என் மலர்tooltip icon

    ஆரோக்கியம்

    பன்னீர் ரோஜாவில் அடங்கியுள்ள வைட்டமின் சி, சருமத்திற்கு அழகையும் பாதுகாப்பையும் அளிக்கக்கூடியது. மேனியின் அழகை பராமரிக்க ரோஜா இதழ்கை பயன்படுத்தும் முறைகள் பற்றி இங்கே காணலாம்.
    முகத்திற்கு மென்மையும் பொலிவும் தருவதுடன் சருமத்திற்கும் பலநன்மைகளை அளிக்கக்கூடியது ரோஜா மலர். இதன் இதழ்களில் அடங்கியுள்ள வைட்டமின் சி, சருமத்திற்கு அழகையும் பாதுகாப்பையும் அளிக்கக்கூடியது. மேனியின் அழகை பராமரிக்க ரோஜா இதழ்கை பயன்படுத்தும் முறைகள் பற்றி இங்கே காணலாம்.

    ரோஜா இதழ்களை அரைத்து தடவினால் சருமம் மென்மையாகும். குளியல் பொடியிலும் அரைத்த ரோஜா இதழ்களை சேர்க்கவும்.

    வெயில் காரணமாக சருமம் பளபளப்பை இழந்து எண்ணெய் வடிவதால் முகப்பருக்கள் தோன்றுகின்றன. இந்த பிரச்சனை அகல இரு பன்னீர் ரோஜா இதழ்கள், கற்றாழை ஜெல் ஒரு டீஸ்பூன் ஆகியவற்றை ஒன்றாக அரைத்து தடவலாம். 20 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரால் முகத்தை கழுவினால் பருக்களால் ஏற்படும் சரும பாதிப்புகள் அகலும்,

    கருப்பான உதடு கொண்டவர்கள் அரைத்த பன்னீர் ரோஜா ஒரு டீஸ்பூன் தேன் அரை டீஸ்பூன் கலந்து உதடுகளின் மேல் பூசி வரலலாம்.

    அரைத்த பன்னீர் ரோஜா இதழ்கள் மற்றும் தயிர் ஆகியவற்றை சம அளவில் கலந்து முகத்தில் தடவினால் முகத்தில் ஏற்பட்ட கரும்புள்ளிகள் மறைந்து விடும்.

    வியர்வை நாற்றம் உள்ளவர்கள் பன்னீர் ரோஜாவில் இருந்து தயாரிக்கப்படும் பன்னீரை கலந்து குளிக்க துர்நாற்றம் நீங்கி புத்துணர்ச்சி ஏற்படும்.

    வெயில் காலத்தில் முகத்தில் திட்டுத்திட்டாக தோன்றும் கருப்பான பகுதிகளில் ஒரு பன்னீர் ரோஜா, 5 தாமரை இதழ்கள், ஒரு டீஸ்பூன் கடலை மாவு, தேவையான அளவு காய்ச்சாத  பால் ஆகியவற்றை அரைத்து பேக் போல முகத்தில் தடவலாம்.

    மேற்கண்ட எளிய பராமரிப்புகளுக்கு நாட்டு பன்னீர் ரோஜா வகைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். ஹைப்ரிட் வகை ரோஜாவை பயன்படுத்தக்கூடாது. பன்னீர் ரோஜா செடிகளை வீட்டு தோட்டத்திலோ அல்லது தொட்டிகளிலோ வளர்க்கலாம். முகத்துக்கு பொலிவு அளிப்பது மட்டுமின்றி தினமும் பன்னீர் ரோஜாப்பூ இதழ்களை சாப்பிட்டு வந்தால் வயிற்றில் உள்ள புண்கள் ஆறிவிடும்.
    கேரள மக்கள் பிரியாணி போன்ற கனமான உணவை எடுத்துக் கொண்ட பிறகு அவர்களின் செரிமானத்திற்கும் புத்துணர்ச்சிக்கும் ஊக்கமளிக்கும் விதமாக இந்த சுலைமானி டீயை எடுத்துக் கொண்டு வந்துள்ளனர்.
    பொதுவாக இந்த சுலைமானி டீயை கேரளா மக்கள் எடுத்து வருவது உண்டு. கேரளாவில் உள்ள கோழிக்கோட்டில் இந்த சுலைமானி டீ மிகவும் புகழ்பெற்ற ஒன்று. கேரள மக்கள் பிரியாணி போன்ற கனமான உணவை எடுத்துக் கொண்ட பிறகு அவர்களின் செரிமானத்திற்கும் புத்துணர்ச்சிக்கும் ஊக்கமளிக்கும் விதமாக இந்த சுலைமானி டீயை எடுத்துக் கொண்டு வந்துள்ளனர்.

    பட்டை, ஏலக்காய், கிராம்பு மற்றும் லெமன் போன்ற மசாலாப் பொருட்களை சேர்த்து இந்த தேநீர் தயாரிக்கப்படுகிறது. இது ஒரு ஆல்கஹால் அல்லாத செரிமான பானம் என்று கூறலாம். இந்த தேநீருக்கு சுலைமானி என்று பெயர். இது ஒரு அரபு வார்த்தை ஆகும். சுலைமானி என்பதற்கு "அமைதியான மனிதன்" என்று பொருள். திருமணம் மற்றும் நிறைய கொண்டாட்டங்களில் ஒரு கனமான உணவுகளுக்கு பிறகு மக்கள் இந்த தேநீரை எடுத்துக் கொள்கின்றனர். இந்த தேநீர் பார்ப்பதற்கு பழுப்பு அல்லது ஆரஞ்சு நிறத்தில் காணப்படும். இந்த மசாலா டீயை எப்படி தயாரிக்கலாம் என அறிந்து கொள்வோம்.

    தேவையான பொருட்கள்

    தோலுடன் நசுக்கிய ஏலக்காய் - 2
    இஞ்சி துருவியது - 1/2 ஸ்பூன்
    இலவங்கப்பட்டை - 1
    கிராம்பு - 1 அல்லது 2
    சர்க்கரை - 3-4 டீஸ்பூன்
    லெமன் ஜூஸ் - 1 டீஸ்பூன்
    டீத்தூள் - 2-3 டீஸ்பூன்

    செய்முறை

    ஒரு பாத்திரத்தில் மேற்கண்ட மசாலாப் பொருட்களை போட்டு அதனுடன் தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்க விடுங்கள். அதனுடன் டீத்தூள் மற்றும் சர்க்கரை சேர்த்து குறைந்த தீயில் கொதிக்க விடுங்கள்.

    பிறகு அடுப்பை அணைத்து விட்டு அதில் லெமன் ஜூஸ் சேர்த்து கலந்து கொள்ளுங்கள்.

    பிறகு வடிகட்டி கொள்ளுங்கள். வேண்டுமானால் அதனுடன் புதினா சேர்த்து குடியுங்கள்.

    இந்த டீயை பிரியாணி போன்ற கனமான உணவிற்கு பிறகு எடுத்துக் கொண்டு வருவது நன்மை பயக்கும்.

    இந்த டீ உங்க சீரண சக்தியை மேம்படுத்துகிறது. உங்களுக்கு ஏராளமான நன்மைகளை அளிக்கவும் உதவி செய்கிறது.
    வளரிளம் பருவத்தில் உள்ள தங்கள் பிள்ளைகளுக்கு தன்னம்பிக்கையை வளர்த்து அவர்களாகவே எதிர்காலத்தை நிர்ணயிக்கும் வகையில் சரியான பாதையை தேர்ந்தெடுக்க வழிகாட்டுவதும் முக்கிய கடமை.
    இன்றை சூழலில் சமூக வலைத்தளங்கள், சுற்றிப்பழகும் சமூகம், வேலை, கல்விச்சூழல் என பல வகையிலும் துவண்டு நிற்கும் இளைஞர்கள் தன்னம்பிக்கையை இழக்கின்றனர். இதனால் பலரும வாழ்க்கை பாதையை தவறாக தேர்ந்தெடுத்து தோல்வியை தழுவுகின்றனர். பலர் முடிவு எடுக்க முடியாமல் குழம்பி நிற்கின்றனர். பெற்றோர் சரியான உக்திகளை கையாண்டு பிள்ளைகளை வழிநடத்தினால் தன்னம்பிக்கையை எளிதில் வளர்க்க முடியும். அதற்கு என்ன வேண்டும்? இதோ சில வழிகள்,,

    மரியாதை கொடுங்கள்

    உங்கள் குழந்தைகள் எவ்வளவு வளர்ந்தாலும் உங்களுக்கு அவர்கள் குழந்தைகளாகவே தெரியலாம். ஆனால் அவர்கள் சமுதாயத்தை தனியாக எதிர்கொள்ள வேண்டிய இடத்தில் உள்ளார்கள். அவர்களை அனைத்து விஷயங்களிலும் முன்னிலைப்படுத்துங்கள். இதுவே தன்னம்பிக்கையை வளர்ப்பதற்கான முதல்படி.

    அடிக்கடி பாராட்டுங்கள்

    உங்கள் பிள்ளைகள் ஒரு செயலை செய்யும் போது பாராட்டுங்கள். அனைத்து வயதினரும் எதிர்பார்க்கும் ஓர் விஷயம் பாராட்டு. அது அவர்களுக்கு தன்னம்பிக்கையை அதிகரிக்கும். சரியான முடிவுகளை எடுக்கத்தூண்டும்.

    கிண்டலைத் தவிருங்க்ள்

    நாம் செய்யும் செயலை பிறர் விமர்சிக்கும் போது அதில் வெளிப்படும் கிண்டல் நம்மை காயப்படுத்தும் . அதுபோல் தான் நம் பிள்ளைகளுக்கும். அதிலும் இளைய பருவப்பிள்ளைகளுக்கு புண்படுத்தும் வகையிலான விமர்சனங்களும், கிண்டல்களும் பிடிக்காது. அது அவர்களை தன்னம்பிக்கையை இழக்கச்செய்து முடக்கிப்போட்டு விடும்.

    தனித்திறமையை பாராட்டுங்கள்

    உங்கள் பிள்ளைகளுக்கு படிப்பு, தவிர பல விஷயங்கள் தெரிந்திருக்கும். ஆனால் அதை பல பெற்றோரும் அறிவதில்லை. அதை தெரிந்து கொண்டு அத்திறமையை பாராட்டுங்கள்.

    நம்பிக்கையான நண்பராகுங்கள்

    தோளுக்கு மேல் வளர்ந்தால் தோழன் என்பது பழமொழி. நீங்கள் தவறையும் நட்பாக எடுத்துரைக்கும் நண்பராக மாறினால் உங்கள் மீது பிள்ளைகளுக்கு நம்பிக்கை ஏற்படுவதுடன் அனைத்தையும் உங்களிடம் பகிர்ந்து கொள்வதற்கு முன்வருவார்கள். இதுவே தன்னம்பிக்கையை வளர்க்க உதவும்.

    வலிமையை உருவாக்குங்கள்

    பிள்ளைகள் நம்பிக்கை இழக்கும் வகையிலான சம்பவங்கள் நடந்தால் துவண்டு தவறான வழியை தேர்ந்தெடுக்கக்கூடும். அச்சமயத்தில் சிறிது நேரத்தை செலவிட்டு அவர்களின் வலிமை எது என்பதை தெளிவுபடுத்துங்கள். பலம் எது என்பதை கண்டறிந்து அதை மேலும் பலப்படுத்த உதவுங்கள். அப்போது தான் வாழ்க்கையில் எதையும் எதிர்கொள்ளும் பண்பு வரும்.

    தொழில் ரீதியாக உதவுங்கள்

    படித்த பலருக்கும் வேலை கிடைப்பதில் சிக்கல்கள் உள்ளன. இதனால் தன்னம்பிகை இழக்கும் வாய்ப்பும் உண்டு. அவர்களுக்கு ஏற்ற தொழில் எது என்பதை கண்டறிந்து அதை அடைய பிள்ளைகளுக்கு உதவுங்கள்.

    தன்னம்பிக்கை என்பது வெறும் வார்த்தை மட்டுமல்ல. வாழ்க்கையில் வெற்றிக்கு அனைவருக்கும் அடிப்படையாக தேவைப்படும் மருந்து. அதனை சரியானபடி பிள்ளைகளுக்கு கொடுத்தால் சமுதாயத்தில் அவர்களால் மிளர முடியும்.
    கொரோனாவுக்கு எதிராக கர்ப்பிணிகள் மற்றும் பிரசவத்துக்கு பிறகு பெண்கள் எப்போது தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என்று நிபுணர்கள் சொல்கிறார்கள்.
    பாலூட்டும் தாய்மார்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கு மத்திய அரசு சமீபத்தில் அனுமதி அளித்தது.

    தடுப்பூசி போட்டுக்கொண்ட பின்னர் தாய்ப்பாலூட்டுவதில் எந்தவொரு பிரச்சினையும் இல்லை, அரை மணி நேரம் கூட குழந்தைகளுக்கு தாய்ப்பால் தருவதை நிறுத்தக்கூடாது என்று நிதி ஆயோக் உறுப்பினர் (சுகாதாரம்) டாக்டர் வி.கே.பால் கூறுகிறார்.

    பிரசவத்துக்கு பின்னர் பெண்கள் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என்று சுகாதார நிபுணர்கள் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

    டெல்லி மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக கல்லூரி பேராசிரியர் டாக்டர் கான் அமீர் மாரூப் கூறுகையில், “தடுப்பூசி போடப்பட்ட தாயிடம் இருந்து பால் குடிப்பதில் பிறந்த குழந்தைக்கு எந்த ஆபத்தும் இல்லை. பிரசவத்துக்கு பின்னர் தடுப்பூசி போடுவதை தாமதப்படுத்த காரணம் இல்லை” என குறிப்பிட்டார்.

    மேலும், “தடுப்பூசி போடுவதை கருத்தில் கொண்டு பாலூட்டும் பெண்களால் குறிப்பிட்ட முன் எச்சரிக்கைகள் எடுக்க வேண்டிய தேவையில்லை” எனவும் தெரிவித்தார்.

    பிரபல மகளிர், குழந்தைப்பேறு நல மருத்துவ நிபுணர் டாக்டர் லவ்லீனா நாதிர், “கொரோனா தடுப்பூசி சிசேரியன் பிரசவத்துக்கான அறிகுறி இல்லை. ஆனால் கர்ப்பிணிக்கு கொரோனா தொற்று தொடர்பு இருந்தால் குழந்தை முன்கூட்டியே பிறக்கவும், சிசேரியன் செய்து கொள்ளவும் வாய்ப்பு அதிகம். கொரோனாவில் இருந்து மீண்டு விட்டால், குணமான நாளில் இருந்து 3 மாதத்துக்கு தடுப்பூசி போடுவதை ஒத்திபோடவேண்டும்” என குறிப்பிட்டார்.

    அத்துடன், “ஒரு பெண் தடுப்பூசியின் முதல் டோஸ் செலுத்தியபிறகு கர்ப்பம் தரித்தால் அதைத் தொடரலாம். கர்ப்பம், கொரோனா தொற்று வாய்ப்பை அதிகரிக்காது. ஆனால் கர்ப்பிணி அல்லாத பெண்களுடன் ஒப்பிடுகையில் சிகிச்சை மோசமானது” எனவும் கூறினார்.

    கர்ப்பிணிகள் தடுப்பூசி போட்டுக்கொள்வது அவர்களை வைரஸ் தொற்றில் இருந்து தற்காத்துக்கொள்ள உதவும் என்பது நிபுணர்களின் கருத்தாக இருக்கிறது.

    டெல்லியை சேர்ந்த உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு அமைப்பின் நிர்வாக இயக்குனர் டாக்டர் சுஜித் ரஞ்சன், “கர்ப்பிணிகளும், பாலூட்டும் தாய்மார்களும் தடுப்பூசிபோட்டுக்கொள்ளலாம் என்று உலக சுகாதார நிறுவன வழிமுறைகள் கூறுகின்றன. ஆனால் இந்தியாவைப் பொறுத்தமட்டில் கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி போடுவது விவாதத்தில் உள்ளது” என கூறினார்.

    இந்திய மகப்பேறு மற்றும் மகளிர் மருத்துவ சங்கங்களின் முன்னாள் தலைவர் டாக்டர் ஜெய்தீப் மல்கோத்ரா, “இந்தியாவில் தற்போது கிடைக்கும் தடுப்பூசிகளில் நேரடி வைரஸ் இல்லை. எனவே பாதுகாப்பானது. கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம். கருச்சிதைவு, பிறவி குறைபாடுகள் ஏற்படாது” என குறிப்பிட்டார்.
    ஒரு சொத்துக்கு வாரிசுதாரர்கள் எந்த வகையில் உரிமை கோர முடியும் என்பது அந்தச் சொத்து எந்த வகையில் வந்தது என்பதைப் பொறுத்து இருக்கிறது.
    ஒரு சொத்துக்கு வாரிசுதாரர்கள் எந்த வகையில் உரிமை கோர முடியும் என்பது அந்தச் சொத்து எந்த வகையில் வந்தது என்பதைப் பொறுத்து இருக்கிறது. பூர்வீகச் சொத்தாக இருந்தால் அதில் உடைமையாளரின் மகனுக்கும் பின் அவருடைய பேரனுக்கும் உரிமை உண்டு. அதே சமயத்தில் ஒருவர் தன் சுய சம்பாத்தியத்தில் வாங்கிய சொத்தாக இருந்தால் அந்தச் சொத்துக்கான உரிமை அவருக்கு மட்டுமே உரித்தானது. அந்தச் சொத்தில் மற்ற எவரும் உரிமை கோர முடியாது. அவருடைய காலத்திற்குப் பிறகு அந்தச் சொத்தை தன் விருப்பப்படி யாருக்கும் எழுதி வைக்கும் உரிமை அவருக்கு உண்டு. அது எவருடைய தலையீடுக்கும் அப்பாற்பட்டது.

    அவரது வாரிசோ, உறவினரோ யாரும் அந்தச் சொத்தின் மீது உரிமை கொண்டாடவும் முடியாது. இன்னொரு முறையில் பார்த்தால் மனைவியின் சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா என்னும் ஒரு கேள்வி வருகிறது. மேற்சொன்ன முறையில் பார்த்தால் ஒரு பெண்ணுக்கு எந்த வகையில் சொத்து வந்தாலும், அது அந்தப் பெண்ணுக்கு மட்டுமே உரிமை உடைய சொத்து. அதாவது பெற்றோர் தன் பெண்ணில் நலத்திற்காக அவருக்கு ஒரு சொத்தை எழுதிவைக்கிறார் என்றால், அந்தச் சொத்து அவருக்கு மட்டுமானதுதான். ஒரு கணவன் தன் சுய சம்பாத்தியம் மூலம் தன் மனைவி பெயருக்கு ஒரு சொத்தை வாங்குகிறார் என வைத்துக்கொண்டால் அந்தச் சொத்திலும் கணவன் உரிமை கொண்டாட முடியாது.

    எந்த வகையில் ஒரு பெண்ணின் பெயரில் சொத்துப் பதிவுசெய்யப்பட்டிருந்தாலும் அதற்கு அந்தப் பெண் மட்டுமே உரிமை கொண்டாட முடியும். இந்து வாரிசுரிமைச் சட்டத்தின் ஒரு பிரிவு பெண்ணுக்கு எந்த வகையில் சொத்து வந்தாலும் அது அவருக்கு மட்டுமே உரிமை உடைய தனிப்பட்ட சொத்து என்கிறது. இதன்படி மனைவி பெயரில் இருக்கும் சொத்தில் தனக்கு உரிமை உண்டு என கணவன் சொந்தம் கொண்டாட முடியாது என்பது தெளிவாகிறது. ஒரு பெண் தனக்கு உரிமைப்பட்ட சொத்தை தன் காலத்திற்குப் பிறகு யாருக்கும் எழுதி வைக்க முடியும்.

    கணவன் தன் வருமானத்தின் மூலம் வாங்கிய சொத்தை மனைவி பெயரில் பத்திரப் பதிவு செய்திருந்தாலும் அந்தச் சொத்தில் கணவருக்கு உரிமை இல்லை. அதே சமயம் சட்டப்படி அந்தச் சொத்தைப் பெற ஒரு வழி இருக்கிறது. அந்தச் சொத்து வாங்கியதற்காகச் செலுத்தப்பட்ட பணம் தன்னால் மட்டுமே அளிக்கப்பட்டது என்பதை உரிய ஆவணங்களுடன் நிரூப்பிக்கும்பட்சத்தில் இது சாத்தியம் ஆகும்.
    அன்றாட வாழ்க்கையில் ஒரு சில விஷயங்களை கவனிக்க மறந்து விடுகிறோம். நாள் முழுவதும் வீட்டில் இருந்தாலும் நமது கவனத்துக்கு வராத அவற்றை பற்றி இங்கே பார்ப்போம்.
    இன்றைய வாழ்க்கை முறையில் காலில் சக்கரம் கட்டாதக்குறையாக அனைவரும் ஓடிக்கொண்டிருக்கிறோம். அந்த ஓட்டத்தின் நடுவே அன்றாட வாழ்க்கையில் ஒரு சில விஷயங்களை கவனிக்க மறந்து விடுகிறோம். அவற்றுள் முக்கியமானது வீட்டில் நாம் மேற்கொள்ளவேண்டிய பழக்கங்கள். நாள் முழுவதும் வீட்டில் இருந்தாலும் நமது கவனத்துக்கு வராத அவற்றை பற்றி இங்கே பார்ப்போம்.

    கதவின் கைப்பிடிகளை துடைத்தல்

    வீட்டிற்கு வரும் உறவினர்கள் அந்நியர்கள் என அனைவரின் கைகளும் படும் பகுதியான இதில் அழுக்கும், கிருமிகளும்  அதிகம் படிந்திருக்கும். தரையை துடைப்பது, கழிப்பறையை சுத்தம் செய்வதுஎன்று அன்றாடம் தூய்மை பணியை செய்தாலும் கதவின் கைப்பிடிகளை சுத்தம் செய்ய பலரும் மறந்விடுகிறோம்.கொரோனா நோய் தொற்றினை தவிர்க்க கதவின் கைப்பிடிகளை தூய்மையாக வைப்பது முக்கியம்.

    செல்லப்பிராணிகள் சாப்பிடும் கிண்ணத்தை தூய்மை செய்தல்

    வீட்டில் ஆசையாக வளர்க்கும் செல்லப்பிராணிகள் சாப்பிடுவதற்குகென்று கிண்ணம் வைத்திருப்போம். காலையில் வைத்த உணவில் செல்லப்பிராணி சாப்பிட்டது போக மீதமிருப்பதை அற்புறப்படுத்தி தூய்மை செய்யாமல் சிறிது நேரம் கழித்து சாப்பிடும் என்று மாலை வரை அப்படியே வைத்திருப்போம். இதனால் அந்த கிண்ணம் மட்டுமில்லாமல் அதை சுற்றியுள்ள இடமும் பாக்டீரியா தொற்றுக்கு உள்ளாகி இருக்கும். இது செல்லப்பிராணிக்கு மட்டுமில்லாமல் நமக்கும் தீங்கை விளைவிக்கும்.

    சமையலுக்கு ஒரே கட்டிங் போர்டை பயன்படுத்துதல்

    சில வீடுகளில் சைவம், அசைவம் இரண்டுக்கும் ஒரே கட்டிங் போர்டை பயன்படுத்துவார்கள். இறைச்சி, மீன் போன்றவற்றை வெட்டியபின் கழுவி வைத்தாலும், அதில் பாக்டீரியா போன்ற கிருமிகள் இருக்கத்தான் செய்யும். அவை காய்கறிகள் மற்றும் பழங்களை வெட்டும் போது உணவோடு கலந்து உடலுக்கு கெடுதலை உண்டாக்கும். எனவே காய்கறிகளுக்கும், இறைச்சிக்கும், தனித்தனியே கட்டிங் போர்டுகள் வைத்திருக்க வேண்டும்.

    பழைய நான்ஸ்டிக் பாத்திரத்தை தொடர்ந்து பயன்படுத்துதல்

    நான்ஸ்டிக் பாத்திரங்கள் சமைப்பதற்கு வசதியானவை. இவற்றில் சமைப்பதற்கு குறைவான அளவு எண்ணெய் பயன்படுத்தினாலே போதும். அதே சமயம் மிக பழைய நான்ஸ்டிக் பாத்திரத்தை தொடர்ந்து பயன்படுத்தும் போது இதில்  இருக்கும் டெப்லான் பூச்சு கொஞ்சம் கொஞ்சாக சமைக்கும் உணவில் கலக்க ஆரம்பிக்கும். இதனால் வயிற்று உபாதைகள் ஏற்படும்.

    குளிர்சாதன பெட்டியை தூய்மை செய்தல்

    முடிந்தவரை வாரம் ஒருமுறை அல்லது  மாதம் இரு முறையாவது குளிர்சாதன பெட்டியை சுத்தப்படுத்த வேண்டும். இதனால் அதில் தேவையற்ற கிருமிகள் வளருவதை தடுக்க முடியும். கழற்றி சுத்தம் செய்யும் வகையில் உள்ள பாகங்களை நன்கு சோப்பு போட்டு கழுவி உலர வைத்த பின்னர் மீண்டும் பொருத்த வேண்டும். வாரம் தோறும் காய்கறி வாங்க செல்வதற்கு முன்பு குளிர்சாதன பெட்டியில் இருப்பவற்றை சுத்தம் செய்த பிறகே புதிய காய்கறிகளை அடுக்க வேண்டும்.

    இவ்வாறு இன்னும் பல செயல்களை நாம் கவனித்து செய்தால் வீடும் நாமும் தொற்று பாதிப்புகளிலிருந்து பாதுகாப்பாக இருக்கலாம்.
    40 வயதை கடந்த பெண்கள் தினமும் தங்கள் உடல் எடையின் ஒவ்வொரு கிலோவுக்கும் ஒரு கிராம் என்ற அளவிலாவது புரதத்தை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
    40 வயதுக்கு பிறகு ஆண், பெண் இருபாலருக்கும் ஹார்மோன் அளவில் மாற்றங்கள் ஏற்படும். பெண்களின் எலும்புகள், தசைகளின் அடர்த்தியில் பாதிப்பு நேரும். உடல் பருமன் பிரச்சினையும் ஏற்படும். அத்தகைய பாதிப்புகளை தடுப்பதற்கு புரதம் அவசியமானது. 40 வயதை கடந்த பெண்கள் தினமும் தங்கள் உடல் எடையின் ஒவ்வொரு கிலோவுக்கும் ஒரு கிராம் என்ற அளவிலாவது புரதத்தை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். ஏனெனில் வளர்சிதை மாற்றத்தின் செயல்பாடுகளையும், எலும்புகளின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துவதில் புரதத்தின் பங்களிப்பு முக்கியமானது.

    அசைவ பிரியர்கள் இறைச்சி, மீன், முட்டை போன்றவற்றை தினமும் இரு வேளை உணவில் சேர்த்துக்கொள்ளலாம். முட்டை பிரியர்கள் முட்டையின் வெள்ளை கருவை மட்டும் சாப்பிடுவது நல்லது. சைவம் சாப்பிடுபவர்கள் சோயா பொருட்கள் மற்றும் பால் பொருட்களை அதிகம் சாப்பிடலாம். அதில் புரதம் அதிகம் கலந்திருக்கிறது. ஒமேகா 3 கொழுப்பு அமிலம் கலந்த பொருட்களையும் உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும். அதிலிருக்கும் நல்ல கொழுப்பு சருமம் மென்மையாகவும், ஈரப்பதமாகவும் இருப்பதற்கு உதவி செய்யும். மேலும் நீரிழிவு பிரச்சினையில் இருந்து தற்காத்துக்கொள்ளவும் உதவும். விரைவிலேயே வயதான தோற்றம் உருவாகுவதையும் தடுக்கும்.

    அதுபோல் வைட்டமின் ஏ, சி. இ, கால்சியம், பொட்டாசியம் போன்ற வைட்டமின்களும் 40 வயதை கடந்தவர்களுக்கு அவசியம். அவை சூரிய கதிர்வீச்சுகளின் தாக்கத்தில் இருந்து உடலை பாதுகாக்கும். வயதான தோற்ற பொலிவையும் தவிர்க்க உதவும். நார்ச்சத்து நிறைந்த உணவுகளையும் சேர்த்துக்கொள்ள வேண்டும். 40 வயதை கடந்த பெண்களுக்கு ஹார்மோன் சமச்சீரின்மை தோன்றுவதால் இன்சுலின் அளவு அதிகரித்துவிடும். தைராய்டு சுரப்பியின் செயல்பாடும் குறைந்துபோய்விடும். அதனால் ஹார்மோன் மற்றும் தைராய்டு பரிசோதனை மேற்கொண்டு அதற்கேற்ப உணவு பழக்கத்தை கடைப்பிடிக்க வேண்டியது அவசியம். 40 வயதை கடந்த ஆண்களை விட பெண்களுக்குத்தான் தசை இயக்கங்களில் பாதிப்பு அதிகமாக இருக்கும். அவர்கள் முறையாக உடற்பயிற்சி மேற்கொண்டு வருவதும் அவசியமானது.
    ப்ளூ டீ நீல நிற சங்குப்பூவில் மூலம் தயாரிக்கப்படுவதாகும். ப்ளூ டீ அருந்துவதால் உடலில் எத்தகைய மாற்றங்கள் ஏற்படும் என்பதையும் அது தயாரிக்கும் முறையையும் பார்க்கலாம்.
    ப்ளூ டீ நீல நிற சங்குப்பூவில் மூலம் தயாரிக்கப்படுவதாகும். தேவையற்ற கொழுப்பை கரைத்து வெளியேற்றும் ஆற்றல் இதற்கு உண்டு. ப்ளூ டீ அருந்துவதால் ஏற்படும் நன்மைகளில் முக்கியமானது மன அழுத்தத்தை தவிர்க்க உதவுவதாகும்.

    கிரீன் டீ தயாரிப்பது போன்ற இதையும் தயாரிக்க வேண்டும். கொதிக்க வைத்த தண்ணீரில் சில சங்குப்பூக்களை போட்டு 5 நிமிடம் கழித்தவுடன் இறக்கி வடிகட்டிக்கொள்ள வேண்டும்.

    அதில் எலுமிச்சை சாறு சில சொட்டுகள் விட்டு தேவையான அளவு சுத்தமான தேன் சேர்த்து சூடாகவோ அல்லது குளிர்ச்சியாகவோ பருகலாம்.
    கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள் சிகிச்சை பெறும் நோயாளிகள் ஆகியோர் கட்டாயம் தகுந்த மருத்துவ ஆலோசனையின்றி ப்ளூ டீ அருந்தக்கூடாது.
    கொரோனா தொற்று காரணமாக மழலையர் பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால் பெற்றோர் ஆசிரியர்களாக மாறி குழந்தைகளுக்கு அடிப்படை கல்வியை கற்றுக்கொடுக்கின்றனர்.
    கடந்த ஆண்டு (2020) மார்ச் மாதம் முதல் கொரோனா கட்டுப்பாடுகள் இருந்து வருகிறது. அவ்வப்போது பல தளர்வுகள் அளித்தாலும் தற்போது தொற்று பாதிப்பு அதிகரித்துள்ளதால் ஊரடங்கு கடுமையாக்கப்பட்டுள்ளது.

    கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் ஆரம்ப மற்றும் மழலையர் பள்ளிகள் மூடப்பட்டன. இதனால் எல்.கே.ஜி., யு.கே.ஜி. படிக்கும் வயதில் உள்ள குழந்தைகளுக்கு படிப்பு என்பது எட்டாக்கனியாக மாறி விட்டது. அடிப்படை கல்வியே கிடைக்காத நிலைக்கு குழந்தைகள் தள்ளப்பட்டுள்ளனர்.

    இதனால் குழந்தைகளின் எதிர்காலம் கருதி பெற்றோர் பலர் கவலையில் ஆழ்ந்துள்ளனர். இதற்கு வடிகாலாக சிலர் தங்களது குழந்தைகளுக்கு தாங்களே கல்வி கற்பித்து ஆறுதல் அடைந்து வருகிறார்கள். புத்தகங்களை வாங்கி வீடுகளில் வைத்து குழந்தைகளுக்கு பாடம் பயிற்றுவித்து வருகின்றனர்.

    குறிப்பாக தமிழ் மற்றும் ஆங்கில எழுத்துக்கள், பழங்கள், காய்கறிகள், பறவைகள், விலங்குகள் பற்றி ஆங்கிலம், தமிழில் அவர்களுக்கு விளக்கம் அளிக்கின்றனர். சில பெற்றோர் யூ-டியூப்பில் வீடியோக்களை தரம் இறக்கி எழுத்துக்களை கற்றுக்கொடுக்கின்றனர்.

    தொற்று குறைந்து பள்ளிகள் எப்போது திறக்கும் என்று தெரியாத நிலையில் தங்கள் குழந்தைகள் எதுவும் தெரியாமல் இருந்து விடக்கூடாது என்பதை மனதில் கொண்டு இதுபோன்ற முயற்சியில் இறங்கி உள்ளனர்.

    இந்த கல்வி ஆண்டில் கண்டிப்பாக மழலையர் பள்ளிகள் திறக்க வாய்ப்பு இல்லை என்பதை அறிந்து, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு அடிப்படை கல்வியைத் தேடித் தருகின்றனர். இதன் மூலம் எதிர்காலத்தில் தங்கள் குழந்தைகள் முறையான படிப்பினை தொடர முடியும் என்று நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
    பசுமையான ஆவாரம் பூக்கள் அல்லது காய வைத்த பூவின் பொடியை ஒரு ஸ்பூன் அளவு எடுத்து தயிரில் கலந்து முகத்தில் பூசி வந்தால் முகத்தில் இருக்கும் வடுக்கள் நீங்கும்.
    ஆவாரரை சருமத்திற்கு மினுமினுப்பை கொடுக்கும். தோல் வறட்சியை சரி செய்யும்.

    உடலில் ஏற்படும் துர்நாற்றம் நீங்க ஆவாரம் பூவை அரைத்துப்பூசிக் குளித்து வரலாம்.

    ஆவாரம் பூக்களை எடுத்து ரோஜா இதழ், எலுமிச்சை தோல், கஸ்தூரி மஞ்சள், பச்சை பயறோடு சேர்த்து அரைத்து குளிக்கும் போது பயன்படுத்தி வந்தால் தோலில் ஏற்படும் அரிப்பு நமைச்சல் ஆகியவை சீக்கிரமே குணமாகும். கருந்திட்டுக்கள், கரும்புள்ளிகள், முகத்தில் ஏற்படும் சுருக்கம் போன்றவை நீங்கும்.

    ஆவாரம் பூவை நிழலில் காய வைத்து டப்பாவில் சேகரித்து எப்போது வேண்டுமானாலும் பயன்படுத்தி கொள்ளலாம்.

    பசுமையான ஆவாரம் பூக்கள் அல்லது காய வைத்த பூவின் பொடியை ஒரு ஸ்பூன் அளவு எடுத்து தயிரில் கலந்து முகத்தில் பூசி வந்தால் முகத்தில் இருக்கும் வடுக்கள் நீங்கும். முகத்தில் எண்ணெய் வடியும் பிரச்சனை இருப்பவர்களுக்கு அது நீங்கி முகம் அழகும் பளபளப்பும் பெறும்.

    ஆவாரம் பூவின் பொடியை பயன்படுத்தி தொடர்ந்து குளித்து வந்தால் உடலில் ஏற்படும் வியர்வை துர்நாற்றம் நீங்கும்.
    சமூக ஊடகங்களில் அதிகமான ஒளிப்படங்களையும், தகவல்களையும் பகிரும் காதலர்கள் உண்மையில் தங்களுடைய உறவில் பாதுகாப்பின்மையை உணர்பவர்களாக இருக்கிறார்கள்.
    சமூக ஊடகங்களில் ‘லாக்டவுன்' வாழ்க்கைச் சம்பவங்கள் தொடர்பான படங்களைப் பகிர்ந்துகொள்ளும் பழக்கம் தம்பதிகளிடையே பெருகிவருகிறது. தாங்கள் மகிழ்ச்சியான வாழ்வு வாழ்கிறோம் என்று காட்டிக்கொள்ள பெரும்பாலான தம்பதிகள் விரும்புவதால்தான் இப்படியான படங்களை அவர்கள் பகிர்ந்துகொள்கிறார்கள். குறிப்பாக தங்களுடைய மனநிலையையும், பரஸ்பர அன்பையும் வெளிப்படுத்தும் வகையிலான படங்களையும், தகவல்களையும் தொடர்ந்து சமூக ஊடகங்களில் பகிர்ந்துகொள்கிறார்கள்.

    டென்மார்க்கின் மகிழ்ச்சிக்கான ஆய்வு மையம் இதுசம்பந்தமான ஒரு ஆய்வை மேற்கொண்டிருக்கிறது. அதில், மகிழ்ச்சியாக இருக்கும் காதலர்கள், தங்களுடைய உறவைப் பற்றிச் சமூக ஊடகங்களில் வாயே திறப்பதில்லை என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. மகிழ்ச்சியற்ற வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருப்பவர்கள்தாம் மெய்நிகர் உலகத்தில் தங்களை மகிழ்ச்சியானவர்களாகக் காட்டிக்கொள்வதாகச் சொல்கிறார்கள், ஆய்வாளர்கள்.

    அவர்களது கருத்துப்படி, சமூக ஊடகங்களில் அதிகமான ஒளிப்படங்களையும், தகவல்களையும் பகிரும் காதலர்கள் உண்மையில் தங்களுடைய உறவில் பாதுகாப்பின்மையை உணர்பவர்களாக இருக்கிறார்கள். சமூக ஊடகங்களில் தங்களுடைய மகிழ்ச்சியான உறவைப் பார்த்து மற்றவர்கள் பொறாமைப்பட வேண்டும் என்று நினைப்பவர்களும் அதிகரித்துவருகிறார்கள்.

    மற்றவர்களிடம் அப்படிக் காட்டிக்கொள்வதால், தங்களுடைய உறவு வெற்றிகரமாக இருப்பதாக நினைத்துக்கொள்கிறார்கள். மற்றவர்களை நம்பவைப்பதோடு மட்டுமல்லாமல் தங்களைத் தாங்களே மகிழ்ச்சியான, திருப்தியான உறவில் இருப்பதாக ஏமாற்றிக் கொள்கிறார்கள் என கூறப்பட்டிருக்கிறது.
    கொரோனா நோய்த்தொற்றை தடுப்பதற்கான சித்த மருத்துவ முறைகள் குறித்து மதுரை அரசு ஆஸ்பத்திரி சித்த மருத்துவ அதிகாரி விளக்கமளித்துள்ளார்.
    கொரோனா நோய்த்தொற்று பரவலை தடுப்பதில் தமிழகத்தின் பாரம்பரிய சித்த மருத்துவம் முக்கிய பங்காற்றுகிறது. இதையடுத்து, தற்போது புதிதாக தமிழகம் முழுவதும் முற்றிலும் சித்த மருத்துவ கொரோனா சிகிச்சை மையங்கள் திறக்கப்பட்டு வருகின்றன.

    இது குறித்து, மதுரை அரசு ராஜாஜி ஆஸ்பத்திரியின் மாவட்ட சித்த மருத்துவ அதிகாரி டாக்டர் சைரா பானு கூறியதாவது:-

    கொரோனா நோய்த்தொற்றை ஆரம்ப நிலையில் கண்டறிந்தால், சித்த மருந்துகள் மூலம் சிகிச்சையளித்து குணப்படுத்தலாம். பெரும்பாலானோர் நோய் முற்றிய நிலையில் ஆஸ்பத்திரிகளுக்கு வருகின்றனர்.

    முன்னெச்சரிக்கை

    அவர்களுக்கு சுவாசிக்க ஆக்சிசன் உதவி தேவைப்படுகிறது. ஆனால், நோய்த்தொற்று பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க முடியும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க, வீட்டின் சுற்றுப்புறத்தில் வேப்பிலை, மஞ்சள் கலந்த நீர் தெளிக்க வேண்டும். தினமும் காலையில் மிதமான சூட்டில் கல் உப்பால் வாய் கொப்பளிக்க வேண்டும்.

    தொண்டை வறண்டு போகாமல் இருக்க 2 வேளை வெந்நீர் குடிக்க வேண்டும். வேப்பிலை, நொச்சி இலை மற்றும் மஞ்சள் சேர்த்து தினமும் சுவாசத்துக்கான நீராவி பிடிக்க வேண்டும். மஞ்சள், வேப்பிலை, கற்றாழை மற்றும் படிகாரம் கலந்த நீரை கைகழுவ பயன்படுத்தலாம். காலையில் தோல் சீவிய இஞ்சி, எலுமிச்சை தோலுடன் மிளகு சேர்த்து காய்ச்சி தேன் கலந்து குடிக்க வேண்டும்.

    தினமும் மாலை சுக்கு, கொத்தமல்லி கலந்த பானம் தேனில் கலந்து அருந்த வேண்டும். இரவில் சூடான பாலில் மஞ்சள், மிளகு சேர்த்து குடிக்க வேண்டும். சுண்டைக்காய், பாகற்காய், திணை, சாமை, கேழ்வரகு, குதிரைவாலி, வேப்பம் பூ, தூதுவளை ரசம் ஆகிய உணவுகளை சாப்பிட வேண்டும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க நெல்லிக்காய், கொய்யாப்பழம், பப்பாளி, ஆரஞ்சு, சாத்துக்குடி உள்ளிட்ட பழங்களை தினமும் சாப்பிட வேண்டும்.

    சித்த மருத்துவம்

    அலர்ஜி, ஆஸ்துமா, சைனஸ் நோயாளிகள், வயதானவர்கள் முள்ளங்கி, சுரைக்காய், பூசணி, வெள்ளரிக்காய் ஆகியவற்றையும், எலுமிச்சை, தயிர், மாதுளை, திராட்சை போன்ற உணவு வகைகளை தவிர்க்க வேண்டும். கொண்டைக்கடலை, பாதாம்பருப்பு, நிலக்கடலை ஆகியவற்றை சுண்டல் செய்து சாப்பிடலாம். தினமும் காலை 10 மணிக்குள்ளும், மாலை 4 மணிக்கு பிறகும் உடம்பில் வெயில்படுமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.

    இதன் மூலம் நோய்த்தொற்று பரவாமல் நம்மை நாமே பாதுகாத்துக்கொள்ள முடியும். கபம் தொடர்பான நோய்களுக்கு சித்தர்களின் ஓலைச்சுவடிகளில் பலதரப்பட்ட மருந்து குறிப்புகள் சொல்லப்பட்டுள்ளன. அதன்படியே, தற்போது சித்த மருந்துகள் கொரோனா நோயாளிகளுக்கு பரிந்துரைக்கப்பட்டு வருகிறது. கொரோனா நோயாளிகளை அறிகுறிகள் இல்லாதவர்கள், மிதமான பாதிப்பு, சாதாரண பாதிப்பு மற்றும் தீவிர பாதிப்பு என 4 வகையினராக பிரிக்கின்றனர்.

    ஆய்வு

    இதில், மிதமான மற்றும் சாதாரண பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு சித்த மருந்துகள் மட்டும் நோய்த்தொற்றை குணப்படுத்த போதுமானது. பிற பிரிவினருக்கு ஆங்கில மருந்துகளுடன், சித்த மருத்துவமும் சேர்ந்து கிடைக்கும் போது விரைவில் குணமடைகின்றனர் என்பது இந்திய மருத்துவத்துறை இயக்குனர் கணேஷ் ஐ.ஏ.எஸ். உத்தரவின் பேரில், தமிழத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெளிவாகியுள்ளது.

    இந்த ஆய்வறிக்கை ஜே.ஏ.ஐ.எம். என்ற சர்வதேச நாளேட்டில் பிரசுரமானது. தற்போது நோய் அதிதீவிரமான நிலையில் இருப்பதால் சித்த மருத்துவத்தையும் சேர்த்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நீராவி பிடிக்கும் வழிமுறைகள்

    காலை, மாலை நேரங்களில் தொடர்ந்து சுவாசத்துக்கான நீராவி பிடித்தால் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பில் இருந்து நிவாரணம் பெற முடியும். இதற்கு கல் உப்பு, விரலி மஞ்சள்தூள், வேப்பிலை, நொச்சி இலை, துளசி இலை மற்றும் ஓமவள்ளி இலை ஆகியவற்றை சுத்தமான தண்ணீரில் நன்றாக கொதிக்க வைத்து வாய் மற்றும் மூக்கு பகுதியில் நீராவி படும்வகையில் 3 நிமிடம் ஆவி பிடிக்க வேண்டும். அப்போது, காற்றை இழுத்து சுவாசிக்க வேண்டும். இவ்வாறு செய்யும் போது, அவ்வப்போது தொற்றிக்கொள்ளும் வைரஸ் கிருமிகள் அழிக்கப்படும்.
    ×