என் மலர்tooltip icon

    ஆரோக்கியம்

    கோதுமை மாவில் செய்கின்ற சப்பாத்தியை தினமும் இரவு வேளையில் சாப்பிட்டு வந்தால் உடம்பில் சர்க்கரையின் அளவை சீர்செய்யலாம். சரி வாங்க சப்பாத்தியை எப்படி சாஃப்டாக செய்வது குறித்து பார்க்கலாம்.
    தேவையான பொருள்கள்:

    கோதுமை மாவு -1 கப்
    மைதா மாவு -2 ஸ்பூன்
    உப்பு -தேவையான அளவு
    வடித்த கஞ்சி தண்ணீர் -தேவையான அளவு

    செய்முறை:

    ஒரு அகண்ட பாத்திரத்தில் ஒரு கப் கோதுமை மாவு, 2 ஸ்பூன் மைதாவை போட்டு நன்றாக கலந்து கொள்ளவும்.

    சப்பாத்தி சாஃப்டாக இருக்க வேண்டும் என்றால் வடித்த கஞ்சி தண்ணீரை சிறிது சிறிதாக மாவுடன் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ள வேண்டும்.

    தேவைப்பட்டால் சிறிதளவு எண்ணெயை சேர்த்து கொள்ளலாம்.

    பிசைந்த மாவின் மேல் ஈரத்துணியை கொண்டு மூடி 1 மணி நேரம் ஊற வைக்கவும்.

    ஒரு மணி நேரம் கழித்த பிறகு மாவை சப்பாத்திகளாக தேய்த்து வைக்கவும்.

    பின்னர் தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடனாதும் செய்து வைத்த சப்பாத்தியை போட்டு எடுத்தால் சப்பாத்தி ரெடி....

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சிலர் விரல் அழகை கெடுக்கும் நக பாலீஷை நீக்குவதற்கு மெனக்கெடுவார்கள். சில எளிமையான வழிமுறைகளை பயன்படுத்தியே நக பாலீஷை சில நிமிடங்களில் நீக்கிவிடலாம்.
    விரல் நகங்களில் அழகுக்காக பூசப்படும் நக பாலீஷ் சில நாட்களில் பொலிவை இழக்க தொடங்கிவிடும். நகங்களில் இருந்து உதிர்ந்து விழுந்துகொண்டிருக்கும். அதனை பலரும் கண்டுகொள்ள மாட்டார்கள். ஆனால் அவசரமாக வெளியே செல்ல வேண்டியிருந்தால் விரல் அழகை கெடுக்கும் நக பாலீஷை நீக்குவதற்கு மெனக்கெடுவார்கள். சில எளிமையான வழிமுறைகளை பயன்படுத்தியே நக பாலீஷை சில நிமிடங்களில் நீக்கிவிடலாம்.

    பற்பசை: நக பாலீஷை நீக்குவதற்கு பற்பசையை கூட பயன்படுத்தலாம். பொதுவாக பற்பசையில் எத்தில் அசிடேட் கலந்திருக்கும். இது நக பாலீஷை நீக்குவதற்கு பயன்படுத்தப்படும் பொருட்களில் சேர்க்கப்படும் மூலப்பொருளாகும். பல் துலக்கப்பயன்படுத்தப்பட்ட பழைய பிரஷில் சிறிதளவு பற்பசையை தடவி நகங்களில் படர்ந்திருக்கும் நக பாலீஷ் மீது தேய்க்க வேண்டும். இரண்டு, மூன்று முறை நன்றாக அழுத்தி தேய்த்தால் நக பாலீஷ் உதிர்ந்து வந்துவிடும். நகமும் பிரகாசத்துடன் காட்சியளிக்கும்.

    வாசனை திரவியம்: நக பாலீஷை நீக்குவதற்கு வாசனை திரவியத்தையும் உபயோகிக்கலாம். டிஸ்யூ பேப்பரில் சில துளிகள் வாசனை திரவியங்களை தெளித்துவிட்டு அது ஆவியாகும் முன்பு நகங்களில் நன்றாக அழுத்தி தேய்க்க வேண் டும். ஓரிரு முறை அவ்வாறு தேய்த்தால் நக பாலீஷ் நீங்கிவிடும்.

    ஹேர் ஸ்பிரே: பெரும் பாலான ஸ்பிரேக்களில் ஆல்கஹால் சேர்க்கப்பட்டிருக்கிறது. அது நக பாலீஷை நீர்த்துபோக செய்ய உதவும். நகங்களில் சிறிதளவு ஸ்பிரே தெளித்து காட்டன் பஞ்சு அல்லது டிஸ்யூ பேப்பரை கொண்டு அழுத்தி தேய்க்க வேண் டும். நகங்களில் தெளிக்கும் ஸ்பிரே ஆவி ஆவதற்கு முன்பு ஓரிருமுறை தேய்த்துவிட்டால் போதும். நக பாலீஷ் நீங்கிவிடும்.

    சானிடைசர்: கொரோனா வைரஸ் தொற்றுவிடம் இருந்து தற்காத்துக்கொள்வதற்கு கைகளில் உபயோகப்படுத்தும் சானிடைசரையும் பயன்படுத்தலாம். காட்டன் பஞ்சுவில் சிறிதளவு சானிடைசரை ஒற்றி எடுத்து நக பாலீஷ் மீது அழுத்தி தேய்க்க வேண்டும். இரண்டு, மூன்று முறை அவ்வாறு செய்தால் நக பாலீஷ் நீங்கிவிடும்.
    நாம் வாழும் இடத்தின் தட்ப வெப்பநிலை, நமது உழைப்பு, நமது மனநிலை போன்றவைகளுக்கு ஏற்ப நமது உடலின் தேவைகள் மாறுபடும். அதற்கு ஏற்றார்போல் நமது உணவும் இருக்கவேண்டும்.
    உணவும், உணர்வும் உண்மையிலேயே மலரும், மணமும் போல பிணைந்துள்ளன. எதை நாம் உணவாக உண்கிறோமோ அதுவே நாமாக மாறிவிடுகிறது. மனிதனின் உணர்வுகளை குணம் என்று சொல்கிறோம். அதனை சாந்தகுணம், ரஜஸ்குணம் தாமசகுணம் என்று மூன்று வகையாகப் பிரிக்கலாம். இனிய, சுவை மிகுந்த, உடலுக்கு வலிமை தரும் நல்ல உணவு வகைகள் மேன்மையான சாந்த குணத்தை வளர்க்கும். இந்த வகை உணவுகளை உண்பவர்கள் அதிகம் பதற்றமடையமாட்டார்கள். எதிலும் நிதானமான போக்கை கடைப் பிடிப்பார்கள். சிந்தனையும், செயலும் வளமாக இருக்கும்.

    அதிக காரம், அதிக உப்பு, அதிக புளிப்பு, கசப்பு, அதிக சூடு நிறைந்த உணவுகள் ரஜஸ் குணத்தை வளர்க்கும். இத்தகைய உணவுகளை தொடர்ந்து சாப்பிடும் வழக்கம்கொண்டவர்கள் பெரும்பாலும் வேகம் கொண்டவர்களாக இருப்பார்கள். ஆழ்ந்து சிந்திக்காமல் அவசரமாக முடிவெடுப்பது, பிடிவாதம் பிடிப்பது, விட்டுக்கொடுக்காத தன்மையுடன் வாழ்வது போன்ற குணங்கள் அவர்களிடம் இருக்கலாம். அதன் மூலம் ரத்தக்கொதிப்பு, சர்க்கரைநோய், வயிற்றுப்புண், மன உளைச்சல் போன்ற பல வியாதிகள் வருவதற்கு வாய்ப்புள்ளது.

    பழைய உணவு, சுவை இழந்த உணவு, பலமணிநேரம் ஆன உணவு வகைகளை உண்பதால் மந்த புத்தியாகும் சூழ்நிலை உள்ளது. இது தாமச குணமாக குறிப்பிடப்படுகிறது. இவர்கள் சுறுசுறுப்பின்றி, மனச்சுமை, மன அழுத்தத்தால் வாழும் நிலை ஏற்படலாம்.

    உணவு, நாம் உயிர் வாழ்வதற்கு மிகவும் அவசியமானது. நாம் உண்ணும் உணவுகள் கார்போஹைட்ரேட், கொழுப்பு, புரதம், உயிர் சத்துக்கள், தாதுக்கள் போன்ற முக்கியமான சத்துக்கள் நிறைந்ததாக இருக்கவேண்டும். நாம் வாழும் இடத்தின் தட்ப வெப்பநிலை, நமது உழைப்பு, நமது மனநிலை போன்றவைகளுக்கு ஏற்ப நமது உடலின் தேவைகள் மாறுபடும். அதற்கு ஏற்றார்போல் நமது உணவும் இருக்கவேண்டும்.

    இன்றைய பரபரப்பான வாழ்க்கையில் சாப்பிடக்கூட நேரமில்லாமல் ஓடிக்கொண்டிருக்கிறோம். ஆனால் உடலில் சக்திக்கு, செல்களின் வளர்ச்சிக்கு, உறுப்புகளின் ஆரோக்கியமான செயல்பாட்டிற்கு சமச்சீரான சத்துணவு தேவை. அவைகளை நாம் கவனமாக தேர்ந்தெடுக்கவேண்டும். தாது உப்புக்கள் அதிகம் உள்ள இளம் கீரைகள், புதிதாய் பறித்த இளம் காய்கறிகள், பழங்கள் போன்றவை முதல் தரமான உணவுகளாகும். புரத பொருட்கள், கொழுப்புள்ள உணவு, கிழங்குகள், பருப்புகள் ஆகியவை இரண்டாம் நிலை உணவுகள். இவை இரண்டுமே நமக்கு தேவை. ஆனால் அவரவர் உடலுக்கும், உழைப்பிற்கும் தகுந்தபடி அவைகளை உட்கொண்டால் நோயின்றி வாழ வாய்ப்பிருக்கிறது.

    இதயநோயும், சர்க்கரை நோயும் இப்போது பெரும்பாலானவர்களை தாக்குகிறது. பதினெட்டு வயதுடைய பையனுக்கு மாரடைப்பு ஏற்பட்டது என்ற சமீபத்திய செய்தி அனைவருக்கும் அதிர்ச்சியை அளித்துள்ளது. அதே நேரத்தில் மேற்கண்ட இரு நோய்களையும் வரும்முன்னே தடுக்கலாம். அதற்கு வாழ்க்கை முறை, சீரான எண்ணங்கள், பக்குவமான மனது, ஆரோக்கியமான உணவு போன்றவை அவசியம்.

    அதிக எரிசக்தி (கலோரி) தரும் உணவு வகைகளை அடியோடு தவிர்க்கவேண்டும். ரத்தக்கொதிப்பு இருக்குமேயானால் உப்பு அதிகம் உள்ள உணவு வகைகளான ஊறுகாய், அப்பளம், கெட்சப், பொரித்த குறுந்தீனி வகைகள், பீட்சா, பர்க்கர் போன்ற வகைகளையும், தயார் நிலையில் உள்ள துரித உணவுகளான நூடுல்ஸ், உப்பு பிஸ்கெட் போன்றவற்றையும் அறவே நிறுத்த வேண்டும். பச்சை காய்கறிகளாலான சாலட், பழங்கள் எடுத்துக்கொள்ளலாம்.

    இதய நோயை தடுக்க ரூமாலி ரோட்டி, நான், துரித உணவுகள், சிப்ஸ் வகைகள், பாலாடை கட்டி, கோவா, கிரீம், முட்டை மஞ்சள் கரு, பதப்படுத்தப்பட்ட எண்ணெய் வகைகள், சுவீட்ஸ், சாக்லேட், ஐஸ்கிரீம், கேக், பேக்கரி உணவுகள், இறைச்சி, இறால்மீன் போன்றவற்றை தவிர்க்கவேண்டும். கோதுமை, அரிசி, கேப்பை, கம்பு, சோளம், முளைகட்டிய பயறு, கீரை, கொழுப்பு நீக்கிய பால், முட்டை வெள்ளை கரு, பப்பாளி, பூண்டு, தக்காளி, சால்மன் மீன்கள் முதலியவைகளை எடுத்துக்கொள்ளலாம். சீரான உடற்பயிற்சி செய்யவேண்டும். புகைப்பிடித்தல், மது அருந்துதல் போன்றவற்றை அறவே நீக்கவேண்டும்.

    பொதுவாகவே வெள்ளை நிறத்திலான உணவு வகைகளை தவிர்ப்பது நல்லது. பல வண்ணங்களை கொண்ட இயற்கை உணவை சாப்பிட வேண்டும். சோயா பீன்ஸில் உள்ள ‘லெசித்தின்’ (LECITHIN) என்ற வேதிப்பொருள் இதயத்தை காக்கும். இது கெட்ட கொழுப்பை குறைக்கும். இந்த வேதிப்பொருள் புரோக்கோலி, முளைகட்டிய பயறு, சோயாபீன்ஸ், அவரை, பருப்பு வகைகளில் அதிகமாக இருக்கிறது. பழங்கள், குருதி நெல்லி, வேர்கடலை போன்றவற்றில் இருக்கும் ப்ளாவினாய்ட்ஸ் (FLAVENOIDS) இதயத்தின் தசை செல்களுக்கு நன்மைபயக்கும்.

    திராட்சை பழத்தின் விதைகள், அதன் தோல், பெர்ரி பழங்கள், வேர்கடலை போன்றவற்றில் “ரெஸ்விட்ரால்” (RESVETROL) என்ற வேதிப்பொருள் உள்ளது. இது ரத்த கொதிப்பை குறைக்கும், கொழுப்பை கட்டுப்படுத்தும். மூட்டு வலியை குறைக்கும், மூளைக்கு நல்லது. சர்க்கரை நோயாளிகளுக்கும் ஏற்றது. சால்மன் மீன்கள், சூரை மீன்களில் இருக்கும் ஒமேகா 3 பேட்டி ஆசிட் இதயத்தையும், மூளையையும் பாதுகாக்கும்.

    நமது மூளைக்கும், குடலுக்கும் தொடர்பு இருக்கிறது. “செர்ரோடினின்” என்ற வேதிப்பொருள் ஜீரண மண்டலத்தில் அதிகம் இருக்கின்றது. இது நரம்பு மண்டல செல்களில் உற்பத்தியாகும். இதன் அளவு குறைந்தால், மனக்கவலை, மனச்சோர்வு, ஞாபகமறதி, ஜீரணகோளாறு, தனிமைப்படுதல், தூக்கமின்மை, மறதி, மோகம் அதிகரித்தல் போன்ற மூளை மற்றும் உணர்வு சம்பந்தப்பட்ட நோய்கள் உண்டாகும். முட்டை, பாலாடை, அன்னாசிபழம், சால்மன் மீன், கடலை வகைகள், விதைகள், டோஃபு (TOFU) என்று சொல்லப்படுகின்ற சோயாதயிர் போன்றவற்றில் செர்ரோடினின் மூலக்கூறான டிரிப்டோபேன் (TRYPTOPHAN) அதிகம் உள்ளது. இந்த உணவு வகைகளை சாப்பிட்டால் மூளை சுறுசுறுப்பாக வேலைசெய்யும். நம் உணர்வுகளும் சரியாக இருக்கும்.

    ‘காரம், வேகம், சோகம்’ ஆகிய மூன்றையும் தவிர்த்தாலே நம் உடலும், உள்ளமும், உணர்வும் ஆரோக்கியமாகிவிடும். பகவத் கீதையும் ‘யாரொருவர் தன்னுடைய உணவு பழக்கத்தையும், தன்னுடைய வேலைகளையும் முறைப் படுத்திக் கொள்கிறாரோ அவருக்கு மனதாலும், உணர்வாலும் துன்பம் வராது. யோகநிலையை அடைவார்’ என்கிறது.

    மனதை மயக்கும் மதுவை தவிர்த்து, உடலைக் கெடுக்கும் புகையை ஒழித்து மனதிற்கும், உடலிற்கும் நன்மை தரும் உணவை உண்டு நலமுடன் வாழ்வோமாக!!

    கட்டுரை: பேராசிரியர் டாக்டர்.சர்.இரா.இராமகிருஷ்ணன்,

    இதயநோய் நிபுணர், சென்னை.

    உலக புற்று நோய் தினம் ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி 4-ந் தேதி அனுசரிக்கப்படுகிறது. புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த மருத்துவ உலகில் மிக முக்கியமான தினமாக இது பார்க்கப்படுகிறது.
    செல்வந்த நாடுகளின் நோய் என்று ஒரு காலத்தில் கருதப்பட்டு வந்த புற்றுநோய் இன்று உலகில் அனைத்து நாடுகளையும் மிக மோசமாக ஆக்கிரமிக்க தொடங்கியுள்ளது. 2012-ல் எடுக்கப்பட்ட புள்ளி விவரத்தின்படி உலகெங்கும் 1 கோடியே 41 லட்சம் பேர் புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். 82 லட்சம் பேர் புற்று நோயால் மரணமடைகின்றனர்.

    விழிப்புணர்வு

    உலக புற்று நோய் தினம் ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி 4-ந் தேதி அனுசரிக்கப்படுகிறது. புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த மருத்துவ உலகில் மிக முக்கியமான தினமாக இது பார்க்கப்படுகிறது. நோய் பற்றிய முழு தகவல்களையும் தருவது, புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவது ஆகியவை இத்தினத்தின் நோக்கமாகும். இதனை உலக புற்று நோய் கட்டுப்படுத்துதல் கூட்டமைப்பு முன்னின்று நடத்துகிறது. இந்த புற்று நோய் தினமானது 1933-ம் ஆண்டு ஜெனிவா நகரில் உலக புற்று நோய் மையத்தின் மூலமாக ஏற்படுத்தப்பட்டது.

    கட்டுப்பாடற்று செல்கள் பிரிவது

    புற்றுநோய் என்பது கட்டுப்பாடற்று செல்கள் பிரிந்து பெருகுவதால் ஏற்படும் நோய் ஆகும். இந்த செல்கள் பிரிந்து பரவி ஏனைய தசைகளையும் தாக்குகின்றன. முதிர்ச்சியடைந்த நிலையில் இந்த புற்றுசெல்கள் ரத்தத்தின் வழியாக பரவுகின்றன. புற்று நோய் எந்த வயதினரையும் தாக்கும். எனினும் வயது கூடக்கூட புற்றுநோய் தாக்கும் வாய்ப்பும் அதிகரிக்கிறது.

    மரபுகளில் ஏற்படும் மாற்றங்கள்

    செல்களின் வளர்ச்சி மற்றும் இறப்பினை கட்டுப்படுத்தும் மரபுகளில் ஏற்படும் மாற்றத்தால் புற்றுநோய் ஏற்படுகிறது. புகைப்பழக்கம், சில உணவுகள், சூரியனிலிருந்து வெளிப்படும் புற ஊதாக்கதிர்கள், புற்றுநோய் ஏற்படும் வாய்ப்புள்ள பணியில் ஈடுபடுதல், எச்.ஐ.வி நோய் தொற்று போன்ற காரணங்களாலும், பெற்றோரிடமிருந்து பிள்ளைகளுக்கும் இந்நோய் வரலாம்.

    அறிகுறிகள்

    உடலில் உள்ள உறுப்புகளில் ஒருவித தடிப்பு மற்றும் வீக்கம், உடலில் உள்ள மச்சத்தில் ஏற்படும் மாற்றங்கள், ஆறாத புண்கள், தொடர் இருமல் மற்றும் கரகரப்பான கம்மிய குரல், தொடர்ந்து அஜீரணம் மற்றும் உணவை விழுங்குவதில் பிரச்சினை ஏற்படுதல், உடல் எடையில் மாற்றம், இயல்புக்கு மாறான ரத்தப்போக்கு, ரத்தக்கசிவு மற்றும் நோயின் தன்மைக்கேற்ப இதன் அறிகுறிகள் மாற்றமடையலாம்.

    தடுக்கப்படக் கூடியவை

    சரியான விழிப்புணர்வு மற்றும் தெளிவான திட்டமிடல் இருந்தால் புற்றுநோயிலிருந்து மக்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள முடியும். புற்றுநோய்களில் 30 சதவீதத்துக்கும் மேற்பட்டவை சாதாரண நடவடிக்கைகள் மூலம் தடுக்கப்படக் கூடியவையாகவே உள்ளன. புகைபிடிப்பதை தவிர்த்தல், ஆரோக்கியமான உணவு, உடற்பயிற்சி, மதுப்பழக்கம், போதைப் பொருட்களை தவிர்த்தல் போன்ற அடிப்படை செயல்கள் மூலம் இந்நோய் ஏற்படுவதை தடுக்கலாம்.

    மீண்டும் பழைய தோற்றத்தைப் பெறலாம்

    தற்போது தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய நவீன சிகிச்சை முறைகள் உள்ளதால் நோயாளிகளை முன்பை விட அதிகமாக குணப்படுத்த முடியுமென டாக்டர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். மேலும் சிகிச்சையின்போது ஏற்படக்கூடிய உருவ மாற்றம், தலைமுடி கொட்டுதல், உடல் இளைத்தல் ஆகிய அனைத்தும் தற்காலிகமானவையாகும். குறுகிய காலத்தில் அவர் மீண்டும் பழைய தோற்றத்தை பெற முடியும். எனவே சமூகத்திற்கு பயந்து சிகிச்சைகள் ஆரம்பிப்பதை காலம் தாழ்த்தவோ, தவிர்ப்பதோ கூடாது என புற்றுநோய் நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்.

    மார்பக புற்றுநோய்

    பெண்களுக்கு மார்பக புற்றுநோயும், கர்ப்பப்பை புற்றுநோயுமே பெரிய அச்சுறுத்தலாக உள்ளன. 2030-ம் ஆண்டளவில் வருடத்திற்கு 4 லட்சத்து 30 ஆயிரம் பேர் கர்ப்பப்பை புற்றுநோயினால் உயிரிழக்கலாம் என உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. தற்போது புற்றுநோயை கண்டறிய எம்.ஆர்.ஐ. ஸ்கேன், பெட் ஸ்கேன், எலும்பு ஸ்கேன், மொமோகிராம், சி.டி. ஸ்கேன் போன்றவை உதவியாக உள்ளன. புற்று நோய் ஒரு உறுப்பை பாதித்துவிட்டால், அந்த உறுப்பை அகற்றாமல் நோயை குணப்படுத்துவதே நவீன மருத்துவத்தின் இலக்காகும்.

    புற்றுநோயால் பாதிக்கப்பட்டோரில் பாதிக்கும் மேற்பட்டோர் நோய் முற்றிய நிலையிலேயே தமக்கு புற்றுநோய் இருப்பதை தெரிந்து கொள்கின்றனர். எனவே இதில் மக்கள் கவனம் செலுத்தி தங்களுக்கு ஏற்படும் நோயில் வித்தியாசமான அறிகுறிகள் தென்பட்டால் காலதாமதம் செய்யாமல் உடனடியாக மருத்துவமனையை நாடவேண்டும்.

    உலகப் பிரச்சினை

    புற்றுநோய் என்பது சுகாதாரத்துடன் மட்டும் தொடர்புடையது அல்ல. ஒரு சமூகத்தின், ஒரு நாட்டின் அபிவிருத்தியில், மனித உரிமைகளில் என அனைத்திலும் தாக்கம் செலுத்துகிறது. அது உலக பிரச்சினை. இது அனைத்து வயதினரையும் அனைத்து, சமூக பிரிவுகளையும், அனைத்து நாடுகளையும் தாக்குகிறது.

    புற்றுநோயை மரண தண்டனையாக சிலர் நினைக்கின்றனர். ஆனால் அதனை முடிந்தளவு குணப்படுத்த முடியும். மூன்றாம் கட்டத்தை கடந்த பின்னர் கூட குணப்படுத்த முடியும் என்கிறது நவீன மருத்துவ சிகிச்சைகள். போதுமான அறிவையும், விழிப்புணர்வையும் வளர்த்துக்கொண்டால் உலகில் புற்றுநோயை 30% வீதம் தடுத்துவிட முடியும் என்பது தான் உண்மை.

    ஆரோக்கியமாக வாழ பழகுவோம்

    இவற்றை கருத்தில் கொண்டு புற்றுநோய் ஆரம்ப அறிகுறிகள் இருப்பதாக சந்தேகம் எழுந்தால், எவ்வித அச்சமுமின்றி டாக்டர்களை நாடி சந்தேகங்களை தெளிவுபடுத்திக்கொள்ள வேண்டும். மேலும் ஆரோக்கியமாக வாழ்வதையும் வாழ்நாள் பழக்கமாக்கி கொள்ள வேண்டும்.
    தங்க நகைகளை போல் வைர நகைகளை அலட்சியமாக வைத்துவிட முடியாது. அதற்கென்று தனி பராமரிப்பு முறை இருக்கிறது. வைர நகைகளை தினசரி உபயோகத்துக்கு பயன்படுத்தக் கூடாது.
    ஒரு காலத்தில் தங்க நகை கூட நடுத்தர மக்களுக்கு எட்டாத நிலையில் இருந்தது. இன்று பலரும் வைர நகைகளை தங்கள் வீடுகளில் வைத்திருக்கிறார்கள். தங்க நகைகளை போல் வைர நகைகளை அலட்சியமாக வைத்துவிட முடியாது. அதற்கென்று தனி பராமரிப்பு முறை இருக்கிறது. வைர நகைகளை தினசரி உபயோகத்துக்கு பயன்படுத்தக் கூடாது. வீட்டில் அதை போட்டுக்கொண்டு சமைப்பது, துவைப்பது, சுத்தம் செய்வது, பாத்திரம் கழுவுவது போன்றவை செய்யக்கூடாது.

    வீட்டில் குளிக்கும் போதும் சரி, சுற்றுலா செல்லும் போது, கடல் மற்றும் நீச்சல் குளங்களில் குளிக்கும் போதும் கண்டிப்பாக வைரம் அணியக்கூடாது. நீச்சல் குளத்தில் உள்ள குளோரின் தண்ணீரும், கடலில் உள்ள உப்புநீரும் வைரத்துக்கு ஆகாதது.

    எல்லாவிதமான அலங்காரங்களும் அழகுசாதனங்களும் பயன்படுத்தப்பட்ட பின் கடைசியாகத்தான் வைர நகைகளை அணிந்து கொள்ளவேண்டும். அழகு சாதனங்களில் இருக்கும் ரசாயனங்கள் வைரத்தின் மீது பட்டால் வைரம் கருத்துவிடு்ம். இப்படி கருத்த நகைகளை சுத்தம் செய்ய சாக் பவுடரை பஞ்சால் தேய்த்து அழுத்தி துடைத்தெடுத்தால் வைரம் பழைய பளபளப்பு பெற்றுவிடும்.

    விழாக்கள் முடிந்து வீடு வந்ததும் வைர நகைகளை கழற்றி வைத்துவிட வேண்டும். அதற்கு முன் கழற்றிய நகையை ஒரு பாத்திரத்தில் நல்ல தண்ணீரை வைத்து அதற்குள் நகையை மூழ்குமாறு அமிழ்த்தி வைத்துவிட வேண்டும். சில நிமிடங்கள் கழித்து நகையை வெளியே எடுத்து மென்மையான பருத்தி துணியால் துடைத்து, காய்ந்த பின் உள்ளே வைக்க வேண்டும்.

    வைர நகைகளை சுத்தம் செய்ய இளம் சூடான நீரில் முக்கி எடுத்து பழைய பல் துலக்கும் பிரஷ்சால், சோப்பை தொட்டு லேசாக தேய்த்து, பிறகு தண்ணீரில் சுத்தமாக அலசி துடைத்து வைக்கலாம். வைரக்கற்களில் நேரடியாக கை படக்கூடாது. தங்கம் இருக்கும் பகுதியை பிடித்துக்கொண்டே சுத்தம் செய்யவேண்டும். வைர நகைகளை குளியலறையிலோ, தோட்டத்திலோ வைத்து சுத்தம் செய்யக்கூடாது. வைரக்கல் ஏதாவது உதிர்ந்து விழுந்தால் கண்டுபிடிக்க முடியாது. வீட்டினுள் ஏதாவது ஒரு பாத்திரத்தில் வைர நகைகளை வைத்து சுத்தம் செய்ய வேண்டும். சுத்தம் செய்த பிறகு கற்கள் எல்லாம் சரியாக இருக்கிறதா என்று பாருங்கள். அதன்பின்னே கழுவிய தண்ணீரை கீழே ஊற்றுங்கள்.

    வங்கி லாக்கரில் வைர நகைகளை சும்மா வைத்திருந்தால் கூட நாளடைவில் அது கருத்துவிடும். அதற்காக பிரத்யேகமாக செய்யப்பட்ட பெட்டிகளில் வைத்து, அதிலும் மென்மையான வெல்வெட் துணியால் சுற்றி வைப்பதுதான் கருகாமல் இருக்க வழி. தங்க நகைகளுடன் சேர்த்து வைர நகைகளை வைக்கக்கூடாது. தனித்தனி அறை கொண்ட ஜிப் வைத்த நகைப்பை கிடைக்கிறது. அதில் வைத்துக்கொள்ளலாம்.
    ஒரு பெண் தன் கோபத்தை பணியிடத்தில் காட்டும் போது அது தன்னை தற்காத்து கொள்வதற்கும் தன்மானத்தை உயர்த்திக் பிடிப்பதற்காகவும் இருந்தால் அதில் தவறில்லை.
    கோபம் கொள்வது தவறில்லை. ஆனால் சரியான இடம் பார்த்து சரியான நபரிடம் சரியான காரணத்துக்காக சரியான அளவுக்கு கோபத்தை காட்ட வேண்டும் என்பர் அரிஸ்டாட்டில். நம் கட்டுப்பாட்டை மீறிய கோபத்தை விட நமது கட்டுக்குள் கோபத்தை வைத்து சீறுவது சரியான அணுகுமுறையாக இருக்கும். சீறினால் தான் பாம்பு இல்லாவிட்டால் அது புழு.

    பெண்களுக்கு பணியிடங்களில் பல்வேறு சந்தர்ப்பங்கள் கோபத்தை தூண்டுகின்றன. ஆண்களின் வெறித்தனமான பார்வைகள், சீண்டல்கள் தொடுதல்கள், அவசியமில்லாத கைகுலுக்கல்கள், பெண் என்று இளக்காரமாக பேசுவது, எப்போதும் குறை கூறுவது என ஆண்களின் அத்தனை அட்டூழியங்களையும் சகித்து கொண்டு ஒரு பெண்ணால் எப்படி கோபப்படாமல் இருக்க முடியும்?

    பெண்களை சகோதரிகளாகவும், நல்ல தோழியராகவும் மதிக்கும் ஆண்களிடம் அவளுக்கு கோபம் வருவதில்லை. குழந்தைகள், நாய், பூனை போன்ற செல்லப்பிராணிகள் சக பெண்களிடம் அவள் மாறாத அன்பு கொண்டவளாகத்தான் இருக்கிறாள். வீட்டு வேலையும் பணிச்சுமையும் பெண்கள் பொறுமையிழக்க காரணமாக இருந்தாலும் அடிமனத்தில் தன்னை ஒரு போகப்பொருளாகவும், இரண்டாம் தர நபராகவும், திறன் அற்றவளாகவும் ஒருவர் எடை போடும் போது அதை பெண்ணால் பொறுத்து கொள்ளவே முடிவதில்லை. பணியிடத்தில் கோபம் என்பது திமிர் பிடித்தவள் என்ற பட்டத்தையும் வாங்கி கொடுக்கும்.

    ஒரு பெண் தன் கோபத்தை பணியிடத்தில் காட்டும் போது அது தன்னை தற்காத்து கொள்வதற்கும் தன்மானத்தை உயர்த்திக் பிடிப்பதற்காகவும் இருந்தால்  அதில் தவறில்லை. சில நேரங்களில் பெண்கள் பொறாமையால் ஆட்டிப்படைக்கப்படுவார்கள். அப்போது வரும் கோபம் அவர்களது உடல் நலம், மனநலம் இரண்டையும் பாதித்து விடும்.

    நியாயமான கோபத்தை வெளிப்படுத்தாமல் உள்ளுகுள்ளேயே புதைத்து வைப்பதாலேயும் நமக்கு அதிக தீங்குகள் ஏற்படுகின்றன. அப்படி யென்றால் என் தான் செய்வது? நமது கோபத்தை சரியான வகையில் கையாள்வது தான் நன்மை தரும் ஒரேதீர்வு.

    கோபத்தின் மோசமான விளைவுகளை தவிர்க்க டிப்ஸ்

    * பேசுவதற்கு முன் யோசியுங்கள்.

    * கோபத்தை உடனே வெளிப்படுத்தாதீர்கள். சிறிது நேரம் அமைதியாக இருந்து பாருங்கள்.

    * உங்களை கோபப்படுத்தியவ்றறில் கவனம் செலுத்துவதற்கு பதிலாக சிக்கலை தீர்ப்பதில் மூளையை செலுத்துங்கள்.

    * உங்கள் ஆதங்கத்தை பிரச்சனைக்கு சம்பந்தம் இல்லாத ஒரு நண்பரிடம் கொட்டி தீர்த்து கொள்ளுங்கள்.

    * ஆழ்ந்த சுவாசம் போன்ற தளர்வு நுட்பங்களை பயிற்சி செய்யுங்கள்.

    * எந்த ஒரு கோபத்திலும் நியாயம் இருக்க வேண்டும் என்பதே நியதி.

    திருமண நிச்சயதார்த்தம் நடந்துவிட்டால், அடுத்து திருமணத்திற்கு மூன்றில் இருந்து ஆறு மாதங்கள் வரை இடைவேளை கிடைக்கிறது. அந்த காலகட்டத்தை அவர்கள் முழுமையாக உடலை பராமரிக்க ஒதுக்கிக்கொள்ளவேண்டும்.
    நன்றாக சாப்பிடுவது, ஓய்வு என்ற பெயரில் அதிக நேரம் தூங்குவது, வேலை என்று வந்துவிட்டால் ஓய்வே எடுக்காமல் கடுமையாக உழைப்பது போன்றவை இளம்பெண்களின் வழக்கமாகிக்கொண்டிருக்கிறது. அதனால் அவர்கள் பெரும்பாலும் தங்கள் உடல் பராமரிப்பு பற்றி நினைத்துப்பார்ப்பதே இல்லை. ஆனால் திருமணம் நிச்சயமாகும்போது அவர்களுக்கு தங்கள் உடலை பற்றிய ஆர்வம் அதிகமாக வந்துவிடுகிறது. அப்போது அவர்கள் உடல் எடை அதிகமாக இருந்தால் ரொம்பவே கவலைப்படுகிறார்கள். ஜிம் எங்கே இருக்கிறது என்று தேடிப்போகிறார்கள். உணவுக் கட்டுப்பாட்டு நிபுணர்களை நாடிச் செல்கிறார்கள். நேரத்திற்கு தூங்கவும், உடலை பராமரிக்கவும் திடீர் அக்கறை செலுத்துகிறார்கள்.

    திருமண நிச்சயதார்த்தம் நடந்துவிட்டால், அடுத்து திருமணத்திற்கு மூன்றில் இருந்து ஆறு மாதங்கள் வரை இடைவேளை கிடைக்கிறது. அந்த காலகட்டத்தை அவர்கள் முழுமையாக உடலை பராமரிக்க ஒதுக்கிக்கொள்ளவேண்டும். முதலில் உணவுக் கட்டுப்பாட்டை மேற்கொள்ளவேண்டும். அதற்காக பட்டினி கிடந்துவிடக்கூடாது. உடல் எடையை குறைப்பதற்காக பட்டினி கிடந்தவர்களின் உடல் பல்வேறு மோசமான பின்விளைவுகளை சந்தித்திருக்கிறது. பட்டினி கிடந்தால் தசை நெகிழ்ந்து, சருமமும் சுருங்கிவிடும். அதனால் முறையான உணவுக் கட்டுப்பாட்டோடு உடலுக்கு தேவையான சரியான உடற்பயிற்சியையும் மேற்கொள்ளவேண்டும்.

    திருமணத்திற்கு தயாராகும் இளம்பெண்கள் ஸ்டிரன்த்தனிங் டிரைனிங், கார்டியோ எக்ஸசைஸ் ஆகிய இருவகை பயிற்சிகளை பெறவேண்டும். ஸ்டிரன்த்தனிங் என்பது தசைகளை வலுப்படுத்துவதற்கான பயிற்சியாகும். கார்டியோ பயிற்சி என்பது உடலில் இருக்கும் கொழுப்புகளை கரைப்பதற்கானதாகும். ட்ரெட் மில், சைக்கிளிங், ஓடுதல், நடனமாடுதல், ஏரோபிக்ஸ் செய்தல் போன்றவை கார்டியோ வகை பயிற்சிகள். உடற்பயிற்சி நிபுணர் ஒருவரின் ஆலோசனையோடு தினமும் இதனை செய்துவந்தால் உடலில் இருக்கும் கொழுப்பு குறைந்து, கட்டுடல் உருவாகும். உடலின் தேவைக்கு தக்கபடி இருவகை பயிற்சிகளையும் பெண்கள் தொடர்ந்து செய்துவரவேண்டும்.

    சில நாட்கள் இந்த பயிற்சியை பெற்றதும் பெண்களுக்குள் சோம்பேறித்தனம் எட்டிப்பார்க்கும். ‘இன்று வேண்டாம் நாளை உடற்பயிற்சி செய்துகொள்ளலாம்’ என்ற எண்ணம் தோன்றும். அதை எல்லாம் ஓரங்கட்டிவிட்டு அன்றாடம் பயிற்சி செய்தால் எடை குறைவதோடு, உடலும் கட்டுக்கோப்பாக மாறும்.

    ஜிம்முக்கு போய் உடற்பயிற்சியை மேற்கொள்ள வாய்ப்பில்லாதவர்கள் ட்ரெட் மில், சைக்கிளிங் போன்றவைகளுக்குரிய கருவிகளை வாங்கி வீட்டிலேவைத்து பயிற்சி மேற்கொள்ளலாம். மாடிப்படிகளில் ஏறி இறங்குவது, ஸ்கிப்பிங் போன்றவைகளையும் செய்யலாம்.

    திருமணம் நிச்சயமான பின்பு மணமகனும், மணமகளும் பிசியாகிவிடுவார்கள். அதனால் அவர்கள் ‘காலை முழுவதும் மற்ற வேலைகள் இருக்கிறது. அதனால் எல்லா வேலைகளையும் முடித்துவிட்டு மாலையில் உடற்பயிற்சி செய்துகொள்ளலாம்’ என்று நினைத்து தள்ளிவைத்துவிடக் கூடாது. தள்ளிவைத்து விட்டால் அன்று பயிற்சி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுவிடும். புது மணத்தம்பதிகளுக்கு ஆரோக்கியம் மிக முக்கியம். அதனால் உடற்பயிற்சியை தள்ளிப்போடவேண்டாம். தினமும் அதிகாலையிலே அவர்கள் உடற்பயிற்சியை செய்துமுடித்துவிட வேண்டும். மணப்பெண்ணுக்கு மட்டுமல்ல, மணமகனுக்கும் உடற்பயிற்சி அவசியம்.
    காய்கறிகளில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. காய்கறிகளை சாப்பிட மறுப்பவர்களுக்கு வாரம் ஒருமுறை அனைத்து காய்கறிகளையும் சேர்த்து பொரியல் செய்து கொடுக்கலாம்.
    தேவையான பொருள்கள் :

    காலி பிளவர் - 100 கிராம்
    கேரட் - 1
    சிறிய பீட்ரூட் - 1
    முள்ளங்கி - 1
    மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
    மிளகுத்தூள் - 1 தேக்கரண்டி
    மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
    தேங்காய் துருவல் - 2 மேஜைக்கரண்டி
    உப்பு - தேவையான அளவு

    தாளிக்க :

    எண்ணெய் - 4 மேஜைக்கரண்டி
    கடுகு - 1/2 தேக்கரண்டி
    உளுந்தம்பருப்பு - 1/2 தேக்கரண்டி
    பெரிய வெங்காயம் - 1
    கறிவேப்பிலை - சிறிது

    செய்முறை :

    காலி பிளவரை வெந்நீரில் 5 நிமிடம் வைத்து எடுத்து விடவும்.

    காலி பிளவர், வெங்காயம் இரண்டையும் பொடிதாக நறுக்கி வைக்கவும்.

    கேரட், பீட்ரூட், முள்ளங்கி மூன்றையும் தோல் சீவி துருவிக்கொள்ளவும்.

    அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்தம்பருப்பு போடவும். கடுகு வெடித்தவுடன் கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் பொன்னிறமானதும் நறுக்கி வைத்துள்ள காலிபிளவர், துருவி வைத்துள்ள கேரட், பீட்ரூட், முள்ளங்கி, மஞ்சள் தூள் சிறிது தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து அடுப்பை மிதமான சூட்டில் வைத்து நன்றாக கிளறவும்.

    நன்கு வெந்ததும் மிளகாய் தூள், மிளகுத்தூள்  தேங்காய்  துருவல் எல்லாவற்றையும் சேர்த்து நன்றாக கிளறவும்.  

    சுவையான  கதம்ப பொரியல் ரெடி !

    - இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ஆடாமல் அசையாமல் உட்கார்ந்தபடி செல்போன், டேப்லெட் போன்றவற்றில் வீடியோக்கள் பார்ப்பது, வீடியோ கேம்ஸ் விளையாடுவது போன்றவற்றால் குழந்தைகளின் முதுகு எலும்பு மற்றும் தசைகள் பாதிப்படைகின்றன.
    இன்றைய குழந்தைகள் மொபைலில் புகுந்து விளையாடுகிறார்கள். ஆனால் பல மணி நேரம் ஒரே இடத்தில் ஆடாமல் அசையாமல் உட்கார்ந்தபடி செல்போன், டேப்லெட் போன்றவற்றில் வீடியோக்கள் பார்ப்பது, வீடியோ கேம்ஸ் விளையாடுவது போன்றவற்றால் குழந்தைகளின் முதுகு எலும்பு மற்றும் தசைகள் பாதிப்படைகின்றன. கண்கள், மனம், தூக்கம் என எல்லாவற்றையும் கொஞ்சம் கொஞ்சமாக அந்த குழந்தைகள் இழக்க தொடங்குகிறார்கள். கடைசியில் உடல் பருமன் என்ற பாதிப்பில் சிக்கிக்கொள்கின்றனர்.

    சும்மா உட்கார்ந்தபடி தொடுதிரையை விரல்களால் தேய்த்து கொண்டிருக்கும் பழக்கம் விரல்களுக்கோ கைகளுக்கோ போதுமான பயிற்சியை தருவதில்லை. இயல்பாக குழந்தைகளின் விரல்கள் மற்றும் கைகள் அந்த வயதில் பெறவேண்டிய ஆற்றலை பெறுவதில்லை. அதனால் அவை திடமான வளர்ச்சி அடைவதில்லை. இப்படியே பழகும் குழந்தைகள் அதன்பின் பள்ளிகளில் சேரும்போது பிரச்சினை முளைக்கத் தொடங்குகிறது.

    அவர்கள் 2, 3 மணி நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து தேர்வு எழுத முடியாமல் திணறிபோகிறார்கள். கைகள் எழுத ஒத்துழைப்பதில்லை. மேலும், குழந்தைகள் வீட்டுக்குள்ளே அடங்கிக் கிடப்பதால், வெயிலில் அலைந்து உடல் பெறும் அவசியமான வைட்டமின்கள் எதுவுமே அவர்களுக்கு கிடைப்பதில்லை. அதோடு உடலை வருத்தி எந்த விளையாட்டிலும் ஈடுபடாததால் உடல் பருமன் ஏற்படுகிறது. இது பிறகு சர்க்கரை நோயிலும் உயர் ரத்த அழுத்தத்திலும் கொண்டு வந்து விட்டு விடுகிறது.

    ஒளிரும் திரையை பல மணி நேரம் பார்ப்பதால், பார்வைத்திறன் பாதிக்கப்படுகிறது. இளம் வயதிலேயே கிட்டப்பார்வை குறைபாடு ஏற்பட்டு விடுகிறது. பொதுவாக பெற்றோர்களும், மற்றோர்களும் பேசிப்பேசிதான் குழந்தைகளின் பேச்சுத்திறனும், மூளைத்திறனும் வளர்ச்சி பெறுகிறது. இந்த வளர்ச்சியை மொபைல் போன்ற பொருட்களின் திரைகளில் தோன்றும் மாயக்காட்சிகள் குழந்தைகளை வெறும் பார்வையாளர் என்ற நிலைக்கு அடிமையாக்கி விடுகின்றன. இது குழந்தைகளின் எதிர்காலத்தை பாதிக்கும். உங்கள் குழந்தைகள் மொபைல் மற்றும் கம்பயூட்டர் போன்றவற்றிற்கு அடிமை ஆகியுள்ளார்களா என்பதை சில அறிகுறிகள் மூலம் கண்டுபிடிக்கலாம்.

    செல்போனோ, டேப்லெட்டோ இல்லாத விளையாட்டுகளை விளையாட மறுப்பார்கள். யாருடனும் இயல்பாக பழகமாட்டார்கள். பக்கத்து வீட்டுக்குழந்தையுடன் நட்பாக இருப்பதில்லை.. வீடியோ கேமை விளையாட விடாமல் தடுத்தால் ஆக்ரோஷமாகி கத்துவார்கள். உங்களோடு பேசமாட்டார்கள். இவையெல்லாம் அறிகுறிகள். இதை தடுக்க இரண்டு வயதுக்குள் இருக்கும் குழந்தைகளிடம் செல்போன் உட்பட எந்த திரையுள்ள கருவிகளையும் தராதீர்கள், என்கிறார்கள் குழந்தைகள் நல டாக்டர்கள்.
    நாவல் பழத்தில் இதர பழ வகைகளில் இருப்பதைவிட மருத்துவ குணங்கள் இதில் நிறைந்திருக்கிறது. உடலுக்கு வலுவையும், எலும்புகளுக்கு சக்தியையும் தரும் கால்சியம் சத்து நாவல் பழத்தில் அதிகம் உள்ளது.
    ஜூலை முதல் செப்டம்பர் மாதம் வரை நாவல் பழம் சீசன். இதர பழ வகைகளில் இருப்பதைவிட மருத்துவ குணங்கள் இதில் நிறைந்திருக்கிறது. உடலுக்கு வலுவையும், எலும்புகளுக்கு சக்தியையும் தரும் கால்சியம் சத்து நாவல் பழத்தில் அதிகம் உள்ளது. சோடியம், தாமிரம், வைட்டமின் பி 1, பி 2, பி 6 போன்ற சத்துக்களும் இதில் உள்ளன. ரத்த சோகை இருப்பவர்கள் மருந்துபோல் கருதி இதை சாப்பிட்டு வந்தால், அதில் இருந்து மீண்டுவிடலாம். நாவல் பழத்தில் இருக்கும் வைட்டமின் சி சத்து, நாம் அன்றாடம் உட்கொள்ளும் உணவில் இருந்து இரும்பு சத்தை பிரித்தெடுக்கும் பணியை அற்புதமாக செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.

    சர்க்கரை நோயாளிகள் நாவல் பழத்தை விரும்பி சாப்பிட பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. இதில் ஜம்போலினின் என்ற ரசாயனம் காணப்படுகிறது. ஒரு வகை குளுக்கோசைடு ஆன இது, உடலில் ஸ்டார்ச்சை சர்க்கரையாக மாற்றும் செயல்பாட்டை தடுக்கும் சக்திகொண்டது. இதனால் நாவல் பழம் சாப்பிடுகிறவர்களின் உடலில் சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருக்கும். ‘நாவல் பழத்தை பத்திய மருந்துபோல் ஒரு மண்டலத்திற்கு சாப்பிட்டு வந்தால் உடலில் சர்க்கரை யின் அளவு கட்டுக்குள் வந்துவிடும். சர்க்கரை நோய் தொடக்க நோயாளிகளுக்கு இது அதிக பலன்தரும். நாள்பட்ட சர்க்கரை நோயை கொண்டவர்கள் நாவல் பழ விதைகளை காயவைத்து, தூளாக்கி புளித்த மோரில் கலந்து சாப்பிடலாம்’ என்று சித்த மருத்துவம் குறிப்பிடுகிறது.

    நாவல் பழத்தில் இருக்கும் குயுமின், சரும சுருக்கத்தை போக்கி இளமையான தோற்றத்தை தரும். உடலில் புதிய செல்களை புதுப்பிக்கும் திறனை நாம் ‘ஆன்டி ஆக்சிடென்ட்’ செயல்பாடு என்று கூறுகிறோம். ஆப்பிள், கேரட், மாதுளை போன்றவைகளில் இந்த ஆன்டி ஆக்சிடென்்ட் திறன் இருக்கிறது. அவைகளை விட அதிகமாக நாவல் பழத்தில் ஆன்டிஆக்சிடென்ட் இருப்பது குறிப்பிடத்தக்கதாகும். இது பல்வேறு விதமான தோல் நோய்களை கட்டுக்குள் கொண்டு வருவதோடு, சருமத் திற்கு பளபளப்பையும் தருகிறது. இதற்கு பசியை தூண்டும் சக்தியும் இருக் கிறது. சிலருக்கு எப்போதும் சிறுநீர் கழிக்கும் உணர்வு ஏற்படும். அதனால் அதிக அளவு சிறுநீரை வெளிப் படுத்துவார்கள். அப்படிப் பட்டவர்கள் நாவல் பழத்தை சாப்பிடும் பழக்கத்தை ஏற் படுத்திக் கொள்ளவேண்டும்.

    நமது தேசத்தில் விளையும் பழங்களுக்கு சில சிறப்புகள் உண்டு. அந்தந்த சீதோஷ்ண நிலைக்கு ஏற்ப அது மனிதர்களுக்கு பலன் தரும். பெரும்பாலும் ஜூலை மாதத்திலும் உஷ்ணத்தின் தாக்கம் இருந்து கொண்டிருக்கும். அதனால் ஏற்படும் உடல் சூட்டை தடுக்கும் விதத்தில் நாவல் பழம் செயல்படும். கல்லீரல், மண்ணீரலில் ஏற்படும் நோய்களை கட்டுப்படுத்தும் ஆற்றலும் இதற்கு இருக்கிறது. பெண்களுக்கு கர்ப்பப்பையில் ஏற்படும் சிக்கல்கள், வெள்ளைப்படுதல், மாதவிடாய் காலத்தில் ஏற்படும் அதிக ரத்தப்போக்கு போன்றவைகளை இது குணப் படுத்தும். இதை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடலாம். நாட்டு நாவல் பழமே உடலுக்கு மிகவும் ஏற்றது.
    தினமும் ஒரே நேரத்துக்கு சாப்பிடுவதை பழக்கப்படுத்திக் கொண்டால், சில நாட்களுக்குப் பிறகு சரியாக அந்த நேரத்துக்குப் பசியெடுக்கும்.
    நாம் பெரும்பாலும் ‘வயிறு பசிக்கிறது’ என்றுதான் சொல்கிறோம். உண்மையில் பசியெடுப்பதற்கு வயிறே தேவையில்லை. ஒருவருடைய வயிற்றை அகற்றி விட்டாலும் கூட, அவர் அவ்வப்போது பசியை உணரவே செய்வார். அப்படியானால் பசி உணர்வை ஏற்படுத்துவது எது என்ற கேள்வி தோன்றுகிறது அல்லவா?

    மூளைதான் பசி உணர்வை ஏற்படுத்துவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். உட லுக்குத் தேவையான ஊட்டப்பொருட்கள் ரத்தத்தில் குறைந்து விட்டன என்பதைத் தெரிவிக்கத்தான் பசி உண்டாகிறது.

    ரத்தத்தில் குளுக்கோஸ், அமினோ அமிலங்கள், கொழுப்பு போன்றவை தேவையான அளவுக்கு இருக்கிறதா என மூளை விழிப்போடு கவனித்துக் கொண்டிருக்கும். இதில் ஏதாவது குறைந்துவிட்டால், அந்த இழப்பை ஈடுசெய்ய வேண்டுமல்லவா? அதற்காகத்தான் பசியெடுக்கிறது. அப்போது நாம் உண்ணும் உணவிலிருந்து தேவையான சத்துகள் ஈடுசெய்யப்படுகின்றன. தட்பவெப்பநிலை மாற்றங்களும் பசியைப் பாதிக்கின்றன.

    அதிகமான வெப்பம் நிலவும்போது, உடல் இயக்கத்துக்குத் தேவையான எரிபொருளின் தேவை குறையும். அதனால் பசி உணர்வு குறைவாகவே இருக்கும். ஆனால், குளிர்காலத்தில் அதிக எரிபொருள் தேவைப்படுவதால், பசியின் அளவும் அதிகமாக இருக்கும். தினமும் ஒரே நேரத்துக்கு சாப்பிடுவதை பழக்கப்படுத்திக் கொண்டால், சில நாட்களுக்குப் பிறகு சரியாக அந்த நேரத்துக்குப் பசியெடுக்கும்.
    இன்றைக்கு பல திருமணங்கள் நீதிமன்ற வாசலில் நின்று கொண்டிருப்பதற்கு இந்தப் பழைய காதல் மற்றும் அது பற்றிய தவறான எண்ணங்கள் போன்றவைதான் காரணமாக இருக்கிறது.
    இன்றய சமூகத்தில் பெரும்பாலானோர் இடம் பொருள் பேதம் இன்றி காதல் வயப்படுவதும் அதன்பின் அது உடைந்ததால் மனம் நொடிந்து சில காலம் இருப்பதும் அதன் பின் மீண்டும் காதல்வயப்படுவதும் சுலபமாகத்தான் இருக்கிறது. ஆனால் இவர்கள் திருமணம் செய்யும்போது பல எதிர்பார்ப்புகள் மற்றும் பாதுகாப்புகளை தங்கள் துணையிடம் தேடுவார்கள். அதே நேரத்தில் கடந்து போன காதலைப் பற்றி தங்கள் துணையிடம் தெரிவிக்க விரும்புவார்கள். இந்த பதிவில் கடந்த காதலை வாழ்க்கை துணையிடம் கூறுவதால் ஏற்படும் சிக்கல்களை தெரிந்துகொள்வோம்.

    இன்றைக்கு பல திருமணங்கள் நீதிமன்ற வாசலில் நின்று கொண்டிருப்பதற்கு இந்தப் பழைய காதல் மற்றும் அது பற்றிய தவறான எண்ணங்கள் போன்றவைதான் காரணமாக இருக்கிறது. தன்னிடம் மறைத்து திருமணம் செய்துவிட்டதாக மற்றவர் கோபப்படுவதால் பிரச்னை பெரிதாகலாம். பொதுவாக பெண்கள் தாங்கள் செய்த அந்தக் காதல் பற்றி தன் கணவனிடம் யாரேனும் கூறிவிடுவார்களோ என்று பயபடுவார்கள். இந்த உறுத்தல் அவர்கள் மண வாழ்க்கையை பாதிக்கிறது. அதனால் நாமே இதனைக் கூறிவிடலாம் என்று முடிவெடுக்கின்றனர்.

    அதனால் பதட்டமாக உண்மைகளைக் கூறுகிறேன் என்று தங்கள் வாழ்வில் தாங்களே சிக்கலை ஏற்படுத்திக் கொள்வார்கள். நடந்த எல்லா விஷயங்களையும் அப்படியே சொல்லி பாவமன்னிப்பு கேட்டுக் கொண்டு இருப்பார்கள். இது தவறு. கடந்த காலத்தில் உங்கள் வாழ்வில் என்ன வேண்டுமானாலும் நடந்திருக்கலாம். ஆனால் உங்களுக்கு முக்கியமான உறவென்பது நிகழ்க்காலத்தில் இருப்பவரோடுதான். இந்த உறவு நன்றாக நடந்தால்தான் எதிர்காலம் தெளிவாக இருக்கும். திருமணத்திற்கு பின்பான உங்கள் வாழ்வை எப்படி சரியாக வாழவேண்டும் என்பதில் நீங்கள் கவனம் செலுத்துங்கள். கடந்த காலத்தை விட்டு விடுங்கள். அது தானாக மறைந்து விடும்.

    உங்களை பற்றிய உண்மைகளை ஒளிவுமறைவின்றி அப்படியே பிரதிபலிக்க வேண்டிய அவசியம் எதுவும் இல்லை. இன்னும் சொல்லப் போனால் நம்மைப் பற்றிய பல விஷயங்கள் நமக்குத் தெரிவதில்லை. ஆகவே கடந்து போன காதல் உண்மைகளை அவரை எப்படி எல்லாம் நேசித்தீர்கள் என்பது பற்றியெல்லாம் நீங்கள் விளக்கத் தேவையில்லை.

    எதிர்காலத்தில் நமது கடந்த கால ரகசியங்கள் யார் மூலமெனும் தெரிய வந்தால் என்ன செய்வது என்று பயப்படாமல் அதனை எதிர்கொள்வது எப்படி என்பதில் நீங்கள் உறுதியாக இருங்கள். பக்குவமாக அதனை நீங்கள் எதிர்கொள்ளும் தைரியத்தை வளர்த்துக் கொள்ளுங்கள். கடந்த கால உண்மைகளை பற்றி ஒருவருக்கொருவர் சொன்னால்தான் மற்றவர் மீது நாம் உண்மையான நேசம் வைத்திருக்கிறோம் என்பது உண்மையல்ல. இதனை மற்றவரிடம் கேட்டு கொண்டிருக்காமல் இதனை அப்படியே விடுவதுதான் பெருந்தன்மையான அன்பை வெளிப்படுத்தும்.

    பழைய காதலின் வடுக்களைத் தடவிப் பார்த்துக் கொண்டே இருப்பதால் உங்கள் புதிய உறவில் விரிசல்கள் ஏற்படும். கிடைக்காத ஒன்றை விட கிடைத்த ஒன்றையாவது நாம் பத்திரப்படுத்திக் கொள்ள வேண்டும் அல்லவா. இப்போதும் இனிமேலும் நீங்கள் இருவரும் வாழப் போகிற வாழ்க்கைதான் உங்களுக்கு நிரந்தர உறவுகளை ஏற்படுத்தும். ஆகவே நீங்கள் இருவரும் உங்கள் இருவர் மீதான காதலில் திளைத்திருப்பதுதான் இப்போது முக்கியமானது.
    ×