
திருமண நிச்சயதார்த்தம் நடந்துவிட்டால், அடுத்து திருமணத்திற்கு மூன்றில் இருந்து ஆறு மாதங்கள் வரை இடைவேளை கிடைக்கிறது. அந்த காலகட்டத்தை அவர்கள் முழுமையாக உடலை பராமரிக்க ஒதுக்கிக்கொள்ளவேண்டும். முதலில் உணவுக் கட்டுப்பாட்டை மேற்கொள்ளவேண்டும். அதற்காக பட்டினி கிடந்துவிடக்கூடாது. உடல் எடையை குறைப்பதற்காக பட்டினி கிடந்தவர்களின் உடல் பல்வேறு மோசமான பின்விளைவுகளை சந்தித்திருக்கிறது. பட்டினி கிடந்தால் தசை நெகிழ்ந்து, சருமமும் சுருங்கிவிடும். அதனால் முறையான உணவுக் கட்டுப்பாட்டோடு உடலுக்கு தேவையான சரியான உடற்பயிற்சியையும் மேற்கொள்ளவேண்டும்.
திருமணத்திற்கு தயாராகும் இளம்பெண்கள் ஸ்டிரன்த்தனிங் டிரைனிங், கார்டியோ எக்ஸசைஸ் ஆகிய இருவகை பயிற்சிகளை பெறவேண்டும். ஸ்டிரன்த்தனிங் என்பது தசைகளை வலுப்படுத்துவதற்கான பயிற்சியாகும். கார்டியோ பயிற்சி என்பது உடலில் இருக்கும் கொழுப்புகளை கரைப்பதற்கானதாகும். ட்ரெட் மில், சைக்கிளிங், ஓடுதல், நடனமாடுதல், ஏரோபிக்ஸ் செய்தல் போன்றவை கார்டியோ வகை பயிற்சிகள். உடற்பயிற்சி நிபுணர் ஒருவரின் ஆலோசனையோடு தினமும் இதனை செய்துவந்தால் உடலில் இருக்கும் கொழுப்பு குறைந்து, கட்டுடல் உருவாகும். உடலின் தேவைக்கு தக்கபடி இருவகை பயிற்சிகளையும் பெண்கள் தொடர்ந்து செய்துவரவேண்டும்.
சில நாட்கள் இந்த பயிற்சியை பெற்றதும் பெண்களுக்குள் சோம்பேறித்தனம் எட்டிப்பார்க்கும். ‘இன்று வேண்டாம் நாளை உடற்பயிற்சி செய்துகொள்ளலாம்’ என்ற எண்ணம் தோன்றும். அதை எல்லாம் ஓரங்கட்டிவிட்டு அன்றாடம் பயிற்சி செய்தால் எடை குறைவதோடு, உடலும் கட்டுக்கோப்பாக மாறும்.
ஜிம்முக்கு போய் உடற்பயிற்சியை மேற்கொள்ள வாய்ப்பில்லாதவர்கள் ட்ரெட் மில், சைக்கிளிங் போன்றவைகளுக்குரிய கருவிகளை வாங்கி வீட்டிலேவைத்து பயிற்சி மேற்கொள்ளலாம். மாடிப்படிகளில் ஏறி இறங்குவது, ஸ்கிப்பிங் போன்றவைகளையும் செய்யலாம்.
திருமணம் நிச்சயமான பின்பு மணமகனும், மணமகளும் பிசியாகிவிடுவார்கள். அதனால் அவர்கள் ‘காலை முழுவதும் மற்ற வேலைகள் இருக்கிறது. அதனால் எல்லா வேலைகளையும் முடித்துவிட்டு மாலையில் உடற்பயிற்சி செய்துகொள்ளலாம்’ என்று நினைத்து தள்ளிவைத்துவிடக் கூடாது. தள்ளிவைத்து விட்டால் அன்று பயிற்சி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுவிடும். புது மணத்தம்பதிகளுக்கு ஆரோக்கியம் மிக முக்கியம். அதனால் உடற்பயிற்சியை தள்ளிப்போடவேண்டாம். தினமும் அதிகாலையிலே அவர்கள் உடற்பயிற்சியை செய்துமுடித்துவிட வேண்டும். மணப்பெண்ணுக்கு மட்டுமல்ல, மணமகனுக்கும் உடற்பயிற்சி அவசியம்.