search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    பிரசவத்துக்கு பிறகு பெண்கள் எப்போது கொரோனா தடுப்பூசி போடலாம்...
    X
    பிரசவத்துக்கு பிறகு பெண்கள் எப்போது கொரோனா தடுப்பூசி போடலாம்...

    பிரசவத்துக்கு பிறகு பெண்கள் எப்போது கொரோனா தடுப்பூசி போடலாம்...

    கொரோனாவுக்கு எதிராக கர்ப்பிணிகள் மற்றும் பிரசவத்துக்கு பிறகு பெண்கள் எப்போது தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என்று நிபுணர்கள் சொல்கிறார்கள்.
    பாலூட்டும் தாய்மார்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கு மத்திய அரசு சமீபத்தில் அனுமதி அளித்தது.

    தடுப்பூசி போட்டுக்கொண்ட பின்னர் தாய்ப்பாலூட்டுவதில் எந்தவொரு பிரச்சினையும் இல்லை, அரை மணி நேரம் கூட குழந்தைகளுக்கு தாய்ப்பால் தருவதை நிறுத்தக்கூடாது என்று நிதி ஆயோக் உறுப்பினர் (சுகாதாரம்) டாக்டர் வி.கே.பால் கூறுகிறார்.

    பிரசவத்துக்கு பின்னர் பெண்கள் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என்று சுகாதார நிபுணர்கள் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

    டெல்லி மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக கல்லூரி பேராசிரியர் டாக்டர் கான் அமீர் மாரூப் கூறுகையில், “தடுப்பூசி போடப்பட்ட தாயிடம் இருந்து பால் குடிப்பதில் பிறந்த குழந்தைக்கு எந்த ஆபத்தும் இல்லை. பிரசவத்துக்கு பின்னர் தடுப்பூசி போடுவதை தாமதப்படுத்த காரணம் இல்லை” என குறிப்பிட்டார்.

    மேலும், “தடுப்பூசி போடுவதை கருத்தில் கொண்டு பாலூட்டும் பெண்களால் குறிப்பிட்ட முன் எச்சரிக்கைகள் எடுக்க வேண்டிய தேவையில்லை” எனவும் தெரிவித்தார்.

    பிரபல மகளிர், குழந்தைப்பேறு நல மருத்துவ நிபுணர் டாக்டர் லவ்லீனா நாதிர், “கொரோனா தடுப்பூசி சிசேரியன் பிரசவத்துக்கான அறிகுறி இல்லை. ஆனால் கர்ப்பிணிக்கு கொரோனா தொற்று தொடர்பு இருந்தால் குழந்தை முன்கூட்டியே பிறக்கவும், சிசேரியன் செய்து கொள்ளவும் வாய்ப்பு அதிகம். கொரோனாவில் இருந்து மீண்டு விட்டால், குணமான நாளில் இருந்து 3 மாதத்துக்கு தடுப்பூசி போடுவதை ஒத்திபோடவேண்டும்” என குறிப்பிட்டார்.

    அத்துடன், “ஒரு பெண் தடுப்பூசியின் முதல் டோஸ் செலுத்தியபிறகு கர்ப்பம் தரித்தால் அதைத் தொடரலாம். கர்ப்பம், கொரோனா தொற்று வாய்ப்பை அதிகரிக்காது. ஆனால் கர்ப்பிணி அல்லாத பெண்களுடன் ஒப்பிடுகையில் சிகிச்சை மோசமானது” எனவும் கூறினார்.

    கர்ப்பிணிகள் தடுப்பூசி போட்டுக்கொள்வது அவர்களை வைரஸ் தொற்றில் இருந்து தற்காத்துக்கொள்ள உதவும் என்பது நிபுணர்களின் கருத்தாக இருக்கிறது.

    டெல்லியை சேர்ந்த உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு அமைப்பின் நிர்வாக இயக்குனர் டாக்டர் சுஜித் ரஞ்சன், “கர்ப்பிணிகளும், பாலூட்டும் தாய்மார்களும் தடுப்பூசிபோட்டுக்கொள்ளலாம் என்று உலக சுகாதார நிறுவன வழிமுறைகள் கூறுகின்றன. ஆனால் இந்தியாவைப் பொறுத்தமட்டில் கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி போடுவது விவாதத்தில் உள்ளது” என கூறினார்.

    இந்திய மகப்பேறு மற்றும் மகளிர் மருத்துவ சங்கங்களின் முன்னாள் தலைவர் டாக்டர் ஜெய்தீப் மல்கோத்ரா, “இந்தியாவில் தற்போது கிடைக்கும் தடுப்பூசிகளில் நேரடி வைரஸ் இல்லை. எனவே பாதுகாப்பானது. கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம். கருச்சிதைவு, பிறவி குறைபாடுகள் ஏற்படாது” என குறிப்பிட்டார்.
    Next Story
    ×