search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    18 மாதங்களாக வீடுகளில் முடங்கி கிடக்கும் குழந்தைகள் சந்திக்கும் பிரச்சினைகள்
    X
    18 மாதங்களாக வீடுகளில் முடங்கி கிடக்கும் குழந்தைகள் சந்திக்கும் பிரச்சினைகள்

    18 மாதங்களாக வீடுகளில் முடங்கி கிடக்கும் குழந்தைகள் சந்திக்கும் பிரச்சினைகள்

    குழந்தைகள் பள்ளி செல்லும்போதும், வெளியே விளையாடும் போதும் உடலில் சூரிய வெளிச்சம் படுவதால் வைட்டமின்-டி சத்து கிடைக்கும். ஆனால் இப்போது பல குழந்தைகளுக்கு இந்த சத்து மிகவும் குறைந்துள்ளது.
    கொரோனா வைரஸ் பரவலால் கடந்த 18 மாதங்களாக குழந்தைகளும், பள்ளி, கல்லூரி மாணவர்களும் வீடுகளில் முடங்கிப் போனார்கள். இப்போதுதான் படிப்படியாக தளர்வுகள் கொடுக்கப்பட்டு கல்லூரிகள் திறக்கப்பட்டு வருகின்றன.

    1 முதல் 8-ம் வகுப்புவரை படிக்கும் குழந்தைகளுக்கு அடுத்தமாதம் 1-ந்தேதி பள்ளிகள் திறக்கிறது. பள்ளிகளுக்கு அனுப்பும் உற்சாகத்தில் பெற்றோர்களும், பள்ளி செல்லும் ஆர்வத்தில் மாணவர்களும் இருக்கிறார்கள்.

    வீடுகளில் இவ்வளவு நாளும் குழந்தைகள் முடங்கி கிடந்ததால் அவர்களின் படிப்பும் எதிர்காலமும், பாதிக்கப்படுவதாக பெற்றோர்கள் கவலைப்பட்டார்கள். ஆனால் வீடுகளிலேயே இருந்தாலும் அந்த குழந்தைகள் பிரச்சினைகளுக்கு உள்ளாகி இருப்பதை பல பெற்றோர்கள் கண்டு கொள்ளவில்லை.

    வழக்கமாக குழந்தைகளை அதிகாலையிலேயே தட்டி எழுப்பி குளிப்பாட்டி உணவுகள் கொடுத்து பள்ளிக்கு அனுப்புவார்கள். அந்த குழந்தைகளும் உற்சாகமாக புத்தகப்பையை தோளில் சுமந்துகொண்டு ஓடும்.

    பள்ளிகளிலும் சக மாணவர்களோடு சிரித்து பேசி விளையாடுவது போன்றவற்றில் ஈடுபடுவார்கள். ஆனால் இந்த 18 மாதங்களில் இவை எதுவும் இல்லை. பல பிள்ளைகள் பள்ளிகளை கூட மறந்து விட்டனர். வெளியே விடாமல் வீட்டுக்குள்ளேயே வைத்து ஆன்லைன் வகுப்புகள் என்ற பெயரில் கட்டிப்போட்டனர்.

    இதனால் குழந்தைகள் காலையிலேயே கையில் ஒரு செல்போன் அல்லது கம்ப்யூட்டரை மட்டுமே பார்த்தபடி தன்னந்தனியாக இருட்டு அறைக்குள் முடக்கப்பட்டார்கள். வீடுகளிலேயே இருந்ததால் எப்போதும் நொறுக்குத்தீனிகள் மற்றும் கேட்ட உணவுகளையும் பெற்றோர்கள் வாங்கிக் கொடுத்து அவர்களை கவனித்துக்கொண்டார்கள். இதனால் உடலுக்கு எந்த விதமான பயிற்சியும் இல்லாமல் பூசணிக்காய் போல் உடல் பருத்துப்போனது.

    சில குழந்தைகள் 10 கிலோ வரை உடல் எடை அதிகரித்து இருப்பதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள். படிக்கட்டு ஏறினால் மூட்டு வலிக்கிறது என்று பல குழந்தைகள் மருத்துவர்களிடம் சொல்கிறார்கள். அந்த குழந்தைகளை பரிசோதித்த டாக்டர்கள் அவர்களின் வாழ்க்கை முறை மாற்றம் தான் எல்லா பிரச்சினைகளுக்கும் காரணம் என்கிறார்கள்.

    வழக்கமாக குழந்தைகள் பள்ளி செல்லும்போதும், வெளியே விளையாடும் போதும் உடலில் சூரிய வெளிச்சம் படுவதால் வைட்டமின்-டி சத்து கிடைக்கும். ஆனால் இப்போது பல குழந்தைகளுக்கு இந்த சத்து மிகவும் குறைந்துள்ளது.

    எப்போதும் செல்போன், கம்ப்யூட்டர் திரைகளையே பார்த்துக்கொண்டு இருந்ததால் கண்கோளாறுகள் ஏற்பட்டுள்ளன. தலைவலி, சரியான தூக்கமின்மை ஆகியவற்றால் சிரமப்படுகிறார்கள்.

    மேலும் இந்த முறையற்ற நேரங்களில் சாப்பிடுவது, தூக்கமின்மை போன்றவற்றால் மலச்சிக்கல் ஏற்பட்டு குடல் பிரச்சினைக்கு ஆளாகின்றனர். மன உளைச்சல் காரணமாக அவர்களுடைய தனி திறமைகளும் மழுங்கிப் போயுள்ளன. விளையாட்டு, உடல்பயிற்சி இல்லாததால் சுவாசக் கோளாறுகளும் ஏற்பட்டுள்ளன.

    சென்னையில் உள்ள முன்னணி குழந்தைகள் மருத்துவமனைகளில் ஏராளமான குழந்தைகள் இந்த மாதிரி கோளாறுகளால் சிகிச்சை பெற்றுள்ளார்கள். எனவே குழந்தைகள் பராமரிப்பில் பெற்றோர்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

    இப்படிப்பட்ட நெருக்கடிக்குள் இருக்கும் குழந்தைகளுக்கு 1-ந்தேதி பள்ளிகள் திறப்பது நல்ல வி‌ஷயம். அதேநேரம் கொரோனா தொற்று ஏற்படாமல் இருக்க முககவசம் அணிதல், சமூக இடைவெளியுடன் அமர்ந்திருத்தல் அடிக்கடி கைகளை கழுவுதல் போன்ற வழிமுறைகளை கடைபிடிக்கவும் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.
    Next Story
    ×