என் மலர்tooltip icon

    ஆரோக்கியம்

    வெளி இடங்களுக்குச் சென்று வந்தால் கை, கால்களை நன்றாக சுத்தம் செய்துகொள்ள வேண்டும். காய்ச்சல் வந்துவிட்டால் ஆன்டிபயாட்டிக் கொடுக்கலாம்.
    மழைக்காலம் ஆரம்பித்த பிறகு நம்மை முக்கியமாக பயமுறுத்துவது கொசுக்கள். இதன் மூலம் பலவிதமான நோய்கள் பரவுகின்றன. இத்தகைய காய்ச்சல்களில் டெங்கு கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்றாக உள்ளது. எலிக்காய்ச்சல் போன்றவை ஏற்படுவதற்கும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன. முதலில் டெங்கு பற்றி சில விஷயங்களை நினைவுகொள்ள வேண்டும். கொசுக்கள் உற்பத்தியை கட்டுப்படுத்தினால் தான் டெங்குவை முழுமையாக கட்டுப்படுத்த முடியும்.

    டெங்கு காய்ச்சல்

    டெங்கு காய்ச்சலை ஏற்படுத்துகிற கொசுக்கள் சுத்தமான தண்ணீரில் உற்பத்தியாகின்றன. எனவே, குடியிருப்பு பகுதிகளிலும், அதைச் சுற்றிலும் மழைநீர் தேங்காமல் பார்த்து கொள்ள வேண்டும். பொதுமக்களிடம் இன்னும் விழிப்புணர்வு அதிகரிக்க வேண்டும். நீர்த்தொட்டி, பால்கனி, மொட்டை மாடி மற்றும் பூந்தொட்டிகளின் கீழ்ப்பகுதியில் வைக்கப்படும் சின்னசின்ன தட்டுக்கள், பழைய டயர்கள், தேவையில்லை என தூக்கி எறியப்படும் சிரட்டைகள் போன்ற பொருட்களில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

    ஒருவேளை இந்த இடங்களில் நீர் தேங்கினால், சற்றும் தாமதிக்காமல் உடனடியாக அகற்றிவிடுவது பாதுகாப்பானது. ஏனென்றால், இவ்வாறு தண்ணீர் தேங்குவது நமக்கு பெரிதாக தெரியாது. அதை கவனிக்காமல் விட்டுவிடுவோம். எனவே, டெங்கு காய்ச்சலுக்கு காரணமான கொசுக்கள் அதில் முட்டை இட்டு உற்பத்தி ஆகக்கூடும். கொசுக்கடியில் இருந்து தங்களை காப்பாற்றி கொள்வது நல்லது. இதற்கு ஜன்னல்களில் வலை பொருத்த வேண்டும்.

    கொசு மருந்து அடித்தல்

    கொசுவர்த்தி சுருள், மேட் போன்றவற்றால் சிலருக்கு ஒவ்வாமை உண்டாகும். அவர்கள் சிறிதளவு கிரீம் தடவி கொள்ளலாம். மேலும், படுக்கையில் கொசுவலை கட்டி பாதுகாப்பாக உறங்க வேண்டும். டெங்கு காய்ச்சல் அறிகுறிகள் தென்படும் பட்சத்தில் முதலில் மாநகராட்சியின் சுகாதாரத்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். மருத்துவமனைகள், பரிசோதனைக்கூடங்கள் மூலமாகவும் அவர்களுக்கு தகவல் அனுப்பப்படும். அவர்கள் உடனடியாக அந்த பகுதியில் கொசு உற்பத்தியை தடுக்கும் வகையில், கொசு மருந்து அடித்தல், நீர்த்தொட்டி, கிணறு ஆகியவற்றில் மருந்து ஊற்றுதல் போன்ற செயல்களில் ஈடுபடுவர்.

    காலநிலை திடீரென மாறும்போது சாதாரண வைரஸ் காய்ச்சலும் இருக்கும். சளியோடு 2,3 நாள் நீடிக்கும். தீவிர காய்ச்சல், அதிகமான தலைவலி மற்றும் முதுகு வலி, உடலில் சிவப்பு நிற புள்ளிகள் போன்றவை 2 நாட்களுக்கு மேல் இருந்தால் தாமதிக்காமல் மருத்துவரை அணுக வேண்டும். டெங்கு நோய்க்கான பரிசோதனையில் ரத்தத்தில் உள்ள தட்டணுக்கள் எந்த அளவுக்கு உள்ளது என்பதை மருத்துவர்கள் கவனிப்பார்கள். தட்பவெப்பம் அடிக்கடி மாறும் சூழலில் எலிக்காய்ச்சல் பரவ வாய்ப்புகள் அதிகம்.

    சுத்தமான குடிநீர்

    எனவே வெளி இடங்களுக்குச் சென்று வந்தால் கை, கால்களை நன்றாக சுத்தம் செய்துகொள்ள வேண்டும். காய்ச்சல் வந்துவிட்டால் ஆன்டிபயாட்டிக் கொடுக்கலாம். மேலும் சுத்தமான குடிநீரை அருந்த வேண்டும். நிறைய பழங்கள், காய்கறிகள் சாப்பிட வேண்டும். இதனால் நோய் எதிர்ப்புசக்தி அதிகரிக்கும். ஐஸ் சேர்த்த ஜூஸ், ஐஸ்கிரீம் போன்றவற்றை தவிர்ப்பது நல்லது.
    நவராத்திரி 9 நாட்களும் விதவிதமான நைவேத்தியம் படைத்து வழிபாடு செய்வார்கள். இன்று நவராத்திரிக்கு நைவேத்தியம் படைக்க சூப்பரான கொழுக்கட்டை சுண்டல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    அரிசி மாவு - 1 கப்
    தண்ணீர் - 2 கப்
    உப்பு - தேவையான அளவு
    நல்லெண்ணெய்  - 1 டீஸ்பூன்
    கடுகு - அரை டீஸ்பூன்
    உளுந்து - அரை டீஸ்பூன்
    காய்ந்த மிளகாய் - 3
    பெருங்காயத்தூள் - 1 சிட்டிகை
    கறிவேப்பிலை - சிறிதளவு
    தேங்காய் எண்ணெய் - 1 டீஸ்பூன்

    செய்முறை

    வாணலியில் 2 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.

    அதில் 1 சிட்டிகை உப்பு, நல்லெண்ணெய் சேர்த்து கலக்கவும்.

    தண்ணீர் நன்றாக கொதிக்கும் போது அரிசி மாவை சிறிது சிறிதாக சேர்த்து கட்டியில்லாமல் நன்றாக கலக்கவும்.

    மாவு நன்றாக வெந்தவுடன் மூடி போட்டு மூடவும். சிறிது நேரம் கழித்து மாவு ஆறிய பின்பு கோலிக்குண்டு அளவு உருண்டைகளாக பிடித்து கொள்ளவும்.

    இந்த உருண்டைகளை ஆவியில் வேக வைத்து எடுக்கவும்.

    வாணலியில் தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்து போட்டு தாளிக்கவும். பின்பு அதில் காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் சேர்த்து கலக்கவும். கடைசியாக வேகவைத்த உருண்டைகளை போட்டு நன்றாக கிளறி இறக்கவும்.

    சூடான கொழுக்கட்டை சுண்டல் தயார்.
    நிம்மதி என்பது உங்கள்‌ மனதில்தான்‌ இருக்கிறது. முதலில்‌ உங்கள்‌ மனதில்‌ திருப்தியை நிலைநிறுத்திக்கொள்ளுங்கள்‌. திருப்தியால்‌ மட்டுமே உங்கள் ‌மனதுக்கு நிம்மதி கிடைக்கும்‌
    மனிதர்களின்‌ வாழ்க்கை நிம்‌மதியாகவும்‌, மகிழ்ச்சியாகவும்‌, ஒழுக்கமாகவும்‌, அன்பாகவும், ‌சகிப்புத்தன்மையுடனும்‌ இருக்க வேண்டும்‌ என்பதைத்தான் ‌எல்லா மதங்களும்‌ அறிவுறுத்துகின்றன. ஆனால்‌ அந்த நிம்மதி என்பது இன்று ‌ எவ்வளவு பேரிடம்‌ இருக்கிறது? பெரும்பாலானவர்களிடம் ‌இல்லை என்பதுதான்‌ உண்மை. நிம்மதி என்பது என்ன? ஒவ்‌வொருவரும்‌ ஒவ்வொரு கோணத்தில்‌ அதற்கு பொருள் கொள்கிறார்கள்‌. ஒவ்வொருவரும்‌ ஒவ்வொரு இடத்தில்‌ அதனைத்‌ தேடுகிறார்கள்‌.

    பணமின்றி பரம ஏழையாக கஷ்டப்படும்‌ ஒருவர்‌, தனக்கு நிறைய பணம்‌ கிடைத்தால்‌ நிம்மதி கிடைத்து விடும்‌ என்‌று எண்ணுகிறார்‌. ஆரோக்கியமில்லாத ஒருவர்‌. தனக்கு ஆரோக்கியம் ‌கிடைத்துவிட்டால்‌, நிம்மதி வந்துவிடும்‌ என்று நினைக்கிறார். குழந்தை செல்வம்‌ இல்லாத ஒருவர், தனக்கு அது மட்டும்‌ கிடைத்‌தால்‌ நிம்மதி ஓடோடி வந்துவிடும்‌ என்று கருதுகிறார்.

    இப்படி ஒவ்வொருவரும் ‌தங்களுக்கு அதுதான்‌ நிம்மதி, தங்களுக்கு இதுதான்‌ நிம்மதி என்று நினைக்கிறார்கள்‌. பணமே நிம்மதி தரும்‌ என்று நினைக்கும் ‌பரம ஏழையிடம்‌ ஆரோக்கியம்‌ இருக்கிறது. மக்கள்‌ செல்வம்‌ இருக்கிறது. இப்படி பல விஷயங்‌கள்‌ அவரிடம்‌ இருக்கின்றன.

    ஆனால் அதில் எல்லாம்‌ அவரால்‌ நிம்மதியைக்‌ காண முடியவில்லை. அவர்‌ தன்னிடம்‌ இல்லாத பணம்‌ ஒன்றில் தான்‌ நிம்மதி இருக்கிறது என்கிறார்‌. இந்த ஏழையிடம்‌ இல்லாத பணம்‌ ஆரோக்கியமில்லாத இன்னொருவரிடம்‌ இருக்கிறது. அனால்‌ அவரோ ‘பணம்‌ இருந்‌து என்ன பயன்? எனக்கு ஆரோக்‌கியம் இல்லை. அதனால்‌ நிம்மதி இல்லை’ என்கிறார்‌. ஆரோக்கியமும்‌, பணமும்‌ நிறைந்த ஒருவர்‌ குழந்தை செல்வம்‌ என்கிற நிம்மதி தன்னிடம் இல்லையே என்கிறார்‌. இவை அனைத்தையும்‌ கவனத்தில் கொள்ளும்போது மனிதன்‌ தன்னிடம்‌ இல்லாத ஒன்றில்‌ தான்‌ நிம்மதி இருப்பதாக ‌சொல்கிறான்‌. தன்னிடம் இருப்பவற்றை பெருமையாக நினைத்து பார்ப்பதே இல்லை.

    ஆனால் நிம்மதி என்பது பணத்திலோ, ஆரோக்கியத்திலோ, மக்கள் செல்வத்திலோ இல்லை. அவரவர் மனதில்தான் இருக்கிறது. பணத்தில் நிம்மதி இருக்கிறது என்றால் பணம் படைத்தவர்கள் எல்லாம் நிம்மதியாக இருக்க வேண்டுமே? அவர்கள் அதைத்தவிர இன்‌னொன்றில்‌ அல்லவா நிம்மதி இருப்பதாகச்‌ சொல்கிறார்கள்‌.

    நிம்மதி என்பது உங்கள்‌ மனதில்தான்‌ இருக்கிறது. முதலில்‌ உங்கள்‌ மனதில்‌ திருப்தியை நிலைநிறுத்திக்கொள்ளுங்கள்‌. திருப்தியால்‌ மட்டுமே உங்கள் ‌மனதுக்கு நிம்மதி கிடைக்கும்‌. திருப்தி என்பது எப்படி வரும்‌? உங்களை நீங்கள்‌ நம்ப வேண்‌டும்‌. உங்கள்‌ கல்வி, தகுதி, உழைப்‌புத்திறன்‌ போன்றவைகளை வைத்து உங்களையே நீங்கள் ‌கணக்கிட வேண்டும்‌. உங்கள்‌ திறனுக்கு தக்கபடி உங்களால்‌ உழைக்க முடிகிறது. உங்களால்‌ பொருள் ஈட்ட முடிகிறது. அந்த பொருளுக்கு தக்கபடி உங்கள்‌ வாழ்க்கையை அமைத்துக்‌ கொள்ள வேண்டும்‌. அந்த வாழ்க்கை நிச்சயமாக உங்களுக்கு நிம்மதி தரும்‌.

    உங்கள்‌ வாழ்க்கையை மற்றவர்‌களோடு ஒப்பிடாதீர்கள்‌. ஒப்‌பிடும்போது முதலில்‌ ஒப்பீடாகவே தெரியும்‌. ஆனால் திரும்பத் திரும்ப ஒப்பிடும்போது பொறாமையாக விஸ்வரூபம் ‌எடுத்துவிடும். அந்த பொறாமை உங்களுக்குள்‌ இருக்கும்‌ நிம்‌மதியை கொஞ்சம்‌ கொஞ்சமாக அழிக்கத் தொடங்கும்‌. பொறாமை முழுமையாக வளர்ந்து விடும்‌போது, நிம்மதியை நீங்கள்‌ முற்றிலுமாக இழந்து விடுவீர்கள்‌.

    அடுத்து, யார்‌ மீது நீங்கள் ‌பொறாமைப்படுவீர்களோ அவரைப்‌ பற்றியே நீங்கள் ‌நினைக்கத் தொடங்குவீர்கள். உங்களை நீங்கள்‌ மறக்கத்‌தொடங்குவீர்கள்‌. உங்கள்‌ வளர்ச்சி, திறன்‌ போன்‌றவை அந்த நேரத்தில்‌ குறையத்‌தொடங்கும்‌. நீங்கள்‌ வீழ்ச்சியை நோக்கி செல்லத் தொடங்கி விடுவீர்கள்‌. அதனால்‌ நீங்கள்‌ யார்‌ மீதும் ‌பொறாமை கொள்ளாதீர்கள்‌.

    மதங்கள்‌ பொறாமையை அழிக்கச்சொல்கின்றன. நீங்கள்‌ யாரிடமும்‌ குரோதம்‌ கொள்ளாதீர்கள்‌. மத மார்க்கங்கள்‌ அது தேவையற்றது என்று போதிக்கின்றன. நீங்கள்‌ யார்‌ மீதும்‌ காழ்ப்‌புணர்ச்சி கொள்ளாதீர்கள்‌. பொறாமை, குரோதம்‌, காழ்ப்‌புணர்ச்சி யாரிடம்‌ இல்‌லையோ அவர்களிடம்‌ மகிழ்ச்சி, அன்பு, சகிப்புத்தன்மை போன்றவை நிலைத்திருக்கும். அவர்கள் நிம்மதி உள்ளவர்களாக வாழ்வார்கள்.

    தேசத்தை வலுவாக்க தேசப்பற்றும் அவசியம். எனவே மாணவர்கள் கல்வி அறிவுடன் நாட்டுப்பற்றையும் வளர்த்துக் கொள்ள வேண்டும்.
    இந்தியா, இமயம் முதல் குமரி வரை பரந்து விரிந்திருக்கும் ஒற்றுமை தேசம். நிலம், நீர், மலை, கனிமம் போன்ற வளங்கள் நிரம்பப் பெற்ற நாடு. இன்றைய உலகப் பரப்பளவை அடிப்படையாக வைத்துப் பார்த்தால் இந்தியா ஏழாவது மிகப் பெரிய நாடாக திகழ்கிறது. இத்தகைய தேசத்தில் மக்கள் மதம், இனம், மொழி போன்றவற்றால் வேறுபட்டாலும் ஒற்றுமையுடன் வாழ்ந்து வருகின்றனர். நாட்டு நலனில் மாணவர்களின் பங்களிப்பு மிகுதியாக இருக்க வேண்டும். ஏனெனில் இன்றைய மாணவர்களே நாளைய பாரதத்தின் தூண்களாவார்கள். எனவே மாணவர்கள் மத்தியில் நாட்டுப்பற்று ஊற்றெடுக்க வேண்டும்.

    நாட்டின் வளர்ச்சிக்கு தனிமனித வளர்ச்சி மிகவும் அவசியம். தனிமனித வளர்ச்சிக்கு கல்வி அறிவு மிக முக்கியம். பள்ளி பருவத்தில்தான் கல்வி அறிவினை வளர்த்துக் கொள்ள முடியும். பள்ளிக்கூடங்களில் பெறும் கல்வி அறிவினால் மட்டும் இந்தியாவை வலுவானதாக மாற்ற முடியாது. தேசத்தை வலுவாக்க தேசப்பற்றும் அவசியம். எனவே மாணவர்கள் கல்வி அறிவுடன் நாட்டுப்பற்றையும் வளர்த்துக் கொள்ள வேண்டும். பள்ளி, கல்லூரிகளில் மாணவர்களுக்கு ‘தேசிய மாணவர் படை‘ என்ற அமைப்பின் மூலம் தேசப்பற்றினை ஊட்டுகின்றனர். துப்பாக்கி சுடுதல், தற்காப்பு பயிற்சிகள் போன்ற பல்வேறு பயிற்சிகள் இந்த அமைப்பினால் வழங்கப்படுகின்றன. இந்த அமைப்பின் மூலம் நாட்டின் பாதுகாப்பு நடவடிக்கைகளில் மாணவர்களால் பங்களிப்பு கொடுக்க முடியும்.

    இந்தியாவின் விடுதலை சரித்திரத்தில் இடம் பெற்றுள்ள தேசத்தந்தை மகாத்மா காந்தி, சுபாஷ் சந்திரபோஸ், ஜவகர்லால் நேரு, பகத்சிங், பெருந்தலைவர் காமராஜர், பேரறிஞர் அண்ணா போன்றோர் பள்ளி பருவத்திலே தேசப்பற்றினை வளர்த்துக் கொண்டவர்கள்தாம். இன்னும் பல விடுதலை போராளிகள் பள்ளி பருவத்திலே தேசிய பற்றினால் வார்க்கப்பட்டார்கள். அவர்கள் வழியில் நாமும் பயணம் செய்து நாட்டுக்கு சேவையாற்ற வேண்டும்.

    இந்தியாவை அடிமை பூமியாக மாற்றி ஆண்டுவந்த ஆங்கிலேயரை விடுதலை போராட்ட தியாகிகள் தங்களின் கல்வி அறிவினாலும், நாட்டுப் பற்றினாலும் விரட்டி அடித்தனர். வழக்கறிஞராக திகழ்ந்த காந்தியடிகள் தேசபற்றினால் அன்னியர் ஆட்சியை எதிர்த்து உப்பு சத்தியாகிரகம், உண்ணாவிரத அறப்போர் போன்ற பல போராட்டங்களை நடத்தினார். இந்திய பொருளாதாரத்தை உயர்த்தும் வகையில் அன்னிய பொருட்களை தவிர்த்து இந்திய பொருட்களை வாங்கி உபயோகிக்க அறிவுரை கூறினார்.

    தேசியக்கவி பாரதியார், தித்திக்கும் தேன் தமிழில் விடுதலை முழக்க பாடல்களை எழுதி மக்களிடையே விழிப்புணர்வை ஊட்டினார். சுபாஷ்சந்திரபோஸ், நாட்டுப்பற்று கொண்ட வீரர்களை இணைத்து பெரும்படையை உருவாக்கி ஆங்கிலேயரை எதிர்கொண்டார். இன்னும் ஆயிரம் ஆயிரம் தலைவர்களும், விடுதலை போராளிகளும் நாட்டுப்பற்றினால் தன் உயிரையும் ஈந்து போராடினார்கள். அவர்களின் நாட்டுப்பற்றால்தான் நாம் இன்று சுதந்திர காற்றை சுவாசிக்கிறோம்.

    மாணவர்களாகிய நாமும் நாட்டுப்பற்றினை நமது உயிர்மூச்சாக கருதவேண்டும். பள்ளி பருவத்திலிருந்தே நாம் நாட்டுப்பற்றை வெளிப்படுத்த முடியும். அது எப்படி தெரியுமா?

    கல்வியில் முழு கவனம் செலுத்தி, பிறருக்கு பயன் அளிக்கும் விதத்தில் வாழ வேண்டும். சாதாரண மாணவனாக இல்லாமல் சாதனை மாணவனாக திகழ வேண்டும். பள்ளி பருவத்தில் பாடங்களையும், வீரதீர பயிற்சிகளையும் மேற்கொண்டு இந்தியாவின் வெற்றிக்கு வித்திட வேண்டும்.“இந்திய பாரதம் இளைஞர்கள் கையில்“ என்ற வாசகத்திற்கு உயிர் கொடுத்து உலகில் இந்தியாவின் புகழை உயர்த்த பாடுபட வேண்டும். எல்லைப் பகுதிகளில் நிகழும் அன்னிய அச்சுறுத்தல்களுக்கு தக்க பதிலடி கொடுக்கவும், உலக பொருளாதாரத்திற்கு நிகராக இந்திய பொருளாதார நிலையை பலப்படுத்தி உயர்த்த நாம் என்றும் உறுதி கொள்ள வேண்டும். தேசத்திற்காக பாடுபட்ட தலைவர்களின் வழி செயல்படுவோம் என்று ஒவ்வொருவரும் உறுதிமொழி ஏற்போம்..!
    தர்பூசணி அழகை தந்து இளமையை தக்கவைக்கவும் உதவுகிறது. சருமத்தி்ன் வறட்சியை போக்கி, ஜொலிப்பை தருகிறது. இன்று தர்பூசணி பேஸ் பேக் தயாரிப்பது எப்படி என்று பார்க்கலாம்.
    தர்பூசணியில் வைட்டமின் ஏ மற்றும் ஆன்டி ஆக்சிடென்ட் நிறைந்திருக்கிறது. இது ஆரோக்கியத்திற்குரியது. அதே நேரத்தில் அழகை தந்து இளமையை தக்கவைக்கவும் தர்பூசணி உதவுகிறது. சருமத்தி்ன் வறட்சியை போக்கி, ஜொலிப்பை தருகிறது.

    ஒரு துண்டு தர்பூசணி பழத்தை வாங்கி அதன் தசைப்பகுதியை எடுத்து முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் நன்றாக பூசுங்கள். பதினைந்து நிமிடங்கள் கழித்து இளஞ் சுடுநீரில் கழுவுங்கள். அதன் பின்பு குளிர்ந்த நீராலும் ஒருமுறை கழுவுங்கள். இது சருமத்தின் பொலிவுக்கு வழிவகுக்கும்.

    தர்பூசணி பழக்கூழை இரண்டு தேக்கரண்டி அளவுக்கு எடுத்து, அதில் தயிர் கலந்து முகத்தில் பூசி, சிறிது நேரம் கழித்து கழுவினால் சருமத்தில் இருக்கும் கரும் புள்ளிகள் நீங்கும். தயிருக்கு பதில் பாலும் சேர்த்துக்கொள்ளலாம். இத்துடன் இரண்டு தேக்கரண்டி அரிசி மாவு சேர்த்துக்கொண்டால் அது சிறந்த ஸ்கிரப் ஆக பயன்படும்.
    இயற்கை வழியிலேயே கொசுவை விரட்டலாம். கொசுவுக்குப் பிடிக்காத நறுமணம் பரப்பும் செடிகளை வீட்டில் வளர்ப்பதன் மூலம் இயற்கை முறையில் கொசுக்களை விரட்டலாம்.
    தமிழ்நாட்டில் கொசுக்களுக்கு சீசனே கிடையாது. மழைக்காலத்தைப் பற்றி சொல்லவே தேவையில்லை. கொசு கடித்தால் மலேரியா, டெங்கு வந்துவிடுமே என்று கொசுவர்த்தியை வைத்துவிட்டு தூங்குபவர்களில் சிலருக்கு காலையில் மூக்கு ஒழுகி, தொண்டை கட்டிக்கொண்டு, கண் எரிச்சலும்கூட வந்து விடுகிறது. ஒரு கொசுவர்த்தியை எரிக்கும்போது வெளிவரும் நுண்துகள் 75 முதல் 137 சிகரெட்களை புகைக்கும்போது வருகிற நுண்துகளுக்கு சமம் என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். காற்றில் கலந்துள்ள எல்லா நுண்துகளுமே சுற்றுச்சூழலுக்குத் தீங்கு விளைவிப்பவைதான். அதிலும் கொசு விரட்டியில் இருந்துவரும் நுண்துகள் மோசமானது. இது 2.5 மைக்ரோ மீட்டர் விட்டம் மட்டுமே கொண்டது. அதனால் எளிதாக நம் நுரையீரலுக்கு சென்று பல நோய்களை ஏற்படுத்துகிறது என்கிறார்கள் மருத்துவர்கள்.

    சரி, அப்படியானால் தூக்கத்தை தொந்தரவு செய்யும் கொசுக்களை எப்படி விரட்டுவது? இயற்கை வழியிலேயே கொசுவை விரட்டலாம். கொசு விரட்டும் மேட், திரவம், ஸ்பிரே போன்றவையும் உடல்நலத்துக்குக் கேடு விளைவிப்பவைதான். இவற்றுக்குப் பதிலாகக் கொசுவுக்குப் பிடிக்காத நறுமணம் பரப்பும் செடிகளை வீட்டில் வளர்ப்பதன் மூலம் இயற்கை முறையில் கொசுக்களை விரட்டலாம்.

    சாமந்திப்பூ, இச்செடியில் இருந்துவரும் தனித்தன்மை கொண்ட வாசனையைப் பூச்சிகளும், உயிரினங்களும் விரும்புவதில்லை. இச்செடிகளைக் கடந்து வீட்டுக்குள் செல்லக் கொசுக்கள் தயங்குகின்றன. இச்செடியை நிழலில் வைத்தால் வளர்ச்சி தாமதமடையும் என்பதால், வெயிலில் வளர்ப்பது நல்லது.

    சிட்ரோநெல்லா புல்: இலைகளைக் கசக்கினால் எலுமிச்சை மணம் தூக்கலாக வீசுவதுதான், இந்தப் புல்லின் தனிச்சிறப்பு. இதில் இருந்து எடுக்கப்படும் சிட்ரோ நெல்லா எண்ணெய் வாசனைப் பொருளாகவும், மூலிகைத் திரவமாகவும் பயன்படுகிறது. இந்த எண்ணெயை மெழுகுவர்த்தி, விளக்குகளில் ஊற்றி எரித்தோ, சருமத்தில் தேய்த்துக்கொண்டோ கொசுக்களில் இருந்து காத்துக்கொள்ளலாம்.

    ஹார்ஸ் மின்ட்: ஒரு வகை புதினா செடியான இதன் மணம் சிட்ரோநல்லா புல்லைப் போலவே இருக்கும். வெப்பமான இடங்களிலும், மணற்பாங்கான பகுதியிலும்கூட நன்றாக வளரும். பல்லாண்டு தாவரம் என்பதால், ஒரு முறை நட்டுவிட்டால் நான்கைந்து ஆண்டுகளுக்கு இது கொசுவிரட்டியாக செயல்படும்.

    லாவண்டர் என்ற வாசனை செடி கொசுக்களை விரட்டும் அற்புத செடி. இதற்கு, அதிகத் தண்ணீர் தேவையில்லை. கவனிப்பும் அதிகம் தேவையில்லை என்பதால், வீட்டில் எளிதாக வளர்க்கலாம். லாவண்டர் எண்ணெயை தண்ணீரில் கலந்து, ரசாயனம் இல்லாத கொசுவிரட்டி லோஷனைத் தயாரிக்கலாம். ரோஸ்மேரி செடியை வீட்டில் வளர்த்தால், கொசுக்கள் மட்டுமின்றி மற்ற பூச்சிகளும் வீட்டை அண்டாது. இச்செடி அதிகக் குளிரைத் தாங்காது என்பதால் கார்த்திகை, மார்கழி மாதங்களில் வீட்டுக்குள் வைத்து வளர்க்கலாம். இவற்றைத் தவிர நமக்கு நன்கு அறிமுகமான வேப்பமரம், துளசி, கிராம்புச் செடி போன்றவற்றையும் வீட்டில் வளர்த்து கொசுக்களை விரட்டலாம்.
    இன்பமும், துன்பமும் கலந்ததுதான் இல்லற வாழ்க்கை. அதனை எதிர்கொள்ளும் பக்குவத்தை திருமணத்திற்கு முன்பே பெற்றிருக்க வேண்டும்.
    இளம் வயதில் எல்லோருக்குமே ஒரு சில ஆசை, கனவுகள் இருக்கும். அவை பெரும்பாலும் திருமணத்திற்கு முன்பாகவே நிறைவேறக்கூடியதாக இருக்கும். அப்படிப்பட்ட விஷயங்களை திருமணத்திற்கு முன்பு பூர்த்தி செய்து கொள்வதுதான் நல்லது. திருமணமான பிறகு ‘இதையெல்லாம் முன்பே செய்திருக்கலாமே’ என்று புலம்புவதில் பிரயோஜனமில்லை.

    * திருமணத்திற்கு முன்பே பொருளாதார ரீதியில் வலுவாக இருக்க வேண்டும், வாழ்க்கையில் ஓரளவு செட்டிலாகிவிட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இளம் தலைமுறையினரிடம் இருக்கிறது. அதனை சாத்தியமாக்குவதற்கான திட்டமிடல் சரியாக அமைய வேண்டும். வீண் செலவுகளுக்கு இடம் கொடுக்கக்கூடாது. சேமிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். ஓரளவு பணமும் சேமித்து வைத்துக்கொள்ள வேண்டும். இப்படி பொருளாதார ரீதியாக நிலை நிறுத்திக்கொள்வது பெண் வீட்டார் மத்தியில் மதிப்பையும், மரியாதையையும் உயர்த்தும். திருமணமான பிறகு பொருளாதார நிலைமை சீராக இல்லை என்று புலம்புவதில் அர்த்தமில்லை.

    * திருமணத்திற்கு முன்பு பிடித்தமான வேலையில் நிலை நிறுத்திக்கொள்வது சிறந்தது. பணியில் அடைய நினைக்கும் உயரங்களை அடைந்தபின், பணி பாதுகாப்பை உறுதி செய்த பின், திருமணம் செய்து கொள்ளலாம். அதற்காக திருமணம் செய்துகொள்வதற்கு 30 வயது வரை காலம் தாழ்த்தாதீர்கள்.

    * குடும்பத்தினரின் நிர்பந்தம் காரணமாகவோ, நண்பர்களுக்கு திருமணமாகிவிட்டது என்பதற்காகவோ திருமண பந்தத்தில் நுழையாதீர்கள். திருமணம் செய்து கொள்வதற்கு மனப்பூர்வமாக தயாராக வேண்டும். விரும்பிய துணையை தேர்ந்தெடுப்பதிலும் சமரசம் செய்து கொள்ளக்கூடாது. இருவருக்கும் சம்மதமும், புரிதலும் இருக்க வேண்டும்.

    * திருமணத்திற்கு முன்பு சின்ன சின்ன ஆசைகளை நிறைவேற்றிக்கொள்வதுதான் புத்திசாலித்தனம். சிலர் பயண பிரியர்களாக இருப்பார்கள். நண்பர்களுடன் ஜாலியாக பயணம் மேற்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். அதனை தாமதமில்லாமல் நிறைவேற்றிவிட வேண்டும். நண்பர்களுடன் பொழுதை போக்க முடியாமல் போய்விட்டதே என்ற ஏக்கம் திருமணத்திற்கு பிறகு எட்டிப்பார்க்கக்கூடாது. வாழ்க்கை துணையுடன் விரும்பிய பயணங்களை மேற்கொள்ளலாம்.

    * இன்பமும், துன்பமும் கலந்ததுதான் இல்லற வாழ்க்கை. அதனை எதிர்கொள்ளும் பக்குவத்தை திருமணத்திற்கு முன்பே பெற்றிருக்க வேண்டும். திருமணமானவர்களின் அனுபவத்தில் இருந்து வாழ்க்கை பாடத்தை கற்றறிந்து கொள்வதும் சிறப்பானது.

    * காதல் இல்லாமல் இளமை பருவ வாழ்க்கையை கடந்து விட்டோமே என்ற ஏக்கம் பலருக்கும் இருக்கும். திருமணம் செய்து கொள்ளப்போகும் துணையை காதலிக்க தொடங்குங்கள். நிச்சயம் செய்த பிறகு மனம் விட்டு பேசுங்கள். காதல் வாழ்க்கையை அனுபவித்துவிட்டு இல்லறத்துக்குள் நுழையுங்கள். இருவருக்கும் இடையே ஒருமித்த புரிதல் வந்துவிட்டால்போதும். வாழ்க்கையில் வசந்தம் வீசும்.
    தினந்தோறும் முட்டைகோஸ் கூட்டு, பொரியல் போன்ற பதார்த்தங்களாக செய்து சாப்பிட்டு வருபவர்களுக்கு செரிமான கோளாறுகள் நீங்கும். உடலில் நீர்ச்சத்தை அதிகரித்து மலச்சிக்கல் பிரச்சனையையும் நீக்கும்.
    தேவையான பொருட்கள் :

    கோதுமை மாவு - 2 கப்,
    காய்ச்சிய பால் - அரை கப்,
    உப்பு - அரை டீஸ்பூன்.

    ஸ்டஃப் செய்வதற்கு:

    முட்டைகோஸ் துருவல் - அரை கப்,
    வெங்காயத் துருவல், கேரட் துருவல், பொடியாக நறுக்கிய பசலைக் கீரை - தலா கால் கப்,
    எலுமிச்சைச் சாறு - 2 டீஸ்பூன்,
    பொடியாக நறுக்கிய கொத்தமல்லி - சிறிதளவு,
    கரம் மசாலாத்தூள், மிளகாய்த்தூள் - தலா ஒரு டீஸ்பூன்,
    உப்பு - சிறிதளவு.

    செய்முறை:

    கோதுமை மாவுடன் பால், உப்பு, தண்ணீர் விட்டு மிருதுவாகப் பிசையவும்.

    முட்டைகோஸ் துருவல், கேரட் துருவல், வெங்காயத் துருவல், பசலைக் கீரை ஆகியவற்றுடன் உப்பு சேர்த்துப் பிசறி வைக்கவும். 10 நிமிடம் கழித்து காய்கறிக் கலவையை பிழிந்து கொள்ளவும்.

    அதனுடன் உப்பு, எலுமிச்சைச் சாறு, நறுக்கிய கொத்தமல்லி, மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள் சேர்த்து நன்கு கலந்து கொள்ள… காய்கறி பூரணம் ரெடி!

    பிசைந்த மாவில், கொஞ்சம் மாவை எடுத்து கிண்ணம் போல் செய்து… அதனுள் பூரணம் வைத்து மூடவும். இதேபோல் ஒவ்வொரு ரொட்டியையும் தயார் செய்யவும்.

    தோசைக்கல்லை மிதமான தீயில் வைத்து தேய்த்த ரொட்டியை சுட்டெடுக்கவும்.

    சத்தான முட்டைகோஸ் ரொட்டி ரெடி.

    மார்பக புற்றுநோயை ஆரம்பகாலத்தில் கண்டறிந்து சிகிச்சை பெற்றால் குணம் அடையலாம். ஆகவே பெண்கள் தனக்கு தானே பரிசோதை செய்து கொள்ள வேண்டும்.
    மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு கருத்தரங்கம் திருச்சி அரசு மருத்துவமனை மல்டி ஸ்பெஷாலிட்டி கட்டிட தரைதளத்தில் நேற்று நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக அரசு மருத்துவமனை டீன் வனிதா கலந்து கொண்டார். அரசு மருத்துவக்கல்லூரி துணை முதல்வர் அர்ஷியாபேகம், மருத்துவ கண்காணிப்பாளர் அருண்ராஜ், அறுவை சிகிச்சைத்துறை தலைவர் டாக்டர் ஏகநாதன், டாக்டர்கள் சுரேஷ்குமார், செந்தில்குமார் மற்றும் செவிலியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இதில் மார்பக புற்றுநோயை தடுப்பது குறித்த விழிப்புணர்வு கையேடு வெளியிடப்பட்டது. மேலும் மார்பக புற்றுநோய் குறித்து பொதுமக்களுடன் கலந்துரையாடல் நடத்தி விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து பிங்க் நிற பலூன்களும் பறக்கவிடப்பட்டன.

    இதுகுறித்து அரசு மருத்துவமனை டீன் வனிதா நிருபர்களிடம் கூறியதாவது:-

    மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு மாதமாக இந்த மாதம் கருதப்படுகிறது. மார்பக புற்றுநோய் குறித்து பொதுமக்களிடம் அச்சம் இருக்கக்கூடாது என்ற குறிக்கோளுக்காக இளஞ்சிவப்பு நிற (பிங்க்) பலூன் பறக்கவிடப்பட்டது. மார்பக புற்றுநோயை ஆரம்பகாலத்தில் கண்டறிந்து சிகிச்சை பெற்றால் குணம் அடையலாம். பெண்களுக்கு மார்பக புற்றுநோய் ஏற்பட உடல் பருமனும் முக்கிய காரணமாகும்.

    மேலும், தாய்ப்பால் கொடுக்காமல் இருத்தல் போன்ற காரணங்களாலும் மார்பக புற்றுநோய் ஏற்படுகிறது. ஆகவே பெண்கள் தனக்கு தானே பரிசோதை செய்து கொள்ள வேண்டும். திருச்சி அரசு மருத்துவமனையில் இன்னும் ஓரிரு மாதத்தில் மேமோகிராம் என்ற எந்திரம் நிறுவப்பட உள்ளது. இதன்மூலம் புற்றுநோயை ஆரம்ப காலத்தில் துல்லியமாக கண்டுபிடித்துவிட முடியும். இதுதவிர ரேடியோதெரபி எந்திரமும் வர இருக்கிறது. இந்த வசதிகள் வந்தால் சிறந்த சிகிச்சை அளிக்க முடியும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்தியாவில் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 2020-ம் ஆண்டு நிலவரப்படி, 13 லட்சத்து 9 ஆயிரமாக இருந்த மார்பக புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை 2025-ம் ஆண்டில் 15 லட்சத்து 7 ஆயிரமாக அதிகரிக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் மார்பக புற்றுநோய் 2016-ல் 9,200-லிருந்து தற்போது 12,300 ஆக உயர்ந்துள்ளதாக புள்ளிவிவர தகவல்கள் கூறுகின்றன.
    குழந்தைகள் பள்ளி செல்லும்போதும், வெளியே விளையாடும் போதும் உடலில் சூரிய வெளிச்சம் படுவதால் வைட்டமின்-டி சத்து கிடைக்கும். ஆனால் இப்போது பல குழந்தைகளுக்கு இந்த சத்து மிகவும் குறைந்துள்ளது.
    கொரோனா வைரஸ் பரவலால் கடந்த 18 மாதங்களாக குழந்தைகளும், பள்ளி, கல்லூரி மாணவர்களும் வீடுகளில் முடங்கிப் போனார்கள். இப்போதுதான் படிப்படியாக தளர்வுகள் கொடுக்கப்பட்டு கல்லூரிகள் திறக்கப்பட்டு வருகின்றன.

    1 முதல் 8-ம் வகுப்புவரை படிக்கும் குழந்தைகளுக்கு அடுத்தமாதம் 1-ந்தேதி பள்ளிகள் திறக்கிறது. பள்ளிகளுக்கு அனுப்பும் உற்சாகத்தில் பெற்றோர்களும், பள்ளி செல்லும் ஆர்வத்தில் மாணவர்களும் இருக்கிறார்கள்.

    வீடுகளில் இவ்வளவு நாளும் குழந்தைகள் முடங்கி கிடந்ததால் அவர்களின் படிப்பும் எதிர்காலமும், பாதிக்கப்படுவதாக பெற்றோர்கள் கவலைப்பட்டார்கள். ஆனால் வீடுகளிலேயே இருந்தாலும் அந்த குழந்தைகள் பிரச்சினைகளுக்கு உள்ளாகி இருப்பதை பல பெற்றோர்கள் கண்டு கொள்ளவில்லை.

    வழக்கமாக குழந்தைகளை அதிகாலையிலேயே தட்டி எழுப்பி குளிப்பாட்டி உணவுகள் கொடுத்து பள்ளிக்கு அனுப்புவார்கள். அந்த குழந்தைகளும் உற்சாகமாக புத்தகப்பையை தோளில் சுமந்துகொண்டு ஓடும்.

    பள்ளிகளிலும் சக மாணவர்களோடு சிரித்து பேசி விளையாடுவது போன்றவற்றில் ஈடுபடுவார்கள். ஆனால் இந்த 18 மாதங்களில் இவை எதுவும் இல்லை. பல பிள்ளைகள் பள்ளிகளை கூட மறந்து விட்டனர். வெளியே விடாமல் வீட்டுக்குள்ளேயே வைத்து ஆன்லைன் வகுப்புகள் என்ற பெயரில் கட்டிப்போட்டனர்.

    இதனால் குழந்தைகள் காலையிலேயே கையில் ஒரு செல்போன் அல்லது கம்ப்யூட்டரை மட்டுமே பார்த்தபடி தன்னந்தனியாக இருட்டு அறைக்குள் முடக்கப்பட்டார்கள். வீடுகளிலேயே இருந்ததால் எப்போதும் நொறுக்குத்தீனிகள் மற்றும் கேட்ட உணவுகளையும் பெற்றோர்கள் வாங்கிக் கொடுத்து அவர்களை கவனித்துக்கொண்டார்கள். இதனால் உடலுக்கு எந்த விதமான பயிற்சியும் இல்லாமல் பூசணிக்காய் போல் உடல் பருத்துப்போனது.

    சில குழந்தைகள் 10 கிலோ வரை உடல் எடை அதிகரித்து இருப்பதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள். படிக்கட்டு ஏறினால் மூட்டு வலிக்கிறது என்று பல குழந்தைகள் மருத்துவர்களிடம் சொல்கிறார்கள். அந்த குழந்தைகளை பரிசோதித்த டாக்டர்கள் அவர்களின் வாழ்க்கை முறை மாற்றம் தான் எல்லா பிரச்சினைகளுக்கும் காரணம் என்கிறார்கள்.

    வழக்கமாக குழந்தைகள் பள்ளி செல்லும்போதும், வெளியே விளையாடும் போதும் உடலில் சூரிய வெளிச்சம் படுவதால் வைட்டமின்-டி சத்து கிடைக்கும். ஆனால் இப்போது பல குழந்தைகளுக்கு இந்த சத்து மிகவும் குறைந்துள்ளது.

    எப்போதும் செல்போன், கம்ப்யூட்டர் திரைகளையே பார்த்துக்கொண்டு இருந்ததால் கண்கோளாறுகள் ஏற்பட்டுள்ளன. தலைவலி, சரியான தூக்கமின்மை ஆகியவற்றால் சிரமப்படுகிறார்கள்.

    மேலும் இந்த முறையற்ற நேரங்களில் சாப்பிடுவது, தூக்கமின்மை போன்றவற்றால் மலச்சிக்கல் ஏற்பட்டு குடல் பிரச்சினைக்கு ஆளாகின்றனர். மன உளைச்சல் காரணமாக அவர்களுடைய தனி திறமைகளும் மழுங்கிப் போயுள்ளன. விளையாட்டு, உடல்பயிற்சி இல்லாததால் சுவாசக் கோளாறுகளும் ஏற்பட்டுள்ளன.

    சென்னையில் உள்ள முன்னணி குழந்தைகள் மருத்துவமனைகளில் ஏராளமான குழந்தைகள் இந்த மாதிரி கோளாறுகளால் சிகிச்சை பெற்றுள்ளார்கள். எனவே குழந்தைகள் பராமரிப்பில் பெற்றோர்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

    இப்படிப்பட்ட நெருக்கடிக்குள் இருக்கும் குழந்தைகளுக்கு 1-ந்தேதி பள்ளிகள் திறப்பது நல்ல வி‌ஷயம். அதேநேரம் கொரோனா தொற்று ஏற்படாமல் இருக்க முககவசம் அணிதல், சமூக இடைவெளியுடன் அமர்ந்திருத்தல் அடிக்கடி கைகளை கழுவுதல் போன்ற வழிமுறைகளை கடைபிடிக்கவும் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.
    கருவுற்ற பெண்ணுக்கு மகிழ்ச்சியை பகிர முத்தம் கொடுத்தால் அந்த மகிழ்ச்சியை குழந்தையும் அனுபவிக்கும். அதனால் கர்ப்பிணி மனைவிக்கு கணவரின் அன்பான முத்தம் மிக அவசியம்.

    பிரிந்திருக்கும் உதடுகள், மேலும் இரண்டு உதடுகளோடு சேர்ந்துகொள்ளும்போது முத்தம் உருவாகிறது. பிடித்தமானவர் களுக்கு நிறைய முத்தங்களை கொடுக்கும்போது அது முத்தமழையாகிவிடுகிறது. முத்தம் உடலின் வெளிப்புற நிகழ்வாக இருந்தாலும், முத்தம் கொடுக்கும்போது உடலின் உள்புறமும் சேர்ந்து சிலிர்த்துவிடுகிறது. முத்தம் பாலியலை மட்டுமே அடிப்படையாகக்கொண்டது அல்ல. அன்பை வெளிக்காட்டவும், பாசத்தை பகிர்ந்துகொள்ளவும் அது மிக அவசியம்.

    ‘உனக்கு நான் இருக்கிறேன். உன் மகிழ்ச்சியிலும், துக்கத்திலும் நான் உன்னோடு இறுக்கமாக இருப்பேன்’ என்று, துக்கத்தில் இருப்பவரை கட்டிப்பிடித்து தேற்றும்போது அது ‘கட்டிப்பிடி வைத்தியம்’ ஆகிவிடுகிறது. அதுபோல் முத்தத்திலும் உணர்வுபூர்வமான விஷயங்கள் இருக்கின்றன. அதுவும் உடல் நலத்தை மேம்படுத்தி, மருத்துவ முத்தமாகிவிடுகிறது.

    முத்த மருத்துவம் எப்படி வேலை செய்கிறது தெரியுமா?

    மனதுக்கு பிடித்த இருவர் உற்சாகமாக முத்தம் கொடுத்துக்கொள்ளும்போது அது அவர்கள் உடலில் மகிழ்ச்சியான ஹார்மோன்களைச் சுரக்க செய்கிறது. ஆக்சிடோசின், எண்டார்பின் ஆகியவை அதிகம் சுரப்பதால் உடல்வலி, கை-கால் வலி நீங்கும். ஆர்த்ரைடிஸ் வலி, மாதவிலக்கின் போது ஏற்படும் வலி, தலைவலி போன்ற வலிகளை நீக்கி முத்தம் ஒரு வலி நிவாரணியாக செயல்படுகிறது.

    முத்தம் கொடுக்கும் போது மன அழுத்தம், மனக் கவலையும் நீங்கும். உதட்டோடு உதடு சேர்த்து ஆங்கில முத்தம் கொடுப்பதால் தலைவலி, மன அழுத்தம் போன்றவற்றிலிருந்து விடுதலை கிடைக்கிறது.

    சிலருக்கு முத்தம் என்றாலே அலர்ஜி ஏற்படும். அதற்கு ‘பிலிமாபோபியா’ என்று பெயர். முத்தத்தை பற்றிய படிப்புக்கு ‘பிலிமொடாலஜி’ என்று பெயர்.

    இரு கன்னங்களையும் கைகளால் பற்றி பெண்ணின் நெற்றிப் பொட்டில் கொடுக்கும் முத்தம் உச்சபட்ச அன்பின் வெளிப்பாடாகும். இந்த முத்தம் அன்புக்குரியவர்களின் மீது நம்பிக்கையினையும் நேசத்தினையும் அதிகரிக்கும். இந்த முத்தம் மனதை வலுவாக்கும்.

    தைராய்டு ஹார்மோன் சுரப்பை சீராக்கும் தன்மை அன்பான முத்தத்திற்கு இருக்கிறது. மருந்தோடு சேர்ந்து முத்தமும் இதில் முக்கியபங்காற்றும்.

    முத்தம் கொடுக்கும்போது கருப்பையின் செயல்பாடு இயல்பு நிலைக்கு திரும்பும். முத்தத்தால் கருப்பை நன்கு தூண்டப்படும். கருவுற்ற பெண்ணுக்கு மகிழ்ச்சியை பகிர முத்தம் கொடுத்தால் அந்த மகிழ்ச்சியை குழந்தையும் அனுபவிக்கும். அதனால் கர்ப்பிணி மனைவிக்கு கணவரின் அன்பான முத்தம் மிக அவசியம்.

    மூக்குகள் உரசிக் கொள்ளும் வகையில் பெற்றோர் பிள்ளைகளுக்கும், அன்புக்குரியவர் களுக்குள்ளும் கொடுக்கப்படும் முத்தம் ‘எஸ்கிமோக்கள்’ முத்தம் எனப்படும். பாசத்தின் வெளிப்பாடு இந்த முத்தம்.

    முப்பது வயதுக்கு மேல் இருப்பவர்கள் அடிக்கடி முத்தம் கொடுத்தால் அவர்களுடைய வாழ்நாள் நீடிக்கும் என்று ஆய்வுகள் கூறுகின்றன. ஒருமனிதன் தனது சராசரி வாழ்நாளில் இரண்டு வாரங்களை முத்தமிடுவதற்காக செலவிடுகிறான். நீங்கள் கூடுதலாக முத்தம் கொடுத்தும் இ்ந்த கால அளவை நீடித்துக்கொள்ளலாம்.

    முத்தம் கொடுக்கும் போது 112 வகையான தசைகள் தூண்டப்படுவதால் முகம் பொலிவாகிறது. தம்பதிகள் முயற்சித்துப் பார்க்கலாம்.

    முத்தம் மூளைச் செயல்பாட்டை தூண்டி மனதையும் உடலையும் மகிழ்ச்சியாக வைத்திருக்கும். இதை வயதான தம்பதிகள் நன்கு உணர்ந்திருப்பார்கள்.

    குழந்தையில்லாதவர்கள் அடிக்கடி முத்தமிடுவது நல்லது. இதனால் கருமுட்டையின் வளர்ச்சி மேம்படும்.

    முக்கியமான வேலைக்கு செல்லும்போது இணைக்கு முத்தம் கொடுத்துச் சென்றால் அந்த வேலை இனிதாக அமைவதுடன் எளிதாகவும் முடியும். மனமும் மகிழ்ச்சியாக இருக்கும். இதனால் செல்லும் வேலை சுமூகமாக முடியும்.

    ஆண்மைக் குறைபாடோ, பெண்மைக் குறைபாடோ இருப்பவர்கள் தொடர்ந்து முத்தம் கொடுப்பதால் குழந்தையின்மை பிரச்சினையிலிருந்து விடுபட முடியும். முத்தம் கொடுப்பதால் கருப்பையும், விரைப்பையும் தூண்டப்பட்டு குழந்தை உருவாகுவதற்கான வாய்ப்பு அதிகரிக்கும்.

    உங்களை ஈர்த்த உங்கள் இணையின் கண் இமைகளில் முத்தமிடுங்கள். அவர் மகிழ்ச்சியடைவதுடன் உங்களிடம் அன்பை திரும்பத் தருவார். அங்கே முத்தமழை பொழிய வாய்ப்பிருக்கிறது.

    முத்தம் கொடுக்கும் போது உடலில் உள்ள ஹார்மோன்களின் இயக்கம் தூண்டப்பட்டு சீராக நடைபெறுவதால் புத்துணர்ச்சியும், ஆரோக்கியமும் கிடைக்கும்.
    உலர் பழங்களுக்கு கலோரிகள் அதிகம். மேலும் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தி தர விட்டமின்கள், மினரல்கள் இவற்றில் நிறைய உள்ளன. உலர் பழங்கள் வெகு எளிதில் செரிமானமாகக் கூடியவை.
    உலர்பழங்கள் உடலுக்கு ஆரோக்கியம் தருபவை. பழங்களில் உள்ள நீர்ச்சத்தை வற்றச் செய்து உலர் பழங்கள் தயாரிக்கப்படுகின்றன. இதன் மூலம் பழங்கள் நீண்ட நாட்கள் கெடாமல் இருக்கும். உலர்த்துவதன் மூலம் ஒரு பருவ காலத்தின் பழங்களை மற்றொரு பருவ காலத்தில் உண்ண முடிகிறது. உலர் பழங்களின் சுவையும், மணமும் வெகு நாட்களுக்கு இருக்கும்.

    உலர் பழங்களுக்கு கலோரிகள் அதிகம். மேலும் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தி தர விட்டமின்கள், மினரல்கள் இவற்றில் நிறைய உள்ளன. உலர் பழங்கள் வெகு எளிதில் செரிமானமாகக் கூடியவை. ரத்தத்தைச் சுத்தப்படுத்தும் ஆற்றல் கொண்டவை. பலவீனமானவர்கள் உலர் பழங்கள் உண்டால் விரைவில் இயல்பான ஆரோக்கியத்தை அடையலாம்.

    உலர் பழங்களில் உள்ள இனிப்பு தனித்துவமான சுவை கொண்டது. நாவிற்கு மட்டுமின்றி உடல் ஆரோக்கியத்திற்கும் உகந்தது. உலர் பழங்களை உண்பதை பழக்கமாக கொண்டால் உடல் சக்தி அதிகரிக்கும். உலர் பழங்கள் தோல் சுருக்கங்களை நீக்கிச் சருமத்தை காக்கக்கூடியவை. மலச்சிக்கலை போக்க வல்லது. அதுமட்டுமல்ல நினைவாற்றலையும் பெருக்கும். இதயத்திற்கும் நல்லது.

    உலர்ந்த திராட்சை புரதச்சத்தும் நிறைந்தது. வேர்க்கடலையில் நார்ச்சத்தும் பேரீச்சம்பழத்தில் தாதுச்சத்தும் நிறைந்துள்ளன. இவ்வளவு சத்துள்ள உலர் பழங்களை அன்றாடம் உண்டு ஆரோக்கியம் பெறுவோம்.

    ×