search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    மாணவர்கள் நாளைய பாரதத்தின் தூண்கள்
    X
    மாணவர்கள் நாளைய பாரதத்தின் தூண்கள்

    மாணவர்கள் நாளைய பாரதத்தின் தூண்கள்

    தேசத்தை வலுவாக்க தேசப்பற்றும் அவசியம். எனவே மாணவர்கள் கல்வி அறிவுடன் நாட்டுப்பற்றையும் வளர்த்துக் கொள்ள வேண்டும்.
    இந்தியா, இமயம் முதல் குமரி வரை பரந்து விரிந்திருக்கும் ஒற்றுமை தேசம். நிலம், நீர், மலை, கனிமம் போன்ற வளங்கள் நிரம்பப் பெற்ற நாடு. இன்றைய உலகப் பரப்பளவை அடிப்படையாக வைத்துப் பார்த்தால் இந்தியா ஏழாவது மிகப் பெரிய நாடாக திகழ்கிறது. இத்தகைய தேசத்தில் மக்கள் மதம், இனம், மொழி போன்றவற்றால் வேறுபட்டாலும் ஒற்றுமையுடன் வாழ்ந்து வருகின்றனர். நாட்டு நலனில் மாணவர்களின் பங்களிப்பு மிகுதியாக இருக்க வேண்டும். ஏனெனில் இன்றைய மாணவர்களே நாளைய பாரதத்தின் தூண்களாவார்கள். எனவே மாணவர்கள் மத்தியில் நாட்டுப்பற்று ஊற்றெடுக்க வேண்டும்.

    நாட்டின் வளர்ச்சிக்கு தனிமனித வளர்ச்சி மிகவும் அவசியம். தனிமனித வளர்ச்சிக்கு கல்வி அறிவு மிக முக்கியம். பள்ளி பருவத்தில்தான் கல்வி அறிவினை வளர்த்துக் கொள்ள முடியும். பள்ளிக்கூடங்களில் பெறும் கல்வி அறிவினால் மட்டும் இந்தியாவை வலுவானதாக மாற்ற முடியாது. தேசத்தை வலுவாக்க தேசப்பற்றும் அவசியம். எனவே மாணவர்கள் கல்வி அறிவுடன் நாட்டுப்பற்றையும் வளர்த்துக் கொள்ள வேண்டும். பள்ளி, கல்லூரிகளில் மாணவர்களுக்கு ‘தேசிய மாணவர் படை‘ என்ற அமைப்பின் மூலம் தேசப்பற்றினை ஊட்டுகின்றனர். துப்பாக்கி சுடுதல், தற்காப்பு பயிற்சிகள் போன்ற பல்வேறு பயிற்சிகள் இந்த அமைப்பினால் வழங்கப்படுகின்றன. இந்த அமைப்பின் மூலம் நாட்டின் பாதுகாப்பு நடவடிக்கைகளில் மாணவர்களால் பங்களிப்பு கொடுக்க முடியும்.

    இந்தியாவின் விடுதலை சரித்திரத்தில் இடம் பெற்றுள்ள தேசத்தந்தை மகாத்மா காந்தி, சுபாஷ் சந்திரபோஸ், ஜவகர்லால் நேரு, பகத்சிங், பெருந்தலைவர் காமராஜர், பேரறிஞர் அண்ணா போன்றோர் பள்ளி பருவத்திலே தேசப்பற்றினை வளர்த்துக் கொண்டவர்கள்தாம். இன்னும் பல விடுதலை போராளிகள் பள்ளி பருவத்திலே தேசிய பற்றினால் வார்க்கப்பட்டார்கள். அவர்கள் வழியில் நாமும் பயணம் செய்து நாட்டுக்கு சேவையாற்ற வேண்டும்.

    இந்தியாவை அடிமை பூமியாக மாற்றி ஆண்டுவந்த ஆங்கிலேயரை விடுதலை போராட்ட தியாகிகள் தங்களின் கல்வி அறிவினாலும், நாட்டுப் பற்றினாலும் விரட்டி அடித்தனர். வழக்கறிஞராக திகழ்ந்த காந்தியடிகள் தேசபற்றினால் அன்னியர் ஆட்சியை எதிர்த்து உப்பு சத்தியாகிரகம், உண்ணாவிரத அறப்போர் போன்ற பல போராட்டங்களை நடத்தினார். இந்திய பொருளாதாரத்தை உயர்த்தும் வகையில் அன்னிய பொருட்களை தவிர்த்து இந்திய பொருட்களை வாங்கி உபயோகிக்க அறிவுரை கூறினார்.

    தேசியக்கவி பாரதியார், தித்திக்கும் தேன் தமிழில் விடுதலை முழக்க பாடல்களை எழுதி மக்களிடையே விழிப்புணர்வை ஊட்டினார். சுபாஷ்சந்திரபோஸ், நாட்டுப்பற்று கொண்ட வீரர்களை இணைத்து பெரும்படையை உருவாக்கி ஆங்கிலேயரை எதிர்கொண்டார். இன்னும் ஆயிரம் ஆயிரம் தலைவர்களும், விடுதலை போராளிகளும் நாட்டுப்பற்றினால் தன் உயிரையும் ஈந்து போராடினார்கள். அவர்களின் நாட்டுப்பற்றால்தான் நாம் இன்று சுதந்திர காற்றை சுவாசிக்கிறோம்.

    மாணவர்களாகிய நாமும் நாட்டுப்பற்றினை நமது உயிர்மூச்சாக கருதவேண்டும். பள்ளி பருவத்திலிருந்தே நாம் நாட்டுப்பற்றை வெளிப்படுத்த முடியும். அது எப்படி தெரியுமா?

    கல்வியில் முழு கவனம் செலுத்தி, பிறருக்கு பயன் அளிக்கும் விதத்தில் வாழ வேண்டும். சாதாரண மாணவனாக இல்லாமல் சாதனை மாணவனாக திகழ வேண்டும். பள்ளி பருவத்தில் பாடங்களையும், வீரதீர பயிற்சிகளையும் மேற்கொண்டு இந்தியாவின் வெற்றிக்கு வித்திட வேண்டும்.“இந்திய பாரதம் இளைஞர்கள் கையில்“ என்ற வாசகத்திற்கு உயிர் கொடுத்து உலகில் இந்தியாவின் புகழை உயர்த்த பாடுபட வேண்டும். எல்லைப் பகுதிகளில் நிகழும் அன்னிய அச்சுறுத்தல்களுக்கு தக்க பதிலடி கொடுக்கவும், உலக பொருளாதாரத்திற்கு நிகராக இந்திய பொருளாதார நிலையை பலப்படுத்தி உயர்த்த நாம் என்றும் உறுதி கொள்ள வேண்டும். தேசத்திற்காக பாடுபட்ட தலைவர்களின் வழி செயல்படுவோம் என்று ஒவ்வொருவரும் உறுதிமொழி ஏற்போம்..!
    Next Story
    ×