதுக்கு மேற்பட்டவர்கள், 150 நிமிட மிதமான ஏரோபிக் பயிற்சிகள் செய்யலாம், உடல் வலிவு பெற வேண்டும் என்றால், வாரத்தில் இருமுறை உடற்பயிற்சி செய்யலாம்.

    மிதமான ஏரோபிக் உடற்பயிற்சிகள்

    வேகமான நடைபயிற்சி, நீச்சல், சைக்கிள் ஓட்டுதல், டென்னிஸ், ஸ்கிப்பிங், கைப்பந்து மற்றும் கூடைப்பந்து போன்றவை மிதமான செயல்பாடு கொண்ட ஏரோபிக்ஸ் பயிற்சிகள் என்று கருதப்படுகின்றன.

    என்.எச்.எஸ் அறிக்கையின் படி, வழக்கமாக உடற்பயிற்சி செய்கிறவர்களுக்கு கீழ்கண்ட நன்மைகள் ஏற்படும்:

    இதய பாதிப்பு மற்றும் இதய சம்பந்தமான நோய்களின் ஆபத்து 35 சதவிகிதம் குறைகிறது.

    இரண்டாம் வகை நீரிழிவு ஏற்படுவதற்கான ஆபத்து 50 சதவீதம் குறைகிறது.

    பெருங்குடல் அல்லது மலக்குடல் புற்றுநோய் ஆபத்து 50 சதவிகிதம் குறையும்.

    மார்பக புற்றுநோய் ஏற்படும் ஆபத்து 20 சதவீதம் குறைகிறது.

    அகால மரணம் ஏற்படும் ஆபத்து 30 சதவிகிதம் குறைகிறது.

    எலும்புகளில் நோய்கள் ஏற்படும் ஆபத்து 83 சதவிகிதம் குறைகிறது.

    மனச்சோர்வு ஏற்படும் ஆபத்து 30 சதவிகிதம் குறைகிறது. 
    பணக்காரர் ஆவதற்கான தகுதிகள் என்னென்ன தெரியுமா? அந்தத் தகுதிகள் உங்களுக்கு இருக்கின்றனவா எனத் தெரிந்துகொள்ள என்ன செய்ய வேண்டும் என்று பார்க்கலாம்.
    ‘பணக்காரர்’ என்ற அந்தஸ்தைப் பெறுவதற்கு நம் அனைவருக்குமே ஆசைதான். ஆனால் பணக்காரர் ஆவதற்கான தகுதிகள் என்னென்ன தெரியுமா? அந்தத் தகுதிகள் உங்களுக்கு இருக்கின்றனவா எனத் தெரிந்துகொள்ள வேண்டுமா?

    இதோ...

    1. தூண்டுதலைத் தாண்டுங்கள்

    ‘இது எனக்கு இப்போதே வேண்டும்’ என்ற ஆசைத் தூண்டுதலை உங்களால் புறக்கணிக்க முடிந்தால், பணம் சம்பாதித்தலில் உள்ள முதல் தடையை வெற்றிகரமாகக் கடந்துவிடலாம். உடனடி மனநிறைவு என்பது குறுகிய காலத்துக்கு பெரிதாகத் தோன்றினாலும், அதைக் கட்டுப்படுத்தவில்லை எனில் மிகப் பெரிய பிரச்சினையாக உருவெடுக்கும். நீங்கள் சேமிக்கும் ஒவ்வொரு ரூபாயும் சோதனையான காலத்தில் உதவும் அல்லது நீங்கள் புத்திசாலித்தனமாக முதலீடு செய்தால் உங்களின் சொத்து மதிப்பும் உயரும்.

    2. சிறந்தவராக மாற முயலுங்கள்


    உங்கள் பணியில் அல்லது தொழிலில் சிறந்தவராக மாறப் போதுமான அளவு நேரத்தை ஒதுக்குகிறீர்கள் என்றால், உங்களின் வருமானம் ஈட்டும் திறனும் கண்டிப்பாக அதிகரிக்கும். விருப்பமானவற்றை இடைவிடாமல் செய்வதன் மூலம், சந்தேகங்கள், போராட்டங்கள், நிராகரிப்பு இன்றிச் சிறப்பான பலன்களைப் பெறமுடியும். நீங்கள் செய்வதைச் சிறப்பாகச் செய்தால், அதற்கேற்ற பலன் நிச்சயம் கிடைக்கும்.



    3. கட்டுப்பாடுகளைக் கடைப்பிடியுங்கள்

    பணத்தைச் செலவழிக்கும்போது சில கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்கிறீர்களா? உங்கள் அவசியத் தேவைகளுக்கு மட்டும் முன்னுரிமை கொடுக்கிறீர்களா? கடினமாக உழைத்துச் சம்பாதித்த பணத்தை, தேவைக்கும் விருப்பத்துக்கும் இடையில் வைப்பது அவரவர் முடிவே. அவசியத் தேவைகளுக்கு மட்டும் முன்னுரிமை கொடுக்கும், ஆடம்பரத்தைத் தவிர்க்கும் எளிய வாழ்க்கை எல்லோருக்கும் ஏற்றது. தேவையற்ற செலவுகளைத் தவிர்த்தல், அடிக்கடி வெளியில் உணவருந்துவதைக் குறைத்தல், ஆடை, அணிகலன்களுக்கான செலவைக் கட்டுக்குள் வைத்தல் போன்றவை அதிகப் பணம் சேமிக்க வழிவகுக்கும்.

    4. நிதித் திட்டமிடல் அவசியம்

    பணத்தைச் சேமிக்கும், செலவழிக்கும் வழிகள் குறித்த நிதித் திட்டமிடல் முக்கியம். உங்கள் பணத்தைச் சிறப்பாக ஒதுக்கீடு செய்யும் சரியான திட்டத்தின் மூலம்தான் பணக்காரர் ஆகும் பயணம் தொடங்கும். நல்ல பொருளாதாரத் திட்டத்துக்கான முதல் அடி, சிறந்த நிதித் திட்டமிடல்தான். ஒவ்வொரு செலவையும் வகைப்படுத்துதல் மற்றும் உங்களின் தேவைகள் மீதான செலவுகளை மாதமாதம் மதிப்பிடுதல் போன்றவை குறைவாகச் செலவு செய்யவும், அதிகமாகச் சேமிக்கவும் உதவும். நமது வருமானம், செலவுகள் பற்றிய தெளிவான பார்வை நமக்கு இருந்தால், ‘பட்ஜெட்’டில் வராத தேவையில்லாத செலவுகளைக் குறைப்பது எளிது.

    5. முதலீட்டுக்கு முக்கியத்துவம்

    பணக்காரராக இருப்பது என்பது ஒருவருடைய திறமை, அதிர்ஷ்டம், வாரிசுரிமை போன்றவற்றை மட்டும் பொறுத்ததல்ல. கையில் உள்ள பணத்தை தொடர்ந்து புத்திசாலித்தனமாக முதலீடு செய்து வருவதும் முக்கியம். வளமாக உள்ள பலரும் கூட சரியாக முதலீடு செய்யத் தெரியாமல் பணத்தை முடக்கிப் போட்டிருக்கிறார்கள் அல்லது தப்பான ஆலோசனைகளைக் கேட்டு தவறான முதலீடுகளில் பணத்தைப் போட்டு இழக்கிறார்கள். முதலீடு செய்வதற்கு பெருந்தொகை தேவை என்று எண்ணத் தேவையில்லை. சிறுதுளி பெருவெள்ளம் என்பதற்கு ஏற்ப, எஸ்.ஐ.பி. எனப்படும் முறைப்படுத்தப்பட்ட முதலீட்டுத் திட்டம் போன்றவற்றில் சிறுதொகையை தொடர்ந்து முதலீடு செய்து வந்தாலே நாளடைவில் பணக்காரர் ஆகிவிடலாம்.
    அதிக நேரம் தூங்குவதும், குறைந்த நேரம் தூங்குவதும் இதய நோய் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும் என்பது புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது.
    குறைவான நேரம் தூங்குவது பல நோய்களுக்கு வித்திடும் என்று நமக்குத் தெரியும். அதேபோல அதிக நேரம் தூங்குவதும் அபாயம் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

    அதிக நேரம் தூங்குவதும், குறைந்த நேரம் தூங்குவதும் இதய நோய் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும் என்பது புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது.

    தினமும் இரவு 7 மணி முதல் 8 மணி நேரம் வரை தூங்கவேண்டும். இல்லாவிட்டால் இதய நோய் பிரச்சினைகளும், பக்கவாதப் பாதிப்பும் ஏற்படும் என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக 35 வயது முதல் 70 வயதுக்கு உட்பட்ட ஒரு லட்சத்து 16 ஆயிரத்து 632 பேர் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர். இவர்கள் அனைவருமே சரியாக தூக்கம் இல்லாமல் அவதிப்படுபவர்கள்.

    கனடாவில் உள்ள மெக்மாஸ்டர் பல் கலைக்கழகம் இது தொடர்பான ஆய்வை மேற்கொண்டது. ஆய்வுக் குழுவில் இடம்பெற்ற மாணவரான சுங்ஷி வாக்கன், ‘‘தூங்கும் நேரத்தை ஆறு மணி முதல் எட்டு மணி வரை கணக்கிட்டு ஆய்வு மேற்கொண்டோம். அந்த நேரத்தைக் கடந்து அதிகம் தூங்குபவர்கள் பல பிரச்சினைகளை எதிர்கொள்கிறார்கள். இதய நோய் பாதிப்புக்கு உள்ளாகி மரணத்தை எதிர்கொள்ள வேண்டிய நிலைமையும் ஏற்பட்டுள்ளது’’ என்றார்.

    இந்த ஆய்வின் முடிவில், பரிந்துரைக்கப்பட்ட நேரத்தை கடந்து 8 முதல் 9 மணி நேரம் வரை தூங்குபவர்களுக்கு 5 சதவீதம் நோய்ப் பாதிப்பு அதிகரிக்கும் என்பது கண்டறியப்பட்டுள்ளது.

    தினமும் 9 முதல் 10 மணி நேரம் தூங்குபவர் களுக்கு இதய நோய் பாதிப்பு 17 சதவீதம் அதிகரிக்கக்கூடும் என்பது தெரியவந்துள்ளது.

    10 மணி நேரத்துக்கும் மேலாகத் தூங்குபவர் களுக்கு இதய நோய் பாதிப்பு 41 சதவீதம் அதிகமாக இருக்கும். அதுபோல் 6 மணி நேரம் அல்லது அதற்கும் குறைவாகத் தூங்குபவர்களுக்கு 9 சதவீதம் நோய் பாதிப்பு அதிகரிக்கும் என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

    ‘கும்பகர்ணர்கள்’ விழித்துக்கொள்ள வேண்டிய வேளை இது.

    இலவசமாக மழலையர் கல்வி கிடைக்கும் என்பது நடுத்தர பெற்றோருக்கும், நமது குழந்தைகளும் மழலையர் பள்ளிக்கு செல்லுமே என்கிற மகிழ்ச்சி ஏழை பெற்றோருக்கும் ஏற்பட்டிருக்கிறது.
    படிப்படியாக உயர்ந்து வருகிறது தமிழக கல்வித்துறை. தனியார் வசம் இருந்த கிண்டர்கார்டன் எனப்படும் மழலையர் பள்ளிக்கூடங்களை சொந்தமாக்கி சாத்தியமாக்கி இருக்கிறது தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை. தனியார் பள்ளிகள் வசம் இருந்த தூண்டில் இந்த கே.ஜி. வகுப்புகள். 5 வயது நிறைவடைந்த பின்னர்தான் அரசு பள்ளிக்கூடங்களில் ஒன்றாம் வகுப்பில் சேர்க்க முடியும் என்ற நிலை இருந்ததால், 3 வயதில் இருந்தே சமாளிக்க முடியாத குழந்தைகளை கே.ஜி. வகுப்புகளில் சேர்க்க வேண்டிய கட்டாயம் எல்லா வீடுகளையும் எட்டிப்பார்க்க, அந்த நுழைவு வாயில் தனியார் பள்ளிகளின் முக்கிய வாயிலாகவே உள்ளது.

    ஏற்கனவே மழலையர்களுக்காக அங்கன்வாடி மையங்கள் சமூக நலத்துறை மூலம் இயங்கி வந்தாலும், அதில் தனியார் ஆங்கிலப்பள்ளிகளுக்கு நிகரான கல்வி வாய்ப்பு இல்லாமல் இருந்ததால் அதில் குழந்தைகளை சேர்க்க பொதுமக்கள் விரும்பவில்லை என்பதே உண்மையாக இருந்தது.

    ஆனால், தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்ககோட்டையன் எடுத்த பல்வேறு திட்டங்கள் பள்ளிக்கல்வித் துறையை புது எழுச்சி கொள்ள வைத்தது. அவரால் எடுக்கப்பட்ட முடிவுகளில் ஒன்று, அங்கன்வாடி மையங்களை மழலையர் வகுப்புகளாக மாற்றுவது.

    இந்த திட்டம் பொதுமக்களுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது என்பதை கடந்த விஜயதசமி நாள் வெளிக்காட்டியது. மாதிரி பள்ளிக்கூடங்களில் தொடங்கப்பட்ட எல்கே.ஜி. வகுப்புகளை பொதுமக்கள் பலரும் வந்து பார்த்து, அடுத்த ஆண்டு சேர்க்கைக்காக முன்பதிவு செய்து வரும் வேளையில், அரசு நடுநிலைப்பள்ளி, தொடக்கப்பள்ளிக்கூடங்களுடன் இணைந்து இருக்கும் அங்கன்வாடி மையங்களை மழலையர் பள்ளிகளாக மாற்றி, வகுப்புகளையும் தொடங்கி இருக்கிறது தமிழக பள்ளிக்கல்வித்துறை.

    கடந்த 21-ந்தேதி வகுப்புகள் தொடங்கிய அன்று மாணவர் சேர்க்கை பரவலாக நன்றாகவே இருந்தது என்கிறது அதிகாரிகளின் புள்ளிவிவரங்கள். பெற்றோர் பலரும் பள்ளிக்கூடங்களுக்கு வந்து மழலையர் வகுப்புகள் செயல்பாடுகள் குறித்து கேட்டு செல்கிறார்கள்.

    இனி இலவசமாக மழலையர் கல்வி கிடைக்கும் என்பது நடுத்தர பெற்றோருக்கும், நமது குழந்தைகளும் மழலையர் பள்ளிக்கு செல்லுமே என்கிற மகிழ்ச்சி ஏழை பெற்றோருக்கும்...

    ஆனால், ஆசிரியர்கள் மத்தியில் இன்னொரு வடிவில் பிரச்சினை எழும்பி உள்ளது.

    தொடக்கத்தில் அங்கன்வாடி மையங்கள் மழலையர் பள்ளிகளாக மாற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டபோது, சமூக நலத்துறை மூலம் பணியில் சேர்ந்து தற்போது அங்கன்வாடி அமைப்பாளர்களாக இருக்கும் பணியாளர்கள் தங்களுக்கு ஆசிரியை பணி வர வாய்ப்பு உள்ளது என்று கருதினார்கள். காரணம், கடந்த சில ஆண்டுகளாக அங்கன்வாடி பணியாளர்களாக தேர்வு பெற்றிருப்பவர்களில் 50 சதவீதத்துக்கும் அதிகமானவர்கள் பட்டப்படிப்பு முடித்தவர்கள். ஆசிரியை பயிற்சி முடித்தவர்களும் இருக்கிறார்கள். எனவே கல்வித்தகுதி அடிப்படையில் தங்களுக்கு அந்த வாய்ப்பு கிடைக்கும் என்று நினைத்தார்கள்.

    ஆனால், மழலையர் பள்ளிகள் பள்ளிக்கல்வித்துறையின் கீழ் இயங்கும் என்ற முடிவு, அவர்களுக்கு மட்டுமின்றி பள்ளிக்கல்வித்துறையில் பணியாற்றி வரும் ஆசிரிய-ஆசிரியைகளுக்கும் அதிர்ச்சியை அளித்து இருக்கிறது. மழலையர் பள்ளிகளுக்கு பணிநிரவல் முறையில் தற்போது ஆசிரியைகள் நியமிக்கப்பட்டு உள்ளனர். அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிக்கூடங்களில் 30 பேருக்கு ஒருவர் என்ற விகிதத்தில் மாணவர் ஆசிரியர் விகிதாச்சாரம் உள்ளது.

    இந்த விகிதாச்சாரத்தின் படி உபரியாக இருக்கும் ஆசிரியைகளை மழலையர் பள்ளிகளுக்கு அனுப்ப முடிவு செய்து, பணியிட மாறுதல்கள் வழங்கப்பட்டு உள்ளன. இதனால் அவர்களுக்கு ஊதிய பாதிப்பு எதுவும் இல்லை. ஆனால், மழலையர் பள்ளிக்கூடங்களுக்கு பாடம் எடுக்க செல்வதன் மூலம் தங்களுக்கு பணி பாதுகாப்பு இல்லாத நிலை வந்து விடுமோ என்கிற அச்சம் ஏற்பட்டு உள்ளது. இதனால் கடந்த வாரமே பள்ளிக்கல்வித்துறை சம்பந்தப்பட்ட ஆசிரியைகளுக்கு பணியிட மாறுதல் உத்தரவு வழங்கியும் யாரும் உத்தரவை பெற்றுக்கொள்ளவில்லை. இதனால் 21-ந்தேதி மழலையர் வகுப்புகள் தொடங்கப்பட்டபோது அதற்காக நியமிக்கப்பட்ட ஆசிரியைகள் யாரும் பணிக்கு வரவில்லை.

    எனவே மழலையர் வகுப்புகள் தொடங்கப்பட்டு இருப்பது சாதகமா? பாதகமா? என்கிற கேள்வி மக்கள் மத்தியிலும், ஆசிரியர்கள் மத்தியிலும், அங்கன்வாடி பணியாளர்கள் மத்தியிலும் ஏற்பட்டு இருக்கிறது.

    மழலையர் வகுப்புகளுக்கு பள்ளிக்கல்வித்துறையின் கீழ் ஆசிரியர்கள் நியமிக்கப்படுகிறார்கள். பள்ளிக்கல்வித்துறை பாடத்திட்டத்தை அளிக்கிறது. ஆனால், அங்கன்வாடி மையங்கள் மூலம் உணவு, சத்துமாவு, முட்டை உள்ளிட்ட அரசின் நலத்திட்டங்கள் வழங்கப்படுகின்றன. 1-ம் வகுப்பு முதல் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு அரசு 14 வகையான இலவச திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி இருக்கிறது. புதிதாக தொடங்கப்பட்ட மழலையர் பள்ளிகளுக்கு இந்த இலவசங்கள் கிடைக்குமா? என்பது பெற்றோரின் கேள்வி.

    பள்ளிக்கல்வித்துறையின் கட்டுப்பாட்டில் குழந்தைகள் சென்றுவிட்டால், அங்குள்ள அங்கன்வாடி மையங்களில் எங்களுக்கு என்ன வேலை? நாங்கள் என்ன செய்வது? என்பது அங்கன்வாடி மைய பணியாளர்களின் கேள்வி.

    மழலையர் பள்ளிகளுக்கு என்று நியமிக்கப்பட்டு இருக்கும் ஆசிரியைகள் யாருடைய கட்டுப்பாட்டில் இயங்குவார்கள்?. அவர்களை பள்ளிக்கூட தலைமை ஆசிரியர்கள் கட்டுப்படுத்த முடியுமா? அவர்களை வேறு வகுப்புகள் எடுக்க பயன்படுத்த முடியுமா? என்பது பள்ளிக்கூட தலைமை ஆசிரியர்களின் கேள்வி.

    இதுவரை 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்புவரை மாணவ-மாணவிகளுக்கு பாடம் கற்றுத்தந்து விட்டு, உபரி என்கிற காரணத்தால் மழலையர் பள்ளிகளுக்கு செல்பவர்கள் யாருடைய கட்டுப்பாட்டில் இயங்க வேண்டும். அத்தியாவசிய தேவைகளுக்கு விடுமுறை எடுத்தால், சம்பந்தப்பட்ட பள்ளிக்கூட ஆசிரிய-ஆசிரியைகள் குழந்தைகளை கவனிப்பார்களா?. இனி வரும் ஆண்டுகளில் பள்ளிக்கூடங்களில் மாணவர் சேர்க்கை அதிகரித்தால் மீண்டும் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்புவரையான பள்ளிக்கூடங்களில் பாடம் எடுக்க அனுமதிக்கப்படுவார்களா?. அங்கன்வாடி மையங்கள் சமூகநலத்துறை கட்டுப்பாட்டில் இயங்குவதால், மழலையர் பள்ளிகளில் பணிக்கு சேரும் ஆசிரியைகளும் பள்ளிக்கல்வித் துறையில் இருந்து சமூக நலத்துறைக்கு சென்று விட வேண்டுமா? என்ற கேள்வி ஆசிரியர்களுக்கு. ஒன்றிய வாரியாக, பள்ளிக்கூடங்கள் வாரியாக இளையோராக இருக்கும் ஆசிரியர்களுக்கு அடுத்து அங்கன்வாடி மையங்கள் மழலையர் பள்ளிகளாக மாற்றப்படும்போது நமக்கும் இதே நிலைதானா? என்ற கேள்வி.

    இப்படி கேள்விகளால் தங்களுக்கு பாதகமாக இருப்பதாக ஒருதரப்பு இருக்கிறது. எனவே தற்போது மழலையர் பள்ளிக் கூடங்கள் வெற்றிகரமாக இயங்க, அரசின் சார்பில் சரியான புரிதலை ஏற்படுத்த வேண்டும். மழலையர் பள்ளிக்கூடங்களுக்கு என்று புதிதாக ஆசிரியைகளை தேர்வு செய்து பணியில் நியமித்து குழந்தைகளுக்கு சிறப்பான அடித்தளத்தை உருவாக்க வேண்டும்.

    -முடிவேல் மரியா
    சர்க்கரைநோய் மற்றும் உயர் ரத்தஅழுத்தம் ஆகியனவற்றை நல்லகட்டுப்பாட்டில் வைத்திருப்பதின் மூலம் மாரடைப்பு மற்றும் ஹார்ட் பெயிலியர் வராமல் வாழ்நாள் முழுவதும் ஆரோக்கியமாகவும் வாழமுடியும்.

    ஹார்ட் பெயிலியர் ( HEART FAILURE)

    ஹார்ட்அட்டாக், ஹார்ட்வால்வு பிரச்சினை, இருதயத்தில் ஓட்டை போன்றவை நாம்நாள் பொழுதும் கேள்விப்படும் இருதயநோய் தொடர்பான வார்த்தைகள் ஆகும். ஆனால் பொதுமக்களும் பாமரர்களும் அதிகம் கேட்டிராத ஒரு மருத்துவம் தொடர்பான சொல்ஹார்ட்ஃபெல்யூர்.

    ஹார்ட் பெயிலியர் என்றால்என்ன ?

    இருதயநோய்கள்மட்டும் அல்லாமல் நம் உடம்பில் உள்ள உறுப்புகளில் ஏற்படும் பல்வேறு நோய்களின் தாக்கத்தால் இருதயம் தன்செயலை / செயல்திறனை இழக்கக்கூடும். அடிப்படையில் இருதயம் செய்யும் வேலையை ஒரு பம்ப் (Pump) உடன் ஒப்பிடலாம். பம்ப் (Pump) போன்ற இந்த உறுப்பின் அதிமுக்கியமான வேலை, ரத்தத்தை உடம்பில் உள்ள மூளை, சிறுநீரகம், கல்லீரல், குடல் போன்ற பல்வேறு உறுப்புகளுக்கு ரத்தநாளங்கள் வாயிலாக சீராக சென்றடைய செய்வதே ஆகும்.

    மேற்கூறியது போல் பல்வேறு உறுப்புகளின் பல்வேறு நோய்களின் தாக்கம் இருதயத்தின் மேல் ஏற்படும் போது, இருதயம் தன் செயலை மெல்ல மெல்ல இழக்க நேரிடும். ஒரு சிலமாதங்களிலோ வருடங்களிலோ முற்றிலும் செயலிழக்கும் இருதயம் தனது பம்ப் (Pump) வேலையை முழுமையாக செய்ய முடியாமல் போகும். இதன் விளைவாக உடம்பின் மற்ற பிற உறுப்புகளுக்கு ரத்தம் சரியாக / சீராக சென்றடைவ தில்லை. ரத்தம் சென்றடையாத காரணத்தால் அந்தமற்ற உறுப்புகளும் மெதுவாக செயலிழக்கும் அபாயம் நேரிடும். விளைவு-மல்டி ஆர்கன்டிஸ்ஃபங்சன் (multi Organ Dysfunction) -அதாவது ஒன்றிற்கும் மேற்பட்ட உறுப்புகள் செயலிழக்க முக்கியமான காரணமாக ஹார்ட் பெயிலியர் காணப்படுகிறது.

    ஹார்ட் பெயிலியர் அறிகுறிகள் (SYMPTOMS )

    மூச்சுதிணறல் (Dyspnoea), அசாதாரணமான சோர்வு (Fatigue), படபடப்பு ( Palpitations), சுயநினைவின்றி மயங்கிவிழுதல் (Syncope) கால், முகம், வயிறு வீக்கம் சிறுநீர் அளவு குறைதல், நெஞ்சுவலி

    ஹார்ட் பெயிலியர் முக்கியகாரணங்கள்

    1.மாரடைப்பு (HEART ATTACK)

    மாரடைப்பு என்பது இருதயத்தின் மேல் உள்ள ரத்த நாளங்களில் கொழுப்பு படிந்து, அந்த நாளங்கள் முழுவதுமாக அடைத்துக் கொள்வதினால் வரும் விளைவு. அடைப்பின் காரணமாக இருதயம் செயல்பட போதுமான பிராணவாயு போன்ற ஊட்டம் இல்லாததனால் அதன்பம்ப் (Pump) செயல்திறன் மெலிவடைந்துஹார்ட்பெயிலியர் (Heartfailure) ஏற்பட வழி வகுக்கிறது.

    2. இருதயவால்வு (VALVE) பிரச்சினைகள்

    இருதயத்தின் வால்வுகளில் ஏற்படும் அடைப்பு மற்றும் பல்வேறு விதமான வால்வு கோளாறுகள் காரணமாகவும் இருதயத்தினுள் அழுத்தம் (pressure) அதிகமாக, அதன் விளைவாக ஹார்ட்பெயிலியர் ஏற்படலாம்.



    3.இருதயத்தில் உள்ள பிறவி குறைபாடுகள் (CONGENITAL DEFECTS )

    ASD, VSD, PDA எனப்படும் பல்வேறு விதமான இருதயத்தின் திசுக்களில் பிறவி குறைபாடு காரணமாக தோன்றும் ஓட்டைகள் (defects) மற்றும் பிறவியிலிருந்தே தோன்றும் சில அறிய வகை வால்வு கோளாறுகள் காரணமாகவும் ஹார்ட்பெயிலியர் ஏற்படலாம்.

    4. இடியோபதிக் ( IDIOPATHIC) DCM

    Idiopathic DMC (Dilated Cardiomyopathy) எனப்படுவது காரணமே இல்லாமல் இருதயம் வீக்கம் அடைந்துகாலப்போக்கில் அதன் செயல்திறனைமுற்றிலுமாக இழக்கும் ஒருவிதமான நோய். இது ஹார்ட் பெயிலியர் ஒரு முக்கியமான மற்றும் பொதுவான காரணமாகும்.

    5. PERI PARTUM CARDIOMYOPATHY (கர்பகாலத்தில் ஏற்படும் ஹார்ட் பெயிலியர்

    பெண்கள் கர்பமுறிருக்கும் காலத்திலோ அல்லது குழந்தை பெற்று முதல் 4 மாதங்களிலோ, காரணமே இல்லாமல் இருதயம் வீக்கம் அடைந்து ஹார்ட் பெயிலியருக்கு வழி வகுக்கலாம்.

    6. சர்க்கரைநோய் மற்றும் உயர்ரத்த அழுத்தம் (Diabetes & Hypertension)

    சர்க்கரைநோய் மற்றும் உயர்ரத்த அழுத்தத்தினால் நம் உடம்பில் பாதிப்படையாத உறுப்புகளே இல்லை. அவ்வகையில் இந்த உயிர் கொல்லி நோய்களினால் இருதயம் பல்வேறு வகைகளில் பாதிப்பை சந்திக்கிறது. அதில் முக்கியமான பக்கவிளைவு மாரடைப்புமற்றும் ஹார்ட் பெயிலியர் ஆகியன ஆகும். சர்க்கரைநோய் மற்றும் உயர் ரத்தஅழுத்தம் ஆகியனவற்றை நல்லகட்டுப்பாட்டில் வைத்திருப்பதின் மூலம் மாரடைப்பு மற்றும் ஹார்ட் பெயிலியர் வராமல் வாழ்நாள் முழுவதும் ஆரோக்கியமாகவும் வாழமுடியும். இதற்கு முக்கியம் இந்நோய்களை பற்றிய அடிப்படை புரிதலும் அவற்றின் பக்கவிளைவுகளை பற்றிய போதிய விழிப்புணர்வும் ஆகும்.

    மேலும் விபரங்களுக்கு அணுகவும் ARAVIND HEART CENTRE (அரவிந்த் இருதய நலமையம்) Dr N Arvind Yuvaraj DM ., 0416 297 6666

    டாக்டர். N.அரவிந்த்யுவராஜ் DM., அரவிந்த் இருதய நலமையம்
    குழந்தைகளுக்கு உருளைக்கிழங்கு என்றால் மிகவும் பிடிக்கும். இன்று உருளைக்கிழங்கை வைத்து சூப்பரான டோஃபி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    மாவிற்கு...


    மைதா - அரை கப்,
    ஓமம் - 1/4 டீஸ்பூன்,
    எண்ணெய் - 4 டேபிள்ஸ்பூன்,
    உப்பு - 1/2 டீஸ்பூன்,
    தண்ணீர் - தேவைக்கு.

    பூரணத்திற்கு...

    உருளைக்கிழங்கு - 1,
    வெங்காயம் - 1,
    பச்சைமிளகாய் - 2,
    கறிவேப்பிலை, கொத்தமல்லி, கடுகு - சிறிது,
    மஞ்சள் தூள், பெருங்காயத்தூள் - தலா 1/4 டீஸ்பூன்,
    கடலை மாவு - 1 டீஸ்பூன்,
    எண்ணெய் - 2 டீஸ்பூன்,
    உப்பு - 1/2 டீஸ்பூன்,
    பொரிக்க எண்ணெய் - தேவைக்கு.



    செய்முறை :

    உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் உரித்து மசித்து கொள்ளவும்.

    பாத்திரத்தில் மைதா, உப்பு, எண்ணெய் சேர்த்து கையில் பிடிக்கும் பதம் வந்ததும் ஓமம், தண்ணீர் சேர்த்து கெட்டியாக பிசைந்து கொள்ளவும்.

    கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு சேர்த்து தாளித்த பின்னர், பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய், கறிவேப்பிலை போட்டு வதக்கவும்.

    அடுத்து அதில் மசித்த உருளைக்கிழங்கு, மஞ்சள்  தூள், உப்பு, கடலை மாவு, கொத்தமல்லி சேர்த்து வதக்கி, அனைத்தும் ஒன்றாக சேர்ந்து சுருண்டு வந்ததும் இறக்கவும்.

    பிசைந்த மாவை சிறு சிறு உருண்டைகளாக எடுத்து சப்பாத்திக் கல்லில் நீளவாக்கில் தேய்த்து கொள்ளவும். தேய்த்த மாவின் உள்பக்கம் கத்தியால் 3  பாகங்களாக கீறி விடவும். பிறகு பூரணத்தை நீளவாக்கில் உருட்டி மாவின் நடுவில் வைத்து மூடி சாக்லெட்டாக ரெடி செய்து சூடான எண்ணெயில்  போட்டு பொரித்தெடுத்து பரிமாறவும்.

    சூப்பரான உருளைக்கிழங்கு டோஃபி ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×